Thursday, January 19, 2017

920. பொங்கி எழுவதா ... நம்ம ஊர் மாணவர்களா ....?!






*


 2003ம் ஆண்டு ஏப்ரல் மாத இறுதியில் பணியிலிருந்து ஓய்வு பெற்றேன். கடைசி நாள் … கடைசி வகுப்பு … B2 அறை … மூன்றாமாண்டு விலங்கியல் ஆண்டு மாணவர்கள் … இறுதியாக ஏதாவது நான் பேச வேண்டும் என்று நானும் ஆசைப்பட்டேன். மாணவர்களும் அதை விரும்பி எதிர்பார்த்திருந்தார்கள்.

 பழைய கதைகளும் எனக்கு நினைவுக்கு வந்தன. நான் மாணவனாக இருந்த அறுபதுகளிலும், அதன்பின் எழுபதுகளிலும் மாணவர்கள் மிக அதிகமாகவே உணர்ச்சி பூர்வமானவர்களாக இருந்தோம். எதற்கும் உடனே சாலையில்  இறங்குவது ஒரு வழக்கமாக இருந்தது. கொஞ்சம் அதிகமாகவே சாலையில் இறங்கினோம்.

ஆனால் காலம் மாற .. மாற உணர்ச்சிகள் வலுவிழந்தன. நரி வலம் போனால் என்ன .. இடம் போனால் என்ன.. என் மேல் விழுந்து கடிக்காமல் இருந்தால் போதும் என்று பொது நிகழ்வுகளில் இருந்து மிகவும் மாணவர்கள் ஒதுங்கிப்போனார்கள். எந்தப் பொதுக் காரியங்களிலும் தலையிடுவது என்பதே இல்லாமல் அப்பழக்கம் ஒழிந்தே போனது. மாணவர்கள் அறிவு பூர்வமானவர்களாக மாறி விட்டார்கள்.

அன்று என் மாணவர்களிடம் இதைப் பற்றிப் பேசினேன். உங்கள் ரத்தம் ‘சிகப்பை’ இழந்து விட்டது முழுமையாக என்றேன். இதை ஒட்டி அப்போது சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வையும் மேற்கோளிட்டேன்.

அந்த ஆண்டு, நம் மாநில ’சீப் மினிஸ்டர்’ ஜெயலலிதா ராணி மேரி கல்லூரி வளாகத்தை எடுத்து விட முடிவு செய்தார். அதற்கான வேலைகள் ஆரம்பித்ததும் அக்கல்லூரி மாணவிகள் போராட்டத்தில் குதித்தனர். ஆனால் … பரிதாபம். சென்னைக் கல்லூரி மாணவர்கள் அனைவரும் மிக அமைதியாக தங்கள் கடமையிலேயே கண்ணாயிருந்தார்கள். படிப்பதைத் தவிர வேறென்ன தெரியும் அவர்களுக்கு என்றானது.

 இதே நிகழ்வு அறுபதுகளிலோ, எழுபதுகளிலோ நடந்திருந்தால் தமிழக மாணவர்கள் அனைவரும் எழுந்திருப்பார்கள். போராட்டம் நிச்சயமாக நடந்திருக்கும் என்றேன். ஆனால் ஏன் உங்களுக்கு அதில் எந்த ஆர்வமும் வரவில்லை. அதனால் தான் உங்கள் ரத்தத்தின் கலரைப் பற்றிப் பேசினேன். எப்படி எத்தனை அநியாயங்களும் உங்களைச் சுற்றி நடக்கும் போது ஏன் உங்கள் ரத்தம் கொதிக்கவில்லை …. என்ற வருத்தத்தோடு ஓய்வு பெற்றுச் செல்கிறேன். உங்கள் உணர்ச்சியற்ற நிலையைப் பார்க்கும் போது எதிர்காலத்தைப் பற்றிய எனது அச்சம் அதிகமாகிறது என்றும் சொன்னேன். 


அந்த சோகம் இன்னும் தீரவில்லை… தீரும் வழியும் இதுவரை தெரியவில்லை. என் ஓய்வுக்குப் பின் எங்கள் கல்லூரியில் ஒரு பிரச்சனை எழுந்தது. அன்று ஒரே ஒரு நாள் மட்டும் மாணவர்கள் நியாயத்தின் பக்கத்தில் நின்றிருந்தால் இன்றைய மோசமான நிலைக்கு எங்கள் கல்லூரி சென்றிருக்காது. கல்லூரியைச் சொந்தம் கொண்டாடி வந்தவர்கள் அந்த ஒரு நாளிலேயே ஓடி    ஒளிந்திருப்பார்கள்.   ஆசிரியர்கள் (வழக்கம் போலவே) ஒன்று சேரவில்லை. மாணவர்கள் போராடும் ஆசிரியர்களை வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டு சென்றார்கள். கல்லூரியைப் பறி கொடுத்த நிலையில் உள்ளது.

 அதற்குப் பின்னும் எத்தனை எத்தனையோ சமூகப்பிரச்சனைகள்; கல்லூரிப் பிரச்சனைகள் பல; கல்விப் பிரச்சனைகள் பலப் பல.

அவைகளெல்லாவற்றையும் தாண்டி இளைஞர்களுக்கு மிக நெருக்கமான  காதலும், காதல் கல்யாணங்களும் சாதிப் பெயர்களை வைத்து மிகக் கேவலமான முறையில் சாதிக் கட்சிகள் நடந்து கொண்ட கேவலங்களையும் மாணவர்கள் ‘வேடிக்கை’ மட்டும் பார்த்தது வேதனையாக இருந்தது.

 இத்தனை சோகங்களும் இப்போது மெல்ல மெல்ல விலகியுள்ளது. தூரத்தில் வெளிச்சம் கண்ணில் படுகிறது. மகிழ்ச்சி.

 எதிர் பார்க்கவில்லை. ஏன் இன்னும் பல கடும் சமூக சோகங்களுக்கும் விழிக்காத நம் இளைஞர்களின் உலகம் இன்று எப்படி எழுந்தது. யாருக்குமே பதில் தெரிந்திருக்காது என்றே நினைக்கின்றேன். எதிர்பார்க்காத ஒன்று நடந்து விட்டது. ஆச்சரியத்தோடு இந்த விழிப்புணர்வைப் பார்க்கிறேன். இதில் ஒரு நம்பிக்கை துளிர் விடுகிறது. இப்போராட்டம் வெற்றி பெற்று விட்டால், (வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்) மாணவர்களின் பலத்தின் மீது அவர்களுக்கே ஒரு பெரும் நம்பிக்கையும், அந்த நம்பிக்கை தரும் தைரியமும் கூடும். அவை மாணவர்கள் சமூகப்பிரச்சனைகளிலும் தலையிடவோ, தடுக்கவோ ஒட்டு மொத்தமாக எழுந்திருப்பார்கள் என்ற நம்பிக்கை மெல்ல எழுகிறது.

 நாட்டை நம் இளைஞர்கள் மீட்டெடுத்து விடுவார்களோ … என்ற நம்பிக்கை மெல்ல துளிர்க்கிறது. நல்ல காலம் தலை காட்டுகிறதோ….?


 **********

 பி.கு.

 பொங்கி எழுவதா ... நம்ம ஊர் மக்களா...? நல்ல வேடிக்கை. மாணவர்கள் எப்போதோ “புத்திசாலி” ஆகி விட்டார்கள். அவர்கள் ரத்தத்தில் இருந்த ‘சிகப்பை’ யாரோ திருடி விட்டதாக எங்கள் கல்லூரிப் பிரச்சனையில் புரிந்து கொண்டேன் - http://americancoll.blogspot.in/search/label/MUST%20READ இப்படி ஆச்சரியமாக என் பதிவில் - http://dharumi.blogspot.in/2015/01/817.html - பின்னூட்டத்தில் சென்ற ஆண்டு எழுதியிருந்தேன். அன்று அது உண்மை!







 *

8 comments:

மதுரை சரவணன் said...

எழுச்சி உண்மையாகட்டும்.

கரந்தை ஜெயக்குமார் said...

மாணவர்களின் தன்னெலுச்சிப் போராடடம் வெல்லட்டும் ஐயா

திண்டுக்கல் தனபாலன் said...

துளிர் விடும் நல்ல காலம் தொடர வேண்டும் ஐயா...

இராய செல்லப்பா said...

ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. அப்துல் கலாமும் ஒரு காரணமாக இருக்கலாம். ஜெயலலிதாவின் மரணமும் அதற்குப் பிந்தைய அசிங்கமான நிகழ்வுகளும் அவர்களைத் தலைகுனிய வைத்திருக்கலாம். எப்படியானாலும், மாணவர்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். ஏனெனில் பதவிப்பசி கொண்டவர்கள் இவர்களை வெற்றிபெற அனுமதிப்பார்களா என்று கவலையோடு பார்க்கவேண்டியிருக்கிறது. - இராய செல்லப்பா நியூ ஜெர்சியில் இருந்து.

http://ChellappaTamilDiary.blogspot.com

Unknown said...

மாணவர்களின் தன்னெழுச்சி உணர்வுபூர்வமாக மட்டுமில்லாமல் அறிவுபூர்வமான ஒன்றாக பரிணமித்து,ஆணவக்கொலைகள், விவசாயிகள் தற்கொலைகள் போன்ற சமூக அவலங்கள், அநியாயங்கள் போன்றவற்றை களைந்தெரியவும், சாதி, மதம் போன்ற அழிவு சக்திகளைக் கடந்து, மானம், சூடு சுரணை இல்லாத சுய நலத்தின் மொத்த உருவங்களான, அரசியல்வாதி சதைப்பிண்டங்களை தூக்கி வீசி எறியவும் உந்து சக்தியாக உருவெடுக்கவேண்டுமேன்பது என்னுடைய அவா. அவர்களின் இன்றைய பண்புமிக்க உறுதியான போராட்டம் நம்பிக்கை அளிக்கிறது. இது நமது சமுதாயத்தில் ஒரு ஆக்கபூர்வமான திருப்புமுனையாக அமையட்டும்

அ. வேல்முருகன் said...

போராட்டம் வெற்றியை நோக்கி

சார்லஸ் said...

உணர்ச்சிகளின் கொந்தளிப்பில் கொஞ்சம் கொஞ்சமாக ஒன்று சேர்ந்த இளைஞர்களும் மாணவர்களும் புதியதொரு எழுச்சியை உருவாக்கியிருக்கிறார்கள். பெரியர்வர்களும் அதில் இப்போது இணைந்துள்ளார்கள். இந்த எழுச்சி இத்துடன் நின்று போய் விடாமல் இன்னும் பல ஆக்கப்பூர்வ பிரச்சினைகளை தீர்க்கும் உந்து சக்தியாய் மாறினால் நலம். ஓட்டுப் போடுவதில் தங்கள் ஒற்றுமையை காட்டினால் அரசையே மாற்றலாம். மாணவன் நினைத்தால் நடத்திக் காட்டுவான் .

இந்தி எதிர்ப்புக்கு ஒன்று சேர்ந்த இளையோர் படையை இந்தப் படை நினைவுபடுத்துகிறது என்று பலரும் தங்கள் கருத்தினை பகிர்ந்துள்ளார்கள். சரிதானா?

வேகநரி said...

பொங்கி எழுந்தார்கள் எதற்காக, மாட்டோடு சண்டை போடும் விளையாட்டு வேண்டும் என்பதிற்காக.

Post a Comment