Sunday, January 07, 2018

961. ”கடவுள் என்னும் மாயை” நூலுக்கான வாழ்த்துரை






*

இந்நூலுக்கான முன்னுரை ...


*


10.1.2018 முதல் 22.1.2018 - என்ற நாட்களில் நடைபெறும் 

சென்னைப் புத்தக விழாவில் 

எதிர் வெளியீடு வெளியிடும் 12 நூல்களில் 

நான் ஏழுதிய 

“கடவுள் என்னும் மாயை”  

நூலும் ஒன்று.


அந்நூலுக்கான மதிப்புரையை  Dr. ஜீவானந்தம்,  M.B., B.S., D.A., ஈரோடு, அவர்கள் எழுதி நன்றிக்குரியவர் ஆகிறார். அவர் எழுதிய “வாழ்த்துரை”யை மகிழ்ச்சியோடு இங்கே அளிக்கிறேன்.



வாழ்த்துரை


“கடவுள் என்னும் மாயை” என்ற இந்நூலுக்கு முன்னுரை எழுத பேராசிரியர் தருமி என்னைக் கேட்ட போது தயங்கினேன். ஏனெனில் சகிப்புத் தன்மை இழந்த கால கட்டத்தில் அல்லவா நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அன்பையும், சமாதானத்தையும், சகிப்புத் தன்மையையும் போதித்த கடவுள்களின் பெயரால் அல்லவா இன்று பேரழிவுகளும், படுகொலைகளும் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் புத்தகத்தின் தட்டச்சுப் பிரதியைப் படித்த பின், புதிய வெளிச்சம் தரும் இந்நூலை எழுதியவரைப் பாராட்டுவதற்கான ஓர் அரிய வாய்ப்பு என மகிழ்ந்தேன்.
முதலாவதாக மதம், கடவுள் பற்றி ஒவ்வொரு  மதம் சார்ந்த மாபெரும் அறிஞர்கள், பெரும் ஆராய்ச்சியின் பின் எழுப்பியுள்ள 12 நூல்களின் சாரத்தை  ஒரு சேரப் படிக்கும்  வாய்ப்பை அவர் எனக்குத் தந்துள்ளார் என்பதற்கு நான் அவருக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.
”எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும்
      அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு”

என்ற தமிழ்மறையின் வழிகாட்டுதலில் அறிஞர்கள் தாம் சார்ந்த மதத்தை, விருப்பு வெறுப்பின்றி ஆய்வு செய்துள்ள பல நூல்களின் கருத்துகளைச் சுருக்கமாக வாசித்த மன நிறைவைத் தருகிறது இந்நூல்.

மகான்கள் தமது காலத்தின் சரிவாதிகாரத்திற்கும், உடமை வெறிக்கும், அநீதிகளுக்கும் எதிரான பொது நீதியை மிக்க துணிவுடன் தருகிறார்கள். அனால் பின் வரும் பூசாரிகள் அவற்றிற்கு நேர் எதிராக மக்களை ஒடுக்கி ஆளும் வர்க்கத்தின் கேடயமாகவே மதங்களை அவர்களின் பெயரால் உருவாக்கினர் என்பதே உலகெங்கும் நாம் காணும் நடைமுறையாக உள்ளது.

இதை எதிர்த்துப் பல புரட்சிக் குரல்கள் அவ்வப்போது அறம் சார்ந்த நல்லோரால் எழுப்பப்படுகின்றன. நட்ட கல்லை தெய்வம் என்போரைச் சாடினர் சித்தர்கள். ஆரிய மதத்தின் கேடுகள் கண்டு கொதித்தெழுந்த கலகக்காரர்களே புத்தரும், மகாவீரரும். பின் வந்த குருநானக்கும், பிரம்மோ சமாஜமும், ஆரிய சமாஜமும், ராமகிருஷ்ண மடமும், பசுவேஸ்வரரும், வள்ளலாரும், நாராயண குருவும் நான் இந்துவல்ல என்று எதிர்த்தெழுந்தவர்களே.

14, 15ம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவின் பெரும் சர்வாதிகாரிகளாகிய, அறம் தவறிய போப்புகளை எதிர்த்து, கிறிஸ்த்துவத்தில் உருவானதே எதிர்ப்புரட்சி மார்க்கமான ப்ராட்டஸ்டென்ட் கிறித்துவம். முகமது நபியின் மரணத்தின் பின் பதவிப் போட்டியில் இரண்டு பட்ட இஸ்லாம் இன்று வரை சொந்தச் சகோதரர்களையே கொன்று குவித்துக் கொண்டுள்ள அவலத்தைத் தினமும் பார்க்கிறோம்.

அன்னை தெரசாவின் இறுதி கால மனப் போராட்டத்தைக் கூறும் “COME BE MY LIGHT” ”என் தேவனே என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர்என்று கதறிய இயேசுவின் குரலாகவே உள்ளது. தன்னலமும், அதிகார வெறியும், உடமை வெறியும் மிகுந்த சமூகத்தில் உன்னத அறம் சார்ந்த நல்லோரின் விரக்திப் புலம்பல் இவ்விதமாகவே இருக்க முடியும்.

கிறிஸ்துவின் வாழ்வு உண்மைகள், அவரது போதனைகளைத் திரட்டி எழுதிய பல்வேறு சுவிசேஷங்களைப் படிப்பின் ஆதிக்க சக்திகளின் கேடயமாகிப் போன மதம் இருட்டடிப்பு செய்து அழித்தன. எப்படி ஏகாதிபத்திய சர்வாதிகார சக்திகளின் கையாளாக கிறிஸ்துவம் மாற்றப் பட்டது என்பது பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் உட்படப் பல அறிஞர்கள் வெளிப்படுத்தியுள்ளதை அறியும் வாய்ப்பினை இந்நூல் தருகிறது.

இந்து மதம் பற்றிய கசப்பான உண்மைகளைப் பெரியாரை விடவும் அப்பட்டமாகவும், ஆதாரப் பூர்வமாகவும் வெளிப்படுத்தும் அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியாரின் வாதம், இன்று இந்து ஆரிய மதவாதச் சக்தியை எதிர்ப்போருக்கும் பெரிதும் உதவும் கையேடாகும்.

மதம், கடவுள் இவற்றின் குறைகளை, அநீதிகளை எத்தனை பேசிய போதும் வறுமையும், அறியாமையும், தனியுடமையும்,  சுரண்டலும் மிக்க உலகத்தில், மதம் மயக்கும் அபின் மட்டுமல்ல; அதுவே குரலற்ற அபலைகளின் குரலாக, இதயமற்ற உலகின் இதயமாகி உள்ளது என்று காரல் மார்க்ஸ் கூறுவதை நாம் மறந்து விட முடியாது.

அறிவியலும், பகுத்தறிவும், சமத்துவமும் வளர்ந்து வரும் உலகில் கடவுள் எனும் போதை, மாயையிலிருந்து மக்கள் விடுபட்டு வருவது வேகமாக நடந்து வருகிறது. ஐரோப்பாவில் தேவாலயங்கள் காலியாகி வருகின்றன. போப் புரட்சிக் குரலில் பேசி வருகிறார்.

உலகின் அநீதிகளுக்கும், போர்களுக்கும், படுகொலைகளுக்கும் பின்னணியில் மதமே நிற்கிறது என்பது தெளிவாகி வருகிறது. அறிவியலும், பகுத்தறிவும், சமத்துவ உணர்வும் தகவல் தொடர்பும் வளர்ந்து வரும் உலகில் படிப்படியாக கடவுளும், மதமும் தமது தேவையை இழந்து உதிர்ந்து போவது உறுதி.

பல ஆயிரம் ஆண்டுகால இருள், ஒரு நொடியில் விலகாது. ஆனால் கீழை வானம் சிவக்கிறது என்ற புதிய நம்பிக்கையை இந்நூல் வளர்க்கிறது. இந்நூலை வெளியிடும் “எதிர் வெளியீடு”, எழுதிய பேராசிரியர் தருமி அறிவியில்வாதிகளின் வாழ்த்துக்கும், நன்றிக்கும் உரியவர்கள்.

                               இருளிலிருந்துது வெளிச்சத்திற்கும்,
                               அஞ்ஞானத்திலிருந்து அறிவொளி நோக்கியும் பயணிப்போம்.



3.12.17
ஜீவானந்தம்,
9442272772



















*

No comments:

Post a Comment