Wednesday, May 22, 2019

1048. ஒரு கிழவனின் புலம்பல் ... 1








*


நாளைக்குத் தேர்தல் முடிவுகள் ...


என்னென்னமோ நடக்குது. நல்லதும் இருக்குது. மிக மட்டமானதும் நடக்குது. ஆனால் இப்போ புலம்ப ஆரம்பிச்சது எல்லாமே அரசியல், சமூக விஷயங்கள் தான்.

போன பாராளுமன்ற ஆட்சியில் காங்கிரஸ் கட்சி மீது பெரும் வெறுப்பு. இலங்கை மக்கள் அழிப்புக்கு, வெளியே தெரியாத அளவிற்கு நேரு குடும்பம் ஒரு பெரிய காரணம் என்பது என் அவதானிப்பு. இதனால் அந்தக் கட்சிக்கு வாக்களிக்கக் கூடாது என்றும் நினைத்திருந்தேன். ஆனால் அதற்காக பிஜெபி கட்சிக்கு வாக்களித்திருப்பேன் என்றும் நினைத்து விடக் கூடாது.

இந்த ஆண்டு நடந்து முடிந்திருக்கும் தேர்தலில் ஒரே நாடு .. ஒரே மொழி . ஒரே மதம் .. ஒரே கட்சி என்ற தத்துவத்தில் முத்தெடுக்கும் மோடி கட்சியின் மீது அத்தனை வெறுப்பு. அதானிக்கும் அம்பானிக்கும் பிரதமராக இருந்து “அள்ளித் தரும்” பிரதமர் அந்த உறவுகளோடு இருக்கும் பாசத்தில் கோடியில் ஒரு பகுதியையாவது இந்திய மக்கள் மீது வைத்திருந்தாலே போதுமென்று நினைக்கும் அளவிற்கு அவரது கண் மறைத்த பாசத்தின் மீது அசாத்திய கோபம் வந்தது. நாட்டையை அந்த இருவருக்கும் + அமித் ஷா மகனுக்கும் பிரித்துக் கொடுப்பதில் அவருக்கிருந்த வெறி அச்சத்தை ஏற்படுத்தியது. 

அதுவும் அவருக்கு தமிழ்நாட்டின் மீது ஏன் அத்துணைக் கோபம் .. வஞ்சம் என்றும் தெரியவில்லை. “குறி வைத்து அடிப்பது” என்பார்களே அதை அவர் தொடர்ந்து செய்து வந்திருப்பதாக எனக்குத் தோன்றியது. அத்தனை பெரிய ஒரு  புயல் வீசி தமிழ்நாடு தவித்த போது கூட உதவி செய்ய மறுத்த பெரிய “மாற்றாந் தாயாக” இருந்து வந்தார். இந்த ஆண்டு நீட் தேர்வு இல்லை என்று சொல்லிச் சென்ற அமைச்சர் நிர்மலா அதன் பின் அதைப் பற்றி ஏதும் பேசாமடந்தையாகி நீட் தேர்வை நடத்தியது... இன்றும் ரயில்வே பணியிடங்களில் வட இந்தியர்கள் ஏறத்தாழ எல்லாப் பணியிடங்களையும் கபளீகரம் செய்தது என்று எல்லாமுமே ஆன்டி-இண்டியன் என்பது மாதிரி ஆன்டி-தமிழன் என்றாகி விட்டது.

இங்கு எடுத்த திட்டங்கள் எல்லாமே தமிழ்நாட்டைப் பாலைவனமாக்கும் திட்டங்களாக மனதில் தோன்றுகிறது. அதற்கு ஒத்து ஊத இப்படி ஒரு தமிழக அரசு இடுப்பொடிந்த ஊமையாக இருப்பது வேதனையை அதிகமாக்குகிறது.

ஒரு வேளை தமிழ்நாட்டில் அடுத்து திமுக அரசு வரலாம். அந்த அரசை நினைத்தாலும் பயமாக இருக்கிறது. சரியான “அடிதடிக் கூட்டம்” என்று பெயர் வாங்கிப் பல காலமாகி விட்டது. காசில் மட்டும் தான் கண் என்ற நினைப்பில் அரசாளுவார்கள் ... மத்திய அரசிலும் பதவிகள் பெற்று பணம் குவிப்பதே குறிக்கோள் என்றே பலரும் வெளிப்படையாகப் பேசி வருகிறார்கள். மே 18 அன்று தூங்கிய நிலையில் இருந்து தங்கள் பதிவிகளைத் தற்காத்துக்  கொள்வார்கள் என்ற நிலையில் தான் இருந்தது அந்தக் கட்சி.

எங்கும் இருள் சூழ்ந்து வருவதாக எனக்குத் தோன்றுகிறது. அது உண்மையோ என் மனதின் மருட்சியோ தெரியவில்லை.
மீண்டும் “ரேடார் பிரதமர்” வந்தால் அவரது முதல் கல்லெறி கல்வி மீது தானிருக்கும் என்று நினைக்கின்றேன். கல்வி மாநில அதிகாரத்தில் வருவதே நல்லது. ஆனால் மத்திய அரசு கொடுக்கும் நிலையில் இல்லை; அதைக் கேட்கும் நிலையில் மாநில அரசு இருக்காது. தாய்மொழியைத் தள்ளி வைக்க இப்போதே ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. கல்வி பறி போகும்; தாய் மொழி பிடுங்கி எறியப்படும்; வரலாற்று ஆய்விடங்கள் ஒரேயடியாக  மூடப்படும்; மொழியார்வம் துடைத்தெறியப்படும். இந்தி பொதுமொழியாகும்; வடமொழி கோலோச்சும். புராணக் கதைகள் இனி அறிவியல் பாடமாகும். பிள்ளையாரின் ப்ளாஸ்டிக் சர்ஜரியும், டெஸ்ட் ட்யூப் பேபிகளான கெளரவர்களும், ரேடார் பாடத்திட்டங்களும், ஜோதிடம், வாஸ்து, ஜாதகம், ... போன்றவையெல்லாம் பாடத்திட்டதில் இடம் பெறும். அறிவியல் கொழுந்து விட்டு எரியும் காலம் ஆரம்பித்து விட்டது.

மனம் சோர்ந்து விட்டது. நாமும் கீழானவர்கள்; நம்மை ஆள்பவர்கள் நம்மை விடக் கீழானவர்கள். மக்களாகிய நமக்குச் சட்ட திட்டங்கள் என்று ஏதுமில்லை; அவைகளை நாம் மதிப்பதோ அதன் வழி நடப்பதோ என்றும் இல்லை. மருந்துகளிலும், உணவுப் பொருளிலும், மாங்காய்களைப் பழுக்க வைப்பதிலும் கூட நாம் கலப்படம் செய்யும் அளவிற்கு மனசாட்சையைத் துச்சமாகத் துடைத்தெடுத்த மாக்கள் நாம். எல்லா ஏரிகளிலும் கட்டிடங்கள் ... அதிலும் அரசே கட்டும் கட்டிடங்கள். மணல் வாருவதில் நம்மை அடித்துக் கொள்ள ஆட்களே கிடையாது. எப்படி நம் எல்லோருக்கும் சுத்தமாக மனசாட்சியே இல்லை என்று (என்னையும் சேர்த்து தான்!) கேட்டுக் கொள்கிறேன். “என் வேலை - நல்லதோ கெட்டதோ - அது வெற்றிகரமாக முடிய வேண்டும்; அதனால் யாருக்கு என்ன ஆனால் எனக்கென்ன!” என்ற பெரும் வாழ்க்கைத் தத்துவம் நமக்கு. நரி வலம் போனால் என்ன .. இடம் போனால் என்ன.. என் மேல் பாயக்கூடாது” என்றதொரு  பெரும் தத்துவம் நமக்கு.

இப்படி மனசாட்சியைத் துடைத்தெறிந்த மக்கள் காசு வாங்கிக் கொண்டு தேர்ந்தெடுத்தால் எந்த மாதிரி தலைவர்கள் அவர்களுக்குக் கிடைக்கும். அப்படித்தான் நமது மாநிலத் தலைவர்கள் இருக்கிறார்கள். (நேற்றுகூட டிவியில் பார்த்தேன். மோடி எல்லா கூட்டணித் தலைவர்களை விருந்துக்கு அழைத்திருக்கிறார். ஒவ்வொருவராக வரவேற்கிறார். நம் டயர் நக்கி அமைச்சர் காலில் விழ குனிந்து விட்டார். ரேடார்  நல்ல வேளையாகத் தடுத்து விட்டார்.) காசு வாங்கி ஓட்டளித்தால் எப்படிப்பட்ட தலைவர்கள் நமக்குக் கிடைப்பார்கள்? இப்படித்தான் கிடைக்கும். யாரைத்தான் நாம் நோவது? முதலில் நம்மை நோக்கி தான் நொந்து கொள்ள வேண்டும்.

எப்படியோ... மனமெங்கும் இருள். ஒளியைத் தூரத்திலும் பார்க்க முடியவில்லை. இத்தனை சோகமான்னு நினைத்தேன். இது உனக்குத் தேவையில்லை என்று மனசு சொன்னது. கொஞ்சம் அது சொல்வதைக் காது கொடுத்து கேட்டேன்.

“உனக்கே வயதாகிப் போய் விட்டது ... இன்னும் எத்தனை நாளோ? ஆனால் you're so lucky! வாழ்க்கையில் நல்ல விஷயங்கள் நிறைய பார்த்தாகி விட்டது. உலகத்தையே உள்ளங்கையில் சுருட்டி மொபைல் போனிற்குள் கொண்டு வந்தாகி விட்டது. இருக்கவே  இருக்கிறார் கூகிள் ஆண்டவர். கேட்டதையெல்லாம் தருகிறார். பத்து ஆண்டுகளுக்கு முன்பு கூட இத்தனை knowledge explosion-யை எதிர் பார்த்திருக்க மாட்டோம். Alvin Toffler சொன்ன Future Shock என்பதை நன்றாகவே பார்த்து, அனுபவித்தாகி விட்டது. இன்னும் என்ன வேணும். அறிவியல் இன்னும் உயரும்; ஒரு “பெட்டியில்” இருந்து மின்சாரம் தயாரித்து விட்டாராம் ஒரு தமிழர். இன்னும் மனிதன் உயர உயர பறக்கப் போகிறான். அதன் அறிகுறிகள் பலவற்றையும் பார்த்தாகி விட்டது. இனி என்ன? ”


”எதிர் நிற்கும் காலமோ சிறிது. இந்த வயதில் இத்தனை உயரம் மனித குலம் வளர்ந்ததைப் பார்த்தாகி விட்டது. இனி உனக்கு என்ன? நாளை நாடு என்னாகும்? .. நம் மாநிலம் என்னாகும்? ... என்ற கவலை உனக்கெதற்கு? வரும் தலைமுறையினர் தலைவிதி அது; அதை அவர்கள் கவனித்துக் கொள்ளட்டும்; நீ ஏன் அதைப் பற்றிக் கவலைப் படுகிறாய்?” என்று மனது யோசனை கூறியது. அதைக் கேட்டு நானும் என் மனதைத் தேற்றிக் கொண்டேன்.

”இருக்கவே இருக்கிறது சூப்பர் சிங்கர் ... பிக் பாஸ்... அக்கடான்னு படுத்துக்கிட்டு இதையெல்லாம் பார்த்து சந்தோஷமா காலத்தைக் கடத்த வேண்டியது தான். உட்கார்ந்திருந்தா கைப்பேசியில் scrabble விளையாட வேண்டியது தான். ஏன் கண்டதற்கும் கவலைப்படுகிறாய், கிழமனமே! -- இப்படி மனசு சொன்னது. அதைக் கேட்டதும் நானும் ஒத்துக் கொண்டேன்.

இனியாவது மனசு சொன்னதை ஒழுங்கா கேட்டு நடக்க ஆரம்பிக்க வேண்டும்.

*



3 comments:

G.Ravi said...

உங்களது கருத்து எதார்த்தமானது. உண்மையானது.இந்த மூடமக்களுக்காக கவலைப்பட்டு நம் மனதையும் உடலையும் கெடுத்துக் கொண்டது போதும் என்று நினைத்தாலும் மீண்டும் சமூகம் பக்கமே தாவிச் செல்கிறது இந்தக் குரங்கு. இரு நாட்களாக தொலைக்காட்சி பார்ப்பது அரிதாகி விட்டது. செய்தித்தாள் வாசிப்பதிலும் ஆர்வமில்லை. குழந்தைகள் வளர்ந்து என்ன கதியாகப் போகிறார்களோ? இந்த மதம் பிடித்த மக்கள் என்று கரை சேர்வார்களோ? அன்புனும் விரக்தியுடனும், கோவி.ரவி, ஆசிரியர்-ஓய்வு, கரூர்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

உண்மைதான் ஐயா. மனசு சொல்வதைக் கேட்டு, நிம்மதியாக இருப்போம்.

டிபிஆர்.ஜோசப் said...

எங்கும் இருள் சூழ்ந்து வருவதாக எனக்குத் தோன்றுகிறது. அது உண்மையோ என் மனதின் மருட்சியோ தெரியவில்லை.//

மருட்சி இல்லை. இது மிக சத்தியமான உண்மை.
மீண்டும் “ரேடார் பிரதமர்” வந்தால் அவரது முதல் கல்லெறி கல்வி மீது தானிருக்கும் என்று நினைக்கின்றேன்//

நீங்கள் ஒரு தீர்க்கதரிசி. மிகச் சரியாய் கணித்திருந்தீர்கள். அதுதான் இப்போது வரைவு பதிப்பாய் வந்துள்ளது. எப்போது அமலுக்கு வருமோ அப்போதுதான் மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் எதிர்கால சந்ததியினரையே குறிப்பாக ஏழை, கிராமப் புற, தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்தவர்களை, இருண்ட காலம் துவங்கப்போகிறது. இதை நம் தலைமுறையால்தான் எதிர்க்க முடியும் என்று நினைக்கிறேன். இன்றைய இளம் பெற்றோர்களுக்கு பள்ளிக் கல்வியில் பரிந்துரைக்கப்பட்டுள்ல மாற்றங்கள் எத்தகைய எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தப்போகிற என்கிற அச்சம் துளியும் இல்லை என்றே எனக்கு தோன்றுகிறது.

Post a Comment