*
TRANCE கிளப்பி விட்ட தூசி
ஒரு வழியா TRANCE படத்தைப் பார்த்தாச்சு. துணிச்சலாக இப்படி ஒரு படம் எடுத்தமைக்கும், நன்றாக எடுத்திருப்பதற்காகவும் பாராட்டுகளும், வாழ்த்துகளும். பழைய நினைவுகளும் அனுபவங்களும் இந்தப் படத்தைப் பார்த்த பிறகு தொடர்ந்து வருகின்றன
. தூசி …1
ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு விஷயம். பக்கத்து வீட்டில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி. கௌசல்யா. பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த பெண் திடீரென நடக்க முடியாமல் வீட்டில் படுத்த படுக்கையானாள். முதுகுத்தண்டில் வீக்கம் என்றார்கள். என் வீட்டில் நாங்கள் ஒருவேளை அவளுக்கு கேன்சராக இருக்குமோ என்று சந்தேகப்பட்டுக் கொண்டிருந்தோம். அதன் பின்னால் முற்றிலுமாக நடக்க முடியாமல் போனது . அப்போது ஒரு கிறிஸ்துவ பிரசங்கியார் அவர் பெயர் எல்லாம் எனக்கு ஞாபகமில்லை.(ஒரு வேளை டி ஜி எஸ் தினகரனாக இருக்கலாம்.) அவரது கூட்டத்திற்கு இந்தப் பெண்ணை அழைத்துச் சென்றார்கள்.
நான் அன்று வீட்டுக்கு வந்த போது என் மனைவி பயங்கர சந்தோஷத்துடன் கௌசல்யா நடந்துவிட்டாள் என்றாள். எப்படி என்றேன். கூட்டத்திற்கு போயிருக்கிறாள். சுகம் இல்லாதவர்கள் நடக்க முடியாதவர்கள் நடந்து வாருங்கள் என்று சொன்னவுடன் மேடைக்குப் போட்டிருந்த பாலம் போன்ற அமைப்பில் 20.. 30 அடிக்கு மேல் நடந்து மேடைக்கு சென்று சாட்சியம் சொல்லி இருக்கிறாள் என்றார்கள், என்னால் நம்பவே முடியவில்லை அடுத்த நாள் காலை அடுத்த வீட்டில் அழுகை ஒலி கேட்டது. விரைந்து ஓடிப் போய் பார்த்தோம். அந்தப்பெண் கௌசல்யா ஆர்வத்தின் காரணமாக காலை நேரத்திலேயே எழுந்து நடக்க முயற்சித்திருக்கிறாள். அவளால் எழுந்திருக்க முடியவில்லை. சோகத்தில் அழத்தொடங்கினாள். அழுகை எல்லோரையும் பற்றிக்கொண்டது. விரைவில் அந்தப் பெண்ணும் இறந்து போனாள்.
இது எப்படி நடந்தது என்ற கேள்விக்குறி எனக்கு. அப்போதும் தெரியவில்லை; இப்போதும் தெரியவில்லை. மாஸ் ஹிப்னாடிஸம், அது .. இது .. என்று ஏதேதோ நினைத்துப் பார்த்தேன். அவ்வளவே.
*****
தூசி … 2
இரண்டாவது அனுபவம் என் சொந்த அனுபவம். 1990ல் முதல்முறையாக ஹார்ட் அட்டாக் வந்து மருத்துவமனை வாசம்முடிந்து மருத்துவ விடுப்பில் வீட்டில் இருந்த நேரம். அப்போது நான் முழுமையான இறை மறுப்பாளனாக ஆகவில்லை; அந்தப் பாதையில் இருந்தேன். அவ்வளவே. கத்தோலிக்க மதத்தில் ஒரு பாதிரியார். அவர் பெயர் பெர்க்மான்ஸ். வேடிக்கை பார்ப்பதற்காக புறப்பட்ட ஒரு நண்பர் என்னையும் அழைத்துச் சென்றார். என்னால் அந்தக் கூட்டத்தில் 30 நிமிடங்கள் கூட இருக்க முடியவில்லை. அவர் பேச ஆரம்பிப்பதற்கு முன்பே மக்கள் நிலைதடுமாறி இருந்தது போலவே தோன்றினார்கள். ஏறக்குறைய இந்த காட்சியை ஒரு பத்து நிமிடம் பார்த்துக் கொண்டிருந்தேன். பிறகு பெர்க்மான்ஸ் பேச ஆரம்பித்தார். மயிர்க்கூச்செறியும் என்பார்கள்… goosebumps என்பார்கள். அந்த உணர்வு எனக்கும் தோன்ற ஆரம்பித்தது . ஏனென்றால் பேச ஆரம்பித்த பெர்க்மான்ஸ் சாதாரண குரலில் பேச வில்லை. தில்லானா மோகனாம்பாள் சிவாஜி கணேசன் சொல்வாரே நாபிக்கமலத்தில் இருந்து என்று … அதே போல் இவரும் குரல் எழுப்பி மெல்ல - சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் ஒரு பில்டப் கொடுத்து - கூட்டத்தைப் பார்த்து பேச ஆரம்பித்தார். அடிவயிற்றிலிருந்து ஆரம்பித்து அவருடைய குரல் மெல்லியதாக ஒடுங்கி ஆரம்பித்தது. Crescendo என்பார்களே அதைப் போல் குரல் மெல்ல கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்த பிச்சிற்குப் போனது. என் மனதிற்கு அது பிடிக்கவில்லை. ஆனால் அதோடு நின்றிருந்தால் பரவாயில்லை. வயிற்றுக்குள் இல்லாமல் நெஞ்சுக்குள் பட்டாம் பூச்சிகள் படபடத்தன. ஏனிப்படி ஆனது என்று தெரியவில்லை . அந்த குரலில் ஏதோ வசியம் இருந்ததா? அப்போதும் தெரியவில்லை; இப்போதும் தெரியவில்லை.
****
தூசி .. 3
எல்லோருக்கும் தெரிந்த நிகழ்வு ஒன்று. இந்துக் கோவில் ஒன்றில் கர்ப்பகிரகத்தில் அர்ச்சகர் ஒருவர்… அவர் ஒரு பெண்ணோடு கொண்ட பாலியல் நிகழ்ச்சியை அவரே வீடியோ எடுத்து, அது வெளிவந்து அவர் மாட்டிக்கொண்டார் என்ற செய்தி எல்லோருக்குமே தெரியும். இவரைப் பற்றி ஏன் இங்கு சொல்கிறேன் என்றால் … கடைசியாக அதற்கு வருவோம்.
****
தூசி … 4
டி ஜி எஸ் தினகரன் என்று ஒரு கிறிஸ்தவ பிரச்சார பீரங்கி. ஏறத்தாழ எல்லோரும் அவரைத் தெரிந்து வைத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். அவரைப் பற்றிய ஒரு சிறு செய்தி. ஏறத்தாழ கிறிஸ்தவ பிரச்சாரத்தில் முதல்முதல் மிகவும் ஆழமாக காலூன்றிய மனிதர் இவர்தான் என்று நினைக்கிறேன். பேசினார்.. கூட்டம் சேர்த்தார் …. பணம் சேர்த்தார். அதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால் முடிந்தால் இந்த கட்டுரையை வாசித்த பிறகாவது யூடியூப் சென்று Dinakaran in heaven என்று போட்டுப் பாருங்கள். அவர் மோட்சத்திற்கு செல்வது போன்ற காணொளிகள் நிறைய இருக்கின்றன. Very very interesting. don't ever miss those videos. இவரைப் பற்றியும் பின்னால் பேசுவோம்.
*************
படம் பார்த்ததும் இதுபோன்ற நினைவுகள் அடுத்த எடுத்து ஒவ்வொன்றாக நினைவுக்கு வர ஆரம்பித்தன. வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற ஒரே வெறியோடு இருந்த ஒரு இளைஞனை ஒரு கார்ப்பரேட் குழு அவனை ஒரு கிறிஸ்தவ பிரச்சார பீரங்கி ஆக்கி பணத்தை அள்ளிக் கட்டுகிறார்கள். மேலும் மேலும் செல்வம் குவிகிறது. அதன்பின் வழக்கமாக நமது சினிமாக்களில் வருவதுபோல் ஹீரோவுக்கும் வில்லனுக்கும் பிரச்சனைகள். ஹீரோவை கொல்ல வில்லன்கள் திட்டமிடுகிறார்கள். அதே நேரத்தில் இன்னொரு பிரச்சார பீரங்கியை வில்லன்கள் தயார் செய்து கொண்டிருக்கிறார்கள். ஊக்க மருந்துகளைத் தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த நமது ஹீரோவிற்கு நிறைய சைட் எஃபெக்ட்ஸ். அதனாலேயே அவர் உண்மையைக் கூறிய பிறகும் இரண்டு வருட மன நல மருத்துவம் நடந்து அவர் சுதந்திர பறவை ஆகிவிடுகிறார்.
ஏறத்தாழ ஹீரோ மட்டுமே இந்த படத்தை தாங்கிப் பிடித்திருக்கிறார் மற்ற நட்சத்திரங்கள் வந்துபோகும். அவ்வளவே. ஆனால் கதாநாயகன் பாசில் மிகப்பொருத்தமாக நடித்திருக்கிறார். அது அவர் ஆவேசம் வந்தது போல் கத்தும் காட்சிகளெல்லாம் உண்மையான பிரசங்கிகள் செய்வது போலவே எனக்கு தோன்றியது. பல காணொளிகள் பார்த்திருக்கிறோமே அதிலும் இதுபோல்தான் ஆடுவார்கள்; குதிப்பார்கள்; மற்றவர்களைத் தள்ளி விடுவார்கள். படங்களில் அப்படியே எடுத்திருக்கிறார்கள்.
படத்தைப் பற்றிச் சொல்வதற்கு இதைவிட அதிகமாக ஏதும் இல்லை. ஆனால் ஒரே ஒரு பிரச்சனை. எப்படி இந்த படத்தை எடுத்தார்கள்? எப்படி கிறிஸ்தவர்கள் நிறைய இருக்கும் மலையாள நாட்டில் இந்த படம் எந்தவித எதிர்ப்புமின்றி நடந்தது? இதே படம் தமிழில் எடுத்திருந்தால் என்ன ஆகியிருக்கும் போன்ற கேள்விகள் மட்டுமே நம்முன் நிற்கின்றன. கேரளாவில் எந்த எதிர்ப்பும் வராதது ஒரு பெரிய ஆச்சரியம்தான்
*****
இந்தப் படத்தில் வருவது போல் கிறித்துவ மதத்தின் ஒரு பகுதியான பெந்தகோஸ்தே என்ற சபையினர் தான் அதிகமாக இதைச் செய்வார்கள்; ஆனால் பெர்க்மான்ஸ் ஒரு கத்தோலிக்க பாதிரி; டி ஜி எஸ் தினகரன் தென்னிந்திய கிறித்துவ திருச்சபைக்காரர். நான் முன்பே சொன்னது போல் பெர்க்மான்ஸ் கத்தோலிக்கப் பாதிரியாராக இருந்தார், அவர் கூட்டம் போடுவது .. உயர்நிலைப் பாதிரிமார்களை மதிப்பதில்லை … மாதாவைக் கும்பிடுவதில் மாற்றுக் கருத்து … பணம் திரட்டி ஜெபத் தோட்டம் நிறுவியது … இப்படி பல காரணங்களைச் சொல்லி அவரை ஒதுக்கி வைத்தார்கள். ஆனால் அவர் இன்றும் கத்தோலிக்க கிறித்துவப் பாதிரியாகத் தானிருக்கிறார். அனைத்துப் பிரிவினரும் நடத்துகிறார்கள். அதிகமாக நடத்துவது பெந்தகோஸ்தே என்ற சபையினர் தான். Hardcore Christians!
****
எனக்கு உள்ள சில ஆச்சரியங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்: இந்தப் பிரச்சார பீரங்கிகளுக்குத் தாங்கள் பேசுவதில் எந்த அளவு நம்பிக்கை இருக்கும் என்ற கேள்வி என் மனதை உறுத்திக் கொண்டே இருக்கும். நிச்சயமாக ஆரம்பிக்கும் பொழுது அவர்கள் கடவுள் நம்பிக்கையோடு தங்கள் “ தொழிலை” ஆரம்பித்திருக்கலாம். அதன் பின் அதனை “வியாபாரம்” என்ற நிலைக்கு எடுத்துச் செல்லும் பொழுது அவர்களுக்கு நிச்சயமாக கடவுள் நம்பிக்கை இருக்கவே இருக்காது என்பதுதான் எனது தீவிர நம்பிக்கை.
ஏனென்றால் மேலே சொன்ன ஒரு இந்து அர்ச்சகர் கோவிலின் கர்ப்பகிரகத்திலேயே தனது திருவிளையாடலை நடத்தியிருக்கிறார். நிச்சயமாக கடவுள் நம்பிக்கை இருக்கும் ஒரு மனிதருக்கு அவ்வாறு செய்ய மனம் வரவே வராது. நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் கூட வராது. ஆனால் அவருக்கு வந்திருக்கிறது என்றால் அவரிடம் தெய்வ பயம் மட்டுமல்ல தெய்வ நம்பிக்கையும் போய்விட்டது என்றுதான் பொருள்.
இதைப்போலவே தினகரன். இவரும் பக்தியோடு ஆரம்பித்திருக்கலாம். நம்பிக்கையோடு கூட்டங்கள் நடத்தி இருக்கலாம். ஆனால் பின்னாளில் தான் வாரம் ஒருமுறை இயேசு கிறிஸ்துவை நேரில் பார்க்கிறேன் என்றெல்லாம் சொல்லும் பொழுது நிச்சயமாக அப்படி ஒன்று நடந்திருக்க வாய்ப்பே இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் துணிந்து அவர் சொல்லுகிறார் என்றால் அவருக்கு கடவுள் மீது நம்பிக்கை இல்லை என்பது வெளிச்சம்போட்டுத் தெரிகிறது. கடவுள் நம்பிக்கை இருந்தால் கடவுளை நேரில் வாராவாரம் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று யாரும் அவ்வளவு எளிதாகப் பொய் சொல்லிவிட முடியாது.
இந்தப் படத்தில் ஹீரோவிற்கும், அவர் பணத்திற்கும் அவர் பின்னாலிருக்கும் கார்ப்பரேட் ஆட்களால் ஆபத்து வருகிறது. ஆனால் உண்மையான கிருத்துவ பீரங்கி களுக்கு இந்த பிரச்சினையே வராது ஏனென்றால் அவர்கள் கார்ப்பரேட்டுகளின் கைக்கூலிகளாக இருப்பதில்லை. அவர்களே கார்ப்பரேட் ஆக மாறி விடுகிறார்கள். தங்களைச் சுற்றி தங்கள் குடும்பத்தை மட்டுமே வைத்து தங்கள் சொத்து வெளியே எங்கேயும் போகாத படி பாதுகாப்பாக வைத்துக் கொள்கிறார்கள். அப்பா .. அதன்பின் அவரது மனைவி.. பின் மகன்.. மருமகள் .. பேரன் பேத்திகள் … கிறித்துவ போதகர்கள் நல்ல அறிவாளிகள்!
படத்தில் ஒரு காட்சி வரும். எப்படி இவ்வளவு பணம் சேர்த்தீர்கள் என்று ஹீரோவைக் கேட்பார்கள். ஆனால் நிஜமாக இந்த ‘சாமிக் கடவுள்கள்’ காசு சேர்ப்பது ஏன் பக்த கோடிகளுக்குத் தெரிவதுமில்லை; தெரிந்தாலும் கண்டு கொள்வதுமில்லை. ஏசுவின் பீரங்கிகளை விட இந்து பீரங்கிகள் கொஞ்சம் பரவாயில்லை. பாபாவும், மேல்மருவத்தூரும் சொத்து சேகரித்தாலும் மக்களுக்கென்று மருத்துவ மனைகள், கல்லூரிகள் என்று ஏதோ செய்கிறார்கள். கிறித்துவப் பீரங்கிகள் யாரும் இப்படி ஏதும் ‘தர்ம காரியங்கள்’ இதுவரை செய்ததாகத் தெரியவில்லை.
*
டி ஜி எஸ் தினகரன் தான் அடிக்கடி செல்லும் மோட்சம் (??) பற்றி ....
https://www.youtube.com/watch?v=m-WUBu4iDiY&feature=youtu.be
***
Funny Christian Missionary trying to convert people to Christianity through fraud in Kerala
https://www.youtube.com/watch?v=Fu9gfDaBa-0*
No comments:
Post a Comment