Harold Robbins கதைகளை வாசித்த பின்புதான் ஆங்கிலத்தில் ஒரே ஆசிரியரின்
கதைகளைத் தொடர்ந்து வாசிக்க ஆரம்பித்தேன் என்று நினைக்கின்றேன். அப்படி தொடர்ந்த இரண்டாவது ஆசிரியர் Irving Wallace. அவர் எழுதிய THE MAN என்ற நூலை முதலில் வாசித்ததும் இவரையும் தொடர்ந்து வாசிக்க வைத்தது இந்த புதினம்.
மனதைத் தொடும் கதை.
அமெரிக்கன்
ஜனாதிபதியும் துணை ஜனாதிபதியும் விபத்தில் இறக்க, அடுத்து பதவியேற்க வேண்டிய ஸ்பீக்கரும் அறுவை சிகிச்சையின்
போது இறக்க, அவருக்கு அடுத்து இருந்தவர் அவசர கால
ஜனாதிபதியாகிறார். இவர் ஒரு ஆப்ரோ-அமெரிக்கன்; அதாவது ஒரு
கருப்பர். கதை எழுதிய ஆண்டு 1964. அப்போதெல்லாம்
ஒரு கருப்பர் அமெரிக்க அதிபதி என்பதே நடக்க முடியாத, நினைத்தும்
பார்க்க முடியாத ஒன்றாக இருந்தது. அச்சூழலில் இவரது கதையில் ஒரு கருப்பர் அதிபதியாகிறார். நாடெங்கும்
அவருக்கு எதிர்ப்பு கிளம்புகிறது. பல கற்கள் அவர் மீது வீசப்படுகின்றன. அவரது மகள்
முழு கருப்பாக இல்லாமல் இருக்கிறாள். அது ஒரு கேலிப் பொருளாகிறது. தங்கள் தலைமுறைகளுக்குக்
கடந்த காலத்தில் நடந்த பலவற்றைச் சொல்லி அதற்கான உண்மையை உரைக்கும் போதும் பலருக்கு
அது போய்ச் சேரவில்லை. அவரது மகனைப்பற்றியும் குற்றச் சாட்டுகள். அவைகளோடு நில்லாது
அவரின் பதவியைப் பறிப்பதற்காக impeachment கொண்டு வரப்படுகிறது.
எதிர்நீச்சல் போட்டு நல்ல அதிபதி என்று பெயரெடுத்தும், தொடர்ந்து
இரண்டாம முறையாக அதிபதியாவதற்கு ஆதரவு இருந்தும் தொடராமல் பதவிக் காலத்தை முடித்து
விட்டு வெளியேறுகிறார்.
கதையின் நாயகன்
நமக்கு அத்தனை பிடித்தவராகிறார். அவரது சோதனைகள் நம்மையும் துன்புறுத்துகின்றன.
1961ல் .. அதாவது இக்கதை எழுத ஆரம்பித்த காலத்தில் பிறந்த ஒபாமா 2008ம் ஆண்டு 44வது
அமெரிக்க அதிபதியாகிறார். ஒரு கதை நிஜமானது.
அடுத்து வாசித்த
நூல் அப்படியே நம்மை (என்னைக்) கட்டிப் போட்டது. புதிதாக ஒரு பைபிள் தொல்பொருளாக வெளிவருகிறது.
இது ஏசுவின் தம்பியான ஜேம்ஸ் எழுதியதாகவும், பல புது விஷயங்கள் அதில்
இருக்கின்றன எனவும், வெளி வந்ததும் கிறித்துவ திருச்சபையே ஆட்டம்
கண்டு விடுமென்றும் கருதப்படுகிறது. கிறித்துவ மதத் தலைவர்கள் இந்நூல் வெளியிடப்படக்
கூடாதென்று பெரும் முயற்சியெடுப்பார்கள். நமக்கும் எப்போது அந்த நூல் வெளிவருமென்று காத்திருப்போம்.
இறுதியில் நூல் வெளிவருவதற்கு முன் அது ஒரு
forgery என்பது தெரியும். ஆனால் மூச்சைப் பிடித்துக் கொண்டு
இறுதிப் பகுதி வரை வாசிக்கும் அளவிற்கு கதைப் பின்னல் மிக அழகாக எழுதப்பட்டிருக்கும்.
அடுத்த்து ஒரு
புதினம்: Seven minutes. ஒரு பெண் புணர்ச்சியின் போது அந்த ஏழு நிமிடங்களில் என்ன நினைத்தாள் என்பது
பற்றி ஒரு நூல் எழுத, அந்த நூல் pornography என்று ஒரு தரப்பு
சொல்ல, மற்றொன்று அதை பெரும் நவீனமாகக் கருத... வழக்கு தொடரப்படுகிறது.
இதில் வரும் விவாதங்கள் நன்றாக இருந்தாலும், வழக்கு விசாரணை
நன்றாக இருந்தாலும் அவரது பழைய கதைகளின் உயரத்திற்கு இது செல்லவில்லை.
இப்படியெல்லாம்
நல்ல கதைகள் எழுதிய பின் 1974ல் The fan
club என்று ஒரு நாவல். முழுவதுமாக ஒரு porno. போதுமடா சாமின்னு
இவரைத் தவிர்த்து விட்டு ஓட வைத்த புத்தகம்.
No comments:
Post a Comment