ஓராண்டு ஓடிப் போனதா .. வயதொன்றும் கூடியதா ..? நட்பு ஒன்றிற்கு அதைச் “சீராக” செய்து முடிக்க ஆசை. வரச் சொன்னான்; சென்றேன்.
கொண்டாட வேண்டுமென்றார்கள். கொண்டாடி விடுவோம் என்றான். வரச் சொன்னான் .. ஒன்று வந்தது; இனி அதிகமாக வேண்டாமென்று நினைத்திருந்த ஒரு புத்தாண்டு உறுதியை அன்று மட்டும் கொஞ்சம் ஒதுக்கி வைக்க நினைத்தேன். ஏனெனில் வந்தது அப்படி ஒரு சிறப்பானதாக இருந்தது. HANNESSY XXO.
பேசிகொண்டிருந்தோம். வெளியே ஒரு கார் நின்று கொண்டிருந்தது. நண்பனிடம் அதைப் பற்றிக் கேட்டேன், BMW - TWO DOOR M2 என்றான். collectors' choice மாதிரியான வகை அதன் ஜாதகம் என்றான். அதன் சரித்திரம் சொன்னான். ஆடிப் போகுமளவிற்குக் கோடிக் கணக்கியல் விலை சொன்னான். போவோமா என்றான். அதற்குத்தானே கேள்வியையே முன் வைத்தேன் என்றேன். ஆனால் மெல்ல போவோம் என்றேன். ஏனெனில் அது எத்தனை வேகமாகப் போகும் என்று சொல்லியிருந்தான்.
உட்கார்ந்தோம். மெல்லதான் போனோம்; ஏனெனில் வேகத்தடையில் இடிக்குமாம். மெல்ல சென்று, தடை கடந்து பெரிய ரோட்டுக்கு வந்தோம். மெல்லவே ஊர்ந்தோம். மூன்று செகண்ட் எண்ணி முடித்து speedometer-யைப் பார்க்கச் சொன்னான். மூன்று எண்ண ஆரம்பிக்கும்போதே கார் லேசாக மேலெழும்பி பறக்க ஆரம்பித்தது போலிருந்தது. மூன்று முடித்துப் பார்த்தேன். நூறில் பறந்தது; அப்பனே! மெல்லப் போ என்றேன். சரிந்தான் மெல்ல. கார் இப்போது மிதந்தது. சிறிது தூரம் மிதந்து, மீண்டும் வீடு செல்ல வளைந்து திரும்பினோம். இன்னொரு 100 கி.மீ. என்று சொல்லி அழுத்த, மூன்று விநாடியில் நூறைத் தொட்டு, பின் மிதந்தது.
மூன்று வினாடியில் நூறைத்தொட்டு சில நிமிடங்களே சென்றாலும் ஏறத்தாழ அந்தக் காலத்தில் சுஜாதா திருச்சி சாலையில் ஒரு நண்பரின் race பைக்கில் பறந்த அனுபவம் பற்றியெழுதியதை நான் வாசித்தது நினைவுக்கு வந்தது. (அது முழுவதும் நினைவில் இருந்திருந்தால் இங்கே பேசாமல் அதையே சேர்த்திருப்பேன்.) எனக்கெதற்கு இந்த வீண்வேலை.
பின்பு மீன்,ஆடு என்று மேய்ந்து விட்டு, குடும்பமாக உட்கார்ந்து கடந்த 40 - 45 ஆண்டனுபங்களைப் பிள்ளைகளோடு மேய்ந்து நள்ளிரவுக்குப் பிறகு வீடு திரும்பினோம்.
No comments:
Post a Comment