அமெரிக்கன் கல்லூரி பழைய மாணவர் குழு
ஒரு விசித்திரமான தலைப்பு கொண்ட ஒரு நாடகத்தைத் தொடர்ந்து நடத்தி வந்தார்கள் என்பது
தெரியும். அது மதுரையில் நடந்து கொண்டிருந்தது
என்பதும் தெரியும். ஆனால் திடீரென சென்னையில் நடக்கிறது என்றும், அதுவும் என்
இருப்பிடத்திற்கு அருகிலேயே நடக்கிறது என்று தெரிந்ததும், “பல
சீரியசான திட்டங்கள்” தீட்ட ஆரம்பித்தேன். வயதைக் காரணம் காட்டி குடும்பம் ஏறக்குறைய ‘வீட்டுச் சிறையில்’ வைத்து விட்டார்கள். இரண்டு மணி
நேரம் அதிலிருந்து தப்பிப்பதற்காக, காலையிலிருந்தே வீட்டில் ‘நல்ல பிள்ளையாக’
நடக்க ஆரம்பித்து, மாலையில் அப்போதுதான் அந்த
விளம்பரத்தைப் பார்த்தது போல் நடித்து ... ஒரு வழியாக அமெரிக்கன் கல்லூரியின் மீது
பாரத்தைப் போட்டு, அவர்கள் நடத்தும் ஒரு சிறு கூட்டம் என்று
சொல்லி, (நாடகமெல்லாம் இந்த வயதில் போய் பார்க்கணுமா?
என்று கேள்விக்கணைகளுக்கு அஞ்சி...) புறப்பட்டுப் போனேன். சரியான
நேரத்தில் இடத்தைக் கண்டுபிடித்து முதல் ஆளாகப் போனேன். நல்ல வேளை மற்றவர்களும்
விரைவில் வந்து சேர நாடகம் ஆரம்பமானது.
“ ‘கவின்
ஜ ”என்பது நாடகத்தின் தலைப்பு. தலைப்பே
வித்தியாசமானது தான். அதுவும் ‘முழு
நீள நகைச்சுவை தனிநபர் நாடகம்’ என்று விளம்பரம் கூறியது. ஒரு விஷயத்தை உடைத்து விடுகிறேனே ...
தலைப்பை முழுவதுமாக விளக்கி விடுகிறேன். “கந்தவேலின் ஜட்டி” என்பதே முழுத் தலைப்பு. நாமெல்லோரும் நம்
உள்ளாடைகளை அதன் பெயரை வெளிப்படையாகச் சொல்வதே வெகு unparliamentary . என்றல்லவா நாம் நாகரிகமாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆகவே
முதலில் சில நிமிடங்களில் ரொம்பவுமே கஷ்டப்பட்டு கந்தவேல் ‘ஜட்டி” என்ற சொல்லை மிகவும்
வெட்கப்பட்டுக் கொண்டே சொல்கிறார்.
இந்த நாடகத்தை நான் முழுவதுமாகச்
சொல்லி அதன் நயத்தைக் கெடுக்க விரும்பவில்லை. ஆனால் விளையாட்டுத் தனமாக
ஆரம்பித்து... மெல்ல மிகவும் முக்கியமான, ஆழமான காம வக்கிரங்களை நோக்கி கதை நகர்கிறது. இறுதியில்
கந்தவேல் ஒரு கடிதம் வாசிக்கிறார். ஒரு பெண்ணின் தந்தையான அவர் தன் பெண்ணை
நினைத்து அஞ்சி, ஆண்களின் வக்கிரப் புத்திக்கான காரணங்களை நம் முன் வைக்கின்றார். கேள்வியும் பதிலுமாக நாடகம் ஒரு serious
tone-ல் முடிகிறது.
ஆனந்த குமார்
தனி நபராக நிறைவாக நடித்துள்ளார். இறுதியில் கலங்கும் கந்தவேல் நம்மையும் கலங்க
வைத்து விடுகிறார்.
இளம் பிள்ளைகள் இந்த நாடகத்தைப்
பார்ப்பது பல் நல்வினைகளை விளைவிக்கும் என்றே நம்புகிறேன்.
நண்பர்கள் பாஸ்கர், சுதன் எடுத்த படங்களுக்கு
நன்றி.
பி.கு. அதென்னவோ, அமெரிக்கன் கல்லூரி மாணவர்களுக்கு அந்தக் கல்லூரிமேல் எப்போதுமே அத்தனை காதல்! நாடகம் நடந்த அறையில் பெரும் நடிகர்கள் சிலரின் புகைப்படங்கள் அலங்காரமாக மாட்டப்பட்டிருந்தன. அத்னோடு எங்கள் கல்லூரியின் கலைரசனையோடு கட்டப்பட்டுள்ள மணிக்கூண்டின் படமும் அவைகளோடு தொங்கியதில் அந்தக் காதல் வெளிப்பட்டது. மகிழ்ந்தேன். அதனை வீடியோவாக எடுத்தேன். பதிந்திருக்கிறேன்.
No comments:
Post a Comment