அப்பாவின் கல்யாண
வைபோகமே…
அப்பா-அம்மா கல்யாணம் -
நன்கு அழுத்தமாக நினைவில் நிற்கிற முதல் நினைவு அதுதான் என்று நினைக்கிறேன். பெத்த
அம்மா இறக்கும்போது எனக்கு வயது ஒன்றரை, இரண்டு இருந்திருக்கும். ரொம்ப அம்மாவைத் தொந்தரவு
செய்வேனாம். அம்மா இறந்ததும் அம்மாவுக்கு மாலை போடச் சொன்னார்களாம்; அம்மாவுக்கு முத்தம் கொடுத்தேனாம். எல்லாம் சொல்லக் கேள்வி.
தொடச்சி வச்சது மாதிரி ஒன்றும் சுத்தமாக ஞாபகமில்லை. ஆனால் அதற்குப் பிறகு சின்ன
வயது விதயங்கள் பலவும் நினனவில் இருக்கின்றன. பழைய போட்டோ ஆல்பம் ஒன்றைப் பக்கம்
பக்கமாகப் புரட்டிப் பார்ப்பது போன்ற உணர்வு. பக்கங்கள் புரளப் புரள அதில் உள்ள
படங்கள் ஒவ்வொன்றும் உயிர்த்து, என்னைச் சுற்றிச் சுற்றி நிஜ நடப்புகள் போல, ஒரு திரைப்படமாக உயிர்த்துடிப்போடு இயங்க ஆரம்பிக்கின்றன.
அந்தத் திருமண நிகழ்ச்சி தெளிவாகவே என் கண்முன் விரிகிறது.
அருகில் அம்மாவின் ஊர் - குறும்பலாப் பேரி. கிராமத்துக் கிறித்துவக் கோயில்; அதற்குரிய எளிமையோடு இருக்கிறது. எனக்குத் தனியாக ஒரு
நாற்காலி;
எங்கிருந்து எடுத்து வந்திருந்தார்களோ. ஏனெனில் அந்தக்
கோயிலில் ஏது நாற்காலியெல்லாம் அப்போது இருந்திருக்கப் போகிறது. அப்பாவுக்கும், பொண்ணுக்கும் இரண்டு நாற்காலிகள். ஆனால், அப்பா கோயிலின் முன்னால் அந்த பீடத்திற்குப் பக்கத்தில்
முழங்கால் போட்டு ஜெபம் பண்ணிக் கொண்டிருந்தார்கள். அப்பா இளம் க்ரீம் கலரில்
அந்தக் காலத்து Gaberdine துணியில் கோட், சூட் போட்டு இருந்தார்கள். நான் ஆல்டரின் பக்கத்தில் அந்த
பெரிய சேருக்குள் அடங்கி உட்கார்ந்திருந்தேன். பெண்ணைப் பார்க்கும் டென்ஷன்; சிறிது நேரம் கழித்து கோயில் வாசல் பக்கம் கொட்டுச் சத்தம்.
திறந்த காரில் பெண் வந்தாகிவிட்டது. சிகப்பா, அழகாக இருந்தார்கள். (என் அம்மா கருப்போ, புது நிறமோ; ஆனா நிச்சயமா சிகப்பு இல்லை என்றுதான் நினைக்கிறேன்.)
மஞ்சள் பட்டுப் புடவையும், தலையில் கிறித்துவ முறைப்படி ரீத், நெட் எல்லாம் போட்டிருந்தது. சின்னப் பிள்ளைகள் கூட்டமாய்
பொண்ணைச்சுற்றி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அந்தக் காலத்தில்
அந்த திறந்த கார், கிறித்துவ முறையில் அலங்காரம் - இவை எல்லாமே அவர்களுக்கு ரொம்ப வித்தியாசமாக
இருந்திருக்க வேண்டும்.
பிறகு கல்யாணம் நடந்தது. பின் அந்த திறந்த காரில் ஊர்வலம்.
அதில் ஒன்று மட்டும் ஞாபகமிருக்கிறது. காரில் உட்கார்ந்திருந்தேனோ என்னவோ
தெரியவில்லை; ஆனால், ஏதோ ஒரு நேரத்தில் என் பாளையன்கோட்டை பெரியம்மா என்னைத்
தூக்கி காரில் அப்பாவுக்கும், 'பொண்ணு'க்கும் நடுவில் உட்காரவைத்தார்கள்.
இன்னும் கொஞ்சம் கல்யாண நிகழ்ச்சிகள் நினைவில் இருக்கிறது.
அதைப் பார்ப்பதற்கு முன்பு சொல்லவேண்டிய வேறு சில விதயங்களைச் சொல்லிவிட்டு பிறகு
இதற்கு வருகிறேன். என் ஐந்தாவது வயதில் அப்பாவின் கல்யாணம் நடந்திருக்க வேண்டும்; ஏனெனில், கல்யாணம் முடிந்த கையோடு கிராம வாழ்க்கையை முடித்துக்
கொண்டு,
மதுரைக்குச் சென்று பள்ளியில் சேர்ந்தேன். அப்பாவின் கல்யாண
நிகழ்ச்சிகள் நினைவில் இருக்கும் அளவு அதற்கு முன் நடந்தவைகள் அவ்வளவு தெளிவாக
நினைவில் இல்லை. அங்கங்கே விலகும் ஒரு பனி மூட்டம் வழியாக பார்ப்பதுபோல் சில
காட்சிகள் - சில தெளிவாக; சில மஞ்சுவுக்கு ஊடாக.
நான் பிறந்து சில மாதங்களிலேயே அம்மாவுக்கு அந்தக் காலத்து
பயங்கர நோயான எலும்புருக்கி - T.B. - வந்து விட்டதாம்; ரொம்பக் கஷ்டப்பட்டிருக்கிறார்கள். நோய் முற்றிவிட்ட
நிலையில் மதுரை அரசாங்க மருத்துவமனையில் சில நாட்கள் இருந்திருக்கிறார்கள்.
பின்னாளில் சில உறவினர்களுடன் அந்த மருத்துவமனை செல்லும்போது, அம்மா இருந்த கட்டிடம், வார்டு என்று என்னிடம் அடையாளம் காட்ட முயன்றதுண்டு. நான்
அதை மனதில் வாங்கிக் கொள்ள முயன்றதேயில்லை; அது மட்டுமல்லாது அந்த சேதியை நான் அறியவும் விரும்பவில்லை.
மருந்துகள் குணமளிக்க முடியாத நிலையில் அம்மா ‘நான் இங்கு சாகவேண்டாம்; ஊருக்குப் போய் விடுவோம்’ என்று சொல்லிவிட்டார்களாம்.
தென்காசி அருகிலுள்ள அம்மா ஊருக்கு - குறும்பலாப்பேரி - கொண்டு சென்றார்களாம்.
என்னை முடிந்தவரை அம்மா ‘தள்ளி’யே வைத்திருக்க முயற்சித்திருக்கிறார்கள் -
மகனுக்கும் நோய் வந்துவிடக்கூடாதே என்று. நான் ரொம்பவும் அழுது தொல்லை கொடுத்தேனாம்.
ஊருக்குப் போன ஓரிரு மாதங்களில் அம்மா இறந்து போனார்கள்.
அப்பா விடுமுறைகளில் ஊருக்கு வரும்போதெல்லாம் ஒரு நிகழ்ச்சி தவறாமல் அரங்கேறும். அதுவரை நான் பாட்டுக்கு விளையாடிக்கிட்டு இருப்பேன். அப்பா வந்ததும் என் அத்தைமார்கள், அப்பம்மா எல்லாரும் என்ன மாத்தி மாத்தி தூக்கி வச்சிக்கிடுவாங்க; ரொம்ப அழுதிருவாங்க. அதப் பாத்து நானும் அழுதிருவேன். இறந்துபோன அம்மா, அம்மா இல்லாத பிள்ளையாக இருக்கிற நான் - எல்லாம் உள்ளே இருக்கிற சோக நெருப்பை அப்பாவுடைய வரவு ஊதிப் பெருக்கிவிடும். அப்பாவும், பாட்டையாவும்தான் இந்த சூழலை மாத்துவாங்க - ஏதாவது பேசி; மதுரையில் மழ இருக்கா, வெயிலு எப்படி இருக்கு அப்டின்னு ஏதாவது பேசி.
அப்பா வரும்போதெல்லாம் ஏதாவது வாங்கிட்டு வருவாங்க. எனக்குப் பிடிச்சது என்னன்னா, திராட்சைப் பழம். அப்போவெல்லாம் பச்சை திராட்சைதான் எங்கேயும் கிடைக்கும். நல்லா புளிக்கும். நரிகூட நிஜமாவே வேண்டாம்னு போச்சே, அது. கருப்புத் திராட்சை -ஹைதராபாத் திராட்சை என்பார்கள் - நல்லா இனிக்கும்; அத அப்பா வாங்கிட்டு வர்ரப்போவெல்லாம் ஒரே ஜாலி.
ஒருதடவை அந்த மாதிரி வரும்பொது எனக்கு ஒரு மூணு சக்கர சைக்கிள் வந்திச்சு. சரியான கனம்; கெட்டிக் கம்பில பண்ணுனது. பச்சைக் கலர். வீல் சைடு எல்லாம் ஒரு மாதிரி சிகப்பு. கெட்டி ரப்பர்ல டயர். அழகா பேப்பர் போட்டு சுத்தி வந்து இறங்கிச்சி. அடேங்கப்பா! எப்படித்தான் நியூஸ் பரவுச்சோ…கொஞ்ச நேரத்தில ஊர்ல இருக்கிற சின்ன பசங்க பூரா வந்திட்டாங்கல்லா நம்ம வீட்டுக்கு.
அப்போ சைக்கிள் ஓட்ற வயசும் இல்ல; அதனால நமக்கு ஒரு டிரைவர் செட் பண்ணியாச்சி. வேற யாரு; நம்ம தங்கச்சாமி தான். வீட்டுக்குப் பின்னால பெரிய காலி இடம் இருக்கும். நம்ம டிரைவரோடு போயிட வேண்டியதுதான்; என்ன உக்கார வச்சு தங்கச்சாமி சுத்தி சுத்தி தள்ளிக்கிட்டே ஓடுவான். வேணுமான்னு கேட்டாகூட வேண்டான்னுட்டு, தள்ளி உடுவான். நமக்கு ‘ஸ்டீயரிங் கன்ட்ரோல்’ மட்டும்தான். ஒருநாள் எனக்கும், தங்கச்சாமிக்கும் படு ஜாலி. வேக வேகமா சுத்திக்கிட்டு இருந்தோம். டபார்னு கால சக்கரத்துக்குள்ள விட்டுட்டேன். பெரு விரல் நசுங்கி ஒரே ரத்தம். தங்கச்சாமி என் அத்தைமார்களுக்குப் பயந்து பின் வாசல் வழியே ஓடிப் போய்ட்டான். ஆனா, இதில் ஒரு நல்லது நடந்தது. அதுக்குப் பிறகு வண்டிக்கு டிரைவர் கிடையாது. அதனால நானே ஓட்டப்பழகினேன்.. அதன் பின் அத்தைகளின் கையைப் பிடித்து நடந்து வந்த நான் சைக்கிளில் சென்று வர ஆரம்பித்தேன். என் சைக்கிள் மட்டுமே அந்தப் பள்ளியில் மரத்தடியில் ‘பார்க்’ செய்யப்பட்ட சைக்கிளாக இருக்கும். நான் சைக்கிளில் செல்வதைப் பார்க்க வழியில் உள்ள வீட்டிலிருந்து பெரிசுகளின் தலைகள் கூட எட்டிப் பார்க்கும்.
கிராமத்துப் பிள்ளைகளோடு விளையாடி ஒன்றாக இருந்தாலும் எல்லோருக்கும் நான் ஒரு ‘தாயில்லாப் பிள்ளை’. அந்தக் கண்ணோட்டத்தில்தான் என்னைப் பார்ப்பார்கள். அதை எனக்குப் புரியும் வகையில் ‘ஸ்பெஷல் அன்பைப் பொழிவார்கள். I was the most pampered and petted child in the village. அதுவே என் பின்னாளைய வாழ்வில் ஒரு அழியா தடத்தை ஏற்படுத்திவிட்டது. அதன் பாதிப்பு என்னிடம் இன்று வரை இருப்பதாகவே நினைக்கிறேன்.
சரி சொல்ல வந்ததை விட்டுட்டு எங்கேயோ போய்ட்டோமோ? கல்யாணத்திற்கு வருவோம். அது என்னவென தெரியல…காட்சிகள் எல்லாம் சினிமாவில் cut-shots என்பார்களே அது மாதிரி தொடர்பில்லாமல் துண்டு துண்டுக் காட்சிகளாகத் தெரிகின்றன. அம்மா-அப்பாவின் நடுவில் கல்யாண ஊர்வலக் காரில் உட்கார்த்தப் பட்டது ‘தெரிகிறது’. அதை விடவும் வழி நெடுகச் சென்ற ஊர்வலத்தில் நானே பலரின் கவனத்தை ஈர்ப்பவனாகி விட்டேன். அதை நான் அப்போதே உணர்ந்ததாக இப்போதுகூட எனக்குத் தோன்றுகிறது.
அடுத்த cut-shot! இது கல்யாண நாளின் மாலை நேரம். அந்தி சாய்ந்து விட்டது. இடம்: அப்பாவின் ஊர் (காசியாபுரம்), எங்கள் வீடு. அந்தக் காலத்தில் - ஏன் இப்பவும் கூட, கிராமத்தில் ஒரு கல்யாணம் என்றால் ஊர் ஒட்டு மொத்தமும் கல்யாண வீட்டில்தான் இருக்கும் - வீடு முழுவதும் ஆட்கள். நாலைந்து ‘பெட்ரோமாக்ஸ் லைட்டுகள்’. அதுவும் அந்தக் காலத்திற்கு பெரிய novelties. வீட்டுக்கு முன்புறம் இரண்டு தலைவாசல்கள் இருக்கும். வடக்குப் பக்க வாசல்தான் பொதுவாக எப்போதும் எல்லோரும் பயன்படுத்தும் வழி; தெக்குப் பக்கம் உள்ளது அதிகமாக யாரும் பயன்படுத்துவதில்லை. ஏனென்று தெரியாது - நான் தனியாக அந்த தெக்கு வாசலில் உட்கார்ந்து கொண்டு, அந்த பெட்ரோமாக்ஸ் விளக்கைச்சுற்றி விளையாடிக்கொண்டிருந்த என் வயசுப் பசங்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். எனக்குப் பின்னால் யாரோ வந்து நின்னது மாதிரி இருந்திச்சி; திரும்பிப் பார்த்தேன். அப்பாதான் பட்டு வேஷ்டி கட்டிக்கிட்டு நின்னாங்க. பக்கத்தில் உக்காந்தாங்க; கொஞ்ச நேரம் ஏதும் பேசலை. நானும்தான். பிறகு அப்பா மெல்ல கேட்டாங்க: ‘வந்திருக்கிறது உனக்கு யார்?’என்று கேட்டார்கள் . ‘சித்தி’. அப்படிதான் எனக்குச் சொல்லிக் கொடுத்திருந்தார்கள்; அதைச் சொன்னேன். ‘இல்லப்பா, அது உனக்கு அம்மா’ என்றார்கள்.
அதிலிருந்து அப்படித்தான்.
No comments:
Post a Comment