*
*
தொடர்புடைய மற்றைய பதிவுகள்:
1.2.3.4.5.6.7.8.இஸ்லாம் மதத்தைப் பற்றிய என் ஐயங்களை
என் மதங்களைப்பற்றிய 6-ம் பதிவில் எழுப்பியிருந்தேன். பொதுவான சிலவற்றைப் பற்றிப் பேசிவிட்டு ‘இனி என் ஐயங்கள்’ என்று தலைப்பிட்டு 21 ஐயங்களைப் பட்டியலிட்டிருந்தேன். இதற்கு விளக்கமளிக்க வந்த பதிவுகளில் என் முதல் கேள்விக்குப் பதிலளிக்கப்பட்டுவிட்டது. நன்றி.
1.)பழைய ஏற்பாடு இரு (கிறித்துவம், இஸ்லாம்)மதத்தினருக்கும் பொது எனப்படுகின்றது. கிறித்துவர்களின் பைபிளில் ஆதாம் - ஏவாள் படைப்பைப் பற்றி சொல்லும்போது ஆணின் விலா எலும்பிலிருந்து பெண் படைக்கப்பட்டாள் என்பதை, இது ஓர் ஆணாதிக்க விளக்கம் என்று கூறியிருந்தேன். ஆனால், முஸ்லீம் எழுத்துக்களில் அந்த முதல் பெண்ணுக்குப் பெயரே இல்லை. பெயர் தரும் அளவிற்குக்கூட பெண்ணுக்கு முக்கியம் இல்லையோ? - இது என் கேள்வி.
(கேட்டிருக்கும் கேள்விகளில் இந்த முதல் கேள்வியை திரும்பப் பெற்றுக் கொள்கிறேன். ஏனெனில் அக்கேள்விக்கு நண்பர்கள் பதில் கொடுத்துவிட்டார்கள். அந்த முதல் பெண்ணுக்கு ‘அவ்வா’ (AWWA) என்று பெயர் குரானில் சொல்லியுள்ளதாக விளக்கியுள்ளார்கள். விளக்கத்திற்கு நன்றி. )
இதன் பிறகு சில பதில்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அவைகளை நான் கேள்விகளாகவே பொதுவில் வைக்கவில்லை. நான் அறிந்தவரையில் சொன்ன சில காரியங்களுக்கு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளன. அவைகளில் சிலவற்றை ஏற்றுக்கொள்கிறேன். ஏனெனில் அவற்றைப் பொறுத்தவரை எனக்கு அவைகள் அவ்வளவு முக்கியமானவைகளாகத் தெரியவில்லை. .
1) குர்ஆன் குகையில் கொடுக்கப்பட்டதா? - குரான் எப்படி எங்கே கொடுக்கப்பட்டது என்பது எனக்கு முக்கியமாகப் படவில்லை. கொடுத்தவைகளாகக் கருதப்படுபவைகளில் எனக்கு வந்த ஐயங்களைத்தான் நான் தொகுத்திருக்கிறேன்.
2) முஹம்மது நபி எழுதப்படிக்கத் தெரிந்த வர்த்தகரா ? - சில கருத்து வேறுபாடுகள் உண்டென்று படித்ததைக் கூறியுள்ளேன். அவர் கற்றவரா கல்லாதவரா என்ற விவாதத்தை நான் வைக்கவில்லை. எப்படியிருந்திருந்தாலும் அது எனக்கு உடன்பாடே.
3) சில போர்களில் தோற்றது ஏன்? god is always on the side of bigger battalion என்று சொல்லப்படுவது நினைவுக்கு வந்தது!
4) இஸ்லாத்தில் பெண்களின் நிலை:
Zaynab bint Jahsh- ஜேனாப் என்ற இந்தப் பெண்மணி முகமதின் வளர்ப்பு மகனின் மனைவி; வளர்ப்பு மகன் விவாகரத்து செய்த பின் இப்பெண்ணை முகமது மணம் முடிக்கிறார் . - தருமி
இதுவும் நான் கேள்வியாக வைக்காத ஒன்று. ஆயினும், நான் சொன்னதையும், அதற்கு அளிக்கப்பட்டுள்ள பதிலையும் (கீழே கொடுக்கப்படுள்ளது) படித்துவிட்டு, படித்தவர்கள் அவர்களே ஒரு தீர்மானத்திற்கு வந்து கொள்ளட்டும். அதில் எனக்கு விவாதத்திற்கு இடமோ தேவையோ இல்லை. ஆனால், நிச்சயமாக எனக்கு இந்த விளக்கம் சரியானதாக இல்லை. வளர்ப்பு மகனின் விவாகரத்திற்குப் பின் அந்தப் பெண்ணையே வளர்ப்புத் தந்தை மணம் புரிவது தவறல்ல என்ற இந்த கூற்று எனக்கு வியப்பையே அளிக்கிறது.
“இதில் என்ன குற்றம் கண்டீர்? ஒரு பெண்ணை கணவன் விவாக ரத்து செய்தபின் இன்னொருவர் மறுமணம் செய்யக் கூடாது என்கிறீர்களா? அல்லது வளர்ப்பு மகன் உண்மையான மகனாவான் என்கிறீர்களா ?”
5) படைப்புக்கொள்கை - “இஸ்லாம் சொல்லும் படைப்புக் கொள்கை தவறு என்பது உங்கள் வாதமானால் , நீங்களே சொல்லுங்கள் மனிதன் எதிலிருந்து தோன்றினான் ? பகுத்தறிவு பெற்ற குரங்குகள்தான் தற்கால மனிதனின் மூதாதையர் என்றால், இன்னும் சில குரங்குகள் ஏன் பகுத்தறிவடைந்து மனிதனாகவில்லை?”
- இதற்கும் நான் பதில் சொல்லத் தயாரில்லை. முற்றிலும் குரானுக்கு எதிர்மறையான விவாதம் அது; முடிவிருக்காது; விவாதிப்பதில் எந்த பயனும் இருக்காது.ஆயினும் என் இரண்டாவது கேள்விக்குரிய பதிலாக இதை எடுத்துக் கொள்கிறேன்.
-. 3-வது கேள்விக்கு அது கிறித்துவ மத நூல்களில் நடுவில் ஏற்பட்ட மாற்றங்களையும், திரிபுகளையும் பொருத்தது என்று கூறப்படலாம். அதனையும் ஒதுக்கி விடுவோம்.
- 6-வது கேள்வி சுவனம் பற்றியது. நேரடி பதில் இதற்குக் கொடுக்கப்பட்டு விட்டதா என்பதை நடுநிலை நோக்கர்கள்தான் கூற வேண்டும். எனக்கு அந்தப் பதிலில் ஒப்புதல் இல்லை.
“56:22 (அங்கு இவர்களுக்கு) ஹூருல் ஈன் (என்னும் நெடிய கண்களுடைய) கன்னியர் இருப்பர்” அவர்கள் பெண்கள் என்பதானாலும், சுவனம் செல்லும் ஆண்களுக்கு “44:54 இவ்வாறே (அங்கு நடைபெறும்). மேலும் அவர்களுக்கு ஹூருல் ஈன்களை நாம் மண முடித்து வைப்போம்.” என்பதனாலும் - ஆண்களுக்கு இத்தகைய சுவனம் காத்திருக்கிறதென்றால் பெண்களுக்கு எப்படிப்பட்ட சுவனம் என்று கேட்டிருந்தேன். குதர்க்க விவாதம் என்று இதற்குப் பெயர் சூட்டப்பட்டு விட்டது !
ஆக, என் 21 கேள்விகளில், முதல் கேள்வி, கேள்வியே தவறானது என்று ஒப்புக்கொள்கிறேன். இரண்டாவது, மூன்றாவது, ஆறாவது கேள்விகளுக்குப் பதில் தரப்பட்டுள்ளன. அந்தப் பதில்களை நான் ஏற்றுக் கொண்டுவிட்டேனா என்பது வேறு விஷயம். 4-வது கேள்வி, அதன்பின்
முக்கியமாக 5-வது கேள்வி - அது எனக்கு மிக முக்கியமாகப்படுகிறது. (இந்த வன்முறை கடவுளுக்கும்-மனிதனுக்கும் நடுவே வருவது ஆச்சரியம் மட்டுமல்ல; அதி பயங்கரமும் கூட.)மீதிக் கேள்விகளும் இருக்கின்றன.
இந்த நிலையில் புதிதாக ஒரு கேள்வியும் சேர்ந்து விட்டது. அதை பட்டியலில் சேர்த்து விடுகிறேன். திருப்திகரமான பதில் கிடைத்த முதல் கேள்வியை விட்டுவிட்டு இந்தக் கேள்வியை என் அந்தப் பழைய பதிவில் சேர்த்துள்ளேன். just an updating.
அந்தக் கேள்வி:
குர்ஆன் 25 : 68: ‘அவர்கள் எந்த உயிரையும்
தக்க காரணமின்றி கொல்ல மாட்டார்கள்.(காரணத்தோடு கொல்லலாம் என்று பொருள் படுகிறதே?’ - கொலை செய்பவனுக்கு ஒரு காரணம் கண்டுபிடிப்பதா பெரிது?)
5:32: “நிச்சயமாக எவன் ஒருவன்
கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்” என்று இஸ்ராயீலுடைய மக்களின் மீது நாம் விதியாக்கினோம்.
5:33
அல்லாஹ்வுடனும், அவன் ரஸூலுடனும் போர் செய்து கொண்டு, பூமியில் குழப்பத்தை உண்டாக்கித் திரிபவர்களுக்குரிய தண்டனையானது அவர்கள் கொல்லப்படுதல், அல்லது அவர்கள் தூக்கிலிடப்படுதல்; அல்லது அவர்கள் மாறுகால் மாறுகை வாங்கப்படுதல் அல்லது அவர்கள் நாடு கடத்தப்படுதல்…
கிறித்துவத்தில் ‘கொலை செய்யாதே’ என்பது ஒரு கட்டளையாகக் கொடுக்கப்பட்டுள்ளது; சமணத்தில் நுண்ணுயிர்களைக் கூட கொல்லக் கூடாதென்ற தத்துவம்; பிறப்பொக்கும் எல்லா உயிரும் என்கிறது தமிழ்மறை; எல்லா உயிரும் ஒன்றே, உயிர்க்கொலை தவறு என்கிறது இந்து மதம். இந்த கோட்பாடுகளில் எந்த clasue, sub-clause-ம் கிடையாது, அதாவது இந்தந்த மாதிரி நேரங்களில் மட்டும் கொலை செய்யலாம் என்ற விலக்குகள் தரப்படவில்லை. கொலை என்பது ஒட்டுமொத்தமாக தவறு; பாவம் என்றுதான எல்லா மதங்களும் போதிக்கின்றன. இந்த இடத்தில், நாடுகளுக்கு நடுவில் நடக்கும் போர்களையும், மனிதர்களுக்கு நடுவில் நடக்கும் சண்டைகளையும் குழப்பிக் கொள்ளக் கூடாதென நினைக்கிறேன். நாடுகளுக்கு நடுவில் நடக்கும் போர் என்றால் அங்கு 'கீதையின் விதிகள்தான்' எங்கும் பொருந்தும் என்பதில் ஐயமில்லை. ஆனால் மனிதர்களுக்குள்ளும் அந்த விதிகள் பொருத்தமாகக் கூடாது.
இஸ்லாமியத்தில் மட்டும் கொலை செய்வதற்கு ஏன் சில
விதிவிலக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.
எப்போதெல்லாம் மனிதர்கள் கொலை செய்யலாம் -
ஏதாவது ஒரு சரியான காரணம் கொண்டு -
கொலைக்குப் பழியாக -
குழப்பத்தைத் தடுக்க -
அல்லாஹுடனும், அவன் ரஸுலுடன் போர் செய்பவர்களை -
குழப்பத்தை உண்டாக்குபவர்களை -
இந்த சமயங்களில் எல்லாம் கொலை செய்வது சரி என்பது தெய்வ கட்டளையானால் ...
கொடூரக் கொலைகாரர்கள்கூட தாங்கள் செய்யும் கொலைக்குக் கூட இதில் ஏதாவது ஒரு "சரியான" காரணத்தைக் காட்ட முடியுமே - கோட்சே ஒரு உதாரணம் போதுமே! ஒவ்வொரு கொலையும் யாரோ ஒருவரால் - நிச்சயமாக கொலை செய்தவனால் - காரண காரியங்களோடு நியாயப்படுத்த முடியுமே! அதோடு பழி வாங்குவது, அதற்காகக் கொலை செய்வது அனுமதிக்கப்படுகிறதே! இவைகள் எப்படி சரியாகும்.
புரிதலுக்காகவே இந்தக் கேள்வி.
*
அடுத்த பதிவுக்கு:
8ம் பதிவுக்கு.*