Thursday, August 31, 2006

174. IF I WERE THE .... .... ?

நம் மாநில முதலமைச்சர் கீரிப்பட்டி,பாப்பாப்பட்டி, நாட்டார் மங்கலம், கொட்டக்கச்சியேந்தல் என்ற கிராமப் பஞ்சாயத்துகளில் நடந்தேறிக்கொண்டிருக்கும் தேர்தல் என்னும் கேலிக்கூத்துக்களை மனதில் கொண்டு, அந்த கிராமங்களில் ஒழுங்கான தேர்தல்களும், தலித்துகளின் முழுமையான அரசியல் பங்கேற்பும் நடை பெறும்வரை அவைகளின் 'ரிசர்வ்டு' நிலை நீட்டிக்கப்படும் என்று கூறியுள்ளது வரவேற்கத்தக்கதே. ஆயினும் இதனால் எல்லாம் அங்குள்ள பெருவாரியான தேவர்(கள்ளர்?)சாதி மக்கள் மனம் தளர்ந்து விடப் போகிறார்களா என்ன? அவர்கள்தான் ஆளமட்டுமே பிறந்தவர்களாச்சே! அவர்கள் விட்டுக் கொடுத்தோ, அவர்களை விட்டுக் கொடுக்க வைத்தோ தலித்துகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கு ஜனநாயகம் மலர்ந்து விடும் என்ற நம்பிக்கை எனக்கில்லை. அந்த சாதியைச் சேர்ந்த சிலரோடு பேசிப் பார்த்ததிலேயே இந்த உண்மை புரிகின்றது. விடாக் கொண்டான், கொடாக் கொண்டான் கதைதான். அந்த பெருவாரியான சாதியினர் கொடாக் கொண்டான் என்றால் அரசாங்கமும், அரசாங்கத்தின் அங்கங்களும் விடாக் கொண்டான் போல் வேஷம் போட்டுக் கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது. அரசாங்கம் தன் முழு பலத்தோடு இறங்கினால்தான் இந்தப் பிரச்சனை முடிவுக்கு வரும். ஓட்டுக்களில் கண்ணை எப்போதும் வைத்திருக்கும் எந்த சனநாயக அரசும் அந்த முடிவுக்கு வராது. எப்போதும் போல 'தேர்தல் நாடகங்கள்'தான் நடந்தேறும்.

தலித் தலைவர்களும், தலித் கட்சிகளுமாவது இதில் முழு முனைப்போடு இருக்கிறதா, இருக்குமாவெனில், அதுவும் இல்லை. இந்த நிலையில் தலித் மக்கள் முழு வீச்சில் புரட்சியில் எழ முடியுமாவென்றால் அது இப்போதைக்கு நடக்கக் கூடிய காரியமல்ல; அவர்களின் வாழ்வும், வாழ்வாதாரமும் பெருவாரிச்சாதியினரை அண்டிப் பிழைக்கக் கூடிய நிலையில்தான் இருக்கிறது. தட்டில் விழும் பருக்கைகளைப் புறந்தள்ளி, அடிப்படை வாழ்க்கையின் தேவைகளை உதறிவிட்டு புரட்சிக்குப் புறப்படுங்கள் என்றால் எப்படி நடக்கும்.

இந்த நிலையில் என்னதான் நடக்கும்; நடக்க முடியும்?

கனவுகள்..கனவுகள்... IF I WERE THE -------


IF I WERE THE C. M. OF TN....

எளியோருக்கு இரண்டு ஏக்கர் நிலம் கொடுக்கும் திட்டம் இந்த நான்கு கிராமங்களில் முதலில் நடக்கும். ஆளுக்கு இரண்டு ஏக்கர் என்பதைவிடவும் அந்த ஒவ்வொரு கிராமத்துத் தலித்துகளுக்கும் மொத்தமாக ஒரு பொது நிலம், அனைவரும் சேர்ந்து உழைக்க ஒரு கூட்டமைப்பு, அவர்கள் விவசாயம் செய்ய எல்லா வகை உதவிகள், கட்டமைப்புக்கு வேண்டிய தேவையான எல்லா உதவிகள், அரசாங்க விவசாயத்துறையின் நேரடி மேற்பார்வையும், உதவியும், முக்கியமாக எல்லாவகை பாதுகாப்பு, - இவைகள் அனைத்தும் அவசரகால அடிப்படையில் செய்து தந்து இந்த மக்கள் தலை நிமிர, வயிற்றுப்பாடு முற்றிலும் தீர, மக்கள் பொருளாதார அடிப்படையில் தன்னிறைவடைய எல்லாமும் செய்யப்படும்.

IF I WERE THE COLLECTOR OF THAT DISTRICT .....

இந்த நான்கு கிராமங்களில் நிச்சயமாக தலித்துகள் தனியாக ஒதுங்கி, ஒதுக்கப்பட்டு தனிச் சேரிகளில்தான் வாழ்வார்கள். அந்தப் பகுதி மட்டும் மாவட்ட அதிகாரிகளின் தனிக்கவனம் பெறும். அவர்களுக்கு வேண்டிய தண்ணீர், சாலை, பள்ளிக்கூடங்கள், காவல் நிலையங்களும், அங்கு இந்த சாதிவெறி இல்லாத காவல் துறையினரும், மாவட்ட அதிகாரியினால் முழுமூச்சில் செய்யக்கூடிய அனைத்து உதவிகளும் விரைந்து அளிக்கப்படும். முக்கியமாக இடுகாடுகளும் அதற்குச் செல்ல தனிச் சாலைகளும் (!) அமைத்துத் தரப்படும். wantonly all the basic amenities will be DENIED to the other "high" caste. they have to wait for those things till the next elected panachyat is formed. obstinance has to be paid back by utter obstinance.

IF I WERE ONE AMONG THE MAJORITY CASTE ...

(நான் மட்டும் விதி விலக்காகவா இருந்திருக்கப் போகிறேன்?)

காலங்காலமாய் எங்க காலடியில் கிடந்ததுகள், நாங்க சொன்னதக் கேட்டுக்கிட்டு இருந்ததுகள், ஒரு வாய் சோத்துக்கு எங்கள விட்டா நாதியில்லாததுகள் ... இதுக பிரசிடெண்டா இருந்து எங்கள ஆளன்னும்னு நினச்சா அது முடியுமா? அவங்க சாதி என்ன? எங்க சாதி என்ன? எங்கள ஆளணும்னு நினச்சாலே அவங்கள உண்டு இல்லன்னு பாத்துற மாட்டோமா..? சும்மா உட்ருவமா, என்ன? "நாங்க" யாருன்னு உலகத்துக்குக் காமிக்க வேண்டாமா? எவன் என்ன பண்ண முடியும்னு பாத்துருவோம்....

IF I WERE ONE AMONG THOSE DALITS ....

ஊர்ல உலகத்துல எல்லோரும் என்னமாவது சொல்லிட்டுப் போயுறுவீக..இங்கன நாங்க எங்க தினசரி பொழப்ப பார்க்கணுமே. வீம்புக்கு தேர்தல்ல நின்னு அவங்கள எதுத்துக்கிட்டு நிக்கணும்னா எங்களுக்கு என்ன பலம் இருக்கு? யாரு சப்போர்ட்டுக்கு இருக்கா? ஒரு நாலு நாளு நாலு போலீசும் ரெண்டு தலைவரும் நின்னுட்டா எல்லாம் ஆயிப் போச்சா? உடுங்க'ய்யா...என்ன தேர்தல் ..என்ன தலைவர் பதவி ... மொதல்ல உசுரோட இருக்கணுமே!

... மனுசனுக்கு உசிரு மேல ஆச இருந்து தொலையுதே, இந்த கேடு கெட்ட சாதியில பொறந்த பிறவும்... என்ன பண்ணச் சொல்றீக.. சொல்லுங்க ... எங்கள விடுங்க .. வெந்தத தின்னுட்டு விதி வந்தா போய்ச் சேரணும்ங்கிறது எங்க தலையெழுத்தாகிப் போச்சு..

====================

ஒரு நடந்த கதை:

கல்லூரியில் முதல் தலைமுறையினருக்காக நடத்தப்பட்ட ஒரு சிறப்பு பயிற்சி வகுப்பில் ஒரு தலித் மாணவன் சொன்னது:
இன்றைக்கும் அவர் பஸ் விட்டு இறங்கி தன் சேரிக்குச் செல்லும்போது அந்தப் "பெரிய"சாதிக்காரர்களின் பகுதியைத் தாண்டித்தான் போகவேண்டும். அப்படிப் போகும்போது தங்கள் காலணிகளைக் கையில் எடுத்துத்தான் செல்ல வேண்டுமாம். நல்ல வேளை சட்டையைக் கழட்டச் சொல்வதில்லை அந்தக் கிராமத்தில்!

மாணவனிடம், சரி, உங்களைப் பார்க்க நானே வருகிறேன் என்று வைத்துக் கொள்வோம். அப்போது என்னையும் அப்படி எதிர்பார்ப்பார்களா என்று ஆசிரியர் கேட்ட போது நிச்சயமாக என்றார் மாணவர். அப்படியே அந்த வரைமுறை தெரியாமல் நீங்கள் என்னை வந்து பார்த்துவிட்டுப் போகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்; நீங்கள் போனபிறகு என்னைக் கூப்பிட்டு 'ஊர் கட்டுமானத்தைச் சொல்லிப்பிடு; அடுத்த தடவை இப்படியெல்லாம் நடக்கக் கூடாது' என்று சொல்வார்கள் என்றார்.

நமக்கு சுதந்திரம் வந்து 60 ஆண்டுகள் முடிந்து விட்டதாமே!

ஜெய்ஹிந்த்.

another naked truth of casteism has been shown here in this post in all its rawness.

Wednesday, August 30, 2006

173. ஹைக்கூ தெரியும்; சினிகூ...?

நேற்று இந்துவின் கடைசிப் பக்கத்தில் வந்த ஒரு செய்தி மிகவும் பிடித்தது. ராமச்சந்திர பாபு என்ற மலையாளத் திரைப்பட ஒளிப்பதிவாளர் ஆரம்பித்து வைத்துள்ள ஹைக்கூ-சினிமா அல்லது சினிமா-ஹைக்கு. ஆங்கிலத்தில் இதற்கு cineku என்று பெயர் வைத்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு தங்கள் தங்கள் செல்போன் காமிராவில் திரைப்படம் எடுப்பது பற்றி ஒரு சேதி பத்திரிக்கைகளில் வந்தன. அதுபோல இங்கே ஒரு புது முயற்சி.

ராமச்சந்திர பாபு இந்த சினிகூ ஆரம்பித்தது மட்டுமல்லாமல் அதற்கு ஒரு இலக்கணம் தந்துள்ளார். 40 வினாடிகளுக்கு ஒரு ஷாட் வீதம் மொத்தம் மூன்றே ஷாட்டுகளில் ஒரு படம் எடுப்பது என்பதே அந்த இலக்கணம். 3 ஷாட்டுகள்; 120 வினாடிகள் - ஒரு படம். ஹைக்கூ கவிதை வடிவத்தையொத்து ஒரு திரைப்படம். எந்த கிராஃபிக்ஸ் சித்து விளையாட்டும் இருக்கக் கூடாது என்பதும் ஒரு விதி.

கேட்கவே நன்றாக இருக்கிறது. முயற்சி செய்ய ஆசை இருக்கு.

ராமச்சந்திர பாபு எடுத்த ஒரு சினிகூ-வின் "திரைக்கதை" கொடுக்கப்பட்டுள்ளது.

முதல் ஷாட்: குளோசப் ஷாட் - ஒரு பெண்ணின் விரலில் ஓர் ஆண் திருமண மோதிரம்
அணிவித்தல் - zoom - ஒரு ஆணும் பெண்ணும் - ஆண் பெண்ணை நெருங்க...
இரண்டாவது ஷாட்: குளோசப் ஷாட் - குழந்தை ஒன்று தாய்க்குத் தரும் முத்தம் - zoom - அப்பா,
அம்மா, குழந்தை - சந்தோஷமான குடும்பம்.
மூன்றாவது ஷாட்: குளோசப் ஷாட் - முத்தம் தரும் குழந்தை ஒன்று - zoom - இறந்த அப்பாவின்
உடல்.

இந்த சினிகூ-வின் கதை எனக்குப் பிடிக்கவில்லை. இன்னும் நல்லதாக ஆக்க முடியும்.

Saturday, August 19, 2006

172. இடப் பெயர்ச்சி

மீண்டும் ஓர் இடப் பெயர்ச்சி. just in a jiffy ஆரம்பிக்க முடியும்னு
பெரியவங்க சொன்னாங்க; அது மாதிரியே ப்ளாக்ஸ்பாட்டில் என் முதல் இடுகையைச் சுலபமாக ஆரம்பித்தேன். ரொம்ப
சந்தோஷமாயிருந்தது. கொஞ்ச நாள் ஆனதும் சுத்தி முத்திப்
பார்த்தப்போ, சிலரது ப்ளாக்குகள் அழகழகா இருந்ததைப் பார்த்து
ஜொள்ளு விட்டுக்கிட்டு இருந்தேன் - எதுக்கெல்லாம் ஜொள்ளுன்னு ஒரு விவஸ்தையில்லையான்னு கேக்காதீங்க, அழகா இருக்கிற எதப் பார்த்தாலும் அது தானா வருது; என்ன செய்றது? ஒரு கலா ரசனைதானே!

அது என்னமோ, வெப்லாக்ஸ் அப்டின்னாங்க; படம் எல்லாம் டிசைன் டிசைனா போட முடியும்னு சொன்னாங்களா அதனால ரொம்ப பிடிச்சிப் போச்சி. சில நல்ல மனுசங்க உதவியோடு - ஒரு மனுசிதான் - மதிக்கு நன்றி - வீடு மாத்தினேன். நல்லாதான் போச்சு. அப்பப்போ தலைப்பில படம் மாத்திக்கிட்டே இருந்தேன். ஒரு படம் நல்லா பிடிச்சதும் இத்தனை நாளா அதே படத்தலைப்போடு போய்க்கிட்டு இருந்தது. the going was good.

ஆனா இதில ஒரு முக்கிய பிரச்சனை. ஏறக்குறைய நிறைய பேர் தமிழ்மணத்தில ப்ளாக்ஸ்பாட் வச்சிருக்கிறதால ஏதாவது மாற்றம் அப்டி இப்டின்னு கொண்டுவந்தா, செய்முறை எல்லாம் ப்ளாக்ஸ்பாட்டுக்குதான் கிடைக்கும்; வெப்லாக்ஸ்காரங்க எண்ணி நாலஞ்சு பேருதான்னு நினைக்கிறேன். அதில நான் ஒருத்தன் மட்டும் தான் க.கை.நா.. அதனால திருவிழாவில தொலஞ்ச சின்ன பிள்ளை மாதிரி நிறைய நேரம் 'பே'ன்னு (ங் இதுக்கு ரெட்டைக்கொம்பு சேர்க்கிறது எப்படின்னு தெரியலை; அதான் 'பே'ன்னு போட்டுக்கிட்டேன்!) நிக்க வேண்டியதாகிப் போச்சு.

இப்போ இன்னொரு பிரச்சனை. புதுப் பதிவு போடும்போது தட்டச்சிவிட்டு ப்ரிவியூ பார்த்தால் கோணக்க மாணக்க இருக்கும். அது என்னமோ htmlன்னு ஒண்ணு இருக்காமே, அது கன்னாபின்னான்னு மாறியிருக்கும். அத சரி செஞ்சிட்டு மறுபடி ப்ரிவியூ பார்த்தா இப்போ இன்னொரு கோணக்க மாணக்க.. ஒரு பதிவு போடறதுக்குள்ள தாவு தீர்ந்திடும். அதோட இந்த சமயத்திலதான் நான் இடப்பங்கீடு பற்றிய நீண்ட (நீங்க யாருமே படிக்காத, நீங்க யாருமே படிக்க மாட்டீங்கன்னு தெரிஞ்சுமே நான் சீரியஸா போட்ட) பதிவுகளாகப் போடவேண்டியதாயிருந்தது. பொறுமை இழந்து, போராடி ஒவ்வொரு பதிவையும் ஏற்றும்படியாய் இருந்தது.

போதும்டா சாமின்னு ஆகிப்போச்சு. (என்னடா சாமிய எல்லாம் இவன் கூப்பிடுறானேன்னு கேக்றீங்களா? இங்க ஒரு digression -
வாத்தியார் புத்திதான்! (bye pass செய்துட்டு மருத்துவமனையில் ஒரு நாள்; படுக்கையில் படுத்திருக்கேன்; அப்ப எல்லாம் ஒரு தும்மலோ, இருமலோ வந்துட்டா...அம்மாடி...நெஞ்சாங்கூடு இருக்கே, அங்கே என்னமோ பிச்சுக்கிட்டு போறது மாதிரி ஒரு வலி வரும் பாருங்க...அப்படி ஒரு நேரம்..வலி சுரீர்னு..அது ஒண்ணும் சாதாரண மானிட சுரீர் இல்ல... இது அதையும் தாண்டி... அந்த நேரத்தில வலியில 'ஓ, ஜீசஸ்'அப்டின்னேன். பக்கத்தில இருந்த மனைவி மக்களுக்கு ஒரே சந்தோஷம்...ஆஹா, மனுஷனுக்குப் புத்தி வந்திருச்சு அப்டின்னு. சிரிச்சிக்கிட்டே 'அதுதான் சொல்றதுக்கு ஒரு rhyming-ஆ style-ஆ இருக்கு; அவ்வளவுதான்' அப்டின்னேன். 'அதான, இந்த மனுஷனுக்கு அப்படியா நல்ல புத்தி வந்திரப்போகுது' - இது
மனைவியின் பின்னூட்டம், அதாவது comment) சரி..சரி...எங்க விட்டேன். போதும்டா சாமின்னு ஆகிப்போச்சா..நாலும் தெரிஞ்ச நாலு மக்கள்கிட்ட கேட்டேன். ஏறக்குறைய எல்லாரும் சொன்னதன் சாராம்சம்: எல்லாருக்கும் ஒரு வழின்னா இடும்பனுக்கு மட்டும் ஒரு வழியாம்னு தெக்காட்டுப் பக்கம் ஒரு சொலவடை உண்டு; அது மாதிரி நீங்க மட்டும் ஏன் அத வச்சிக்கிட்டு மாரடிக்கிறீங்க...பேசாம உலகத்தோடு ஒட்ட ஒழுகல்தான் சரி அப்படின்னுட்டாங்க. நம்ம ஒன்பது கட்டளைகளில் ஒன்றான dare to be different அப்டிங்கிற நம்ம கட்டளைய ஒதுக்கி வச்சிடறதா முடிவு செஞ்சாச்சு.

நல்ல வேளையா, ஒரு 'கவைக்கு' இருக்கட்டும்னு வெப்லாக்ஸில போட்ட பதிவுகளை அப்பப்போ பழைய ப்ளாக்ஸ்பாட்டில சேமிச்சி வச்சிக்கிட்டு இருந்தேன். என்ன, முதல் உள்ளதில போட்டோ அது இதுன்னு போடறது உண்டு.இங்கு அத ஏற்றலை. அதோட வந்த ஒரு நாலஞ்சி பின்னூட்டங்களை அப்படியே copy 'n paste செஞ்சி பதிவோடு சேர்த்து போட்டு வரவேண்டியதாயிருந்தது. எப்படியோ அப்படி இப்படின்னு 146 பதிவுகள் வரை போட்டு வச்சிருந்திருக்கேன். இன்னும் ஒரு இருபது பதிவு இன்னும் ஏற்றணும். சீக்கிரம் போட்டுடணும்.(இல்லேன்னா ஒங்கள மாதிரி ஒண்ணு ரெண்டு பேரு வர்ரவங்க ரொம்ப ஏமாந்திருவாங்களே?!)
இதில இன்னும் கொஞ்சம் சிக்கல் இருக்கும்போலத் தெரியுது.
பின்னூட்டத்தில தகராறு வரும்னாங்க. சரி, அதெல்லாம் பின்னூட்டம் நிறைய வாங்குறவங்க பட வேண்டிய கவலை. நம்மள மாதிரி ஆளுகளுக்கு எதுக்கு அதெல்லாம். ஏதோ, ஒரு ஓரத்தில உக்காந்தோமா; நமக்குப் பிடிச்சதை எழுதினோமான்னு இருக்கிற ஆளு நம்ம. அப்படியே கீதையைக் கடைப்பிடிக்கிற ஆளு - பதிவுகளைப் போடு; பின்னூட்டங்களைப்பத்திக் கவலைப்படாதேன்னு அன்னைக்கே சும்மாவா சொல்லியிருக்கு.

கொஞ்சம் கவலைதான். வெப்லாக்ஸ் கெட் அப்பே தனிதான். படம் போட்ட அழகு என்ன? category வச்சிருந்த அழகு என்ன? அந்த lay out இருந்த இருப்பென்ன? இப்படி பல என்ன..என்ன..! ஆனால் என்ன, ப்ளாக்ஸ்பாட்டில கண்ணே கண்ணுன்னு ஒரே ஒரு டெம்ப்ளேட்...அதில நூத்தி எட்டு டெம்ப்ளேட். எத தூக்கி எதுல போடறதுன்னு ஒண்ணும் கடைசி வரை புரிஞ்சதில்லை. ப்ளாக் ஸ்பாட்டில கொஞ்சம் பிடிபடுது. உதவிக்கும் பார்ட்னர் செல்வன் மாதிரி ஒரு சில நல்லாத்துமாக்கள் (வாழ்க அவர்கள் உயருள்ளம்! மக்களே, ஐஸ் வச்சாச்சு; அடுத்த தடவை வரும்போது மறந்திராதீங்க!)

சரி...எப்படியோ மறுபடி ப்ளாக்ஸ்பாட்டுக்கு வந்தாச்சு. பழைய வீட்டை - வெப்லாக்ஸை - இனிமே ஸ்டோர்ஹவுஸா வச்சுக்க வேண்டியதுதான். நீங்க எல்லோரும் . நீங்க எல்லோரும் எப்போதும் மாதிரி கண்டுக்காதீங்க; வர்ட்டா...!

Thursday, August 17, 2006

171. அனானிகளுக்கு மட்டும்...

இடப் பங்கீடு பற்றி விரிவாக எழுத வேண்டிய ஒரு நிலை திசைகளில் எழுத அழைக்கப்பட்டதால் ஏற்பட்ட பிறகே அதனைப் பற்றிய ஒரு முழுக் கண்ணோட்டம் எனக்குக் கிடைத்தது. கிடைத்த சேதிகளும் நடந்து வந்த, வருகின்ற விஷயங்களைப் பார்க்கும் போதுதான் ஒரு மிரட்சியே ஏற்பட்டது,

இடப்பங்கீட்டின் தேவை,
இதுவரை நடந்தேறிய நல்லதும் அல்லதும்,
இனி நடக்கவேண்டியவைகள்,
அதற்குள்ள முட்டுக்கட்டைகள்,
முட்டுக்கட்டை போடுபவர்களின் திறமை,
அவர்களின் மனப்பாங்கு,
எல்லாவற்றையும் விடவும்
UPSC தேர்வுகளில் நடக்கும் பித்தலாட்டங்கள்


இவைகள் எல்லாம என்னை உண்மையிலேயே மிகவும் பாதித்தன. அந்தப் பாதிப்பை நம் பதிவர்களோடவாவது பகிர்ந்து கொள்ள நினைத்து அக் கட்டுரையை என் பதிவுகளில் தொடர்ந்து இட்டேன். பலரின் கவனம் கவர வேண்டுவதற்காகவே அக்கட்டுரையைப் பகுதிகளாகப் பிரித்தும் இட்டேன்.

ஆயினும் நான் எதிர்பார்த்தது போல் இந்த விஷயம் அதிகம் பேரைப் போய்ச்சேர்ந்ததாகவோ, படித்தவர்களைப் பாதித்ததாகவோ தெரியவில்லை.அதற்குக் காரணமும் தெரியவில்லை. வழக்கமாக என் பதிவுகள் பக்கம் கொஞ்சமாவது எட்டிப் பார்த்துவிட்டுப் பின்னூட்டம் வெகு சிலராவது போடுவதுண்டு. I would not touch it even with a ten foot pole என்பது மாதிரி யாரும் எட்டிகூடப் பார்க்கவில்லை.

ஒவ்வொரு semester இறுதியிலும் மாணவர்களிடமிருந்து ஒரு feedback வாங்குவதுண்டு - நான் வகுப்பு எடுத்த ‘அழகை’ப்பற்றி தெரிந்து கொள்வதற்காக. அந்த feedback எழுதும் போது மாணவர்கள் தங்கள் பெயரை எழுதக்கூடாது என்பது ஒரு விதி. அதைப் போலவே இப்போது ஒரு feedback எனக்கு வேண்டும். ஆகவே வழக்கமான என் விதியைத் தளர்த்தி உங்களிடமிருந்து முறையான, என் மாணவர்கள் இதுவரை தந்தது போன்ற முதிர்வான, பாரபட்சமற்ற, forthright கருத்துக்களை அனானியாக வந்தே தெரிவிக்க அழைக்கிறேன்.

எனக்குள் உள்ள கேள்விகள்:

1. ஏன் இந்தப் பதிவுகள் மற்ற என் பதிவுகளுக்குப் பெறும் கவனிப்பைக் கூட பெறவில்லை?

2. கட்டுரை உங்களிடம் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லையா?

3. ‘நடப்பது நடந்தே தீரும்’, தலையெழுத்துப்படிதான் எல்லாம் நடக்கும்’, - என்பது போன்ற fatalist idea-வின் படி செல்லும் மனப்பாங்கு காரணமாக இருக்குமோ?

4. ‘இதெல்லாம் எனக்கு முன்னமேயே தெரியுமே’ என்பதா?

5. இதில் ஆச்சரியப்படவோ, வருத்தப்படவோ ஏதுமில்லையே என்பதா?

அனானிகளாக வந்து பதிலளிக்க அழைக்கிறேன்.

Saturday, August 12, 2006

170 என்னதான் நடக்குது இங்க…?

தி.மு.க., அ.தி.மு.க. இரண்டிலேயும் இரண்டாவது ஆளாக எப்போதும் இருந்த - numero uno என்பதற்குப் பதில் numero doux ! ஆக இருந்த நெடுஞ்செழியன் மீதும் மற்ற அவரது தலைவி மேலும் சொத்துக் குவிப்பு வழக்கு போட்ட போது சொன்னார்: ‘இந்தக் கேசு எல்லாம் ஜுஜுபி; இதில தோற்றாலும் அடுத்து அப்பீல் போட மாட்டோமா? அப்படி இப்படி பல வருஷம் வழக்கு இழுத்துக்கிட்டே போகும். அதற்குள் எத்தனை பேர் இருப்போமோ, போவோமோ’. சும்மா சொல்லக்கூடாது; மனுஷன் தீர்க்கதரிசிதான். கேஸ் முடியறதுக்குள்ளேயே அவர் போய்ச்சேர்ந்துட்டார்.

பல குற்றவாளிங்க தப்பிச்சாலும் ஒரு நிரபராதிகூட தண்டிக்கப்பட்டு விடக்கூடாதுன்னு எந்த பெரிய மனுஷன் சொன்னாரோ தெரியலை; நம்ம ஊரு நீதிமன்றங்கள் முதல் பாதியை முழுசா - குற்றவாளிங்களை விட்டுடறதப் பத்தி சொல்றேன் - காப்பாத்திடுறாங்க. டான்ஸி கேஸ்ல கூட பாருங்க..நீதிபதி, ‘ ஏதோ நீங்களா பாத்து பெரிய மனசு பண்ணி அந்த நிலத்தைத் திருப்பி கொடுத்துட்டு, அதுக்குப் பொறவாட்டி வீட்ல தனியா உக்காந்து மோட்ட பாத்துக்கிட்டு நம்ம பண்ணினது சரிதானான்னு உங்களயே நீங்களே கேட்டுப் பாத்துக்குங்க ‘ அப்டின்னு ஒரு பிரமாதமான தீர்ப்பைக் கொடுத்தார்.

இதுக்கு ஏத்தது மாதிரியே நம்ம C.B.I. எடுத்து நடத்துற கேஸ்கள்ல முக்காலே முண்டாணி சரியாக வழக்கு பதிவு செய்யப்படவில்லை; தகுந்த ஆதாரங்கள் தரப்படவில்லை; குற்றப் பத்திரிக்கையை ஒழுங்கா பைண்டு பண்ணிக் கொடுக்கவில்லை - இப்படி ஏதோ ஒரு காரணம் காட்டி வழக்குக்களை டிஸ்போஸ் செய்துவிடுகின்றன நமது நீதிமன்றங்கள்.அது பத்தாதுன்னு நம்ம I.P.C. எப்படி எழுதுனாங்களோ, யார் எழுதுனாங்களோ, எதுக்கு எழுதுனாங்களோ யாருக்குத் தெரியும். ஓட்டைகளே அதிகம் போலும். ஒரு பானைன்னா அதில ஊத்துறதுக்கு வாய் வேணும், அதவிட்டுட்டு பானை பூரா ஓட்டை போட்டு வச்சா தண்ணி எங்க நிக்கும்.

இப்போ கூட பாருங்க..மும்பை தொடர் குண்டு வெடிப்பு கேஸ் - நடந்தது 1993; விசாரணை 1995-லிருந்து. விசாரணை முடிஞ்சது ஜூன் 30, 2003; கேசு நடந்த இந்த கால கட்டத்துக்குள்ள 11 பேரு மர்கயா; பத்தாம் தேதி தீர்ப்பு வரும் என்று தினசரிகளில் செய்தி வந்ததும் பரவாயில்லையே இவ்வளவு சீக்கிரம் தீர்ப்பு சொல்லப் போறாங்களே, இன்னைக்கு அது என்னன்னு பார்த்து விடுவோம்னு நினச்சுக்கிட்டு இருந்தேன். என்ன சொல்லுவாங்கன்னு ஓரளவு நினச்சு வச்சுருந்தேன். என்ன சொல்லுவாங்க…சாட்சிகள் எல்லோரும் முதலில் சொன்னதை பிறகு இல்லன்னு சொல்லியிருப்பாங்க..அல்லது C.B.I. கொடுத்த சான்றுகள் சரியாக நிரூபிக்கப் படவில்லை…அல்லது மனிதாபிமான அடிப்படையிலும், சஞ்சய் தத் ரசிகர்கள் ஏமாந்து வருத்தப்பட வாய்ப்பு இருப்பதாலும் இந்த வழக்கைத் தள்ளுபடி செய்றோம் அப்டின்னு எதிர்பார்த்தேன்.

ஆனா பாருங்க…நான் நினச்சுப் பார்க்காத ஒரு லா பாயிண்டு குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குக் கிடைச்சிருச்சி. அபு சாலிம் எவ்வளவு நல்லவர்; வல்லவர். அவர் தொடர்பான ஒரு கேஸ் இன்னும் பெண்டிங். அதனால் இந்த கேசின் தீர்ப்பு ஒத்திவைக்கப் படுகிறது. இதில் இன்னொரு விஷயம்: ” commencing delivery of judgment ” என்பதற்கும் ” commencement of judgment ” என்பதற்கும் உள்ள வித்தியாசம் பற்றி நீதிபதி ஒரு ‘ ஆங்கில வகுப்பு ‘ எடுத்திருக்கார். இப்படி ஒரு hair-splitting argument (தவறிப்போய் இதைத் தமிழில் சொன்னால், யாராவது contmept of court அப்டின்னு சொல்லி ஏதாவது பயமுறுத்துவாங்க…) எவ்வளவு தேவை பாருங்க.

நம்ம நீதி மன்றங்களில் என்னதான் நடக்கிறது? எந்த பெரிய ‘முதலை’யும் தண்டிக்கப்பட்டதாக வரலாறே கிடையாதா? கீழ் கோர்ட்டில் ‘பூட்ட” கேசு அடுத்த கோர்ட்டில் ‘மறு உயிர்பெற்று’ துள்ளியெழுகின்றது. கீழே தூக்குத்தண்டனை என்றால் மேல் கோர்ட்டில் நிச்சயம் ஆயுள் தண்டனை; இப்படியே போகும் நமது நீதி பரிபாலனம்.



என்னமோ போங்க…ஒண்ணுமே புரியலை.











Š







Pathivu Toolbar ©2005thamizmanam.com


Aug 12 2006 12:23 am | Uncategorized | | edit this
19 Responses
வணக்கத்துடன்... Says:
August 12th, 2006 at 1:02 am e
//நீதிபதி, ‘ ஏதோ நீங்களா பாத்து பெரிய மனசு பண்ணி அந்த நிலத்தைத் திருப்பி கொடுத்துட்டு, அதுக்குப் பொறவாட்டி வீட்ல தனியா உக்காந்து மோட்ட பாத்துக்கிட்டு நம்ம பண்ணினது சரிதானான்னு உங்களயே நீங்களே கேட்டுப் பாத்துக்குங்க ‘ அப்டின்னு ஒரு பிரமாதமான தீர்ப்பைக் கொடுத்தார்.//

//குற்றப் பத்திரிக்கையை ஒழுங்கா பைண்டு பண்ணிக் கொடுக்கவில்லை - இப்படி ஏதோ ஒரு காரணம் காட்டி வழக்குக்களை டிஸ்போஸ் செய்துவிடுகின்றன நமது நீதிமன்றங்கள்.//

//சஞ்சய் தத் ரசிகர்கள் ஏமாந்து வருத்தப்பட வாய்ப்பு இருப்பதாலும் இந்த வழக்கைத் தள்ளுபடி செய்றோம் அப்டின்னு எதிர்பார்த்தேன்//

என்னா வாத்யாரே? இவ்வலவையும் சொல்லீட்டு, அப்பாலிக்கா

//(தவறிப்போய் இதைத் தமிழில் சொன்னால், யாராவது contmept of court அப்டின்னு சொல்லி ஏதாவது பயமுறுத்துவாங்க…)// ன்னு ஜகா வாங்குனா? வுட்ருவாங்களா?

நோட்டீஸு வந்துக்கினேக்கீது, ரெடியாரூபா…அகாங்.

அப்பாலே, கோர்ட்ல மீட் ‘பன்னி’க்கலாம்.

வர்ட்டா,
வணக்கத்துடன்…

Thiru Says:
August 12th, 2006 at 1:13 am e
கலக்குங்க! ம் நீதீ மன்றங்களா?

Balachandar Says:
August 12th, 2006 at 1:34 am e
இந்த மாதிரியான பிரச்சினைகளுக்கு மூலகாரணமான ஒட்டைகள் நிறைந்த சட்டத்தினை சரியாக சாடியுள்ளீர்கள். நீதிமன்றங்கள் சட்டத்தின் எல்லைகளுக்குள் மட்டும் தான் செயல்பட முடியும். அதை மீறி அவர்களால் கருத்து மட்டுமே கூற முடியும்( டான்சி வழக்கில் நடந்தது போல).மேற்கொண்டு எதுவும் செய்ய இயலாது.

சிறில் அலெக்ஸ் Says:
August 12th, 2006 at 3:04 am e
//பல குற்றவாளிங்க தப்பிச்சாலும் ஒரு நிரபராதிகூட தண்டிக்கப்பட்டு விடக்கூடாதுன்னு எந்த பெரிய மனுஷன் சொன்னாரோ தெரியலை; நம்ம ஊரு நீதிமன்றங்கள் முதல் பாதியை முழுசா - குற்றவாளிங்களை விட்டுடறதப் பத்தி சொல்றேன் - காப்பாத்திடுறாங்க//

:))

நீதி மன்றங்களையே குறை சொல்ற அளவுக்கு வந்துட்டீங்களா?
அப்படீன்னா, என்னதான் கேஸ் போட்டாலும் அடுத்து 20 வருசத்துக்கு தீர்ப்பு வராதுங்கற நம்பிக்கை உங்களுக்கும் இருக்குல்ல?

:))

சிறில் அலெக்ஸ் Says:
August 12th, 2006 at 3:05 am e
போட்ட கமெண்ட் வந்துச்சா

குழலி Says:
August 12th, 2006 at 7:24 am e
ஏற்கனவே நீதிமன்றங்களின் நீதியையும் நீதிபதிகளின் மனுநீதியையும் பார்த்து வெறுத்து போயுள்ளேன் நீங்கள் வேறு ஏற்றிவிடுகின்றீர் இது மாதிரி பதிவு போட்டு…

தருமி Says:
August 12th, 2006 at 3:44 pm e
வணக்கத்துடன் கோர்ட்ல மீட் ‘பன்னி’க்கலாம் அப்டின்னு முதல் முதல்ல வந்து சொல்லிட்டீங்க. ஏதோ பாத்து செய்யுங்க…

அது ஏன் ‘பன்னி’க்கு மேற்கோள் குறிகள்?

தருமி Says:
August 12th, 2006 at 3:46 pm e
திரு,
கலக்க கலக்க மேலும் மேலும் கலங்கலாதான் ஆகுது; தெளிவே ஆக மாட்டேங்குதே

தருமி Says:
August 12th, 2006 at 4:00 pm e
பாலச்சந்தர்,
//சட்டத்தின் எல்லைகளுக்குள் மட்டும் தான் செயல்பட முடியும். // அதாவது நடக்கிறதா என்பதுதான் என் கேள்வி. எல்லோரும் சொன்னது டான்ஸி கேஸ் ஒரு open and shut case என்று. நானும் தினத்தாள்களில் படித்த அளவு குற்றம் ருசுப்படுத்தப்பட்ட பின்னும் என்ன நடந்தது.
pleasant stay hotel விவகாரத்தில் அனுமதியின்றி அதிகப்படியாக ஒரு மாடி (floor) கட்டியிருப்பதாக ருசுப்படுத்தப்பட்டு, அதனால் கோர்ட் ஒரு மாடியை இடிக்க வேண்டுமென்று தீர்ப்பு வருகிறது. அதற்கு அடுத்த வந்த கேஸ் நினைவிருக்கிறதா? அப்படி இடிக்கவேண்டுமானால் எந்த மாடியை இடிக்க வேண்டும் என்று ஒரு மனு. வேடிக்கையாயில்லை - வழக்கை இழுத்தடிக்க இப்படி ஒரு யோசனை. எனக்கு ஒரு ஆசை - நான் நீதிபதியாயிருந்தால் அந்த இரண்டாவது வழக்கிற்கு உடனே ஒரு தீர்ப்பு அளிப்பேன் - அந்த ground floor-யை மட்டும் இடித்தால் போதும் என்று.

உங்களுக்கு shylock - portia கதை நினைவுக்கு வருமேயானால், ஒரு கடைச்செருகல்: நீதான் உன் கட்டிடத்தை இடிக்கப் போகிறாய்; ground floor இடிக்கும்போது மற்ற floors-களை முடிந்தால் காப்பாற்றிக் கொள்வது உன் திறமை. ஆனால் இப்போது (நீயே கேட்டதால் ) ground floor இடி.

தருமி Says:
August 12th, 2006 at 4:06 pm e
சிறில்,
//அடுத்து 20 வருசத்துக்கு தீர்ப்பு வராதுங்கற நம்பிக்கை ../
அய்யய்யோ அப்படியில்லை சிறில்..அவங்களுக்கு இஷ்டம்னா உடனே எடுத்தோம், கவிழ்த்தோம் அப்டின்னும் இருக்குது போலேயே!

நம்ம M.P.களைப் பாருங்க. அவர்களுக்குப் புதிய சம்பளம், சலுகைகள் அப்டின்னு ஏதாவது பாராளுமன்றத்தில் வந்தால் அனைவரும் அன்னைக்கு present.. House full தான்! சுடச்சுட சட்டம்தான். இப்போகூட இரட்டைப் பத்வி சட்டம் என்ன ஸ்பீடு!

அவனவனுக்கு வந்தா தெரியும் பல்வலியும் தல வலியும்னு சும்மாவா சொன்னாங்க

நவீன பாரதி Says:
August 12th, 2006 at 4:37 pm e
சட்டங்கள் செய்தென்ன கண்டோம்?
——————————-

சட்டங்கள் செய்தென்ன கண்டோம்? - அதில்
சந்துகள், பொந்துகள் வசதியாய்க் கொண்டோம்!
செல்வம் படைத்தோர்க்கொரு நீதி - பாழும்
வறியவர்க்கு இங்கெங்கே மீதி?

TheKa Says:
August 12th, 2006 at 6:23 pm e
/எனக்கு ஒரு ஆசை - நான் நீதிபதியாயிருந்தால் அந்த இரண்டாவது வழக்கிற்கு உடனே ஒரு தீர்ப்பு அளிப்பேன் - அந்த ground floor-யை மட்டும் இடித்தால் போதும் என்று. //

இது வந்து நீதிபதி அய்யா, படுத்துகிட்டு போத்திக்கிறதா இல்ல போத்திக்கிட்டு படுத்துக்கிறதான்னு இருக்கிற சிக்கலான கேள்விக்கு இவ்வளவு ஈசியான விடையா .

நாங்கள் இதற்கென ஒரு கமிஷன் போட்டு தீர்க்க ஆய்ந்து முடிவெடுக்கலாமென்று நினைத்துக் கொண்டிருந்தால், நீங்கள் இப்படி இன்ஸ்டன்ட் தீர்ப்பு கொடுப்பவராக இருந்தால் உங்களை “ப்ளூ க்ராசில்” மிருக வதைப்பு சட்ட நீதிபதியா தூக்கி அடிக்க வேண்டியதுதான் .

அய்யா, எனக்கு ஏதாவது ‘நோட்டீஸு’ அனுப்புவீங்களாய்யா… இப்பிடி சொன்னதுக்காக…

தருமி Says:
August 13th, 2006 at 7:26 pm e
நவீன பாரதி,

உங்கள் கவிதையின் கடைசி வரி - சுயநலம் வாழுது இன்று!//

யாருக்குத்தான் இல்லை சுய நலம்; ஆனால் அடுத்தவனைக் கெடுத்து நல்லது தேடாமல் இருந்தால் போதுமே. அதற்கு வேண்டும் சட்ட திட்டங்கள். அந்தச் சட்ட திட்டங்களைத் தாண்டுவோரைப் ‘பிடித்துப் போட்டால்’தான் இனி இங்கு வாழ்க்கை நேராகும்; நேர்மையாகும்.

தருமி Says:
August 13th, 2006 at 8:31 pm e
தெக்கா,



Sivabalan V Says:
August 13th, 2006 at 8:35 pm e
தருமி அய்யா

நன்றாக எழுதியுள்ளீர்கள்..

இது போல பல வழக்குகள்…

தருமபுரி பேருந்து எரிப்பு வழுக்கின் நிலை தெரியவில்லை..

தாமதமான் நீதியும் அநீதியே..

கோ.இராகவன் Says:
August 13th, 2006 at 9:50 pm e
ம்ம்ம்ம்ம்…எல்லாம் அவனவன் தலையெழுத்து. ஒன்னும் பண்ண முடியாது.

பட்டணத்து ராசா Says:
August 14th, 2006 at 12:55 pm e
இந்தியச் சட்டத்தில் விரைவில் வழக்கை முடிப்பதற்கு எவ்வித வழியும் இல்லை. ஆனால் வழக்கைத் தாமதப்படுத்த அநேக வழிகள் உண்டு. ஆங்கிலேயர் காலத்தில் வழக்குகள் குறைவாய் இருந்தன. அப்பொழுது கடைப்பிடிக்கப்பட்ட நீதிமன்ற நடைமுறைகள் இன்றைக்குப் பயன்படாது. எனினும் ஆங்கிலேயர் காலத்து நீதிமன்ற நடைமுறைகளே இன்றும் பின்பற்றப்படுகின்றன. ஒரு வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு வழக்கு எண் வழங்குவதற்கு இந்திய நீதிமன்றத்திற்கு ஒரு மாத காலம் தேவைப்படுகிறது. அதற்குப் பின்
அனுப்பப்படும் சம்மன்களை எதிர்த்தரப்பு, நிர்வாக ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுத்து ‘எதிர்த்தரப்பினர் ஊரில் இல்லை’ எனச் சொல்ல வைத்து, ஆறு மாதத்திலிருந்து ஓராண்டு வரை இழுத்தடிக்கலாம். ‘வழக்கறிஞருக்கு உடல்நிலை சரியில்லை’ என்றோ, ‘வழக்கில் ஈடுபடுத்தப்பட்டவருக்கு உடல்நிலை சரியில்லை’ என்றோ ஆயிரமாயிரம் பொய் சொல்லி ‘வாய்தா’ க்கள் வாங்கலாம்.

நீதித்துறையை ஆராய்வதற்கென பல கமிஷன்கள் உருவாக்கப்பட்டன. உருவாக்கப்படும் பொழுது செய்தித்தாள்களில் இடம் பெறுவதைத் தவிர இந்தக் கமிஷன்கள் பெரும்பாலும் மக்கள் தொடர்பற்றே இருக்கின்றன. பல ஊர்களில் உள்ள வழக்கறிஞர் சங்கங்கள் மற்றும் சமூக அமைப்புகளிடம் கருத்துகள் கேட்டறியப்படாமலே கமிஷன்கள் செயல்படுவது எவ்வித
நன்மையையும் பயக்கப் போவதில்லை. தேங்கிக் கிடக்கும் வழக்குகள், கமிஷன் அறிக்கைகளைக் கிடப்பில் போடுவது போன்றவற்றை மாற்றவே இன்னும் அரசாங்கம் முயலாதபொழுது அரசாங்க அமைப்பின் மேம்பாட்டைப் பற்றிப் பேசுவது அரசியல் நகைச்சுவையாகிவிட்டது.

மனு Says:
August 14th, 2006 at 3:13 pm e
தருமி, இரண்டு மூன்று நாள் முன்னால் தான் சோ சாரின் உண்மையெ உன் விலை என்ன? சினிமா பார்த்தேன்.
அதில் நீதிக்காகப் போராடும் ஒருவர் தான் செய்யாத, தன்னிடம் பாவ மன்னிப்புக் (confession) கேட்க வந்த ஒருவனுக்காக, கடைசியில் உயிர் விடுவதாகக் கதை வருகிறது.
அதனால் நீதீயே தலையிட பயப்படுகிறதோ என்னவோ.
வாழ்க சுதந்திரம்.

தருமி Says:
August 14th, 2006 at 8:38 pm e
சிவபாலன்,
எரிக்கப்பட்ட அந்தக் குழந்தைகளின் பெற்றோர்முன் அந்தக் கொலைகாரப் பாவிகள் தலைநிமிர்ந்து நடந்து போகும்போது அவர்களுக்கு எப்படி இருக்கும்? குழந்தைகளை இழந்தபோது வந்த வலியை விட அதிகமாக இருக்காது.