பதிவர் நல்லடியார் என் பெயரிட்டே இதுவரை மூன்று பதிவுகள் இட்டுள்ளார்; அவைகளை நான் இதுவரை கண்டுகொள்ளவில்லை. ஆனால் இப்போது
என் பதிவொன்றில் ஒரு பின்னூட்டம் இட்டு
தன் பதிவுக்கு அழைத்துள்ளார். அவருக்காகவே இதைப் பின்னூட்டமாக எழுத ஆரம்பித்து நீளம் காரணமாக இதை ஒரு தனிப்பதிவாக்கியுள்ளேன்.
நல்லடியார்,
உங்கள் பின்னூட்டத்திற்கு கடைசியிலிருந்து பதில் சொல்ல வேண்டியதுள்ளது.
//எனது பதிவிலும் சில கேள்விகள் இருக்கலாம். பொடிநடையா வந்து வாசித்து செல்லுங்கள்.//
பொடிநடை நடந்து உங்கள் பதிவை ஏற்கெனவே வாசித்துள்ளேன்; ஆனாலும் கண்டு கொள்ளாமல் வந்ததற்குரிய காரணம் -
உங்கள் எழுத்தில் உள்ள எள்ளல்தான். கருத்துக்களைச் சாடுங்கள்; பதில் இருந்தால் தருகிறேன். அதை விட்டு விட்டு தனிமனித எள்ளலோடு எழுதுபவருக்கு என்ன பதில் சொல்ல வேண்டியதிருக்கிறது? அப்படி என்ன எள்ளல் என்று நிச்சயம் கேட்பீர்கள். ஒரு சில துளிகள் உங்கள் எழுத்திலிருந்து....
1. //சமூக அக்கறையில் எழுதுவதாக
நம்பச் சொல்லும் தருமி மாதிரியான என்றாவது
குடிக்கும் பழக்கமுள்ள நாத்திகராக இருந்தாலும்கூட .........//
நான உங்களை எப்போது நம்பச்சொன்னேன்?
என்ன சொல்ல வருகிறீர்கள்?
நாத்திகனாக இருந்தும் குடிக்கிறானே என்றா?
இல்லை, குடித்தும் நாத்திகனாக இருக்கிறானே என்றா?
இல்லை, இவன் என்றாவது மட்டும்தானே குடிக்கிறானே என்றா?
2. தலைப்பையே பாருங்களேன்: தி.நகரில் தருமிக்கு என்ன வேலை? (பதில் கட்டாயம் சொல்ல வேண்டுமோ? அப்படியெனில் பதிவின் முதல் வரியைப் படியுங்களேன்; ஓ! நீங்கள் 'எங்கேடா இவன் இஸ்லாத்தை / இஸ்லாமியரைப் பற்றி எழுதுவான்; அதை மட்டும் வாசிப்போம்' என்றிருந்தால் நான் என்ன சொல்ல?
3. அந்த உங்கள் பதிவில் என்னைக் கொஞ்சம்தானே "கவனித்துள்ளீர்கள்". மீதியெல்லாம் நேசகுமாருக்குத்தானே!
இந்த காரணங்களால் பதில் சொல்லாமலிருந்தேன்; இந்தப் பதிவுக்கு மட்டுமல்ல;
குழப்பத்திலிருக்கும் பஸ் பயணியாக தருமியை ஆக்கிய பதிவு,
நோக்கியா வாங்கிய தருமி இந்தப் பதிவுகளுக்கும் பின்னூட்டமிடாதது இது போன்ற உங்கள் மொழியாள்மைக்காகத்தான். இப்போது என் 'வீட்டுக்கே' வந்து கேட்கும்போதும் மெளனம் சாதிப்பது நாகரீகமாகாது என்பதாலும், என் பெயர் போட்டே இத்தனை பதிவுகள் போட்டு
என்னைப் பெருமை படுத்தியமைக்காகவும் உங்கள் கேள்விகளுக்கு என் பதிலை இப்படி ஒரு தனிப் பதிவாகவே இடுகிறேன்.
//சென்ற மாதப்பதிவில்"குண்டு எல்லாம் எதற்கு?" என்ற
நாத்திகப் பதிவைக் காண நேர்ந்தது.//
இப்பதிவில் என்ன நாத்திகம் கண்டீர்களோ எனக்குத் தெரியவில்லை. இஸ்லாமை அல்ல, இஸ்லாமியரைக் குறை சொன்னாலே நாத்திகமா, என்ன?
//முஸ்லிம்கள் ஐவேளை தொழ அழைக்கும் பாங்கொலியும் L.R.ஈஸ்வரியின் கற்பூர நாயகியே கனக வல்லியோ அல்லது குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் கும்மிப் பாட்டும் ஒன்றா?//
உங்களுக்குப் பாங்கொலி இனிமையாக இருக்குமென்றால் எல்லோருக்கும் அப்படித்தான் இருக்கவேண்டும், இருக்கும் என்பது உங்கள் எண்ணமா? நீங்கள் சொல்லும் இந்து சமயப் பாடல்கள் உங்களுக்குக் குத்துப் பாட்டு என்றால் எல்லோருக்கும் அப்படிதானா? நீங்கள் சொன்னதில் முதல் பாட்டு எனக்குகூட பிடிக்குமே! கும்மிப் பாட்டு என்று மற்றொரு சமயப் பாடலைக் கூறுவது ஒருவேளை அவர்களுக்குத் தவறாகப் படலாம் வருத்தம் தரலாம் என்றுகூட நீங்கள் நினைக்கவில்லை இல்லையா? 'காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு' என்பது தெரியாதவரா நீங்கள்? உங்களுக்குக் குத்துப் பாட்டாகப் படுவதுபோல் பாங்கொலி மற்றவருக்கு எப்படியிருக்கும் என்றும் நினைத்துப் பாருங்கள் - இசையில்லாமல், ஒரு புரியாத மொழியில் ஒரு சத்தம் என்பதைத் தவிர மற்ற மதத்தினருக்கும் அது இனிமையாக இருக்கும் என்றா நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்; மற்ற சமயத்தினர் நாலு பேரிடம் கேட்டுப் பாருங்கள்.
//போக்குவரத்திற்கு இடையூறாக தொழுகை நடத்துதை வேண்டுமானால் குறையாகச் சொல்லலாம்.// அதைத்தான் நானும் சொல்லியுள்ளேன். ஆனால் அதோடு, //
அந்த இடையூறை யாரும் அதிகமாகக் கண்டு கொள்ளவில்லை; அதுவே எனக்கு சந்தோஷமாகத்தான் இருந்தது -பரவாயில்லை நம் மக்கள் adjust செய்து கொள்ளுகிறார்களே என்று.// என்று நான் சொல்லியிருப்பதன் பொருள் என்ன? படித்தீர்களா அதை?
//முஸ்லிம்கள் முடிந்தவரை இத்தகைய தற்காலிக இடையூறுகளையும் தவிர்க்க வேண்டும். சம்பந்தப்பட்ட பகுதியிலுள்ள முஸ்லிம்கள் இவ்விசயத்தில் மாற்று மதத்தவரின் கருத்துக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும் என்று சொல்வதில் நியாயமிருக்கிறது//
மிக்க நன்றி.
//'அடப் பாவமே' அப்டின்னுதான் சொல்ல முடிஞ்சுது.// யாரை, எதற்காக, ஏன் நொந்து கொண்டேன் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
//அப்படீன்னா தருமியும் நேசகுமாரும் யார் என்கிறீர்களா? யாருக்குத் தெரியும் அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம் !//
இவ்வரிகளும் இதற்கு முந்திய பத்தியும் என்ன நினைத்து, என்ன சொல்ல வருகிறீர்கள் என்று உண்மையிலேயே புரியவில்லை.
// நிரந்தர இடையூராக சாலையை அடைத்துக் கொண்டு வீற்றிருக்கும் தெருப்பிள்ளையார்,உண்டியல்களும், தாரை தப்பட்டையுடன் சிவலோகம் செல்லும் சவ ஊர்வலங்கள் பற்றி உங்கள் நாத்திகம் என்ன சொல்கிறது? சாமி சிலைகளுக்குப் போட்டியாக நிற்கும் பகுத்தறிவுச் சிலைகள் பற்றியும் சொல்லுங்களேன்.//
இதைத்தான் மேலேயே ஒரு முறை கூறியுள்ளேன். நீங்கள் இருப்பது
"ஒற்றைச் சாளர வீடு". எதைப் பார்க்க வேண்டுமென்று மெனக்கெடுகிறீர்களோ அதை மட்டும் பார்க்கிறீர்கள்.கொஞ்சம் நீங்கள் வாசித்த பதிவுக்கு அடுத்ததாக, "யாரைத்தான் நொந்து கொள்வதோ...?" என்று எழுதியுள்ள, இன்னும் எழுத உள்ள பதிவுகளைப் படித்து விட்டு உங்கள் தீர்ப்பைச் சொல்லுங்கள், சார். நீங்கள் சொல்லும்
'தாரை தப்பட்டையுடன் சிவலோகம் செல்லும் சவ ஊர்வலங்கள்' பற்றி இங்கே பார்க்கவில்லை போலும். என்னைப் பற்றிய தீர்ப்பெழுதும் முன் என் பதிவுகள் எல்லாவற்றையும் பாருங்கள், ஐயா.
நீங்கள் நம்ப முடியாத ஆனால் நான் நம்பும் சமூக அக்கறையுடன்தான் இவைகளை எழுதியுள்ளேன். இங்கு இஸ்லாமியரை மட்டும் குறை சொல்ல எழுதப் பட்டதாக நீங்கள் நினைத்தால் அது உங்கள் தவறு. இத்தவறுக்குக் காரணம் நான் ஏற்கெனவே சொன்னதுதான்: 'எங்கேடா இவன் இஸ்லாத்தை / இஸ்லாமியரைப் பற்றி எழுதுவான்; அதை மட்டும் வாசிப்போம்' என்றிருந்தால் நான் என்ன சொல்ல? குண்டு எல்லாம் எதற்காக என்ற அந்த "நாத்திகப்" பதிவை இன்னும் கொஞ்சம் ஆழ்ந்து வாசித்துப் பார்த்தால் நான் முக்கிய குறையாகச் சொல்வது என்ன என்று உங்களுக்குப் புரிந்திருக்கும். பொறுமையில்லை உங்களுக்கு. இப்படி எழுதிய பதிவு மட்டும்தானா கண்ணில் பட்டது. அதைத் தொடர்ந்து எழுதியுள்ள பதிவுகளும், அவைகளில் எழுதியிருப்பவைகளையும் ஏன் படிக்க உங்களுக்குப் பொறுமையில்லை? ஏதோ இஸ்லாமை எதிர்க்க மட்டுமே நான் பதிவுகள் எழுதுவதாக நினைத்து விட்டீர்களா?
என் மதப் பதிவுகளிலும் நான் நம்பிய என் மதத்தைப் பற்றிய நான் எழுப்பிய ஐயங்கள் உங்கள் கண்களில் படவில்லை; நான் இஸ்லாமைப் பற்றி எழுதியது மட்டுமே உங்களை வந்தடைகிறது என்றால் அதற்குக் காரணம் உங்கள் ஒற்றைச் சாளர வீடு.
நான் என் வீட்டுக் கதவுகளையும், சாளரங்களையும் முழுமையாகத் திறந்து வைத்துள்ளேன் - கொடுப்பதற்கும், பெறுவதற்கும். நாம் இருவருமெழுதி வரும் பதிவுகளின் உள்ளீடே இதைச் சொல்லும். உங்கள் மதம் சார்ந்த பதிவுகளை மட்டுமே எழுதும் உங்களை ஒரே ஒரு பதிவு மாற்றி எழுதட்டுமே என்றுதான் 'அழகான ஆறு' தொடர் பதிவிற்கு உங்களை அழைத்தேன். அழைப்புக்கு எந்த response-ம் இல்லை. அதைத் தப்பு என்று கூறவில்லை. எழுத முடியாமைக்கு வருத்தம்கூட சொல்லவில்லையே என்று கூட நான் நினைக்கவில்லை. ஏனெனில் மத ஈடுபாடு மட்டுமே உங்கள் பதிவுகளுக்கான காரணம் என்று புரிந்து கொண்டேன். ஆனால் இப்போது என் ஒரு பதிவில் நான் இஸ்லாமியரின் வழிபாட்டை, அதற்கான ஒரு சமூக மீறலைப் பற்றி சொல்லியதும்.அதற்குப் பிறகு
நான் குற்றம் கண்டது யாரை என்றுகூட புரிந்து கொள்ளாமல், ஏன் அந்தப் பதிவுக்கு அந்தத் தலைப்பை வைத்தேன் என்று கொஞ்சமும் யோசித்துப் பார்க்காது, 'ஆஹா, என் மதக்காரர்களை குறை சொல்லிவிட்டாயா' என்ற உங்கள் கோபமும் எரிச்சலும் உங்களின் பார்வையை எனக்கு முழுவதுமாகப் புரியவைக்கிறது. 'அந்த இடையூறை யாரும் அதிகமாகக் கண்டு கொள்ளவில்லை; அதுவே எனக்கு சந்தோஷமாகத்தான் இருந்தது' என்று சொல்லி அதன்பின் ஏன் அந்தத் தலைப்பு வைத்தேனென்பதைப் புரிந்து கொள்ள முயலுங்கள்.
ஒரு சமூகம் அங்கீகரித்து விட்ட, அதற்காக நான் சந்தோஷமும் பெருமையும் படும் ஒரு சமூக மீறலைப் பற்றிப் பேசியபோது வந்துள்ள உங்கள் கோபம், அதன்பின் //சமூக அக்கறையில் எழுதுவதாக
நம்பச் சொல்லும் தருமி// எழுதி வரும் மற்ற சமூக மீறல்களைப் பற்றியும் உங்களுக்குக் கோபம் வந்திருக்க வேண்டும். என் பதிவில் நடுத்தெருக் கோவில் ஒன்றைப் பற்றி எழுதியதில் மிகுந்த மத நம்பிக்கைகொண்ட ஒரு பதிவர், 'சாமியெல்லாம் இப்படி இடைஞ்சல் தரும்படி சொல்லவில்லை; இப்படிப்பட்ட கோவிலை, அத்துமீறலை இடித்து அகற்ற வேண்டும்' என்று சொல்லியுள்ளார். உங்களால் அப்படி ஒரு நிலைப்பாட்டை இஸ்லாமைப் பொருத்தவரை எடுக்க முடியாது. குதிரைக்கு கண்ணில் மாட்டும் blinkers போல் ஒரே நேர்கோட்டுப் பாதை உங்களுக்கு என்று நினைக்கிறேன். நான் நாலு பக்கமும் பார்க்கிறேன். எது சரியென்று நான் தீர்ப்பிடவில்லை.
நல்லடியார், உங்கள் நம்பிக்கையை, மதத்தை, நடைமுறைகளை யாரும் கேள்வி கேட்டாலே தவறு என்று நினைக்கிறீர்கள். எல்லா மதங்களுமே மக்களுக்கான பொது விஷயங்கள். அவைகளைப் பற்றிய விவாதங்கள் நீங்களே உங்கள் பதிவுகளில் சொல்லியுள்ளது போல காலம் காலமாய் இருந்து வருபவை; என்றும் இருக்கும். மார்க்ஸியமும், இன்றைய உலகமயமாக்கலும் விவாதத்திற்குள்ளாவது போல்தான் மதங்களும் விவாதத்திற்குட்படும். அதுவே நியதி. நாத்திகனாக ஒருவன் மதத்தைப் பற்றிய விவாதத்தை வைத்தால் அதற்குப் பதில் தெரிந்த நம்பிக்கையாளர்கள் பதில் தர முனைவதும், பதில் தெரியாத நம்பிக்கையாளர்கள் 'நீ என்னமும் சொல்லிட்டு போ; எனக்கு என் கடவுள் நம்பிக்கை பெரிது' என்று சொல்லிப் போவதுதான் நடைமுறை. இதில் கேள்வி கேட்டாலே அது தவறு என்ற நிலைப்பாடு சரியா? ஏன், இஸ்லாமியர்கள் மற்ற மதங்களைப் பற்றிய சர்ச்சையில் கலந்து கொள்வதில்லையா? சொல்லில் மரியாதையோடு, புண்படுத்தாத மொழியில், sensible-ஆக, சரியான logic-ஓடு மதங்களைப் பற்றிய கேள்விகளை நாத்திகர்கள் எழுப்பிக் கொண்டிருப்பது தொடரத்தான் செய்யும். இதில் எந்த மதத்திற்கும் விலக்கு இல்லை. பதில் இருந்தால் தாருங்கள்; இல்லையேல் விட்டு விடுங்கள்.
உங்கள் பதிவுக்கு மட்டுமல்ல; என் பெயர் சொல்லிவரும் சில பதிவுகளை நான் கண்டு கொள்வதில்லைதான். மொழியாளுமை ஒரு காரணம் என்றால் சில நேரங்களில் என் பதிலுக்கு எந்த பயனுமிருக்கப் போவதில்லை என்று தெரியுமாதலால் விட்டு விடுகிறேன்.
இரண்டு உதாரணங்கள்:
1. //தான் கிறிஸ்தவத்திலிருந்து வெளியேற பிரதானக் காரணமாக, இயேசுவை கர்த்தர் காப்பாற்றவில்லை என்பதால் கடவுளின் வல்லமை, கேள்விக்குரியதாகிறது என்றார்.//
இதற்குப் பதில் சொல்லிவிட்டோம் ஆகவே எங்கள் மதத்திற்கு வந்துவிட வேண்டியதுதானே என்றொரு கேள்வி உங்களிடமிருந்தும், மற்றும் உங்கள் நண்பரொருவரிடமிருந்தும். இதற்கு நான் இதுவரை பதில் சொல்லவில்லை. காரணம் - இவர்கள் தாங்கள் செய்யும் விவாதம் என்னவென்று தெரியாமல் செய்கிறார்களே என்றுதான். ஏனெனில் நான் இதைப் பற்றிப் பேசும்போது predeterminism vs free will; predeterminism vs prayers என்ற தளத்தில் பேசுகிறேன். அதையெல்லாம் விட்டு விட்டு அல்லாஹ் ஈசாவைக் காப்பாற்றி விட்டாரே; பின் என்ன? இங்கே வந்துவிடு என்பது ....?! குண்டு பதிவில் நான் கூறியதில் ஒன்றை மட்டும் எடுத்துக் கொண்டு அப்பதிவின் spirit-யை தவற விட்டது போலவே இங்கும் தவறு செய்துள்ளீர்கள். உங்கள் கருத்துப்படியே வைத்துக் கொண்டாலும், கிறித்துவம் பற்றிப் பேசியபோது, ஜிப்ரேல் பற்றி சொன்னதுபோல, இரண்டு மதக்காரர்களுக்கு இரு வேறு நம்பிக்கைகள்; இதில் எது சரி? அல்லது, எல்லாமே கதைதான் என்கிற என் மூன்றாவது option-ம் சரியாக இருக்கலாமில்லையா? என் பதிவுகளில் நான் சொன்னதை முழுமையாக உள்வாங்கியிருந்தால் இந்த உங்கள் குற்றச்சாட்டுக்குத் தேவையே இருந்திருக்காது.
2. உங்கள் நோக்கியா பதிவையே எடுத்துக் கொள்ளுங்களேன். நான் கேட்டது ஏன் மனிதனுக்கும் கடவுளுக்குமிடையில் இப்படி ஒரு கொடூரம் என்று. அதற்கு நோக்கியா வாங்கிய தருமியில் பதில் கொடுத்துள்ளீர்கள்.
என் கேள்வி: ஹ்ல்ரத் அலீ (ரலி): "உலகினில் ஏற்படுகின்ற குழப்பங்களுக்குத் தீர்வு காண அல்லாஹ்வின் வேதந்தான் சிறந்த வழி. ...(தன் அறிவைக்கொண்டு) பெருமையடிக்கிறவன் இதனை (அமல் படுத்தாமல்) விட்டு விட்டால்,
அல்லாஹ் அவனைத் துண்டு துண்டாக ஆக்கிவிடுவான்."உங்கள் பதில்: தன் மகன் எக்காரணம் கொண்டும் நஷ்டமடைந்து விடக்கூடாது என பேரன்புகொண்ட தந்தை தேவைப்பட்டால்
மென்மையாக அடித்தும்கூட எச்சரிப்பார்.ஒன்று செய்யுங்கள் - இந்த இரண்டு விவாதங்களையும் உங்களுக்கு இஸ்லாமியரல்லாத நண்பர் யாருமிருப்பின் அவர்களிடம் கொடுத்து, அவர்கள் இதைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று கேட்டுக் கொள்ளுங்கள். என் கேள்வியில் உள்ள
'கடவுளின் கொடூரம்' உங்கள் பதிவில்
'மென்மையாக' மாறுவதை என்னால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. ஒப்புக்கொள்ளக் கூடிய ஒரு இஸ்லாமியரல்லாத ஒருவரைப் பார்க்க ஆசை. ஆனால் நான் உங்கள் ஒரு சாளர வீட்டிற்கு வந்து இதைச் சொன்னால் என்ன பயன்? இருவரும்
ஆளுக்கொரு முயல் வைத்துக் கொண்டு, குருடர்கள் பார்த்த யானைக் கதை போல் ஏதாவது தொடர்ந்து பேசிக்கொண்டிருப்போம். என்ன பயன் இருக்கும்?
இருந்தாலும், உங்களின் அந்தப் பதிவில்
நான் போட நினைத்த பின்னூட்டம் இதுதான்:
நல்லடியார்,
இந்த எழுத்து என் ஸ்டைல் கிடையாது. உங்கள் ஸ்டைலிலேயே பதில் சொல்ல முயன்றுள்ளேன்.
நோக்கியாவில் நீங்கள் சொன்ன இந்த ஒப்பந்தங்கள் மட்டும் இருந்தால் சரி. ஆனால் கடைசியாக இன்னுமொரு ஒப்பந்தம் இப்படி இருந்திச்சுன்னா என்ன பண்ணணும்னு சொல்லுங்க:
"நோக்கியா போன் வாங்கியது வாங்கியதுதான். இனி எப்போதேனும் அந்த உரிமையாளர் இந்த போனை மாற்ற நினைக்கவோ, இல்லை அதன் தரம் பற்றிய ஐயங்கள் ஏதும் எழுப்பவோ, இந்த போனை விட்டு விட்டு வேறு போன் ஏதும் வாங்க நினைக்கவோ கூடவே கூடாது. அப்படியின்றி "...(தன் அறிவைக்கொண்டு) பெருமையடிக்கிறவன் இதனை (அமல் படுத்தாமல்) விட்டு விட்டால், நோக்கியா கம்பெனி அவனைத் துண்டு துண்டாக ஆக்கிவிடும்" என்றால் ...?"என்னைப் பொறுத்தவரை மதம் ஒன்றும் கழட்ட முடியாத, கழட்டக் கூடாத கவச குண்டலமல்ல; பிடித்தால் போடவும், இல்லையென்றால் கழட்டிப் போடவும் கூடிய ஒரு சட்டை. அப்படி இருந்தமையால்தான் இந்துக்களாக இருந்த நம் முன்னோர் மாற்று மதங்களுக்குச் செல்ல முடிந்தது.
பதிவர் கல்வெட்டு போன்று சிலர் என்னிடம் 'நம்பிக்கையாளர்களிடம் விவாதிப்பது தேவையற்ற ஒரு வீண் வேலை' என்றார்கள். நானோ எப்படியோ இதை ஒரு academic interest ஆக ரொம்ப ஆண்டுகளாக வளர்த்துக் கொண்டு விட்டதால் என்னால் நாய்வாலை நிமிர்த்த முடியவில்லை. ஆனாலும் மதங்கள் பற்றிய என் பதிவுகளை நான் எப்போதோ முடித்துக் கொண்டேன். எல்லா மதங்களைப் பற்றிய என் கேள்விகள்
பலவும் கேள்விகளாகவே இன்னும் இருக்கின்றன. அவ்வப்போது உங்களைப் போன்றோர் தரும் பதில்களுக்கு எதிர்வினையாற்றுவது மட்டுமே செய்து வருகிறேன். கொஞ்சம் நாய்வாலை நிமிர்த்தி வச்சிட்டேன் என்றுதான் நினைக்கிறேன்.
ரொம்ப நாள் கழிச்சி, நீண்ட, எனக்குப் பிடித்த மதம் பற்றிய ஒரு பதிவை இட வழிசெய்தமைக்கு நன்றி.
===============================================================================
12.06.'07 காலை 10 மணிக்கு சேர்த்த பின் குறிப்பு:
1. மற்ற மதத்தினரின் பாடல்களை உங்கள் பதிவில் கும்மிப் பாட்டு, குத்துப் பாட்டென்று நீங்கள் சொல்லியிருந்தாலும் உடனே உங்கள் பதிவுகளுக்கு வந்து யாரும் எதிர்ப்பாட்டு பாடவில்லை. ஆனால் இதேபோல் பாங்கொலி பற்றி யாராவது கொஞ்சம் கேலி செய்திருந்தால் உங்களின் நிலைப்பாடு என்னவாக இருந்திருக்கும் என்று எனக்குத் தெரியும். இந்த வேற்றுமை ஏனென்பதை கொஞ்சம் சிந்தித்துப் பாருங்களேன். என் மதம் என் உயிருக்கும் மேலானென்பதைத் தவிர வேறேதும் பதில் உண்டா?
2. நான் நடுத்தெரு இந்துக் கோவில்களைப் பற்றி விமர்சனம் செய்திருந்தும் ஒரே ஒரு இந்துவாவது ஏதாவது நொண்டிச் சாக்கு சொல்லியுள்ளாரா? அவனை நிறுத்தச் சொல்; நான் நிறுத்துகிறேன் என்ற தத்துவத்தைப் பொழிந்துள்ளார்களா? வேறு மதக்காரர்கள் சாலைகளில் அப்படி பண்ணவில்லையா? இப்படி செய்யவில்லையா என்று கேள்வி கேட்டிருக்கிறார்களா? சாலைகள் எல்லாமே மிக நன்றாகவா இருக்கு; வேறு தடைகளே கிடையாதா என்றெல்லாம் கேட்கவில்லை. இதனால்தான் குடி கெட்டுவிட்டதாக்கும் என்றெல்லாம் கேட்கவில்லை. ஆனால் நீங்கள் காட்டும் இந்த தீவிரம் ஏன், அது சரிதானா என்று தயவு செய்து உங்களையே ஒரு முறை கேட்டுக் கொள்ளுங்கள்.
3. என்னை வேற்றொரு மதக்காரனாகப் பார்த்தாலும் இந்து கோவில்களைப் பற்றிப் பேசும்போது கூட நான் என்ன சொல்கிறேன்; அது சரியா என்றுதானே அந்த மதக்காரர்கள் பார்த்தார்கள். நான் மதத்தைத் தாக்குவதாக யாரும் கிஞ்சித்தும் நினைக்கவில்லையே. ஏன்? எது சரி? ஒருவேளை உங்களைப் போல அவர்களும் இருந்தால்தான் சரியா? புரியவில்லை.