******
******
கல்லூரி நண்பர் பேரா. ஜே. வசந்தன் ஜனவரி மாதம் இறந்து போனார்.
பல காலம் அவரோடு நன்கு பழகியும் எனக்குப் புதிதாகக் கிடைத்த ஒரு தகவல் என்னை அவர் மேல் மேலும் மரியாதை கொள்ள வைத்தது. 1972-75-ல் Shankar’s weekly கார்டூன்களுக்காகவே மிகவும் பிரபலமான அந்த சஞ்சிகையில் வாரம் மூன்று கார்டூன்கள் வரைந்து வந்துள்ளார். அவரது படங்கள், கார்டூன்கள் எனக்கும் மிகவும் பிடிக்கும். ஆனால் கார்டூன் புகழ் Shankar’s weekly –ல் தொடர்ந்து வரைந்து கொடுத்து வந்தார் என்பது புதிய செய்தியாக இருந்தது.
பன்முக அறிஞர் அவர். மிக நல்ல ஆசிரியர் என்று பெரும்புகழ் கொண்டவர். இவர் மீதிருந்த மரியாதையால் புனைப்பெயராகவோ, தன் பிள்ளைகளுக்கோ இவரது பெயரை வைத்துக் கொண்ட சில நண்பர்களை எனக்குத் தெரியும். ஷேக்ஸ்பியர் நாடகங்களை எடுப்பதில் பெரும் வல்லுனர் என்று பெயர் பெற்றவர். ஆசிரிய-மாணவ உறவு இவரிடம் மேம்பட்டு இருக்கும். பிரகாஷ் காரத் இவரது அந்த நாளைய மாணவர். இருப்பினும் இன்னும் அவர் மதுரை வந்தால் இவர் வீட்டுக்குக் கட்டாயம் வந்து போவார் என்ற அளவுக்கு அந்த உறவு நீடித்தது.
ஷேக்ஸ்பியர் பாடம் எடுப்பதோடு நில்லாமல் அவரது பல நாடகங்களைக் கல்லூரியில் அரங்கேற்றினார். அவரது நாடக இயக்கத்தின் மேன்மை கருதி, மதுரையில் உள்ள பல பள்ளிகள் அவரது நாடகங்களுக்கு வழக்கமாக தங்கள் மாணவர்களை அனுப்பி வைப்பது வழக்கம். Curtain Club என்ற அவரது நாடகக் குழு தொடர்ந்து பல ஆங்கில நாடகங்களை இயக்கி வந்தது. இந்த நாடகங்களில் மேடையில் இருக்கும் 'properties' தனிக் களையோடு மிகப் பொருத்தமாக அமையும். இவையும், ஆடையமைப்பு போன்ற எல்லா கலைப் படைப்புகளும் இவரது ஆற்றலே.
படங்கள் வரைவதிலும் தனித் திறமை இருந்தது. அதிலும் கிறித்துவும், காந்தியும் சோகமாக இருப்பது போல் அவர் தனித் தனியே வரைந்த படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.
சித்திரங்கள் நல்ல கற்பனை வளத்தோடு இருக்கும். நிறைய கதை கட்டுரைகள் எழுதினார். அவர் தன் வாழ்க்கை நிகழ்வுகளை இந்து தினசரியில் Down the Memory Lane என்ற தலைப்பில் தொடர்ந்து எழுதி வந்தார். அவைகளில் பலவற்றை நான் அவரது பெயரில் ஒரு வலைப்பூ http://jvasanthan-penbrush.blogspot.in ஆரம்பித்து அதில் இட்டு வந்தேன். நண்பனாக நான் அவருக்கு செய்த ஒரே மரியாதை அது மட்டும் தான்!
சிறு குழந்தைகளுக்கான கோகுலம் ஆங்கில இதழிலும், தமிழ்ப்படுத்தப் பட்டு தமிழ் இதழிலும் வந்தது. ஜெயபாலன் என்ற அரசனும் அவனது மந்திரிகளும் என்று கதை போகும். அது பெரியவர்களுக்கு நல்ல அரசியல் parody; குழந்தைகளுக்கு நகைச் சுவையான தொடர் கதை. இதில் இன்னொரு சிறப்பு என்னவெனில், இந்துக் கட்டுரையாகட்டும், கோகுலம் கதைத் தொகுப்புகளாகட்டும் எல்லாவற்றிற்கும் அவரது சித்திரங்களே அழகூட்டும்.
அறுபதுகளிலேயே புனே சென்று, அங்குள்ள Film Institute-ல் திரைப்பட்த் திறனாய்வு பற்றி ஒரு பாடத்திட்டம் படித்து வந்தார். அந்தக் காலத்தில் Film Fare என்றொரு ஆங்கில சினிமாப் பத்திரிகை மும்பையிலிருந்து வந்தது. அதில் நிறைய சினிமா விமர்சனங்கள் எழுதுவார். அந்தக் காலத்தில், மதுரையில் படங்கள் ரொம்பவும் போர் அடித்தால் கூட்டத்திலிருந்து ’பருத்திப் பால்….’ அப்டின்னு திடீர்னு பெரிய சத்தம் வரும். அல்லது ‘மகாத்மா காந்திக்கு ஜே’ என்ற சத்தம் வரும். இதை அவர் Film Fare-ல் எழுதி அதைப் பிரபலமாக்கினார். அங்கும் கட்டுரைகளுக்கு இவர் படங்களே இருக்கும்.
அவரோடு உட்கார்ந்து ஆங்கில, தமிழ்ப்படங்கள் பற்றிப் பேச ஆரம்பித்தால் நேரம் போவதே தெரியாது. சிவாஜி, சாவித்திரி நடிப்பு பற்றி மிக அழகாகத் தொகுத்துச் சொல்வார். தேவர் மகனில் அப்பாவும் மகனும் பேசும் இடத்தில் சிவாஜியின் கையசைப்பு பற்றி அழகாகக் கூறுவார். ஆங்கிலப் படங்களும் நடிகர்களும் அவருக்கு அத்து படி! படங்களை அணு அணுவாக ரசிப்பதை நன்கு கற்றும் கொடுப்பார். அதிகமாக electronic gadgets வருவதற்கு முன்பே வீடியோ காசெட்டுகளில் படங்களில் உள்ள சில நல்ல காட்சிகளைத் தொகுத்து அவர் திரைப்பட திறனாய்வு பற்றிய சொற்பொழிவுகள் ஆட்களை அப்படியே கட்டுப் போட்டு வைத்திருக்கும்.
நான் ஆரம்ப நாளிலிருந்து என் புகைப்படங்களை அவரிடம் காண்பிப்பது வழக்கம். நல்ல திறனாய்வோடு புதிய கருத்துகளும் கூறுவார். மலர்கள், சூரிய அஸ்தமனம் போன்றவைகளை படம் எடுத்துக் காண்பிக்கும் போது உங்களுக்கு இஷ்டமானால் இந்தப் படங்களை எடுங்கள்; ஆனால் என்னிடம் காண்பிக்க வேண்டாம் என்றார் ஒரு தடவை. ஏனென்றேன். மலர்கள் அழகானவை; அவைகள் நீங்கள் ஒன்றும் புதியதாக அழகாகக் காட்ட வேண்டியதில்லை. அது போல் சூரிய ஒளியில் மேகம் - அது யார் எடுத்தாலும் நன்றாக வரும். உங்கள் திறமைகளுக்கு இவைகளில் இடமில்லை. Pick something on the road. Show your creativity என்பார். ரகுராய் படங்களைப் பார்த்து விட்டு ஜொள்ளு விடுவேன். அதைப் பற்றியெல்லாம் கவலைப் படாதீர்கள். அதில் நிறைய post processing இருக்கிறது என்றார். இதெல்லாம் போட்டோஷாப் வருவதற்கு மிக முந்திய கால கட்டம்!
மிக அமைதியான மனிதர். அவர் சத்தம் போட்டு பேசி நான் பார்த்ததேயில்லை. அவருக்கு வரும் என்று நாங்கள் எதிர்பார்த்திருந்த பெரும் சொத்து கடைசியில் அவருக்கு வராமல் போயிற்று. நாங்கள் சில நண்பர்கள்கூட அதைப் பற்றிப் பேசி வருந்தினோம். ஆனால் அவரிடம் எந்த ஏமாற்றமோ, வருத்தமோ சிறிதும் இல்லை. அதிசயமான மனிதர் தான்! சொற்பொழிவுகளிலோ, சாதாரண உரையாடல்களிலோ ஜோக்குகள் சாதாரணமாக வந்து விழும். ஆனால் அவைகளை அவர் சொல்லும் பாணி அலாதியானது. ஜோக்குகளுக்காக தனியே குரலை மாற்ற மாட்டார்; ஏற்றி இறக்கிப் பேச மாட்டார். But there will be meaningful pauses; they have their own impact. Such a nice technique!
அவரது மறைவிற்குப் பின் கல்லூரிப் பிரச்சனைகளுக்காக நான் நடத்தி வரும் வலைப்பூவில் சில நண்பர்களின், மாணவர்களின் கட்டுரைகளைப் பதிப்பித்தேன். அப்போது ஒரு நண்பர் இவரைப் பற்றி ஒரு கட்டுரை எழுதி விட்டு, அதன் பின் எனக்கு அனுப்பவில்லை. ஏனென்று கேட்டேன். நிறைய பேர் எழுதி விட்டார்களே, அதனால் என் கட்டுரையும் வேண்டுமா என்றார். அவரிடம் ‘நம்ம செத்தா யாரும் இப்படி எழுதப் போவதில்லை. ஆனால் JV-க்கு அப்படியில்லை. நிறைய பேர் எழுதத்தான் செய்வார்கள்; அதனால் உங்கள் கட்டுரையையும் போட்டு விடுவோம்’ என்றேன். உண்மைதானே!
கடவுள் நம்பிக்கை இல்லாதவர். ஆனாலும் அதைப் பற்றி (என்னைப் போல் இல்லாமல்...) யாரிடமும் எதுவும் பேச மாட்டார். ஆனால் வாழ்க்கையில் முற்றுமாக தானொரு கடவுள் மறுப்பாளன் என்பதைத் தன் சாவில் கூட நிரூபித்து விட்டார். எவ்வளவு தூரம் என்றால் அவர் கடவுள் மறுப்பாளனாக இருந்தாலும் அவரது மரணத்திற்குப் பின் அவரது உடலுக்கோ, நினைவுக்கோ வழக்கமாக மக்கள் செய்யக் கூடிய எந்த நிகழ்வுகள் - rituals - ஏதும் இல்லாத அளவிற்கு தன் குடும்பத்தையும் பக்குவப் படுத்தியிருந்தார்.
கண்களைத் தானம் செய்திருந்தார். இறந்த பின் உடல் நேரே மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு எரியூட்டப்பட்டது. வழக்கமாக நாம் செய்யும் மூன்றாம் நாள், பதின்மூன்றாம் நாள் போன்ற நிகழ்வுகள் ஏதுமில்லை.
அவர் விட்டுச் சென்ற இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட அவரது சித்திரங்களைப் பார்த்து நண்பர்களும், குடும்பமும் அவரது பெயரில் ஓர் அமைப்பை ஏற்படுத்தியுள்ளனர். சென்ற 14ம் தேதி அதற்காக ஒரு கூட்டம் நடந்தது. அதிலும் வழக்கமான இறை வணக்கம் போன்ற ஏதுமில்லை. அவரது மனைவி ஒரு குத்து விளக்கை ஏற்றி வைத்தார்கள். பேசியவர்களும் வெறும் சோகத்தில் ஊறிய வார்த்தைகளை மட்டும் பேசவில்லை. வசந்தனது பெருமைக்குரிய sense of humour அந்தக் கூட்டத்தில் பேசியவர்களின் பேச்சிலும் இருந்தது. கூட்டத்தில் பேசிய பாப்பையா தன் நண்பன் பல திறமை கொண்டவர்; ஆனால் அவரது புகழ் குடத்தில் இட்ட விளக்காக அமைந்து விட்டதே என்று வருந்தினார்.
J. VASANTHAN'S ART FOUNDATION என்றதொரு அமைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மதுரைக்கு இது ஒரு ஆரம்பப் புள்ளியாக, சித்திரக் கலை வளர்க்க ஓரமைப்பாக இது வளர வேண்டுமென்ற ஆவலோடு இது அமைக்கப்பட்டுள்ளது.
JV-ன் மரணத்திற்குப் பிறகு எனக்கொரு ஒரு சின்ன வருத்தம். வசந்தன் தன் குடும்பத்தினருக்கு அளித்துள்ளது போல் நான் என் குடும்பத்தினருக்கு என் மரணத்திற்கு பின் எனக்கு நடப்பவைபற்றிய ஒரு ‘விழிப்புணர்வை’க் கொடுத்திருக்கிறேனா என்று தெரியவில்லை!
*
இன்னொரு தகவல்: இளம் வயதில் இயக்குனர் பீம்சிங்கைப் போய் பார்த்திருக்கிறார். அவர் அமர்ந்திருக்க இவர் நின்று கொண்டு பேசிக்கொண்டிருந்திருக்கிறார்கள். அப்போது வசந்தன் தன் இளங்க்லைக் கல்வியில் ஆங்கிலத்தில் மாநில அளவில் முதலிடம் பெற்றவர் என்பதும், தங்க மெடல் பெற்றவர் என்றதும் எழுந்து நின்று பேச ஆரம்பித்தாராம் பீம்சிங். அதோடு நீங்கள் திரையுலகிற்கு வருவதை விட ஒரு நல்ல ஆசிரியராக இருப்பதே மேல் என்றாராம். (அந்தக் காலத்து ஆட்களிடம் கேட்டால் தான் மாநில முதலிடம் என்பதும், ஆங்கிலத்தில் “முதல் வகுப்பு” என்பதும் எப்படிப்பட்ட பெரிய வெற்றிகள் என்பது புரியும்!)
*
http://www.thehindu.com/features/metroplus/a-legacy-of-art/article5810161.ece