Monday, September 28, 2015

869. மதங்களும் சில விவாதங்களும் -- ஒரு விளக்கம்









*





 நேற்று இரவு எனக்கு ஒரு தொலைபேசி வந்தது. குரலிலிருந்து இளைஞர்கள் என்று நினைக்கிறேன். நால்வரோ ஐவரோ என்னோடு பேசினார்கள். அவர்களுக்கு என் மீது கோபம் – நான் நபியைத் தாக்கி தரம் தாழ்த்தி எழுதி விட்டேன் என்று. அவர்களுக்குப் பதில் சொன்னேன். இருந்தாலும் எல்லோருமே தெரிந்து கொள்ள மீண்டும் அதனைத் தருகிறேன்.


இளைஞர்களின் கோபத்திற்கான காரணம் நான் ஹதீஸ் பற்றி எழுதியிருப்பது. பக்கம் 217 – 222. அதிலும் 220 -222 பக்கங்கள். இதில் நான் கொடுத்திருக்கும் தலைப்பைப் புரிந்து கொண்டாலே என் மீதுள்ள கோபம் போய் விட வேண்டும். அந்தத் தலைப்பு: முகமதுவை இழிக்கும் சில ஹதீஸ்கள். (முகமதுவை நான் இழிக்கவில்லை.)


1.ஹதீஸ்கள் வேண்டாமென்று அல்லாவும், நபியும் கூறியதாகச் சொல்லும் வசனங்களைக் குறிப்பிட்டுள்ளேன். அவர்கள் இருவரும் வேண்டாமென்று சொன்ன பின்னும் ஹதீஸ்கள் மதத்திற்குள் நுழைந்துவிட்டன.

2. அப்படி நுழைந்த ஹதீஸுகளில் சில நபியைp பற்றி (உயர்வாகப் பேசுவதாக நினைத்தோ என்னவோ) எழுதியவை அவரின் புகழுக்கு மாசு கற்பிக்கின்றன.


இந்த இரு பாய்ண்ட்டுகளையும் இப்பக்கங்களில் சொல்லியுள்ளேன். அதற்கு ஹதீஸுகளையே மேற்கோள்களாகக் காட்டியுள்ளேன். அவை ஹத்தீஸ்தானே ஒழிய என் வார்த்தைகளல்ல என்பதை நண்பர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

நபியைத் தரம் தாழ்த்தி எழுதும் அளவிற்கு நிச்சயமாகச் செல்ல மாட்டேன் என்று உறுதி எனக்கு எப்போதுமுண்டு.

****

விவாதங்களைத் தொடர விரும்பும் நண்பர்கள் பதிவுகளிலோ, என் பழைய / புது முகவரியிலேயோ கேள்விகளைத் தரும்படிக் கேட்டுக் கொள்கிறேன்.
தொலைபேசியில் பேசும்போது சரியான விளக்கங்களையோ. ஆதாரங்களையோ தரமுடியாது போகின்றது.    இருவருக்கும் பயனில்லாமல் போகிறது.

 ***

personal number  போனில் பேசியவருக்கு,
என்னை ஆர்.எஸ்.எஸ்சின் ஆள் என்றீர்கள். என் பதிவுகள் சிலவற்றைப் படித்தால் உண்மை புரியும். படித்துப் பாருங்கள்

***
சில எண்களுக்குப் பதிலளிக்கவில்லை. காரணம் மேலே சொன்னது தான்: தொலைபேசியில் பேசும்போது சரியான விளக்கங்களையோ. ஆதாரங்களையோ தரமுடியாது போகின்றது.
எழுதுங்கள் ... விவாதிப்போம்


***

Sunday, September 27, 2015

868. புத்தம் புது அறை (தருமி பக்கம்)







*



 அடுத்த நாள் நல்ல பையனாக சாமியாரைப் பார்க்கப் போனேன். ஒரு சாவி கொடுத்தார். ஏதோ ஒரு வகுப்பறையாக இருக்குமென நினைத்தேன். தனியாகத்தான் படிக்கப் போகிறாயா என்று கேட்டார். ஆமாம் என்றேன். வேறு யாரும் கேட்டால் என்னைப் பார்க்கச் சொல் என்றார். சரி .. போ என்றார். எந்த அறை என்று தெரியவில்லையே என்று கேட்டேன். ஒரு அறையைச் சொன்னார். எனக்கு திக்கென்றது. இதற்கு முன் இன்னொரு சாமியார் அங்கு அலுவலகம் வைத்திருந்தார். அவர் காலி செய்த அறை அது. அந்த அறையா என்று எனக்கு ஒரு சந்தேகம். மறுபடி கேட்டு உறுதி செய்து கொண்டு அந்த அறைக்குப் போனேன்.

அந்த அறை எனக்குத் தெரியும். வெளியே இருந்து பார்த்திருக்கிறேன். அந்த அறையா என்ற ஆச்சரியத்துடன் அந்த அறைக்குப் போனேன். கோவிலின் நேர் பின்னால் Fathers' House. அதாவது சாமியார்கள் தங்கும் பங்களா. பின்னாளில் St. Xavier's College, St. Joseph's College, Loyola College போன்ற மூன்று கல்லூரிகளிலும் இருந்த Fathers' Houses ஒரே மாதிரியான கட்டிட அமைப்புடன் அச்சு அசலாக ஒரே மாதிரியாக இருந்ததைப் பார்த்தேன். அந்த மூன்றோடு மதுரை St. Mary's கோவிலும் அதே அமைப்பில் இருந்தது. எல்லாமே Jesuits என்று சொல்லும் சாமியார்களின் அமைப்பில் இருந்தன. அதனால் தான் அந்த ஒற்றுமை.

கோவிலுக்குப் பின்னால் Fathers' House. இதற்கு இடது பக்கத்தில் உயர்நிலைப் பள்ளி. வலது பக்கத்தில் ஆரம்பப் பள்ளி. Fathers' Houseக்குப் பின்னால் ஒரு பெரிய தோட்டம். நிறைய தென்னையும் பாக்கு மரங்களும் இருக்கும். சுற்றிலும் சுற்றுச் சுவர்கள். இப்போது இந்த சுவர்கள் நல்ல உயரத்தில் கட்டப்பட்டுள்ளன. அப்போது உயரம் கொஞ்சம் கம்மி தான். வலது பக்கத்தில் இருக்கும் ஆரம்பப் பள்ளியின் முக்கிய பகுதி கிழக்கு மேற்கில் நீண்டு இருக்கும். அதன் மேற்குக் கடைசியில் இருந்தது தான் எனக்கு வாய்த்த அறை. பள்ளி அப்போது பழைய கட்டிடமாக இருந்தது. ஆனால் இந்த அறை மட்டும் ஒரு புதுக்கட்டிடமாக இருந்தது.

வாசலே மிக அகலமாக இருக்கும். நான்கைந்து நீளப்படிகள் ஏறணும். அங்கே அறை நீளத்திற்கு collapsible gate இருக்கும். ஒரு பாதி கதவுதான் திறப்போம். முன்னறை மாதிரி நீள வாக்கில் முதல் அறை. அடுத்து இன்னொரு வாசல் திறக்க நம் அறை! வீட்டில் செங்கல் தரை. அம்மா வாரம் தோறும் சாணியால் மெழுகுவார்கள். ஆனால் இங்கே எல்லாம் சிமண்ட் மயம். உள்ளே நுழைந்தால் .... அடே .. அப்பா...!

கல்லூரியைத் தவிர இதுவரை என் தலைக்கு மேல் மின் விசிறி  எப்போதும் சுற்றியதில்லை. இங்கே தலைக்கு மேல் ஒரு மின் விசிறி. அதன் கீழே  மேசை; ஒரு நாற்காலி. மேசை நாற்காலி என்று உட்கார்ந்து கொண்டு படிப்பது எல்லாம் ஒரு கனவு தானே ஒழிய, நிச்சயமாக நிஜத்தில் அது மாதிரி ஏதும் வாழ்க்கையில் இது வரை நடந்தது இல்லை. அதுவும் முட்டை விளக்கில் இருந்து பழகிய எனக்கு ஒரு பெரிய ட்யூப் லைட் வெளிச்சம் ... அடடா... என்ன ஆச்சரியம். என்னமோ சொல்வார்களே .. என் வாழ்க்கையையே திருப்பிப் போட்ட ஒரு சம்பவம் என்பார்களே .. அது மாதிரி புது அறை இருந்தது.

நல்லா படிக்கிற ஒரு நல்ல பிள்ளைக்கு இந்த மாதிரி ஒரு அறை கிடைத்திருந்தால் என்னமா பண்ணியிருப்பான்! என்னென்னமோ பண்ணியிருப்பான்!  ஆனால் ... நான் என்ன அந்த மாதிரி நல்ல பையனா?

அறை அமைந்ததை விட சுற்றுச் சுவர் எனக்கு மிகவும் தோதானஒன்றாக மாறிப்போய் அதுவே வாழ்க்கையை மேலும் சிறிது புதிய கோணத்தில் மாற்றியது. சுவர் எப்படி வாழ்க்கையை மாற்றும் என்கிறீர்களா?

மாற்றும் ... நிச்சயமாக என் வாழ்வில் மாற்றியது. எப்படி என்று பிறகு சொல்கிறேனே ....











*

Wednesday, September 23, 2015

867. மதங்களும் சில விவாதங்களும் --- என் கேள்விக்கென்ன பதில்?



 D.Samuel Lawrence

*


 ஆசிரியர் தருமியின் உண்மையான தேடல் பல நிலைகளைக்கடந்து இன்று நாத்திகவாதியாக தன்னை வெளி உலகிற்கு தெரிவித்துக் கொள்ளுமளவிற்கு தைரியத்தையும் நம்பிக்கையையும்கொடுத்திருக்கிறது. அவருடைய உண்மை, நேர்மை, துணிவு பாராட்டப்பட வேண்டிய ஒன்றுதான்.

 ****************

அந்த நிலைக்கு நான் இன்னும் வரவில்லை. விடை காணா சில கேள்விகள் இன்னும் மனதில் இருந்து தொல்லை கொடுத்துக்கொண்டே இருக்கின்றன. பள்ளிப் பருவத்தில், மணல் மேட்டில் படுத்துக்கொண்டு, இரவு வேளையில் வானத்தைப் பார்த்துக்கொண்டு, எதையாவது யோசித்துக்கொண்டே இருப்பது என்னுடைய பழக்கம். சில வேளைகளில் கேள்வி மேல் கேள்வி மனதின் விளிம்பில் தோன்றி மறைந்து கொண்டிருக்கும். அதே நிலை இப்போதும் தொடர்கிறது.
காரணம், தருமியின் புத்தகம்.

 *************

வானத்தில் நிலா, விண் மீன்கள் போன்றவை எல்லாம் மறைந்து போய்விட்டால், ஒன்றுமே இல்லாமல் சூனியமாகி விட்டால் எப்படி இருக்கும்? வானம், பூமி, கடல், மலை, எதுமே இல்லாமல் வெறுமையாகிவிட்டால் எப்படி இருக்கும்?

கடவுள் எங்கேஇருக்கிறார்? படைப்பின் காரண கர்த்தா அவர் என்றால், அவரைப் படைத்தவர் யார்? படைத்தவரைப் படைத்தவர் யார்? அவர் அல்லது அது எது? அதை இயக்குவது எது? இப்படியே கேட்டுக்கொண்டே போனால், இந்த பிரபஞ்சத்தை யாரோ அல்லது சக்திதான் உருவாக்கியிருக்க வேண்டும் என்ற முடிவிற்கு வர வேண்டியிருக்கிறது. கற்பனை பண்ணி பார்க்க முடியாத அளவிற்கு படைக்கப்பட்டிருக்கின்ற யாவற்றையும் உருவாக்கியுள்ள கடவுள் அல்லது சக்தி எங்கிருந்து எப்படி வந்தது? தெரியவில்லை.

 கடவுளை உருவகப்படுத்திப்பார்க்கும்போதுதான் சிக்கல் ஆரம்பிக்கிறது என்று நினைக்கிறேன். அதனாலேயே மதங்கள் தோன்றி பிரிவினைகள். சண்டைகள் ஆகியவற்றிக்கு வித்திட்டன என்று சொல்லலாம். மனதில் எழுகின்ற எண்ணற்ற கேள்விகளுக்கு உறுதியான, தெளிவான, முழுமையான பதில் கிடைக்காமல் மனிதன் தத்தளிக்கும் நிலை இன்னும் தொடர்கிறது என்பதுதானே உண்மை. இப்படி இருக்கலாம் என்று சொல்ல முடிகிறேதே தவிர, இப்படித்தான் என்று சொல்லமுடியவில்லையே.

இந்த இயலாமையை அல்லது அறியாமையை வைத்துத்தானே பல மதங்கள் உருவாகியிருக்கின்றன.

அறிவு, பகுத்தறிவு, ஞானம் இவை எல்லாம் மனிதனுக்குக் கொடுத்தது யார் அல்லது எது ? மற்ற படைப்புகளுக்கு பகுத்தறிவு, ஞானம் போன்றவை கிடையாது என்று நாம் நம்பினால் அவைகளுக்கு ஏன் கொடுக்கப்படவில்லை? மனிதன்தான் படைப்பின் சிகரமா? படைப்பின் சிகரம் படைப்பையே அழிக்கக் காரணம் என்ன?

இன்னொன்று: மோட்சம், நரகம் எல்லாம் கற்பனைதானா? நான் ஏன் பிறந்தேன்? இந்த வாழ்க்கையின் அர்த்தம் என்ன? இறந்தபின் என்ன நடக்கிறது? எதற்குமே முழுமையான பதில் இல்லை. இன்னும் இருளில்தான் இருக்கிறோம்.இப்படி, விடைகாணமுடியாத கேள்விகள் பல இருக்கும் பொழுது கடவுள் இருக்கிறார் என்றோ அல்லது இல்லை என்றோ எப்படி உறுதியாகச் சொல்லமுடியும்? அப்படியென்றால், இது தேவையற்ற தேடல் என்று சொல்லலாமா? 

கடவுள், மதம் என்று நாம் சண்டையிட்டுக்கொண்டிருப்பதைவிட நல்ல விழுமியங்களை மனதில் கொண்டு, எல்லோருடனும் அன்பைக் கடைப்பிடித்து, நீதிக்காக போராடி நேர்மையான வாழ்வு வாழ்வது ஆயிரம் மடங்கு நல்லதுதானே!





*


 

866. MOZART .... ILAYARAJA .... MOZART

* *

Saturday, September 19, 2015

865. ”தனி ஒருவன்” - கிஸ் பண்ண விடுங்கப்பா ...







*



copy cat என்பதால் இயக்குனர் ராஜா மேல் பெரிய அபிமானம் ஏதும் கிடையாது. ஆனால் தனி ஒருவன் படம் பார்த்ததும் அவருக்கு என் பாராட்டுகளை அளிக்க விரும்பினேன். படம் நன்றாக, விருவிருப்பாக சென்றது.ஹை டெக் விஷயங்கள் .. வேகமாக நகரும் கதை .. நன்றாக நடித்த நடிகர்கள்.. அதிலும் அப்பாவாக வரும் ராமய்யா ... வழக்கமாக யோசித்து புரிய வேண்டிய காட்சிகள் தமிழ்ப்படங்களில் வந்தால் உடனே இயக்குனர்கள் அதற்கு ஒரு விளக்க உரை.. அது இதுன்னு கொடுப்பாங்க. இந்தப் படத்தில் அந்த மாதிரி ’நோட்ஸ் போடுறது’ இல்லை. அரவிந்த சாமி ரோலும் நல்லா இருந்தது. முரடன்கள் தான் வில்லன்களாக இருக்கணுமா? பெரிய விஞ்ஞானிகளும் பெரிய வில்லன்களாக முடியுமில்லையா?

படம் ஆரம்பித்த முதல் 10 நிமிடங்களுக்குள்ளே ரெண்டு மூணு டிவிஸ்ட் வந்தது படத்துக்கு நல்ல ஆரம்பம் கொடுத்தது. சின்னப் பயல் கட்சித் தலைவரிடம் போட்ட டீல் சூப்பர்ப்.

இந்த மாதிரி படங்களில் ரொம்ப லாஜிக் ஓட்டைகள் இருக்கும். இதில் ரொம்ப கொஞ்சம் மட்டும் தான். கடைசி சீனில் எப்படி அரவிந்த சாமி SD Cardல் எல்லா தகவலும் சொல்லி புல்லட் கோட்டில் வைக்கிறார் ....... எனக்குத் தெரிந்த பெரிய ஓட்டை இது தான்.

படம் பார்க்கும் போது ஆரண்ய காண்டம் படம் நினைவுக்கு வந்தது. ஏனென்று தெரியவில்லை. இதைவிட ஆரண்ய காண்டம் பிடித்தது என்றும் நினைவுக்கு வந்தது. ஏன் அந்தப் படம் க்ளிக் ஆகலை. திருட்டு சிடி கூட அப்படத்திற்கு இல்லையாமே...!

படத்தில் பிடிக்காத இடம் - இந்தப் படத்தில் வந்த காதல் டூயட். நயந்தாரா விரட்டி விரட்டி காதலிக்க, ஹீரோ மாட்டேன்றார். கடைசியா சரின்னு ஆனதும் நயந்தாரா அப்படி மூஞ்சை மேலே தூக்க ... கடற்கரையில் ஒரு பாடல். எரிச்சலா இருந்தது. படத்தின் வேகத்திற்கு சட்டென்று போட்ட கடிவாளம். நம்ம தமிழ்ப்படத்தில் இரண்டு கஷ்டம்: ஒண்ணு பாட்டு ... ரெண்டு நீளம். பாட்டைக் குறைச்சாலே நீளம் குறையும்.

அதோடு நம்ம படங்களில் கிஸ்ஸிங் சீன் இல்லாம எடுக்கிறது தான் நம் “தமிழ்ப்பண்பாடு”ன்னு யாரோ சொல்லிட்டுப் போய்ட்டாங்க. அதெல்லாம் வெட்டிக் கதை. அந்த மாதிரி சில வினாடிகளில் ஒரு கிஸ்ஸிங்கை காண்பிக்கக் கூடாது என்பதற்காக 3-5 நிமிடம் வரை அலையில் பெண்ணைப் புரட்டிப் போட்டு, மழையில் மஞ்சள் சேலையில் போட்டு நனைத்து எடுத்து, மரத்தைச் சுத்தி ஓட விட்டு மூச்சு வாங்க வைத்து ... இதுவே ஒரு சோதனையாக ஆகிவிடுகிறது.

இரண்டு மணி நேரம் இல்லாமல் ஒன்றரை மணி நேரத்தில் முடித்தால் இது மாதிரி படங்கள் இன்னும் நன்கு அமையும்.

தமிழ்ப்பண்பாட்டை மறந்து விட்டு ஒரு நாலைந்து வினாடிக்கு ஒரு கிஸ் சீனை வச்சிட்டீங்கன்னா... எங்களுக்கும் வசதி; உங்களுக்கும் செலவு குறைவு. கிளுகிளுப்புன்னு சொல்லி எங்களில் பலரையும் ஏமாத்திடலாம் ஈசியா...!



 *