Monday, August 29, 2022

1183. எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் ...



*

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் ...

 அடடா .. ஒண்ணு கேட்க மறந்து போச்சே. அடுத்த தேர்தலில் சிறுபான்மையருக்கு ஓட்டுரிமை கிடையாதுன்னு பெரியவுக சொன்னாக... சரி, அப்படியே இருக்கட்டும், ஆனால் சாமி இல்லைன்னு சொல்ற சிறுபான்மையரும், இந்து மதத்திலிருந்து சாமி இல்லைன்னு சொல்றவுகளுக்கும் ஓட்டுரிமை இருக்கா இல்லையா ...?





*


Saturday, August 27, 2022

1182. என் வாசிப்பு ....





*


என் வாசிப்பு

 




Forensic Science என்றொரு விருப்பப்பாடம் - elective subject. பல ஆண்டுகள் தொடர்ந்து விருப்பத்துடன் எடுத்த பாடம். விருப்பப் பாடம் என்றால் அதில் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. பல்வேறு துறை மாணவர்கள் வருவார்கள். வகுப்பு நன்றாக இல்லாமலிருந்தால் ஆசிரியர் கல்லூரி முழுவதும் மாணவர்கள் மதிப்பில் மிகக் குறைந்த “மதிப்பெண்களே” பெற முடியும். பல்வேறு துறை மாணவர்கள் என்பதால் ஆசிர்யர்கள் பெயர் எடுப்பதும், கெடுப்பதும் எளிது. ஆகவே மாணவர்களை வகுப்பில் “கட்டிப் போட்டாக” வேண்டிய கட்டாயம் ஆசிரியர்களுக்கு உண்டு.

இந்த வகுப்புகளை எம்.ஜி.ஆர். – எம். ஆர்.ராதா வழக்கோடு ஆரம்பிப்பதுண்டு. அந்த வழக்கு நடந்த காலத்தில் தினசரிகளில் வரி விடாமல் வாசித்து வந்திருக்கிறேன். அது நல்ல வசதியாகப் போய் விட்டது. பாடத்தில் முதன் முதலில்  இந்த வழக்கு பற்றிய விவரங்கள் அதிகமாக உதவின. ராதாவின் வழக்கறிஞர் –வானமாமலை அவ்ர் பெயர் – வாதங்களை வாசித்து ரசித்தது (ஆரம்பத்திலேயே முதல் விவாதத்திலேயே matinee idol என்றொரு சொல்லைப் பயன்படுத்தினார்.) கடைசி விவாதத்தில் குண்டுகள் எந்தத் துப்பாக்கியிலிருந்து வெளிவந்தது என்று தெரியவில்லை என்று எதிர்த்தரப்பு கொடுத்த விவாதத்தையும் அடித்து நொறுக்கினார் ... நிச்சயமாக மாணவர்களின் விருப்பத்தை நம் பக்கம் எளிதில் திருப்பி விடலாம்.

அடுத்த வழக்கு ஷோபா (பாலுமகேந்திரா) தற்கொலை வழக்கு. என்னைப் பொறுத்த வரை அது தற்கொலையாக இருக்காது என்ற எண்ணம் இருந்தது. அடுத்து அதைப் பற்றிய விவாதங்கள் தொடரும். அடுத்து ஷெர்லாக் ஹோம்ஸ் கதையைப் பின்பற்றி தமிழ்வாணன் எழுதிய சங்கர்லால்  கதைகள் வரும். அதிலிருந்து Anyone leaves evidences என்ற தாரக மந்திரமே இந்தத் துறையின் அடிப்படை என்று சொல்லி... பாடங்கள் தொடரும்.

இதில் பல ஆண்டுகள் ஒரு ஆங்கில நாவலைப் பற்றிய கதைகளும் வகுப்பினுள் தலை காட்டும். Frederick Forsyth  எழுதிய THE DAY OF JACKAL கதை வந்து விடும். சில ஆண்டுகளில் வகுப்பில் இந்தக் கதை சொன்னதோடு, அந்தப் படத்தையும் போட்டுக் காண்பித்தேன். என்னைப் பொறுத்தவரையில் திரில்லர் ..திரில்லர் என்றெல்லாம் சொல்கிறோமே ... இந்தக் கதை வாசிக்கும் போது – படம் பார்ப்பதை விட கதை வாசிப்பது... அடேயப்பா .. அது ஓர் அனுபவம். டி கால் என்ற பிரஞ்சு அதிபரைக் கொல்ல ஒரு கூலிப்படை ஆளைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அவன் ஒவ்வொரு செயலும் கணக்கிட்டுச் செய்கிறான். அவனைத் தேடி வருபவரும் just one step மட்டும் பின்னால் இருப்பார். ஏறத்தாழ டி காலை நோக்கி சுட்டு விடுவார். மகாபாரத்தத்தில் வந்தது போல் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போய்விடும்’.  இந்தக் கதையைச் சொல்லி பலரை கதை வாசிக்க வைத்ததும் அல்லது அந்தப் படத்தைப் பார்க்க வைத்ததுமுண்டு.

கடைசியில் ஒரு assignment. தடயங்கள் இல்லாமல் என்னை மாணவர்கள் கொல்வதற்கு ஒரு திட்டம் தீட்டி வகுப்பில் வந்து சொல்ல வேண்டும். மற்ற மாணவர்கள் வழக்கறிஞர்களாகவோ, காவல் துறையினராகவோ இருந்து கேள்வி கேட்டு அந்தத் திட்டத்தைத் தகர்க்க வேண்டும்.

இது ஒரு பக்கம் இருக்கட்டும்.

இந்தக் கதை வாசித்து பிரம்மித்த பிறகு அவரின் மற்ற நாவல்களையும் வாசிக்க ஆரம்பித்தேன். அதில் ஒன்று NEGOTIATOR. இந்தக் கதையில் ஒருவனைக் கைது செய்து பின் கட்டாயத்தின் பேரில் விடுதலை செய்ய வேண்டும்.  அவனை விடுவிப்பதற்கு முன்பு அவனது இடைவாரில் ஒரு குண்டு ஒளித்து வைக்கப்பட்டு, அவன் தன் ஆட்களோடு சேரும்போது அதை வெடித்து அவனைக் கொன்று விடுவார்கள். அதாவது ராஜிவ் காந்தியைக் கொலை செய்வது போல் நடக்கும். அப்போது ஒன்று வாசித்த ஞாபகம். இந்த human bomb என்பது இந்த ஆசிரியரால்தான் முதன் முதலில் கற்பனையாக எழுதப்பட்டது என்று கூறப்பட்டிருந்தது. அதன்பின் இது வெவ்வேறாக வளர்ந்த கதையைத் தான் இப்போது தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறோமே.


                                         

புதினத்தின் ஆசிரியர் 84 வயதில் இங்கிலாந்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.






*


Monday, August 22, 2022

1181. பொட்டி தொட்ட கதை




*
                                                

1970களின் கடைசியில் S.L.R. பொட்டி ஒண்ணு வாங்கியாச்சு. அதிலயே பாதி ஜென்மம் சாபல்யம் அடைஞ்ச மாதிரி ஆகிப் போச்சு. ஏதோ அப்பப்ப்போ ஒரு லென்ஸ் வாங்கிறது மாதிரி நினப்பு வேற. மதுரையில் அப்போது 120 TLR காமிராவிற்குத் தான் மதிப்பு. 35 mm அப்போது தான் தலைகாட்ட ஆரம்பித்து, S.L.R. பொட்டியின் மதிப்பு உயர்ந்து கொண்டிருந்த நேரம்.

S.L.R. பொட்டியை அமெரிக்கா சென்று வந்திருந்த பேராசிரியரிடமிருந்து வாங்கினேன். அவர் ஒரு நைக்கான் பொட்டியும் சில எக்ஸ்ட்ரா லென்சுகளும் வைத்திருந்தார். ஒரு நாள் அவருடைய zoom lensயை வாங்கி வைத்திருந்தேன். உலக்கை மாதிரி பெருசா இருக்கும். 200 mm ஆக இருக்கலாம், படம் எடுக்கும் வெறி. இரண்டு மூணு நாளில் அவரிடம் லென்சைக் கொடுக்கணுமே... வேக வேகமாக என்னென்னவோ படம் எடுத்தேன். முக்கியமாக பூக்களைப் படமெடுத்தேன். அதற்காகவே ஒரு பூங்காவிற்குப் போயிருந்தேன்.

அப்போதே portrait என்பார்களே அவைகளை எடுக்க ஆசை. அன்னைக்கிப் பார்த்து நாலைந்து நாள் தாடியோடும், வெற்றிலைக் கரையோடும் ஒருவர் அங்கே உட்கார்ந்திருந்ததைப் பார்த்து அவர் மேல் லவ் வந்தது. அவ்ரிடம் போய் மரியாதையாக உங்களைப் படம் எடுக்கலாமான்னு கேட்டேன். நம்ம மக்களுக்கு அப்போதெல்லாம் போட்டோ எடுத்தால் ஆயுசு குறையும்னு ஒரு பெரும் தத்துவம் பரவலாக இருந்தது. நல்ல வேளை அவர் சரியென்றார். இரண்டே இரண்டு படம் அவரை எடுத்தேன். (அப்போதெல்லாம் படங்களை எண்ணியெண்ணி தான் எடுப்போம்.)

அப்போது எங்கள் கல்லூரியில் இரண்டே இரண்டு டார்க் ரூம் physics dept.ல் இருந்தது. அதில் இளங்கலைத் துறைத் தலைவர் என்னோடு நட்போடு இருந்தவர். அவர் ஒரு டார்க் ரூமைப் பயன்படுத்த அனுமதி அளித்தார். D.& P. அதாவது developing and printing செய்து பழகியிருந்தேன். ஒரு நாள் படங்களைப் பிரின்ட் செய்து விட்டு அவரிடம் அறைச் சாவியைக் கொடுக்கச் சென்றேன். எங்கே பிரின்ட் போட்ட படங்களைக் கொடு என்றார். கொடுத்தேன். அதில் நாம் ஒரு மாடல் வச்சி எடுத்த படம் இருந்துச்சா ...  அதை எனக்குக் கொடு என்றார். சரின்னு கொடுத்துட்டு வந்துட்டேன்.

அடுத்த நாள் மாலையில் physics மாணவர்கள் சிலர் என்னைத் தேடி வந்தார்கள். ஆகா ... அற்புதம் .. என்றார்கள். என்னப்பா என்று கேட்டேன். நான் எடுத்த படத்தை ஒரு தாளில் ஒட்டி, சுற்றி பார்டர் லைன் எல்லாம் போட்டு, என்னைப் பற்றியும் நான் எடுத்துள்ள படத்தின் சிறப்பையும் சொல்லி அதை மாணவர்களுக்கான நோட்டீஸ் போர்டில் போட்டிருந்திருக்கிறார் அவர்களின் துறைத் தலைவர், பேரா. சீனிவாசன்.

அது தான் ஆரம்பம். சில ஆண்டுகளாக ... இல்லை .. பல ஆண்டுகளாக என்றும் சொல்லலாம். கல்லூரியில் ஆசிரியர் என்பதை விட படம் எடுக்குற ஆளுன்னு பெயராகிப் போச்சு. நானும் எனது ஜோல்னா பையில் எப்போதுமே pregnantஆக இருக்கிற பொட்டியுடன் இருப்பேன். ஆட்களை விட மற்றவைகளை எடுக்கவும் அத்தனை ஆசை. எங்கள் மெயின் ஹால் படிகள் நீளமாக இருக்கும். டாப் சன் லைட்டில்  லைட் & ஷேட் வர்ர மாதிரி ஒரு படமும் கல்லூரிக்கே பரிச்சயமாச்சு. சிகப்பு எறும்புகளை ஒரு க்ளோஸ் அப் ஷாட். தமிழ்த் துறைப் பையன் தேடி வந்து, எறும்பு கண் தெரியுறது மாதிரி ஒரு படம் எடுத்திருக்கீங்களாமே.. அதைப் பார்க்கணும் என்றான். மீனாட்சி அம்மன் கோவிலின் தெற்குக் கோபுரம் எடுத்து blow up பண்ணிய படம் கல்லூரி முதல்வரின் அறைச் சுவரை அலங்கரித்தது சில காலம் .அப்டி இப்டின்னு ... காலம் போச்சு. எப்போதும் பொட்டி தூக்குற மாணவர்களோடு சகவாசம்.  நம்மைவிட அவர்களின் கலாரசனை என்னையும் உயர்த்திக் கொடுத்தது. விலங்கியல், தாவரவியல் என்று கல்லூரியில் ஒரு சமயம் ஐந்து dark rooms வந்தன என்றால் அதில் என் பங்கும் உண்டு. தொடர்பில் இருந்து, பின்  film institute போன மாணவ நண்பர்களும் உண்டு.

ஆனால் எல்லாவற்றிற்கும் அந்த மாடலின் படம் தான் ஒரு பெரிய பிள்ளையார் சுழியாக இருந்தது. அந்தப் படத்தைப் பார்த்து நல்ல படம் என்று சொல்லி, அதைப் பிரபலப் படுத்தி, எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள் என்று ஒரு dark room சாவியை என்னிடமே கொடுத்து, தட்டிக் கொடுத்த பேராசிரியர் சீனிவாசனுக்கு அன்றிலிருந்து இன்று வரை மிகவும் நன்றியோடும் அதைவிட நட்போடும் இருந்து வருகிறேன்.


                                                        


விளக்கின் திரியைத் தீண்டி விட்டவருக்கு என்றும் நன்றி.

 


 








*


Monday, August 15, 2022

1180. இந்துத்துவாவின் நகங்கள் .. மருதனின் "இந்தியா எனும் பெருங்கனவு"




*



மருதனால் எழுதப்பட்ட அழகான நடுப்பக்க கட்டுரை இன்று தமிழ் திசையில் வந்துள்ளது. கட்டுரையில் அழகு மட்டும் தெரியவில்லை. ஆபத்தும் தெரிகிறது. இந்துத்துவாவின் நகங்களின் கூர்மை பற்றிப் பேசுகிறது. இன்று ஆண்டுகொண்டிருக்கும் ஒன்றிய அரசினை ஆதரிப்போர் இதை வாசித்தால் நலம்
சில முக்கிய வரிகள்...
வெவ்வேறு காலங்கள், வெவ்வேறு நம்பிக்கைகள், வெவ்வேறு கடவுள்கள், வெவ்வேறு கண்ணோட்டங்கள் ஒரே தூணில் அருகருகில் ஒன்றாக வாழ முடியும் என்பதற்கு அலகாபாத் தூண் ஓர் அழியாச் சின்னமாக உயர்ந்து நிற்கிறது. முழு இந்தியாவும் இதே போல் ஒற்றுமையோடும் வலுவோடும் காலத்தை வென்று நிமிர்ந்து நிற்க முடியும் என்று நம்பினார் ஜவாஹர்லால் நேரு.
....பன்மைத்துவத்துக்கு இடமில்லை என்பதால் அசோகருக்கும் நேருவுக்கும் இடமில்லை.
இந்த இருவரும் விரும்பியதுபோல் எல்லாருக்குமான தேசமாக அல்ல ஓர் ‘இந்து ராஷ்டிர’மாக இந்தியா திகழ வேண்டும் என்பதே இந்துத்துவத்தின் கனவு. வேறுபாடின்றி அனைவரையும் அரவணைத்துச் செல்லத் துடித்த அசோகரும் நேருவும் இன்றைய உலகில் பலவீனமானவர்கள் அல்லது தோல்வியாளர்கள்.
இந்துத்துவமோ பழையதை அழித்துவிட்டு, அந்த இடத்தில் புதிதாக இன்னொன்றை எழுதத் துடிக்கிறது. ஒரு வரலாற்றை அழித்துவிட்டு இன்னொன்றை, ஒரு மரபை அழித்துவிட்டு மற்றொன்றை, ஒரு மொழியை அகற்றிவிட்டு இன்னொன்றை அது வலியுறுத்த விரும்புகிறது. அலகாபாத் இன்று பிரயாக்ராஜாகத் திருத்தப்பட்டிருக்கிறது.
தூண் நின்றுகொண்டிருக்கும் இடத்தின் பெயரை மட்டுமே அழிக்க முடிந்திருக்கிறது. பல நூற்றாண்டுகளாக அது தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்து வைத்துப் பாதுகாத்துவரும் பெருங்கனவை அழிக்க முடியவில்லை




*


Monday, August 08, 2022

1179. CLICKBAIT



*


CLICKBAIT

இந்தத் தலைப்பில் T.O.I. நாளிதழின் தலைமை ஆசிரியர் இன்று ஒரு கட்டுரை எழுதியுள்ளார். ஏதாவது ஒரு “குண்டக்க மண்டக்கதலைப்பு ஒன்றைக் கொடுத்து தங்கள் பதிவுகளை, வீடியோக்களைப் பார்க்க வைக்கும் “தந்திரம்” பற்றியெழுதியுள்ளார்.

இணையத்தில் இந்த வியாதி தீயாய் எறிகிறது. திடீரென யாராவது செத்துப் போய் விட்டார்கள் என்று ஒரு தலைப்பு. உண்மையே இல்லாமல் இப்படி ஒரு தலைப்பு கொடுத்து அவர்களது  வீடியோவைப் பார்க்க வைக்கும் “ராஜதந்திரமாம்”! அல்லது ஏதாவது  ஒரு பொய்யைத் தலைப்பாக வைத்து ஆள் சேர்க்கிறார்கள். அங்கே போய் பார்த்தால் உப்புக்கு சப்பில்லாத ஒரு சொதப்பல் இருக்கும். பார்த்ததும் ஒரே ஒரு கேள்வி மட்டும் தான் மனதிற்குள் எழும்: “இந்த முட்டாப் பசங்க ஏன் இந்த மாதிரி செய்றாங்க?”

இன்னொரு தனி மனிதன் பெரும் படையாக நம்முன் உலாவி வருகிறார். தமிழர்களுக்குச் சேவை செய்யவே வந்த செம்மல். பருமனான ஆள் என்பதால் அச்சமில்லை.. அச்சமில்லை.. என்று தலைப்பாக்காரனின் பாட்டுக்கு ஆதர்சமாகத் திகழ்கிறார். எந்த நடிகை / நடிகர் எந்த angleல் படுத்திருக்கிறார் என்பது வரை துல்லியமாகப் பார்த்து நம்மிடம் அந்த நல்ல செய்தியைக் கொண்டு வருகிறார். இவர் இப்போதைக்கு சினிமா உலகத்தை மட்டுமே புரட்டிக் கொண்டிருக்கிறார். இவர் சிறிது திசை திரும்பி காவல் துறை ஆட்கள், அரசியல்வாதிகள் என்றும் விரைவில் ஆரம்பிக்க வேண்டும் என்பது என் ஆவல். (ஏனெனில் அப்போது தான் காவல் துறைக்கோ மற்றோருக்கோ இந்த ஆளின் கழுத்தில் கைவைத்து உள்ளே அனுப்புவார்கள் என்று நினைக்கின்றேன். ) அதுவரை இது இந்த ராசாவின் காலம் தான்.

இன்னொரு பருமனான ஆளு ரம்மி விளையாட நம்மைக் கூப்பிட்டால் கூட பரவாயில்லை. ஆனால் அவரு – சரத்து குமார் அய்யா தான் – நீங்க போய் விளையாடிட்டு செத்துப் போங்கன்னு சொல்றார். அவரையும் யாரும் கேள்வி கேட்பதில்லை.

அட போங்கப்பா ....





*