Saturday, April 15, 2023
Tuesday, March 14, 2023
1217. சூத்திரர்களின் கண்களுக்கு மட்டும் .... 1
“சூத்திரன்” என்றதொரு நூலை மொழிபெயர்த்து
முடிக்கும் நிலைக்கு வந்துள்ளேன். வெளிவந்த பின்
உங்களுக்குச் சொல்கிறேன். அனைத்து சூத்திரர்களும் கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல்.
மொழிபெயர்க்கும் போதே எனக்கு ...
சரி விடுங்கள்.
இந்த நூலை வாசித்த பிறகு எனக்கு ஒரு புதிய theory பிறந்தது. நான்கு சாதிகள் .. வர்ணாஸ்ரமம் ... சனாதனம் ... சாதிகளின் கிடுக்கிப் பிடி ... என்று பலவை பேசப்படுகின்றன. நான்கு சாதிகள் பிரம்மாவின் உடலில் இருந்து தோன்றியவை என்று சொல்லப்படுகிறது. இது நம் எல்லோருக்கும் தெரிந்தது தான். பிராமணன், வைசியன், சத்திரியன், சூத்திரன் ... என்று நான்கு வர்ணமாக மனிதர்கள் படைக்கப்பட்டார்கள். புருஷ சூக்தம் (purusasukta) முதலில் சொல்லப்பட்ட நான்கு பிரிவினரும் தெய்வத்தால் படைக்கப்பட்டவர்கள்; பிரஜாபதி என்ற பெருங்கடவுளிடமிருந்து உதித்தவர்கள் என்று கூறுகிறது
எனக்கு இதில் தோன்றிய புதிய விஷயம்
என்னவெனில், பிரம்மாவிடமிருந்து இரண்டே இரண்டு
சாதிகள் பிறந்தன; தலையிலிருந்து பிராமணன்; காலிலிருந்து சூத்திரன். இதில் பிராமணனாகப் பிறந்தவன் எப்போதும் ஒரு
பிராமணனே. ஆனால் சூத்திரனாகப் பிறந்தவன் கடைசி வரை சூத்திரனாக இருக்க வேண்டும்
என்ற “விதி” இல்லை. நாலு காசு பார்த்தால் அவன் வைசியனாகி விட முடியும். கையில் கத்தியை
எடுத்தால் சத்திரியனாகி விட முடியும்.
இந்த வழியில் பல சூத்திரர்கள் கத்தியெடுத்து
மன்னரானார்கள். ஆனால் இந்த ‘ex-சத்திரியர்கள்
மன்னர்களாக முடிசூட்டக் கொள்ள அவர்கள் பிராமணர்களுக்கு தட்சணை கொடுத்தால் அவர்கள் பல இட்டுக்கட்டப்பட்ட
புராணக் கதைகள் மூலம் புனிதமாக்கப் படுவார்கள். புனிதமாக்கப்பட்ட பின் அவர்கள் மன்னவர்களாகவும்,
சத்திரியர்களாகவும் ஆகி விடுவார்கள்..
What
a magic!
கடைசிப் பத்தியில் சொன்னவை சூத்திரன்
புத்தகத்தில் மட்டுமல்ல; அதற்கு முன் நான் மொழிபெயர்ப்பு
செய்து முடித்துள்ள ரொமிளா தாப்பரின் வரலாற்று நூலில் சான்றுகளோடு கொடுத்துள்ளார்.
பின்பு வரலாற்றின் நெடுகிலும் சூத்திரர்கள்
சில புனைவுக்கதைகளோடு பெரும் வீர தீர சத்திரியர்களாக மாறிவிட்டனர் என்ற விவரங்களைத்
தருகிறார். இதற்கான யாகத்தின் பெயர்: “ஹிரண்யகர்பா’. இவை எல்லாம் பிராமணர்கள் அருளிச்
செய்த மாயம் தான்.
காஞ்சா அய்லய்யா இந்தப் புதிய சத்திரியர்களை
– neo-shatriya
– என்று அழைக்கிறார். இன்றும்
நமது சமூகங்களில் பல சூத்திரர்கள் புதிய சத்திரியர்களாக உருமாறி தங்களுக்கான புனைக்கதைகளின்
ஜோதியில் ஐக்கியமாகிக் கொண்டிருக்கிறார்கள்.
எவ்வளவு ‘அழகான’, மிக விநோதமான சாதிய சமூகக் கட்டமைப்பு வைத்திருக்கிறோம்.
என்னே நமது பெருமை!
Tuesday, February 28, 2023
1216. நண்பகல் நேரத்து மயக்கம் (நடுவுல சில பக்கத்தைக் காணோம்)
புது மாப்பிள்ளைக்கு மண்டையில் அடி
பட்டுதா ...அது அவர் மெடுல்லா ஓப்லாங்கேட்டாவைத் தாக்கியதா ... அதுனால ரெண்டு நாள்
நல்லா தூங்குறதுக்கு வரைக்கும் ஞாபக சக்தி இல்லாம போச்சுதா ... இப்படிப் போச்சு
“நடுவுல சில பக்கத்தைக் காணோம்” அப்டின்ற படத்துல. நல்லா தூங்கி எழுந்தச்சதும்
கதாநாயகனுக்கு எல்லாம் சரியா போயிருது.
ஜாம் ஜாம்னு கல்யாணம் நடக்குது. இது நம்ம கதை. நன்றாக இருந்தது. உண்மைச் சம்பவம்
என்றும் சொன்னார்கள்.
இப்போ ஒரு மலையாளப் படம்: நண்பகல் நேரத்து மயக்கம். ஆனா வேளாங்ககன்னிக்கு கேரளாவில இருந்து வந்த ஜேம்ஸுக்கு அப்படியெல்லாம் ஒண்ணும் ஆகலை. தூங்கி எழுந்திருக்கிறதே புது வாழ்க்கை தான் அப்டின்ற குறள் பத்தித் தெரிஞ்சுக்கிறார். “.... உறங்கி விழிப்பதுபோலும் பிறப்பு” என்ற குறளை ரசிக்கிறார். ஆனால் ஊருக்குத் திரும்பும் போது குட்டித்தூக்கம் போட்டு எழுந்திருப்பவர் புதிதாய் பிறக்கிறார், தூங்குவதற்கு முன் தமிழ்ப்ப்பாட்டு வேண்டாம் ..மலையாளப்பாட்டைப் போடச்சொல்லி அதட்டுகிறார். காலைச் சிற்றுண்டியில் தமிழர் சாப்பாடு பிடிக்காமல் முழுங்கி வைக்கிறார். ஆனால் தூங்கி எழுந்ததும் முழுத் தமிழனாக மாறி, வழியிலிருந்த ஒரு கிராமத்துக்குள் செல்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன் சந்தைக்குப் போய் திரும்பி வராத ஆளான சுந்தரமாக மாறி, கிராமத்தில் அதகளம் பண்ணுகிறார். தான் ஒரு தமிழன் .. அந்தக் கிராமத்தில்பிறந்து வளர்ந்தவன் என்று உறுதியாகச் சொல்கிறார். பழைய வழக்கத்தின் படி காலையில் பால் ஊற்றுவதற்கு ஊரெல்லாம் சுற்றுகிறார்.
கிராமத்து மக்களுக்கும் தலை
சுத்துது ... அவரோடு வந்த அவரது மலையாளக்
குடும்பத்தாருக்கும், உறவினருக்கும் தல
சுத்துது. பார்க்கப் போன நமக்கும் தல சுத்துது.
படத்தில் நான் மிகவும்
ஆச்சரியப்பட்ட விஷயங்களைத் தொகுப்பதற்குத்தான் இதை எழுதவே ஆரம்பித்தேன்.
முதல் விஷயம்:
நான் மலையாளப்பபடம் பார்ப்பதென்றால்,
அதில் கட்டாயம் subtitle இருக்கிறதா என்று
பார்ப்பேன். அதில்லாமல் மொழியை என்னால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாது. ஆனால் இந்தப் படத்தைப் பார்க்கும்போது
மலையாளத்து ஆட்களுக்கு நம்மை (என்னை) விட தமிழ் நன்கு புரியும் என்று தோன்றியது.
அதோடு நம்மூர் குப்பை நடிகர்களின் படங்களுக்குக் கேரள ரசிகர்கள் அதிகம் என்று வேறு
கேள்விப்பட்டிருக்கிறேன். “பாட்டி மொழி”
என்பதால் அவர்களுக்குத் தமிழ் நன்றாகப் புரிகிறதோ?
இரண்டாம் விஷயம்:
நம் தமிழ் நாட்டுப் பண்பாடு,
பழக்க வழக்கங்கள் எல்லாம் நன்கு தெரிந்து வைத்திருக்கிறார்
இயக்குநர். அதைவிட தமிழ்ப்படத்தில் எனக்குப் பிடித்த, ஆனால்
அதிகம் பிரபலம் ஆகாத சில நடிகர்களைச் சரியாகத் தேர்ந்தெடுத்து நடிக்க
வைத்திருப்பார். பூ ராமு, இன்னுமொரு நீள மீசைக்காரர், கொஞ்சம் ரெளடி லுக்
வைத்திருக்கும் ஒரு நடிகர் - இந்தப் படத்தில் சைக்கிளில் மம்முக்காவைத் தேடி
சுற்றுவார், சுப்ரமணியபுர்த்தில் வந்த காமெடி-வில்லன்
போன்றவர்கள் எல்லாம் வருகிறார்கள். சரியான தேர்ந்தெடுப்பு. ஆனால் இதில் மனைவியாக
வரும் ரம்யா பாண்டியனை நான் அடையாளம் காணாமலேயே இந்தப் படம் பார்த்து விட்டேன்.
வேறு சில ஆய்வுகளை வாசித்த பிறகே அவர் இப்படத்தில் வந்தார் என்பது எனக்குத்
தெரிந்தது.
மூன்றாம் விஷயம்:
ரீ ரிக்கார்டிங். ரீ ரிக்கார்டிங்
என்றால் பின்னணி இசை என்று தானே பொருள்? இங்கே
இசை ஏதுமில்லை. படம் முழுவதும் பின்னணியில் கிராமத்து ஆட்கள் வீட்டிலிருந்து வரும்
ரேடியோ, தொலைக்காட்சி பெட்டியிலிருந்து வரும் வசனங்களும்,
பாட்டுகளும் தான். எம். ஆர். ராதாவின் புரட்சி
வசனம், புராணக் கதைகள், பழைய சினிமா
பாட்டுகள்... என்று அடுக்கடுக்காய் பின்னணி இசையாக வருகின்றன. நம்முடைய
தமிழ்ப்படங்கள், அதன் தாக்கங்கள் எல்லாம் தெரிந்து அவைகளை இயக்குநர்
தேர்ந்தெடுத்திருக்கிறார். அந்த ரசனையும்,
மெனக்கெடலும் அதிக ஆச்சரியமளித்தது.
நான்காம் விஷயம்:
தேனி ஈஸ்வர். நல்ல D.O.P. அவர் வெறும் போட்டோகிராபராக இருந்து, காலெண்டர்களுக்குப் படம் எடுத்த காலத்திலிருந்து சினிமாட்டோகிராபர் ஆனதுவரை
எனக்கு அவரை மிகவும் பிடிக்கும். (தன் முதல் திரைப்படத்தில் அதிக ஏமாற்றம்
கொடுத்திருந்தார்.) அப்படத்தைத் தவிர்த்து விட்டால் அவரது தரம் பற்றி நன்கு தெரியும்.
மேற்குத் தொடர்ச்சி மலையில் அவரை அதிகம் ரசித்தேன். இந்தப் படத்திலும் அந்தக்
கிராமத்தையை நமக்கு அப்படியே அள்ளித் தந்திருப்பார். முதல் காட்சிகளில் பயங்கர
க்ளோஸ் அப் காட்சிகள். பின்னால் வருவது எல்லாமே வைட் ஆங்கிள் காட்சிகள்.
ஓரிடத்தில் ஒரு சீனில் இரண்டு வீட்டு சன்னல்கள் தெரியும். இடப்பக்கம் உள்ள
சன்னலில் ஜேம்ஸின் மலையாள மனைவி சோகத்தோடு
இருப்பது தெரியும். வலது பக்க சன்னல் சற்று உள்ளடங்கி தெரியும். அதில் சுந்தரனின் மனைவி
– ரம்யா கிருஷ்ணன் – தெரியும். ரசித்தேன். ஆனால் ஓரிடம் சுத்தமாகப் பிடிக்கவில்லை.
ரோட்டில் அவர்கள் வந்த வண்டி நிற்கும். வண்டிக்கு இப்பக்கமும் அப்பக்கமும்
முழுவதுமாக ஒரு விரிந்த சோளக் காடு. காமிரா பொட்டியை ஓரிடத்தில் நிலையாக நிற்கும்.
பஸ் முன் இருவர் பேசிக்கொண்டிருப்பார்கள்.
காமிராவை ஒட்டி இரு பக்கமும் இரண்டு சோளத்தட்டை கொண்ட இரு செடிகள் ஆடிக்
கொண்டிருக்கும். Very artificial. தேவையில்லாமல் அப்படி ஒரு Set
up. Both were so symmetrical. Appears very contrived.
இந்தப் படத்தில்
மூன்று முக்கிய புள்ளிகள்.
1. பின்னணி இசைக் கோர்வைகள்; 2. படப்பிடிப்பு –
ஒரு கிராமத்தைச் சுற்றிச் சுற்றி அலுக்காமல் எடுத்து, நம்மையும்
அந்தக் கிராமத்தோடு ஒட்டி விடுகிறார் ஈஸ்வர். 3. மம்மூக்கா. ரொம்ப டல்லான, சீரியசான, தமிழை வெறுக்கும் மலையாளத்து மனுஷன், ஜேம்ஸ் & சண்டியர்தனம் பண்ணும் முரட்டு தமிழ்
மனுஷன் - சுந்தரம். ரெண்டுமே இயல்பா இருந்ததைப் பார்க்க அத்தனை ஆச்சரியம். பெரிய
நடிகர் தான். நல்ல வேளை சூப்பர் நடிகரில்லை அவர்.
தூங்கி எழுந்த
கதாநாயகனுக்கு அனைத்தும் சரியாகி விட்டது. திரும்பி கூடப் பார்க்காமல் கிராமத்தை
விட்டு விலகி பஸ் நோக்கி முதல் ஆளாய் நடக்க ஆரம்பித்து விடுகிறார். சுந்தரத்தின்
குடும்பத்தைப் பார்த்து, ஜேம்ஸின் மனைவி கும்பிட்டு விடை பெறுகிறார். சுந்தரம் குடும்பம் அங்கே
நிற்பதைப் பார்க்கும் போது நம்மையறியாமல் அவர்கள் மேல் பாசமும் இரக்கமும்
பீரிடுகிறது.
கடைசியாக ஒரு
சந்தேகம்: இந்தப் படத்தை ஒரு magical
fantasy என்று வகைப்படுத்தலாமா? ஏன்னா .. என்னன்னே
தெரியலை. எப்படி ஜேம்ஸுக்கு அந்த ஊரு, அந்த ஆளு சுந்தரம்,
அவரது பழக்கவழக்கங்கள் எல்லாம் தெரிந்தது. சுந்தரம் ஆவி அவர் மேல் இறங்கி
விட்டதா? என்ன ஆச்சு? எப்படி ஆச்சு?
அல்லது பலரும் சொல்வது போல் இது ஒரு குறியீட்டுப்படம் ... அல்லது இன்னும் என்னென்னமோ சொல்வாங்களே ... அது
மாதிரி படமா?
Tuesday, February 21, 2023
1215. இருமலோடு ஒரு தொடர் போராட்டம் (கொரானா - 5)
அதென்னமோ, வயசாகிப் போச்சா .. இப்போவெல்லம் தடுமன் பிடித்தால் அது என்னை விட்டு
விட்டுப் போக அதற்கு மனதே வருவதேயில்லை. என்னுடனே தொடர்ந்து இருந்தே ஆக வேண்டுமென்
அடம்பிடித்துக் கொண்டு மாதக்கணக்காக என்னோடு ‘living together’ ஆக இருந்து விடுகிறது. எத்தனை விரட்டினாலும் விடுவதாயில்லை. நானும்
வகைவகையாக விரட்டிப் பார்த்து விட்டேன். பாட்டி வைத்தியத்தில் ஆரம்பித்து, ஹோமியோபதி பக்கம் போய்,
அங்கிருந்து அப்படியே குறுக்குச் சால் ஓட்டி, அல்லோபதி போய் மறுபடி பாட்டி
வைத்தியத்திற்குத் திரும்பி வந்து ... சாமி,,, போதுமப்பா போதும் என்று சொல்லும்
அளவிற்கு இருமித் தீர்த்தாகி விட்டது.
எங்க காலத்தில் மருந்து
சாப்பிட்டாஒரே வாரத்தில் ஜல்த் சரியாகி விடும்; இல்லையென்றால்
ஏழு நாள் ஆகிவிடும் என்று சொல்லும் அளவிற்குத் தான் தடுமனும், இருமலும் இருந்து வந்தன. மனித ஆயுள் நீட்சி போலவே இப்போது வியாதிகளும்
தொடர்ந்து நம்மோடு ஒட்டி உறவாட ஆரம்பித்து விட்டன போலும். அதுவும் கடந்த இரண்டு மூன்று வருஷமாக உள்ள ‘கொரோனா காலத்தில்’
தடுமன், இருமல், காய்ச்சல்,
மேல்வலி என்றாலே கொரோனா தானோன்னு அப்படியே மனசுக்குள்ள டைட்டில்
ஓடுது. ஏற்கெனவே மருத்துவமனையில் இருந்து அனுபவித்த காட்சிகள் எல்லாம் டைட்டில்
கார்ட் மாதிரி ஒவ்வொண்ணா ஓடியாருது. அதனால நாடித் துடிப்பு, ரத்தத்
துடிப்புன்னு எல்லாவற்றையும் ஏறுமுகத்திற்குக் கொண்டு போகுது.
இப்படித்தான் மூணு நாலு வாரத்த்ற்கு
முன் ஆரம்பித்தது எனது இருமல் போராட்டம். இந்த தடவை இருமல் போவதற்கு இன்னும்
அதற்கு முழுசாக மனம் வரவில்லை. ஆனாலும் இந்தக் கால கட்டத்தில் பல புது விஷயங்கள்
அனுபவங்களாக விரிந்தன. இருமல் வரும்; இருமுவேன்
... சரி .. அதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். புதிதாக சில வித்தியாசமான
அனுபவங்கள். ஏறத்தாழ இருமல் ஆரம்பித்து இரண்டாம் வாரத்தில் தூக்கத்தைக் கெடுக்கும்
அளவிற்குத் தொடர்ந்த இருமல். இருமல் வந்ததும் எழுந்து உட்கார்ந்து இருமல்...
படுத்ததும் மீண்டும் இருமல். சரியென்று படுக்காமல் உட்கார்ந்திருந்தால் இருமலைக்
காணோம். இது ஒரு புதுவகைத் தொந்தரவாக இருந்தது. அடுத்து அதனோடு இணைந்து இன்னொரு
புது அனுபவம். இருமலோடு சேர்ந்து தூங்கினாலும், அதனோடு
தொடர் கனவுகள் வந்து கொண்டிருந்தன. எல்லாமே கலர் கனவுகள் .. அதையும் விட எல்லாமே 3D கனவுகள். கனவுகள் நடந்து கொண்டிருக்கும். இருமலில் முழித்தால் தொடர்ந்து
இருமி முடித்துப் படுத்ததும், மிகவும் சரியாக விட்ட
இடத்திலிருந்து கனவுகள் தொடரும். கனவுகள் மாதிரியே இல்லாமல் எல்லாமே உண்மைகள்
என்பது போன்ற அனுபவம்.
இதிலும் சில experiments
செய்து பார்த்தேன். கனவுக் காட்சிகள் அத்தனை நிஜமாக இருந்தன.
தொடர்ச்சியும் மிகச் சரியாக இருந்தது. நான்
ஒன்றைச் சோதித்துப் பார்த்தேன். கனவு வந்ததும் கண் விழித்துப் பார்த்தேன். கனவு
மறைந்தது. உடனே கண் மூடிப் படுத்தேன். கனவில் கண்டது நினைவில் தெரிந்து, கனவும் தொடர்ந்தது. அதுவும் என் கண் ரெக்கைகளுக்குப் பக்கத்திலேயே அந்த
கனவுருவங்கள் இருந்தன. கைநீட்டித் தொட்டுவிடலாம் போல் இருந்தது. அத்தனை அருகே !
அத்தனை நிஜம்! செடிகள், கட்டிடங்கள் என்று எல்லாமே அத்தனை
தத்ரூபம்.
இது ஒரு பக்கம். இன்னொரு பக்கம், இப்போதெல்லாம் அடுத்த நாள் ஏதாவது செய்யவேண்டுமென்று திட்டமிட்டால் தொடர்
கனவுகளில் திட்டங்களே வந்து கொண்டிருக்கும். அதிலும் ஏதாவது எழுத வேண்டும் என்று
நினைத்தால், என்ன எழுதுவது என்றும், எந்த
வார்த்தைகள் பயன்படுத்தினால் நன்றாக இருக்கும் என்றும் அந்த “நினைவுகள்” வரும்.
இம்முறையிலும் இருமலைப் பற்றியெழுத
வேண்டும் என்று நினைத்துப் படுத்த நாட்களில் வந்த கனவுகள் இருமலைப் பற்றியும் அதன்
தொடர்பான பலவும் கனவின் நினைவில் வந்தன.
இருமல் தொடர்ந்து அல்லல்படும் போதெல்லாம்
தன்னையறியாமல் வாயிலிலிருந்து ‘அம்மா, அப்பா’ என்ற வார்த்தைகள் முனகல்களாக வரும். எல்லோருக்கும்
இது வழக்கம் தான். ஆயினும் எதற்காக இந்த வார்த்தைகள் மட்டும் எனக்கு வரவேண்டும்
என்று நினைத்தேன். ஒரு வேளை மலையாளக்காரனாக இருந்தால், ‘அம்மே...
அச்சா” என்று முனகியிருந்திருப்பேனோ? தெரியவில்லை. சரியென்று
மற்ற மொழிக்காரர்கள் எப்படி முனகுவார்கள் என்று தூக்கத்திலேயே நினைத்துப் பார்த்தேன்.
எப்படி என்று தெரியவில்லை. உதாரணமாக, ஆங்கிலேயர்கள் ‘Oh
my mum, Oh my dad” என்றா முனகியிருப்பார்கள்?
சான்சே இல்லை. ஒரு வேளை Oh my god என்று சொல்லலாம்.
கடவுளும் வேணாம்னு நினச்சா எப்படி ஆங்கிலத்தில் முனகுவது? அதே
போல் எனக்கும் அம்மா, அப்பா என்று அனத்துவது பிடிக்காமல் போயிற்று.
பெத்த அம்மா சின்ன வயசிலேயே ‘எப்படியோ இரு’டே’ அப்டின்னு சொல்லிட்டு
டாடா காண்பிச்சிட்டு, செத்துப் போச்சு ... வளர்த்த அம்மா கடைசியில
செமயா வச்சி செஞ்சிட்டுப் போச்சு ... அப்பா .. வழக்கம் போல , எல்லா ரெண்டு கல்யாணம் பண்ற ஆம்பிளைங்க வழக்கமா செய்றதை - தசரத மகாராசா மாதிரி - அப்படியே முழுசா செஞ்சி வச்சிட்டுப் போய்ட்டாரு. பிறகு எதுக்கு
அப்பா.. அம்மா...ன்னு அனத்தணும்னு தூக்கத்திலேயே தோன்றியது. வீட்டுக்கார அம்மா தன்
அப்பா அம்மாவைக் கூப்பிடுவதை விட கர்த்தரைக் கூப்பிடுவார்கள். நமக்கு அதுவும் சரிப்பட்டு
வராது. ஆக சோகத்தில் எப்படி அனத்துவது என்பது பற்றியும் நினைவிலும் கனவிலும் யோசிச்சாச்சு... முடிவு தான் தெரியலை.
எப்படியோ மூன்று வாரம் தாண்டியதும்
பறிபோன தூக்கம் திரும்பி வந்திருச்சி. இதெல்லாமே ஏறத்தாழ கனவில் வந்து போன நினைவுகள்.
அப்போதே எழுத நினைத்தும் எழுத முடியாமல் போனவை. ஓரளவு நினைத்ததை rewind செய்து tinker வேலை பார்த்து எழுதியிருக்கிறேன். ஆனாலும்
...
இருமல் இன்னும் கொஞ்சம் பாக்கியிருக்கிறது.