*
அதீதம் இணைய இதழில் வந்த என் கட்டுரையின் மறு பதிப்பு ...
*
1955 - ‘58 ....
St. MARY'S CHURCH |
*
நம்ம கணக்குப் புலியைப் பற்றி சொல்றதுக்கு முன்னால் இன்னொரு பழைய கணக்கு வழக்கு பற்றி உங்களுக்குச் சொல்லணுமே .. இப்போவெல்லாம் +2-ன்னு பன்னிரண்டு வருஷம் படிக்கிறாங்களே .. நாங்க படிக்கும் போது +1 - பதினோரு வருஷம் தான் இருந்திச்சி. அதாவது பள்ளிக்கூடப் படிப்பு 5+6=11 வருஷம் தான். அதில் முதல் ஐந்து ஆண்டுகள் சின்னப் பள்ளிக்கூடம் .. அதாவது எலிமெண்டரி பள்ளிக்கூடம் / ஆரம்பப் பள்ளி. I to V Standards வரை அந்தப் பள்ளியில். அடுத்து உயர்நிலைப் பள்ளி. அதில் I to VI Forms. ஆறாவது ’பார்ம்’ முடிப்பது S.S.L.C. தேர்வுகளோடு. அதன்பின் கல்லூரியில் P.U.C. அடுத்து பட்டப் படிப்புகள்.
St. MARY'S Hr. .Sec. SCHOOL |
எந்த வகுப்பிலிருந்து சூரிய நாராயணன் எனக்கு வகுப்புத் தோழனாக இருந்தானென்று நினைவில்லை. ஆனால் III, IV & V பார்ம் படிக்கும் போது உடன் இருந்தது நலலா நினைவில் இருக்கிறது. இந்த மூன்று பார்ம்களில் முதல் இரண்டு வருஷமும் எனக்கும் அவனுக்கும் போட்டியிருந்தது. எனக்கு எப்பவுமே ஒரு ராசி. உடன் படிக்கும் மாணவர்களிடமும், ஆசிரியர்களிடமும் ந்ல்ல பெயர் .. நல்லா படிக்கிற பையன் என்று பெயர் இருக்கும். ஆனால் தேர்வுகளில் அப்படி ஒண்ணும் சொல்லிக்கிறது மாதிரி இருக்காது. கடைசி வரை இப்படி தான். ஆனால், அது இந்தக் கணக்குப் பாடத்தில் ஆரம்பத்திலேயே கோணலாப் போச்சு.
மூன்றாம் பார்ம், அதாவது 8 வது வகுப்பில் இருக்கும் போது கணக்குக்கு எங்களுக்கு வந்த ஆசிரியர் பெயர்: சவுக்கடி சவரிமுத்து. கீழே வேட்டி. மேலே சட்டை போட்டு கோட்டு போட்டிருப்பார். அவர் கோட்டுப் பைக்குள் ஒரு சவுக்கு வைத்திருப்பார்; அதை வைத்து அடிப்பார் என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால் நான் அவரிடம் எந்த சவுக்கும் பார்த்ததில்லை. கேட்டால் முன்பெல்லாம வைத்திருந்தார் என்று சீனியர்கள் சொல்லி விடுவார்கள். அவருக்கு நானும், சூரிய நாராயணனும் செல்லப் பிள்ளைகள். ஏன்னா ... அம்புட்டு நல்லா கணக்கு போடுவோம். எங்க கணக்குப் புத்தகத்தில் ஒவ்வொரு அத்தியாயத்திலும் 16 கணக்குகள் இருக்கும். அதற்கு முன்னால் இரண்டு மாதிரி கணக்குகள் இருக்கும். அந்தப் பதினாறு கணக்குகளில் முதல் மூன்றும் மிக எளிய கணக்குகளாக இருக்கும். கடைசி மூன்றும் மிகவும் கஷ்டமான கணக்குகளாக இருக்கும். ஒவ்வொரு கணக்கிலும் ஏதாவது ஒரு ‘பொடி’ இருக்கும்.
சவுக்கடி சார் வழக்கம் என்னன்னா, மாதிரி கணக்கை முதலில் சொல்லித் தருவார். அதன்பின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் உள்ள முதல் இரு கணக்குகளும், கடைசி மூன்று கணக்குகளும் போடச் சொல்வார். நானும், சூரிய நாராயணனும் எப்போதும் வகுப்பை விட நாலைந்து அத்தியாயங்கள் முன்னால் போயிருப்போம். சாரும் எங்களைப் பார்த்து ’என்னடா .. இந்த அத்தியாயம் முடிச்சிட்டீங்களா?’ன்னு கேப்பார். நாங்க ஆமான்னு சொன்னதும் எங்களைக் கண்டுக்க மாட்டார். அதன்பின் ஒவ்வொரு கணக்குகளையும் அவர் சரி பார்க்கும் போது, எங்களைப் பார்த்து, ‘சரியா போட்டிருக்கீங்களா?’ன்னு கேப்பார். நாங்க ‘ஆமா’ன்னு சொன்னதும் தலையை ஆட்டுவார். அப்படி ஒரு ராஜ வாழ்க்கை....
எனக்கு கணக்கு போட ரொம்ப பிடிக்கும். (இப்ப கூட மனக்கணக்கெல்லாம் போட பிடிக்கும். ஒரு ‘டேஸ்ட்’ அதில் உண்டு.) அதுல இப்படி ஒரு போட்டியா? ரொம்ப ஜாலியா போட்டி போட்டுட்டு பண்ணிக்கிட்டு இருப்போம். அது எங்களிடையே நல்ல நட்பையும் வளர்த்திச்சு. இந்தப் போட்டி ஆங்கிலத்திலும் இருந்தது. அதிலும் இலக்கணம்னா ரெண்டு பேத்துக்கும் ரொம்ப பிடிக்கும். (கணக்குக்கும், ஆங்கில இலக்கண அறிவுக்கும் முழுக் காரணம் எங்க அப்பாதான். கணக்கிலேயும், ஆங்கிலத்திலேயும் பயங்கர வாத்தியார். பள்ளிக் கூடத்திலே அப்பாவுக்கு ரொம்ப பேரு .அப்பாவும் எங்க புனித மரியன்னை உயர்நிலைப்பள்ளியில் தானே வேலை பார்த்தார்கள்.) அப்போவெல்லாம் இப்போது மாணவர்களைக் கெடுக்கிற ‘பயிற்சிப் புத்தகம்’ எல்லாம் கிடையாது. புத்தகத்தில் உள்ள கேள்வி, பதில்கள் தான். ஆனால் கணக்கு மாதிரி இதில் வகுப்புக்கு முன்னால் போவது என்பது இருக்காது.
இப்படி மூன்றாம் பார்மிலும் நான்காவது பார்மிலும் எனக்கும் சூரிய நாராயணனுக்கும் நடுவில் இரண்டு பாடத்திலும் எங்கள் வகுப்பின் முதல், இரண்டாம் இடத்திற்கான போட்டியிருந்தது. நான்காவது பார்ம் கணக்காசிரியர் நினைவில் இல்லை. வாழ்க்கை இப்படி நல்லா போய்க்கொண்டிருந்த நேரத்தில் ஐந்தாம் பார்ம் வந்தோம். இப்போது இருப்பது போல பல பிரிவுகள் அப்போது கிடையாது. ஆனால் ஒரே ஒரு பிரிவு உண்டு. கணக்குப் பாடத்தில் மட்டும் General maths & composite maths என்று இரு பிரிவுகள் இருக்கும். கணக்கு வராத கேசுகளுக்கு முதல் பிரிவு. கணக்குப் புலிகளுக்கு இரண்டாவது பிரிவு. என் தலைவிதி முழுவதுமாக மாறியதற்கு இப்பிரிவு ஒரு பெரிய காரணம்.
அந்தக் காலம் மாதிரியே பள்ளியின் முன்னே இன்னும் ஒரு கடை. | காலங்கள் மாறுவதில்லை! |
நானும் composite maths எடுத்தேன். General maths மாதிரி இல்லாமல், இங்கு அல்ஜீப்ரா, ஜ்யோமெட்ரி, தியரம், ரைடர் என்று என்னென்னமோ இருந்தது. வகுப்புக்கு வந்த ஆசிரியர் யாகப்பன். ஒல்லியா, உயரமா இருப்பார். டை இல்லாமல் கோட், பாண்ட்ஸ் என்று வருவார். அவர் வகுப்புக்கு வந்ததும் நான் அவருக்கு வைத்த பட்டப் பெயர்: ஆப்ரஹாம் லிங்கன். அவரு மாதிரியே இவரும் இருந்ததார். முதல் நாள் முதல் பெஞ்சில் இருந்த நான் மெல்ல அவர் கோட்டை ஒரு ஓரத்தில் பிடித்து இழுத்தது நினைவில் இருக்கிறது. முதலில் ரொம்ப லைட்டாக அவரை எடுத்துக் கொண்டேன். ஆனால் விதி அவர் மூலமாக வேறு மாதிரி என்னைப் பார்த்து பயங்கரமாகச் சிரித்தது.
யாகப்பன் புதியதாக வந்த ஆசிரியர். என் அப்பாவிற்கும் அவருக்கும் நன்கு பழக்கம். ஆக யாகப்பன் என்னைத் தன் ‘செல்லப் பிள்ளை’யாக நினைக்க ஆரம்பித்து விட்டார். அதுவே எனக்கு கணக்கில் மங்களம் பாட ஆரம்பித்து விட்டது. பார்ப்பதற்கு முதலில் சாதாரணமாகத் தோன்றிய யாகப்பன் சரியான ஸ்ட்ரிக்ட் வாத்தியார். நீளக் கையை நீட்டி, விரல்களை மடக்கி குட்டுவதற்குத் தயாராக என் தலை மீது கையை வைத்துக் கொண்டு என்னிடம் கேள்வி கேட்பார். அதாவது, அது தான் அவரது செல்லப்பிள்ளைக்கு அவர் கொடுக்கும் பரிசு. அவர் கேள்வி கேட்கும் போது கேள்வி மனசுக்குள் இறங்காது. அவரது கொட்டுதான் என் மண்டைக்குள் இறங்கும்.
என்ன பிரச்சனைன்னா, சிறு வயதிலிருந்தே மனப்பாடம் பண்ற ‘அருட்சக்தி’ என் பக்கம் வந்ததேயில்லை. மனப்பாடப் பகுதின்னாலே நான் முழுசா அவுட்! ஆனால் composite maths-ல் நிறைய மனப்பாடப் பகுதிகள் இருந்தன. தியரம் - ஒரு வார்த்தை மாறாமல் மனப்பாடமாக அதைப் படிக்கணுமாம். அதப் படிச்சாதான் ரைடர் போட முடியுமாம். அல்ஜீப்ரா ... கடவுளே ... (a+b)2-க்கு விடை மனப்பாடம் பண்ணினேன். ஆனால் (a+b)3-க்கும், (a+b+c)2-க்கும், (a+b+c)3-க்கும் நானெங்கே போவது! மனசுக்குப் பிடிச்ச கணக்கு இப்போ முழுசுமா பிடிக்காம போச்சு. ஒண்ணும் ஏறலை. ஏறத்தாழ இது என் படிப்பு முழுசையுமே சுனாமியா தாக்கியிருச்சி. என்னமோ தேத்தினேன். சூரிய நாராயணன் நட்பும் குறைஞ்சி போச்சு. S.S.L.C.-ல் ஏதோ .. எப்படியோ ...மார்க்கமில்லாத மார்க் வாங்கி தேறினேன்.
ஒன்பதாம் வகுப்பு வரை வகுப்பில் I was somebody; ஆனால் என் கணக்கு ஆர்வம் போனபின் I became a nobody. இது என் மேல் படிப்பையும் நிறைய மாற்றியது. அங்கும் நினைத்ததைப் படிக்க முடியாத parental pressure. எப்படியோ வண்டி ஓடி ... இங்க வந்து பரிதாபமா நிக்குது! எப்படி இருந்த நான் composite maths-யினால் இப்படி ஆகி விட்டேன்!
சூரிய நாராயணன் நல்லா படிச்சி, S.S.L.C. முடிச்சதும் என்ஜியனீரிங் கல்லூரியில் சேர்ந்தது தெரியும். அவனது வீடு எங்க பள்ளிக் கூடத்திலிருந்து நேரே போனா .. சிந்தாமணி தியேட்டர் வரும். இன்னும் கொஞ்ச தூரம் போனதும் அம்சவள்ளி பிரியாணி கடை.
சூரியின் வீடு .... இங்கே தான்... |
அதைத் தாண்டியதும் முனிச்சாலை ரோடு வருமே .. அந்த தெரு முக்கில் தான் அவன் வீடு. ஒரு ஸ்ப்ரிங்க் கதவு போட்டிருக்கும். நான் கல்லூரி படிக்கும் காலத்தில் அவன் வீட்டுக்குப் போய் அவனைப் பார்க்க வேண்டும் என்று ஒரு ஆசை வரும். ஆனால் அவன் என்ஜினீயர்.... நம்ம சாதா டிகிரி ... அப்டின்னு மன்சுக்குள் ஒரு எண்ணம் ஓடும். அப்படியே உட்டுட்டேன்.
அவன் நிச்சயமா பெரிய ஆளா ஆகியிருந்திருப்பான்.
நல்லா இருடே .. !
*
3 comments:
Church brown colorla thane irundhuchu ?
கலர் மாத்தியாச்சு ... அதான் போட்டேன்.
An affair to remember என்றொரு பழைய படம். Deborah Kerr நடித்தது. கதாநாயகன் நினைவில்லை.
அந்தப் படத்தில் ஒரு காட்சி. மத்தியதரைக்கடல் அருகிலுள்ள ஒரு சிறிய ஊருக்கு தன்னுடைய பாட்டியைப் பார்க்கப் போகிறான் கதாநாயகன். அப்போது பாட்டியிடம்... பழைய நினைவுகளை அசைபோட வந்திருப்பதாகச் சொல்கிறான். அதற்கு அந்தப் பாட்டி.. "first build your memories. then at my age you can recall" என்பது போன்ற வசனத்தைச் சொல்வார்.
நிறைய நினைவுகள் உங்களைச் சுற்றி சுற்றி வருகின்றன போல. நல்ல நண்பர்களையெல்லாம் நினைத்துப் பார்க்கின்றீர்கள். :)
அதாவது, நல்ல நினைவுகள் இருந்தால்தான் அதை நினைத்துப் பார்க்க முடியும். இளமை நல்லபடி இருந்தால்தான் அது சாத்தியம்.
Post a Comment