Thursday, December 01, 2022

1201. FIFA '22 ARGENTINA vs POLAND





* 

அந்தக் காலத்தில எல்லாம் ... டென்னிஸ், கால்பந்து போட்டிகள் நடக்கும்போது என்னையறியாமல் சத்தமாகக் கத்தி விடுவேன்; அல்லது பலமாக கையை, காலைத் தட்டிக் கொள்வேன். தூரத்திலிருந்து பாஸ் என்னன்னு கோவமா கேப்பாங்க. ஒண்ணுமில்லை... நல்லா டென்ஷனா இருந்துச்சுன்னு சொல்லிட்டு அசடு வழிவேன். ஆனால் இந்த தடவை இரண்டே இரண்டு தடவை மட்டும் அப்படி நடந்திச்சு.

ஸ்ருதி சரியா சேரலையோ? விளையாட்டுப் போட்டியே அப்படி சுருதி இறங்கிப் போனது மாதிரி தோணியிருச்சு. அவங்க விளையாட்டு முந்தி மாதிரி இல்லையா அல்லது நமக்கு வயசாகிப் போச்சே அதுனால நம்ம சுருதிதான் இறங்கிப் போச்சோன்னு ஒரு எண்ணம் வந்தது. அதே நேரத்தில் மதுர நண்பர் ஒருவரும் இதே மாதிரி சொன்னார். அவரும் sailing in the same ஓட்டை boat! Common factor பார்த்தா எங்க வயசுதான் காரணமாயிருக்கும். இருந்தாலும் பூமர் அங்கிள்கள் யாராவது இந்தத் தீர்ப்பை சரி அல்லது தப்புன்னு சொன்னா ரொம்ப நன்னியோடு இருப்பேன் / இருப்போம். Okay, Pri?

முந்தா நாளும் நடு ராத்திரியும் ஆட்டம் பார்க்க தேவுடு காமிச்சாச்சு. காலையில் என்னமோ சாமி வந்து இறங்கி, எழுப்பி விட, மகா ஆத்திரத்தோடு 5-8 மணி வரை எழுத்து வேலையை அப்படியே கடமை தவறாத கந்தசாமி  மாதிரி உக்காந்து எழுதியாச்சு. மத்தியானம் ஒரு தூக்கம் போட்டிருக்கலாம். மதிய போட்டியையும் தேவுடா என்று உட்கார்ந்து பார்த்தாச்சு. இப்படி இருந்தா நேற்று இரவு போட்டியை நடு ராத்திரி உக்காந்து மனுஷன் பார்க்க முடியுமா? நானும் மனுஷன் தான்னு என்னைப் போட்டுப் படுத்திய தூக்கம் நிருபித்து விட்டது.

ஆட்டத்தின் முதல் பாதியின் முதல் பாதி வரை தூக்கத்தோடு பார்த்தேன். பாத்துக்கிட்டு இருக்கும் போதே சாமி வந்து ஏறிடும். அப்புறம் டப்புன்னு அது இறங்கி முழிக்கும் போது டிவியைப் பார்த்தா அர்ஜென்டினா ஆட்கள் அம்புட்டு பேரும் போலந்து கோலைச் சுத்தி நின்னுக்கிட்டு இருப்பாங்க. அப்ப வந்திச்சு அர்ஜென்டினாவிற்கு ஒர் பெனல்டி. இந்த VAR ரொம்ப பொய் சொல்லுமோ? கோல் விழாம இருக்க கோல் கீப்பர் உயரமா தவ்வுறாரு ... சரி. அதே மாதிரி கோல் போட போன மெஸ்ஸி என்ற குட்டைக் கத்திரிக்காயும் தவ்வுறாரு. மோதிக்கிறாங்க .. இதில் என்ன foul? ஒரு நியாயம் வேணாமா? இந்த தகறாரில் நான் நன்றாக முழித்து விட்டேன்.. அதனால் விழித்தும் பார்த்தேன். எனக்கு பெனல்டி கொடுத்தது தப்பாகத் தோன்றியது. Anyway umpire’s discretion and judgment! என்ன பண்ண முடியும்?

நம்ம ஆளு மெஸ்ஸி கோல் அடிக்க வந்தார். ஏற்கெனவே முதல் போட்டி பெனல்டியில் கவுத்துட்டாரேன்னு நினச்சேன். அதே மாதிரி இந்தத் தடவையும் கவுந்து போச்சு. போலந்து கோல் கீப்பருக்குக் கை தட்டணும். அத்தனை வேகமாக வந்த பந்தை வெளியே தள்ளி விட்டுட்டார்.

இதில் எனக்கொரு சந்தேகம். பொதுவாக, பெரிய புள்ளிகள் பெனல்டி அடிக்கும் போது கோல் கீப்பர்கள் பந்தை எதிர்பார்த்து ஒரு பக்கம் சாய ஆரம்பிக்கும் போது அடுத்த பக்கம் பந்தை அடித்து விடுவார்கள். அந்த டெக்னிக் எப்படி என்பது எனக்குத் தெரியாது. “7” ரொனால்டோ போன தடவை அடித்த பெனல்டியில் அப்படித் தான் நடந்தது.  ஆனால் இந்த தடவை மெஸ்ஸி அடிக்கும் போது போலந்து கீல் கீப்பார் மிகச் சரியாக எதிர்பார்த்து பந்தைத் தட்டி விட்டுவிட்டார். பெனல்டியால் எனக்கு  ஒரு லாபம் ... தூக்கம் முற்றிலும் கலைந்து விட்டது.

ஆனால் இரண்டாம் பாகத்தில் அர்ஜென்டினா ஒரு கோல் போட்டாலும் போட்டார்கள். அதன்பிற்கு ஒரு மகா மோசமான “ஜவ்வு” ஆட்டம் ஆட ஆரம்பித்து விட்டார்கள். அதாவது மைதானத்தின் நடுக்கோட்டிற்கும்  போலந்து கோல் பெனல்டி ஏரியாவிற்கும் நடுவில் உள்ள இடத்தில் ஏறத்தாழ அனைத்து அர்ஜென்டினா ஆட்டக்காரர்களும் வந்து ஆணியடித்து நின்று விடுவார்கள். போலந்து ஆட்கள் பந்து எடுக்க வரும்போது இவர்கள் நால்வர் அல்லது மூவர் சேர்ந்து ... நாங்கெல்லாம் குரங்குப் பந்துன்னு அந்தக் காலத்துல விளையாடுவோமே ... அது மாதிரி மாத்தி மாத்தி பந்தை அடிச்சிக்கிட்டு இருப்பாங்க. நான் வேற தூங்கி ரொம்ப ஃப்ரெஷ்ஷா இருக்கிறேனா ... தாங்க முடியவில்லை. மனசுக்குள்ள நினச்சிக்கிட்டேன்... பைனல் போட்டியில ப்ரேசில் கூட இப்படி இவங்க இதே மாதிரி விளையாடினால் நான் எழுந்திருச்சி போயிருவேன். இத அவங்க கோச் லயனல் கிட்டேயும் சொல்லணும் போல இருந்திச்சு.

ஆனா ஒரு சந்தோஷம். என்னன்னா என்னை மாதிரியே இன்னொரு ஆளுக்கும் இதே கோபம் வந்திருக்கும் போல. அது யாரு தெரியுமா? நம்ம மெஸ்ஸி தான். இந்த மாதிரி அவங்க ஆளுக குரங்கு பங்கு விளையாடும் போது மெஸ்ஸி பக்கம் பந்து வந்ததும் அவர் பந்தை எடுத்துக்கிட்டு போலந்து ஆட்கள் கூட்டத்துக்கு நடுவில் பாய்ந்து பந்தை எடுத்துச் சென்றார். எனக்கு அதுனால மெஸ்ஸி மேல் இன்னும் அதிகமா லவ் வந்திருச்சு. நல்லா அடித்தார் .. கோல் விழாமல் போனது. ஆனால் 20, 22  சட்டை போட்ட ஆட்கள் ஆளுக்கொன்றாக இரண்டு கோல் போட்டு அர்ஜென்டினா வென்றது.

மெத்த மகிழ்ச்சி.

எனக்கு அர்ஜென்டினாவில் டி மரியான்னு ஒரு ஆளு...நெட்ட நெடுன்னு இருந்தார். அவர் ஆட்டம் எனக்குப் பிடித்தது. ஆனாலும் லயனல் ஏனோ அவரை முதல் பகுதியோடு வெளியே எடுத்து விட்டார்.  யாராவது லயோனலிடம் சொல்லிவிடுங்களேன் ....

 

 

 

 

 

 

 

 

 













*


No comments:

Post a Comment