Saturday, December 10, 2022

1205. FIFA, 22 FALL OF BRAZIL




*

                                                      

                                                                 தியான் சந்த்


ஹிட்லர் இருந்த காலத்தில் அவர் நமது ஹாக்கி விளையாட்டு வீரர் (ஹாக்கியை, வளைதடி விளையாட்டு என்று சொல்லணுமாமே. வேண்டாம் ஹாக்கியே இருக்கட்டும்!) தியான் சந்தின் ஹாக்கி மட்டையை வாங்கிப் பார்த்ததாகச் சொல்வார்கள். எப்படி அவர் மட்டையோடு பந்து ஒட்டிக் கொண்டு போகிறதே என்ற ஆச்சரியம் ஹிட்லருக்கு என்று சொல்வார்கள். அதோடு அவரை ஜெர்மனிய குடிமகனாக ஆக்குவதற்கும் தயாராக இருந்தாராம் ஹிட்லர். தியான் சந்த் மறுத்து விட்டாராம். இதெல்லாம் வாசித்தது. எந்த அளவு உண்மை என்பது தெரியாது. ஆனால் எல்லோருக்கும் தெரிந்த அளவிற்கு தியான் சந்த் குழுவினர் 1938ம் ஆண்டு ஒலிம்பிக்கில் ஜெர்மனியை 10:1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தனர்.1928 -1964 ஆண்டு வரை 8 இறுதி ஆட்டங்கள் ஆடி அதில் 7 ஆட்டங்களில் தங்கம் வென்றனர். 1964ம் ஆண்டு முதல் முதலாக நான் சென்னை வந்த போது தொலைக்காட்சிப் பொட்டியில் முதல் ஹாக்கி போட்டியைப் பார்த்தேன். அதன்பின் 1980ல் ஒரு மெடல் வாங்கினாலும் 1964 ஆண்டோடு நமது ஹாக்கி சகாப்தம் முடிவடைந்தது.

ஹாக்கி மைதானம் செயற்கைப் புல் வெளியோடு மாறியது, வெள்ளைத்தோல்காரர்கள் புதிய வேகத்தோடு விளையாட ஆரம்பித்து அதனால் மாற ஆரம்பித்த மாற்றங்கள் அனைத்தும் அவர்களுக்குச் சாதகமாக இருந்தது, உடம்பு வலிமை அவர்களுக்கு அதிகமாக இருந்தது ... என்று பல காரணங்கள் சொல்வார்கள். ஆனாலும் நாம் இழந்தது இழந்ததே. அந்த சகாப்தம் இனி வரப் போவதேயில்லை.

ப்ரேசில் ஐந்து முறை வென்றது மட்டுமல்ல; அந்த டீம் பொதுவாகவே இந்திய மக்களின் dream team. மரடோனாவிற்குப் பிறகு அந்தப் பட்டியலில் அர்ஜென்டினாவும் சேர்ந்து கொண்டது. பீலே, ரொனால்டோ, ரொனால்டின்கோ, கார்லோஸ், நெய்மர் என்று ப்ரேசிலும், மரடோனா, மெஸ்ஸியும் அர்ஜென்டினாவின் வீரர்களாகவும்,போர்ச்சுகல்லின் கிறிஸ்டியானோவும் நமது நாட்டுக்குப் பிடித்த வீரர்களாகவும் இருந்து வருகிறார்கள். வழக்கமாக ப்ரேசில் நாட்டு வீரர்கள் போடும் குத்தாட்டம்’ /சம்பா நடனம் நாம் எல்லோரும் அறிந்த ஒன்றாக இருந்தாலும் இந்த முறை அந்த ஆட்டமும், ப்ரேசில் கால்பந்தாட்டப் பண்பை உச்சத்திற்கு வளர்த்து விட்டிருப்பதும், அவர்களின் ஆட்டத்தைப் பார்ப்பதே ஒரு பெரும் திருவிழா போல் இருக்கிறது என்றும் இந்த ஆண்டு அத்தனை புகழப்பட்டு உச்சத்தில் அவர்கள் இருந்ததோடில்லாமல் இந்த ஆண்டு நிச்சயம் அது இறுதி வரை வந்து தங்கக் கோப்பையையும் வென்று விடும் என்றும் நம்பப்பட்டது; நானும் நம்பினேன் முழுமையாக.

ஒரு வேளை எனக்கு  பீலே ஒரு காரணமாக இருந்திருக்கலாம். அவரால் ப்ரேசில் மீது ஒரு காதல். அதனால் அந்த நாடு வெல்ல வேண்டுமென்று எப்போதும் ஒரு ஆவல். 86லிருந்து தொலைக்காட்சியில் போட்டியைப் பார்க்க ஆரம்பித்திருந்தாலும், ப்ரேசில் வென்ற ஐந்து தடவைகளில் 1994, 2002 ஆண்டுகளில் மட்டும் அதைப் பார்க்க முடிந்திருக்கிறது. ஆனாலும் இந்த ஆண்டு நிச்சயமாக இறுதி நிலைக்கு வந்து, அதிலும் வெற்றியடைந்து விடும் என்று எதிர்பார்த்தேன். நடக்காமல் நேற்று அதற்கு இறுதிச் சங்கு ஊதியாகிவிட்டது.

எனக்கென்னவோ ஐரோப்பிய நாடுகள் தங்கள் முன்காலை தீவிரமாக எடுத்து  வைத்து விட்டன என்றே தோன்றுகிறது. ப்ரேசிலின் ஆதிக்கம், ஹாக்கியில் இந்திய ஆதிக்கம் முழுமையாக முறிந்து போனது போல், முடிவிற்கு வந்து விட்டது என்றே தோன்றுகிறது. கோல் ஏரியாவில் எத்தனை கால்கள் தடுக்க வந்தாலும் அவைகளைத் தாண்டி,பெளல் நடக்காமல் தப்பித்து பந்தை எடுத்துச் சென்ற ரொனால்டோவின் அழகான ஆட்டமும், ரொனால்டின்கோவின் வேகமும், கார்லோசின் வீச்சும் பார்த்து ஈர்க்கப்பட்ட எனக்கு இந்த ஆண்டு நேற்று நெய்மர் அடித்த கோல் மட்டும் ஆசுவாசமளித்தது.  ஆனால் அடுத்து வந்த குரோஷியாவின் கோல் இனி பெனல்ட்டி மட்டும் வெற்றியைத் தீர்மானிக்கும் என்ற போது நம்பிக்கை சரிந்தது; அதுவே நடந்தும் விட்டது.

மெண்டொஸ் புயல் கடுமையான காற்றோடு கடும் மழையையும் கொண்டு வந்ததா? என் சோகத்திற்கு விசிறிவிடுவது போல் இன்றைய போட்டி முடிந்தவுடன் மின்சாரத்தடை வந்தது. அடுத்து அர்ஜென்டினா ஆட்டம் பார்க்க திராணியும் இல்லை. படுத்தால் உடனே தூக்கம் வரவில்லை. ஏனோ இந்தியா ஹாக்கியில் வீழ்ந்தது போல் ப்ரேசில் கால்பந்தில் விழுந்து விட்டது என்ற நினைப்பே மனதிற்குள் சுற்றிச் சுற்றி வந்தது. அடுத்த போட்டியில் என்ன நடக்கப் போகிறது என்பது யாருக்குத்தான் தெரியும்?














*


1 comment:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

ரசித்து எழுதிய விதம் எங்களை விளையாட்டு மைதானத்திற்கு அழைத்துச்சென்றுவிட்டது. சிறப்பு.

சோழ நாட்டில் பௌத்தம் என்ற என்னுடைய நூல் அச்சேற்றப்பணி காரணமாக சில மாதங்களாக வலைப்பூக்களின் பக்கங்கள் வர இயலா நிலை. பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன். அண்மையில் இந்நூல் வெளியாகியுள்ளது. இனி தொடர்ந்து பதிவுகள் மூலமாகச் சந்திப்போம்.

Post a Comment