Thursday, October 17, 2019

1068. 5, 8 ஆம் வகுப்புகளில் பொதுத் தேர்வா?


A GUEST ARTICLE ...


*

பேராசிரியர் வின்சென்ட்* அவர்களின் கட்டுரை

*



5, 8 ஆம் வகுப்புகளில் பொதுத் தேர்வா?

இந்த இரண்டு வகுப்புகளில் பொதுத் தேர்வு தேவையா என்பதை விவாதிப்பதற்கு முன்னர் தேர்வுகளே அவசியம்தானா என்று பார்க்க வேண்டும்.

இன்று தேர்வுகள் எதற்காக நடத்தப்படுகின்றன? ஒரு மாணவர் ஒரு குறிப்பிட்ட பாடத்தில் தேர்ச்சிபெற்றிருக்கிறாரா என்று கண்டுபிடிப்பதற்காகவே தேர்வுகள் (examinations) நடத்தப்படுகின்றன. பத்தாம் வகுப்பில் அவர் பெறுகின்ற மதிப்பெண்களைக் கொண்டு அவரைப் பதினொன்றாம் வகுப்பில் சேர்க்க ஒர் அளவு கோலாகத் தேர்வு பயன்படுகிறது. அதுபோல பன்னிரெண்டாம் வகுப்பிற்குப் பின்னர் மேல்படிப்பிற்குச் செல்ல தேர்வுகளில் பெறும் மதிப்பெண்கள் (சில வேளைகளில்) கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. மேற்படிப்புகளில் சேர ஒரு குறிப்பிட்ட குறைந்த அளவு மதிப்பெண் தேவைப்படுகிறது. சில அரசுப்பணிகளில் சேரவும் பத்தாம், பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி குறைந்த அளவு தகுதியாக எடுத்துக்கொள்ளப் படுகிறது. அப்படியானால் காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகள், அல்லது பருவத் தேர்வுகள் எனபனவெல்லாம் என்ன? அவற்றைக் குறிக்க சோதனைகள் (tests) என்ற சொல்லைப் பயன்படுத்துவோம். இப்போது எட்டாம் வகுப்பு வரையில் ஆண்டு இறுதியில் நடத்தப்படும் ‘தேர்வுகள்’ அடுத்த வகுப்பிற்கு அனுப்புவதற்காக நடத்தப்படுவதில்லை.

சோதனைகளும் தேர்வுகளும் பின் எதற்காக நடத்தப் படுகின்றன? நடத்தப்படவேண்டும்?

ஒரு சோதனையை நடத்துவதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றில் முதன்மையானவற்றை இங்கே குறிப்பிடுகிறேன்:
1.   ஒரு இயல் அல்லது ஒரு அலகு நடத்தி முடிக்கப்பட்ட பிறகு அதற்கான ஆசிரியர் / கலைத்திட்டம் எழுதியவர் வரையறுத்த நோக்கங்கள் நிறைவேறினவா என்று கண்டறிய.

2.   ஒவ்வொரு மாணவரும் (கவனியுங்கள் ‘ஒவ்வொரு மாணவரும்) குறிப்பிடப்பட்ட நோக்கங்களில் தேர்ச்சிபெற்றுவிட்டாரா என்று கணக்கிட. இதற்கு performance assessment என்று பெயர். அதாவது மாணவரின் செயல் திறன் வெளிப்பாட்டை அளவிட.

3.   இந்த அளவிடல் மூலம் ஒரு மாணவரின் செயல்திறன் எதிர்பார்க்கப்பட்ட நோக்கங்களை வெளிப்படுகின்றதா என்று காண முடியும்.

4.   ஆசிரியர் பயன்படுத்திய பயிற்றுவிக்கும் முறை (instructional procedure) சரியானதா என்பதை ஆசிரியருக்கு எடுத்துக் காட்டும். அப்போது ஆசிரியர் தான் பயிற்றுவிக்கும் முறையை தேவையானால் மாற்றிக்கொள்வார்.

5.   ஆசிரியர் பயன்படுத்திய சோதனைக் கருவி (testing tools) தவறானதாக இருக்கலாம். எடுத்துக் காட்டாக ‘ மாணவர் தமிழில் பிழையின்றி எழுதுகிறார்’ என்பது ஆசிரியர் நோக்கமாக இருக்கும்போது வினா மாணவர் யாரோ வேறு ஒருவர் எழுதியதை எழுதுவதற்கு வாய்ப்பளித்தால் நோக்கத்திற்கும் நடத்தைக்கும் தொடர்பில்லை. அல்லது “மாணவர் ஆங்கில உரையாடலில் பங்கு கொள்கிறார்’ என்பது சிறப்பு நோக்கமாக இருக்கும்போது மாணவரை உரையாடல் ஒன்றை எழுதச் சொல்லும் போது சோதனை தவறானதாக ஆகிவிடும்.

6.   ஆசிரியரது / கலைத்திட்டம் எழுதியவரது ஒரு பாட அலகின் சிறப்பு நோக்கங்களை நிறைவேற்றும் அளவிற்கு மாணவருக்குத் தகுதியும் நாட்டமும் இருக்கின்றனவா என்பதையும் சோதனை காட்டும். அதாவது மாணவரின் நுழைவு நடத்தை (entering behaviour) எப்படிப்பட்டது என்பதைப் பொறுத்தே மேலே சொன்ன அனைத்தும் சாத்தியப்படும். மாணவரது நுழைவு நடத்தை தேவையான அளவு இல்லாவிட்டால், மாணவரை அந்த அளவிற்கு ஆயத்தப்படுத்துவது ஆசிரியர் கடமை. எடுத்துக்காட்டாக, கூட்டல் கழித்தல் தெரியாத மாணவருக்கு பெருக்கல் வகுத்தல் சொல்லித் தரமுடியுமா?

7.   மாணவர் தனது தேர்ச்சியைத் தெரிந்துகொண்டு தனது படிப்பு யுத்திகள், நடைகள் (strategies of learning and learning styles) ஆகியவற்றை மாற்றிக்கொள்ள முடியும்.

8.   வகுப்பறையில் மாணவரைக் குழுக்களாகப் பிரிக்க உதவும்.

9.   இப்போது அடுத்த வகுப்பிற்கு ஒரு மாணவர் தகுதியானவரா என்று கண்டுபிடிக்கப் பயன்படுகிறது.

பெரும்பாலும் இச் சோதனைகள் ஒரு அலகு அல்லது இயல் முடிவில் முறைசார்ந்த அல்லது முறை சாராச் சோதனை முறையில் (formal or informal testing) நடைபெறும். இதனால் தேர்வு பற்றிய அச்சமோ பதற்றமோ மாணவருக்கு இருக்காது; ஆசிரியருக்கும் இருக்காது. இந்த முறையில் காலாண்டு அரையாண்டு, ஆண்டு இறுதித் தேர்வுகளுக்கான அவசியமே இல்லாது போகும். சோதனைத் தாள்கள் மாணவர் கற்றலுக்கும் புரிந்துகொள்வதற்குமுரிய கருவிகளாகவே இருக்கும். (aids to comprehension).   Work sheets என்று சில பள்ளிகளில் பயன்படுத்தப் படும் வினாத் தாள்கள் இந்நோக்கத்திற்காக, வகுப்பறையில் பயன்படுத்துவதற்காக ஏற்பட்டவை.

தேர்வுகளின் முறைகளும் மாறவேண்டும். வெறும் எழுத்துத் தேர்வு மட்டும் இல்லாமல் திட்டச்செயல் முதலானவற்றின் மூலம் சோதிக்கமுடியும். நான்காம் வகுப்புக்குழந்தைக்கு ‘உங்கள் பகுதியிலிருந்து வந்த புகழ்மிக்க தட கள ஓட்டக்காரர் பற்றி கட்டுரை எழுதுக,’ என்ற தலைப்புக் கொடுக்கிறார்கள். இங்கல்ல, அமெரிக்காவில். நமது ஊர் குழந்தையும் எழுதுகிறது. மாணவர் ஒரு மாதத்தில் வாசித்து முடிக்கும் நூல்களின் அடிப்படையிலும் மதிப்பெண் உண்டு. குழந்தையின் வயதிற்கும், படிப்புக்கும் ஏற்ப புத்தகங்கள் வகுப்பறையிலும் பொது நூலகங்களிலும் கிடைக்கும் என்பது வேறு விஷயம். இங்கே ஸ்மார்ட் வகுப்பறைகளுக்குப் பணத்தை வீணாக்குவதற்குப் பதிலாக வகுப்பறை நூலகங்களும் சோதனைச் சாலைகளும் அமைக்கலாமே? குழந்தைகளுக்கான நூல்களும் தமிழில் இப்போது வரத்தொடங்கி விட்டன.

இவையெல்லாம் நமது பள்ளிகளில் நடப்பதில்லையே என்று ஆசிரியர்களும் கல்வியாளர்களும் கவலைப்படவேண்டாம். இவற்றை நடைமுறைப்படுத்துவது ஒன்றும் கடினமில்லை. நமது ஆசிரியர்களுக்குத் தகுந்த பயிற்சியளித்தால் மிகச் சிறப்பாகவே இவற்றை நிறைவேற்றுவார்கள்.

மிக நுணுக்கமாகக் கவனிக்க வேண்டியது: ஒவ்வோர் அலகுக்கும் சிறப்பு நோக்கங்கள் (specific objectives/ learning outcome) எவை என்பது தெளிவாக நடைமுறைப்படுத்தக் கூடிய முறையில் வரையறுக்கப்படவேண்டும்.
அப்படியானால் பொதுத் தேர்வுகள்?

இப்போது நடத்தப்படும் பத்தாம், பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளின் மதிப்பெண்களுக்கு எவ்வளவு மதிப்பு இருக்கிறது என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். பல பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் அரசாங்கப் பொதுத்தேர்வு மதிப்பெண்களை மதிக்காமல் நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஒரு கல்லூரியில் பட்டப் படிப்பு படித்த மாணவருக்குக்கூட பட்ட மேல் வகுப்பில் சேர்க்க நுழைவுத் தேர்வு வைக்கிறார்கள். இவ்வளவு ஏன்? அரசாங்கமே தான் வழங்கிய மதிப்பெண்ணை நம்பாமல் பணியில் சேர்க்கத் தேர்வுகள் நடத்தும் வேடிக்கையையும்தான் பார்க்கிறோம். பி.ஈ. பட்டம் பெற்றவர் பணியில் சேர நுழைவுத் தேர்வு எழுதியாக வெண்டும். நீட் தீர்வுகள் அரசாங்கப் பொதுத் தேர்வுகளைக் கேலிக் கூத்தாக்கிவிட்டன.

அப்படியானால் தேர்வுகள் தேவையில்லையா? தேர்வுகள் வேண்டாம். அவ்வப்போது வகுப்புச் சோதனைகள் வேண்டும். அவற்றின் மூலம் மாணவரின் தேர்ச்சியை மட்டுமின்றி இன்னும் முதலில் குறிப்பிட்ட பலவற்றை ஆசிரியரும் மாணவரும் கலைத் திட்டம் வகுப்போரும், பயிற்சியாளரும் தெரிந்து கொள்ள முடியும். தேர்வு பற்றிய அச்சம், பதற்றம் இருக்காது. இச் சோதனைகள் நமது பள்ளிகள் சிலவற்றில் இப்போது நடத்தப் படும் சுழல் தேர்வு (cycle test) இல்லை. ஒவ்வொரு பாடத்திலும் ஓர் அலகு அல்லது இயல் முடிந்தவுடன் நடத்தப்படும் சோதனை. சோதனைகளே இனிமையாக இருக்கும். அகமதிப்பீட்டுத் தேர்வுகள் வைத்து ஆண்டு முழுவதுமே கல்லூரிகளில் தேர்வு நடத்தும் கூத்தும் இருக்காது.

வகுப்புச் சோதனைகளை வரவேற்போம். வேண்டாம் தேர்வுகள்.


-          ச.வின்சென்ட்
    

*   ஆங்கிலத்துறை பேரா. வின்சென்ட்  இதுவரை எழுதிய, மொழியாக்கம் செய்த நூல்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 50 நூல்களை மிக எளிதாகத் தாண்டி விடும். இப்போது நமது புதிய கல்வித்திட்டம் பற்றி ஆழ்ந்து புரிந்து கொண்டு, அதைப் பற்றி கட்டுரைகள் எழுதியும், தன் தொடர்ந்த பேச்சுகள் மூலமாகவும் அதனைப் பற்றிய தன் கருத்தைப் பரப்பிக்கொண்டு வருகிறார்.


*










Wednesday, October 16, 2019

1067. மகாமுனி ... இத்துனூனூனூண்டு ...

Thursday, September 26, 2019

1066. ஒத்த செருப்பு



*
பார்த்திபனின் ...
ஒத்த செருப்பு 
சைஸ் 7

இப்போதெல்லாம் படம் ஒரு வாரத்திற்குள் ஓடி விடுகிறதே என்றெண்ணி மூன்றாவது நாளே மழையோடு ஓடிப் போய் பார்த்தேன் - கட்டாயம் பார்த்து விட வேண்டும் என்ற ஆசையுடன். பார்த்திபன் கொடுத்த முன்னுரையும் அப்படி  ஈர்த்தது; படத்திற்குப் பின் வந்த அவரது பின்னுரையும் பாவமாக என்னை தியேட்டர் பக்கம் இழுத்தது.



படத்தின் நேரம் 2 மணி நேரம் என்று போட்டிருந்தது. அப்படி தெரியவில்லை. முதல் பாதியே வெகு விரைவில் வந்ததாகத் தோன்றியது. அடுத்த பாதியும் அதே வீச்சில் படம் நடந்து முடிந்தது. படம் முடிந்து எழுத்துக்கள் வர ஆரம்பிக்கும் போதும் சில வசனங்கள் வந்து விழுந்தன. படமும் தொடர்ந்து இரண்டே மணி நேரத்தில் எடுத்தது போல் - one-act scene போல் தோன்றியது. நிச்சயம் அதற்கான காரணங்கள் இரண்டு; ஒன்று: திரைக்கதை - தொய்வில்லாமால் தொடர்ந்து, நாடகத்தில் ஒரே சீனில் கதை நடக்குமே அது போல் மிக நேர்த்தியாகக் குழப்பமில்லாமல் தொடர்ந்து நடந்தது. இரண்டாவது: எடிட்டிங். (சுதர்சன்) தொய்வில்லாமல் இருந்ததற்கு அதுவும் ஒரு நல்ல காரணியாக இருக்க வேண்டும்.




படம் பற்றிச் சொல்ல வேண்டுமானால், இது ஒரு action-thriller. நாலைந்து கொலைகள் அல்லது மரணங்கள். கொடுமையான கொலைகள். ரத்தமும், இன்னும் வேறு உடல் திரவங்களும் நம்மீது அவ்வப்போது தெறித்து விழுகின்றன. கொலைகார சத்தம் காதைக் கொடூரமாக அறுக்கின்றது. ஒவ்வொரு கொலைக்களமும் கண்முன் விரிகிறது. அச்சத்துடம் ”பார்க்க” வேண்டியதிருக்கிறது - அது ஒரு நிகழ்வாக நம் முன் தெரியாவிட்டாலும். கதாநாயகன் - Is he normal or subnormal? என்ற கேள்வி நம்மைத் துரத்திக் கொண்டே வருகிறது. Joke அடிக்க முடியாத இடத்திலும் Joke அடிக்கிறார் - அதுவும் வேகமாக வந்து நம் மீது மோதி சட்டென மறைந்து போகிறது.

காவல் நிலையத்தில் ஒரே ஒரு அறை.ஒரு பக்கம் ஒரு சுவர் - காந்தி படத்துடன். நடுவில் கதை நாயகன். முன்னால் ஒரு மேசையும் நாற்காலியும். மேசை மேல் ஒரு பட்டம் - வாலில்லாதது; மாஞ்சா நூல் இல்லாதது. பக்கத்தில் ஒரு சன்னல். அது வழியே தெரியும் ஒரு மரக்கிளை.

படத்தில் பிடித்த இன்னொரு விஷயம். பின்னணிக் குரல்கள். அதிகமெல்லாம் இல்லை. ஐந்தாறு குரல்கள் மட்டும் பின்னணியில் ஒலித்தன. அதில் வரும் பெரிய போலீஸ் அதிகாரியின் மிரட்டல் இல்லாத குரல் .. அதைவிட மனோதத்துவ மருத்துரான பெண்மணியின் குரல். (ஒரு வேளை அந்தப் பின்குரல் நடிகை ரோகிணியின் குரலாக இருக்குமோ? தெரியவில்லை.) மிக அழகான குரல். சாந்தமும், அன்பும், அமைதியுமான குரல். கதாநாயகனுக்கு அந்த டாக்டரைப் பிடித்தது. எனக்கு அந்த டாக்டரின் குரல் மிகவும் பிடித்தது. படத்தின் சூழலுக்கும் மிகப் பொருத்தமாகவும் அமைந்திருந்தது.



கதாநாயகன் Is he normal or subnormal? என்று கேட்டிருந்தேன். அவன் நிச்சயமாக super-normal என்று தான் சொல்ல வேண்டும். மூன்று கொலை செய்து விட்டு காவல் நிலையத்திலிருந்து விடுபட்டு தன் நோய்வாய்ப்பட்ட மகனோடும் அவனது பட்டத்தோடும் பத்திரமாக வெளியே செல்ல வேண்டுமானால் அவன் நிச்சயமாக பெரிய புத்திசாலி தானே!

ஒரே நடிகன். அவ்வப்போது காமிராவிற்குப் பின்னாலிருந்து வரும் சில பல குரல்கள். ஒரே இடம். மாறாத காட்சி. முன்புலம், பின்புலம் எல்லாம் ஒன்றேதான்.  பாட்டு கிடையாது. ஒரு தமிழ்ப்படம் - அதில் காதல், பாட்டு, சண்டை இல்லாவிட்டாலும் இது ஒரு தமிழ்ப்படம். ஆச்சரியமாக இல்லை? இப்படி ஒரு படம். ஒரே போர் என்று சொல்வதற்கான அத்தனைக் காரணிகளும் இருந்தும் தொய்வில்லாமல் நேர்கோட்டில் செல்லும் படம். இப்படி படம் எடுக்க ஒரு தைரியம் வேண்டும். பார்த்திபனுக்கு அது அதிகமாகவே இருக்கிறது. ‘குடைக்குள் மழை’ என்றொரு படம் எடுத்தார். பார்க்கவில்லை. ஆனால் படம் வந்து ‘சுருண்ட’ பிறகு “இப்படத்தை நான் எடுக்காமல் வேறு ”பெரிய” - பக்க பலம் உள்ள - நடிகர்கள் எடுத்திருந்தால் இதை ஆஹா .. ஓஹோ .. என்று சொல்லியிருப்பார்கள். நான் அப்படிப்பட்ட பின்புலம் இல்லாத ஆள்” என்று சோகமாக பார்த்திபன் சொல்லியிருந்தார். இப்படத்திற்கும் அவர் அதைச் சொல்லும்படியான சூழல் இல்லாமல் போனால் - பார்த்திபனுக்கும் நல்லது; தமிழ்த் திரையுலகிற்கும் நல்லது.  

இப்போதெல்லாம் பின்னணி இசை / சத்தம் என்னை மிகவும் துன்புறுத்துவதாகவே தெரிகிறது. படத்தின் வசனங்கள் பல என் காதுகளுக்கு வருவதற்கு முன்பே பின்னணி சத்தம் வந்து குழப்பி விடுகிறது. இந்தக் ”குற்றப் பின்னணிக்குப்” பின்னால் இருப்பது என் செவித் திறனா அல்லது தியேட்டர் ஆப்ரேட்டர்களின் சதியா என்பது எனக்கு இதுவரை புரியவில்லை. இந்தப் படத்தில் அந்தக் குழப்பம் நிச்சயமாக இல்லை. வசனம் அட்சர சுத்தமாகக் காதில் விழுந்தது. பெருமை யாருக்கு? - சத்யா / சந்தோஷ் சுப்ரமணியம் / ரெசூல் பூக்குட்டி?


பி.கு.: இதை ப்ளாக்கில் போடுவதற்கு முன் ஒரு படத்தோடு போடலாமென நினைத்து கூகுள் ஆண்டவரின் images பகுதியைத் திறந்தால் அத்தனை எண்ணத்தில் படங்கள் நிறைந்து கிடக்கின்றன. அப்படியானால் மக்கள் மத்தியில் படம் நன்கு ‘நின்று” விட்டது என்றே நினைக்கின்றேன். 

பார்த்திபனுக்கு என் வாழ்த்துகளும், பாராட்டுகளும்


பி;கு. தாண்டிய இன்னொரு பி.கு.:  மகாமுனி படத்தின் துணை இயக்குநரும் நண்பராகி விட்ட கிருஷ்ண குமார் என் பதிவில் நான் செய்த தவற்றைத் திருத்த நக்கீரன் மாதிரி ”எங்கெங்கே குற்றம் இருக்கிறதோ அங்கெல்லாம் அவதாரமெடுத்து தவற்றை எடுத்துரைப்பேன்” என்பது மாதிரி இங்கேயும் இறங்கி வந்து விட்டார்.



பின்னணிக் குரல்கள் பற்றிச் சொல்லும் போது மனோதத்துவ மருத்துரான பெண்மணியின் குரல் எனக்குப் பிடித்தது என்றும், அது யார் குரலாக இருக்கலாமென நான் நினைத்தது பற்றி எழுதியிருந்தேன். அது ஒரு தகவல் பிழை என்று கூறி பின் குரல் கொடுத்த இரு பெண்கள் பற்றி கூறினார். அதையும் சேர்த்து விடுகிறேன்: மனோதத்துவ மருத்துரான பெண்மணியின் குரல் தீபா வெங்கட். நல்ல மிருதுவான குரல். பிடித்தது. மாசிலாமணியின் - அதாங்க இப்படத்தில் பார்த்திபனின் பெயர் -  மனைவிக்காகக் குரல் கொடுத்தது நடிகை காயத்திரி


மிக்க நன்றி கிருஷ்ண குமார்.


Wednesday, September 18, 2019

1065. Magamuni - Official Making | Arya | Santhakumar | Mahima Nambiar, Indhuja



Thursday, September 12, 2019

1064. MY BYTES FROM "MAKING OF MAHAMUNI"





*

திரைப்படங்கள் எடுக்கும் போது still photographyக்கு ஒருவரையும், making of the movie எடுப்பதற்கு வேறொருவரையும் அமர்த்தி விடுவார்கள். மகாமுனி படத்தின் making of the movieக்கு மாணவ நண்பன் பாபி ஜார்ஜ் பொறுப்பாக இருந்தார். பயங்கர landscape photographer என்று மட்டும் நினைத்திருந்தேன். சிறப்பாக இந்தப் பொறுப்பையும் மிக மிக அழகாகச் செய்திருந்தார். அந்தப் படத்தின் ஒரு பாகத்தை எனக்கு எடிட்டிங் செய்யும் போது நானும் அருகில் இருந்தேன். ’நொற நாட்டியம் பிடித்த வேலை’ என்பார்கள் .. தெரியுமா? அத்தனை ஒண்ணுக்குள் ஒண்ணாக மிகவும் intricate ஆன வேலையாகத் தோன்றியது. எடிட்டருக்கு முதல் பாடமே ஒரு மணி நேரத்தைத் தாண்டி எடிட்டிங் மேஜையில் உட்காராமல் அவ்வப்போது ரெஸ்ட் எடுக்கணும் என்றார் அப்போது எடிட்டிங் செய்து கொண்டிருந்த இளம் உதவி எடிட்டர். என்னிடம் துப்பரவாக இல்லாத நிறைய்ய்ய்ய நினைவாற்றல் இருக்க வேண்டும். செதுக்கி சீர் தூக்கும் கடின வேலை.





அந்தந்த சினிமாவோடு தொடர்புடையவர்களின் நேர்காணல்களும், படத்தின் முக்கிய சீன்களும் வைத்து making of the movie தொகுக்கிறார்கள். அதற்காக என்னிடமும் என் மனதில் தோன்றுவதைப் பேச, ஜார்ஜ் அவரது காமிரா முன் அமரச் செய்தார். இது போல் எடுக்கும் துண்டுப்படங்களை bytes என்று அழைக்கிறார்கள். என்னுடைய bytes என்னிடம் கொடுத்து படம் வரும்வரை வெளியில் காண்பிக்காமல் ரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றார். பத்திரமாக வைத்திருந்தேன். ஒரே ஒரு ஜீவனுக்கு மட்டும் ஒரே ஒரு தடவை காட்டினேன். இதோ இப்போது அவைகளை வெளியே எடுக்கலாமாம்.


நீங்களும் பாருங்கள் ...

காணொளி ஓடவில்லையென்றால் https://www.youtube.com/watch?v=lJa0S5asiBsே வாங்களேன் ...








**