Friday, June 21, 2024

1279. EURO, '24

16.6.24

ஸ்விட்சர்லாண்ட்  - ஹங்கேரி –    3:1

93 நிமிடம் விழுந்த 3வது கோல் அழகு.

ஸ்விட்சர்லாண்ட் சிகப்பு வண்ணச் சட்டை போட்டு விளையாடினர். அடுத்தவர்கள் வெள்ளைச் சட்டை. ஆனால் போட்டி பார்க்க வந்தவர்கள் அனைவரும் ஒரேயடியாக மேல்மருத்துவ பக்தர்கள் மாதிரி சிகப்பாக வந்திருந்தார்கள்.

ஏன் அப்படி?

17.6.24

உக்ரைன் - ருமேனியா   - 0:3

என்ன ஆச்சரியம் என்றால், உக்ரைனில் போர் நடக்கிறது. இதில் அவர்கள்தேர்வுப் போட்டிகளில் வென்று இறுதிப் போட்டிக்கு வந்திருக்கிறார்கள். ஆச்சரியமாக இருந்தது.

விளையாட்டு உற்சாகமில்லை


பிகு.

பல குட்டி குட்டி நாடுகள். இத்தனூண்டு நாடுகள்.அதுக ஜெயிச்சி உலகக் கால்பந்து, ஐரோப்பிய கால்பந்துன்னு விளையாடுதுக..

ஆனா நாம எம்புட்டு பெரீஈஈஈஈய நாட்டுக்காரவுக ... பின் ஏன்?


17.6.'24   பிரான்ஸ் - ஆஸ்ட்ரியா    1-0

எம்பாப்வே ஆடுகிறாரே என்ற நினைப்பில் உட்கார்ந்தேன். அழகாகவே விளையாடினார். ஆஸ்ட்ரியா  கோலுக்கு வலது பக்கம் பந்தை அழகாக வாங்கி, தன் தொழிலை அழகாகச் செய்து பந்தை கோலுக்கு முன்னாலிருந்த வீரர்களுக்கு அனுப்பினார். ஆனால் ஆஸ்ட்ரியா வீரர் ஒருவர் 'தலை சுற்றி' தன் கோலுக்குள் அனுப்பி விட்டார்.

இரண்டாம் பகுதியில் எம்பாப்வே ஏறத்தாழ தனியாக பந்தை எடுத்து எதிராளி கோலுக்குச் சென்றார். அவரும் எதிரில் நிற்கும் கோல்கீப்பர் மட்டும் தான். அந்தப் பந்தை வெளியே அடித்து, நல்ல தருணத்தைத் தவற விட்டு விட்டார்.

'எப்படியோ' பிரான்ஸ் வென்றது.

20.6.24 SPAIN - ITALY  : 1 : 0

கால்பந்தில் இத்தாலி பெயரே அதிகமாகத் தென்பட்டதால் அதுதான் வெல்லும் என நினைத்தேன்.

ஸ்பெயின் தூள் கிளப்பியத்து. அதில் விளையாடி, கோலும் போட்ட வில்லியம்சின் தலையலங்காரத்தை விட அவர் விளையாட்டு பிடித்தது.

21.6.24   UKRAINE  -  SLOVAKIA   2 : 1

உக்ரைன் அணியைப் பார்க்கும்போது பாவம் போல் இருந்தது. ஆட்டமும் குறையாகவே தோன்றியது. ஆனால் கடைசியில் ஆட்டத்தில் வென்றது 




Saturday, June 15, 2024

1278. EURO ‘2024 GERMANY – SCOTLAND



சில சமயங்களில் மிகப் பெரிய டீம்கள் பெரிய போட்டிகளின் முதல் ஆட்டத்திலேயே தோற்று ,பின்பு மெல்ல எழுவதுண்டு. அதுபோல் இந்த தடவை ஜெர்மனிக்குஆகலாமோவென்று யாரோ எழுதியதை வாசித்தேன். ஆனால் நடந்தது வேறு.

ஜெர்மனி பெரும் உறுமலோடு தன் போட்டியின் ஆரம்பத்தை வைத்திருந்தது. என்ன உறுமல் ... 5;1 என்று ஸ்காட்லாந்தை வென்றது.


                                                

நான் போன பதிவில் எழுதியது அப்படியே முதல் கோல் போட்டபோது நடந்தது. Kroos – ஜெர்மனியின் டாப் மேன் – (ஒருவேளை  அந்தப் பெயர் Cross என்பதின் திரிபாக இருக்குமோ?) தனது டீம் இருக்குமிடத்தின் இடது பக்கத்திலிருந்து நீளமாக வலது பக்கம் அடித்தார். அங்கிருந்த right winger அப்படியே பந்தை வாங்கி, எதிராளியின் கோலுக்கு நேரே பந்தை அடித்தார்.  அதை அழகாக உள்வாங்கி அவர் நேரே அடித்த பந்து  ....கோல்.  மூன்றே பேரிடம் பந்து சென்றது. அரை நிமிடத்திற்குள் இங்கிருந்த பந்து அங்கு கோலானது. அது விளையாட்டு ...

5:1 என்ற கணக்கும் தப்புதான். அதாவது அந்த ஒரு கோலும் self goal!




Friday, June 14, 2024

1277. FIFA QUALIFICATION  EURO, 2024



ரொம்ப நாளாச்சே கால்பந்து விளையாட்டைப் பார்க்கணும்னு ஒரு நினைப்பு. சேத்ரியின் கடைசிக் கால்பந்தாட்டம் என்பதால் பார்க்கணும்னு ஒரு ஆசை. அதோடு குவைத்தை இந்தியா வென்றால் பிபா அடுத்த ரவுண்டுக்குப் போக வாய்ப்பிருக்கு என்றார்களே .. அதனால் பார்க்கலாம்னு நினைச்சேன்.

நினச்சதெல்லாம் தப்பில்லை; ஆட்டத்தைப் பார்த்ததுதான் தப்பா போச்சு. சரி ..ஒரு international game ஆச்சேன்னு பார்த்தால், ஏகப்பட்ட ஏமாற்றம். செயிண்ட் மேரிஸ் பள்ளியில அந்தக் காலத்தில நாங்க ஆடும் போது பண்ணியதை இன்றைய international ஆட்டக்காரங்க ஆடினாங்க.

அப்போவெல்லாம் நாங்கல்லாம் 11க்கு 11 அப்டின்னா விளையாடினோம்? வர்ரவனெல்லாம் வாடான்னு விளையாடுவோம். பந்து எங்க இருக்கோ அங்க கோலியைத் தவிர எல்லோரும் சுத்தி நின்னு ஆடுவோம். மற்ற இடத்தில ஒரு ஆட்டக்காரனும் இருக்க மாட்டான். இந்த இந்தியா-குவைத் ஆட்டத்திலேயும் ஏறத்தாழ அதே மாதிரி தான் விளையாடினாங்க. பந்து இருக்க இடத்தைச் சுத்தி ஆட்டக்காரங்க. Positional play அப்டின்னு சொல்லுவாங்களே .. அது சுத்தமா இல்லை. Stimac என்ன சொல்லிக் கொடுத்தாரோ தெரியலை.

கால்பந்துவின் விளையாட்டே Positional playதான் அழகா, விளையாட்டைத் தொடர்ந்து பார்க்கும் ஆர்வத்தைக் கொடுக்கும். பந்தை எடுத்து நம்ம பக்கம் வந்தா, கோல் முனையில என்னென்னமோ நடக்கும். ஆவலா பாத்துக்கிட்டு nervous ஆக இருப்போம். பந்து அவுட்ல போகுதுன்னு வச்சுக்குவோம். கோல் கீப்பர் பந்தை அங்கிருந்து எத்துவார். அப்படியே எதிர் முனைக்கு பந்து பறக்கும். அங்கே left wing, right wing-ன்னு நம்ம ஆளுக நிப்பாங்க. அவங்க பந்தை வாங்கிக்கிட்டு எதிரி கோல் பொட்டிக்குள்ள போனா .. நமக்குப் பொங்கிக்கிட்டு வராதா?

 அங்க கொஞ்சம் அமளி துமளி. போன நிமிடம் நம்ம கோல் தாங்குமான்னு தவிச்சிக்கிட்டு இருப்போம்; அடுத்த நிமிடம் அவங்களுக்கு கோல் போட்டிருவோமான்னு துடிச்சிக் கிட்டு இருப்போம். கால்பந்து விளையாட்டு துடிப்போடு ஒவ்வொரு நிமிடமும் இருக்க இதுதானே காரணம். அப்படியேதும் இந்தியா-குவைத் விளையாட்டில் ஏதும் காணோம். நாம் இன்னும் முன்னேற பல படிகள் ஏறணும். அன்று சேத்திரி கூட தனிப்பட்டுத் தெரியவில்லையே. ஆயினும் அவருக்கு என் நன்றிகள். ஓரளவாவது இந்தியாவின் பெயரை கால்பந்துலகில் முன்னெடுத்து வைத்தாரே... அதற்கு என் பாராட்டு. அவரைப் போல் நிறைய சேத்திரிகள் இன்னும் நம் டீமில் வரணும்.






இப்படி ஒரு மேட்ச் பார்த்து ஏமாந்து போய் நின்னேன்னா.. இந்த சமயத்தில் EURO,2024 இன்னைக்கி ஆரம்பமாகுது. 6.30க்கு ஓர் ஆட்டம்; 10.30க்கு இன்னொன்று. முதல் 6.30ஆட்டத்தையாவது அவ்வப்போது பார்க்கணும்னு ஒரு மூட் செட்டாயிருச்சி.

 ரொனால்டோவை விட M.B.A. ஆளு ஒருத்தரு இருக்காரே – Mbappe – உலகக் கால்பந்தாட்டத்தில் மெஸ்ஸி கண்ணுல விரல விட்டு ஆட்டினாரே ... அவரைப் பார்க்க அதிக ஆவல். அவர் பெயரை எப்படித் தமிழில் எழுதணும்னு தெரியல. ஆண்டவரிடம் கேட்டேன். அவரு எம்-பா-பே – எம்பாபே – அப்டின்னு சொல்லிக் கொடுத்தாரு. அவரைப் பார்க்கணும்.

வரட்டா ...



Sunday, May 26, 2024

1276. லவ்வர் ... திரைப்பட விமர்சனம்


**

ஜெய்பீம், குட்னைட்  படங்களுக்குப் பிறகு லவ்வர் படம் பார்த்தேன். நினைத்தபடி கதையை முடித்த விதம் பிடித்திருந்தது.

காதல் உன்மத்தம் தலைக்கேறிய இளைஞனின் ஏறத்தாழ ஒரே மாதிரியான எதிர் வினைகளை வைத்தே ஒரு படம் எடுத்திருந்தாலும் திரைக்கதையை அலுக்காமல் கொண்டு சென்ற இயக்குநருக்குப் பாராட்டுகள்.

இப்போது வரும் படங்களில் “ex” என்ற பதம் அடிக்கடிப் பயன்படுவதைப் பார்க்கும் போது காதல் தோல்வியால் தாடி வளர்க்காமல் “break up” என்பதைத் தாண்டி இளைஞர்கள் எளிதாகச் செல்லும் “நல்ல” வழியைக் காண்பிக்கும் நல்லதொரு நாகரிக முன்னெடுப்பு என்றே நினைக்கின்றேன்.

விஜய் சேதுபதியிடமிருந்து விலகி மெல்ல மணிகண்டனை நோக்கி நடை போட ஆரம்பித்திருக்கிறேன்.




Thursday, May 23, 2024

1275. சில பல திரைப்படங்கள் ....



*

நான்கைந்து நாட்கள். வேலை ஏதும் செய்யாமல் அக்கடாஎன்று படுத்துக் கிடந்தேன். ஆனாலும் அப்படியே சும்மாவா படுத்திருக்க முடியும். இருக்கவே இருக்கு ..OTTக்கள் வா ... வா என்று அழைத்துக் கொண்டே இருந்தன. இரண்டு, மூன்று படங்கள் முழுதாகவும்,… சில “சில்லறைப் படங்களைஅரை குறையாகவும் பார்த்து நொந்து கொண்டேன்.







முழுதாகப் பார்த்த முதல் படம் ஒரு வெப்சீரீஸ். வசந்த பாலனின் “தலைமைச் செயலகம்”. முதல் இரண்டு மூன்று எபிசோடுகளைப் பார்த்ததும் உடனே எழுந்து போய் முக நூலில் நல்லதாக நாலு வார்த்தை எழுதிட்டு வரணும்னு ஓர் உந்துதல். முதல் சீனிலேயே ஒய்ட் ஆங்கிள் ரவிச்சந்திரன் படத்தோடு ஒட்ட வைத்து விட்டார். ஹீரோ ஆடுகளம் கிஷோர்; கதாநாயகி எனக்குப் பிடித்த இரு நடிகைகளில் ஒருவரான ஷ்ரேயா ரெட்டி (வெயில் படத்திலிருந்தே …) இருவரின் தோற்றமே நன்கிருந்தது. இருவரும் கண்களால் தங்கள் நடிப்பைக் கொண்டு வந்தது போலிருந்தது. நான்கைந்து எபிசோடுகள் அலுப்பில்லாமல், நன்றாக சென்றது. கடைசி மூன்று,நான்கு எபிசோடுகளை எப்படி முடிப்பது என்று தெரியாமலோ, திரைக்கதை எழுதுவதிலோ ஒரே குழப்படி  செய்து, நம்மை வைத்து செய்து விட்டார்கள்’.  நன்றாக ஆரம்பித்து இறுதியில் சொதப்பலாக,  சோக அவியலாக முடிந்த சோகம் அந்தப் படம். ஆனாலும்  பல மாதங்கள்/ ஆண்டுகளுக்கு முன்பு ஏறத்தாழ இதே மாதிரியான இன்னொரு படம் ஓடிடியில் பார்த்தேன். அது சிவகாசி என்று நினைக்கின்றேன். அதில் பரம்பரையாக இருந்த ஓர் அரசியல் குடும்பத்தை வைத்து இதே போன்ற கதையாக்கத்தோடு – அரசியல்வாதி அப்பாவை மகளோ மகனோ கொன்றுவிடும் கதையாக – பார்த்த நினைவு வந்தது. முதலில் பார்த்த அந்தப் படமே பரவாயில்லை என்று இப்போது தோன்றுகிறது. அழகாக ஆரம்பித்து தடுமாறி முடித்து விட்டார், ஜெமோ இதற்கு அதிகமாகப் பங்கு கொடுத்த்திருப்பார் போலும்.

 


இந்தப் படத்திலிருந்து தப்பி இன்னொரு படத்திற்குத் தாவினேன். தங்கர் பச்சானின் படம். :கருமேகங்கள் கலைகின்றன” தலைப்பெல்லாம் நன்கு கவித்துவமாகவே இருக்கிறது.  பாரதி ராஜா கதாநாயகன். யோகி பாபு துணைக் கதாநாயகன். எஸ்.சி (அதாவது தளபதி விஜய்யின் அப்பா),  கெளதம் வாசுதேவன், அதிதி பாலன் ... என்று ஒரு பெரிய பட்டாளம்.  பாரதி ராஜாவிற்கு ஒரு கதை; யோகிபாபுவிற்கு இன்னொரு கதை; வாசுதேவனுக்கு ஒரு கதை ... என்று பல துணைக்கதைகளை வைத்து மகாபாரதம் போல் ஒரு நீண்ட படம். இதில் ஏதாவது ஒரு கதை – பாரதி ராஜாவின் கதை மட்டும் – வைத்து ஒரு படமெடுத்திருந்தால் உட்கார்ந்து பார்த்திருக்கலாம்.

 

THE TRAIN என்று ஓர் ஆங்கிலப்படம். WW II காலத்துப் படம். பிரான்சிலுள்ள பெரும் ஓவியர்களின் படங்களையெல்லாம் அள்ளிக் கொண்டு செல்ல நினைக்கின்றார் ஒரு ஜெர்மானிய அதிகாரி. அதைத் தடுத்து நிறுத்தி தங்கள் நாட்டின் கர்வத்தையும். பெருமையையும் காப்பாற்றுகிறார் கதாநாயகன்



Burt Lancaster, எப்படி ரயிலை டைரக்ஷன் மாத்துனாங்கறது மட்டும் புரியலை. ஆனா படம் நல்லா இருந்தது.

இதோடு நிறுத்தியிருக்கலாம். THE BOYS அப்டின்னு ஒரு தமிழ்ப்படம் ஓடிடியில். யாரோ செந்தில்குமார் அப்டின்னு ஒரு தயாரிப்பாளராம். காசு எப்படியோ வந்திருக்கும் போலும், அதைக் கண்டபடி செலவு பண்ணியாகஆணும்னு ஒரு வரம் வாங்கிட்டு வந்திருக்கார் போலும். அதுக்காக இப்படி ஒரு படம் எடுத்து ... கடவுளே ... தாங்கலடா சாமி.

இன்னும் இது மாதிரி ஓடிடியில் சில தமிழ்ப்படம் முயற்சித்து,தப்பித்து ஓடி வந்துட்டேன். பலரும் தமிழில் ஓடிடியில் காசை தர்ப்பணம் செய்யவே படம் எடுக்கும் பரிதாபத்தையும் பார்த்தேன்.