Friday, October 07, 2005

86. மரணம் தொட்ட கணங்கள்…2

*முதல் கணம் ...



முதல்லயே சொல்லீர்ரது நல்லதில்லையா? இது ஒண்ணும் பிரமாதமான விதயம் இல்ல; ஏன்னா அநேகமா எல்லார் வாழ்கையிலேயும் நடந்த ஒரு கணமாகத்தான் இருக்கும். ‘முதல் கணம்’ மாட்டுவண்டின்னா அப்படியே இருந்திரலாமா? இன்னும் கொஞ்சம் ஹை-டெக் ஆக முன்னேற வேண்டாமா? அதனால இப்ப சைக்கிள். அதுக்கு முந்தி, உங்களுக்கு அந்தக் கால சைக்கிள்கள் பற்றி சொல்லணுமே.

இப்போ சைக்கிள்கள் மட்டுமல்ல, வாழ்க்கையே கலர்புல்லா ஆகிப்போச்சு. எங்க காலத்தில இப்ப மாதிரி தினுசு தினுசா சைக்கிள்கள் கிடையாது. இப்போ நார்மலான உயரத்தில இருக்கிற சைக்கிள்களுக்கு அப்போ 22 இன்ச் சைக்கிள்கள் என்று பேரு. எல்லாமே அநேகமாக அந்த சைக்கிள்கள்தான்; அதோடு அப்பப்போ 18″- கொஞ்சம் குட்டையான சைக்கிள், 24″ - உயரமான வண்டி –இந்த இரண்டு டைப்பும் உண்டு. ஆனால், இந்த இரண்டு டைப்புமே ரோட்ல போற வர்ரதில 5%-தான் இருக்கும். அவ்வளவுதான் தினுசுகள். இதில் 24″ சைக்கிள்னா ஏதோ யாரோ ஒரு வயசானவரின் சைக்கிள்னு கண்ணை மூடிக்கிட்டு சொல்லிடலாம்; ஏன்னா அப்போதே இந்த சைஸ் சைக்கிள்கள் பரிணாமத்தில் தங்கள் இறுதிக் காலத்தில் - stage of extinciton - இருந்த endangered species! அந்த 18″ சைக்கிள் என்றால் அதை ஓட்டிப் போகும் பையன் ஒரு பணக்கார வீட்டுப் பையனாக இருக்கும். ஏன்னா அப்போ சைக்கிள் வாங்கும்போது அது ஒரு once in life time investment என்ற எண்ணத்தில்தான் வாங்குவார்கள். இப்போதைக்கு 18″, வளர்ந்தபிறகு 22″ என்றெல்லாம் யாரும் நினைப்பதில்லை. இந்த use-and-throw culture ஏது அப்போது? சைக்கிள் ஒன்று வாங்கியாச்சா, அது உங்கள் பரம்பரைச் சொத்தாகத்தான் மதிக்கப்படுமே தவிர, இன்று வாங்கி நாளை கடாசிவிடக் கூடிய பொருளாகக் கருதப்படுவதில்லை. ‘இது என் அப்பா படிக்கும்போது வாங்கிய சைக்கிளாக்கும்’ என்று சொன்ன நண்பர்கள் ஏராளம். அந்தக் காலத்து அப்பாமார்களுக்கும் சைக்கிள்கள் மேல் அப்படி ஒரு அலாதிப் பிரியம். தன் பிள்ளைகளிடம் கொடுத்தால் கூட அதன் புனிதத்தன்மை போய்விடுவதாக நினைப்பார்கள். ‘எப்படி இருந்திச்சு தெரியுமா? நீ எடுக்க ஆரம்பிச்ச அண்ணையிலிருந்தே வண்டி கலகலத்துப் போச்சு’ என்று பெருமூச்செறிவார்கள் என் அப்பா மாதிரி.


இப்போவெல்லாம் சைக்கிளைப் பற்றிய - சில terms- சொற்பிரயோகம்கூட இல்லாமல் போச்சு; அது என்னன்னா, over-oiling and over-hauling ! முதலில் சொல்வது - தலைக்கு எண்ணெய் வச்சு நம்ம வீட்ல தினமும் குளிப்போமே அது மாதிரி; எண்ணெய்க் குமிழ் ஒன்று வைத்து டுபுக்..டுபுக் என்று சொட்டு சொட்டா அங்கங்கே விடுவார்கள். அப்டியே மாட்டுக் கொம்பை பிடித்து மடக்கும் லாகவத்தில் சைக்கிளுக்கு முன்னால் நின்று கொண்டு, இடது கையால் ஹாண்டில் பாரைப் பிடித்து முன் சக்கரத்தைச் சடாரெனத் தூக்கிப் பிடித்து அதை வலது கையால் வேகமாகச் சுற்றவிட்டு, சுற்றிக் கொண்டிருக்கும்போதே சக்கரத்தின் இரு பக்கத்திற்கும் எண்ணெய் போடும் லாகவம் இருக்கிறதே அது பார்க்கப் பார்க்க அழகு. அப்பா வைத்திருந்த சைக்கிளை டவுனுக்குள் இருந்த அப்பாவின் மாணவர் ஒருவரின் கடைக்குக் கொண்டு போய் அங்கே இந்த ‘வைபவத்தை’ நடத்துவதற்கு ஓரணாவோ, இரண்டணாவோ, ஆனால் எனக்கு ‘டிராவலிங் அலவன்ஸ்’ ஒரு அரையணாவாவது கிடைக்கும். அந்த அலவன்ஸை விட டவுனுக்குள் சென்று வரும் திரில்லுக்காகவே நான் ரெடியாக இருப்பேன். இப்போது அந்த பாய்கடை இருந்த இடத்தைத் தாண்டும் போதெல்லாம் அந்த முன் சக்கரத்திற்கு எண்ணெய் போடும் லாகவத்தை நினைத்துக் கொள்வேன். நான் மறந்தால் கூட என் மகள்களோடு போனால் அந்தக் கடை - இப்போது அங்கே பெரிய ஜவுளிக்கடை -வந்ததும் நினைவுபடுத்துவார்கள்.


இது ஒரு டைப் என்றால், அடுத்தது over-hauling இருக்கிறதே, அது குற்றாலக் குளிப்பு, அல்லது வீட்டில் அப்பா வாராவாரம் எடுக்கும் oil bath மாதிரி; சைக்கிளைப் பகுதி பகுதியாகப் பிரித்து மண்ணெண்ணையில் ஊற வைத்து, சக்கரங்களுக்குக் கோட்டம் பாத்து, பிறகு அதை ஒன்று சேர்த்து, பின் கடைசியில் பள பளன்னு தொடச்சி…அடேயப்பா..ஆளுகளுக்கு, அதுவும் நம்ம சினிமா படங்களில வில்லன்களுக்கு மசாஜ் செய்வார்களே அதெல்லாம் கெட்டது போங்கள். ஒரு ரூபாய் இதற்கு என்று நினைக்கிறேன்.

பள்ளிப் படிப்பு முடித்து P.U.C.-யும் முடித்த பிறகு கல்லூரி செல்வதற்கு என்று எனக்கு ஒரு சைக்கிள் வாங்குவதென்று முடிவானது. என்ன சைக்கிள் வாங்கலாம்? எனக்கு Raleigh சைக்கிள் வேண்டுமென அப்பாவை நச்சரித்தேன். அது Made in England. ராமநாதபுரமோ, ராமேஷ்வரமோ தெரியாது; அங்கேதான் இந்த சைக்கிள் கிடைக்கும். மலேயாவிலிருந்து வரும் என்று சொல்வார்கள். பெயரே மலேயா ராலே. நண்பர்களிடம் சொல்லிவைத்து அப்பா அந்த சைக்கிள் வாங்கிக் கொடுத்தார்கள். நம்ம ஊர் சைக்கிள்கள் 250-300 என்று விலை; ஆனால் இந்த சைக்கிள் 400 ரூபாய்! திடீரென்று ஒரு நாள் மாலை அந்தக் கரும் பச்சை சைக்கிள் வீட்டுக்கு வந்தது. ஒரே ஜாலிதான்; சும்மாவா, எனக்கே எனக்கா என்று; அதுவும் ஒரு ராலே சைக்கிள். இந்த இறக்குமதியாகும் சைக்கிள்கள் எல்லாமே 22″தான்; ஆனால் நம்ம ஊரு சைக்கிள்களைவிட கொஞ்சம் உயரம் குறைவாக இருக்கும். சைக்கிள் செயின் ஃபுல் கவராக இருக்கும்; எக்ஸ்ட்ராவாக ஒரு கை-பம்ப் இருக்கும்; பள பளன்னு டைனமோ; அதுவும் அப்போ ரொம்ப ஃபேமஸான ‘மில்லர்’ டைனமோ; சைக்கிள் சீட்டு பேரு ‘புரூக்ஸ்’-நல்லா சொகுசா இருக்கும்….இப்படி பல பிளஸ் பாய்ண்ட்டுகள் சொல்லிக்கிட்டே போகலாம். எப்படி இருக்கும் தெரியுமா ஓட்டுவதற்கு? அது என்னவோ தெரியாது, என்ன மாயமோ தெரியாது..நல்லா வேகமாகப் போகும்; அதைவிட வேறு எந்த சைக்கிள்களிலும் வராத ஒரு சத்தம்..ங்கொய்..னு, அந்த சத்தம் நான் பார்த்த வரை இந்த மலேயா ராலேயிலிருந்து மட்டும்தான் வரும்; அதுவும் வேகமாகப் போகும்போது மட்டும். அந்தச் சத்தம் உங்களை ‘இன்னும் ஸ்பீடா போடா’ அப்டின்றது மாதிரி உந்தும். Some aerodynamics and accoustics too!


இப்டில்லாம் சொல்றதால பயங்கர வேகமா போறப்போ சறுக்கி லாரிக்கடியில் விழுந்து, அந்த பின் சக்கரம் அப்படியே என் மேல ஏறப்போற நேரம்…இப்படி ஏதாவது கற்பனை பண்ணிக்காதீங்க! அப்போ B.Sc. இரண்டாமாண்டு. தெற்கு வாசலில் இருந்து தியாகராஜர் கல்லூரி போய்க்கிட்டு இருக்கிறேன். வழக்கமா நாங்க கிளாஸ்மேட்ஸ் இரண்டு பேர் போவோம். அன்னைக்கி நண்பர் வரவில்லை. கல்லூரிக்கு முந்தின இரண்டாவது ஸ்டாப், இந்தியன் எக்ஸ்பிரஸ் ஸ்டாப்புக்கு முந்தின ஸ்டாப் - அங்கே எனக்கு முன்னால ஒரு கறுப்பு ஹில்மேன் கார் நிக்கிது; டிரைவர் வலது பக்கம் திரும்புறதுக்காக வெளியே கையை நீட்டிக் காண்பிச்சுக்கிட்டே இருக்கார். நான் என் மலேயா சைக்கிள்ல அந்தக் காருக்குப் பின்னால் காலை கிழே ஊனிக்கிட்டு நிக்கிறேன். பின்னல் வந்து ஸ்டாப்பில நிக்கிது பஸ் - T.V.S. BUS - 15 A - சிலைமான் போறது. கண்டக்டர் டபுள் விசில் கொடுக்க, டிரைவர் சடாரென வண்டியை எடுக்கிறார், வளைத்து எடுத்து விடலாமென்ற நம்பிக்கையில். முடியவில்லை. நான் ரோட்டின் இடது புறம் நின்றதால் பஸ்ஸின் இடது பாகம் என்னை சைக்கிளோடு இடிக்க, அந்த வேகத்தில் சைக்கிள் வலது பக்கம் சாய்கிறது. நான் தூக்கி எறியப் படுகிறேன். பக்கத்திலிருந்து பார்த்தவர்களும், சைக்கிள் விழுந்து கிடந்த முறையைப் பார்த்த மற்றவர்களும் நானும் ‘நியாயப்படி’ வலது பக்கம்தான் தூக்கி எறியப்பட்டிருக்க வேண்டும் என்றார்கள். Rules of physics? ஆனால் எப்படியோ (தெய்வாதீனமாக ??) நான் இடது பக்கம் விழ, பஸ் இடித்த பிறகும் கட்டுங்கடங்காமல் என் சைக்கிள் மீது ஏறி, அதைச் சக்கையாக பின்னிருந்து முன்வரை ஏறி அமுக்கி, அதோடு நில்லாமல் முன்னால் நின்று கொண்டிருந்த காரின் வலது பக்கம் ஒரு இடி இடித்து நின்றது. தூக்கி எறியப்பட்ட என்னை மூட்டைதூக்கும் தொழிலாளர் ஒருவர் ‘அலேக்காக’த் தூக்கினார். பயமா, ஊமை அடியா எதுவோ, கால் நிற்கவில்லை; துவண்டது. தூக்கி பஸ்ஸில் உட்கார வைத்தார்.


அதற்குப் பிறகு போலீஸ், கேஸ், மருத்துவமனை என்று வழக்கமான காரியங்கள் நடந்தன. ஆளுக்கு சேதம் ஏதும் இல்லை. பிழைச்சிக்கிட்டேன். அந்தக் காலத்துக்கும், இப்போது நடந்திருந்தால் நடக்கக் கூடியதுக்கும் ஒரு பெரிய வித்தியாசம் மட்டும் சொல்றேன். பஸ் டிரைவர் முதலில், போலீஸ் வருவதற்கு முன்பே என்னிடம் வந்து மன்னிப்பு கேட்டார். பிறகு மாலை என்னை மருத்துவ மனையில் வந்து பார்த்தார். அப்போதெல்லாம் இந்த மாதிரி விபத்துக்கள் நடந்தால் கொடுக்கப்படும் நட்ட ஈடு ஓட்டுனரின் சம்பளத்திலிருந்து பிடிக்கப்படுமாம். அதைப் பற்றி என்னிடமும், அப்பாவிடமும் சொன்னார். பாவமாக இருந்தது. ஆகவே நட்ட ஈடு தரவேண்டாம் என்று நானும் அப்பாவும் சொல்லிவிட்டோம் என்று சொல்லி இந்தப் பதிவை முடிக்க ஆசை; ஆனால் அப்படி ஏதும் நடக்கவில்லையே. கொடுத்த ஈட்டில் வேறு ஒரு ‘நம்மூரு’ சைக்கிள் வாங்கிக் கொடுத்தார்கள் அப்பா.


அதுக்குப் பிறகு சென்னைக்கு ஒரு முறை போகும்போது ஒரு ரயிலைப் பிடிக்க நினைத்து ஸ்டேஷன் போனால், அதுக்கு முந்திய ரயில் அப்போதுதான் வந்தது. அந்தக் காலத்தில் ரயில்கள் 100,150 நிமிடங்கள் தாமதாக வருவது சாதாரணம். அப்படி ஒரு நாள் அது போலும். பத்திரமாக சென்னை போய்ச் சேர்ந்தேன். நான் செல்ல நினைத்த ரயில் பெரும் விபத்துக்குள்ளானது. மதுரையில் இருந்த குடும்பத்தினருக்கு நான் எந்த ரயிலில் போனேன்; என்ன ஆனேன் என்ற விவரம் தெரியாமல், தவித்து ஒன்றரை நாட்களுக்குப் பிறகே நான் பத்திரமாக இருப்பதைத் தெரிந்து கொண்டார்களாம். இதையெல்லாம் ம.தொ.க.-வில் சேர்த்துக்கொள்ளக்கூடாதல்லவா?


அதே போல73-ல் பம்பாயிலிருந்து விமானத்தில் சென்னைக்கு வந்தேன் என்று பதிந்திருந்தேனல்லவா, அதில் 20 நிமிட ‘பறப்பு’க்குப் பின் விமானத்தில் ஏதோ கோளாறு என்று சொல்லி விமானம் பம்பாய்க்குத் திரும்பும்போது…பரவாயில்லையே, முதலில் மாட்டு வண்டி, பிறகு சைக்கிள்,அடுத்தது பஸ்,(ஒருதடவை லாரி, பிறகு கார்) ரயில்,என்று மரணம் தொட்ட கணங்களைப் பார்த்து விட்டு,இப்போது கடைசியாக விமானத்தில்தான் கண்டம் என்றாகிவிட்டதோ என்று சில மணித்துளிகள் மரணம் நெருங்கி பக்கத்தில் நின்றது போன்ற கற்பனையில் ‘சஞ்சரித்தது’ பற்றிய நினைவுகளையும் ம.தொ.க.-வில் சேர்த்துக்கொள்ளக் கூடாதல்லவா?

ஆனால்,1990-ல் வந்த முதல் myocardial infarction / மாரடைப்பு…அதைத் தொடர்ந்த பிரச்சனகள்…அறுவைச் சிகிச்சைகள்ம்..ம்..ம்..அதைச் சேர்த்துக் கொள்ளலாம்தானே?



Oct 07 2005 09:57 pm சொந்தக்கதை.. and நட்சத்திரப் பதிவுகள edit this
Rate this post at http://www.thamizmanam.com/ Current rating is:
(இதுவரை 3 பரிந்துரைகள்)ஹலோ, வந்தது வந்தீங்க; வந்ததுக்கு ஒரு வேட்டு / வோட்டு போட்டுட்டு போறதுதானே! சும்மா அப்டியே போய்ட்டா எப்படி??
9 Responses
awwai Says: after publication. e -->October 7th, 2005 at 10:46 pm e
Saar! unga blog-ukku ‘5-star rating’ default setting-a veikka mudiyaatha?Indha vaaram poora superstar range-la kalakitteenga… apparam enna rating mannagkatti ellam?Summma oru kutthu mathippa 10 podunga.“O”:)
இளவஞ்சி Says: after publication. e -->October 7th, 2005 at 11:32 pm e
சரளமான நடைல சுவாரசியமான விசயங்கள்னு கலக்கறீங்க தருமி சார்… ம்ம்ம்… நடத்துங்க உங்க ராஜ்ஜியத்தை
Maram Says: after publication. e -->October 8th, 2005 at 5:46 am e
உடல் நலனை கவனித்துக் கொள்ளுங்கள். பதிவு அதிர்ச்சியான அனுபவத்தைக் கூட சுவையாக பேசுகிறது. நடந்து முடிந்தவைகளைத் திரும்பிப் பார்ப்பது பெரும்பாலும் ஆனந்தம் என்றாலும் இதுபோன்றவையும் உண்டுதானே?…
துளசி கோபால் Says: after publication. e -->October 8th, 2005 at 6:44 am e
நல்லவேளை தருமி.கடவுள் காப்பாத்திட்டார்.
மூர்த்தி Says: after publication. e -->October 8th, 2005 at 7:41 am e
சுவையாகச் செல்கிறது தங்கள் ஆக்கம்.
தாணு Says: after publication. e -->October 8th, 2005 at 10:50 am e
இந்த வார நட்சத்திரமானதற்கு வாழ்த்துக்கள். பதிவு வாசித்துவிட்டு பின்னூட்டமிடுகிரேன்
தாணு Says: after publication. e -->October 8th, 2005 at 11:14 am e
துன்பம் வரும் வேளையிலே சிரிங்கன்னு சொன்னதை அப்பிடியே கடைப் பிடிக்கிறீங்க. ஆசிரியரிடம் கற்றுக்கொள்ள வேண்டியவை நிறைய இருக்குது. மாட்டு வண்டியில் ஆரம்பிச்சு மாரடைப்பில் கொண்டுவந்து நிறுத்திட்டீங்க! நலமுடன் வாழ வாழ்த்துக்கள்
Josaph Irudayaraj Says: after publication. e -->October 8th, 2005 at 4:13 pm e
நல்லா இருக்கு,
இதில் இன்னென்னு என்னன்னா எனக்கும் இந்த//over-oiling and over-hauling !//இல் நல்ல நினைவு இருக்கு
ஏன்னா நான் ரொம்ப சின்ன பையனா இருந்தப்ப, எனது சின்ன மாமா, ஒருத்தருக்கு வீட்டில் ஒரு ரெலே சைக்கிள் வாங்கி கொடுத்தாங்க. அதில உங்களமாதிரி தான் என் மாமாவும் அவரது பள்ளி நாட்களில் படு பந்தாவா ஊரில உலா வருவாரு… அது வாணாம் இப்ப
ஆமா அப்போது “ஹம்பர்” “ரோட் மாஸ்டர்” “ரெட்ஜ்” ன்னு கொஞ்ச வகைகளும் இருந்திச்சே தெரியுமா?
மத்தது உங்க வீட்டில “கிராம்மபோன்” இருந்திருக்குமே!….அதில் பாட்டு கேட்பதற்கு முன்னர் ஒரு பெரிய பந்தா காட்டும் வேலையெல்லாம் நடத்துவாங்களே பெரியவுங்க! பாத்திருக்கீங்களா?சாவி கொடுத்து, லாகவமாக ஒலித்தட்டை எடுத்து,திருப்பி பார்த்துetc.. etc..
பாம்பு மாதிரி தலையை வைத்துக்கொண்டு (sound box என்று நினைக்கிறேன்) ஒலித்தட்டின் மீது அது அசைந்து அசைந்து ஒலித்தட்டின் வழியே அது போவதும்…, பாடல் வருவதும்,…
அதன் முனையில் ஊசியை செருகுதல், பிறகு அந்த ஊசியை எடுத்து மணல் கடதாசியில் (sand Paper)உராய்ந்து தீட்டி திரும்ப பொருத்தி பாடல் கேட்பது…
அது பத்தி கொஞ்சம் மீட்டி பார்த்து எழுதுங்களே! பார்க்க ஆசையா இருக்கு.
dharumi Says: after publication. e -->October 8th, 2005 at 5:31 pm e
ஜோசஃப்,“அது பத்தி கொஞ்சம் மீட்டி பார்த்து எழுதுங்களே!” - என்ன இப்படி சொல்லீட்டீங்க. அதப் பத்தியும் உங்கள மாதிரி ரொம்ப சொல்லாட்டாலும் கொஞ்சமாவது இங்கே எழுதிட்டமில்ல …!

4 comments:

G.Ragavan said...

சைக்கிள்+கார்+பஸ்...ரயில்....விமானம்...இப்பிடி அடுக்குனா எப்படி? கப்பல்னு சொல்ல வாய் வருது...சொல்லக்கூடாதுன்னு மனசு தடுக்குது. ஆனாலும் தட்டீட்டேன். பயப்படாம கப்பல்ல போங்க. ஒரு கெட்டதும் நடக்காது.

ilavanji said...

மீண்டும் ஒருமுறை படித்தேன்! அருமை!

எங்கப்பாரும் எனக்கு ஒரு சைக்கிளு வாங்கிக்கொடுத்தாங்க. அதை எங்கெங்க போறனோ அங்கங்கயே மறந்து விட்டுட்டு வீட்டுக்கு வந்துருவேன்! அப்பறமா திரும்ப போய் எடுத்துக்கிட்டு வர ஒரு நடை போவேன்! சைக்கிள் மேல அம்புட்டு அக்கறைன்னு இல்லை! பசங்க கூட சோடிபோட்டு சுத்தறதுல வர்ற மறதி! :)

ஆமா.. இந்த பதிவை மட்டும் எப்படி மேல கெளப்புனீங்க? தமிழ்மண பட்டைய வேற காணோம்???

குட்டிபிசாசு said...

நீங்க இந்தகதை எல்லாம் சொன்னதும், என்னோட அப்பா ஞாபகம் தான் வருது. அவருக்கு ராலி, ஹம்பர் வண்டிதான் பிடிக்கும்.நான் முதல்ல அவரோட 'ஹம்பர்' வண்டில தான் ஓட்ட கத்துகிட்டேன்.

வடுவூர் குமார் said...

ராலே,18" என்ற பழைய நினைவுகளை கிளப்பிவிட்டுவிட்டீர்கள்.
நான் மிதிவண்டி வாங்கும் போது ராலே தான் அதிக விலை. ஹீரோ அப்போது தான் சந்தையில் நுழைந்திருந்தது அதோடில்லாமல் விலையும் கொஞ்சம் கம்மி,அதனால் என் அப்பா கண்ணை மூடிக்கொண்டு ஹீரோ வாங்கிக்கொடுத்தார்.
மிதிவண்டி- பரம்பரை சொத்து- அப்போது,இப்போது?
பையனை பைக் கற்றுக்கொள்ளடா என்றால்,ஒரே தரவையாக கார் கற்றுக்கொள்கிறேன் என்கிறான்.

Post a Comment