*
தான் கைது செய்த படிப்பறிவில்லா இளைஞர் ஒருவரிடம் காவல் துறை அதிகாரி ஒருவர் அவரைச் சீண்டும் வண்ணமாக, ‘நக்சல்பாரிகள் வியட்நாமைப் பற்றி அதிகமாகப் பேசித் திரிகிறீர்களே... அந்த வியட்நாம் நாடு எங்கே இருக்கிறது என்று பார்த்துச் சொல்... பார்ப்போம்’ என்று உலக வரைபடத்தை விரித்திருக்கிறார். அந்த இளைஞரோ வெகு அமைதியாக, தன் கரத்தை நெஞ்சில் வைத்து, ஆணித்தரமாக, ‘அது என் இதயத்தில் இருக்கிறது’ என்றாராம்.
முன்பு பிரிவுகள் ஏற்படாத மாவட்டமான பஸ்தார் 39,114 சதுர கிலோ மீட்டர் அளவில் சத்தீஸ்கரின் தென் பகுதியில் விரிந்து கிடந்தது. வரைபடத்தில் கிழிந்த ஒரு பகுதி காற்றில் அல்லல்பட்டு அலைவது போல் கொடுமைகளுக்கும் பல தடங்கல்களுக்கும் நடுவில் அதன் மையப் பகுதி தடுமாறிக் கொண்டிருக்கிறது. இந்தப் பகுதிதான் இந்திய அரசு மாவோயிஸ்ட் கெரில்லாக்களின்மீது எழுப்பியுள்ள பெரும் போரின் மையப் புள்ளி. கம்பி வைத்த முள் வேலிகளும், மேலே பறந்து திரியும் ஹெலிகாப்டர்களும், இங்கிருக்கும் காட்டுப் பகுதிகளைப் பிளந்துகொண்டு செல்லும் நீண்ட நெடுஞ்சாலைகளும், சுரங்கத் தோண்டல்களும் இப்போரில் இந்த அரசு கட்டி எழுப்பியுள்ளவை. ஆனால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) அமைத்த ‘மக்கள் அரசு’ வரையறை செய்யப்படாத எல்லைகளையும், ரகசியமான தகவல்களையும் கைவசம் வைத்திருந்தது. இந்த ‘இரண்டாம் அரசின்’ குடிமக்கள் நிச்சயமில்லாத, ஆபத்துகள் மிகுந்த பாதையைத்தான் தேர்ந்தெடுத்திருந்தனர். அந்தப் பயணத்தின் முடிவு ஒரு நிச்சயமான இறுதிப் புள்ளி அல்ல; ஆனாலும் அந்தப் பயணம் மிகுந்த மன உறுதியோடு மேற்கொள்ளப்பட்டது.
இந்திய அரசு எந்தத் தடையுமில்லாத அரக்கத்தனத்தோடு போரிடுவதை எதிர்ப்பவர்களுக்காகவும், மாவோயிஸ்டுகளின் தியாகத்துக்கு மரியாதை கொடுக்கும் அதே சமயம் அவர்கள் தேர்ந்தெடுத்துள்ள பாதையோடு உடன்பட மறுப்பவர்களுக்காகவும் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. தீவிரவாதத்தை அடக்க தீவிரவாதத்தை அவிழ்த்துவிடுவதன் மூலம் ஊழலும், முரட்டு மிருகத்தனமும் மட்டுமே சமூகத்தில் வளரும் என்ற கருத்தோடு இருப்பவர்களுக்காகவும் இது எழுதப்பட்டுள்ளது.
*
No comments:
Post a Comment