Sunday, April 28, 2019

1041. ஒரு ”நடிகனின்” (!!) கதை .... 2



8.  https://dharumi.blogspot.com/2019/06/1058-6.html



*

ஏண்டா தருமி ... ஒன்றரை நிமிடம் வருவியா? அதுக்கு இத்தனை போஸ்ட் போடணுமா? ... இப்படி மனசு ஓரத்தில இருந்து ஒரு சத்தம் வருது. 

நான் அதுக்குப் பதில் சொல்லிட்டேன்.

 ”... அட   .. போடா.. இது என் ப்ளாக். என் சொந்தக் கதை ... சோகக் கதை எல்லாம் சொல்றதுக்காகத் தானே இத ஆரம்பிச்சேன். அப்புறம் என்ன?”. 

***    ***    ***.

சாந்த குமார் .. பழைய மாணவன்ர் .. முதல் படம் மெளனகுரு. படம் முடிந்து வெளியான பிறகு சில நாள் கழித்து வீட்டிற்கு என்னைப் பார்க்க வந்திருந்தான்ர். போகும் போது அப்படத்தில் வந்த ஒரு பாத்திரத்திற்கு என்னை அழைக்கலாமா என்று நினைத்தேன் என்று சொன்ன போது அழைத்திருக்கலாமே என்றேன். அடுத்த படத்திற்குக் கூப்பிடுகிறேன் என்று சொல்லிச் சென்றார். தனிப்பட்ட காரணங்களால் ஏழாண்டுகள் ஓடி விட்டன. 

சில மாதங்கள் முன் ஒரு போன் வந்தது. எடுத்ததும் “சாந்தகுமார் .. 93 ZOO 39” என்று கேட்டது. ’பெயர் சொன்னாலே தெரியுமே’ப்பா .. அதற்கு கல்லூரி எண் எல்லாம் எதற்கு?’ என்றேன். அந்த எண்ணைச் சொல்ல ஒரு ஆசை என்றதொரு பதில் வந்தது. அடுத்த படம் எடுக்கப் போகிறேன். இன்னும் இரு நாளில் பூசை. கூப்பிட நினைத்திருந்தேன். ஆனால் அவசரமாக தேதி குறிப்பிட்டாகி விட்டது, ஒரு ரோல் கொடுத்தால் செய்றீங்களா? என்ற கேள்வியும் வந்தது. சரி என்று சொன்னேன்.

சின்னாள் கழித்து ராஜா என்ற துணை இயக்குனர் சென்னை வர முடியுமா என்றார். சென்றேன். அவரைச் சந்தித்தேன். இயக்குனர் வெளியே சென்றிருப்பதாகக் கூறி எனது ரோல் என்னவென்று சொன்னார். நீங்களே சொல்லுங்களேன். போன பதிவில் என்னென்ன ரோல் .. அதற்கான வசனம் என்னவென்று சொல்லியிருந்தேனே .. அதில் எது எனக்கு கிடைத்திருக்கும் என்று நினைக்கிறீர்கள்? என் அனுமானம் சரி. அந்த நான்கில் ஒன்று எனக்குக் கிடைத்த வேடம். 

ராஜா எனக்கு டாக்டர் வேஷம் என்றார். நான் நம் படங்களில் டாக்டர்கள் வழக்கமாகப் பேசும் வசங்களைக் கூறினேன். அதெல்லாம் இல்லை. கதையில் முக்கிய அங்கம் வகிக்கும் ரோல் என்று சொல்லி சந்தோஷப்பட வைத்தார்.
எனக்கும் தெரியும். இந்த வயதில் பிறகென்ன “தாதா - 75” என்ற ரோலா எனக்குக் கொடுக்க முடியும்.சட்டைக்கெல்லாம் அளவெடுத்தார்கள். சிறிது நேரம் கழித்து சாந்தக்குமார் வந்து பேசிக்கொண்டிருந்தார். எங்கே .. எப்போது என்பதை பிறகு தெரியப்படுத்துவதாகக் கூறினார்கள்.

இயக்குனர் சாந்த குமார்



சில நாள் கழித்து திரைபடக் குழுவின் மேனேஜர் ஷூட்டிங் பாலக்காடில் எனவும், அங்கு   வர வேண்டிய தேதிகளைக் கொடுத்தார். துணைக்கு ஒருவரை  அழைத்து வரலாமென்றார். நண்பன் ரவி உடன் வர ஏற்பாடுகளைச் செய்து கொண்டான். ரயிலுக்கு டிக்கட் வந்தது. அதோடு இன்னொரு நண்பரும் எங்களோடு சேர்வார் என்றார்கள். அவர் சாந்தகுமாரின் கல்லூரித் தோழர், கல்லூரிக் கலைக் குழுவின் உறுப்பினர். அவர் வந்ததும் பார்த்தால் ரவியும் அவரும் பக்கத்து பக்கத்து வீட்டில சில காலம் இருந்திருக்கிறார்கள். உலகமே சிறுத்துப் போனது போல் உணர்ந்தோம். ஒருவ்ருக்குத் தெரிந்தவர் மற்றவர்களுக்கும் தெரிந்தவர்களானோம். ஐந்து மணி நேரப் பயணம் அரட்டையிலேயே கழிந்தது.

இறங்கும் போது நல்ல மழை. கார் வந்து அழைத்துச் சென்றது. விடுதிக்குச் சென்றோம். அடுத்த நாள் காலை “ஸ்பாட்டு”க்குச் செல்ல வேண்டும் என்றனர். இளம் காலையில் அங்கே போனோம். ஒரு பழைய பள்ளி. அவர்கள் சொன்ன கதைக்கு முழுமையான பொருத்தமான இடம். எப்படி இப்படிப்பட்ட இடம் பற்றிய தகவல் கிடைத்து அதை ஒழுங்கு செய்வீர்கள் என்று கேட்டோம். அதற்கென்றே ஒரு குழு வேலை செய்யுமாம். அங்கு நடந்தது எல்லாமே ஆச்சரியமாகத்தானிருந்தது.  நல்ல ஒரு கனவுலகம் தான்!


பாலக்காடு  - இறங்கிய இடம்



பாலக்காடு - பழைய கட்டிடம். ஏறிய இடம்.



தங்கிய விடுதி




MNC என்றால் எல்லோருக்கும் தெரியும். எனக்கு இந்த இடத்தைப் பார்த்ததும் MIC - Multi Industrial Complex  என்று தோன்றியது. பல துறைக்காரர்கள் குழுமி ஒரு வேலையைச் செய்து கொண்டிருந்தார்கள். படம் எடுக்கும் இடத்தில் இருந்த அனுபவம் நிறைய வித்தியாசமாக, புதிதாக எனக்கு இருந்தது.. பரபரப்பாக அனைவரும் இயங்கிக் கொண்டிருந்தனர். வகை வகையாக நிறைய வாகனங்கள். உள்ளே. ஒரு குழு துணிகளைத் துவைத்துப் போட்டு  காபி decoctionல் அதைத் தோய்த்து   வெயிலில் காய வைத்துக் கொண்டிருந்தது. இன்னொரு குழு எல்லா மின்சார வேலகளையும் செய்து கொண்டிருந்தது. மின்சாரமும் அந்த வண்டியிலிருந்து எல்லா இடங்களுக்கும் மின்சார சப்ளை செய்து கொண்டிருந்தது. இன்னொரு குழு முழுமையாக பெரிய பெரிய லைட்களை வைத்து ஒழுங்குபடித்திக் கொண்டிருந்தனர்.  இன்னொரு வண்டி ஒரு தையலகமாக இருந்தது. costumes என்பதற்கு ஒரு தனி வண்டி. 


http://ithutamil.com/mounaguru-director-santhkumars-next-movie-mahamuni/

தனியாக இன்னொரு குழு உணவு தயாரிப்பில் இருந்தது. சாப்பிட்ட இரண்டு நாளும் நல்ல சாப்பாடு.

DOP - DIRECTOR OF PHOTOGRAPHY அருண் பத்மநாபன். இளம் வயதுக்காரர். முதல் முறையாக இப்படத்தின் DOP. ரொம்ப வித்தியாசமான ஆள் என்று கேள்விப்பட்டேன். நான் ஓரிரு சீன்களைப் பார்த்தேன். லைட்டிங் ரொம்ப வித்தியாசமாக இருந்தது. ஒரு சீனில் .. பட்டப் பகலில் .. ஒரு சீன்.  இருட்டில் இரு குண்டு பல்புகளிலிருந்து மட்டும் வெளிச்சம். அழகாக, வித்தியாசமாக இருந்தது.

இயக்குனரின் ஆசிரியர் என்று பலருக்கும் அறிமுகம் செய்யப்பட்டேன் - கதாநாயகனுக்கும் சேர்த்து. ஆகவே நல்ல மரியாதை கிடைத்தது. அட.. சாப்பிடப் போகும் இடத்திலும் என் மீது அத்தனை கரிசனம்.

BTS -Behind the shoot photographer என்று ஒருவருக்குத் தனி வேலை. அவர் படம் ஷூட்டிங் நடக்கும் போது அதன் பின்னால் வேறு படங்கள் எடுத்துத் தொகுப்பாராம். அந்த வேலை ஜார்ஜ் என்ற எனக்கு முன்பே நன்கு தெரிந்திருந்த எங்கள் கல்லூரி மாணவன். FBயில் அழகழகாக இயற்கைக் காட்சிகளை அவர் எடுத்த படங்கள் தொடர்ந்து வரும். அவரும், stills photographer ஆனந்த் என்பவரும் உலக்கைகள் மாதிரி லென்ஸ்கள் வைத்து சுற்றிக் கொண்டிருந்தார்கள்.. அவர்கள் எடுத்த படங்கள் அடுத்த பதிவில் வரும்.


பாபி ஜார்ஜ் - BTS photographer
ANAND - STILLS PHOTOGRAPHER


19,20,21 என்று அந்த இடத்தில் அனுமதி கொடுத்திருந்தார்கள். அங்கு பொதுத் தேர்தல் 24ம் தேதி போலும். படம் எடுத்துக் கொண்டிருந்த பள்ளியில் தேர்தல் சாவடிகள் உண்டு. ஆகவே 21ம் தேதியே எல்லாம் முடிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம். வேலைகள் ஜரூராக நடந்தன. அதனால் தானோ என்னவோ எங்களுக்கு சில மேக்கப் வேலைகள் முடிந்தும் அன்று எங்கள் சீன் எடுக்கப்படவில்லை. தொடர் காட்சிகள் விரைந்து போய்க்கொண்டிருந்தன.

இதில் எனக்கொரு தனி சோகம். சென்னையிலேயே என்னிடம் தலையில் லேசாகக் கருப்படிக்க வேண்டியதிருக்கும். சரியா என்று கேட்டிருந்தார்கள், சரி என்று சொல்லியிருந்தேன். எனக்கு மேக்கப் போடும்போது அதை நான் வேறு நினைவு படுத்தி விட்டேன். இருக்கிற நாலைந்து முடியில் சிறிது


VENKY
கருப்படித்தார்கள். வெள்ளை மீசையும் சிறிது கருப்பானது. கண்ணாடி காண்பித்தார்கள். யாரோ ஒருத்தரைப் பார்த்தது போல் இருந்தது. ஏனெனில் கடைசி முப்பது ஆண்டுகளாக வெள்ளை முடியோடு மட்டுமே என் முகத்தைப் பார்த்திருக்கிறேன். இப்போது கருப்படித்ததும் ரொம்ப வித்தியாசமாக எனக்குத் தோன்றியது. அதுவும் என் முகவும் மிக cruel ஆக எனக்குத் தெரிந்தது என்பது முதல் சோகம்.

நானே தான் ...!
இரண்டாவது சோகம் என் மூஞ்சி எனக்குப் பிடிக்காத ஒரு அரசியல்வாதி முகம் போல் தோன்றியது. முதல் சோகத்தை நண்பன் ரவியிடம் சொன்னேன்.

RAVI
முதலில் அவன் ஒரு பொய் சொன்னான். அப்படியெல்லாம் இல்லை. புதிதாகப் பார்ப்பதால் உங்களுக்கு அப்படி தோன்றலாம் என்றான். அதோடு பார்ப்பதற்கு விஜய் படத்தில் வரும் மகேந்திரன் மாதிரி இருக்கிறது என்று எடுத்து விட்டான். ஆனால் அவன் நல்ல பயல். அதனால் அவன் சொன்ன பொய்யில் அவனால் நீடித்திருக்க  முடியவில்லை. நாலைந்து நிமிடத்தில் என்னிடம் வந்து, ஆமாம் ..  cruel ஆகத் தானிருக்கு என்றான். இரண்டாவது சோகம் என்னன்னா ... அது நான் சொன்னேனே .. எனக்குச் சுத்தமாகப் பிடிக்காத ஒரு அரசியல்வாதியின் மூஞ்சி மாதிரி இருந்தது. உங்களுக்கும் அந்த மூஞ்சி ராமதாஸ் முகம் மாதிரி தெரியுதா இல்லையான்னு சொல்லுங்க ...

தலையைக் கொடுத்தாச்சு... இனி என்ன பண்ண...? நான் பார்த்த முகம் இல்லாமல் வேறொரு முகத்தோடு இருக்கப் போகிறேன். அதை நானே பார்க்க படம் வெளிவரணும். அதுவரை பொறுமையோடு இருந்தாகணும். என்னமோ   
போங்க ...!

அட ... நல்ல மூஞ்சுக்கும் டச்சப் !














பகலில் மதுரை வெயிலுக்கு எந்த அளவிலும் சோடையாகவில்லை. கொளுத்தியது. மின்சாரம் கிடையாது அல்லது கொடுக்கப்படவில்லை. வகுப்பறைகளில் விசிறிகள் உண்டு.  ஆனால் அதைப் போட ஸ்விச் கிடையாது.  காற்று வரும் இடமாகப்பார்த்து அவ்வப்போது இடம் மாற்றிக் கொண்டிருந்தோம். ஆனால் இருந்த இரு நாளிலும் மாலையில் மந்தாரமும் மழையும் குளிரூட்டின.

4 comments:

G.M Balasubramaniam said...

நடித்தபகுதி காணொளியாகுமா

தருமி said...

இல்லை ஐயா. இதிலேயே நான் கதை, கதைமாந்தர்கள் பற்றி ஏதும் சொல்லாமல் நறுக்கி எழுதி வருகிறேனே. என அனுபவங்கள் மட்டும் பற்றிப் பேசுகிறேன் - 3 பதிவில். அதன்பின் படம் வந்த பிறகு தான் மீதிக்கதை ஏதும் சொல்ல நினைத்தால் சொல்ல முடியும். அதுவரை எல்லாம் மூட்டி வைத்த ரகசியம் தான்.

Raj said...

.. 86 ZOO 36 iyya please correct it as 93 ZOO 36

தருமி said...

raj, are you sure of the reg no of shantha? may i know who u r? a class mate?

Post a Comment