Friday, June 15, 2012

574. THE GNOSTIC GOSPELS ... 2

*
*

*

THE GNOSTIC GOSPELS



மற்ற  பதிவுகள்: 

.....................   முதல் பதிவு
.....................   இரண்டாம் பதிவு 
.....................   மூன்றாம் பதிவு  
 ...................     நான்காம் பதிவு 
....................    ஐந்தாம் பதிவு 
....................   ஆறாம் பதிவு
....................    இறுதிப் பதிவு 


THE CONTROVERSY OVER CHRIST'S  RESURRECTION:

HISTORICAL EVENT OR SYMBOL?



ஏசு கல்லறையிலிருந்து உயிர்த்தெழுந்தார். இதுவே - orthodox Christians - பழமைக் கிறித்துவத்தின் மிக முக்கியமான, அடிப்படையான நம்பிக்கை. (3)

கி.பி. 190 வருடத்து அறிஞர் டெரூலியன் (Terrullian) இதைப் பற்றிச் சொல்லும் போது, ‘இது மிகவும் முட்டாள் தனமானது; ஆனாலும் இதை நம்பியேயாக வேண்டும்'  என்கிறார்.

ஆனால் heretics என்றழைக்கப்படுவோர் இதனை நம்புவதில்லை. இதைப்பற்றிச் சொல்லப்படுவதையெல்லாம் அப்படியே எழுத்துக்கு எழுத்து நம்ப வேண்டியதில்லை என்பர்.  Gnostic Christians இந்நிகழ்வை பல்வேறு விதமாக உருவகப்படுத்துவார்கள். இதை ஊனோடும் உயிரோடும் தொடர்புபடுத்தாது, ஆன்மாவோடு தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டும் என்பார்கள். ஆனால் டெரூலியன் இந்த நம்பிக்கையில்லாதவர்கள் கிறித்துவர்களாக இருக்க முடியாது; அவர்கள் எல்லோருமே பதிதர்கள் என்கிறார்.(5)

லூக, மார்க் இருவரும் ஏசு வேறு உருவத்தில் தங்களிடம் வந்ததாகச் சொல்கிறார்கள். ஜானின் கூற்றும் இவ்வாறேயுள்ளது. மரி மக்தலேனா கல்லறையின் முன் ஒரு தோட்டக்காரர் இருப்பதாகத்தான் முதலில் நினைக்கிறார். பால் ஏசுவின் குரலை கேட்டது இருவேறு விதமாகக்  கூறப்படுகிறது. பால், ஏசுவின் மீள் உயிர்ப்பு ஒரு மர்மம் ( a mystery) என்கிறார்.

புதிய ஏற்பாட்டில் உள்ள வசனங்கள் பல்வேறு மாறுபட்ட விளக்கங்களுக்கு உரியதாக இருந்தும், ஏன் பழமைக் கிறித்துவர்கள் (Orthodox Christians) அவைகளை ஒரு புறம் தள்ளி, ஏசு மீண்டும் உயிர்ப்பித்தார் என்பதை மட்டும் வலியுறுத்துவது ஏன்? இக்கேள்விக்கு என்னால் முழுமையாகப் பதில் சொல்ல முடியாது. இருப்பினும் இது நிச்சயம் அரசியல் காரணங்களால் மட்டுமே என்று சொல்ல முடியும்.  பீட்டர் போன்றவர்கள் கிறித்துவத் தலைமைக்கு உரிமை கோர வழி வகுக்கும் அரசியல் காரணத்திற்காகவே இந்த நம்பிக்கை வளர்க்கப்பட்டிருக்க வேண்டும். (6)

இரண்டாம் நூற்றாண்டிலிருந்து கிறித்துவத் தலைமை இன்றுவரை நீடிப்பதற்கு இந்த நம்பிக்கையும் ஒரு காரணம். Gnostic Christians இந்த நம்பிக்கையிலிருந்து மாறுபடுவதால் அவர்கள் தலைமைப் பதவிக்கு வருவதற்கான வழிகள் அடைபடுகின்றன. அவர்கள் பழமைக் கிறித்துவர்களோடு (Orthodox Christians) போட்டியிட்டாலும், அவர்கள் நம்பிக்கையற்றவர்கள் - heretics - என்றே கருதப்படுகின்றனர்.

அரசியலும் மதமும் இணைந்தே முதலிலிருந்து செயல்பட்டு வந்துள்ளன. வெவ்வேறு விதமான கிறித்துவம் கிளைத்திருந்திருக்கின்றன. ஒருகுழு மற்றொரு குழுவைத் தாக்கி வந்துள்ளன. (7)

மரிய மக்தலேனா  உயிர்த்தெழுந்த ஏசுவை முதலில் பார்த்தார். இருப்பினும் பீட்டரே முதலில் பார்த்ததாகத்தான் இன்றுவரை பழமைக் கிறித்துவர்களும், சில பிரிவினைச் சபைகளும்  தொடர்ந்து சொல்லி வருகின்றன. ஏனெனில் பீட்டர் முதல் பிஷப் (போப்) ஆவதற்கான அடிப்படையே ஏசுவை முதலில் அவர் பார்த்தார் என்பதே ஒரு காரணமாகப் போயிற்று. இரண்டாம் நூற்றாண்டில் ஏசுவின் சகோதரர் ஜேம்ஸ் முதலில் ஏசுவைப் பார்த்தார் ( மரிய மக்தலேனா அல்ல.) என்று சொல்லப்பட்டது. (8)

கார்ல் ஹோல் - "Karl Holl - என்ற ஜெர்மானிய அறிஞர் உயிர்த்த ஏசுவைப் பார்த்தவர்கள் பட்டியலே மத ஆளுமைக்குக் காரணமாயிற்று என்கிறார். இந்தக் காரணம் இந்த 2000 ஆண்டுகளாகத் தொடர்ந்து வருவதாகவும் சொல்கிறார். பழமைக் கிறித்துவர்கள் இதில் மிகவும் தொடர்ந்த ஒரு கட்டுப்பாட்டில் இருந்து வருகிறார்கள். இன்றைய போப் தான் ஏசுவை முதலில் பார்த்த பீட்டரின் வாரிசு என்ற உரிமையோடு உள்ளார். (10)

ஆனால் Gnostic Christians இந்த நம்பிக்கையில்லாமல் இருப்பதோடன்றி, இந்த நம்பிக்கையை ‘முட்டாள்களின் நம்பிக்கை’ -faith of the fools - என்கிறார்கள். ஏசு உயிர்த்தார் என்பதை ஆன்மிகப் பார்வையில் பார்க்க வேண்டும். அதை உடல் தொடர்பாக நினைக்கக் கூடாது.

நாக் ஹம்மாதி கண்டுபிடிப்புக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்ட Gospel of Mary என்ற gnostic பிரதிகளில் ஏசுவின் உயிர்ப்பு கனவில் அல்லது வலிப்பின் பிரம்மையில்  - visions received in dreams or in ecstatic trance - கிடைத்தவைகளே என்று சொல்லப்பட்டுள்ளது. (11)

நாக் ஹம்மாதி பிரதிகளில் ஒன்றான பிலிப்பின் விவிலியம் ஏசுவின் உயிர்ப்பை நம்பும்  கிறித்துவர்களைக் கேலி செய்கிறது. (12)

பழமைக் கிறித்துவர்களின் ஒரு பெருந்தலைவர் ஐரீனியஸ் - Irenaeus  -  நான்கு விவிலியங்களும் அந்தந்த ஏசுவின் சீடர்களால் எழுதப்பட்டது என்று நம்புகிறார். ஆனால் மாத்யூ, மார்க். லூக், ஜான் இவர்களைப்பற்றிய வரலாறு  ஏதும் நமக்குத் தெரியாது. (17)

gnostic பிரதிகளின் ஆசிரியர்கள் பன்னிரண்டு சீடர்களைத் தாண்டியுள்ள மற்றவர்களையே அதிகமாகக் குறிப்பிடுவார்கள். அவர்கள் - பால், மேரி மக்தலேன், ஜேம்ஸ். இவர்கள் பீட்டரையும் சேர்த்த அந்தப் பன்னிருவருக்கும்   gnosis கிடைத்ததாகக் கருதுவதில்லை.

Gospel of Mary சீடராகக் கூட கருதப்படாத மேரி மக்தலேனாவிற்கே கடவுளின் காட்சி கிடைத்ததாகவும், பீட்டரை விட இவருக்கே அதிக ஞானம் கிடைத்ததாகவும் கூறுவர். Dialogue of Savior நூலில் இவருக்கே முக்கிய இடம் கொடுக்கப்படுகிறது. மற்ற சீடர்களை விடவும் இவரே மிக மேம்பட்டவர் என்றும் கூறுகிறது.  இவர் ‘எல்லாம் தெரிந்தவர்’ என்று - " woman who knew the All
"  அழைக்கிறது. (22)

Gnostic கருத்துக்களில்  ‘ஆன்மா’ ஒரு மனித உடலில் தங்கியிருப்பதாகக் கருதப்படுவதுண்டு. உடல் ஒரு கருவியாக இயங்குகிறது. இந்தக் கருத்துக்கள் கிரேக்க தத்துவ வழக்கங்களுக்கு மிக அருகில் இருப்பதாகக் கருதப்படுவதுண்டு. அதோடு, இந்து, புத்த வழக்கங்களுக்கும் மிக அருகாமையில் இருப்பதாகக் கருதுவதுண்டு. (27)












 *

Monday, June 04, 2012

573. கிறித்துவம்


கிறித்துவம் 16-ம் நூற்றாண்டில் கத்தோலிக்கம், பிரிவினைச் சபை என்று இரண்டாகப் பிரிந்தன. ஆனாலும் அதற்கு முன்பேயே கிறித்துவம் பல பிரிவுகளாகவும் இயங்கி, ஒன்றோடு ஒன்று இயைந்தும் வந்துள்ளன. ஆனால் 16-ம் நூற்றாண்டு ஏற்பட்ட பிரிவு இம் மதத்தை இரு தனிக்கூறுகளாகப் பிளந்தன - கத்தோலிக்கம் & பிரிவினையாளர்கள் (protestants) என்று பிளவு பட்டன. தலைமைகளும் பிரிந்தன. வேறு பல வேறுபாடுகளும் கிளைத்தெழுந்து இரு 'அணிகளும்' இனியும் ஒன்றாக இணையாது என்ற நிலைக்கு வந்துள்ளன. ஏனெனில் அடிப்படையில் சில முரண்பாடுகள் .. வேற்றுக் கருத்துகள்...   கத்தோலிக்கத்தில் புனிதர்கள் (saints), மேரியன்னை, ஏசு, பிதா என்று வகை வகையாகக் கும்பிடுவார்கள். ஆனால் பேச்சளவில் மட்டும் புனிதர்களையும், மேரியையும் கும்பிடுவதில்லை என்று சொல்லிக் கொள்வார்கள். ஆனாலும் தனிப்பட்ட புனிதர்கள், மேரியன்னை மேல் மிகுந்த பக்தி கொண்டோர் அதிகம். கடவுளை மூன்று  ஆட்களாக, ஆனால் ஒரே தெய்வமாகக் கருதும் ஒரு விநோதம் உண்டு. Holy Trinity என்பார்கள். இதை யாரும் விளக்க முடியாது. இஸ்லாமில்விதிவிளக்கப்பட முடியாதது என்பார்கள். அது போல், புனித அகுஸ்தினார் போன்ற புனிதர்களின் பெயரைச் சொல்லி, இதை மனித மூளையினால் புரிந்து கொள்ள முடியாத ஒரு தேவ ரகசியம் என்று சொல்லித் தப்பிப்பதுண்டு.


இந்த Holy Trinity-ல் கத்தோலிக்க மரபில் ஏசுவிற்குத்தான் முதலிடம். பரிசுத்த ஆவி எனப்படும் Holy Ghost பிரிவினைச் சபைக்காரர்கள் முக்கிய இடம் கொடுத்த பின் கத்தோலிக்கர்களும் இப்போது ஏறத்தாழ இருபது முப்பது ஆண்டுகளாக அவர்களும் சிறப்பிடம் கொடுக்க ஆரம்பித்துள்ளார்கள். பொதுவாக, கடவுள், கர்த்தர் போன்ற வார்த்தைகளுக்கு ஏசு மட்டுமே உரித்தானவராகத்தானிருந்தார். இப்போது கொஞ்சம் வேறுபாடுகள் வந்துள்ளன. பரிசுத்த ஆவிக்கும் கத்தோலிக்கத்தில் இப்போது தனிச் சிறப்பும் சேர்ந்துள்ளது. 


இப்பத்தியில் நான் கூறியிருப்பது எல்லாமே இத்தனை ஆண்டுகளாகக் கத்தோலிக்கத்தைப் பின்பற்றிய எனது அனுபவத்தின் மேல் கூறப்பட்டவையே. எனது சிறுவயதில் பரிசுத்த ஆவிக்கு ஜெபங்களில் அதிக சிறப்பிடம் இருந்ததில்லை. பிரிவினைக்காரர்கள் தாங்கள் நடத்தும் பிரச்சாரக் கூட்டங்களில் தான் நான் அதிகமாக இந்த பரிசுத்த ஆவியைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறேன். இப்போது கத்தோலிக்கரும் பரிசுத்த ஆவிக்கு சிறப்பிடம் கொடுக்க ஆரம்பித்ததை கடந்த 30 ஆண்டுகளில் தான் அதிகம் பார்க்கிறேன்.


பிரிவினைக்காரர்கள் புனிதர்களின் பெயர்களை வைத்துக்கொள்வது, புனிதர்களில் பெயர்களில் ஆலயங்களைக் கட்டுவது இதோடு சரி. அவர்கள் மேல் தனிப்பட்ட ஜெபங்களோ, நம்பிக்கைகளோ வைப்பதில்லை. அதே போல் மரியன்னை மீது கத்தோலிக்கர் வைத்துள்ள ஈடுபாடு இங்கில்லை. ஏசுவின் அன்னை என்பதோடு அவர்கள் மரியாதை நின்றுவிடும். அவரை நோக்கி ஜெபங்கள் ஏதும் செய்யும் பழக்கம் கிடையாது. பிரிவினைக்காரர்களுக்கு சுதனும் (அதாவது, ஏசுவும்) பரிசுத்த ஆவியும் மிக முக்கியமானவர்கள். நாட்கள் ஆக ஆக என் வாழ்வில் நான் பார்த்தது என்னவெனில், பிரிவினைக்காரர்களுக்குப் பரிசுத்த ஆவி மேல் அதிக பக்தியும் நம்பிக்கையும் உண்டு. இவர்களது சத்தமானகோஷத்தால் ஈர்க்கப்பட்ட கத்தோலிக்கரும் பரிசுத்த ஆவி மேல் இப்போது அதிக ஈடுபாட்டைக் காண்பிக்க ஆரம்பிக்க வேண்டியதாயிற்று.


பழைய ஏற்பாட்டில்பிதாவிற்குத்தான் முக்கிய இடம். புதிய ஏற்பாட்டில் ஏசுவிற்கே முக்கிய இடம். சில இடங்களில் மட்டும் பரிசுத்த ஆவிபற்றிப் பேசப்படும். ஆனால் இதையும் தாண்டி யெஹோவாஎன்றோரு சின்ன அமைப்பும் உண்டு. இவர்கள் யூத வழி போல், பிதாவை மட்டுமே கடவுளாகக் கொள்பவர்கள். இவர்களிடம் சுதன், பரிசுத்த ஆவி இருவருக்கும் இடமில்லை!
 ‘யெஹோவாக்காரகளும், பெந்தகோஸ்தே சபையினரும் மதத் தீவிரவாதிகள் என்பது என் கணிப்பு. பெந்தகோஸ்தே சபையினர் பரிசுத்த ஆவி மேல் அதிக நம்பிக்கையுள்ளவர்கள். அதோடு இதிலும் சிலர் தாங்கள் நோய்வாய்ப்பட்டாலும் மருந்து ஏதும் எடுத்துக் கொள்ள மாட்டார்கள். சாமி கொடுத்ததை சாமியே எடுக்கட்டுமே என்ற நம்பிக்கை. நோய்வாய்ப்பட்ட சிலரைப் பார்க்கும்போது பாவமாக இருக்கும்,. வலி நீங்குவதற்குக் கூட இவர்கள் மருந்து ஏதும் எடுக்க மாட்டார்கள்.  புண்ணைக் கொடுத்தவர் மருந்தையும் கொடுத்திருக்கிறாரே என்றாலும் பிடிவாதமாக ம்ருந்தை ஒதுக்கி விடுவார்கள். உடைகளிலும் தனித்து விளங்குவார்கள். பாரதி ராஜா ஸ்டைலில் புனிதப் புறாக்கள் மாதிரி உடை! இவர்களைப் பார்க்கும்போது  சிரிக்காமல் இருப்பது கொஞ்சம் கஷ்டம் தான்! 


யெகோவா சபைக்காரர்கள் ஏறத்தாழ இஸ்லாமியமும் யூதமும் சேர்ந்த ஒரு கலவை மாதிரி போலும். ஏக இறைத் தத்துவம் - அதாவது பிதாவை மட்டும் எடுத்துக் கொள்வார்கள். Holy Trinity தத்துவம் இங்கு கிடையாது. ஆனால் பிதாவிடம்/கடவுளிடம் போவது ஏசுவின் வழியாக மட்டும். ஏசு சொன்னது போல் அவரே பிதாவிடம் போகும் வழி. பரிசுத்த ஆவி ஒரு கடவுளாக or at least part of Trinity or part of a god ஆக மதிப்பிடப்படுவதில்லை. It is just an 'energy' and not an entity.


இவர்களிடம் ஒரு வினோதம்! ரத்தத்தின் மேல் இவர்களுக்கு ஒரு பகைமை! மாம்சத்தை அதன் உயிரான ரத்தத்தோடே புசிக்க வேண்டாம். (ஆதி.9: 3,4) ‘உங்களில் ஒருவனும் ரத்தம் புசிக்க வேண்டாம். (லேவி: 17:11,12) இவர்கள் எந்த நிலையிலும் ரத்த தானத்திற்கு எதிரானவர்கள். எந்த நிலையிலும் ரத்த தானம் கொடுப்பதை, பெறுவதை மறுக்கிறார்கள். (இதற்கு அறிவியல் விளக்கமும் அவர்கள் தருகிறார்கள்!!)ம்மொத்தம் 75 லட்சம் பேர் இதில் இருப்பதாகக் கூறினார்கள்.
Seventh Day Adventists (SDA) என்றொரு குழுவும் உண்டு. இவர்களும் பெந்தகோஸ்தே மாதிரி ஆட்கள் தான். ஆனால் இவர்கள் குழு ஆரம்பித்த வரலாறு கொஞ்சம் (எனக்கு) வேடிக்கையாக உள்ளது.

William Miller என்பவரே 1831-ல் இக்குழுவை ஆரம்பித்தவர். இவர் மார்ச் 21, 1843 -லிருந்து மார்ச் 21, 1844-க்குள் இந்த உலகம் முடிவுக்கு வரும் என்றார். இன்னொரு முக்கிய நபர் Ellen G. White. சிறு வயதிலேயே தலையில் அடிபட்டுச் சிரமப்பட்டவர்.தனக்கு கடவுளின் தரிசனம் கிடைத்ததாகவும் அதன் மூலம் கிடைத்த செய்திகளையும் அளித்துள்ளார். அவருக்குக் கிடைத்த தரிசனம்தலையில் பட்ட அடியால் கிடைத்த post-traumatic experience என்று கருதப்படுகிறது. இந்த இருவரும் வளர்த்த குழு இன்று Seventh Day Adventists (SDA) என்றிருக்கிறது.


கிறித்துவத்தில் கடந்த நூற்றாண்டில் நடந்த இரு பெரும் தற்கொலைகள் பெரும் வியப்பையும், ஆச்சரியத்தையும் மட்டுமின்றி அச்சத்தையும்அருவருப்பையும், கவலையையும் தருகின்றன.
HEAVEN GATE என்றொரு குழு Marshall Applewhite 1970-ல் ஆரம்பிக்கப்பட்டது. இது ஒரு U.F.O. RELIGION. இவர் தனக்கும் ஏசுவிற்கும் நெருங்கிய தொடர்புள்ளது என்று கூறி வந்துள்ளார். மார்ச் 26, 1997 தேதியில் 39 நபர்கள் இவர்களது இடத்தில் தற்கொலை செய்து மடிந்துள்ளார்கள்.


The People's Temple என்ற பெயரில் இன்னொரு பெரும் குழு. James Warren (Jim) Jones - இதன் தலைவர். இங்கிருந்து வேறொரு கிரகத்திற்குப் போவதாக அவர்களது நம்பிக்கை. காவல் துறை இவர்களது தங்குமிடத்தில் மொத்தம் 914 : 638 பெரியவர்கள் & 276 குழந்தைகள் தற்கொலை செய்து கொண்டு இறந்ததைக் கண்டு பிடித்தது.

 
இவ்வாறு பல வகையில் பகுக்கப்பட்ட கிறித்துவத்தில் இப்போதோ மத வளர்ச்சி என்ற பெயரில் மூலைக்கொரு சபையும், முக்குக்கு ஒரு சபையும் கிளர்ந்துள்ளன. முன்பு ஏதாவது கொள்கை அடிப்படையின் பெயரில் சபைகள் பிரிந்தன. ஆனால் இப்போது 'மத வளர்ப்பு' ஒரு தொழிலாக முன்னேறி விட்டது. தனி நபர்கள் தங்கள் தங்கள் சபையை உருவாக்குகிறார்கள். ஒரு மாடி வீட்டின் மூலையில் நாலைந்து பேருடன் ஒரு சபை ஆரம்பிக்கப்படும். கூட்டம் பெருகும். Public address system ஒன்று வாங்குவார்கள். இன்னும் கூட்டம். காணிக்கையும் சேரும். சபை ஆரம்பித்த 'குரு' முதலில் தனக்கொரு நல்ல வீடு கட்டிக் கொண்டு. அதன்பின் சேரும் காணிக்கையில் பக்கத்திலேயே ஒரு shed கட்டி அதில் தன் ஜெபக்கூட்டங்களை நடத்துவது தான் இப்போதைய வழமை. அதன் பின் அந்த shed வளர்ந்து .. கிளைப்பது .. குருவின் ரீச்சைப் பொறுத்தது. so many business tactics. MNCக்கள் தோற்றுவிடும். இப்போது இவை export & import என்று பெரும் தொழில் வளர்ச்சி கண்டுள்ளன. 


மலை வாழ் மக்கள் என்றெல்லாம் போய்ஊழியம்செய்கிறார்கள். ஊழியத்தோடுநின்றால் பரவாயில்லை; “பிரதி பலனாகமத மாற்றங்கள் நடக்கின்றது. நான் நம்பிக்கையோடு இருந்த காலத்தில் என்னிடம் நன்கொடை வசூலிக்க வந்தவரைப் பார்த்த போது ஒரு விதத்தில் மகிழ்ச்சியாக இருந்தது.ஏனெனில் எங்கோ தமிழ் நாட்டில் பிறந்த இவர் seven sisters எனும் கிழக்கு மாநிலங்களின் ஒன்றில் காடு மேடு என்று பாராமல், அறிவியல் தொடாத இடத்தில் உள்ள மக்களுக்குஊழியம்செய்கிறார். என்ன செய்வீர்கள் என்றேன். SOAP, SOUP & SOUL என்றார். அப்படியென்றால் என்ன என்றேன். SOAP - சுகாதாரம் கற்றுத் தருகிறோம்; தடுப்பூசி கொடுக்கிறோம். SOUP - நல்ல ஆரோக்கியமான உணவு கொடுக்கிறோம். SOUL - எங்கள் மதத்தைக் கற்றுத் தருகிறோம் என்றார். 


எனக்கு ஒரு கேள்வி. வயத்துக்கு இல்லாதது கிட்ட நல்லது பண்ணினால் போற இடத்துக்கு நல்ல புண்ணியம்தான். ஆனால் அந்த மனுசங்க மனசு மாறி கிறித்துவத்திற்கு மாறுவது என்பது அவர்களுக்குக் கிடைக்கும் உணவுக்கும், மருந்துக்கும் தானே?  விவாதித்து, தங்களது பழைய மத வழக்குகளை விட இந்த மதத்தில் பெரிய தத்துவங்கள், உண்மைகள், வரலாறுகள் இருக்கின்றன என்று பார்த்தா மதம் மாறுகிறார்கள். சோறு கண்ட இடம் சொர்க்கம் தானே அவர்களுக்கு! இதை அவரிடம் கேட்டேன். ஆக  நீங்கள் பணம் செலவு செய்து, பணத்தை விடவும் வேறு எதையும் விட பெரிதான ஆன்மாவை வாங்கி விடுகிறீர்கள். இது சின்னப் பிள்ளையிடம் மிட்டாய் கொடுத்து அதன் கழுத்திலிருக்கும் தங்க செயினை ஏமாற்றி வாங்குவது போல் தானேஎன்று  கேட்டேன். உங்கள் நன்கொடையே வேண்டாமென்றுசொன்னார். மனசு கேக்காமல் இதையெல்லாம் பேசுவதற்கு முன் நான் நினைத்த பணத்தைக் கொடுத்து அனுப்பினேன். கடவுளோ, மதமோ ஏதோ ஒன்றை வைத்து இவ்வளவு கஷ்டப்படுகிறாரே என்ற நினைப்பில் அதைக் கொடுத்தேன்.


இது மாதிரி கஷ்டப்பட்டு மதம் மாற்றுவோர் ஒரு பக்கம் என்றால் இருந்த இடத்திலிருந்தே பெரும் ஊழியம்செய்வோர் பெரிய புத்திசாலிகளாக இருக்கிறார்கள்.  யார் கேட்டாலும் கடவுளுக்குக் காது கேட்கணும். கடவுளுக்கு மட்டும் selective ears இருக்கிறதா என்ன? ஆனால் கிறித்துவர்களில் பெரும்பான்மையோர் அவர் ஜெபித்தால் நடக்கும்; இவர் கேட்டால் சாமி கொடுக்கும்என்ற தவறான நம்பிக்கைகளோடு இருக்கிறார்கள். பிரசங்கிகளுக்கு இது நிறைய வசதியாகி விட்டது. என் பிள்ளை பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதினால் நான் என் பிள்ளைகளுக்காக கடவுளிடம் வேண்டினால் அது சரி; ஆனால் காசு கொடுத்து ஒரு பிரசங்கியை ஜெபம் செய்யச் சொல்கிறார்கள். உங்களுக்குத் தலைவலி. நீங்க சாமிட்ட கேளுங்க. எதுக்கு Xக்கும்  Yக்கும் காசு கொடுத்து, உங்க தலைவலிக்கு  அந்த ஆளிடம் போய் ஜெபிக்க சொல்றீங்க? எப்படியோ கிறித்துவ நம்பிக்கையாளர்களின் இந்த weakness-யைப் பயன்படுத்துகிறார்கள் இந்தப் பிரசங்கிகள். அவர்களில் காட்டில் இப்போவெல்லாம் ஜோன்னு எப்பவும் மழைதான்!  shedகள் எல்லாம் இப்போது வளர்ந்து மாட மாளிகைகள் ஆகி விட்டன. தினந்தோறும் தொலைக்காட்சிகளில் நாடகங்கள் ... இதில் நம்பிக்கையுள்ளவர்களின் முட்டாள்தனத்திற்கு (gullibility) இன்னொரு சின்ன உதாரணம்: இந்தப் பிரசங்கிகள் மேல் நம்பிக்கை கொண்டவர்கள் இந்தப் பிரசங்கிகள் எவ்வளவு கேவலமான குரலில் பாடினாலும் ரொம்ப மகிழ்ச்சியோடு அந்த ஒலிநாடாக்கள், குறுந்தகடுகளை வாங்கி ஆஹா .. என்னே பாடல்!என்று வாங்கி அதைக் கேட்பதைப் பார்க்கும்போது நம்பிக்கைகளுக்கு கண்ணில்லை என்பதோடு இல்லாமல் .. காதும் இல்லையென்றுதான் தோன்றுகிறது. 

-----------
எனக்குப் பதில் தெரியாத ஒரு கேள்வி. பதிலிருப்போர் விளக்கவும்.

http://pagadhu.blogspot.in/2012/07/blog-post.html என்ற பதிவில் சொல்லப்பட்டவை:

//“None of the Sources of his Life can be Traced on to Jesus himself. He did not leave a Single Known Written Word. Also there are no Contemporary Accounts of Jesus’s Life and Death” – Vol-22, Pg.336 Encyclopedia Britanica.//

//இஸ்ரேல் சென்றால் இயேசுக்கிறிஸ்து இந்த பூமியில் வாழ்ந்ததற்கான ஆதாரேமே இல்லை இன்று இஸ்ரேல் தொல்பொருள் துறையே கூறியுள்ளது. இயேசு எப்போது வாழ்ந்தார்? எக்காலத்தைச் சார்ந்தவர் என்பது பற்றி அதிகாரபூர்வமாக எதுவும் தெரியாது? இயேசு பற்றிய வரலாறு கூட ஒன்றுக்கொன்று முரணாக உள்ளது. யாரின் கூற்றைத்தான் நம்புவதோ?//

இந்த வரலாற்று உண்மைகளோடு தொடர்பு படுத்திப் பார்க்கும்போது இதிலிருந்து 500 ஆண்டுகள் கழித்த பின் வரும் முகமது வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வும் (பிறப்பு:April 26, 570 AD; மற்ற யுத்தங்கள் நடந்த ஆண்டுகள் என்று குறிப்பாகச் சொல்லும் அளவிற்கு) எப்படி எல்லாமே எழுதிவைக்கப்பட்டுள்ளன. வரலாற்றுப் பதிவர்கள் எப்படி இரு வேறு விதமாக இந்த நிகழ்வுகளைப் பதிவாக்கினார்கள் என்பது என் ஐயம். 500 ஆண்டுகள் வித்தியாசத்தில் இந்த இரு வேறு பதிவுகள் இவ்வளவு மாறுபட்டிருக்குமா?


Saturday, June 02, 2012

572. இன்றைய தினசரியில் சில நல்ல சேதிகள் ...




*


நம்ம லல்லு - ஜப்பான் ஜோக் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அப்படிப்பட்ட பீஹார் இன்று இந்தியாவின் மிக வேகமாக வளரும் மாநிலமாம். வளர்ச்சி விகிதம் 13.1% இது இந்த ஆண்டு மட்டுமல்ல, சென்ற ஆண்டும் முதல் இடத்தில் இருந்திருக்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் இரட்டை எண்களில் வளர்ச்சி. பஞ்சாபைத் தாண்டி விட்டதாம். 6-வது இடம் நமக்கு. நமக்கு அடுத்த இடம் அதிகமாகப் பேசப்பட்டும், புகழப்பட்டும் வரும் குஜராத்!

.................................

அதே பீஹாரில் ... ரன்விர் சேனா தெரிந்திருக்குமே ... பணக்கார, ‘உயர்சாதி’ விவசாயிகளின் ஆட்கொல்லும் படை. இதன் தலைவன் 70 வயது தாண்டிய ப்ரம்மேஷ்வர் சிங். டிசம்பர் 2006-ல் 61 தலித்துகளைக் கொன்றொழித்த இவன் மேல் போட்ட வழக்கில் விடுதலையாகி இந்த ஏப்ரல் மாதம் வெளிவந்திருக்கிறான். போயே போய்டான். வழக்கம் போல் அடையாளம் தெரியாத குழு ஒன்று அவனைச் சுட்டொழித்திருக்கிறது.

இப்போது. இவனுக்குத் தேவையான பாதுகாப்பு காவல் துறை கொடுக்கவில்லை இப்போது அங்கே கலகங்கள் ...தீ வைப்புகள்.

 ................................

ஐந்தாவது ஆண்டாகத் தொடர்ந்து தெற்காசிய குழந்தைகள் அமெரிக்காவின் spelling bee போட்டியில் வென்று வருகிறார்கள். இந்த ஆண்டு முதல் மூன்று இடங்களையும் வென்றது நம் நாட்டுக் குழந்தைகள். ஆந்திர மாநில ஸ்னிக்தா முதல் பரிசு பெற்றுள்ளார். இரண்டாம் பரிசு பெற்ற ஸ்துதிக்கு இந்தியும், ஒரியாவும் தெரியும் மற்ற மொழிகள். மூன்றாம் பரிசு பெற்ற அர்விந்துக்கு தெலுகு, ஸ்பானிய மொழி தெரியுமாம்.

நல்ல பிள்ளைகள் ... வளரட்டும்.

(spelling bee பற்றிய திரைப்படம் ஒன்று பார்த்தேன். எவ்வளவு கடின முயற்சி எடுக்கிறார்கள். அந்தத் தேர்வுக்குத் தயாராவது பற்றி அந்த படம் நிறைய சொல்லியது.)

.................................

என்னை மாதிரி ஆட்களுக்கெல்லாம் பங்கு மார்க்கட் விவகாரங்கள் எதற்கு? ஒரு காலத்தில் ஒரு சில பங்குகள் வாங்கி, ஹர்ஷத் மேத்தா வந்து ‘உழுதுட்டு’ போய்ட்டார். அந்த பங்குகள் குப்பையாக இருந்தது. இப்போ இதோ இந்த வருடம் 20000 ஆயிரத்தைத் தாண்டும் என்றார்கள். அப்படி சொல்லி நாலைந்து வருஷமாச்சு. இப்போ 16000க்கு தடுமாறுது. எல்லாமே சந்தோஷ செய்திகளாக இருக்க வேண்டாமென இச்செய்தி. :-(

 ...................................

 சந்தோஷம்னா அப்படி ஒரு சந்தோஷம். நம்ம குடியரசுத் தலைவிக்கு அடுத்த மாதத்தோடு பதவிக்காலம் முடியுதாம். வீடு மாத்த ரெடி பண்ணிக்கிட்டு இருக்காங்களாம். அப்பாடி .....!

 ...................................

மோடி தான் அடுத்த பிரதமர் அப்டின்னு ஒரு கூட்டம் கூடு கட்டுது. அத்வானிக்கு செம கடுப்பு. ஒவ்வொரு தலைவரும் கட்காரியை ஆளுக்கொரு பக்கம் இழுக்கிறார்கள். இன்றைக்கு கமல் சந்தேஷ் அப்டின்னு ஒரு ஆளு மோடிக்கு இப்போ என்ன அவசரம் என்று சைரன் ஊதியிருக்கிறார்.

(பி.ஜே.பி. வேண்டாம். காங்கிரஸ் வேண்டாம். இரண்டும் தனித்தனியாக வர முடியாது. இரண்டுமே குதிரை ஏறித்தான் வரணும். போற போக்கைப் பார்த்தா நம்ம ‘மம்மி’க்குக் கூட சான்ஸ் வரலாமோ. நம்மள கடவுள் தான் காப்பாத்தணும்.)

...................................

மம்மி செஸ் வீரர் ஆனந்துக்குக் இரண்டு கோடி ரூபாய் பரிசளித்துள்ளார்.

ரஷ்யர்கள், யூதர்கள் - இவர்களைத் தாண்டி இவர் வென்றிருப்பது பெரிய விஷயம்.

நேற்று புட்டின் அடித்த ஜோக் நன்றாக இருந்தது. ஆனந்த் தான் இளம வயதில் சென்னையில் ரஷ்ய நாடு நடத்தும் வகுப்புகளில் செஸ் படித்ததாகச் சொல்லியுள்ளார். புட்டின், ’அட! எங்க தலையில நாங்களே இழுத்து விட்டுக் கொண்டோமோ’ன்னு சொல்லியிருக்கிறார்.

 ...................................

 ‘பத்து வினாடி முத்தம்’ என்று எழுதினார் சுஜாதா. அந்தப் பத்து வினாடியெல்லாம் இப்போ பறந்து போய்க்கிட்டே இருக்கிறது. உசைன் போல்ட் தன் ஓடும் நேரத்தை மீண்டும் மீண்டும் குறைத்து வருகிறார். கடைசியாக நூறு மீட்டருக்கு எடுத்த நேரம்: 9.76 வினாடிகள். அம்மாடி!

ஒலிம்பிக்ஸில் இன்னும் எவ்வளவோ! ஆனாலும் 100 மீட்டர் ஓட்டத்தில் முதலில் வரும் இவருக்கும் அடுத்தவருக்கும் எவ்வளவு தொலைவு வித்தியாசம் ... மன்னன்! ..............................





*


Wednesday, May 30, 2012

571. AN EULOGY TO A FRIENDSHIP





*


AN EULOGY APOLOGY TO A FRIENDSHIP 


பதின்ம வயதில் நானும் அவனும் நண்பர்களானோம். சமீபத்தில் அவன் சாகும் வரை அது தொடர்ந்தது.  இளம் வயதிலேயே பெற்றோர்களை இழந்து விட்டான். உறவினரின் உதவியால் படித்தான். படிப்பில் புலி தான். அதிகம் கஷ்டப்படாமலேயே நல்ல மதிப்பெண்கள் வாங்குவான். பள்ளிப் படிப்பு முழுவதும் ஏழை மாணவர்களுக்கென பள்ளியில் தனியாக இருந்த விடுதியில் படித்தான். கல்லூரிக்கு வந்ததும் முதன் முறையாக ஒரு சுதந்திரப் பறவை என்ற அனுபவம் அவனுக்கு. அதுவே வாழ்வின் முதல் தப்பை செய்வதற்கு ஏதுவாயிற்று. அதிக சுதந்திரம் ... கல்லூரி போகாமல் வீட்டில் மாட்டிக் கொண்டான். பெரிய தப்பில்லைதான்.  ஆனால் படிப்பைத் தொடராமல் எங்கோ ஓடிவிட்டான். சில மாதங்கள் கழித்துத் திரும்பி வந்த போது நான் பேச மறுத்து விட்டேன். சந்திக்கும் இடமெல்லாம் கோவிலில் தான். அப்போதெல்லாம் தினமும் கோவிலுக்குப் போகும் வழக்கம் உண்டு. படித்த பள்ளியை ஒட்டிய கோவில் - St. Mary's Church. எனக்காகக் காத்திருப்பான். நான் கண்டு கொள்ளாமல் சென்று விடுவேன். எங்களோடு அப்போது இணைந்திருந்த இன்னொரு நண்பன் மூலம் தூது வந்தது. வாழ்க்கையைக் கெடுத்துக் கொண்டான் என்ற கோபம் எனக்கு. ஒரு வழியாக மீண்டும் இணைந்தோம்.

நான் கல்லூரி மாணவனாக இருந்த போதே அவன் வேலைக்குப் போக ஆரம்பித்து விட்டான். மதுரையில் அப்போதிருந்த Spencer's-ல் வேலைக்குச் சேர்ந்திருந்தான். முதலில் இருந்த மேனேஜருக்குச் செல்லப்பிள்ளை போன்று இருந்தான். அவர் கொடுத்த ஆதரவில் அவன் all in all alaguraja ஆகி விட்டான். எந்த சீட்டிலும் உட்கார்ந்து எந்த வேலையையும் பார்க்க அவனால் முடிந்தது. அந்த மேனேஜருக்குப் பின் வந்த மேனேஜர்கள் எல்லோரும் அவனிடம் கேட்டு கம்பெனியை நடத்தியது எனக்கு நன்கு தெரியும். 

இப்போது ஒரு தனிக்காட்டு ராஜா. தனியாகத் தங்கியிருந்தான்.சின்னக் கடன்கள் .. பெரிய தொல்லைகள் .. தப்பி வந்து காலை நன்கு ஊன்றினான். வாழ்க்கை நன்கு போனது. விளையாட்டுத் தனம் நிறைய. இன்னும் நினைவில் இருக்கிறது ... ’சவாலே சமாளி’ படம் ... வெறும் இடமாக மட்டுமே இன்னும் இருக்கும் தேவி தியேட்டரில் படம். முதல் நாள் படம் பார்க்கப்  போனோம். கூட்டத்தைப் பார்த்ததும் ‘வாடா .. போய்டுவோம்’ என்றேன். கொஞ்சம் பொறு என்றான். பூட்டியிருந்த கேட் பக்கம் போய் அங்கே நின்றவரிடம் ஏதோ சொன்னான். கதவு திறந்தது; நேரே போய் டிக்கட் வாங்கிட்டு  வந்து என்னை உள்ளே அழைத்துச் சென்றான். எப்டிடா என்றேன். C.T.O.  என்றான். அப்டின்னா என்ன என்றேன். Commercial Tax Office(r) என்றான். என் தோள் உயரத்திற்கு தான் இருப்பான். சின்ன உடம்பு. ஏண்டா உன்னைப் பார்த்த பிறகும் கூட எப்படிடா ஏமாந்து போயிர்ராங்க?  உனக்கும் எப்டிடா இந்த தைரியம்?’ என்றேன். அதெல்லாம் தானா வரணும்’பா என்றான். அப்படியே கொஞ்ச நாள் சில தடவை C.T.O.புண்ணியத்தில் டிக்கட் வாங்கினோம். எதுக்கு ரிஸ்க் என்று நான் வலியுறுத்திய பின் அதை விட்டு விட்டான்.

அடி வாங்கும் அளவிற்கு யாரோடும் சண்டை போட்டு, கடைசியில் அடிவாங்காமல் தப்பித்த நேரங்கள் பல உண்டு.  ஒரு சின்னப் பயல் comment அடிக்க நாங்கள் திட்டி அனுப்பினோம். ரீகல் தியேட்டர் முன் சூடான டீ குடித்துக் கொண்டிருந்தோம். அப்போது நாங்கள் நாலு நண்பர்களாக நின்றிருந்தோம். எங்களிடம் திட்டு வாங்கிய பசங்க பத்துப் பதினைந்து பேரோடு கூட்டமாய் நின்று ‘ரெடி’யாகிக் கொண்டிருந்தார்கள். திரும்பிப் பார்த்தேன். என் நண்பர்கள் இருவரும் அப்பீட் வாங்கிட்டாங்க. நின்றது நானும் அவனும் மட்டும் தான். சரி .. இன்னைக்கு நல்ல பூசை கிடைக்கப் போகுது என்றேன். இரு பார்ப்போம் என்றான். கூட்டத்தின் தலைவர் ஆளனுப்பி கூப்பிட்டனுப்பினார். அவர் யார்னு தெரியாது; வேணும்னா அவரை வரச்சொல் என்று சொல்லியனுப்பினேன். கூட்டமாக வந்து சுற்றி நின்றார்கள். கையில் இருக்கும் டீயைக் குடிக்காமல் வைத்திரு என்று ஒரு அட்வைஸ் கொடுத்தான். எங்களின் ஒரே தற்காப்பு ஆயுதம் அது.

’கூப்பிட்டா வரமாட்டீங்களோ’ .. தல கேட்டுச்சு.
’நீங்க யாருன்னே தெரியாது. இதே மாதிரி நான் கூப்பிட்டா நீங்க வந்திருவீங்களோ’ன்னு ஒரு கேள்வி கேட்டான். தலைக்கு சுதி கொஞ்சம் குறைந்தது.
’என்ன  .. நம்ம பசங்களைப் பார்த்து செருப்பால அடிப்பேன்னு சொன்னீங்களா?’ என்றார்.
’ஆமா சொன்னேன். ஆனா அடிக்காம விட்டது தப்பு’ன்னேன். தலைக்கு இன்னும் சுதி இறங்கியது.
’என்ன இப்படி பேசுறீங்க?’
’உங்களுக்கும் எனக்கும் ஒரே வயசு இருக்கும். தெருவில  போற ஒரு சின்னப் பயலைப் பார்த்து நீங்க செருப்பைக் கழட்டி அடிப்பேன்னு காரணமில்லாம சொல்லுவீங்களா?’ என்றேன். தலையை நம்ம பக்கம் இழுத்துட்டேன்.

தல அதுக்கப்புறம் என்ன நடந்துதுன்னு கேட்டு. அந்தப் பசங்களை என் முன்னால்  நாலு தட்டு தட்டிட்டு,’தப்பா எடுத்துக்காதீங்க’ அப்டின்னு என்னைப் பத்தி விசாரித்தார். வீட்டு ஏரியா சொன்னதும் ‘அட .. நம்ம ஏரியா .. எப்ப வேணும்னாலும் என்ன தேவையின்னாலும் சொல்லுங்க’ அப்டின்னு ஒரே ப்ரண்ட்லியா ஆய்ட்டார். அந்தக் கூட்டம் அவர்கள் பாஷையில் என்னையும் அவனையும் தொட்டுத் தொட்டு வணக்கம் சொல்லிட்டு கலைந்தாய்ங்க. நிம்மதியாயிருந்தது. தூரத்தில் நின்னு வேடிக்கை பார்த்த இரு நண்பர்களும் அதன் பின் வந்து சேர்ந்தார்கள். இப்ப தெரியுதா யார் யார் நண்பர்கள் அப்டின்னேன்.

இப்படிப் பல நிகழ்வுகள். ரீகல் தியேட்டர் முன்னால் குதிரைகள் தண்ணீர் குடிக்க ஒரு நீள தண்ணீர்த் தொட்டி இருக்கும். அதற்குப் பக்கத்தில் நின்று கொஞ்சம் சில்லறைகளை வாரி இறைத்து, அதைச் சின்னப் பசங்கள் பொறுக்குவதை வேடிக்கை பார்த்த ஒரு வெள்ளைத் தோல் அயல்நாட்டுக்காரனை நாலு நல்ல கேள்வி கேட்டோம். மன்னிப்பு கேட்டபடி போனான் அவன்.  ஏறத்தாழ பின்னாளில் அதே இடத்தில் நின்று வானத்தைப் பார்த்து கையை ஆட்டி ஆட்டிப் பேசி கொஞ்ச ஆட்களையும் அதே போல் நின்று வானத்தைப் பார்க்க வைத்திருக்கிறோம். குறும்புக் கலவையாக 
நாட்கள் சென்றன

.

வேளானக்கன்னி போய் மொட்டை போட்டுக்கொண்டு என் வீட்டிற்கு வந்தான். அவனைச் சாமியாக்கி, நான்  கையில் கூஜாவோடு அவனது சிஷ்யனாக வேடம் போட்டு எடுத்துக் கொண்ட படம் ..............அவன் கையிலிருப்பது Oxford Pocket Dictionary !!
அனேகமாக எழுபதின் கடைசிகளில் எடுத்த படமாக இருக்கலாம்.


 
காலம் கடந்தது. கல்யாணம் எல்லாம் முடிந்தது. Spencer-யை விட்டு வெளியே வந்தான். ஒரு ஆயுர்வேத மருந்துக் கம்பெனியில் சேர்ந்தான். பெயர் அதிகம் தெரியாதிருந்த கம்பெனியை அடுத்த 13 ஆண்டுகளில் தென் தமிழ்நாட்டில் நிலைபெறச் செய்தான். சுய வளர்ச்சியும் நன்கிருந்தது.  என் கல்லூரி வேலையில் வந்த சம்பளத்தை விட இரு மடங்கு சம்பாதித்தான். 13 ஆண்டுகள் ஆனபோது கம்பெனியில் சில மாற்றங்கள். நியாயமாக இவனுக்கு வர வேண்டிய உயர்வு இவனுக்குக் கிடைக்கவில்லை. இவன் வேலை பார்த்த கம்பெனியின் எதிர் கம்பெனி இவனை வேலைக்கழைத்தார்கள். எவ்வளவோ சொன்னேன் .. சொன்னோம். இதுவரை 13 ஆண்டுகளாக உழைத்த ஒரு கம்பெனிக்கு எதிர்த்து இப்போது என்னால் வேலை செய்ய முடியாது என்றான். மருத்துவக் கம்பெனிகளில் இது ஒன்றும் புதிதல்ல. இருந்தும் யார் சொல்லையும் கேட்கவில்லை. இது அவன் வாழ்க்கையின் பெருந்தவறாகப் போனது,.நாற்பதுகளின் கடைசியில் எடுத்த இந்த முடிவிற்குப் பின் அவன் எந்த ஒழுங்கான வேலையுமில்லாமல் இருக்கும் படி ஆகிப் போனது. கிடைத்த சில வேலைகளும் ’ஏதோ .. ஒரு வேலை’ என்றாகிப் போனது.

சொற்ப சம்பளங்கள்.அவன் பாட்டை அவன் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றானது. படித்து முடித்து வளர்ந்து வேலைக்குப் போன மூத்த மகனும் விபத்தில் காலமானான். இயந்திர வாழ்க்கையாகிப் போனது. எனது ஓய்விற்குப் பின் நாங்கள் அடிக்கடி சந்தித்துக் கொள்ள முடியாது போயிற்று.

அவனும் நானும் கடைசிக் காலத்தில் கையாகாமல் போனால் ஒருவருக்கு ஒருவர் உதவ வேண்டுமென நினைத்திருந்தோம். Euthanasia நல்ல வழியாகப்பட்டது.  செத்த பிறகு எரிக்கப்பட வேண்டுமென நினைத்தோம். (இன்னோரு நண்பன் சொன்னான்: ’செத்த பிறகு உங்களை என்ன செய்தால் உங்களுக்கென்ன? ஏதும் தெரியவா போகுது. பேசாம போவீங்களா’ என்றான். அதுவும் சரிதான்!) Euthanasia செய்து கொள்ள அடுத்தவன் உதவி தேவையாக இருக்கும் என நினைத்திருந்தோம்.

எப்படியோ அவன் மனம் முற்றிலும் மாறியிருந்தது. அது உண்மைதானென்றாலும், தான் குடும்பத்திற்குப் பாரம் என்று தொடர்ந்து நினைக்க ஆரம்பித்து விட்டான். உடல் மனம் எல்லாம் சோர்ந்து போச்சு.

முடிச்சிக்கிட்டான்.

நான் இன்னும் அருகில் இருந்திருக்க வேண்டும் ....



*





*

Thursday, May 24, 2012

570. THE MYSTERY CONTINUES ...

*

தெக்கத்திக்காரங்கன்னா தெக்கத்திக்காரங்க, தான் !!!

+2 தேர்வுகளின் முடிவுகளில் டாப் 10 இடத்தில் முதல் ஐந்து இடங்களில் நான்கிடம் தெக்கத்தி மாவட்டங்களுக்குத் தான். அதில் எங்களுக்குப் பெருமை. ஆனால் அதிசயத்தக்கமானதாக எனக்கு அன்றும் இன்றும் இருப்பது முதலிடத்தை பல ஆண்டுகளாக விருதுநகர் மாவட்டம் தொடர்ந்து வைத்திருப்பதுதான். இந்த ஆச்சரியத்தின் காரணமாக 2006-ம் ஆண்டே ஒரு பதிவிட்டிருந்தேன். மீள் பதிவாக அதே ஆச்சரியத்தோடும்,  அப்போதிருந்த கேள்விகளோடும் எழுதப்பட்ட பழைய பதிவை மீள்பதிவிடுகிறேன்.

பதிலிருப்போர் பதில் தரலாமே ...

இந்த ஆண்டின் தேர்வு முடிவுகள்

+2 PASS PERCENTAGE

THE TOP 10 DISTRICTS

விருதுநகர்            94.68
தூத்துக்குடி            94.62
ஈரோடு                    93.35
மதுரை                    93.32
திருநெல்வேலி   93.11
கோவை                 91.46
நாமக்கல்               90.97
திருப்பூர்                 90.8
கரூர்                        90.8
சிவகங்கை           90.58
சென்னை              90.4

..............................................................................................................................................

மீள் பதிவு


THE HINDU தேதி: 23.11.'06 



நடந்து முடிந்த +2 தேர்வுகளின் மாவட்ட வாரியாக தேறியவர்களின் விழுக்காடுகள்.

சில ஆச்சரியங்கள்.. சில ஐயங்கள் .. சில கேள்விகள்... 

*

சென்னைக்கு ஐந்தாவது இடம்தான் - 84.6%
மற்ற மாவட்டக்காரர்கள் மத்தியில் பொதுவாக மாநிலத்தின் தலைநகர் என்பதால் சென்னையின் மாணவர்கள் முதல் இடம் வருமளவிற்கு இருப்பார்கள் என்ற நினைப்பு பரவலாக உண்டு. ஆனால் முடிவுகள் அப்படி இல்லையே. ஏன்? (சொல்லுங்க - யார் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்வது?)

* கன்யாகுமரி மாவட்டம் படித்தவர்களின் எண்ணிக்கை அதிகம் கொண்ட மாவட்டம் என்ற பெயருடையது. பின் ஏன் இவ்வளவு குறைந்த விழுக்காடு? - 65.23% (சொல்லுங்க ஜோ!)

* நாமக்கல், தேனி மாவட்டங்களில் சில குறிப்பிட்ட பள்ளிகள் நல்ல மதிப்பெண்கள் பெருவதற்காகவே மாணவர்களைத் தயார் படுத்துவதாகக் கேள்விப்பட்டதுண்டு. அந்தப் பள்ளிகள் மட்டுமே அது போல இருக்கும்போலும். 79.1%; 78.9% (அப்படித்தானே நாமக்கல் சிபி?)

* விருதுநகர் முதலிடம் பெற்றுள்ளது - 87.8%; அடுத்து, திருநெல்வேலி இரண்டாவது - 86.7% - ஆச்சரியப்படுவதற்கில்லை (!) அந்த மாவட்டத்தில பிறந்தவங்கன்னாலே புத்திசாலிகள்தான். இல்லையா, சிவா?

மூன்றாவது இடம் தூத்துக்குடிக்கு -86.6%. இதுவும் எதிர்பார்க்கக்கூடியதுதான், இல்லையா ஜி.ரா.?

இந்த 3 மாவட்டங்களுமே பொருளாதாரத்தில் கொஞ்சம் பின்தங்கிய மாவட்டங்கள்தான். அதிலும் முதலாக வந்துள்ள விருதுநகர் மாவட்டம் வரண்ட பகுதியாகவும், குழந்தை உழைப்பாளிகள் நிறைந்த ஒரு பகுதியாகவே இதுவரை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் கல்வியில் உச்சத்தில்.. வாழ்த்துக்கள். (யாருங்க அந்த ஊர்க்காரங்க..வந்து அட்டெண்டன்ஸ் கொடுத்துட்டு போங்க)

* இன்னும் சிலவும் உண்டு. இப்போதைக்கு இது போதும்... *