மற்றைய பதிவுகள்:
1*,
2*,
3*,
4*,
5*,
6*,
7*,
8*,
9*,
10*,
11*,
12*.
13*.
1970 அக்டோபர் மாதம் ஜாவா வாங்கியாச்சி. அந்த வருட கோடை விடுமுறையில் நெல்லை அருகில் உள்ள சொந்த ஊருக்குப் பயணம்.(நெல்லை -> ஆலங்குளம் -> நல்லூர் -> காசியாபுரம்) அந்தக் காலத்தில் எங்கள் ஊருக்குள் ஒரே ஒரு பைக் அப்பப்போ வரும். அது ஆசிரியராக இருந்துகொண்டு, ஹோமியோபதி & அல்லோபதி இரண்டையும் சேர்த்துப் பார்த்து, வாத்தியார் பட்டம் போய் டாக்டர் ‘பட்டம்’ பெற்றுக்கொண்டவரின் பைக் அது.
அதுவும்கூட அது ராயல் என்ஃபீல்டு கம்பெனியின் பிரின்ஸ் என்ற அந்தக் காலத்து 150சி.சி. பைக். நண்பர்கள் மத்தியில் அந்த வண்டிக்குச் சூட்டிய பட்டப்பெயர்: எலிக்குஞ்சு. நம்மது: குதிரை. 250 சி.சி. பார்க்கவே அதைவிட பெருசா, மெஜஸ்டிக்கா இருக்கும். எந்த பைக், (பிளசர்)கார் வந்தாலும் பின்னாலே எங்க ஊரு சின்னப் பசங்க விரட்டிக்கிட்டே வர்ரது ரொம்ப சகஜம். சின்னப் பையன்கள் இந்த பைக்குகளுக்கு வைத்த பெயர்: ‘டக்கு மோட்டார்’. அந்தப் பெயர் எனக்கும் ரொம்பவே பிடிச்சுப் போச்சு. அதை கொஞ்சம் ஸ்டைலாக மாற்றி வண்டியிலேயே ‘Darling Duck’-ன்னு கொஞ்ச நாள் எழுதி வச்சிருந்தேன். மதுரையில் இதற்கு விளக்கம் சொல்லியே அலுத்துப் போய் பிறகு அதை எடுத்து விட்டேன்.
அப்படி டக்கு மோட்டாரில் ஊருக்குப் போனது என் அப்பம்மாவிற்குத் தான் ரொம்பப் பெருமை - பேரப் பையன் மோட்டார் சைக்கிளிலேயே மதுரயிலிருந்து வந்திருக்கான்-னு சொல்லிச் சொல்லிப் பெருமைப்பட்டுக் கொண்டார்கள். வண்டியை நிப்பாட்டுற இடத்தில நிறைய காவலுக்கு ஏற்பாடெல்லாம் செய்தார்கள் - எல்லாம் சின்னப் பசங்களோட குசும்புதான் காரணம். ஊருக்குள் போய், அப்பம்மா வீட்டின் பின்பக்கம் நிறுத்திவிட்டு, வீட்டுக்கள் சென்ற நிமிடத்திலேயே வண்டியை பசங்க கீழே சாய்த்து விட, ‘எண்ணெய்’ எல்லாம் சிந்துதுன்னு ரிப்போர்ட் வந்ததன் விளைவே அந்தக் காவல் எல்லாம்.
ஊரில் சித்தப்பா முறையில் எனக்கு இரண்டு மூன்று வயதே மூத்த எதிர் வீட்டுக்காரர்தான் நான் ஊருக்குப் போகும்போதெல்லாம் எனக்கு guide and friend எல்லாம். எந்தக் கிணத்துக்குக் குளிக்கப் போகலாம் என்பதிலிருந்து, போனதடவை அம்மங்கொடையில் பார்த்த/பார்க்கப் பட்ட, வேண்டப்பட்ட ‘மக்களை’ப் பற்றிய லேட்டஸ்ட் தகவல்கள் வரை எல்லாம் தருவார். ‘முக்கியமான ஆட்கள்’ ஊர்க்கிணற்றில் எப்போது தண்ணீர் எடுக்க வருவார்கள்; நாம் எந்த ரூட்டில் போனால் எதிர் எதிராகச் சந்திக்க முடியும் என்பது போன்ற வியூகங்கள் வகுத்துத் தருவார்! இந்த முறை டக்கு மோட்டாரில் சென்றது அவருக்கு ரொம்ப சந்தோஷம். அப்படியெல்லாம் உதவுபவர் ஒரு உதவி கேட்டால் இல்லையென்றா சொல்ல முடியும்.
சித்தப்பா ஒரு பெண்ணை - அண்ணலும் நோக்க..அம்மையும் நோக்க - என்றவாறு ஒரு காதல் நடந்துகொண்டிருந்தது. கிராமங்களில் எல்லோரும் ஒருவருக்கொருவர் உறவினர்களாகத்தானே இருப்பார்கள். அதுபோலத்தான் இவர்கள் கதையும். தூரத்து அத்தைப் பெண்; ஆசை வைத்து விட்டார். அந்தப் பெண்ணுக்கும் அதே. அவர்கள் கதை ஆரம்பித்த காலத்தில் பெண்வீட்டாருக்குத் தெரிந்தும் அதிகமாகக் கண்டு கொள்ளவில்லை. ஆனால், பெண்ணின் அண்ணன் திடீரென எதிர்ப்புக் காண்பிக்க, அனேகமாக இது இனி நடக்காது என்ற நிலை.(அண்ணன் பிறகு எல்லோருக்கும் தெரிந்த ஆளானார் என்பது வேறு விஷயம்) நம்ம டக்கு மோட்டரைப் பார்த்ததும் சித்தப்பா ஓர் உதவி கேட்டார். வேறொன்றுமில்லை. பத்துப் பதினைந்து மைல்கள் தள்ளி இருந்த ஒரு ஜோஸ்யரிடம் கூட்டிப் போகச்சொன்னார். அந்தக் காலத்தில் இப்போ மாதிரி என்ன மினி பஸ்களும், ஷேர் ஆட்டோக்களுமா கிராமங்களை வலம் வந்தன. எங்கும், எப்போதும் சைக்கிள் அல்லது நடை என்ற நிலை. அவ்வளவு தூரம் சைக்கிள் ‘மிதி’க்கணுமானு தள்ளிப் போட்டுக்கொண்டிருந்தவர் நம் டக்கு மோட்டார் வந்ததும் என்னை அந்த ஊருக்குப் போய்ட்டு வரணும் என்றார். எனக்கும் ஊர் சுற்ற ஆசை. உடனே புறப்பட்டோம். அதற்கு முன் ஒரு முக்கிய சேதி சொல்லணுமே; சித்தப்பாவின் வீட்டிலிருந்து சரியாக வடக்குத் திசையில் அந்தப் பெண்ணின் வீடு. ஞாபகம் வச்சிக்கிங்க, சரியா?
எங்க பயணம் ஆரம்பிச்சது. 30 வருஷத்திற்கு முன் நம் கிராமங்களில் சாலைகள் எப்படி இருந்திருக்கும் என்று உங்களுக்கு எங்கே தெரியப் போகுது. இரட்டை மாட்டு வண்டித்தடங்கள்தான் சாலைகள். மாடுகள் நடந்து, இரும்புச் சட்டம் போட்ட சக்கரங்கள் பதிந்து புழுதியோடு இரட்டைக் கோடுகள் போட்டது மாதிரி சாலைகள். இந்த இரட்டைக் கோடுகளுக்கு நடுவே கல் நிறைந்த கரடுமுரடான நடுப்பாதை - இவைதான் அன்றைய சாலைகள். ஒரு சில இடங்களில் இந்த நடுப்பாதையிலும், மற்ற இடங்களில் அந்த இரட்டைக்கோட்டுப் பாதைகளில் ஒன்றிலும், சில சமயங்களில் இந்த ‘சாலை’க்குத் தள்ளி தனியே மனிதர்கள் நடந்து நடந்தே உருவான ஓர் ஒற்றையடிப் பாதையிலோ வண்டியை ஓட்டிப் போகவேண்டும். இந்த மாதிரி சாலைகளில் அந்தக் கிராமத்து மக்கள் சைக்கிள் ஓட்டுவதைப் பார்த்து அதற்கு முன்பு வியந்ததுண்டு; இப்போது நானே அந்த சர்க்கஸ் வேலையைச் செய்யவேண்டியிருந்தது.
அதோடு ஏன் நமது ரோடுகள் எல்லாமே வளைந்து நெளிந்தே இருக்கின்றன என்ற கேள்வி எப்போதும் மனதில் எழுவது உண்டு. அதோடு, ஆங்கில சினிமாக்களில் நூல் பிடித்தது என்பார்களே அதேமாதிரி நேர் ரோடுகளைப் பார்க்கும்போது இந்த கேள்வி மனதில் எழும். இதற்கு இரண்டு பதில்கள்: இரண்டாவது ஐயத்திற்கு முதலில் பதில் (சரியா, தப்பான்னு சொல்லுங்களேன்) அங்கே ரோடு போட்டு ஊர்கள் வந்தன; இங்கே முதலில் ஊர்கள்; பின்னால்தான் ரோடுகள். அடுத்ததாக, நமது இன்றைய சாலைகள் பெரும்பாலும் பழைய மாட்டுவண்டிகள் சென்ற வழித்தடங்களே. இந்த மாட்டு வண்டிகள் ஊர்விட்டு ஊர் போகும்போது அனேகமாக இரவில்தான் பயணம் நடக்குமாம்; அப்போதெல்லாம் வண்டிக்காரர் தலைக்கு ஒரு சாக்கு வைக்கோல் வைத்துக்கொண்டு தூங்க, மாடுகள் இரண்டும் பழக்கத்தின் காரணமாக சரியான வழியில் போய்க்கொண்டிருக்கும்; அப்போது இரண்டில் ஒரு மாடு (தூக்கக் கலக்கத்தில்..?)கொஞ்சம் மெல்லப் போக, அடுத்த மாடு regular pace-ல் போகுமாம். பிறகு முதல் மாடு ‘விழித்துக்கொள்ள′ அடுத்த மாடு இப்போ மெல்ல நடை போடுமாம். இப்படி மாற்றி மாற்றி மாடுகள் தங்கள் வேகத்தை மாற்றிக் கொள்வதால்தான் நம் பழைய சாலைகள் வளைந்தும், நெளிந்தும் இருக்கின்றதாம். இப்படி ஒரு thesis உண்டு; சரியோ தவறோ தெரியாது.
சரி, நம்ம கதைக்கு வருவோம். தேடிச்சென்ற ஜோஸ்யரின் வீடு (அந்த ஊர் பேர் எதுவும் நினைவில் இல்லை)ஒரு கால்வாய் கரையில் இருந்ததுமட்டும் ஞாபகம் இருக்கிறது. இந்தக் கரையில் டக்கு மோட்டாரை நிறுத்திவிட்டு, மறுகரைக்குச் சென்றோம். ஊர், பேர் எல்லாம் கேட்டார். சரி..சரி..அந்தக் கதை இப்போது எதுக்கு? விஷயத்துக்கு வருவோம். எல்லா ஜோஸ்யர்கள் மாதிரியே இவரும் ‘எல்லாம் நல்லபடியா நடக்கும்; ஆனாலும் இப்போதைக்குக் கொஞ்சம் நேரம் நல்லா இல்லை’ (எல்லாருக்கும் எந்தக் காலத்துக்கும் பொருத்தமான விஷயம்தானே இவை) பொறுமை இல்லாமல் சித்தப்பா எந்தத் திசையில் இருந்து பெண் வரும் என்று கேட்க கணக்கெல்லாம் போட்டு ‘தெற்கு’ என்றார். ‘அடப் பாவி, சரியா எதிர் திசையாகச் சொல்றியே’ன்னு மனசுக்குள்ள சொல்லிட்டு, அந்த இடத்தவிட்டுக் கிளம்பினோம். வெளியே வந்து அந்த ஊருல இருந்த ஒரே ஒரு டீக்கடையில் உக்காந்து, ‘புண்பட்ட இதயத்தைப் புகைவிட்டு ஆத்திக்கிட்டோம்’. இன்னும் கிராமங்களில் இருக்கிற பழக்கத்தின்படி அங்கு இருந்த மக்கள் எங்களை யார், எதுக்கு வந்தீங்கன்னு, வாயைப் புடுங்கினதில, உள்ளத சொன்னோம். அங்கிருந்த ஒருவர் ‘அடடா, அவருக்கெல்லாம் இப்போ பவரு எல்லாம் போயிரிச்சிங்க; இப்பல்லாம் ..’அப்டின்னு இன்னொருவர் பெயரைச்சொல்ல சித்தப்பாவுக்கு ஒரு சின்ன ஆசுவாசம். சரி, அங்கேயும் போய் பாத்துடலாம்னு நம்ம குதிரையில ஏறினோம்.
இரண்டாவது ஜோஸ்யரும் ditto - ஒரு விஷயத்தைத் தவிர. திசை சொன்னார். இப்போ, வடக்கும் இல்லை; தெற்கும் இல்லை. கிழக்கு சொன்னார். சித்தப்பா மறுபடியும் down!
எனக்குக் கொஞ்சம் விஷயம் சூடுபிடிக்கிறது மாதிரி தோணுச்சி. சரி, இனி வீட்டுக்குப் போவோம்னு நினச்சி திரும்பினோம. வர்ர வழியில இன்னொரு கிராமத்தில இருந்த உறவினரைப் பார்க்க இன்னொரு ‘மண்டகப்படி’. அங்க அவரு இன்னொரு ஜோஸ்யர் பெயர் சொல்ல, தோல்வியைச் சகிக்காத ஒரு தீவர மனத்தவர்களாக, அந்த ஆளையும் பாத்துடுவோம்னு அங்க போனோம். அதோடு திரும்புற வழியில்தான் இந்த ஜோஸ்யரின் ஊர். நீங்க நினைக்கிறதுதான் நடந்தது..இந்த ஜோஸ்யர் மேற்கு என்றார். ஆக சித்தப்பா நினச்ச ‘வடக்கு’ திசை தவிர மற்ற மூன்று திசைகளையுமே சொல்லியாச்சி! ஆனா மூணுபேருமே நினச்சது நடக்கும் என்றுதான் சொன்னார்கள். சித்தப்பாவுக்கும் கல்யாணம் நடந்தது..அந்தப் பெண் இல்லை..மேற்குத் திசையிலிருந்து பெண்!
Moral of the story:
மூணு பேரும் ஒவ்வொண்ணா சொன்னதினால, அதுவரை ஜோஸ்யம் பற்றி அதிகமாக நினைக்காத நான் அதைப் பற்றிய சந்தேகங்களை வளர்த்துக்கொள்ள ஆரம்பித்தேன். ஆனால், வேறு யாருக்காவது அந்த மேற்குத்திசை என்று சொன்ன ஜோஸ்யரை ‘ஆஹா! மனிதன் அப்படியே சொல்லிட்டான்’யா’ அப்டின்னு நினச்சி ஜோஸ்ய நம்பிக்கையாளனாகவும்,அவரோட வாடிக்கையாளனாகவும் ஆகவும் ஒரு வாய்ப்புள்ளது. இல்லையா?
Is it not again a matter of perspective?
Pathivu Toolbar ©2005thamizmanam.com
Dec 18 2005 03:08 pm | சொந்தக்கதை.. and சமூகம் | | edit this
14 Responses
satya Says:
December 18th, 2005 at 4:45 pm e
வந்ததுக்கு ஒரு வோட்டு !!!:)
moral of the story:
நமக்கு சாதகமா ஜோசியம் சொல்றவன் கிடைக்கிற வரை ஓயமாட்டோம்ல!
nila Says:
December 18th, 2005 at 6:19 pm e
//நமக்கு சாதகமா ஜோசியம் சொல்றவன் கிடைக்கிற வரை ஓயமாட்டோம்ல! //
தருமி Says:
December 18th, 2005 at 7:10 pm e
சத்யா, நிலா நன்றி.
சத்யா - உங்கது ‘பொட்டிக்கடை’யா, பொட்’டீ’க்கடையா, இல்லை boutique கடையா..?!
இளவஞ்சி Says:
December 18th, 2005 at 10:42 pm e
தருமிசார்,
உங்களுக்கு ஜாவான்னா எனக்கு எங்க அப்பாரு 1980துல வாங்குன புல்லட்டு! காலேஜி 3வது வருசத்துல சன்னமா பைக்கு வேணும்னு அடியப்போட்டு அரிச்சு எடுத்து அவரு ஒருநா புல்லட்டு சாவியக்கொடுக்க அடுத்த அரைமணிநேரத்துல சைடுல இருந்த ரெண்டு பீரோ(!?)வையும் கழட்டிட்டு தெருவையே 30 தடவை சுத்தியிருப்பேன்! அவரு கண்ணுக்கு கண்ணா வைச்சிருந்த புல்லட்டை அப்பறம் Terminater ஸ்டைல்ல ஹேண்டில்பார் போட்டு, ஸீட்டை இறக்கி, ஸைலென்சரை நோண்டி ‘டமடம’ன்னு சவுண்டு வரவைச்சு வாரம் ஒரு ஆல்டரேசன்னு கலக்கல்தான். காலேஜ் கேட்டுக்கிட்ட வந்தாலே நான் வர்றது அத்தனை பிகருக்கும்(!?) தெரிஞ்சிரும். அப்படி ஒரு சவுண்டு.. என்ன எருமைமாட்டுமேல ஒரு கொசு ஒக்கார்ந்து ஓட்டிக்கிட்டு வர்றதா ஓட்டுவாளுக.. அன்னைக்கு நம்ப உடல்வாகு அப்படி.. ஹிஹி…இப்போ வீட்டுல ஓய்ஞ்சுபோயி கெடக்கு!
அப்பறம் ஜாதகம்கறது கேக்கப்போனா அவிங்கா சொல்லறது மனுசனுக்கு மனசுக்கு நம்பிக்கைதரக்கூடியதா இருக்கனும். ஏற்கனவே மன உளைச்சல்ல வர்றவங்களை மேலும் இந்த கிரகம், அந்த பரிகாரம்னு கொழப்பியடிக்கறதா இருக்கக்கூடாது.
இப்பெல்லாம் எந்த கிரகம்னாலும் சரி.. 1ரூபாயிலிருந்து 1 லச்சம் வரை பரிகாரம் சொல்லுறாய்ங்க…
துளசி கோபால் Says:
December 19th, 2005 at 1:31 am e
நமக்கு சாதகமா ஜோசியம் சொல்றவன்தான் ஜோசியன்.
சரி சரி. கையை நீட்டுங்க. ரேகை பார்த்துச் சொல்றேன்.
தருமி Says:
December 19th, 2005 at 9:35 am e
என்ன சொல்லுங்க இளவஞ்சி, மாணவ வாழ்க்கையில காலேஜுக்குள்ள வண்டி ஓட்ற பாக்கியம் எல்லாத்துக்குமேவா கிடைக்கும்? என் காலேஜ் நாட்களில் norton & redi indian அப்டின்னு ரெண்டு வண்டியில வந்த பசங்களை நானே இன்னும் ஞாபகம் வச்சிருக்கேன்னா…உங்கள பாத்த அந்த ‘பிகருங்க’ சும்மானாச்சுக்கும்தான் அப்படி கமெண்ட் அடிச்சிருப்பாங்க…நீங்க சும்மா ஓட்றீங்க..சரி, அது எதுக்குப் பழைய கத எல்லாம்..இல்ல..வீட்டம்மா இதையெல்லாம் வாசிக்கிறதில்லையே?!
அப்பா வண்டிய உங்ககிட்ட கொடுத்துட்டு, கைய கழுவிக்கிட்டாரா? ரொம்ப செல்லப்பிள்ளை போல..
என்ன சொல்லுங்க..எங்க parlance பிரகாரம் ஜாவா குதிரைன்னா, புல்லட்: யானை
தருமி Says:
December 19th, 2005 at 9:37 am e
துளசி,
சாதகமா சொல்லுவியளா..?
கோ.இராகவன் Says:
December 19th, 2005 at 4:32 pm e
அடடே! சோசியமா! எனக்குச் சோசியத்து மேல நம்பிக்கை கெடையாதுல்ல. அதையெல்லாம் நாம் நம்புறதில்லை. கடவுள நம்புறோம்….அப்புறம் இத வேற ஏன்னு நம்புறதில்லை.
மூனு சோசியக்காரங்களும் மூனு தெச சொன்னாங்களே. அது எங்கிருந்துன்னு கேட்டீங்களா?
ivarugala Says:
December 22nd, 2005 at 9:15 pm e
அப்புறம் நாடி ஜோஸ்யம் எப்படி?
காக்காயை எங்கே காணோம்?
சரவணா கே சக்கரவேல் Says:
December 23rd, 2005 at 8:26 pm e
கலக்குறீங்க தருமி…எந்த டாபிக் எடுத்தாலும் பிச்சி எடுக்கிறீகளே…
தமிழ்மணத்தில் எழுத தொடங்கும்முன் ஜோஸ்யம் கேட்டு நல்ல நாள் பார்த்து ஆரம்பிச்சிகளோ..!?
தருமி Says:
December 23rd, 2005 at 9:43 pm e
ராகவன்,
அது நல்ல கேள்விதான்…!
avarugala,
நாடி ஜோஸ்யம் வருது பின்னால்…
அதென்ன ‘காக்கா’ விவகாரம்?
சக்கரவேள்,
வரணும்..வரணும்..முதல் தடவையா வர்ரீங்கன்னு நினைக்கிறேன்.. சந்தோஷம்.
தருமி Says:
December 24th, 2005 at 7:47 am e
மன்னிக்கணும் சக்கரவேல், ஆனாலும் சக்கர வேள் என்ற பெயரும் அர்த்தமுள்ளதுதானே?! (வேள் = அரசன்?)
சத்யா Says:
December 27th, 2005 at 1:56 pm e
தருமி,
//சத்யா - உங்கது ‘பொட்டிக்கடை’யா, பொட்’டீ’க்கடையா, இல்லை boutique கடையா..?!//
நீங்க கேட்ட கேள்விக்கு மறு கேள்வி கேட்டு 1 வாரமாச்சு!
பதில் கேள்வி எப்போ கேட்க போறிங்க!
இப்பிடியெல்லாம் கூவி கூவி தான் நம்ம பக்கத்துக்கு அல்லாரையும் அழைக்க வேண்டியிருக்கு!
ஹூம்……..
தருமி Says:
December 27th, 2005 at 3:05 pm e
கோச்சுக்கப்படாது, சத்யா.
கிறிஸ்துமஸ் வந்துச்சா..பேரப்பிள்ளைகள மேச்சுக்கிட்டு இருந்ததில ‘டச்’ விட்டுப்போச்சு..அதான் இப்படி லேட்டா ஆயிரிச்சி.. உங்க ‘கடைக்கு’ப் போய்ட்டுதான் இங்கன வந்தேன்.
No comments:
Post a Comment