Monday, September 06, 2010

432. மைக்ரோ சிப்புக்குள் மக்களாட்சித் தத்துவம்




*மின்னணு ஓட்டளிப்பு எந்திரங்களின் திறன், பாதுகாப்புத் தன்மை பற்றிய நிறைய கேள்விகள் இப்போது எழுப்பப்பட்டு வருகின்றன. வரும் கேள்விகளுக்கு விடை அளிப்பதே அரசின், தேர்தல் கமிஷனனின் வேலை. ஆனால் கேள்வி கேட்ட ஹரி ப்ரசாத் என்பவரை சமீபத்தில் ஒரு 'நொண்டிச்சாக்கோடு' அரசு அவரை கைது செய்தது.

இந்த EVM- களின் பாதுகாப்பற்ற தன்மையைப் பற்றி என் கல்லூரி மாணவரும், நண்பருமான இளங்கோ ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அவரின் அனுமதியோடு அதை உங்கள் பார்வைக்குக் கொண்டு வருகிறேன்.


உங்களில் பலரும் 'பொட்டிதட்டும்' மக்கள் என்பதால் உங்களின் கருத்துக்கள் ஆவலுடன் வரவேற்கப்படுகின்றன. ஏனெனில் மின்னணு முறை தவறென்றால் அதை மக்கள் முன் எடுத்து வைக்க வேண்டும் என்ற கருத்தோடுதான் இவ்விடுகை இடப்படுகிறது.


*
மைக்ரோ சிப்புக்குள் மக்களாட்சித் தத்துவம்

இப்பொழுது பிரபலமாகி வரும் தகவல் தொழில்நுட்ப குற்றங்கள் பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம்.இணையத்தள குற்றவாளிகள் எல்லோருமே பாதுகாப்பு வளையங்களை உடைக்கும் சில தந்திரங்களை கற்று வைத்துள்ளனர். தகவல் தொழில் நுட்பத்தின் சுவர்கள் மிகவும் மெலிதாகத்தான் உள்ளது. திருட்டு என்பது அன்றாட நிகழ்வு.

நமது தேர்தல் ஆணையம் மின்னணு வாக்கு யந்திரங்களை பயன்படுத்த ஆயத்தமான வடிவமைப்பாளர்களின் நோக்கம் சந்தேகத்துக்கு இடமில்லாதது.ஆனால் இப்போது இதில் பல குளறுபடிகள் உள்ளதாக பலரும் புகாரளித்தும் தேர்தல் கமிசன் கண்டுகொள்ளவில்லை. உறுதியான ஆதாரங்களுடன் இப்பொழுது தான் இது பற்றிப் பேச ஆரம்பித்துள்ளன சில அமைப்புகள். தேர்தல் கமிசன் மின்னணு வாக்கு யந்திரங்களை தாங்கிப் பிடித்துப் பேச வேண்டிய அவசியம் இல்லை தான். ஏன் அவர்கள் தன்மானப் பிரச்சனையாக எடுத்துக் கொள்ள வேண்டும்? அதுவுமல்லாமல் இங்கே உள்ள கோளாறுகளை மற்றும் பாதுகாப்புக் குறைகளை பற்றிப் பேசும் போது ஏன் அது அவர்களுடைய அகந்தையைச் சுடுகிறது என்று தான் புரியவில்லை.

வாய்பூட்டு போடும் தகவல் தொழில் நுட்ப பயன்பாடுகள்

மூன்று விதமான பிரச்சனைகள் நம் முன் உள்ளன.
• ஒன்று தேர்தல் நடத்தும் வழி முறை சார்ந்த பிரச்சனை;
• இரண்டு தகவல் தொழில் நுட்பம் சார்ந்த பிரச்சனை;
• மூன்று தேர்தல் சரியாகத் தான் நடைபெறுகிறதா என்று உறுதிப் படுத்தும் பிரச்சனை.
வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு ஒரு முறை கூட மறு ஆய்வு செய்யப் படாத இந்த மின்னணு யந்திரங்கள் எப்படி பட்டவை?

மின்னணு வாக்கு யந்திரங்களில் மூன்று வகை உள்ளன. முதல் தலை முறை வாக்கு யந்திரங்கள் 1989 இல் அறிமுகப் படுத்தப் பட்டவ. இரண்டாம் தலை முறை யந்திரங்கள் 2003 வாக்கில் அறிமுகப் படுத்தப் பட்டவை. 2006 இல் மூன்றாம் தலை முறை யந்திரங்கள் அறிமுகமாயின. இதில் இன்னும் பல தேர்தல்களில் முதலாம் தலை முறை யந்திரங்களை பயன் படுத்துகிறது தேர்தல் கமிசன். அந்த தொழில் நுட்பம் தோல்வி அடைந்ததது என்று தகவல் தொழில் நுட்ப மறு ஆய்வுக்கு அமைக்கப் பட்ட இந்திரேசன் கமிட்டி அறிக்கையே தெளிவாக சொல்லிவிட்டது. 13 லட்சம் யந்திரங்கள் கடந்த 2009 தேர்தலில் பயன் படுத்தப் பட்டன அவற்றில் வெறும் 4 லட்சம் யந்திரங்கள் மட்டுமே இரண்டாம் தலைமுறை யந்திரங்களுக்கு மாற்றப் பட்டன. மீதம் உள்ள ஒன்பது லட்சத்தி சொச்சம் யந்திரங்கள் அப்படியே பழைய பாதுகாப்பற்ற யந்திரங்களில் வாக்களிக்க வைக்கப்பட்டோம்.

தேர்தல் கமிசனின் ஐம்பதாவது ஆண்டுப் பொன் விழா நடந்தது. அதில் மக்களாட்சி நல்லபடியாக நடக்கத் தேர்தல் கமிசன் தன் பணியைச் செய்வதாகக் கூறியது. ஆனால், தேர்தல் சீர் திருத்தம் அல்லது சுதந்திரமான தேர்தல் என்பது பற்றி வாய் திறக்கவில்லை.  தேர்தல்கள் மின்னணு யந்திரங்களுக்கு மாற்றப்பட்டது பெரிய அளவுகளில் முறை கேடு நடக்காது என்று மீண்டும் மீண்டு நம்ப வைக்கப்பட்டோம். தேர்தல் என்பது இப்போது மின்னணு யந்திரத்தில் நடத்தப் படுவதை மிகப் பெரிய சாதனையாக சொல்கிறோம். நமது நாட்டில் மின்னணு யந்திரத்தின் பயன்பாட்டைப் பற்றி ஒரு கேள்வியும் எழாமல் அப்படியே ஏற்றுக்கொள்ளப்பட்டது. காரணம் மிகவும் எளிமையானதுதான். அதாவது வாக்கு எண்ணிக்கை எளிதாக முடிந்து ஒரு மூச்சில் முடிவுகளை அறிவித்து விடலாம். மக்கள் தொகை அதிகமாக உள்ளதால் வாக்குப் பதிவின் போது நீண்ட நேரம் காத்திருக்கத் தேவை இல்லை. அதே போல காகித்தத்துக்கு ஆகும் செலவு மிச்சம். மின்னணு வாக்கு யந்திரங்கள் பற்றி பல சர்ச்சைகள் இருந்தாலும் தேர்தல் கமிசன் தீர்க்கமாகச் சொல்லி விட்டது, இப்படித் தான் தேர்தல் நடத்துவோம் என்று.

சீதையின் பேதைமை

தேர்தல் கமிசனின் தொழில் நுட்பக் கண்காணிப்பின் தலைவராக 2006 இல் இருந்த இந்திரேசன் ஒரு தொலைகாட்சி பேட்டியில் " நாங்கள் சீதையைப் போல தீக் குளிக்க முடியாது" என்று கூறுகிறார். அதன் செயல் பாடுகளைப் பற்றி இருக்கக் கூடிய சந்தேகங்களுக்கு அறிவியல் பூர்வமான எந்த விளக்கத்தைப் பற்றியும் பேச வில்லை. நீங்கள் வேண்டுமானால் நிரூபியுங்கள் என்று மக்களிடம் பொறுப்பைத் தூக்கிப் போடுகிறது. C. ராவ் காசர் பாடா P.V. இந்திரேசன் S.சம்பத் என்று மூன்று நாபர் குழு ஒன்று 1990 இல் அமைக்கப் பட்டது. அவர்கள் தயாரிப்பாளர்கள் அளித்த விளக்க மற்றும் ஒத்திகைகளை நம்பி ஒப்புதல் அளித்தார்கள். 2006 இல் அமைக்கப்பட்ட பாதுகாப்புக் குழுவும் A.K. அகர்வால், D.T. ஷாஹணி, மற்றும் P.V. இந்திரேசன் ஆகியோர்களை கொண்டது. இந்த கமிட்டி சில மாற்றங்களை செய்யுமாறும் பாதுகாப்பு மென்பொருளை புதிய தொழில் நுட்பத்துக்கு உட்படுத்துமாறும் சொல்லியது. அதன்படி இரண்டாம் மற்றும் மூன்றாம் தலைமுறை மின்னணு யந்திரங்கள் பயன் படுத்தலாம் என்று கருத்து தெரிவிக்கப்பட்டது. இதிலும் நான்கில் ஒரு பங்கு மாற்றத்தை மட்டுமே தேர்தல் கமிசன் செய்து கொண்டது.

இது தொடர்பாக நிறையப் பொது அக்கறை மனுக்கள் உச்ச நீதி மன்றத்தில் சமர்ப்பிக்கப் பட்டன. உச்ச நீதிமன்றம் தேர்தல் கமிசனை அணுகுமாறு வழி காட்டி விட்டது. இதில் உச்ச நீதிமன்றத்தின் நிலைப்பாடு வேடிக்கையானது. உங்களுடைய எதிரியாக குறிப்பிட்டுள்ள தேர்தல் கமிசனிடமே விளக்கத்தை பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறியது. யார் மேல் சந்தேகப் படுகிறோமோ அவரே நமக்கு திருப்தியான பதில் தருவார் என்று நீதியரசர்கள் கூறியுள்ளதை யாரும் விமர்சிக்க முடியாது. நீதி மன்ற அவமதிப்பு பாயுமே!

ஹைதராபாத்தைச் சேர்ந்த நெட் இந்தியா என்ற மென் பொருள் நிறுவனம் இதையும் தாண்டி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி சில தகவல்களை பெற்றது . Hari K. prashath , J. Alex Haldermany , Rop Gonggrijp , Scott Wolchoky , Eric Wustrowy , Arun Kankipati , Sai Krishna Sakhamuri , மற்றும் Vasavya Yagati ஆகிய தகவல் தொழில் நுட்ப வல்லுனர்களை துணையாக கொண்டு மின்னணு யந்திரங்களை பரிசோதிக்க அனுமதி கோரியது நெட் இந்தியா நிறுவனம். இரண்டு முறையும் வெவ்வேறு காரணங்களால் இந்த சரி பார்ப்புக்கு பல இடையூறுகளை தந்தது தேர்தல் கமிசன். சில நேரங்களில் கால அவகாசம் தராமல் இவர்களால் நிரூபிக்க முடியவில்லை என்று வெளியில் வந்து பெருமையாகத் தெரிவித்தது. இதையடுத்து இவர்கள் ஒரு மாதிரி மின்னணு யந்திரத்தைக் கொண்டு செயல் முறைகளை பத்திரிக்கைகளுக்குத் தந்தார்கள். தேர்தல் கமிசன் இந்த நிறுவனம் தன் மீது அவதூறு பரப்புவதாக கூறி விட்டது. ஆனால் தேர்தல் கமிசனும் செயல் முறை விளக்கம் தரும் போது மாதிரி யந்திரத்தைத் தான் பயன் படுத்துகிறது. பின்பு ஒரு உண்மையான வாக்கு யந்திரத்தை சில தேர்தல் அதிகாரிகளின் உதவியோடு பெற்று நிரூபித்தது நெட் இந்தியா.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி தேர்தல் கமிசனிடம் கேள்விகள் மேல் கேள்விகள் கேட்டது நெட் இந்தியா நிறுவனம். பல கேள்விகளுக்கு சுற்றி வளைத்து பதில்கள். சில கேள்விகளுக்கு பாதுகாப்புக் காரணத்தைக் காட்டி பதிலும் தரவில்லை. இறுதியாக தேர்ந்தெடுத்த சில கேள்விகளுக்கு மட்டும் பதில் தந்தது. தேர்தல் கமிசன் செய்த சமாளிப்புகளும் அந்த குறிப்பிட்ட மென் பொருள் நிறுவனத்திற்கும் அதன் சட்ட ஆலோசகர் திரு வி வி ராவுக்கு அளித்துள்ள பதில்களை படித்தால் தேர்தல் கமிசன் வெற்று நம்பிக்கைகளின் அடிப்படையில் செயல் படுகிறது என்பது நமக்குப் புரியும். பல கேள்விகளுக்கு மின்னணு வாக்கு எந்திரங்களின் உற்பத்தியாளர்களை மேற்கோள் காட்டிவிட்டு தேர்தல் கமிசன் கை கழுவியுள்ளது. இதில் முக்கியமான ஒரு பிரச்சனை என்னவென்றால் யந்திரத்தின் பாதுகாப்பு பற்றி கேடப்பட்ட கேள்விகள் அனைத்தையுமே தவிர்த்து வந்துள்ளது. மேலும் உச்ச நீதி மன்றம் சாதாரண நிரூபணத்திற்கு மட்டுமே வி. வி. ராவிற்கு அனுமதி வழங்கி உள்ளதாகவும் Reverse Engineering செய்ய அனுமதி இல்லை என்றும் தேர்தல் கமிசன் கை விரித்துவிட்டது.

Reverse இன்ஜினியரிங் என்பது வேறு ஒன்றும் இல்லை. அக்கு வேறு ஆணி வேறாக தலை கீழாக பிரித்துப் பார்த்து அதன் மென் பொருள் வடிவத்தை கண்டு அதன் பாதுகாப்புச் சிக்கல்களை அறிந்து கொள்வது தான். நெட் இந்தியா அந்த எந்திரத்தை திறக்கும் முன்னரே உங்களுக்கு அதைப் பிரித்து வடிவ வரைபடத்தை அறிந்து கொள்ள கோர்ட் அனுமதி இல்லை என்று கூறி விட்டது கமிஷன். அதாவது வழக்கமான அரசாங்க அதிகாரிகளின் சமாளிப்புகள் தான். நீங்கள் இந்த எல்லைக்குள்ளேயே நின்று கொண்டு போட்டி போட வேண்டும் என்ற வாய்ச் சவடால். Remote hacking என்று சொல்லுவது போல தூரத்தில் இருந்து யந்திரத்தின் செயல்பாட்டை மாற்றி அமைக்க முடியுமா? என்று கேட்டது. ஆனால் தேர்தல் வாக்குகளை மோசடியாக பெற நினைக்கும் அரசியல்வாதிகளிடம் இந்த பருப்பு வேகாது என்பது தேர்தல் கமிசனுக்கும் தெரியும். திருடுபவனிடம் இவ்வளவு நீள அகலத்தில் நின்று திருடுங்கள் என்று அறம் போதிக்கும் பேதைமை பற்றி என்ன சொல்ல முடியும்? வி வி ராவ் கேட்ட பல கேள்விகளில் ஒன்று தொழில் நுட்பத்தை மேம்படுத்த என்ன செய்துள்ளீர்கள் என்பது. 2004 க்கு பிறகு தொழில் நுட்பத்தை புதிப்பித்துக் கொள்ளவில்லை என்பதை தேர்தல் கமிசனே ஒப்புக் கொண்டுள்ளது. மேலும் நம்முடைய மின்னணு வாக்கு எந்திரங்கள் பாதுகாப்பற்றவை என்று தொழில் நுட்பக் கண்காணிப்புக் குழு சொன்ன பின்பும் அது தேவை இல்லை என்று தன்னிச்சையாக முடிவு எடுத்து கொண்டது. அது சரி பொது மக்களுக்கும் தொழில் நுட்பத்திற்கும் எவ்வளவு தூரம் உள்ளதோ அவ்வளவு தூரம் தேர்தல் கமிசனுக்கும் மக்களுக்கும் உள்ளது. இவ்வாறு தொழில் நுட்பத்திலும் தரமற்ற மற்றும் அரசியல் நோக்கத்துடன் தான் செயல் படுகிறதோ என்று சந்தேகப் படச் செய்யும் அளவிற்கு தேர்தல் கமிசன் நடந்து வந்துள்ளது.

வி வி ராவ் அவர்கள் கேட்ட சில முக்கியமான கேள்விகளை மட்டும் இங்கே பார்க்கலாம். ஐம்பது கேள்விகளில் பல கேள்விகளுக்கு ஒரே பதில் தான். அதனால் கேள்வியின் முக்கியத்தும் மட்டுமே இங்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

1 .கேள்வி: ஏன் இந்தியத் தேர்தல்களில் ASIC சிப்புகள் பயன்படுத்தப்படாமல் பொதுவான சிப்புகள் பயன் படுத்தப்படுகின்றன?

பதில் : அப்படி பட்ட சிப்புகள் சந்தையில் கிடைப்பதில்லை. எனவே தேர்தலுக்கு பொருத்தமான பொதுவான சிப்புகள் பயன் படுத்தப்படுகின்றன. (நமது கேள்வி: சந்தையில் அப்படிப்பட்ட சிப்புகள் இருப்பது கூட தெரியாதவர்களா அதிகாரத்தில் உள்ளார்கள்?)

2 . கேள்வி: தேர்தல் கமிசன் சிப்புகளை யாரிடம் வாங்குகிறது? அவற்றை வாங்கிய கணக்குகளை தேர்தல் கமிசன் நிர்வகிக்கிறதா?
பதில்: சிப்புகள் 'நம்பிகையான' பொதுத் துறை நிறுவனங்களிடம் இருந்து வாங்குவதால் அதன் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பை பற்றி அச்சப்படத் தேவை இல்லை. யந்திர உற்பத்தியாளர்களிடம் தான் சிப்புகள் வாங்கிய கணக்கு வழக்குகள் உள்ளன. (தேர்தல் கமிசன் பொறுப்புடன் பதில் அளிக்கும் முக்கியமான கேள்வி)

3 . இந்த மின்னணு யந்திரங்களுக்கு குறியீட்டு மொழியை எழுதுபவர்கள் யார்? அவர்களின் பின் புலம் என்ன?
பதில்: Official Secrets Act அடிப்படையில் ஒப்பந்தம் செய்யப்பட்டு நிரந்தர ஊழியர்கள் இதை எழுதுவதால் இதை பற்றி பேசத் தேவை இல்லை. (பொதுத் துறை ஊழியர்கள் இந்த வேலையை மற்ற கம்பெனிகளுக்கு ஒப்பந்தத்துக்கு விட்டாலும் தெரிய வாய்ப்பில்லை.)

4 . எப்போதாவது மறு வாக்கு எண்ணிக்கை கோரிக்கையின் போது ஒவ்வொரு வாக்கும் அச்சு பதிக்கப் பட்டு சரி பார்க்கப்பட்டதா?
பதில்: கோர்ட் உத்தரவு இல்லாமல் அப்படிச் செய்ய முடியாது. இதுவரை அப்படி எந்த கோர்ட்டும் உத்தரவிட வில்லையாதலால், இந்த கேள்விக்கு பதில் அளிக்கத் தேவை இல்லை. வெறும் முடிவை மட்டுமே அச்சுப் பதிப்பித்து எடுக்கப் படுகிறது. அதே போல சரிபார்ப்புக்கு மட்டும் ஒன்றிரண்டு வாக்குகளை எடுத்து பார்க்கிறோம்.

5 . எந்திர உற்பத்தியாளர்கள் ட்ரோஜன்களை நுழைக்க முடியுமா? இதைப் பற்றி இந்திரேசன் கமிட்டி என்ன பரிந்துரைகளை செய்துள்ளது? ( அதாவது ட்ரோஜன் என்பது வைரஸ் போல மென் பொருள் மொழியை சேதப் படுத்தக் கூடியது)

பதில்: ட்ரோஜன்களை நுழைப்பது என்பது கற்பனையான கேள்வி. இந்திரேசன் கமிட்டி இது பற்றி பரிந்துரை செய்துள்ளது. ஆனால் எங்களுடைய நிர்வாக நடைமுறைகள் சரியாக உள்ளதால் இது பற்றிய கேள்வி எழ வில்லை ( தொழில் நுட்ப ரீதியான கேள்விக்கு நிர்வாக ரீதியான பதில்!).

6 . வாக்கு யந்திரங்களின் பாதுகாப்பு மின்னாளுமைச் ( E -governance ) தரப் பரிந்துரைகளை கையாள்கிறதா? மின்னாளுமைச் ( E -governance ) சட்டத்தை நடை முறைபடுத்தியுள்ளீர்களா?
பதில்: மின்னணு வாக்கு யந்திரம் மின்னாளுமைச் ( E -governance ) சட்டத்தை நடைமுறைப் படுத்த வில்லை. ஆனால் மக்கள் பிரதி நிதிதுவச் சட்டத்தின் அடிப்படையில் பாதுகாக்கப் படுகிறது. (இது தான் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போல. மின்னாளுமைச் சட்டம் ஒரு புறம் இருக்கிறது என்பதாவது தெரியுமா? )

7 . கள்ள வாக்கு எந்திரங்களை ஒருவர் தயாரிக்க முடியுமா? அப்படி தயாரித்தால் கண்டுபிடுத்து விட முடியுமா?
BEL மற்றும் ECIL கண்டுபிடித்து விடும். நாங்கள் பாதுகாப்பாக வைத்துள்ளதால் அந்தக் கேள்விகள் எழவில்லை.

8 . 2009 நாடாளுமன்றத் தேர்தலில் எவ்வளவு யந்திரங்களில் வாக்குப் பதிவின் போது வாக்களித்த சின்னத்தில் விளக்கு எரியாமல் வேறு சின்னத்தில் விளக்கு எரிந்தது?
நூற்றி இருபத்தியிரண்டு. (கிட்டத்தட்ட 122 தொகுதிகளின் முடிவுகள் எப்படி இருந்திருக்கும் என்று அறிந்து கொள்ளலாம்)

9 . காணாமல் போன வாக்கு எந்திரங்களின் எண்ணிக்கை எவ்வளவு? எவ்வளவு மீட்கப் பட்டுள்ளன? எத்தனை எந்திரங்கள் சேதப் படுத்தப் பட்டன?
2009 இல் எழுபத்தியொரு யந்திரங்கள் காணமல் போயின. ஒன்று கூட மீட்கப் பட வில்லை. 225 யந்திரங்கள் சேதப் படுத்தப் பட்டன. ( இவர்கள் கணக்கைக் கூட வைத்துக் கொள்ளவில்லை என்கிறார்கள். ஆனால் எழுபத்தியொரு யந்திரங்கள் காணமல் போனது பற்றி மட்டுமே தெரிந்து வைத்துள்ளார்கள் போல. வேறு காணாமல் போயிருந்தாலும் தெரிய வாய்ப்பில்லை.)

தொழில் நுட்பக் கேள்விகள் எல்லாவற்றிற்கும் பாதுகாப்பு காரணங்களை காட்டி தேர்தல் கமிசன் பதில் சொல்ல மறுத்துள்ளது தெரிய வந்துள்ளது. உற்பத்தி செய்யும் நிறுவனத்தின் அனுமதி இல்லாமலோ கோர்ட்டின் உத்தரவு இல்லாமலோ தகவல்களை தர இயலாது.

இனி எங்கெல்லாம் வாக்கு யந்திரங்களை தவறாகப் பயன் படுத்தலாம் என்று விரிவாகப் பார்ப்போம்.
 .........தொடரும்  இங்கே















No comments:

Post a Comment