Tuesday, September 14, 2010

436. சிங்கப்பூர் -- வீடுகள்

  






*
'ரூம் போட்டு யோசிச்சிருப்பாங்க' என்று சொல்லுவது போல் இந்த நாட்டை முன்னோக்கி நடத்த யோசித்தவர்கள் வாழ்க்கையின், பொருளாதாரத்தின், சமூகத்தில் பல படிகளையும் நன்கு யோசித்து நல்ல பல முடிவுகளை எடுத்துள்ளனர். எடுத்த முடிவுகளைச் சட்டங்களாக்கி, அவைகளை முறையாகவும் செயல்படுத்தி வருகின்றனர் என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது.
நம்ம ஊர்ல ஆட்டோக்களுக்கு மீட்டர் போட ஒரு அரசாலும் முடியவில்லை!
கைத்தொலைபேசியில் பேசிக்கொண்டே போகும் உத்தமர்களை நிறுத்த காவல் துறையால் முடியவில்லை!
தலைக்கவசம் போட அரசின் கருணை இடம் கொடுக்கவில்லை!
ஒரு அரசியல்வாதியின் ஊழலை நீதிமன்றத்தில் நம் C.B.I.-ஆல் நிறுவ முடியவில்லை!
தப்பு செய்தாலும் தண்டனை கொடுக்க நீதியரசர்களுக்கு மனமில்லை!

இது போல் நிறைய இருக்கு அழுது கொண்டே சொல்ல ... 
............. என்னமோ போங்க! நம் தலையெழுத்து!!

பரப்பளவு பற்றாக் குறையினால் அடுக்கு மாடி வீடுகளையே நிறைய கட்டியுள்ளார்கள். அறுபதுகளில் ஊரில் அங்கங்கே வெறும் கூரை வீடுகளாக இருந்தனவாம். அன்றைய குப்பங்கள் .. இன்றைய கான்க்ரீட் காடுகள். எங்கும் பல மாடிக்கட்டிடங்கள். 15 முதல் 50 வரையிலான மாடிக் கட்டிடங்கள். அவ்வாறு கட்டும்போதே அங்கே யார் யாரைக் குடி வைக்க வேண்டுமென்றும் முடிவெடுத்துள்ளார்கள்.  இருக்கும் மக்கள் நால்வகை மக்கள்: மலாய், சீனா, இந்திய, மற்றையவர் என நான்கு பிரிவு மக்கள்; வெவ்வேறு விழுக்காட்டில் உள்ளார்கள். சாதாரணமான, திட்டமில்லாத குடியேற்றம் என்றால் அந்தந்த வகை மக்கள் மொத்தமாக வீடுகளில் குடியேறியிருக்கலாம். அப்படியிருந்திருந்தால்  ஒரு புறம் மலாய், மறுபுறம் சீனாக்காரர்கள்; இன்னொரு பக்கம் தமிழர்கள் என்றெல்லாம் இருந்திருக்கும். ஆனால் ஒவ்வொரு வீட்டுப் பகுதிகளிலும் நாட்டில் இருக்கும் மக்களின் விழுக்காட்டின்படி மட்டுமே வீடுகள் பகிர்ந்தளிக்கப் படுகின்றன. 'அந்த லொக்காலிட்டி, இந்த லொக்காலிட்டி' என்ற பேச்சுக்கே இடமில்லை.  எல்லோரும் எங்கும் ....நம்ம ஊர் சமத்துவபுரம் போல் அங்கு சரியாக நடந்து வருகிறது.

வீட்டுத் தொகுதிகள் எண்களால் குறிக்கப்பட எங்கிருந்தும் வாடகைக்காரில் போய் வருவது எளிதாகி விடுகிறது. எண்களைச் சொன்னால் காரிலுள்ள G.P.S. மூலம் எளிதாகக் கண்டு பிடிக்க முடிகிறது. வீடுகளில் எந்தக் குழாயைத் திருப்பினாலும் வருவது நல்ல தண்ணீர் மட்டுமே. அமெரிக்காவிலும் முன்பு இதே நிலையைக் கண்ட போது ஆச்சரியமாக இருந்தது. சிங்கையில் தண்ணீரும் இறக்குமதிதானாம். மலேஷியா நாட்டிலிருந்து தண்ணீரைப் பெற்று அதை நல்ல நீராக்கி அவர்களுக்கே திரும்ப கொடுத்து லாப வியாபாரம். அதோடு தங்களுக்கும் தண்ணீரை இறக்குமதி செய்து கொள்கிறார்கள். வீட்டைச் சுத்த பத்தமாக வைத்திருக்க வேண்டுமாம். அவ்வப்போது வீடுகளின் நிலையை அரசு  கண்காணிக்கிறது.  கொசு போன்றவைகளை உருவாக்கும் வழியாக தண்ணீர் எங்கும் கட்டிக் கிடந்தால் அதற்கு தண்டம் உண்டு. நம்ம ஊர்ல மாதிரி அங்கங்க எச்சி துப்புறது, கண்ட இடத்தில் குப்பை போடுவது இவைகளைச் சிறு வயதிலிருந்தே தடை செய்யப்பட்ட விஷயமாக ஊட்டி விட்டிருக்கிறார்கள். எங்கும் எதிலும் குப்பையில்லை; அழுக்கில்லை. அட .. சாலைகள் கூட எவ்வளவு சுத்தம்.வீடுகளில் கூட நம் குப்பைகளை அந்தந்த மாடியில் உள்ள  ஒரு பொந்தில் கொட்டி விடுகிறார்கள். குழாய் வழியாக அது 'மறைந்தே' விடுகிறது.

வீட்டுத் தொகுதிகளைச் சுற்றி நல்ல புல்வெளி; இரவில் உண்டு களிக்க திறந்த இடங்கள்; உடற்பயிற்சிக்கான இடங்கள்; வயதானவர்களுக்கான கீழ்த்தளத்தில் ஓரிடம்; வீட்டில்  நல்லது கெட்டது எதற்கும் ஒரு பொதுவிடம் - கல்யாணமோ, கடைசிப் பயணமோ அங்கே நடத்திக் கொள்ள வசதி -- self contained complexes.

பதினேழரை வயதில் ஆண்கள் இரண்டரை ஆண்டு கட்டாய ராணுவ சேவைக்குச் செல்ல வேண்டும். இளைஞர்கள் அதன்பின் வேலைக்குச் சேரும்போது இந்த இரண்டரை ஆண்டுகளும் அவர்களின்  தொழில் வரலாற்றுப் பதிவில் இடம் பெறுகிறது.இளைஞர்கள் அந்த ஆண்டுகளில் முழு மன வளர்ச்சி பெறுவது இயல்பாக நடந்து வருகிறது.  வாழ்க்கையில் அவர்கள் முறையான பழக்க வழக்கங்களைக் கைக் கொள்ள இந்தப் பயிற்சி உதவுகிறது. குடும்பத்திலிருந்தும் சிறிது விலகல்  வந்து விடுகிறது. அதன்பின் அவர்கள் ஒரு வளர்ந்த தனித்த மனிதனாக இருப்பதே நடைமுறை போலும்.

ஒவ்வொரு வீட்டுத் தொகுதிகள் பெரும்பாலும் ஒரு M.R.T. நிலையத்திற்குப் பக்கத்தில் உள்ளது. அதோடு  ஒரு பெரிய Mall ஒன்றும் பக்கத்திலேயே. இன்னொன்றும் உண்டு. ஒரு பெரிய food court.  பாதி கால்பந்து மைதான சைஸில் ஒரு சாப்பாட்டு இடம். அதைச் சுற்றிலும் பல கடைகள். உங்களுக்கு வேண்டியதை வாங்கி, அங்கேயே உட்கார்ந்து சாப்பிட்டுட்டு வரலாம். ஒரு சனி மாலை அந்தப் பக்கம் போனேன். எங்கும் எதிலும் காலி பியர் பாட்டில்கள். எங்கு வேண்டுமானாலும் உட்கார்ந்து மக்கள் சோம பானம் குடிக்கலாமாம். ஒரு நாள் இரவு 12 மணிக்கு ஒரு food court-க்குப் போனோம். இரண்டு மணியளவில் கிளம்பி போனால் பக்கத்திலிருந்த சாலையின் நடை மேடையில் ஒரு கச்சேரி - நம்ம ஊரு பசங்கதான் - நடந்துகிட்டு இருந்திச்சி. food court-ல் அம்புட்டு கூட்டம். ஜமாய்க்கிறாங்க'பா!

ஏற்கெனவே சொன்னது போல் underground bunkers நிறைய கட்டி வைத்திருப்பதாகச் சொன்னார்கள். மக்களின் எல்லா தேவைகளுக்கும் சிங்கை அயல்நாட்டு இறக்குமதிகளை நம்பித்தான் உள்ளது - தண்ணீர் கூட. ஆனாலும் எப்போதும்  தேவையான பொருட்களை அரசு சேமித்து வைத்துள்ளது என்றும், இரு முழு ஆண்டுகள் வெளிநாட்டு இறக்குமதி இல்லாவிட்டாலுமே நாடு அதை சமாளிக்கும் அளவிற்கு தேவையான எல்லா பொருட்களையும்  சேமித்து வைத்திருக்குமாம். ரூம் போட்டு அல்ல .. ஒரு பெரிய ஹால் பிடித்துப் போட்டு யோசித்து வைத்திருக்கிறார்கள்.

இரும்புக் கதவு
இதையெல்லாம் விட என்னை மிகக் கவர்ந்த விஷயம் - ஒவ்வொரு வீட்டிலும் ஒரு இரும்பறை உள்ளது. கதவும் தடிமனான இரும்புக் கதவு. அந்த அறை நம் தமிழ் மக்களால் பூசை அறையாகவும், மற்றவர்களால் store room-ஆகவும் பயன் படுத்தப் படுகிறதாம். அந்த அறையில் எந்த வித மாற்றமும் செய்யப்படக் கூடாதாம். இந்த அறை ஒவ்வொரு அடுக்கு மாடிக் கட்டிடத்திலும் ஒரே இடத்தில் ஒன்றின் கீழ் ஒன்றாக வரும்படி கட்டியுள்ளனர். எந்த வகை மனித, இயற்கை சீர்கேடுகள் நடந்தாலும் இந்த அறைகள் பாதுகாப்பானதாக இருக்கும். அடுக்குமாடிக் கட்டிடங்கள் நொறுங்கினாலும் இந்த அறைகள் பாதுகாப்பாக இருக்குமாறு கட்டியுள்ளார்கள்.

மக்கள் பழகும் எல்லா மொழிகளிலும் ஒரு அறிக்கை ஒட்டப்பட்டுள்ளது, தேவையான பொழுது இந்த அறைக்குள் மக்கள் ஒரு ரேடியோவும் சாப்பாட்டுடனும் இந்த அறைக்குள் நுழைந்து கொள்ள வேண்டுமாம்.
எப்ப்டியெல்லாம் யோசிச்சிருக்காங்க ... நாட்டுத் தலைவர்களுக்கு எவ்வளவு அக்கறை இருந்தால் இரு ஆண்டுகளுக்கு தேவையானதை சேமித்து வைத்தல், இது போன்ற இரும்பறை கட்டுதல் என்று பல விதயங்களை யோசித்து செய்திருப்பார்கள்!! ஆச்சரியமில்லையா?






















11 comments:

வடுவூர் குமார் said...

அருமையாக சொல்லியிருக்கீங்க ஆனால் நிஜத்தில் பல பெரிசுகள் இந்த ஓரறை ரூம்களில் தனியாக இருக்கும் போது என்னவோ செய்கிறது.சிலர் பிடிவாதமாக இருக்கவும் செய்கிறார்கள்.

மதுரை சரவணன் said...

நல்ல கேள்விகளுடன் ஆரம்பித்து பிரமாண்டத்தை சங்கர் பட ரீதியில் எடுத்துக் சொல்லி அதே பாணியில் கடைசியில் ஒரு மெசேஜ் ... அய்யா உங்கள் இடுகையும் உங்களைப்போன்று நாளுக்கு நாள் மிளிர்கிறது... வாழ்த்துக்கள். சிங்கப்பூர் செல்ல பலரை தூண்டுவதாக அமைந்துள்ளது பதிவு.

துளசி கோபால் said...

125

துளசி கோபால் said...

அட! நீங்களும் இரும்பறை பூஜை ரூமா மாறினதைக் கவனிச்சீங்களா!!!!

ஆபத்து வந்தால் நாம் சாமியையும் காப்பாற்றத்தானே வேணும்:-) அதான் அவரோடு நாமும் ஒண்டிக்கலாம்.

மக்கள் நலனை மட்டுமே கவனிச்சதால் இப்படியெல்லாம் யோசிக்க முடிஞ்சது.

இங்கேயும் நம் தலைவர்கள் (தம் சொந்த) மக்கள் நலனைத்தான் கவனிக்கிறாங்க:(

துளசி கோபால் said...
This comment has been removed by a blog administrator.
தருமி said...

வடுவூர்,
புரியலை .....

தருமி said...

துளசி
அது என்ன 125?

துளசி கோபால் said...

ஓ...அதுவா? நான் ஒரு தடவை சொன்னா 125 தடவை சொன்னமாதிரி:-)))))

கைரேகை லாகின்லே எப்படியோ இந்த 125 பதிவாகி இருக்குதுங்க. அதுபாட்டுக்கு வந்து சொல்லிட்டுப்போயிருது:(

அலைகள் பாலா said...

பிரமிப்பா இருக்கு

ஜெகதீசன் said...

அருமையாக சொல்லியிருக்கீங்க..:)

Sambar Vadai said...

நல்ல பதிவு, நல்ல தகவல்கள்.

ஒரு முக்கிய கேள்வி. அங்கு சிங்கப்பூரில் நம் தமிழர்கள் / இந்தியர்கள் / இந்தியவம்சாவளிகள் துவைத்த துணிகளை எங்கு/எப்படி உலர்த்துகிறார்கள்? நம்மூர் போல பால்கனியில் தொங்கவிடுவதா இல்லை வாஷிங்மெஷின் டிரையரிலிருந்து எடுத்து பீரோவுக்குள் வைத்துவிடுகின்றனரா?

Post a Comment