Sunday, October 29, 2006

185. அமெரிக்கத் துளிகள்

இதெல்லாம் எழுதட்டா சிலர் மாதிரியெல்லாம் எப்படித்தான் நாங்கெல்லாம் அமெரிக்க போய்வந்த கதையை அரங்கேற்றுகிறது?

நியூயார்க் பக்கம்; நியூபோர்ட் என்ற இடத்திற்குப் பக்கத்தில பலமாடிக் குடியிருப்பில் மாணவ-நண்பன் - அவன் இன்னும் சின்னாளில் 'காட்டான்' என்ற பெயரில் பதிவுலகத்தில் நுழைவதாகத் திட்டம் - அவனது விருந்தாளியாக ஒரு வாரம் தங்கியிருந்தேன். ஒரு நாள் அவனது ஃப்ளாட்டில் நுழையப்போகும் போது பக்கத்து வீட்டிலிருந்து ஒரு பெண்மணியும், அவரது குட்டிக் குழந்தையொன்றும் வெளியே வந்தார்கள். நான் அந்தக் குழந்தையைப் பார்த்து சிரித்து, 'டாடா'காண்பித்து என் 'அயலானை அன்பு செய்' என்ற தத்துவத்தை நிலைநாட்டினேன். காட்டான் ஒண்ணுமே கண்டுக்கவில்லை. ஏன்'பா என்று கேட்டேன். இதெல்லாம் எதுக்கு; நம்ம ஜோலிய நாம பாத்து போய்க்கிட்டே இருக்க வேண்டியதுதான் என்றான். சரி இது ஒரு அமெரிக்கத்தனம் போல என்று நினைத்துக் கொண்டேன்.

பிறகு ஒரு நாள் மாலை ஸ்டார் பக்ஸ் போனோமா, அங்கே காஃபி குடித்துவிட்டு, அப்போதுதான் முதல் முறையாக நம்ம ஊரில் பச்சைப் பழம், மோரிஸ் பழம் என்றெல்லாம் சொல்லுவோமே அதே பழம், ஆனால் அழகு மஞ்சள் கலரில் வழுவழுன்னு இருந்தது. அதுக்கு முந்தி அந்த மாதிரி பழம் நம்ம ஊர்ல பார்த்ததில்லை. ஆனா அதுக்குப் பிறகு முதலில் பெங்களூரில் பார்த்தேன். அன்று அத வாங்கலாமான்னு நானும் காட்டானும் பேசினோம். அப்போ கவுண்டரிலிருந்து 'fresh பழம்தான் ,வாங்குங்க' அப்டின்னு தமிழில் ஒரு குரல். 'ஆ'ன்னு வாயப் பொழந்து பேசினவரைப் பார்த்தேன். தமிழ் மூஞ்சி; ரொம்ப friendly-ஆ எங்களைப் பார்த்தார். ஆனால் நம்ம காட்டானோ கண்டுக்கவேயில்லை. கடையை விட்டு வெளியே வந்ததும் 'ஏன்'பா, கண்டுக்கவேயில்லை' என்றேன். ஆமா, இவன் இன்னைக்கி இங்க; நாளைக்கி எங்கேயோ; இதில் என்ன பெரிசா கண்டுக்கிறது' அப்டின்னான். அடுத்த அமெரிக்கத்தனம் என்று நினைத்துக் கொண்டேன்.

அதன் பின் நான் இருந்த இடத்துக்குப் பக்கத்தில் Midway Mall அப்டின்னு ஒரு இடம். சனி ஞாயிறுகளில் நானும் நம்ம சைனா நண்பரும் அங்கு சும்மாவாவது போவதுண்டு. அங்கே போய் ஒவ்வொரு சாமான்களாக எடுத்துப் பார்ப்போம். Made in China என்றுதான் நூத்துக்கு தொண்ணூரு பொருட்களில் இருக்கும் (இப்போ நம்ம ஊர்லயும் அப்படி ஆகிப் போச்சு; அப்போ அது ஒரு பிரமிப்பு) அவர் பெருமையாக அதை எனக்குக் காண்பிப்பார். அதன்பிறகு நம்ம ஊர் காசிலேயும், அவரது காசிலேயும் டாலரின் மதிப்புக்கு ஈடாக எவ்வளவு என்று பார்ப்போம். அதற்கு அவர் அவரது palmtop எடுத்து on செய்வதற்குள் நான் அவரது சைனா காசுக்கு (எட்டால் பெருக்க வேண்டியதிருந்தது - நமக்கு எட்டாம் வாய்ப்பாடு எல்லாம் ஜுஜுபியா) டக்குன்னு சொல்லிடுவேன். அவருக்கோ அப்படி ஒரு ஆச்சரியமா இருக்கும். உங்க காசில எவ்வளவு என்பார். அப்போ டாலுருக்கு 48 ரூபாய் என்று நினைக்கிறேன். 50-ஆல் பெருக்கி விட வேண்டியதுதானே; அடுத்த ஜுஜுபி வேலை.ஆனால் நண்பருக்கு பயங்கர ஆச்சரியமா இருக்கும்; இதலாலதான் இந்தியர்கள் software-ல் பெரிய ஆளாக இருக்கிறீர்கள் என்பார். அது ஒரு கதை. நம்ம கதைக்கு இப்போ வருவோம். அந்த மாதிரி மால் ஒன்றுக்குள் நுழைந்து கடை கடையாய் சுற்றிக்கிட்டு இருந்தப்போ, ஒரு 45-50 வயது அம்மா ஒருவர் - சேலையில்; காரில் இறங்கி கடைக்குள் வந்தார்; என் மூஞ்சைப் பார்த்ததும் நான் அவர்கள் உடையைப் பார்த்ததுமே புரிந்துகொண்டோம். எனக்கு அவர்களைப் பார்த்து ஒரு பிரமிப்பு. இங்க பார்ரா, வெள்ளைக்காரன் ஊரில் நம்ம ஊர் அம்மா...கார்ல வந்து... ஒரு மாதிரியாக மூக்கின் மேல் விரல் வைக்காமல் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டேன். அவர்கள் ஒரு ராயல் லுக் விட்டார்கள். ஆனாலும் அப்பப்போ திரும்பி திரும்பிப் பார்த்தார்கள். ஏதாவது சிரிச்சி வச்சா பேசலாம்னு நினச்சேன். ஆனால் அம்மணி அப்படி கெத்தாக இருந்துவிட்டுப் போய்ட்டாங்க. அடுத்த அமெரிக்கத்தனம்...

சிக்காகோவிலும் இதே போல்தான். சிக்காக்கோவிலிருந்து நம்ம சென்னை எலக்ட்ரிக் ரயில் மாதிரி ஒன்றில் - ஆனால் கூட்டமே கிடையாது - பக்கத்து suburb-க்குச் சென்றேன் இன்னொரு நண்பரோடு. முதல் வார்னிங்காக அவர் சொன்னது - ஆப்ரிக்க-அமெரிக்கர்கள் இருக்கும்போது எந்தக் காரணம் கொண்டும் black என்ற சொல்லை ஆங்கிலத்தில் சொல்லிவிடவேண்ட்டாம் என்றார். அடுத்தது - நம்ம ஊர் ஆளுக யாரும் இருந்தாலும் கண்டுக்க வேண்டாம்; ஏன்னா அவங்க நம்மளைக் கண்டுக்க மாட்டாங்க என்றார். அதே போல் எங்கள் சீட்டுக்கு சில இடம் தள்ளி நம்ம தமிழ் மூஞ்சி ஒன்று ஆங்கில நாவலைக் கையில் வைத்துக்கொண்டு, சீரியஸாக வாசித்துக் கொண்டு இருந்தது. ஓரக் கண்ணால் பார்த்தேன். அந்தக் கேசு எங்களைக் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. ரெகுலராக ரயிலில் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டாலும் நாங்கள் அதையெல்லாம் கண்டு கொள்வதில்லை என்றார். நான் தங்கியிருந்த இடத்தில் தமிழில் பேச ஆள் கிடைக்காமல், வாடி வதங்கி இருந்த எனக்கு இதெல்லாம் கொஞ்சம் வித்தியாசமாயிருந்தது. ஒன்றுமில்லையென்றாலும் ஒரு மணி நேரப் பயணத்தில் பேச்சுத் துணையாகக் கூட ஒரு தமிழனை இன்னொரு தமிழன் கண்டு கொள்வதில்லையென்பது விநோதமாயிருந்தது; இருக்கிறது.

இந்த அனுபவத்திற்கு முன் தங்கை ஒருத்தி குடும்பத்தோடு இரண்டு மூன்று ஆண்டுகள் அமெரிக்காவிலிருந்து வந்த போது, எடுத்திருந்த வீடியோ, போட்டோ எல்லாவற்றையும் பார்த்து விட்டு, எல்லாம் அவர்கள் கம்பெனியில் இங்கிருந்து சென்று வேலை பார்க்கும் கூட்டத்தைத் தவிர ஒரு ஆள் கூட வேறு மாநிலத்து நண்பர்களாகவோ, அமெரிக்க நண்பர்களாகவோ இல்லாது இருந்ததைப் பார்த்த போதும் மிக்க ஆச்சரியமாக இருந்தது.

இப்போ 20 நாளைக்கு முன் அமெரிக்கா சென்றடைந்த சின்ன மகள் அப்பப்போ தொலைபேசியில் பேசுவாளா...அவள் சொன்னது: பார்க்கிலோ, கடைகளிலோ, அவ்வளவு ஏன் கிறித்துவக் கோயில்களிலோ எதிர்த்தாற்போல் அமெரிக்கர்கள் வந்தால் ஒரு ஹலோ, அல்லது ஒரு புன்சிரிப்பு. ஆனால் நம்ம ஊர் ஆட்கள் நம்மை நேருக்கு நேர் - கண்ணோடு கண் - தற்செயலாகப் பார்த்து விட்டாலும் கூட ஒரு ஜடப்பொருளைப் பார்க்கும் reaction-ஓடு கடந்து சென்று விடுகிறார்கள்; ஏன் இப்படி என்றாள். அதுதான் அமெரிக்கத்தனம் என்றுதான் சொல்ல முடிந்தது.

அமெரிக்கக்காரர்களுக்கு ஒரு வேளை பதில் தெரியலாமேவென இங்கே இதைப் பதிவு செய்கிறேன். தருமியல்லவா...அதனால் ஒரு கேள்வி. வழக்கமாக எனக்கு யாரும் மதுரைக்காரர் ஒருவர் பதிவரெனத் தெரிந்தால் ஒரு பாசம்; அட, நெல்லைக்காரர் என்றால் கூட பிறந்த மண் பாசம் பெருக்கெடுக்கிறது. அடுத்த மாநிலத்தில் நம் மாநிலத்தவரைப் பார்க்கும்போதும் ஒரு பாச ஊற்று பொங்கிவிடுகிறது; பொங்கியிருக்கிறது. அப்படியானால் அடுத்த நாட்டில் நம் நாட்டினர் என்றாலே அந்தப் பாசம் வராதா? அதுவும் தமிழ்நாட்டுக்காரன்/ர்/ரி என்று தெரிந்தாலும் எப்படி, ஏன் கண்டுக்காமல் போகி(றீ)றார்களாம்? கண்டுக்கிட்டா அத ஒரு மாதிரி தப்பாதான் எடுத்துக்கொள்கி(றீ)றார்களாமே ஏன்?


.
.

35 comments:

பெத்தராயுடு said...

எல்லாம் AMWAY பயம்தான்.

கால்கரி சிவா said...

நான் அந்த மாதிரியெல்லாம் கிடையாது. நம்மூர் காரர்களென்றால் புன்சிரிப்பேன். பேசினால் பேசுவேன். இல்லையென்றால் இல்லை. பஸ்ஸில் டிரய்னில் பிளேனில் வெள்ளைகாரர்கள் நன்றாகவே பேசுவார்கள். நம்மாட்கள் வெள்ளைகாரனிடம் நாக்கை சுழட்டி சுழட்டி பேசுவார்கள். நம்மளைகண்டால் விலகி ஒடுவார்கள்.

மத்தியகிழக்கில் நம்மிடம் பணத்தை வட்டியில்லா கைம்மாற்றாக வாங்கி அவர்கல் பணத்தை அதிக வட்டியில் சேமிப்பார்கள்.

இந்த லிஸ்ட் மிகபெரிது

துளசி கோபால் said...

//இதெல்லாம் எழுதட்டா சிலர் மாதிரியெல்லாம் எப்படித்தான் நாங்கெல்லாம்
அமெரிக்க போய்வந்த கதையை அரங்கேற்றுகிறது? //

இதில் எதாச்சும் உள்குத்து இருக்குதாங்க? :-)

இங்கேயும் வரவர இப்படித்தான் ஆகுது. பெரிய ஊரான ஆக்லாந்து & வெலிங்டன்னில்
ஏற்கெனவே இப்படித்தான்(-:

பெத்தராயுடு சொல்றாப்போல 'ஆம்வே' காரணமோ? :-)))
'கெமிஸ்ட்டிரி வொர்கவுட்' ஆகலையா? :-)

Anonymous said...

நல்ல பதிவு. என் அப்பா முதல்முறை விசிட் வந்தபோது இதைத்தான் அனுபவித்தார். என்னடா வாக்கிங் போனால் வெள்ளைக்காரன் எல்லாம் புன்சிரிப்புடன் குட் மார்னிங் அல்லது ஹவ் ஆர் யூ ன்னு கேட்கிறான், ஆனா நம்ம ஊர் பய ஏன் நான் ஏதோ அவங்கப்பன் சொத்த பிடுங்க வந்த மாதிரி முறைக்கிறான்? என்றார்!

Mookku Sundar said...

ஏற்கனவே செட்டில் ஆகி இருக்கிற தமிழனுக்கு, தான் புதுசா பாக்கிறவன் தன்னை எதுக்காவது யூஸ் பண்ணி தன்னையும் க்ராஸ் பண்ணிட்டா என்ன பண்றதுன்னு நெனைப்பு..?? ரெண்டு பேரு புதுசா பாத்து பேசிக்கும்போது, மொதல்ல யாரு தமிழ்ல பேச ஆரம்பிக்கறதுன்னு போராட்டம் - மொதல்ல பேச ஆரம்பிக்கறவன் தமிழ்னு அடையாளப்படுத்திக்கறதன் மூலமா, ரெண்டாமவன் கிட்டே ஏதோ கேக்கப் போறான்னு ஒரு யூகம், அப்படியே ரெண்டு வார்த்தை தமிழ்ல பேசினத்துப்புறம், எந்த ஊரு/ நீங்க வெஜியா இல்லை நான் வெஜ்ஜான்னு ஒரு கேள்வி.

பரஸ்பர அவநம்பிக்கை, மதிப்பின்மை, தன் இனத்தைத் தவிர பாக்கி எல்லோர் மேலும் தோழமை போன்றவைதான் அயல்நாட்டில் பெருவாரியான தமிழ் மனோபாவம். விதிவிலக்குகள் குறைந்த சதவீதம்தான்தான். உழக்கில் கிழக்கு மேற்கு..ஜெயகாந்தன் சொல்லி இருக்கிறாராம் "வித்தியாசங்களைப் பேசிப் பேசியே விரிந்து போனவன் தமிழன்" என்று. அது ஒரு காரணமாக இருக்கலாம். வித்தியாசங்களைப் பேசுவது, அவைகளைப் புரிந்து கொண்டு களைய. துரதிருர்ஷ்டவசமாக அது நடப்பதில்லை :-(

ஆம்வே பயமெல்லாம் இல்லை. ஆம்வே ஆட்களுக்கு என்று இரு தனி பாணி இருக்கிறது :-)

இலவசக்கொத்தனார் said...

இது எப்ப வந்தது? இவ்வளவு பக்கம் வந்து ஒரு வார்தை கூட சொல்லலையே! ஒரு வேளை நாங்க பார்த்து. சிரித்து பேசிடுவோம்ன்னு பயமா?:)

நெல்லைக் கிறுக்கன் said...

தருமி அண்ணாச்சி,
நீங்க சொல்லுதது முற்றிலும் உண்மை. நானும் இந்த மாதிரி நெறைய பேரப் பாத்திருக்கேன். நேர்ல முத முறையா அறிமுகமானாலும் சரி, இல்ல தொலைபேசில பேசினாலும் சரி நம்ம ஆளுக அப்பத்தான் கேம்பிரிட்ஜ், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழ்கத்துல இருந்து திரும்பினவனுக மாரி ஆங்கிலத்துலயே பேசி ரொம்ப சீனப் போடுவானுக.

ஆனா இலங்கைத் தமிழர்கள் அப்படியில்லை, தமிழ்நாட்டுல இருந்து வந்திருக்கோமுன்னா அவ்வளவு பாசமா இருக்காங்க.

மத்த எந்த மாநிலத்துல இருந்து வந்த ரெண்டு பேரு சந்திச்சுக்கிட்டாலும் அவுக மொழியில தான் பேசிக்கிடுதாக. நம்ம ஆளுக தான் ஜாக்சன் துரை பேரன் மாதிரி திரியுதானுவ.

தருமி said...

துளசி,
ரெண்டு பாய்ண்ட்:
1. நீங்க போனது ஆஸ்த்ரேலியா. நான் உங்கள ஒண்ணும் சொல்லலை. ஆச்சா..அடுத்து..
2. உங்களுக்கு அவுங்களுக்கும் யானையும் பூனையும் பிடிச்சிருக்கலாம்; அதுனால அவங்க ஸ்டார் பக்ஸ் பத்தி எழுதினதால்தான் நானும் அத எழுதுனது மாதிரி நீங்க கேக்கிறது சரியில்லை...ஆமா, சொல்லிட்டேன்.

Hariharan # 03985177737685368452 said...

குவைத்தில் இவ்வளவு ஃபிலிம் காட்டுவதில்லை.

பொன்ஸ்~~Poorna said...

எனக்கு அப்படித் தோணலை தருமி.
என் அனுபவம் ரொம்ப நல்லாவே இருந்தது. எல்லாரும் நல்லா பேசினாங்க, வணக்கம் சொன்னால் திரும்பச் சொன்னாங்க..

அந்த ஊர் நண்பர் ஒருத்தர் நான் மறந்து போன குக்கர் விசில் வரை கொடுத்து உதவினார்னா பார்த்துக்குங்களேன்..(எல்லாம் நம்ப SK புண்ணியம்..)

அங்கிருந்து வந்த பின்னும் அருகிலிருந்த அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் நண்பரொருவர் இப்போவும் மடல் அனுப்பிக் கொண்டிருக்கிறார். உண்மையில் நான் ரொம்ப அன்பா இருப்பாங்கன்னெல்லாம் எதிர்பார்த்துப் போகாததும் காரணமா இருக்கலாம் :)

பொன்ஸ்~~Poorna said...

//அவங்க ஸ்டார் பக்ஸ் பத்தி எழுதினதால்தான் நானும் அத எழுதுனது மாதிரி நீங்க கேக்கிறது சரியில்லை...ஆமா, சொல்லிட்டேன். //
இதெல்லாம் ஓஓஓஓஓவர்!!!

தருமி said...

அனானி,
நல்ல விஷயமா சொல்லியிருக்கிறீங்க...அதான் பின்னூட்டத்தை அனுமதிச்சிட்டேன். ஒரு புனைப்பெயர் ஏதாவதா வச்சிக்கிட்டு எழுதுங்களேன். யோசிங்க, தயவு செய்து.

தருமி said...

மூ.சுந்தர்,

நல்லா விலாவாரியா எழுதியிருக்கீங்க...ஆனா ஏன் நாம மட்டும் அப்படிங்கிறதுதான் தெரியலை.
இங்கிலிபீசில பேசறது நம்ம எல்லாத்துக்கும் ஒரு 'இதுதான்'. அந்த மாதிரி பேசுறவங்களை நாம் புத்திசாலி என்று கொஞ்சம் அதீத மரியாதை தருவது காரணமாக இருக்கலாம். ஆனா வெளிநாட்டில பாத்துக்கும்போது கூட ஏன் கண்டுக்காம இருக்கணும்ங்கிறதுதான் புரியலை.

ஆக்ரா ரயில்வே பிளாட்பாரத்தில் தூங்கிக்கொண்டிருக்கும்போது (1970,மே) தமிழ்ச் சத்தம் கேட்டு முழித்து, பக்கத்தில் இருந்த அம்மா ஒருத்தங்களைப் பார்த்து ஏதோ தமிழில் நான் கேட்டதும், அந்த அம்மா அப்படியே ஒரு ஆச்சச்சரியமா, 'இங்க பாருங்க இந்த தம்பி தமிழ் பேசுதுன்னு' கொஞ்சம் தள்ளி நின்ற அவங்க வீட்டுக்காரரிடம் சந்தோஷத்தில கத்தினது நினைவுக்கு வருது.

அந்தச் சுற்றுலாவில் கொல்கத்தா ரயில் நிலையத்தில் அப்பாவும் பையனும் தமிழ் பேசிக்கொண்ட்டிருந்ததைப் பார்த்து நானும் சேர்ந்து கொண்டு அளவளாவியதும் நினைவில் இருக்கு.

என்னமோ போங்க, இப்பத்தான் இப்படி ரொம்ப அமெரிக்கத்தனம் வந்து போச்சோ என்னவோ..!

தருமி said...

கொத்ஸ்,
//இது எப்ப வந்தது? //
எது எப்ப வந்ததுன்னு கேக்குறீங்க. நான் வந்ததா..? அது 2002-ல் பெப் - மே.

தருமி said...

நெகித் தம்பி,
நீங்க இப்படி சொல்லுதியல்லா, நெசமா சொல்லுங்க..நீங்களும் அவியளமாதிரிதான இங்கிலிபீசுல பேசுவீங்க. நால்லாம் அப்படித்தான். என்ன, இப்போ பதிவர்கள் யாரையாவது பார்த்தா முழுசுமா தமிழ்லதான் பேசிர்ரது. எதுக்கு வம்புன்னுதான் !

அதென்னவோ மனசுக்குள்ள நமக்கெல்லாம் அது ஊறிப் போச்சு. அதிலயும் தென்னிந்தியக்காரர்கள், அதிலயும் நம்ம தமிழ்நாட்டுக்காரவுக தான் நல்லா இங்கிலிபீசு பேசுதாவன்னு எல்லோரும் சொல்லுதாவன்னு நாமளே சொல்லிக்கிட்டு, இப்படி அலையுதோம்.

தருமி said...

ஹரிஹரன்,
அப்போ குவைத் தமிழர்களுக்கு ஒரு "ஓ" போட்டுடவேண்டியதுதான்.

தருமி said...

பொன்ஸ்,
நான் சொன்னது நாம் புதிதாகப் பார்க்கும் நம்முடன் எந்த தொடர்பும் இல்லாத மக்கள் பற்றி.
ஆபிசில் பத்தில ஒருத்தர் ரெண்டுபேர் நல்லா பழகுறது பெரிசில்லை. நண்பரின் நண்பர் பழகுவதும், விசிலடிப்பதும் - சாரி, விசில் கொடுப்பதும் பெரிசில்லை. நான் சொன்னது மாதிரி பொது இடங்களில் கண்டுக்காம போறது மட்டும் இல்லாமல், wantonly avoid செய்றது பற்றித்தான் சொல்றேன். ஒரு சின்ன சிரிப்புகூட இருப்பதில்லை என்பதுதான் ஆச்சரியம்.

தருமி said...

பொன்ஸ்,
//அவங்க ஸ்டார் பக்ஸ் பத்தி எழுதினதால்தான் நானும் அத எழுதுனது மாதிரி நீங்க கேக்கிறது சரியில்லை...ஆமா, சொல்லிட்டேன். //
இதெல்லாம் ஓஓஓஓஓவர்!!!//

என்னங்க பொன்ஸ் சண்டைக்கு வர்ரீங்க. என்ன ஓவர்..?
ஆன,பூன பிடிக்கும்னு சொன்ன அது நீங்கதான் நினச்சிக்கிட்டா நானா பொறுப்பு?
ஸ்டார் பக்ஸ் பற்றி எழுதினது அப்டின்னா அதுவும் உங்களப் பத்தின்னு நினச்சுக்கிட்டா நானென்ன பண்றது?

இதெல்லாம் சரியில்ல...சொல்லிட்டேன், ஆமா!!!

Boston Bala said...

இந்தியாவில் எதிர்ப்படுவோரிடம் முகமன் கூறும் பழக்கம் இருந்ததில்லை. இங்கும் அதையே இந்தியர்கள் தொடர்கிறார்கள்.

கண்ணும் கண்ணும் சந்தித்துக் கொண்டால், மேற்கத்திய உலகில் தவறான அபிப்ராயம் ஏற்படும் அபாயம் உண்டு. இரவலர்களை கீழ்த்தரமாக நோக்கவும், மற்றவர்களை முறைப்பாகவும் பார்ப்பதற்கு மட்டுமே வேடிக்கை பார்ப்பதாகக் கருதுகிறார்கள். இந்த முன்முடிவைத் தவிர்க்க, அமெரிக்கர்கள், 'எப்ப்டி இருக்கீங்க' என்று வினவி, அடுத்த நொடியே பதிலுக்குக் காத்திராமல், ஓட்ட நடையில் காணாமலும் போவார்கள்.

சுருக்கமாக, மற்ற தமிழர்களோடு அளவளாவ ஆவல்தான். ஆனால், சந்தித்த அடுத்த நொடியே 'எவ்வளவு சம்பளம்... எத்தனை குழந்தை... மனைவி வேலைக்குப் போகிறாளா?' என்று அந்தரங்கக் கேள்விகளை சந்தித்து அரண்டு போயிருப்பது முதல் காரணம்.

அமெரிக்கர்களோடு பேச்சுக் கொடுத்தால், வானிலை, போக்குவரத்து நெரிசல் தாண்டி (மிஞ்சி மிஞ்சிப் போனால் விளையாட்டுப் போட்டிகள் குறித்த அலசல்) பேச்சு நீளாது.

முதல் தடவை சந்திப்பிலேயே உரிமையோடு இந்தியர்கள் 'உங்களுக்கு ஆரக்கிள் தெரியாதா? இன்னும் இங்ரெஸ் டேட்டாபேஸ்தானா... நீங்க வேஸ்ட்' என்று தீர்ப்புகளும், 'கருணாநிதி & ஜெயலலிதா ஆர் இடியட்ஸ். ஹௌ கம் யூ தமில்ஸ் லிவ் வித் தெம்?' என்று பெரியமனுசத்தனமும் வீசி விசி நொந்து போவது மற்றொரு காரணம்.


நண்பரின் பதிவும் நிஜமான நிகழ்வை சொல்கிறது: Don’t be nice to Desis « The normal self

bala said...

//ஆனா இலங்கைத் தமிழர்கள் அப்படியில்லை, தமிழ்நாட்டுல இருந்து வந்திருக்கோமுன்னா அவ்வளவு பாசமா இருக்காங்க//

நெல்லைக்கிறுக்கன் அய்யா,

நீங்கள் சொல்வது சரி. சிறிது காலம், நான் இங்கிலாந்தில் பணி புரிந்த போது இலங்கைத் தமிழர்களின் பாசம் மிக்க அன்பினை புரிந்து கொண்டேன்.

பாலா

tamizhppiriyan said...

இத நிறைய வாட்டி அனுபவிச்சு இருக்கேன்! ஏன் அப்படி சிலர் என்று இன்னும் தெரியல..
நம்ம ஊர் முகமாகய் யாராவது பார்த்த உடனே என்னையும் அறியாமல் ஒரு ஸ்மைல் கொடுத்திடுவேன்..இதுல நல்லபடியா ரெஸ்பான்ட் பன்றவங்க 60% பேர் தான்..மீதி எல்லாரும் நாம ஏதாவது போய் அவங்ககிட்ட உதவி கேட்டுவிடுவோமோ அப்படின்னு பயந்து ஓளிந்து ஓடிருவாங்க..சீ ஏன்டா சிரிச்சோம்ன்னு எம்பாரஸங்கா இருக்கும்..! இது அமெரிக்கத்தனமா இல்லை பயந்து போய், இவன் கிட்ட பேசி வம்ப விலைக்கு வாங்கிடுவோமோ அப்படின்னு நினைச்சு, சிரிக்காம lets show that i am not happy with ur way of smiling at me..அப்படின்னு நினைக்க்றாங்களோன்னு தோனுது..!

Unknown said...

இங்கே துபையிலெல்லாம் அப்படியில்லையென்று நினைக்கிறேன்.

நீங்க தமிழா? என்று கேட்டுத் தெரிந்து கொண்டு தமிழில் பேசுகிறார்கள்.

ஒருவேளை இங்கிருப்பவர்களுக்கு அமெரிக்க அளவுக்கு தகுதி வரவில்லையோ என்னவோ!

குமரன் (Kumaran) said...

தருமி ஐயா. இது அமெரிக்கத் தனம் இல்லைங்க ஐயா. அமெரிக்க இந்தியத்தனம், அமெரிக்கத் தமிழ்த்தனம்ன்னு வேணும்னா சொல்லிக்கலாம். அமெரிக்கர்கள் கண்ணுக்குக் கண் பார்த்தீர்கள் என்றால் புன்னகையுடன் முகமன் கட்டாயம் சொல்லுவார்கள்.

எனக்கும் நியூஜெர்ஸியில் (1997ல்) இதே அனுபவம் கிடைத்தது. நம்மவர்கள் முகத்தைத் திருப்பிக் கொண்டு போவார்கள் (தமிழர்களும் மற்றவர்களும்). ஆனால் அமெரிக்கர்களும் சீனர்களும் முகமன் சொல்லுவார்கள். வியப்பாக இருக்கும். மினசோட்டாவில் அது குறைவு. இங்கே இந்தியர்களைப் பார்த்தவுடன் முதலில் நானே முகமன் சொல்லிவிடுவேன். சிலர் மறுமொழி கூறமாட்டார்கள். மற்றபடி நிறைய பேர் மறுமொழி கூறியே ஆக வேண்டிய கட்டாயத்தாலோ என்னவோ சொல்லுவார்கள். அண்மையில் ஒரு வியப்பு. தமிழ்நாட்டில் இருந்து வந்த ஒரு பெற்றோர்களைப் பார்த்து நான் வணக்கம் சொல்ல அவர்கள் பதில் சொல்லாமல் ஒரு நிமிடம் திருதிரு என்று முழித்தார்கள். பின்னர் தொடர்ந்து நான் தமிழில் பேச அவர்களும் பேசினார்கள். :-)

ஆம்வேயும் ஒரு காரணம் என்று நினைக்கிறேன். இதுவரை ஒரு பத்து பேராவது ஆம்வேயைப் பற்றிச் சொல்லியிருப்பார்கள் என்னிடம். குறைந்தது இருபது பேராவது பிஜினஸ் பார்ட்னர்சிப் தருகிறேன்; நீ பணத்தை முதலீடு செய் என்று சொல்லியிருப்பார்கள். அதில் நீ சாப்ட்வேரில் 10 வருடம் சம்பாதிப்பதை நான் உனக்கு ஒரே வருடத்தில் சம்பாதித்துத் தருகிறேன் என்று ஆசைகாட்டல் வேறு. இத்தனைக்கும் அந்த ஆட்களை நான் அப்போது தான் முதன்முதலில் பார்ப்பதாக இருக்கும். :-)

G.Ragavan said...

அமெரிக்காவில நானும் இந்த நிலையைப் பார்த்ததுண்டு.

ஆனால் பெல்ஜியத்தில் வேறொரு அனுபவம். நான் தங்கியிருந்த வீட்டிற்குப் பக்கத்தில் ஒரு இலங்கைத் தமிழர் வீடு இருந்தது. அங்கே எனக்குத் தமிழ்ப்படங்கள் கிடைக்கும். அந்த வீட்டுப் பையன் என்னோடு நன்றாகப் பழகுவான். புதிதாக வந்திருக்கும் கேசட்டுகளை எடுத்துத் தருவான்.

பாரீசில் நடந்து போகையில் என்னுடைய நெற்றியில் எழுதி ஒட்டியிருப்பதைப் பார்த்து விட்டு "நீங்க தமிழா"ன்னு கண்டுபிடிச்சு வந்தார் ஒரு நண்பர். அவர் பெயர் வெங்கடேஷ். இப்பொழுது எங்கிருக்கிறாரோ. ரயில் சினேகம் போல ஆகிவிட்டது.

அதே பாரீசில் ஈபில் டவரில் எங்களைப் பார்த்து விட்டு ஒரு இஸ்ரேலியத் தம்பதிகள் ரொம்பவும் சந்தோசப் பட்டார்கள். எங்களோடு படமெல்லாம் எடுத்துக் கொண்டார்கள். இண்டியன்ஸ் இண்டியன்ஸ் என்று பெருமைப்பட்டார்கள். அமிதாப் பச்சனும் ஹேமாமாலினியும் நன்றாக இருக்கிறார்களா என்று கேட்டார்கள். அவர்கள் கேட்டதை தர்மேந்திராவிடமும் ஜெயாபாதுரியிடமும் சொல்லக்கூடாது என்று முடிவு செய்தோம்.

அந்தப் பெண்ணின் தாத்தா பாட்டிகள் இந்தியாவில் இருந்தார்களாம். அந்தப் பெண்ணும் இந்தியாவில் மிகச்சிறிய வயதில் இருந்தார்களாம். அந்தப் பாசம்.

Anonymous said...

Dear Sir,
I disagree some of the commenter here the way they try to project this as a problem/complaint in tamils(alone). It shows they have gossip like mentality, don't have the capacity to understand a problem or they might enjoy throwing mud on tamils. I accept the described gesture here is bad and would be nice if it changes. But the manners defined here is not for Tamils ALONE, in general non-Tamil indians have same manners as well. So, don't be a kid here, open your eyes, grow up, and stop throwing mud on tamils. The issue defined here is lack of social skills...and every one of us know how much we lack to put this kind of social skills in our kids from their childhood. what ever the social skill we feed in as a kid we exhibit them very successfully...like respecting a elder person, talking to older people with respect, etc. But this kind of social skill defined here is foreign to us...Indians...It's a Indian phenomena. I'm not defending it's a right gesture...but I'm trying to approach why it is in this way, rather than throwing mud on society. I do accept some people exhibit "attitude" problem in scenario like this, but they are few. But in general
....it is lack of social skill, combined with other factors such as...psychological alienation being in a foreign land...most of the persons exhibit this is from IT field, where one live as a isolated island ( a psychological environment/disorder natural to the industry)...younger generation's "f**k others" attitude...etc.

I see this as a "socio psychological issue", rather than Tamil's behavioral problem. One has to work hard to get this social skill package.

Disc: This comment's intent is not to hurt or defame anyone, but strong opposition of using this lack of skill as opportunity to throw mud on Tamils.

Thx.
KVD.

தருமி said...

கால்கரி சிவா


நான் அந்த மாதிரியெல்லாம் கிடையாது. நம்மூர் காரர்களென்றால் புன்சிரிப்பேன். பேசினால் பேசுவேன். இல்லையென்றால் இல்லை. பஸ்ஸில் டிரய்னில் பிளேனில் வெள்ளைகாரர்கள் நன்றாகவே பேசுவார்கள். நம்மாட்கள் வெள்ளைகாரனிடம் நாக்கை சுழட்டி சுழட்டி பேசுவார்கள். நம்மளைகண்டால் விலகி ஒடுவார்கள்.

மத்தியகிழக்கில் நம்மிடம் பணத்தை வட்டியில்லா கைம்மாற்றாக வாங்கி அவர்கல் பணத்தை அதிக வட்டியில் சேமிப்பார்கள்.

இந்த லிஸ்ட் மிகபெரிது

Thekkikattan|தெகா said...

தருமி,

நல்ல ஒரு விசயத்தை கவனிச்சு இங்க கொண்டு வந்து வச்சிருக்கீங்க... நானும் இந்த வருடம் மே மாதம் ஒரு பின்னூட்டத்தின் மூலமா ஒரு சொந்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டேன்.

அதனை அப்படியே துண்டித்து இங்கு இணைத்திருக்கிறேன். பார்த்துக்கோங்க...

இப்ப அண்மையில ஒரு அனுபவம் தருமி, அது ஒரு தனிப் பதிவா போடுற அளவிற்கு இருக்கு (ஒரு தமிழ் அன்பரோட). அப்படிப் போட்ட ரொம்பத்தான் தெகா தற்புகழ்சி விரும்பியா இருக்கான் அப்படின்னு சொல்லிவீகா இருந்தாலும் சொல்ற அளவிற்கு அதில் விசயம் இருக்கு.

நானெல்லாம் ஸ்டார் பக்ஸ்ல காஃபி குடிக்கிறதில்ல, அவன ஊக்குவிக்க கூடாது அப்படிங்கிற பாலிஸிதானுங்க. இத்தனைக்கும் நடந்து போற தூரத்தில அந்த பய புள்ள கடை இருக்கு. அங்க காஃபி குடிச்சாவே நம்ம அறிவு ஜீவியா ஆகிடறதா சொல்லிகிறாங்க.

சரி, விசயத்திற்கு போவோம். இப்ப அந்த பின்னூட்டம் மட்டும், பின்னால் பதிவு...


Thekkikattan said...
Deiva,

ஓ, அந்த அனுபவம்பத்தி இங்கே கொஞ்சம் பகிர்ந்துக்க சொல்லிறீங்களா... செய்றேனே,

நான் அமெரிக்கா வந்த புதிதில் நான் இருந்த இடம் கொஞ்சம் அதீதமா வெள்ளைக்காரங்க வசிக்கும் பகுதி (long island, New York) , அதனால இந்தியர்களெ பார்க்கிறதே கொஞ்சம் கஷ்டமின்னு வச்சுக்கங்ளேன். அந்த மாதிரியான ஒரு சூழ்நிலையிலெ ஒரு நாள் மிதிவண்டி போட்டு ஊர்வலம் வந்துகிட்டு இருக்கிறாப்ப திடீர்னு ஒரு இந்தியா ஆள் ஒருத்தர் நம்ம சாயல்லே வீட்டுக்கு வெளியில ச்சேர் ஒண்னு போட்டு உட்கார்ந்திருந்தார்.

எனக்கு அவரை பார்த்தவுடன் ரொம்ப உற்சாகமாகி மிதிவண்டிய அப்படியே சாச்சி போட்டுட்டு ஓடிப் போயி அய்யா, நீங்க இந்தியாவன்னு மூச்சிறைக்க கேட்டேன். அவரும் நிதானம மேலே கீழே பார்த்துப்புட்டு ஊருக்குப் புச்சா அப்படின்னு ஆங்கிலத்தில கேட்டுப்புட்டு நான் ஒரு மலையாளி, நீங்க தமிழா அப்படின்னா, தமிழ் பேசுற மக்கள் இருக்கிற பக்கம போயி ஆத்மாவை கண்டுப் பிடிச்சுங்கன்னு சொல்லிட்டு பேச்ச முடிச்சுக்கிட்டாரு.

எனக்கு என்னட இதுன்னு ஆகிப்பூச்சு, எவ்ளோ பேசவேண்டியிருக்கிற இடத்தில ஒரு மொழி வந்து புகுந்து காலிபண்ணிப் புடிச்சே அப்படின்னு ஒரே ஏமாத்தமா போயிருச்சு, இவ்வளவுக்கும் அவரு வீட்டுக்கும் நான் இருக்கிற வீட்டுக்கும் நடந்து போற தொலைவுதான்னு வச்சுக்கங்க.

அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா எனக்கு உலக அறிவு கிட்ட ஆரம்பிச்சு எப்படி நாம் மனிதர்கள் நமக்குள்ளேயே நிறைய பிளவுகளை வச்சுக்கிட்டு வெளியில வாழ்ந்துகிட்டு இருக்கிறோம். வெளுத்தது எல்லாம் பால் இல்லை என்கிற குழந்தை தனமான எண்ணத்திலிருந்து அடெல்ட் உலகத்துக்கு வந்துட்டேன் (அதிக மனிதனாக இராதே... ஓன் ஃபீலிங்க்ஸ் எல்லாம் கடலுக்கு அப்பாலே வச்சுக்கோ).

அதற்கு பிறகும் சில டெஸ்ட்களும் செஞ்சுட்டுத்தான், குஜாராத்தி மக்களோட இன்னபிற குரூப் இப்பிடி...

இப்ப எனக்கு நானே ஒரு நாடு, அதிலெ நானே எவெரித்திங்...

பி.கு: இதில் மாணவ உலகத்திற்கும், சாப்ட் வேர் மக்களுக்கும் பொருந்தாது. இது அடெல்ஸ் ஒன்லி. ;-))

Monday, May 22, 2006

Anonymous said...

Anna,

I am living in USA about 10 years. I didnot change my hairstyle (amma thalai variya athey style), Mustache (meesai). Somehow this Amway guys identifying me all time. If I smile thats it. They will take my time atleast an hour. This is not happend one or 2 times...Atleast everytime I smiled at a Indian.

So I do want to smile to everyone but never stop. Smile and pass (someone may say 'Suduthanni , Pachai milakai...., I never bother)

I want my time to spend with family and frinds not for foolish guys. I donot have time to diffentiate these people.....

Kunnathooran

தருமி said...

அமெரிக்க மக்களே,

* எல்லோரும் amway-க்கு பயந்து ஓடுறவங்களா இருக்கீங்க; அப்ப, யார்தாங்க அந்த ஆளுக..?

* ஆமா, இங்கேயே MLM ஊத்தி மூடுனது மாதிரிதான் தெரியுது. அங்க எப்படி இன்னும் இவ்வளவு ஜரூரா போகுதுங்கிறீங்க?

பொன்ஸ்~~Poorna said...

//அங்க காஃபி குடிச்சாவே நம்ம அறிவு ஜீவியா ஆகிடறதா சொல்லிகிறாங்க//
ஆகா.. ஒரு குரூப்பாத்தான் கெளம்பீருக்காய்ங்க!!

இலவசக்கொத்தனார் said...

தெக்கி பதிவில் இட்ட பின்னூட்டம். இப்பொழுதுதான் இங்கு வந்துள்ள சில பின்னூட்டங்களைப் படித்தேன். பாபா எழுதியுள்ள கருத்தை ஒட்டியே என் கருத்தும்.

-------------------------------------

தெக்கி,

நீங்களும் சரி, தருமியும் சரி. ஒரு விஷயத்தைப் பார்க்கறது இல்லை. நம்ம ஊரில் ஒரு லிப்டில் (சரிங்க, மின்தூக்கி) ஏறினா ஒருத்தராவது அடுத்தவங்க முகத்தைப் பார்த்து ஒரு புன்னகையோ, ஒரு ஹலோவோ சொல்வோமா?

நான் வெளிநாடு செல்ல ஆரம்பித்த பிறகுதான் இப்படி சொல்ல வேண்டுமென்ற தெளிவே பிறந்தது. அதன்பின் அதனை நான் இந்தியாவில் செய்தால் யாருடா இது கேனையன் என்பது போன்ற பார்வைதான் பதிலாகக் கிடைத்து இருக்கிறது.

ஆகையால் நீங்கள் குறிப்பிடும் பாராமுகம் வெளிநாடுகளில் மட்டும் நடக்கும் ஒரு விஷயமில்லை. அது நம் வளர்ப்பின் வெளிப்பாடு. There seems to be an inherent mistrust about others in our minds.

நமக்கு இந்தியாவில் இந்த மாதிரி அந்நியர்களின் பரிச்சியம் தேவைப்படாததால் அது அவ்வளவு முக்கியமானதாகத் தெரிவதில்லை. ஆனால் வெளிநாடுகளில் நம் நண்பர்கள் இல்லாத கணங்களில் இது அத்தியாவசியாமாகத் தோன்றுகிறது. அது கிடைக்காத வருத்தமும் மேலோங்குகிறது.

இன்று நாம் வலைப்பதிவின் மூலம் அறிமுகமாகி, முகம் பார்க்காமல் தினமும் சாட்டிங்கும் போனும் செய்து நெருக்கமான நண்பர்களாக இருக்க முடிகிறது. அது போலத்தானே நேரில் பார்க்கும் நேரங்களிலும் இருக்க வேண்டும்?

விவன்னியன் said...

Dharumi Ayya,
En anubhavathai poruthamatil idhey attitude indiavilum kidaika petren. Naanun enadhu nanbargalum Ludhianavil 1992-1994 irundha bodhu tamil atkalai thedi pidithu pesuvom, matrum veetuku azhaithu vandhu virudhu koduppom. Anaal nangal tamilargal enru poi pesum podhellam silar nazhuvi povadhai parthu veruthu poi irukirom. Oru nanbar solvadhai pola candavil nam mugathai parthu udaney tamizhil pesubhavargal ilangai tamizhargal mattum thaan. Even americavilum therindhavargal enral thaan thamizil pesuvargal. Oru murai en veetu owner(ilangai thamizhar) avarudhan oru thamizhaga thamizharai azahaithu vandaar. Angu vandha matroru ilangai thamizhar ivaridam pesa muyalumbodhu, nam thamizhaga nanbar Englishil pesa thodanginar. Udaney andha ilangai thamizhar "Enga neegalum thamizh naanum thamizh pinna en English?" enru kettar. Ennai porutha mattil en manager solvar "Rendu ... vena serthudalam anaal rendu thamizhargalai serkavey mudiyadhu".
ps: thavru irundhal kadaisi ... nalla thamizh sollai pottu kollavum.
nanri

பட்டணத்து ராசா said...

//என்னடா வாக்கிங் போனால் வெள்ளைக்காரன் எல்லாம் புன்சிரிப்புடன் குட் மார்னிங் அல்லது ஹவ் ஆர் யூ ன்னு கேட்கிறான், ஆனா நம்ம ஊர் பய ஏன் நான் ஏதோ அவங்கப்பன் சொத்த பிடுங்க வந்த மாதிரி முறைக்கிறான்? என்றார்!
//

அது சரி இதை ஏன் அமெரிக்கத்தனம் சொல்ரிங்க???

Anonymous said...

ஆமாங்க. இதுக்கு ஆம்வே ஒரு முக்கியக் காரணம்தான். சிலிகான் வேலி பக்கம் கொஞ்சம் அதிகம். ஆம்வேக்காரங்க யாராவது பேச ஆரம்பிச்சா, நானும் ஆம்வே டீலர்தான்னு சொல்லி தப்பிவிடுவேன்.

இப்போ ஜப்பான் வந்தப்புறம் இந்தியர்களைப் பார்க்கறதே அரிதாகி விட்டதால், யாரைப் பார்த்தாலும் ஒரு 2 நிமிஷம் நின்னு பேசி, தொலைபேசி எண்கள் பரிமாறிட்டுதான் பிரியறது வழக்கம். இதுவரை யாரும் பார்த்துட்டு பேசாமல் போனதில்லை.

போனதடவை சென்னைக்குப் போயிருந்தப்போ ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ்ல வாங்கிட்டு, பழக்கதோஷத்துல குனிஞ்சு நன்றி சொன்னேன். எல்லாரும் ஒருமாதிரியாச் சிரிக்க ஆரம்பிச்சிட்டாங்க. :-)) மத்தபடி ஹாய், தேங்க்ஸ் க்கு எல்லாம் ஓரளவு பதில் கிடைக்குது.

நன்றி
கமல்
www.varalaaru.com

Anonymous said...

உங்கள் பதிவு எனது சீங்கப்பூர் கல்லூரி வாழ்க்கையை நினைவு படுத்துகின்றது.சீங்கப்பூர் வந்து ஒரு 7 மாதம் தான் ஆகின்றது.இதற்குள் எனக்குக் கல்லூரியில் 60 மேற்பட்ட நண்பர்கள் உள்ளர்கள்.இதில் தமிழ் நண்பர்கள் வேறும் 5 பேர்கள் மட்டுமே.இது சீங்கப்பூர்தனமா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை.நான் ஒரு சிலரிடம் போய் பேசினாலும் முகத்தில் அடித்த மாதிரி பதில் சொல்வர்கள்.இப்படியே படிப்படியாக நான் தமிழ் மாணவர்களிடம் பேசுவதில் இருந்து குறைத்துக் கொண்டேன்.யாரிடம் பேசுவது என்றே எனக்குப் பயம்.இப்படிதான் பலரும் பேசமால் இருக்கின்றார்கள் என்று நினைக்கின்றேன்.ஒரு சிலர் தமிழன் என்றாலே பிரச்சனை என்று ஒதுங்கி சென்று விடுகின்றார்கள்.கல்லூரிக்கு வந்த புதிதில் ஒரு தமிழ் நண்பர்கள் கூட இல்லையென்று வருத்தப்பட்ட பொழுது அனைவரும் சொன்ன ஒரே வசனம் “இப்படி இருப்பதுதான் உனக்கு நல்லது”.ஏன் தமிழர்கள் என்றாலே பிரச்சனை என்று நினைக்கின்றார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.

Post a Comment