Friday, May 31, 2013

657. பேத்தியின் சித்திரங்களும் கவிதையும்
*

தன் குழந்தைகளை மையமாக வைத்து  “பூந்தளிர்”  என்றொரு பதிவு நடத்தும் பதிவர் சிறு குழந்தைகளிடமிருந்து கதையும், சித்திரமும் கேட்டு ஒரு பதிவு இட்டிருந்தார்கள்.  பேத்தியை இதில் இழுத்து விட வேண்டுமென்று நினைத்தேன். தற்செயலாக சென்னையிலுள்ள பேத்தி விடுமுறைக்கு மதுரை வந்தாள். வந்த முதல் நாளே விஷயத்தைச் சொன்னேன். ’பெரிய மனசு’ வைத்து ஒரு படம் தருவதாகக் கூறினாள். ஆனாலும் வந்து நாலைந்து மணி நேரம் எங்கள் வீட்டிலிருந்து விட்டு அடுத்த தாத்தா - பாட்டி வீட்டுக்குப் போய் இரு நாட்கள் கழித்து திரும்பி வந்தாள்.அந்த வீட்டுக்குப் போனதும் - என்னமோ ஒரு மூட் அவளுக்கு ! - கையில் கிடைத்த ஸ்கெட்ச் பேனாக்களை வைத்து ஒரு படம் வரைந்து கொண்டு வந்திருந்தாள்.படத்திற்கேற்ற ஒரு கவிதையும் எழுதியிருந்தாள்.அடுத்த நாள் கடைக்குப் போனோம். ஒரு செட் க்ரேயான்ஸ் வாங்கினாள். அதே படத்தை மீண்டும் ஸ்கெட்ச் பேனாக்கள் & க்ரேயான்ஸ் வைத்து மறுபடி வரைந்தாள். சில மாற்றங்கள் சொன்னேன் - பெயர் நடுவில் வயதோடு எழுதியிருந்தாள். தலைப்பையும் எழுதியிருந்தாள். இந்த இரண்டையும் தனியாக எழுதிக்கொள்ளலாம் என்று கூறினேன். அதே போல் வரைந்து இரண்டாவது படம் ரெடி. இதில் வானவில் முழுமையாக, சரியாக வராமல் போயிற்றே என்று எனக்கு சிறிது வருத்தம்.


 
படத்தையும், கவிதையையும் பூந்தளிருக்கு அனுப்பியாகி விட்டது. அவர்களிடமிருந்து கவிஞர் & ஓவியரைப் பற்றிய ஒரு குறிப்பு கேட்டார்கள். சென்னை சென்று விட்ட பேத்தியிடம் பேசினேன். இரு நாட்கள் கழித்து மறுபடி கேட்டேன். I am working on that ... என்று பதில் வந்தது!  இன்னும் குறிப்பு வந்து சேரவில்லை. வந்ததும் பூந்தளிருக்கு அனுப்ப வேண்டும்.

கவிதை: 
 A  TRIP  TO  THE  BEACH

                                                            My trip to the beach
                                                            Enjoy it by eating a ripe peach
                                                            That day was very long,
                                                            Eat your peach by singing a song.
                                                            That day was as precios as Earth
                                                            But no more than a Baby’s birth.
                                                            So that was my trip to the beach.
                                                            So pick up a shell,
                                                            and what do find under the shell?


                                                          A NICE FRIENDLY SMILY LEECH !

(Precios - ஒரு வேளை இது அமெரிக்கன் spelling- ஆக இருக்குமோ?!
 SMILY - அவள் எழுதியபடி கொடுத்து விட்டேன்.)


இரண்டாம் படம் வரைந்து கொடுத்ததும் வீட்டில் sand paper  இருக்கிறதா என்று கேட்டாள்; எடுத்துக் கொடுத்தேன்.  சில நிமிடங்களில் இன்னொரு படம் ஓ.சி.யாகக் கிடைத்தது! பழைய படத்தின் இன்னொரு நகல்.
ஊருக்குப் போகும் முன் இன்னொரு படம் வரைந்து வைத்து விட்டுப் போனாள்.*
இப்பதிவில் உள்ள படத்தையும் கவிதையையும் இணைய நூலில் போடுவதற்கு ‘ஆசிரியரைப்’ பற்றிய ஒரு குறிப்பையும் என்னிடம் கேட்டார்கள். நாமென்ன எழுதுவது .. ‘ஆசிரியரே’ எழுதட்டும் என்று நினைத்து பேத்திக்கு மெயில் அனுப்பினேன். அவளே எழுதி அனுப்புவதாகச் சொல்லி சின்னாட்களில் எழுதியனுப்பியதைக் கீழே பதிந்துள்ளேன்.

ALL ABOUT ME


I was born in Madurai – 13.12.2003. After 2 years I moved to the US and stayed  for 6 years. I stayed in New Jersey .I lived in one house but in it lived two families. I took the lower part and the other family took the top. My good friend Kaviya lived with the other family. Kaviya has a little  bro named Bharat. Since i was a baby in Madurai I did not fully know how to speak so I learned the USA culture as I grew up.

In US one of the years I went to Texas to visit my cousins Jordan and Anna. After some months while we were staying with my cousins we got a call from Kaviya that the house we lived in was on fire. Luckily my family was safe and so was the others. Since we had to move back we moved to a place called Troy Hills village. I made friends like Varsha, Amy, Dianthe, Divesh,and Krithika. I stayed there for 2 years. One day, my dad told me we had to move to India. I was sad. I said bye to all my friends, even my BFF. And now I’ve been staying in India for 1 year. And now I'M TEN!!!!!!!. And that’s my life. If only all my friends could see what I wrote. Thank you for reading.*

Tuesday, May 28, 2013

656. காணாமல் போன நண்பர்கள் - 18 - மீண்டும் காணாமல் போன நண்பர்கள் தந்த சோகம்

*
 நண்பர்கள் காணாமல் போவது வாழ்க்கையில் இயல்பு தான். ஆனால் காணாமல் போன நண்பர்களைத் தேடிக் கண்டுபிடித்த பின்  அவர்கள் நம்மிடமிருந்து மறுபடியும் வேண்டுமென்றே காணாமல் போவது பெரும் அதிர்ச்சியாகவும், சோகமாகவும் முடிகிறது.


பூண்டி கல்லூரியில் வேலை பார்த்த போது நல்ல நண்பர்களாக இருந்தவர்களில் சிலரின் முகவரி, தொலைபேசி, இணைய முகவரி என்று கொஞ்சம் தேடியலைந்தேன். சில சோகங்கள் தான் பின்னே வந்தன. என்னோடு வாடா .. போடா .. என்று பழகியவன் அக்கல்லூரியின் முதல்வராக இருந்திருக்கிறான். அவனைப் பற்றி ஒரு நண்பரிடம் கேட்டிருந்தேன். அவர் போய் அவனிடம் கேட்ட போது அவனுக்கு என் பெயரே மறந்து போயிருந்ததாகக் கேள்விப்பட்டேன். இன்னொரு நண்பன். என்னோடு தஞ்சையில் அறை நண்பனாக வேறு இருந்தான். நானும் அவனும் அந்தக் காலத்திலேயே - 1966-70 - blog எழுதி வந்திருந்திருக்கிறோம். எங்களுக்குள் அப்படி ஒரு பழக்கம். நான் அப்போது ஏதாவது துண்டுப் பேப்பர்களில் எழுதும் வழக்கம் இருந்தது. இந்த நண்பன் தன் பழக்கத்தை எனக்கும் சொல்லிக் கொடுத்தான். பேப்பரில் எழுதாமல் ஒரு நோட்டில் எழுதும் பழக்கத்தைக் கற்றுக் கொடுத்தான். பாதி உண்மை; பாதி கதை என்று பலவும் இருக்கும். பஸ்ஸில் பார்த்த பெண்கள் முதல் அக்கவுண்டில் சாப்பிடும் டிபன் வரை எல்லாம் எழுதுவதுண்டு. நல்ல பிடித்த சினிமா பார்த்துவிட்டு வந்தால் இரவு நிச்சயமாக ஒரு ’திரைப்படத் திறனாய்வு’ எழுதி விடுவோம்.


இரு மலர்கள் (சிவாஜி, பத்மினி, கே.ஆர். விஜயா) படமும், விவசாயி (எம்.ஜி.ஆர்.) படமும் ஒரே நாளில் எதிர் எதிர் தியேட்டர்களில் போட்டிருந்தார்கள். இரண்டையும் பார்த்தோம். இரு மலர்கள் கடைசி நாளன்று இரண்டாம் முறையாக படம் பார்க்கப் போனோம். கூட்டமேயில்லை. ஆனால் விசவாயு ... சாரி .. விவசாயிக்கு பெரும் கூட்டம். படம் பார்த்து விட்டு வந்து எங்கள் ‘வயித்தெரிச்சலை’ எழுதித் தொலைத்தோம்.


நான் ஒரு நோட்டு எழுதினால் அவன் இரண்டு மூன்று எழுதி விடுவான். ஒருவரை ஒருவர் நன்கு தெரிந்து வைத்திருந்தோம். காபி குடித்தால் தம்ளரின் விளிம்பு வரை ஊற்றிக் குடிக்க வேண்டும். சரியான விளிம்பு மனிதன்! அதே போல் தம்மடிக்கும் போது புகையை இழுத்தால் கன்னம் அப்படியே டொக்கு வாங்கி விடும். ஆழமான இழுப்பு!


இன்னொரு நண்பன். ரயிலில் கல்லூரி போகும் போது நானும் இவனும் சேர்ந்தால் மற்ற நண்பர்கள் எல்லோரும் கொஞ்சம் பயப்படுவார்கள். அவர்கள் காலை வாருவதில் எங்களுக்கு அப்படி ஒரு அளப்பறிய இன்பம்! நாங்கள் ஒரு கம்பார்ட்மென்டில் ஏறினால் பலர் அந்த வகம்பார்ட்மென்டையே மாற்றும் அளவுக்கு எங்கள் புகழ் ரயிலளவு நீண்டிருந்தது. இதற்காகவே நானும் அவனும் ரயிலில் கடைசியாகத்தான் ஏறுவோம். மதியம் இவனுக்கு சாப்பாடு வந்து விடும். கேரியரில் மேல் தட்டில் ஒரு சின்னக் கிண்ணத்தில் நெய் வரும். நான் விடுதிக்குச் சாப்பிடப் போகும் நேரத்தில் அந்தக் கிண்ணத்தை ஸ்வாகா செய்வது அடிக்கடி நடக்கும்.


நான் கல்லூரி மாறிப் போனபின் இவர்களோடு தொடர்பு இல்லாமல் போயிற்று. பின் ஓரிரு ஆண்டுகளுக்கு முன் அவர்களின் தொலைபேசி எண்களுக்கு முயற்சித்து அவைகளும் கிடைத்தன. இருவருக்கும் மகிழ்ச்சியோடு தொலை பேசினேன். அதே ]வைப்ஸ்’ - அலைவரிசை - அந்தப் பக்கம் இல்லாதது போல் தோன்றியது. இருந்தாலும் பரவாயில்லை என்று நினைத்துக் கொண்டேன். என் தொலைபேசி அழைப்பிற்குப் பின் அவர்களிடமிருந்து ஏதும் அழைப்பு வரவில்லை. சில நாட்கள் கழித்து இருவருக்கும் மறுபடி தொலை பேசினேன். ஒரே வருத்தமாகப் போய்விட்டது. இருவருமே என் தொலைபேசி எண்ணை save செய்து கொள்ளவில்லை. 
இரண்டாம் முறையும் பேசிய பின்னும் அவர்களிடமிருந்து எந்த தொடர்பும் இல்லை. கட்டாயமாக இணையத்தில் இருப்பான் என்று நினைத்த நண்பனுக்கு இணைய முகவரி கேட்டு sms அனுப்பினேன். சேற்றில் எறிந்த கல் ...


மூன்றாவதாக இன்னொரு நண்பன். அவன் வேலையில் ஓய்வு பெற்ற பின் மதுரையில் இருப்பதாக அறிந்து ஆவலோடு land line தொலைபேசி எண் கிடைக்க அழைத்தேன். அருகாமையில் தான் இருந்தான். சில நாட்கள் கழித்து மறுபடி அழைத்தேன். அந்த எண்ணில் யாருமில்லையென்ற தகவல் வந்தது.


மூன்று நண்பர்கள். அவர்கள் பக்கமிருந்து எந்தவித ஈடுபாடும் இல்லாதது மிகுந்த வருத்தமாக இருந்தது. வாழ்க்கையின் சுமைகளில் அவர்களுக்கு பழைய நண்பர்களின் உறவு இப்போது தேவையில்லாமல் போயிற்று என்று எடுத்துக் கொண்டேன். என் பழைய தொலைபேசியோடு அவர்கள் எண்களும் காணாமல் போய் விட்டன. இப்போது நான் ஆசைப்பட்டாலும் உடனே தொலைபேச முடியாது என்றானது.


காணாமல் போய் மீண்டும் கிடைத்த நண்பர்கள் இப்போது மறுபடியும் நிஜமாகவே காணாமலேயே போய்விட்டார்கள் ...*
Sunday, May 26, 2013

655. இஸ்லாம் வேகமாகப் பரவுகிறது ...!*
http://www.thehindu.com/opinion/op-ed/seeking-allah-in-the-midlands/article4743582.ece 


SEEKING ALLAH IN THE MIDLANDS ....

OF THE THOUSANDS OF WHITE BRITONS EMBRACING ISLAM EVERY YEAR, MOST ARE THOUGHT TO BE PROFSSIONALLY SUCCESSFUL, INDEPENDENT-MINDED WOMEN, SAYS A STUDY.


*  ஏறத்தாழ ஆண்டு தோறும் 50,000 ஆங்கிலேயப் பெண்கள் இஸ்லாமிற்கு மதம் மாறுகிறார்கள்.
*  9/11க்குப் பிறகு அதிக பெண்கள் இஸ்லாமிற்கு மாறி வருகிறார்கள்.
*  இஸ்லாமிய ஆண்களைத் திருமணம் செய்வதன் மூலமாகவும் நிறைய பெண்கள் இஸ்லாமிற்கு வருகிறார்கள்.
*  மதம் மாறிய பெண்களுக்கு எதிராக அவர்களது குடும்பம், நண்பர்கள், சமூகம் நிற்பது சாதாரணம்.
*  மதம் மாறிய பெண்களும் பிரிட்டனில் இயங்கி வரும் ஷாரியத் பெண்களுக்கு எதிராக இயங்கி வருவதாகக் கூறுகிறார்கள்.

மத மாற்றம் பற்றி பொதுவாக எனக்குப் பல கருத்துகள் உண்டு. தன் மதமும் புரியாமல், பாதி மட்டும் அறிந்து அடுத்த மதத்திற்குப் போகும் பலரைப் பார்த்துள்ளேன். அல்லது, தனக்குக் கிடைத்த ஏதோ ஒரு நன்மையை வைத்து அடுத்த மதத்திற்கு சென்றவர்கள் நிறைய பேரை நானும் பார்த்திருக்கிறேன். ஆனால் மேலே சொல்லப்பட்டவர்களை அந்த அட்டவணையில் சேர்க்க விரும்பவில்லை. 

இஸ்லாம் பற்றி அதிகமாகத் தெரியாத நிலையில் இருந்த போது என்னிடமிருந்த  எண்ணங்கள் அந்த மதக் கொள்கைகளை அறிந்த பின் அம்மதத்திற்கு மிகவும் எதிராகத் திரும்பின. . மாற்று மதங்கள் மீது இஸ்லாமிற்கு இருக்கும் ‘கோபமும்,’ எதிர்ப்பும் மிக அதிகம். அந்த வெறுப்புணர்வு அச்சத்தைத் தந்தது. 

அதோடு, மற்ற மதங்களிலிருர்ந்து இஸ்லாமிற்குள் நுழைபவர்கள், அதன் பின் அப்படி மதம் மாறும் தங்கள் உரிமையை முற்றிலும் இழந்து விடுகிறார்கள். இஸ்லாமிற்குள் நுழைந்தால் இறுதி வரை அப்படியே இருக்க வேண்டும் என்ற இந்த  ஒரு சட்டம் இருப்பது தெரிந்தாலே அம்மதத்தின் மீது மரியாதைக்குப் பதில் பயம் தானே வரும் என்பது என் எண்ணம்.

எப்படியோ ... பலர் இஸ்லாமிற்குள் வருகிறார்கள். இனியாவது ஆர்ம்ஸ்ட்ராங்க் .. மைக்கிள் ஜாக்சன் .. பதிவியைத் துறந்த போப் .. எல்லோரும் இஸ்லாமியர்களாக மாறி விட்டார்கள் என்பது போன்ற   இஸ்லாமியரின் வழக்கமானப்  பிரச்சாரத்தைக் குறைத்துக் கொண்டால் நல்லது.

இக்கருத்து தினசரியில் வந்த அடுத்த நாள் மூன்று இஸ்லாமியரின் கடிதங்கள் Letters to the Editor-க்கு வந்தது. அது ஒன்றும் ஆச்சரியமில்லை!

*****************************

http://articles.timesofindia.indiatimes.com/2013-05-24/uk/39500802_1_woolwich-muslim-communities-riot-police

நட்ட நடுத் தெருவில், பட்டப் பகலில்  ஆங்கிலேய சிப்பாய் ஒருவரை இரு இஸ்லாமியர் பலர் கண்முன்னே கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார்கள். இந்த கொலையில் சம்பந்த்தப்பட்ட இரு நைஜீரியர்களும் கிறித்துவத்திலிருந்து இஸ்லாமிற்கு சமீபத்தில் மதம் மாறியவர்கள். இவர்களது வெறிச் செயலை //It was also a betrayal of Islam - and of Muslim communities who give so much to our country.// - என்கிறார் ஆங்கிலேயப் பிரதமர்.

கொலையாளிகள் ஒருவனான Adebolajo  banned Islamist organization Al Muhajiroun which promotes Sharia law-ல் சேர்ந்து, பின் விலகி,. இன்னொரு militant Islamist group Al Shabaab in Somalia-ல் சென்ற ஆண்டு சேர்ந்துள்ளான்.

இஸ்லாமில் சேருவதோடு நின்று விட்டால் பரவாயில்லை போலும். ஏனெனில் பல்வேறு உருவத்தோடு வளர்ந்து வரும் இஸ்லாமிய குழுக்கள் இவ்வாறு வல்லினத்தை வளர்த்து விடுகின்றன.

இந்த இரு  கொலைகாரர்களும் அப்படை வீரனைக் கழுத்தை அறுத்துக் கொல்லும் போது ‘அல்லாஹூ அக்பர்’ என்று கத்தினார்கள். கழுத்தை அறுக்கும் போது ஏன் அல்லாஹூ அக்பர் என்று கத்துகிறார்கள் என்று முன்பே கேட்டிருந்தேன். பல கேள்விகளுக்குப் பதிலில்லாதது போல் இக்கேள்விக்கும் சகோக்கள் யாரும் இதுவரை பதில் சொல்லவில்லை.

இச்செயலை எதிர்த்து எந்த இஸ்லாமியரும் அத்தினசரிக்கு எக்கடிதமும் அடுத்த நாள் எழுதியதாக நான் பார்க்கவில்லை.

*********************

Thursday, May 23, 2013

654. சின்னச் சின்ன கேள்விகள்
*


கொஞ்ச நாளைக்கு முன் ஒரு ’நீயா நானா?’  நிகழ்ச்சி பார்த்தேன். கல்லூரி மாணவர்கள் vs சமூகவியலாளர்கள் என்று ஒரு நிகழ்ச்சி. எங்கிருந்து தான் இப்படி ஒரு மாணவர் ‘படையை’ப் பிடித்தார்களோ. இவ்வளவு முட்டாள்தனமான மாணவர் கூட்டத்தை நான் பார்த்ததில்லை. சரி .. நம் இளைஞர்கள் இப்படித்தான் என்று முடிவு கட்டியிருந்தேன்.

ஆனால் இன்றைய தினசரி - 22.5.13; T.O.I. -ல் ஒரு செய்தி. - 2006 லிருந்து அமெரிக்காவில் கண்டுபிடிக்கும் ஹை டெக் விஷயங்களில் மூன்றில் ஒரு பங்கினர் இந்தியர்களின் பங்களிப்பாம். இப்போது அது உயர்ந்து பாதிக்குப் பாதியாக ஆகி விட்டார்களாம்.

ஒண்ணுமே புரியலை.

* மெக்காலே சிஸ்டம் எதற்கு  என்று சொல்லிக்கொண்டே இன்றும் அதைத் தான் கட்டியழுகிறோம்.

* தாய்மொழிக் கல்வியென்று அடிக்கடி பேசுகிறோம். அதுவும் நடப்பதில்லை.

* தாய்மொழியில் படித்தால் தான் படிப்பதை நன்கு புரிந்து, முன்னேற முடியும் என்கிறோம். ஆனாலும் அதுவும் நடப்பில் இல்லை.

இந்த இக்கட்டுகளைத் தாண்டியும்  எப்படி நாம் ‘உயர்ந்து விட்டோம்’ என்ற கேள்வி எனக்கு.

*****************************


விமல் நல்லா நிறைய படங்களில் நடிச்சிக்கிட்டு இருக்காரே .. வண்டி நல்லாதானே போகுது. பின் ஏன் விமல் அப்டின்ற பெயரை Vimel அப்டின்னு போட்டுக்கிட்டாரு. வண்டி இன்னும் வேகமா போகணும்னா ...?!

சாரு ஹாசன் அப்டின்னா கிளி மேல் இருக்கிற கடவுளாம்; அதே போல் கமல ஹாசன் அப்டின்னா தாமரையில் இருக்கிற கடவுளம்மான்னு அர்த்தமாம். ஆனால் கமல் ஹாசன் அப்டின்னு பெயர் மாற்றி, அது  அப்பாவோட இஸ்லாமிய நண்பர் பெயர் அப்டின்னார். நானும் கமல் கூட numerology பக்கம் போய்ட்டாரோன்னு நினச்சேன்!

ஆனாலும் இப்பவும் இஸ்லாமிய நண்பர் பெயர் / numerology எது சரின்னு எனக்குத் தெரியலை. உங்களுக்கு ...?

********************

 இந்த சாக்லெட் விளம்பரங்களில் நல்ல இசை; ஆனால் வாயில் வழிய வழிய விட்டுக்கொண்டு அவர்கள் சாப்பிடுவதைப் பார்ப்பது அருவருப்பு மட்டுமல்ல நம்ம வீட்டுச் சின்னப் பிள்ளைகளும் இதைப் போல் ‘ஸ்டைலாக’ சாப்பிடப் பழகி விடுமோ என்று ஒரு பயம் வருகிறது.

**********************

ஆஷிர்வாத் கோதுமை மாவிற்கு சினேகாவும் அவரது ‘மாமியாரும்’ வருகிறார்களே. அதில் வரும் மாமியார், சினேகா வயதில் மருமகளை விட அழகாக இருந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். (வயசுக்கேத்த புத்தி ...!)

**********************

பீட்சா, ந.சி.ப. காணோம், சூது கவ்வும் - இந்த படங்களைப் பார்த்த பிறகு, தொலைக்காட்சியில் சிங்கம் 2 படத்திற்கு வரும் விளம்பரத்தில் சூர்யா பயங்கரமா ஒரு வசனம் அடிச்சிப் பேசுறாரே ... அதைப் பார்க்கும் போது ’அடப் பாவிகளா ...’ அப்டின்னு சிரிப்பா வருது. படம் வந்தாலும் அப்படித்தான் இருக்குமோ?

 சமீபத்தில் வரும் படங்கள் மாதிரி நிறைய வந்து so called ’பிரமாண்ட stupid படங்கள்’ ஊத்திக்கிட்டா சந்தோஷமாகவும் இருக்கும். ’ஐ’ன்னு சொல்லிக் குதிக்கலாம்.75 வருடமாக ஒரே மாதிரியாகத் தொடர்ந்து வந்து கழுத்தை அறுக்கும் படங்களும் மாறும்.
இல்லீங்களா...?

************************

*
Thursday, May 09, 2013

653. சின்னச் சின்ன கேள்விகள் ... 17*


பெங்களூரு போனேன்.
ஒரு கதை கேட்டேன்.
அது வெறும் கதையா உண்மையா என்றும் தெரியாது.
உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள் ...

வெள்ளைக்காரன் நம்ம ஊர்ல காலு வச்ச புதுசுல, ஒரு ஊரு பக்கம் ஒரு பாட்டி அவிச்ச கடலையைக் கூறுகட்டி வித்துக்கிட்டு இருந்துச்சாம். அப்போ அங்க ஒரு வெள்ளைக்காரன் - இங்கிலீசுக்காரன் - பாட்டி பக்கத்துல வந்து நின்னு பாத்துக்கிட்டு இருந்திருக்கான். அவனுக்கு தான் நிக்கிற இடம் எதுன்னு தெரிஞ்சுக்கணும்னு ஆசை. அந்தப் பாட்டிகிட்ட இங்லீபீசுல இதென்ன இடம்னு கேட்டிருக்கான். பாட்டிக்கு தான் விக்கிறது என்னன்னு அவன் கேட்கிறான்னு நினச்சிக்கிட்டு, ‘பெந்த களுரு’ - அதாவது கன்னடத்தில அவிச்ச கடலைன்னு - அப்டின்னு சொல்லியிருக்கு. அதைக் கேட்ட இங்கிலீசுக்காரன் அந்த ஊருக்கு வச்ச பேரு தான் பெங்களூருன்னு ஆகிப் போச்சாம்.

 ****************

நம்ம ஊர் வத்தலகுண்டுவை பட்லகுண்டு ஆக்கினது மாதிரி இப்படி ஒரு கதை உங்க ஊர்ல இருக்குங்களா, பெங்களூருகாரங்களே ...?

****************

பெங்களூர்ல எக்கச்சக்க சாலைப் போக்குவரத்து. சென்னையிலாவது பரவாயில்லை... peak hour அப்டின்னு ஒண்ணு இருக்கும் போலும். அப்போ போக்குவரத்து மோசமாயிடுது. இங்க எங்கேயும் .. எப்போதும் .. ஒரே மாதிரிதான் போலும். வாழ்க்கை வெறுத்துப் போச்சு. பெங்களூர்ல மூணு நாலு நாள், அடுத்து சென்னையில் மூணு நாள் இருந்ததும் நான் சொன்னது: ‘அட போங்கப்பா ... நீங்களும் உங்கள் பெங்களூரும், சென்னையும். எனக்கு என் ஊர் மதுரையே போதுமப்பா ... சுகம்’, அப்டின்னேன். சும்மாவா சொன்னாய்ங்க .. மதுரையைச் சுத்துன கழுதை வேறு எங்கும் போகாதுன்னு ...!

*******************

ஆனாலும் தமிழ்நாட்டுப் போலீஸ் மாதிரி அசமஞ்சங்கள் வேறு எங்கேயும் இருக்காதோன்னு ஒரு சந்தேகம் வந்திருச்சி பெங்களூரு போய்ட்டு வந்ததும். எல்லோரும் ஹெல்மட் போட்டுட்டு வண்டி ஓட்றாங்க. பைக்கில மூணு பேரு போனதைப் பார்த்து மைசூர்ல ஒரு போலீஸ்காரர் நல்லா விரட்டுனார்.

இங்கே தமிழ்நாட்டுல பைக்கில் எத்தனை பேர் போனாலும் போலீஸ்காரர் நின்னு பார்த்துக்கிட்டே இருப்பார். ஹெல்மட விவகாரம் இதை விட இன்னும் கேவலம்.

ஆனாலும் நம்ம ஊர்ல மாதிரியே கர்நாடகத்திலும் வண்டி ஓட்டிக்கிட்டே செல்போன் பேசுற முட்டாள்கள் நிறைய பார்த்தேன். அதை ஏன் நிறுத்த காவல் துறை முயற்சிக்கவில்லைன்னு தெரியலை.

நம்ம ஊர் போலீசால் அதையெல்லாம் செய்ய முடியாது. பாவப்பட்ட மக்கள் ..!

*********************

ஒரு ந்ண்பன் திடீர்னு கேட்டான். அமெரிக்கன் கல்லூரியில் வேலை பார்க்கிற ஆளுக எல்லாம் ஒரு மாதிரியா... weird-ஆன ஆளுகளான்னு கேட்டான்.

 ’இல்லியே .. ஏனிப்படிக் கேட்கிற’ன்னு கேட்டேன்.

’உங்க கல்லூரியிலிருந்து சினிமாவுக்குப் போன டைரடக்கர்கள் எல்லோரும் எடுத்த படம் எல்லாம் கொஞ்சம் weird-ஆக இருக்கே’ அப்டின்னான்.

‘ஏம்பா!அப்படி சொல்ற? மகேந்திரன் படத்தை எப்படி இதில சேர்க்கிற?’

‘உதிரிப் பூக்கள் படத்தின் கடைசி வசனத்தைச் சொன்னான். ஒரு கெட்டவன் ஊரையே கெடுத்துட்டு செத்துப் போறானே’ என்றான்.

என்னிடம் பதில் இல்லை.

மகேந்திரன், பாலா, ராம், அமீர், சாந்தகுமார் ... இந்த வரிசையில் இப்போது ‘ஓஹோ புரொடக்‌ஷனின்’ முத்துராமலிங்கமும் சேர்ந்திருக்கிறார்.

இப்படி கேள்வி கேட்ட நண்பனும் வகுப்பின் முதல் மாணவனாகப் படித்து முடித்த எங்கள் கல்லூரி மாணவன் தான் ....

பின் சேர்க்கை:

அதே மாணவன் இன்று தொலைபேசியில் அழைத்து இன்னொன்றும் சொன்னான். இன்று தான் இயக்குனர் ராம் நடித்து, இயக்கும் தங்க மீன்கள் என்ற படத்தில் யுவன் இசையில் ஸ்ரீராம் பாடும் ’ஆனந்த யாழை மீட்டுகிறாள் ...’ என்ற பாட்டைக் கேட்டு மயங்கி சொன்னான்:

“ஏற்கெனவே ஒரு பாசிட்டிவ் பாய்ண்ட்டை சொல்ல உட்டுட்டேன்.  நம் கல்லூரி இயக்குனர்கள் எல்லோருக்கும் sense of music மிக அழகாக இயைந்து வருகிறது. அவர்கள் படத்தின் பாடல்கள் எல்லாமே ரொம்ப rich" என்றான்.

நானும் அந்தப் பாட்டைக் கேட்டேன். அழகு ... ஒத்தைப் பெண் பெற்று வளர்த்த அவனுக்கு இந்தப் பாட்டு பிடிக்காமலா போகும்....!

ராம் இசையைத் தாண்டி இப்பாட்டைக் காட்சிப்படுத்தியிருக்க வேண்டும் என்ற ஆவல் இப்போதே மனசுக்குள் எட்டிப் பார்க்கிறது.

******************************

நல்ல படங்களைப் பார்க்கக் கூட முடியாத நான் இப்படி ஒரு படத்தைப் பார்த்துத் தொலைக்கணுமா ...! சேட்டைன்னு ஒரு படம். என்னங்க படம் இது.

படம் பார்த்ததும்
டைரடக்கர் கண்ணனுக்கு வைத்த பெயர்: ”ஷிட் கண்ணன்”.

****************************** *

பின் சேர்க்கை - 2: (26.5.13)

அடடா .. அமெரிக்கன் கல்லூரியிலிருந்து டைரக்டர்கள் ஆனவர்களில் கரு. பழனியப்பன் பெயரைச் சேர்க்காமல் விட்டு விட்டீர்களே என்றான் அதே நண்பன். இதைச் சொல்லி விட்டு ஆனால் இவர் weird category-ல் வரமாட்டாரல்லவா என்றும் சேர்த்து சொல்லி விட்டான்.

*********************************

Thursday, May 02, 2013

652. தாத்தா கட்டாயமாகக் கதை சொல்லி, தூங்க வைக்கணுமோ ...?


*
பேரப் பிள்ளைகளுக்குக் கதை சொல்லித் தூங்க வைப்பது எனக்கு ஒரு அரிதான விஷயம். நானிருப்பது ஒரு புறம். வருடத்திற்கு நாலைந்து நாள் உடன் இருப்பதே பெரிது. இதில் பேரப் பிள்ளைகளுக்குக் கதை சொல்லித் தூங்க வைக்கும் வாய்ப்பு அதிகமாக இல்லை. ஆனால் சென்ற வாரம் சென்னை சென்ற போது பெரிய பேத்தி - மூன்றாம் வகுப்பு முடிக்கிறாள் - இருந்த இரு நாட்களில் பக்கத்தில் வந்து படுத்துக் கொண்டு கதை சொல்லுங்கள் என்றாள்.

கதை சொல்லும் முன் பேத்தியின் அம்மா, அதாவது என் இளைய மகள் சிறு வயதில் என் மடியில் படுத்துக் கொண்டு எனக்கு அடிக்கடி கதை சொன்ன நினைவு வந்தது. அவள் கதைகளில் கட்டாயம் ஒரு குள்ளன், நிறைய ரத்தம் சிந்துதல், யாராவது செத்துப் போவது என்று நிறைய களேபரமான கதையாக இருக்கும்.

முதல் நாள் .. என்ன பெரிய கதை என்று நினைத்துக் கொண்டு நானே அப்போது ஒரு கதையை synthesize செய்து, திக்கித் திணறி ஒரு கதை சொன்னேன். எனக்கே அது கதை மாதிரியாகத் தெரியவில்லை. நான் சொல்லி முடித்ததும் அவள் நான் ஒரு கதை சொல்கிறேன் என்றாள். ஐந்தாறு ஆண்டுகள் அமெரிக்காவில் இருந்தவளுக்கு இப்போது “தாய்மொழி” ஆங்கிலமாக மாறியிருந்தது. எங்கே வாசித்தாளோ எப்படியோ .. ஒரு கதை சொன்னாள். நான் சொன்னது போலல்லாமல், தங்கு தடையில்லாமல் விரைவாகச் சொன்னாள். சரி .. நாமளும் நமக்குத் தெரிந்த கதை ஒன்றை எடுத்து விடலாம் என்று நினைத்து அடுத்து பீர்பால் கதை ஒன்றை எடுத்து விட்டேன். தப்பா போச்சு. அடுத்த ரெண்டு கதைகள் அவளிடமிருந்து வந்தன. அதில் ஒன்று பீர்பால் கதை. அடுத்த கதை கேட்டாள். எனக்கோ பயங்கர தூக்கக் கலக்கம். அதையே ஒரு சாக்காகச் சொல்லித் தப்பி விட்டேன்.

அடுத்த நாள் மறுபடியும் கதை கேட்டாள். வேறு எதையெதையோ பேசினேன். சில புத்தகங்கள் வாங்கிக் கொடுத்திருந்தேன். அவளது favourite புத்தகமான Tinkle வாங்கிக் கொடுத்திருந்தேன். அதோடு பழைய ஆங்கில abridged classics வாங்கிக் கொடுத்திருந்தேன். அதைப் பற்றிக் கேள்விகள் கேட்டேன். எந்தெந்த புத்தகம் வாசித்தாள்; இன்னும் எந்தப் புத்தகம் வேண்டும் என்றும் சொன்னாள்.

இப்படிப் பேசிக்கொண்டிருக்கும் போது, அப்படியே எனக்கு ‘சுப்பாண்டியைத்’ தெரியுமாவெனக் கேட்டாள். நமக்கு எங்கே அவரைப் பற்றியெல்லாம் தெரியப்போகிறது. தெரியலையே’டா என்றேன். Tinkle-ல் வரும் குட்டிக்கதைகளில் வரும் ஒரு பாத்திரமாம். சரியான ‘பேக்கு’ போல இருப்பானாம். எப்படி என்றேன். ரெண்டு மூன்று சுப்பாண்டி பற்றிய கதைகள் சொன்னாள். நல்ல பிள்ளையாய் கேட்டுக் கொண்டேன்.

காலையில் எழுந்ததும் Tinkle கொடுத்து சுப்பாண்டி பற்றி வாசிக்க வைத்தாள். அதென்ன நம்ம ஊர் ‘பாண்டி’ பெயர் வைத்து இப்படி ஒரு மக்கு ப்ளாஸ்த்ரி பற்றி கதை எழுதியிருக்கிறார்கள் என்று மனசுக்குள் கோபமாக நினைத்துக் கொண்டேன்.

அடுத்த தடவை சென்னை செல்லும் போது ஏதாவது கதை யோசித்துக் கொண்டு போகணும்!! இல்லைன்னா மாட்டிக்குவேன்.

 ****************************

மதியம் ஊருக்குப் புறப்பட பொட்டி படுக்கையை ரெடி பண்ணிக்கொண்டு இருந்தேன். பொட்டியில் ஒரு ஸ்க்ரூ நீட்டிக்கொண்டு நின்றது. சரி செய்ய ஸ்க்ரூ ட்ரைவர் ஒன்றை எடுத்து வர பேத்தியிடம் கேட்டேன். கொண்டு வந்து கொடுத்தாள். அதோடு அன்று நான் வாங்கிக் கொடுத்திருந்த கலர் பென்சில்களை எடுத்துக் கொண்டு அவள் அறைக்குச் சென்றாள். எட்டிப் பார்த்தேன். ஒரு பக்கம் முழுவதும் கலர் பென்சில்களை வைத்து தீட்டிக் கொண்டிருந்தாள். சரி .. கலர்களையெல்லாம் டெஸ்ட் செய்கிறாள் என்று நினைத்தேன்.

ஸ்க்ரூ ட்ரைவரை வைத்து முடுக்கி விட்டு, துணிமணிகளை அடுக்கிக் கொண்டிருந்தேன். ஸ்க்ரூ ட்ரைவரை எடுத்துச் சென்றாள். பாதி துணிகளை அடுக்கி முடித்தேன். பேத்தி ஒரு தாளை நீட்டினாள். கலர் பென்சில்களை வைத்து ஒரு பக்கம் முழுவதும் தீட்டி, அதன் மேல் ஸ்க்ரூ ட்ரைவரை வைத்து scalpel painting போல் ஒரு படம் வரைந்து வந்து கொடுத்தாள்.

எனக்கு வழக்கமான பிரமிப்பு வந்தது. யாரும் சொல்லிக் கொடுக்காமல் அவளாகவே இப்படி ஒரு படம் - scalpel painting போல் - வரைய எப்படி அவளுக்குத் தோன்றியது என்று நினைத்தேன். அதிலும் A REALISTIC DAY என்று எழுதியிருந்தாள். I don't know why! வீட்டின் சுவர்களை ஏன் வளைந்து வரைந்துள்ளாய் என்று கேட்டேன். அதற்கும் ஏதோ பதில் சொன்னாள்.

****************************************

மதுரை வந்த பிறகும் அந்தப் படம் என்னைத் துரத்திக் கொண்டிருந்தது. அவள் சென்னையில் drawing class-க்குப் போகிறாள். இப்போது சில படங்களைக் கொடுத்து அதைக் காப்பியடிக்க சொல்லித் தருகிறார்களாம். அந்தப் படங்களில் எந்தவித கற்பனையுணர்வும் இல்லை; அப்படியே நகல் எடுப்பது தானாம். முன்பே ஒரு சித்திரக்கார நண்பர், பிள்ளையை எந்த drawing classக்கும் அனுப்பாமல் அவளே தனது சித்திரக் கலையைக் கற்றுக் கொள்ள வையுங்கள். Just motivate her. Let her learn the art herself. பின்னால் drawing classக்கு அனுப்புங்கள் என்று அறிவுறுத்தியிருந்தார். இதைக் கேட்காமல் அவளை சித்திர வகுப்பிற்கு அனுப்பியது தவறு என்று தெரிந்தது. மகளிடம் அவளை drawing class-க்கு அனுப்ப வேண்டாம்; நிறுத்தி விட்டு அவளாகவே படம் வரையச் செய் என்று அறிவுரை சொன்னேன். (பொதுவாக அறிவுரைகளை யார் கேட்டு நடக்கப் போகிறார்கள்??!!)

ஆனாலும் இதிலும் ஒரு டேஞ்சர்! அமெரிக்காவில் இருக்கும்போது இசைப் பயிற்சிக்குப் போயிருக்கிறாள். நோட்ஸ் பார்த்து key board வாசிக்கப் பழகியிருக்கிறாள் இங்கு வந்ததும் ஆங்கிலத்தில் சொல்லித் தரும் வாத்தியார் வேண்டுமென்று கேட்டதால் இசைப் பயிற்சி நின்று போனது. key board வீட்டின் மூலையில் தூங்குகிறது. சித்திர வகுப்பு வேண்டாமென்று நிறுத்தினால் இதையும் மூட்டை கட்டி வைத்து விடுவாளோ என்று பயமாக இருக்கிறது.

But in case you want to advise/motivate her you can write to: jessica.jegan@gmail.com 

Who knows, it may have better impact! 

********************

ஒரு காலத்தில் அமெரிக்கன் கல்லூரிக்கு அமெரிக்க மாணவர்கள் வந்து இங்கு ஓரிரு ஆண்டுகள் தங்கி கல்வி தொடர்வதுண்டு. அப்போது பார்த்த போது ஒவ்வொரு மாணவனும் ஏதாவது ஒரு hobby வைத்திருந்தார்கள். ஆனால் அது போல் எனக்கோ, நமது மாணவர்களுக்கோ ஏதும் இல்லை என்று கவலைப்பட்டதுண்டு. ஆனால் வளரும் சந்ததியினருக்கு இந்த வசதி இப்போது பெரும்பான்மையாகப் பெற்றோர்களால் செய்து கொடுக்கப்படுகிறதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது.

நாமும் வளர்கிறோம் ...


************************ *