Tuesday, October 16, 2018

1007. 96



*

தமிழில் நல்ல படங்கள் எதுவும் உருவாவதில்லை. எல்லாமே காதலை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட படங்கள் என்ற வேதனை எப்போதும் பலருக்கும் உண்டு. நான் அதைப் பற்றி பல வருடங்களாக எழுதியும் வந்துள்ளேன். ஆனால் இப்போது அந்த மனக்குறை நீங்கி விட்டது. பீட்சா படம் வந்தது. அடுத்தடுத்து வெவ்வேறு genresகளில் இன்று வரை நம்மைத் திக்கு முக்காட வைக்கும் நல்ல படங்கள் வர ஆரம்பித்து விட்டன. நல்ல சினிமாக்களை மட்டும் தியேட்டரில் பார்க்க வேண்டுமென்ற ஆவல். ஆனால் இந்த மாதம் மட்டும் பாருங்களேன் ... மேற்குத் தொடர்ச்சி மலை, பரியேறும் பெருமாள், 96 ... வீட்டுல திட்டு வாங்கிட்டு தியேட்டருக்கு ஒடும் படியாக ஆச்சு. நல்லவைகள் தொடரட்டும். இன்னும் சிங்கம், புலி, சிறுத்தை, பிரம்மாண்ட டப்பா படங்கள் வருவது குறையட்டும்.

அலைகள் ஓய்வதில்லை படத்தில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் கார்த்தி தன் தாயிடம் ‘அவளைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை, அம்மா” என்று பேசும் ஒரு வசனம் வரும். ஓங்கி கழுத்தை நெறிக்கலாமா என்று ஒரு கோபம் வந்தது அந்தக் காதல் வசனைத்தைக் கேட்டு. அதன்பின் ஒரு யோசனை... யாரு கழுத்தை என்று யோசித்தேன் - கார்த்திக் குரல் வளையா, பாரதி ராஜா குரல் வளையா என்று.

ஆனால் 96ல் பத்து பதினோராம் வகுப்புப் பையனே  அப்படி ஒரு தெய்வீகக் காதலுக்குள் மாட்டிக் கொள்கிறான். ஆனால் ... யோசித்துப் பார்க்கிறேன், பதில் கிடைக்கவில்லை ... ஏன் ராம்-ஜானு பார்க்கும் போது அந்தக் கோபம் வரவில்லை? பாதிப் படத்திற்கு மேல் ராம்-ஜானு மட்டும் தான் திரையில் என்றாலும் நாமும் பின்னால் நிற்பது போல் ஒரு நினைப்பு வருகிறதே! அந்த அண்மையை உண்டாக்கியவர் இயக்குனர்.

பழைய படங்களாக இருந்தால் விஜய் சேதுபதிக்கு ஒட்ட ஷேவ் செய்து, யூனிபார்ம் மாட்டி, திரிஷாவிற்கு இன்னொரு யூனிபார்மும் இரட்டைச் சடையும் போட்டு நமக்கு முன்னே திரிய விட்டிருப்பார்கள். நல்ல வேளை ... பள்ளிப் பருவத்திற்கு சின்னப் பசங்களைப் போட்டு விட்டு காப்பாற்றினார்கள். சிறுபிள்ளைக் காதல். ஊமைப் பையன் வி.சே. ... கடைசி வரை ஊமைப்பையனாக இருக்கிறார். பாவம் தன் காதலியை கண்ணெடுத்தும் பார்க்கத் தயங்கும் நல்ல பையன். ஆனாலும் காதலி தன்னை மறுத்து தன்னைப் பார்க்க வரவில்லையென்று என்று நினைத்த பிறகும் பாவம் போல் அத்தனை வருஷமும் அவள் நினைப்பிலேயே அதுவும் ஒரு வர்ஜின் பாயாக இருக்கும் ராம் ... அடேய் ராம்... ஆனாலும் இத்தனை நல்ல பையனா இருக்கக்கூடாதுடான்னு சொல்லணும் போல் இருக்கு. ஆனால் இறுதியில் விமான நிலையத்தில் ஜானுவிற்கு வி.சே முகம் பார்க்க முடியவில்லை. அப்போது தான் வி.சே தைரியமாக அவர் முகத்தைப் பார்க்கிறார். முகத்தைத் திருப்பி வைத்துக் கொள்ளும் வி.சே.வின் முன் ஜானு இப்போது அப்படியாகிறார். ஒரு முத்தமாவது கொடுத்துத் தொலைடா என்று மனசுக்குள் ஒரு எண்ணம் திரும்பத் திரும்ப (நமக்கு?) எனக்கு வந்த போது, இயக்குனர் ஜானுவின் கையை அழுத்தி ராம் கியர் போடும்படி வைத்திருப்பது ... ஒரு நல்ல அழுத்தம் தான்!

ஆனால் தொன்னூற்றி ஆறு - 2 என்று இரண்டாம் பாகம் எடுப்பதற்கு வேண்டிய அனைத்தையும் இயக்குனர் செய்து விட்டார், யார் அந்தச் சின்னப் பெண்? போட்டோகிராபி படிக்க வி.சே.யின் மாணவியாக வரும் அந்தப் பெண்ணுக்கு இயக்குனர் வசனமே கொடுக்கவில்லை .. பார்வை மட்டும் தான் கொடுத்திருக்கிறார். அந்தப் பெண்ணுக்குத்தான் வி.சே. மேல் அத்தனை காதல். அதையும் மிக மிக அழகாக தன் பார்வைகள் மூலமாக வெளிப்படுத்திய இயக்குனரையையும், அந்த நடிகையையும் பாராட்ட வேண்டும்  ஜானுவிற்கு தலையணையை எடுத்து வைப்பது போல் அந்தப் பெண் வி.சேவிற்கு க்ராஸ் பெல்ட் போட்டு விடுகிறாள். ஜானுவிடமும்,வி.சேயிடமும் ‘பை’ சொல்லும் அந்தப் பெண்ணின் நடிப்பு அள்ளிக்கொண்டு போனது. த்ரிஷா, வி.சே. நடிப்பும், சில வசனங்களும் (நீ விட்டுட்டுப் போன இடத்திலேதான் நிக்கிறேன்... நல்ல ஆம்பிளை நாட்டுக் கட்டைடா நீ ...) நம்மை அருகில் வைத்துக் கொள்கின்றன.


அடுத்த பாகத்தில் சிங்கப்பூரிலிருந்து ஜானு வி.சேக்கு திருமணம் செய்து வைத்து விடுவார் என்ற நிம்மதியோடு வீடு வந்து சேர்ந்தேன்........


”டேய் .. ராமு  ..ஆனாலும் இம்புட்டு நல்ல பிள்ளையா இருக்கக்கூடாதுப்பா ....”






 *

Saturday, October 06, 2018

1006. முகநூல் விளையாட்டு - வரலாறு மிகவும் முக்கியம், வலைஞர்களே !




முதலில் வாட்சப்பில் ஒரு செய்தி வந்தது ஒரு புகைப்படத்துடன். அச்செய்தி இது:

கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிய குழந்தையை ஒரு வருட்த்திற்குப் பின் மீட்டுள்ளனர். இடிபாடுகளுக்குள் நுழைந்த நீரை குடித்தே உயிர் வாழ்ந்துள்ளது. மீட்ட பின்னும் தண்ணீரைத்தான் குடித்துக் கொண்டிருக்கின்ரது. கல்லிலுள்ள தேரைக்கு உணவளிக்கும் இரைவன் இக்குழந்தைக்கும் உணவளித்துள்ளான்.
கடவுளின் மகிமையே மகிமை...









இப்பதிவையும் அதனுடன் வந்திருந்த படத்தையும் மட்டும் முக நூலில் பதிவிட்டேன். பல பக்த கோடிகள் அதற்குரிய மரியாதை செலுத்தினர். ஓரிரு இந்து மதத்து நண்பர்கள் மட்டும் கேலியாகக் கேட்டு சில பின்னூட்டமிட்டார்கள். பத்து பேருக்கு மேல் அதை ஷேர் செய்ததும் ஆச்சரியமான ஒன்றாக இருந்தது.
இரு நாட்கள் கழித்து கீழ்வரும் பதிவையிட்டேன். நல்ல வேளை அது இன்னும் முகநூலில் பத்திரமாக உள்ளது. ஆனால் முதலில் இட்ட பதிவை முகநூல் அட்மின் நீக்கி விட்டது ஒரு செய்தியுடன்:

We understand that you may not have known about our standards, so we'd encourage you to learn more about our specific policies on nudity and sexual activity. If you see something on Facebook that you think goes against one of these standards, you can report it to us.
Thanks for your understanding and help in keeping Facebook safe and welcoming.
மேலே சொன்ன எச்சரிக்கையோடு அந்தப் பழைய பதிவு நீக்கப்பட்டு விட்டது. அதனால் அந்தப் பதிவடக்கத்தையும், அதனைத் தொடர்ந்த இரண்டாம் பதிவையும் சேமித்து என் ப்ளாக்கில் எழுதி வைத்து விடுகிறேன்.

வரலாறு மிகவும் முக்கியம், வலைஞர்களே !

//specific policies on nudity and sexual activity// என் பதிவில் FB admin சொன்னது போல் என்ன இருந்ததோ. எப்படி FB இப்படி முடிவெடுக்கிறது என்று தெரியுமா? தெரிந்தால் சொல்லித் தாருங்களேன், நியாயமாரே!


எனது முந்தைய பதிவை ஒரு தடவை பார்த்து விட்டு இதைப் படித்தால் நல்லது; அப்போது தான் இப்பதிவு புரியுமென நினைக்கின்றேன். https://www.facebook.com/sam.george.946/…/10215144486078771/ மன்னிக்கணும். அந்தப் பதிவு FB அட்மினால் நீக்கப்பட்டு விட்டது !

https://www.facebook.com/sam.george.946/posts/10215156554220467   ....என் முதல் பதிவின் தொடராக இப்பதிவை இட்டேன். இன்னும் அது முகநூலில் உள்ளது.
அப்பதிவு இது தான்:

அப்பதிவு எனக்கு வாட்சப்பில் வந்தது... ஒரு கிறித்துவரிடமிருந்து. பார்த்ததும் எனக்குப் பற்றிக் கொண்டு வந்தது. வேண்டுமென்றே அதை முகநூலில் பகிர்ந்தேன். பத்து பேர் அதை share செய்துள்ளனர். மார்ட்டினுக்கு கொஞ்சம் சந்தேகத்தோடு செய்துள்ளார். ஏன் தேவப்பிரியா இதை share செய்துள்ளார் என்று எனக்குத் தெரியவில்லை. சில இந்து நண்பர்களும், மற்றவர்கள் கிறித்துவர்கள் தான் பகிர்ந்துள்ளனர். நல்ல வேளை, (இந்து) நண்பர்கள் பசுவும், பாண்டியிடமிருந்தும் கேலியான கேள்விகள் மட்டும் வந்தன. அதில் அராபிய எழுத்துகளும், அராபிய ஒலிகளும் வருவதால் ஒரு வேளை ஈமான்கள் யாராவதும் வந்தால் நன்றாக இருந்திருக்கும். (நன்றி சாதிக் சமத்.) கருணை, மகிமை போன்ற கிறித்துவ வார்த்தைகள் வந்ததால் அவர்கள் வராமல் எட்டிப் போயிருக்கலாம். கிறித்துவர்கள் லைக் செய்தார்கள்; மற்றவர்கள் ஏன் ... எதற்காக லைக் செய்திருப்பார்கள் .. தெரியவில்லை. சொல்லுங்களேன்.

ஓராண்டு இடிபாடுகளுக்குள் கிடந்த குழந்தை என்கிறார்கள். சாமி பேரைச் சொல்லி எதைச் சொன்னாலும் நம்பிக்கையாளர்கள் நம்பி விடுவார்கள் போலும். நம் மண்டைக்குள் இருப்பது ஏதும் சொல்லாதா? அல்லது அது சொல்வது மனதிற்குள் ஏறாதா? ஒரு சின்னஞ்சிறு குழந்தை ஓராண்டு இடிபாடுகளுக்குள் அடைபட்டுக் கிடந்திருக்க முடியுமா என்று ஒரு வினாடிகூட எப்படி யோசிக்காமல் நம்ப முடிகிறது. அடுத்து வெறும் தண்ணீர் மட்டும் குடித்து வாழ்ந்ததாம். குழந்தை என்ன ஒரு சித்தரா? இதையும் எப்படி கண்ணை மூடி நம்புகிறார்கள்?

ஏன் நம்புகிறார்கள் தெரியுமா?

அதன் பின் வந்த வார்த்தைகள் தான். // கல்லிலுள்ள தேரைக்கு உணவளிக்கும் இறைவன் இக்குழந்தைக்கும் உணவளித்துள்ளான். கடவுளின் மகிமையே மகிமை//
ஆம் ... கடவுளின் மகிமை என்று சொன்னால் நம்பாமல் என்ன செய்வது?

சரி... இடிபாட்டிற்குள் ஓராண்டு தண்ணீர் கொடுத்து கடவுள் காப்பாற்றினார் என்றே வைத்துக் கொள்வோம். அப்படிச் சொல்லும் போது அக்குழந்தையை வேறு விதமாக அந்தக் கடவுள் காப்பாற்றித் தொலைத்திருக்கலாமே என்ற எண்ணம் தானாக வராதா? ஓராண்டுக்கு கொடூரமாக தனியே அந்தக் குழந்தையை விட்டு ஆனால் தண்ணீர் மட்டும் கொடுத்துக் காப்பாற்றினாராம் அந்தக் கொடூரமான கடவுள்.

// கல்லிலுள்ள தேரைக்கு உணவளிக்கும் இறைவன் இக்குழந்தைக்கும் உணவளித்துள்ளான்.// சரி ... அது உண்மை என்றே வைத்துக் கொள்வோம். ஆக உணவளித்தது கடவுள். ஓராண்டு இடிபாட்டுக்குள் வைத்ததும் அதே கருணைக் கடல் தானே. அப்போதே காப்பாற்றியிருக்கலாம் ஒரு புத்திசாலிக் கடவுள்! இப்படியா குழந்தையோடு கொடூரமாக விளையாடுவது

கிறித்துவக் கடவுள் என்றால் அப்படியே ஆகட்டும்என்று சொன்னாலோ, இஸ்லாமியக் கடவுள் என்றால் குன்என்று சொன்னாலோ ஒரு வருடத்திற்குப் பின் குழந்தையைக் கண்டெடுத்தவர்கள் உடனே காப்பாற்றி ரட்சித்திருப்பார்களே!

ஏற்கெனவே சொன்னது தான். பிள்ளையார் பால் குடிக்கிறார் என்றால் கிறித்துவர்கள் சிரிப்பார்கள். ஆனால் இப்படி மகிமை, கருணை என்றாலோ ஓடிவந்து அகமகிழ்வார்கள். இன்னொரு உதாரணம் இங்கே ... http://dharumi.blogspot.com/2017/08/blog-post_19.html

ஆக ஒன்று மட்டும் நிச்சயம். கடவுள் பெயரைச் சொல்லி என்ன சொன்னாலும் நம் நம்பிக்கையாளர்கள் அச்சுக் குண்டாக அதை அப்படியே நம்புவார்கள். எந்த மதக்காரராக இருந்தாலும் இதுதான் நடக்கும்.

ஒரு மகிழ்ச்சி. என்னுடைய பதிவு இப்படியிருக்கிறதே என்று நினைத்து like போட்டவர்கள் பலரும் கேள்வி (thumbs up) எமோஜிபோட்டிருக்கிறார்கள். பரவாயில்லை ... அவர்களுக்கு என் மேல் அத்தனை பலமான நம்பிக்கை. நம்பிக்கையோடு அப்படி எமோஜி போட்டதற்கு மிக்க நன்றி நண்பர்களே.
இதையும் பாருங்கள் மக்களே ...http://dharumi.blogspot.com/2018/04/979.html


நம்பிக்கொண்டேயிருங்கள் மக்களே .......

அராபிய மொழி தெரிந்தோர் அங்கு பேசப்படுவதைப் பற்றி ஏதாவது சொல்ல முடியுமா?







Friday, October 05, 2018

977. டூரிங் தியேட்டரில் சினிமா







*

சினிமா பற்றி எழுத ஆரம்பிச்சா ஆரம்பத்திலிருந்து எழுதணுமில்லையாஏன்னா, வரலாறு ரொம்ப முக்கியமாச்சே!




எங்க காலத்தில சினிமா பார்க்கிறதுன்னாலே எல்லோருக்கும் பெருத்த சந்தோஷம் தான். அதுவும் கிராமத்து மக்களுக்கு அது ஒரு பெரிய வரம் ..அதிசயம்எல்லாமே சேர்ந்த ஒண்ணு. ஊருக்கு ஒரு தியேட்டர் கூட அப்போது கிடையாது. எங்கள் சொந்த ஊருக்கு விடுமுறையில் செல்லும் போது சில சமயம் அங்கே படம் பார்க்கும் சந்தோஷம் கிடைக்கும். ரொம்ப சின்ன வயதில் சனிக்கிழமையன்று தான் போக வேண்டியதிருக்கும். அன்றைக்குத் தான் கிராமத்திலிருந்து பலரும் தியேட்டருக்குப் படம் பார்க்க போவார்கள். ஏனெனில் அன்று தான் பீடி சுற்றுவோருக்குகூலிகிடைக்கும். மக்களும் சந்தோஷத்தில் இருப்பார்கள். பெருங்கூட்டமாக சினிமாவிற்குக் கிளம்புவார்கள்.

நான் முதலில் அப்படிஒரு சினிமாவிற்குச் சென்றது எங்கள் ஊரிலிருந்து இரண்டு மூன்று மைல் தூரத்தில் உள்ள தியேட்டருக்கு. எங்கள் ஊர் காசியாபுரத்திலிருந்து கிளம்பி, நல்லூர் வழியே சென்று ஆலங்குளத்திற்குப் போவோம். அங்கேயும் ஊர் தாண்டி தான் தியேட்டர். நிச்சயமாக மூன்று மைல் இருக்கும். ஆனாலும் நடையில்போகும் போதும் சரி .. வரும் போதும் சரிஎந்த களைப்பும் வரவே வராது. போகும் போது எதிர்பார்ப்பில் வரும் போது பார்த்த களிப்பில்

அது ஏன் அந்தக் காலத்து கிராமத்து தியேட்டர்களை டூரிங் தியேட்டர்னு சொன்னாங்கன்னு ஒரு நினப்பு வந்தது. ஆராய்ச்சி பண்ணினேன். டூரிங் என்ற பெயர் எப்படி வந்திருக்கும்னு யோசிச்சேன். ஒரு etymology study தான். மொதல்ல ஒரு டப்பா செஞ்சி அதுக்குள்ள சின்ன சினிமா ரீல்களை வைத்து ஒரு ஆள் பார்க்கிறது மாதிரி ஒரு ஆள் அத ஊருக்கு ஊர் தூக்கிக்கிட்டு போவார்னு கேள்விப்பட்டிருக்கேன். அது நிஜமான டூரிங் தியேட்டர் தான். ஆனால் அதன் பின் கிராமங்களில் வந்த தியேட்டர்களில் ஒரே ஒரு ப்ரொஜெக்டர் வைத்து படம் காட்ட ஆரம்பித்திருக்க வேண்டும். அதற்கு அந்தப் பழைய பெயர் அப்படியே வந்திருக்க வேண்டும். மற்றபடி அந்த டூரிங் தியேட்டர்கள் இடத்துக்கு இடம் ஒன்றும் மாறுவதில்லை. ம்ம்ம்அப்படியும் சொல்ல முடியாது. நானே எங்க ஊருக்கும் தியேட்டர் வந்த பிறகு அது அங்குமிங்கும் மாறியதைப் பார்த்திருக்கிறேன். அதாவது தியேட்டர் சொந்தக்காரர்கள் இடத்தை மட்டும் வாடகைக்கு எடுத்து பக்கத்து பக்கத்து இடங்களில் மாற்றி மாற்றிப் போடுவதைப் பார்த்திருக்கிறேன். ஆனாலும் டூரிங் என்பது etymology படி அப்படித்தான் வந்திருக்க வேண்டும்.




அதெப்படியோ .. அந்தக் காலத்து கிராமத்து டூரிங் தியேட்டர்கள் எல்லாம் ஒரே டெம்ப்ளேட்டில் தான் இருக்கும். தென்னந்தட்டி அல்லது  எங்கள் ஊர்ப்பக்கம் பனை ஓலைகள் வைத்துக் கூரை போட்டிருப்பார்கள். சைடில் ஏறத்தாழ தரையிலிருந்து மூன்றடி மட்டும் விட்டு கீழே வரை கூரை போட்டிருப்பார்கள். சில சமயங்களில் மாட்னி ஷோ போட்டாலும் சாக்கைக் கட்டி படம் ஓட்டி விடலாம் அல்லவா. அதற்காக இப்படி கீழே வரை வரும்படி கொட்டகை போட்டிருப்பார்கள். நுழையும் போதே பணிவோடு நுழைய வேண்டும்அதாவது நன்கு குனிந்து நுழைய வேண்டும். தரையில் மண் விரித்திருக்கும். இரண்டு பிரிவாக ஒரு குட்டிச் சுவர் வைத்துப் பிரித்திருப்பார்கள். ஆண்கள்-பெண்கள் பகுதி என்று இரு பகுதி. மண் தரையில் எல்லாம் இருக்கும். பீடித்துண்டுகள் எங்கும் கிடக்கும். அதோடு சில இடங்களில் எச்சிலும் துப்பி வைத்திருப்பார்கள்.
(அதென்னவோ அந்தக் காலத்தில் இருந்து இன்னைக்கி வரைக்கும் சீர்கெட்ட நம்ம மனுசப் பயலுகளை நினைச்சாவயிறு எரியுது. இப்பவும் படிச்சவன் படிக்காதவன், இளைஞன் கிழவன் என்று எல்லா நாய்ப் பிறவிகளும் வண்டியில் போகும் போதே பளிச்சின்னு எச்சில் துப்புறானுவஅப்படியா இந்த ……(ஏதாவது ஒரு மோசமான கெட்ட வார்த்தை போட்டுக் கொள்ளவும்.) பயல்களுக்கு அறிவு இல்லாமல் போகும். அதோடு இப்போ இன்னொரு வியாதிபோன் பேசிக்கிட்டே வண்டி ஓட்டுறது. திமிர் எடுத்த நாய்கள். ஈனப் பிறவிகள். சரி..இனி நம்ம கதைக்கு வருவோம்)

இந்தத் தொல்லைகளிலிருந்து மீள படம் ஆரம்பித்த பிறகு போனால் போதும் என்று நினைத்தால் அதிலும் ஒரு கஷ்டம் உண்டு. ஆளாளுகள் உள்ளே போனதும் பக்கத்தில் உள்ள மண்ணையெல்லாம் சேர்த்து குவித்து அதற்கு மேல் உட்கார்ந்து கொள்வார்கள். தாமதமாகப் போனால் பள்ளத்தில் தான் உட்காரணும். குவித்த மண்ணை நோண்டி எடுக்க முடியாது. அது ஒரு பெரிய வயக்காட்டு பிரிவினைத் தகராறு மாதிரி பெரிதாகப் போய் விடும்.



வெளியே உயரமாக ஒரு கம்பு நட்டு உச்சியில் குறைந்த பட்சம் இரு குழாய் ஒலி பெருக்கிகள். அதென்ன மாயமோ தெரியவில்லை. மைல் கணக்கில் அதன் சத்தம் கேட்கும். முதலில் இரண்டு முருகன் பாட்டுகள். அதன் பின் அனேகமாக எம்.ஜி.ஆர். பாட்டுகள். ஊரெங்கும் அதிர அதிரக் கேட்கும்.பொதுவாக ஏதோ ஒரு ஆர்டரில் இந்தப் பாட்டுகள் போடுவார்கள். அந்த வரிசைக்கிரமத்தை வைத்தே இன்னும் படம்போட எவ்வளவு நேரம் என்பதை மக்கள் கணக்குப் போட்டு விடுவார்கள். அதற்கேற்றது போல் நடையின் வேகம் கூடும் .. குறையும்.

படம் ஆரம்பிக்கும் போதே தியேட்டருக்குள் போய் உட்கார்ந்து விடணும் என்பது எல்லோரின் ஆசை. அப்போதெல்லாம் டைட்டில் போடும் போது சில டிசைன்கள் போடுவார்கள். கலிடாஸ்கோப்பில் வருமே அந்த மாதிரி டிசைன் வரும். அரிதாக சில படங்களில் கார்ட்டூன் போட்டு டைட்டில் போடுவார்கள். இதை முழுவதுமாகப் பார்த்தால் தான் முழுப்படம் பார்த்த திருப்தி வரும். இந்தக் காலத்தில் பயங்கர  C.G. work பார்த்துப் பழகிய உங்கள் கண்களுக்கு அந்த நாளைய கார்ட்டூன்களும் டிசைன்களும் சாதாரணமாகத் தோன்றலாம். ஆனால் அன்று அது எங்களுக்கு ஒரு பெரும் கவர்ச்சியைக் கொடுத்தது.  அதனால் இன்று கூட தொலைக்காட்சி பொட்டியை நோண்டிக்கொண்டு இருக்கும் போது ஏதாவது ஒரு பழைய படம் திரையிடப்பட்டால் படம் பார்ப்பதை விட அந்த டைட்டிலைப் பார்க்கும் ஆவல் எனக்கு இப்போதும் உண்டு. டைட்டிலில் ஆரம்பித்து கடைசியில் ‘சுபம்’ போடுவது வரை பார்த்தால் தான் முழுப்படம் பார்த்த திருப்தி அன்று கிடைக்கும். டைட்டிலில் அன்று வரும் எழுத்து, அதன் ஸ்டைல், அதனோடு வரும் இசை, வரும் பெயர்களின் தனித்தன்மைகள் – அதாவது அனேகமாக, ஆண் நடிகர்களின் பெயரோடு ஜாதிப் பெயர்களும் வரும் – இப்படி பல அம்சங்களை வித விதமாகப் பார்க்கலாம். இவைகளின் பரிணாம வளர்ச்சியைப் பார்த்தாலே திரைப்படங்களின் வளர்ச்சியையும் பார்த்து விடலாம்.

டூரிங் தியேட்டர்களில் ஒரே ஒரு ப்ரொஜெக்டர் மட்டுமே இருக்கும். ஆகவே சில பல இடைவேளைகள் வரும். ஆனால் விரைவில் ரீல் மாட்டி உடனே அடுத்த செஷன் ஆரம்பித்து விடும். வெளியே செல்ல வழக்கமான நடுவில் வரும் இடைவேளை மட்டும் இருக்கும். இன்றைக்கு பாப்கார்ன், நெஸ்கபே என்பது போ ல் அப்போது அங்கே சில ‘பண்டங்கள்’ மட்டும் கிடைக்கும். அவித்த சுண்டலும், மொச்சையும், முருக்கும் தான் வழக்கமான snacks. இத்துடன் பீடி சிகரெட்டும், காப்பித் தண்ணியும், கலர் சோடாவும் இருக்கும். கலர் சோடா தியேட்டருக்கு வந்து சாய்மான நாற்காலி என்ற first class customersகளுக்கு மட்டும் தான். சுகாதாரமான பானம் அது என்பதால் first class customers அதை மட்டும் அரை குறையாகக் குடிப்பார்கள். நாலைந்து நாற்காலிகள் கடைசி வரிசையில் இருக்கும். அது தான் first class. அனேகமாக கையில்லாத இரும்பு நாற்காலிகள் தான் அவைகள். சில சமயம் பெரிய V.I.P.s வந்தால் சாய்வு நாற்காலி கேபினிலிஉர்ந்து வந்து சேரும். நானும் சில தடவை அந்த சிறப்பு கவனிப்புக்கு ஆளாகியிருக்கிறேன். இரண்டாவது classல் வெறும் பெஞ்சுகள் இருக்கும். சாய்மானம் இல்லாத பெஞ்சுகள் தான். இதில் இருந்து பார்ப்பதைவிட தரை டிக்கெட் சுகமாக இருக்கும். நீங்கள் தியேட்டரின் எங்கிருந்தாலும் உங்களைச் சுற்றி பீடியின் நருமணம் எப்போது சூழ்ந்திருக்கும்.

அதெல்லாம் ஒரு தனி அனுபவம். எவ்வளவு ஆசைப்பட்டாலும் அந்தக் காலத்தின் அனுபவத்திற்குச் செல்ல எந்த time machineம் கிடையாது. கழிந்தது  கழிந்ததே…..

…..





*