*
கடந்த ஞாயிற்றுக் கிழமை நண்பர் வீட்டில் ஒரு விழாவிற்கு அழைத்திருந்தார்கள். போயிருந்தோம். சாப்பாட்டு நேரம். மாடியில் சாப்பாடு. கொஞ்சம் காத்திருக்க வேண்டியதிருந்தது. நானும் தங்க்ஸும் உட்கார்ந்திருந்த இடத்தில் என் வயதுக்காரர் ஒருவர் எதிரில் வந்து உட்கார்ந்தார். சைஸான தாடி வைத்திருந்தார். கலகலப்பாகப் பேசினார். இந்தியா முழுவதும் ரவுண்ட் அடித்தேன் என்றார். ஒரே மகளின் கணவர் இராணுவத்தில் இருந்ததால் இந்த வாய்ப்பு என்றார். கையில் தன் பெயரைப் பச்சை குத்தியிருந்தார். பெயர்: அய்யனார். தங்க்ஸ் அவர் கையில் இருந்த பெரிய மோதிரத்தைக் காண்பித்தார்கள். பெரிய எம்.ஜி.ஆர். படம் போட்ட தங்க மோதிரம். செம சைஸ். மோதிரத்தைப் பெருமையாகக் காண்பிக்கும்போது தான் அந்தக் கையிலும் ஒரு பச்சை பார்த்தேன். அ.தி.மு.க. படம் போட்ட பச்சை. எம்.ஜி.ஆர். தன் கட்சிக்காரர்கள் எல்லோரும் கையில் பச்சை குத்திக் கொள்ளுங்கள் என்றார். (ஆனால் அவர் மட்டும் பச்சை குத்திக் கொள்ளவில்லை.) பக்தர்கள் எல்லோரும் உடனே பச்சை குத்திக் கொண்டனர். இவரும் இதற்காகச் சென்னை போய் அங்கு பச்சை குத்திக் கொண்டாராம். அப்போதுதான் சொன்னார் அவர் ஊர் ஸ்ரீவில்லிப்புத்தூர் பக்கத்தில். தாமரைக்கனி நல்ல நண்பராம். அதுதான் அந்த சைஸில் மோதிரமா என்றேன். சிரித்துக் கொண்டார்.
அரசியல் பேசினோம். இன்னும் எம்.ஜி.ஆரின் பக்தர்தானாம். ஆனால் மம்மி பிடிக்காதாம். ஆனால் ஓட்டு மட்டும் எம்.ஜி.ஆருக்காக இன்றும் அ.தி.மு.க. தானாம். இருவரும் இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் பற்றி பேசினோம். அப்போது அவர் என்னைவிடச் சின்னவர் என்று தெரிந்தது. அப்படித்தானா என்று கேட்டேன். என் வயதைக் கேட்டார். அவர் வயதைச் சொல்ல என்னமோ தயக்கம். ஆனால் அப்போது பள்ளியில் படித்ததாகச் சொன்னார். வயசெல்லாம் யாருக்குங்க தெரியும் என்று சொல்லி விட்டார். நன்றாகப் பேசிக்கொண்டிருந்தோம். இருவரின் wave length-க்கு ஒன்றும் குறைச்சலில்லை. வட இந்தியப் பயணம் .. பார்த்த இடங்கள் .. நன்கு நேரம் போய்க்கொண்டிருந்தது. பாவம் போல் தங்க்ஸும் பக்கத்தில் உட்கார்ந்திருந்தார்கள்.
எங்கள் ‘வண்டி’ நன்றாக ஓடிக்கொண்டிருந்த போது இன்னொருவர் எங்களருகில் வந்து உட்கார்ந்தார். அவரும் எங்கள் வயதை ஒட்டிய ஆள்தான். அய்யனார் ஊர்தானாம். சாப்பாடெல்லாம் முடித்து விட்டு வந்தவர் எங்கள் பக்கத்தில் உட்கார்வதற்குள் என் புதிய நண்பர் அய்யனாரைப் பற்றி சில குறைகள் சொல்ல ஆரம்பித்தார். அய்யனார் கொஞ்சம் திகைத்தார். அவரது uneasiness எனக்குப் புரிந்தது. புதிதாக வந்தவரிடம் வேறு பேச்சு பேசுவோமா .. நீங்கள் வருவது வரை வேறு பல விஷயங்கள் நன்றாகப் பேசிக் கொண்டிருந்தோம் என்றேன்.
அய்யனார் என்னிடம் நாம் எப்படி நன்றாகப் பழகிக்கொண்டிருந்தோம். இவர் வந்து கெடுத்து விட்டாரே என்றார். சமாதானம் செய்வதற்குள் புதிதாக வந்தவர் சாமி, கடவுள் என்று ஏதோ பேச ஆரம்பித்தார். அய்யனார் அப்போது சொன்னார் புதிதாக வந்தவர் ஒரு கிறித்துவ பாதிரி என்று. அவரிடம் நான் மறுபடியும் பேச்சை மாற்ற முயன்றேன். என்னைப் பேச விடாது மேலும் தொடர்ந்தார். நீங்கள் ஒரு பாதிரியார். எப்போதும் உங்களுக்கு நீங்கள் பேசி மற்றவர்கள் கேட்பதுதான் பழக்கமாக இருக்கும். மற்றவர்கள் பேசி நீங்கள் கேட்ட பழக்கம் உங்களுக்குக் கிடையாது என்றேன். உடனே கொஞ்சம் சுருதியைக் குறைத்தார். (இப்போது தங்க்ஸிடமிருந்து முதல் கிள்ளு கிடைத்தது.) ஆனாலும் பாதிரியாரின் வீரியம் குறையவில்லை. ஒரு விஷயத்தைப் போட்டு உடைத்தார். நம் நண்பர் அய்யனார் இப்போது ஒரு இஸ்லாமியர் என்றார். பாதிரியாருக்கு செம கோபம். அந்தக் கோபத்தில் தான் சூடாகப் பேசி விட்டிருப்பார் போலும். இஸ்லாமியராக ஆகி 19 வருஷம் ஆச்சாம்.
இஸ்லாமியர் என்கிறார். கையில் எம்.ஜி.ஆர். மோதிரம். வீட்டுக்குப் போனால் பெரிய தாமரைக்கனியோடு உள்ள படம் அது .. இது .. என்று அய்யனாரை சாடினார் பாதிரியார். (அய்யனார் சொன்ன பெயர் என் மனதில் நிற்கவில்லை. அது ஒரு 'A'-ல் ஆரம்பிக்கும் ஒரு பெயர்.) நான் பாய்க்குப் பரிந்து பேசினேன். பாதிரியாரிடம் உங்களுக்கு ஏசுவைத்தவிர எந்த மனிதர் பிடிக்கும் என்றேன். ஒன்றும் சொல்லவில்லை. காந்தியைப் பிடிக்குமா என்றேன். ஆஹா என்றார். உங்களுக்குக் காந்தி பிடிப்பது போல் அவருக்கு எம்.ஜி.ஆர். பிடிக்குது; இதிலென்ன தப்பு என்றேன். எப்படி இஸ்லாமிற்குச் சென்றீர்கள் என்று அய்யனாரிடம் கேட்டேன். அவர் பதில் சொல்வதற்கு முன் பாதிரியார் எல்லாம் இஸ்லாமியரின் பிரச்சாரம் என்றார். நான் ‘கிறித்துவர்களை விடவா இஸ்லாமியர்கள் ‘ஆள் பிடிக்கிறார்கள்’ என்று கேட்டேன். மனிதர் பாவம் .. மயிலிறகு எடுத்துக்கிட்டு சாம்பிராணி தட்டோடு சில இஸ்லாமியர்கள் பாவம் போல் வருவார்களே ... அவர்களை பார்த்து, அவர்களெல்லோரும் மதம் பரப்ப வருபவர்கள் என்றார். மறுத்தேன்.காசு கொடுத்து மாற்றுகிறார்கள் என்றார். அதை வெளிப்படையாகச் செய்யும் மதம் எது என்று தெரியாதா என்றேன். (அடுத்த கிள்ளு ..) நாங்கள் உதவி மட்டும்தான் செய்கிறோம் என்றார். எப்படியென்று எனக்கும் தெரியுமே என்றேன். உங்கள் மதம் என்னவென்றார். ஒன்றுமில்லை என்றேன். அது எப்படி என்றார். கிறித்துவனாகப் பிறந்தேன்; இப்போது இல்லையென்றேன். அது எப்படியிருக்க முடியும் என்றார். நான் இருக்கிறேனே என்றேன். சாமி கும்பிடாதவர்கள் நல்லவர்களாக இருக்க முடியாது என்றார். உங்களால் முடியாது என்று சொல்லுங்கள். ஒப்புக் கொள்கிறேன் என்றேன். மற்றவர்களைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும் என்றேன். (தங்க்ஸ் தோளைப் பிடித்து இழுத்து என் காதில் வன்மையாகக் ‘கடித்தார்’!) (ஆனால் இப்போது ‘மீனாட்சிபுர நிகழ்வு’ எப்படி நடந்தது என்று ஒரு கேள்வி என் மனதிற்குள் எழுந்தது.)
அய்யனாருக்கு இவரு நம்ம ஆளு என்று என்னைப் பார்த்து தோன்ற ஆரம்பித்து விட்டது. இருவரும் சேர்ந்து பாதிரியாரை ஓரங்கட்டி விட்டோம். அய்யனார் கடைசியில் ஒரு போடு போட்டார். நாங்கள் இப்போது தான் சந்தித்து நல்ல நட்போடு இருந்தோம். நீங்கள் வந்து கலைக்கப் பார்த்தீர்கள். நாளை நாம் இருவரும் வந்தால் சார் என்னோடுதான் பழகுவார் என்றார். நானும் அது சரியென்றேன். பாதிரியாருக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை; எங்களை சாப்பிடப் போகச் சொல்லி வேகப்படுத்தினார்.
நானும் அய்யனாரும் சாப்பிடக் கிளம்பினோம். எனக்கு இரண்டு கேள்விகள் இருந்தன. எப்படி அல்லது ஏன் அய்யனார் இஸ்லாமிற்குச் சென்றார்; இஸ்லாம் பற்றித் தெரிந்த பிறகு அந்த மதத்திற்குச் சென்றாரா?
படியில் ஏறும்போது முதல் கேள்வி கேட்டேன். நானாகப் போனேன் என்று ரொம்ப சுருக்கமாகச் சொல்லிவிட்டார். அதற்குமேல் ஏதும் சொல்லவில்லை. விட்டுவிட்டேன். சாப்பிடும்போது இரண்டாம் தடவை சோறு வைக்க வந்த அவரது உறவினரிடம் நான் இரண்டாம் தடவை சோறு வாங்கக் கூடாது’ப்பா என்றார். நான் ஏனென்று கேட்டேன். எங்கள் மார்க்கத்தில் அப்படி சொல்லியிருக்கிறது என்றார். ஒரே தட்டில் பிரியாணி வைத்து அரேபியர்கள் உணவருந்துவார்கள் என்ற எண்ணம் நினைவுக்கு வந்தது. அது ஏன் என்றேன். அப்படித்தான் சொல்லியிருக்கிறது என்றார்.வாசிச்சீங்களா என்றேன். ஹஸ்ரத் (ஹஸ்ரத் என்றுதான் நினைக்கிறேன். இதுவா அல்லது வேறு வார்த்தை சொன்னாரான்னு தெரியலை.) சொன்னார் என்றார்.
நானும் அதோடு விட்டிருக்கலாம். ஆனால் அய்யனார் அடுத்த பாய்ன்ட் ஒன்று சொன்னார்: எங்கள் மார்க்கத்தில் எல்லாம் அறிவியல் படிதான் இருக்கும் என்றார். அப்டின்னு ஹஸ்ரத் சொன்னாரா என்றேன்.(ஆஹா .. எப்படியோ ஒரு brain washing தான்.) ஆமா, தங்க நகை போடக்கூடாதே ... எப்படி போட்டிருக்கிறீங்கன்னு கேட்டேன். போட வேண்டாம்னு சொன்னாங்க. ஆனா எனக்கு பிடிச்சது என்று சொல்லிவிட்டு இன்னொரு சமூகக் காரணம் சொன்னார். அவர் மட்டுமே இஸ்லாமிற்கு வந்தாராம். இவங்க ஊரில் பாய் என்றால் இவர் மட்டும் தானாம். நானே தங்க மோதிரத்தை எடுத்துட்டு நின்னா மக்கள் ஒரு மாதிரி பேசுவாங்கல்லா .. அதான் போட்டுக்கிட்டேன் என்றார். அதோடு நின்னாரா, தங்கம் பெண்கள் போடலாம். ஆண்கள்தான் போடக்கூடாது என்றார். ஏன் என்றேன். ஆண்கள் உடல் ரொம்ப சூடு என்றார். பெண்கள் உடல் என்று கேட்டேன். அப்படியெல்லாம் இல்லை என்றார். எனக்குத் தெரிஞ்சி அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை. உங்கள் வயத்துக்கு எதெது சரியோ அதுவே பெண்கள் வயிற்றுக்கும் சரி என்றேன். (மாம்பழத்தை மாதிரிக்கு சொன்னேன்.)சிரித்துக் கொண்டார்.
சாப்பிட்டு விட்டு கீழே வந்தோம். அப்போது பார்த்தேன். வேட்டி கரண்டைக்காலுக்கு மேலே இருந்தது. ஓ! மார்க்கம் சொல்றது மாதிரி வேட்டி கட்டியிருக்கிறீர்களே என்றேன். ஆமாம் .. அது எதுக்குன்னா ... தொழுகை சமயத்தில் (சொன்ன ஒரு வார்த்தை புரியவில்லை .. மண்டி போடுவது பற்றி ஒரு வார்த்தை சொன்னார்; காதில் ஏறவில்லை.) நாங்கள் 16 தடவை மண்டியிடுவோம். அதனால் முழங்காலில் கூட வடு வந்து விடும் என்றார். அதற்காகத்தான் வேட்டியை ஏற கட்டணும் என்றார். அப்போ pants போடுவோர் என்ன செய்வார்கள் என்றேன். சிரித்தார்.
நானும் தாடிவைக்க இப்போது முயற்சியெடுத்துக் கொண்டிருந்தேன். அதைப் பார்த்து சில ஐடியா கொடுத்தார். அதோடு நிற்காமல், தாடி வைத்தால் கண் நன்றாகத் தெரியும் என்றார். யார் சொன்னது என்றேன். ஹஸ்ரத் என்று சொல்லவில்லை; ஆனால் அதைத்தான் சொல்ல வந்தார். எந்த கண் டாக்டரும் அப்படி சொல்லவில்லையே என்றேன். கண்னுக்கும் தாடிக்கும் என்ன இருக்கு? உங்க நபி இஸ்லாமியரை யூதர்கள், கிறித்துவர்களிடமிருந்து வேறுபடுத்த சொன்ன விஷயம்தானே தாடி என்றேன். ஒரு சின்ன சிரிப்பு அவரிடமிருந்து!
படாரென்று ஒன்றைப் போட்டு உடைத்தார். அதெல்லாம் அந்தக் காலத்திற்காக நபி சொன்னது என்று சொல்லி உண்மையை உடைச்சார். ஆமாங்க .. அன்னைக்கி சரியா இருந்த விஷயம் இன்னைக்கி சரியா இருக்கணும்னு இல்லை இல்லையா? அன்னைக்கு சண்டை போட்டுக்கிட்டு இருந்த காலத்தில் ஒரு ஆணுக்கு 4 பொண்டாட்டி சரி.. ஆனால் இன்னைக்கு அது தாங்குமா .. இல்ல .. சரியா என்றேன். கரெக்ட் என்றார்.
தங்கஸ் - இப்போ கொஞ்சம் தள்ளி நின்னுக்கிட்டு இருந்தாங்க - முறைச்சாங்க. மழைமேகம் கூடி இருட்டிக்கிட்டு இருந்தது. அய்யனார் குடும்பமும் புறப்படத் தயாரானார்கள். நானும் former-அய்யனாரும் கை குலுக்கிக் கொண்டோம் அடுத்த முறை வரும்போது கட்டாயம் வீட்டுக்கு வருவதாகச் சொன்னார். விடை பெற்றோம்.
*
இன்னொன்று சொல்ல மறந்தேனே!
பாதிரியார் அய்யனார் மதம் மாறியதைச் சொல்லி விட்டு, இதையெல்லாம் விட்டுட வேண்டியதுதானே என்றார். நான் எதற்காக அவர் நம்புறதை விடணும் என்றேன். அதற்குள் அய்யனார் நாங்க அப்படியெல்லாம் உட்டுட்டு வரக்கூடாது அப்டின்னார். பாதிரியாருக்கு உள்விஷயம் புரியலை. எடுத்துச் சொன்னேன் - அவங்க மதத்தில சேர்ந்துட்டு உட்டுட்டு வரமுடியாதுன்னேன். பாதிரியாருக்கு ஆச்சரியம். என்ன ஆகும் என்று கேட்டார். நம்மூர்ல ரொம்ப பெருசா தொல்லையில்லை. ஆனால் இஸ்லாமிய நாடுகளில் ரொம்ப ஆபத்து அப்டின்னேன்.
அய்யனாரைப் பார்த்து ஆனா இப்படி அடைச்சி வக்கிறது சரியான்னேன். பிடிச்சி சேர்ந்தா, நம்பிக்கை வச்சிட்டா அங்கதான இருக்கணும் அப்டின்னார். நீங்க இந்து மதத்தில இருந்து மாறுனது தப்பான்னு கேட்டேன். இல்லைன்னார். அப்போ அதேமாதிரி இந்த மதத்திலிருந்து மாறினால் மட்டும் என்ன தப்புன்னேன். ஒண்ணும் சொல்லலை.
பாதிரியாரின் ஆச்சரியம் இன்னும் தீரலை.
*