Sunday, August 30, 2020

1106. சில மலையாளத் திரைப்படங்கள்





*


சமீபத்தில் வெளிவந்து இந்தியாவே திரும்பி பார்த்த8 மலையாளப் படங்கள் என்ற தலைப்பில் ஒரு பட்டியல் கிடைத்தது.     8 படங்களில் ஏழு பார்த்தாகி விட்டது. உண்மைதான். மிக நல்ல படங்கள். வெறும் காதல், சண்டை என்று அரைத்த மாவையே அரைக்கும் தமிழ் நிலையிலிருந்து அவர்கள் எவ்வளவு விலகி நல்ல தரமான படங்கள் எடுக்கிறார்கள். 

தமிழ்ப்பட இயக்குநர்களே … கொஞ்சம் பக்கத்து வீட்டுப் படங்களையும் எட்டிப் பாருங்களேன் .. 

பட்டியல்:

1. அய்யப்பனும் கோஷியும்

2. வரனே அவஷ்யமுண்டு

3. ட்ரான்ஸ்

4. கப்பெல்லா

5. ஃபாரன்ஸிக்

6. ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்

7. டிரைவிங் லைசென்ஸ்

8. அஞ்சாம் பத்திரா


8 படத்தில் கடைசிப் படம் தவிற ஏனைய படங்களைப் பார்த்து விட்டேன். 

ட்ரான்ஸ் -- ஏற்கெனவே பார்த்து ஒரு குறிப்பும் எழுதியுள்ளேன். கிறித்துவ மதப் போதகர்கள் கூட்டம் செய்யும் மோசடியை வெளிச்சம் போட்டுக் காட்டிய படம். ஆனாலும்,  சும்மா சொல்லக்கூடாது நீங்கள் எவ்வளவு சரியாகச் சொன்னாலும் கிறித்துவ மத நம்பிக்கையாளர்கள் எல்லோரும் இதைக் கண்டு கொள்ளவே மாட்டார்கள் .. அவர்கள் வழியே தனி வழி. 

அய்யப்பனும் கோஷியும், ட்ரைவிங் லைசன்ஸ் என்ற இரு படங்களின் knot ஏறத்தாழ ஒன்று தான். சீருடை அணிந்த ஓர் அரசு ஊழியருக்கும் பிரபலமான அல்லது செல்வாக்குள்ள ஒருவருக்கும் ஏற்படும் சண்டையில் உள்ள ego பிரச்சனை தான். ஆனால் முந்தியது வல்லினம்; அடுத்ததோ மெல்லினம் தான். நிறைவைத் தரும் படங்கள். இரண்டிலும் பிரித்விராஜ். முதல் படத்தில் இயற்கையாக இயல்பாக நடித்துள்ளார்.

கப்பெல்லா .. நம் தமிழ்ப்படம் மாதிரி. கொஞ்சம் காதல்.. கொஞ்சம் சண்டை. ஆனால் இதில் வரும் கதாநாயக, வில்லன் பாத்திரங்களுக்குக் கொடுக்கும் வித்தியாசமான பின்புலம் கதைக்கு நல்ல வலுவைக் கொடுத்துள்ளது. 

ஃபாரன்ஸிக் .. கதாசிரியர் படித்து, உழைத்து அறிவியலோடு உருவாக்கிய கதை. A gripping story. கான்சர் வியாதி வந்தவர்களுக்கு இரண்டு வகை டி.என்.ஏ. இருக்குமாம். சாதாரண hearing aids  மூலம் மற்றவர்களை இயக்க முடியும். இப்படி அறிவியலைப் பற்றிக் கூறும் விஷயங்கள் புதியவனவாகத் தோன்றுகின்றன. 

வரனே அவஷ்யமுண்டு கதை மெல்ல நகருகிறது. பிடித்து நம்மை நிறுத்தவில்லையே என்றிருக்கும் போது கடைசியில் நெஞ்சிற்கு நெருக்கமான காட்சிகள் வந்து நம்மைக் கட்டிப் போட்டு விடுகின்றன. 

ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்  கேரளாவின் சிறு கிராமத்தில் வசிக்கும் eccentric பெரியவர் தன்னைத் தனியே விட்டுச் செல்லும் மகனிடம் கோபத்தில் இருக்கிறார். அப்பாவின் மகன் (அந்த நடிகரின் பெயர் கூட எனக்குத் தெரியாது; தமிழ்நாட்டுக் கதாநாயக அந்தஸ்து அவருக்கில்லை!) கொடுத்த ரோபாட்டுடன் பழக ஆரம்பித்து அதுவே அவருக்கு மகனாக ஆகிவிடுகிறது. கேவலமான பிரம்மாண்டப் படங்கள் தரும் நம் இயக்குநர் சங்கருக்கு யாராவது இந்தப் படத்தை ஒரே ஒரு தடவை போட்டுக் காண்பியுங்களேன். இதில் வரும் கதாநாயகன் நம் ரசினி மாதிரி உதட்டைச் சுழித்துக் கொண்டு “ரோபாட்” என்றெல்லாம் சொல்ல மாட்டார். கடைசி சீன் மனதை வருடி வருத்திச் சென்று முடிகிறது. அதோடு செளடாமணி என்ற அந்தப் பக்கத்து வீட்டுப் பெண்மணிக்கு வரும் குறுஞ்செய்திகள் யாரிடமிருந்து என்று தெரியாமலே கதையை முடித்ததும் ( பெரியவரின் சின்ன வயதுக்காதலி அவர்!) நமது சோகத்தை அதிகப்படுத்தியது.

 

 


1105. கொரோனாவும் நானும் ... 3




*

ஏனைய பதிவுகள் …….

1. https://dharumi.blogspot.com/2020/08/1103-1.html

3. https://dharumi.blogspot.com/2020/08/1105-3.html

4. https://dharumi.blogspot.com/2020/09/1107-4.html

 

மருத்துவ மனையில் சேர்ந்த முதல் நாள் இரவில்தான் முதல் ஷாக் வந்தது. ஆனால் அடுத்த நாளே இந்த ஷாக்குகள் பழகிப் போக ஆரம்பித்து விட்டன.  புதுக் கட்டிடத்தில் தான் green zone என்று பெயரிடப்பட்ட எங்கள் வார்டு இருந்தது. பழைய மருத்துவ மனையை ஏறத்தாழ 25-30 ஆண்டுகளுக்கு முன் பார்த்திருக்கிறேன். ஒரு வாழும் நரகம் போல் தோன்றும். எங்கும் அழுக்கு .. எச்சில்.. கழிவு நீர்… வெராண்டாவில் படுத்திருக்கும் நோயாளிகள் என்று அச்சமுறுத்தியன அந்தக் காலத்தில். ஆனால் இப்போது அப்படியேதும் அச்சம் தரும் நிலையில்லை. சுத்தம் இருந்தது; அதிகக் கூட்டமில்லை. ஆனாலும் வார்டுக்குள் நுழைந்ததும் முதலில் சிறிது பயம் தான் வந்தது. நீண்ட ஹால் .. எதிர் எதிராக இரு வரிசையாகப் படுக்கைகள்; படுக்கைகளுக்கு நடுவே ஒன்று அல்லது ஒன்றரை அடி இடைவெளி தானிருந்தது. ஹாலின் நடுவே மருத்துவர்களுக்கான சிறிய அறை. அதனால் ஹால் இரு பகுதிகளாகப் பிரிந்திருந்தன. எனக்கு முதலில் அந்தச் சின்ன மருத்துவ அறையின் மேற்குப் பக்கத்தில் இருந்த பகுதியில், வடக்குப் பக்கம் இருந்த வரிசையில்.. நட்ட நடுவே எனக்கு ஒரு கட்டில் கிடைத்தது. (நிலைமை அப்படித்தான்… ஏதோ ஒரு நோயாளி ஏதோ ஒரு நிலையில் - அதாவது உயிரோடு அல்லது அது இல்லாமலே ‘வெளியே’ சென்றால் தான் அடுத்தவருக்கு இடம் என்ற நிலை!) அப்படிப்பட்ட கூட்டத்திலும் எனக்கென்னவோ எளிதாக அட்மிஷன் கிடைத்தது - என் நண்பர்களின் முனைப்புகளினால் எளிதாக அமைந்தது. ரவியும் வைத்தியும் என்னை வார்டில் என்னைச் சேர்த்து விட்டு அடுத்த நாள் மதியம் வரை ஊண், உறக்கம் இல்லாமல் மருத்துவ மனையிலேயே இருந்திருக்கின்றனர். பாவம் பசங்க …


அதோடு மருத்துவ மனையிலிருந்து வெளி வந்து பல நாட்கள் வரை மக்கள் ரகசியமாக வைத்திருந்த செய்திகள் இப்போது தான் மெல்ல கசிந்து எனக்கு வருகின்றன. நிமோனியாவில் அடுத்தடுத்து ஆறு நிலைகள் இருக்குமாம். எனது நோயின் நிலை ஐந்தாவது நிலையில் இருந்திருக்கிறது. நல்ல சீரியஸ் கேஸ் தான் போலும்; இப்போது தான் தெரிகிறது. அதனால் தானோ என்னவோ, மருத்துவ மனையில் சேர்ந்த சிறிது நேரத்தில் அவர்களுக்கு ஒரு S.O.S. voice mail கொடுத்து அவர்களை ‘அலற’ வைத்திருப்பேன் போலும். அதைப் பற்றி அவர்கள் என்னிடம் இப்போது பேசிய போது, அப்படி ஒரு மெயில் கொடுத்த நினைவே எனக்கில்லை. அது தான் சொன்னேனே … எது நிஜம் .. எது கனவு .. என்றே தெரியாத ஒரு நிலையில் முதல் சில நாட்கள் இருந்திருக்கிறேன்.


அந்த வார்டில் இருந்த நோயாளிகளில் ஏறத்தாழ 80% விழுக்காட்டிற்கு மேல் ஆண்கள் தான் நோயாளிகளாக இருந்தார்கள். The "weaker" sex were so low in number!!  Reason..? அம்மாமார்களும், மனைவிமார்களும் நோயாளிகளை அக்கறையாகக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். பெண்குலத்திற்கே என் மனமார்ந்த வணக்கம்.


முதலில் மிரட்சி. மணி பத்து பதினொன்றுக்கு மேலிருக்கும். என் வரிசையின் வலது பக்கக் கடைசியில் இருந்த ஓரிரு கட்டில்கள் முன் கூட்டமாக இருந்தது. மெல்லிய அழுகை ஒலியும் கேட்டுக் கொண்டிருந்தது. யாருக்கோ இறுதிப் போராட்டமாக இருந்திருக்க வேண்டும். அங்கே படுத்துத் தூங்கி விடுவேனா என்றும் தோன்றியது. ஆனால் இதுவரை இருந்தது போன்ற அசதியில் தூங்கி விட்டேன். நடுநிசி தாண்டி ஏதோ ஒரு நேரத்தில் சிறுநீர் கழிக்க எழுந்தேன். கழிவறை என்று எங்கே என்று கேட்டு முதன் முறையாக அங்கே சென்றேன். சுத்தமாகவே இருந்தது. ஆனாலும் தரையை சமமாகப் போடாத கொத்தனார்களைத் திட்டிக் கொண்டேன் - ஏனெனில் அறைகளின் நடுவில் இருந்த பகுதி அதற்குள் பள்ளமாக தண்ணீர் - என்ன தண்ணீரோ? - தேங்கி நின்றது. வெஸ்டர்ன் டாய்லட்டில் பழகியாகி விட்டது. அது இருக்கிறதா என்று பார்த்தேன். ஒன்று இருந்தது. ஆனால் மேல்பாகமெல்லாம் காணாமல் போய் உடைந்து நின்றது. சமாளித்து வந்த வேலையை முடித்து விட்டு, ஹால் பக்கம் நடந்தேன். இரவிலும் ஆள் நடமாட்டம் இருந்தது. ஹாலின் வாசலுக்கு வரும் போது தான் அந்த முதல் ஷாக் கிடைத்தது. வாசலுக்கு அடுத்தாற்போல் ஒரு இரும்பு ஸ்ட்ரெட்சர் … அதில் நீளப் பொட்டலம் போல் வெள்ளைத் துணியில் கட்டப்பட்ட இறந்த உடலொன்று கிடந்தது. வர வேண்டியவர்கள் இன்னும் வரவில்லை போலும் .. கேட்பாரற்று சுவரோரம் ஒதுங்கிக் கிடந்தது. ஆனால் அடுத்த இரு நாளில் பார்த்த மரணங்கள் - என் கணக்கின்படி எட்டு அல்லது ஒன்பது - மெல்ல என்னைப் பழக்கிக் கொண்டிருந்தன. I was getting adapted to those sad but continuous events.


மருத்துவ மனை செல்வதற்கு முன்னும் பின்னும் ஏறத்தாழ பல நாட்களுக்கு இரவுப் பொழுதுகள் கனவிற்கும், நினைவிற்கும் நடுவில் ஊடாடிக்கொண்டே கழிகின்றன. விழித்துப் பார்த்தால் எது கனவு.. எது நிஜமென ஏதும் புரிவதில்லை. குழப்பம் தான் மிஞ்சி நின்றது. Meet the Spartans என்று ஒரு நகைச்சுவைப் படம். அதில் ராஜாவின் அரண்மனைக்குள் ஒரு இருண்ட குழி இருக்கும். ராஜா வேண்டாதவர்களை அதில் தள்ளி விடுவார். ஆழம் தெரியாத குழி. படத்தில் அந்தக் குழியில் வட்ட மேடை ஒன்றைச் சுற்றியிருக்கும். எனக்கென்னவோ மருத்துவ மனையில் சேர்ந்த முதல் மூன்று நான்கு நாட்களுக்கு நான் அந்த மேடையில் இருப்பது போன்ற நினைவே கனவில் வரும். எந்தப் பக்கம் விழுவது என்ற ஒரு திரிசங்கு நிலையில் இருந்தேன்.


இரண்டாவது நாள் நிகழ்ச்சி. என்னை அது ஏதோ ஒரு சமநிலைக்குக் கொண்டு வந்தது. பதினோரு மணியிருக்கும். எனக்கு எதிர்த்த வரிசையில் ஏறத்தாழ எனக்கு நேரெதிரே படுத்திருந்த ஒரு வயதான பெண்மணி உயிரிழந்தார். கோரோனாவா என்று கொஞ்சம் சந்தேகம் தான். அழுகை ஏதும் இல்லை. அதன் பின் ஓரிரு மணியளவில் என்னைப் பார்க்க வைத்தி, ரவி என் படுக்கையருகே இருந்தார்கள். ஏதோ ஒரு ‘சதி’ செய்து, அவர்கள் முதுகிற்குப் பின்னால், என் கட்டிலிலிருந்து நாலாவது கட்டிலில் ஓர் உயிர் பிரிந்திருக்கிறது. அந்தக் கடைசி நிமிடங்கள் என் கண்ணில் படாதவாறு மறைத்து நின்று கொண்டிருந்திருக்கிறார்கள். ஆனால் அதன் பின் இறந்தவர்களின் உறவினர்கள் இரண்டு மூன்று பேர் வந்து அழுத போது தான் அந்த இறப்பு என் பார்வைக்கு வந்தது. ஆனால் இதில் இருந்த பெரும் அதிர்ச்சி  என்னவெனில் அந்த இரு உடல்களையும் அப்புறப்படுத்த ஐந்தாறு மணிகளாகி விட்டது. ஆள் பற்றாக்குறையோ என்னவோ…  அந்த இரு உடல்களையும் அதுவரை பார்க்காமல் இருக்க வேண்டும் என்று நினைத்தாலும் அது முடியவில்லை.


நான் அங்கிருந்த நாட்களில் இன்னொரு விஷயம் எனக்குக் கொஞ்சம் ஆச்சரியத்தையும் கொடுத்தது. இறந்ததும் உறவினர்கள், முக்கியமாக மனைவிமார்களின் அழுகை மிக மெல்லியதாக, சில நிமிடங்களுக்கு இருக்கும். அதன்பின் அவர்களில் பலர் ஏதாவது ஒரு சுவற்று மூலையில் சாய்ந்து விசித்துக் கொண்டிருப்பார்கள். சூழ்நிலை அடக்கி வைத்து விட்டதா .. இல்லை அவர்களாகவே அடங்கி விட்டார்களா என்று தெரியவில்லை.


தொடர்ந்து நடந்து வந்த மரணங்கள்.. நானும் என்னையே அந்த மரணக் கிணற்றின் விளிம்பில் வைத்துப் பார்த்துக் கொண்டிருந்த நினைவு .. எல்லாமே இணைந்து உலக  அரசுகள் அனைத்தும் வேறெந்த வேலையும் செய்யாமல் அனைத்தையும் துடைத்தெறிந்து விட்டு, மக்கள் அனைவரையும் கட்டுக்குள் கொண்டுவந்து கொரோனாவை மட்டும் எதிர்த்துப் போரிட வேண்டும் என்று மனதிற்குள் தோன்றியது. இப்படி ஏதேதோ எண்ணங்கள் .. அவைகளைத் தவிர்க்கவும் முடியவில்லை. திருவிளையாடல் படத்தில் …

எதிலும் இயங்கும் இயக்கமும் நானே
என் இசை நின்றால் அடங்கும் உலகே..   என்று பாடியதும் அனைத்தும் உறைந்து நிற்குமே, அது போல் உலகத்தையும் ஒரு frozen stageக்குக் கொண்டு வரவேண்டும் என்றும் சில நினைவுகள். மூளை மந்தமாக ஆனால் வேகமாகவே வேலை செய்து கொண்டிருந்தது போலும் !!


பிள்ளைகளும், நண்பர்களும் என்னை அரசு மருத்துவ மனையில் சேர்த்து விட்டதைப் பற்றி என்னிடம் அடிக்கடி பேசினார்கள். அது ஒரு மிகப் பெரும் நல்ல முடிவு என்பது எனக்குப் பின்னால் தான் நன்கு தெரிந்தது. ஒரு முக்கிய காரணத்தைப் பிறகு அடுத்த கட்டுரையில் சொல்கிறேன்.


மருத்துவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டையும், நன்றியையும் சொல்ல வேண்டும். PPE உடை போட்டிருக்கிறார்கள். மருத்துவர்களுக்கு வெள்ளை நிறம்; மற்றவர்களுக்கு ஊதா. மணிக்கணக்காக அந்த உடையைப் போட்டிருப்பதற்காகவே அவர்களைப் பாராட்ட வேண்டும். தொடர்ந்து வேலை செய்து கொண்டே இருந்தார்கள், இரவில் கூட யாரும் அமர்ந்தோ, தூங்கிக்கொண்டோ இருந்ததைப் பார்க்கவில்லை. மிகச் சரியாக இரவு இரண்டு, இரண்டரை மணிக்கு வார்ட் முழுவதையும் சுற்றி ஒவ்வொரு நோயாளியையும் கவனித்து, முக்கியமாக ஆக்சிஜன் அளவு சரியாக உள்ளதா என்று தொடர்ந்து கவனித்துக் கொண்டும், ஊசி மருந்துகள் போடுவதும் என்று மிகுந்த அக்கறையோடு எல்லோரையும் கவனித்தார்கள். அவர்களுக்கு என் மனமுவந்த பாராட்டுகள். வழக்கமாக அரசாங்க மருத்துவ மனை மருத்துவர்கள் விட்டேற்றியாக இருப்பார்கள் என்ற நமது வழக்கமான எண்ணத்தை முற்றிலுமாக துடைத்தெடுத்து விட்டார்கள். மனமுவந்த பாராட்டுகளும், தலை தாழ்ந்த வணக்கமும் அவர்களுக்கு உரித்தாகட்டும்.


செவிலியர்களும், துப்புறவுத் தொழிலாளர்களும் நம் பாராட்டுக்குரியவர்களே. அதிலும் ’வசூல் ராஜா, எம்.பி.பி.எஸ்.’ படத்தில் ஒரு துப்புறவு தொழிலாளர் இருப்பாரே, அதே போல் பலரும் இருந்ததைப் பார்த்தேன். ஆனால், பாவம் அவர்கள்… கட்டிப்பிடி வைத்தியம் பார்க்க அங்கு யாருமில்லை!

 

 











*


Thursday, August 13, 2020

1104. கொரோனாவும் நானும் ... 2


ஏனைய பதிவுகள் …….

1. https://dharumi.blogspot.com/2020/08/1103-1.html

3. https://dharumi.blogspot.com/2020/08/1105-3.html

4. https://dharumi.blogspot.com/2020/09/1107-4.html

 



pix not for viewing ... only to record my days with corona....


in GH ward ....



back at home ...on a shaving day!!!




Sunday, August 09, 2020

1103. கொரானாவும் நானும் ….. 1


*

ஏனைய பதிவுகள் …….

1. https://dharumi.blogspot.com/2020/08/1103-1.html

3. https://dharumi.blogspot.com/2020/08/1105-3.html

4. https://dharumi.blogspot.com/2020/09/1107-4.html

 

,*

                          

 

எழுத ஆரம்பித்த நாள்: 4.8.20

வலைக்கு வந்தே ஒரு மாதத்திற்கு மேல் ஓடிவிட்டது.   ஏழுமலை ... ஏழுகடல் தாண்டிய அனுபவம்தான்  இதுவரை.   என்னென்னவோ நடந்தது ..எப்படி எப்படியோ இருந்ததுஎல்லாம்  ஆங்காங்கே  நினைவுகளாக ஒட்டிக் கொண்டு நிற்கின்றன. துடைத்துப் போடவும் முடியவில்லைதொகுத்துத் தரவும் முடியவில்லை

தொடர்ந்து எழுத முடியவில்லை. தொடரணும் …

 

 5.8.20

பெற்று வளர்த்த இரண்டு பிள்ளைகளும்பெறாமல் வந்து சேர்ந்த மூன்று பிள்ளைகளும் கட்டி இழுத்து வந்து இதுவரை கொண்டு வந்து விட்டார்கள்அவர்கள் மட்டும்தானாபெரிய படையே அல்லவா  திரண்டு என் பின்னால்  நின்றதுஎத்தனை கரிசனம்எத்தனை அன்புஎங்கெங்கிருந்தோ உதவி.  

 

உங்களையெல்லாம்  மீண்டும் என் மனதிற்குள்  ஒரு தரிசனம்  செய்ய ஆசை. அதுவே இந்த எழுத்துக்களின் நோக்கம்.

 

6.8.20

ஜூன் மாத கடைசி வாரம்வலது பக்கம் தோள்பட்டை வலிஅத்தனை அசதிபாரசிட்டமால்  வாங்கப் போனால் கடையில் கிடையாது என்று சொல்லிவிட்டார்கள்விற்பனைக்கு இல்லையாம். ICMR ல் வேலை பார்க்கும் நண்பனுக்கு ( இக்கட்டுரையில் இனி ‘நண்பன்’ என்றால் அனேகமாக அவன் ஒரு மாணவ நண்பன் என்று கொள்ளவும்.).  சில மாத்திரைகள் சொன்னான்இரண்டு நாள் சாப்பிட்டேன்பயனேதுமில்லைஅவனுக்கு வாட்ஸ்அப்பில்  வாய்ஸ் மெசேஜ் கொடுத்தேன்என்னப்பா பண்றது என்று கேட்டிருந்தேன்மூன்று நாளாகியும் பதில் இல்லைஆச்சரியம்இன்னொரு நண்பனுக்கு செய்தி சொன்னேன்சிறிது நேரத்தில் ICMR நண்பரிடமிருந்து  போன் வந்தது. “அக்காவிடம் கொடுங்கள்என்றான்மனைவியிடம் கொடுத்தேன்அவன் பேச ஆரம்பித்ததும் மனைவி என்னிடம் சைக்கினையில்  அழுகிறான் என்றாள். வாங்கி நான் பேச ஆரம்பித்தேன்அவன் நான்கு நாட்களாகாக குவாரண்ட்டையினில்  இருக்கிறான்அதனால் என் செய்தியை வாசிக்கவில்லைஅதற்கு அத்தனை கவலை அவனுக்கு. அவனுக்கு நான் ஆறுதல் சொல்ல வேண்டியதாகிவிட்டது. 

 

 9.8.20 (இன்று எழுதி முடித்து விட வேண்டுமென்ற வைராக்கியத்தோடு கணினி முன் அமர்கிறேன் ….)

 

அடுத்த நாள் காலை. நண்பன் அனுப்பிய மாநகராட்சி ஊழியர் ஒருவர் வந்து கொரோனா டெஸ்ட் எடுத்துப் போனார். எப்போ ரிசல்ட் தெரியும் என்றேன். தினமும் 1500 டெஸ்ட் செய்ய முடியும்; ஆனால் 2000க்கும் அதிகமாக வருகின்றன; நாலைந்து நாட்களாகலாம் என்றார். நண்பனிருக்க நமக்கேன் கவலை என்பது போல் இரண்டாம்  நாளே ரிப்போர்ட் வந்தது. கொரோனா நெகட்டிவ். மகிழ்ச்சி. ஆனால் குடும்ப மருத்துவர் உடனே ஒரு ஸ்கேன் எடுத்து விடுங்கள் என்றார். மாலை போனோம். மீண்டும் எப்படியோ, மக்களெல்லாம் காத்திருக்க நான் போனதும் பத்து நிமிடங்களுக்குள் என்னை அழைத்தார்கள். ஸ்கேன் எடுத்ததும் ரிசல்ட் மாலை 8 மணிக்குக் கிடைக்கும் என்றார்கள். ரிசல்டிற்காகக் காத்திருந்தேன்.

 

அதற்குள் நண்பர்கள் என் பிள்ளைகளோடும், சென்னையில் பெரிய பதவியில் உள்ள இன்னொரு நண்பனிடமும் கலந்து பேசி பல முடிவுகளை எடுத்துள்ளார்கள். (அந்த “இன்னொரு நண்பன்” படிக்கிற காலத்தில், அதாவது 40 ஆண்டுகளுக்கு முன் எங்கள் வீட்டில் எல்லோருக்கும், அதுவும் என் மனைவிக்குப் பிடித்த விளையாட்டுப் பிள்ளை..) தேவையானால் அரசாங்க மருத்துவ மனையில் சேர்க்க வேண்டும் என்பது சென்னை நண்பனின் பெரிய மருத்துவ நண்பர் கொடுத்த அறிவுரை. மருத்துவம் முடிந்ததும் சென்னைக்குப் பிள்ளைகள் வீட்டிற்குச் சென்றுவிட வேண்டுமென முடிவெடுத்திருக்கிறார்கள்.

 

8 மணியாயிற்று. தகவல் இல்லை. 8.30 மணிக்கு நண்பர்கள் வந்தார்கள். மருத்துவ மனைக்குப் போக வேண்டும் என்று தகவல் சொன்னார்கள். உங்கள் காரில் தானே என்றேன். இல்லை .. ஆம்புலென்ஸ் வந்திருக்கிறது என்றார்கள். கொஞ்சம் பக் என்றிருந்தது. இல்லை .. அதுதான் வழக்கம் என்றார்கள். அத்தனை குறுகிய காலத்தில் ஆம்புலென்ஸை உடனே வரவழைத்தது மட்டுமில்லாமல் சென்னை நண்பன் மதுரை அரசு மருத்துவ மனையில் நோயாளிகளை அனுமதிப்பதை மேற்பார்வையிடும் மருத்துவரிடம் பேசி ஏற்பாடு செய்திருந்தான். சென்றேன்; உடனே அனுமதிக்கப்பட்டேன். மற்றவர்கள் படும் சிரமத்தை நான் உள்ளே சென்ற பிறகுதான் புரிந்துகொண்டேன்.

 

மருத்துவமனைப் பொறுப்பை மூன்றாவது மகன், அதாவது என் மருமகன் எடுத்துக் கொண்டார். சாப்பாடு எடுத்து வருவது, மருத்துவர்களைப் பார்ப்பது … அதெல்லாம் சரி .. ஆனால் மூத்திர பாட்டிலைக் காலி செய்து கொடுப்பதும், கழிவறைக்கு வெஸ்டர்ன் டாய்லட்டிற்கு உரிய நாற்காலையைத் தூக்கி உடன் வருவதும், டையாப்பர் மாட்டி விடுவதும் … அம்மாடி! … அவனின் கன்னத்தை இரு விரல்களால் கிள்ளி ஒரு முறை முத்தமிட்டேன். வேறென்ன செய்ய முடியும் என்னால்!

 

மருத்துவமனையில் சேர்ந்த அடுத்த நாளே ஒரு பெரிய மருத்துவ அதிகாரியிடமிருந்து தொலைபேசி வந்தது. யாரென்று தெரியாமல் கேட்டேன். யார் என்பதைச் சொன்னார். தொடர்ந்து உங்களுக்கான மருத்துவத்தைக் கவனித்துக் கொண்டிருக்கிறேன் என்றார். மதுரையிலுள்ள மாணவி நான் அரசு மருத்துவமனையில் சேர்ந்திருக்கிறேன் என்று தன் வகுப்புத் தோழன் - அவன் இப்போது ஒரு மாவட்ட ஆட்சியர் - தகவல் தெரிவித்திருக்கிறாள். அவன் உடனே இப்படி ஒரு ஏற்பாட்டை செய்துள்ளான். அதன் பின் மனைவியிடம் பேசியிருக்கிறான். ஆனால் அதன் பின் பல நண்பர்கள் நாங்களும் அவரிடம் பேசியுள்ளேன் என்றார்கள். எனக்குக் கொஞ்சம் பயம் தான். அவருக்கே அலுப்பு வந்து விடக் கூடாதே என்று. சில முறை என்னிடம் பேசினார். பேசும் போதெல்லாம் “நீங்களே எல்லாவற்றையும் முடிவு செய்து கொள்ளுங்கள்” என்று கூறினேன்.

 

இன்னொரு பெரிய மருத்துவ அதிகாரியிடமிருந்தும் என்னிடம் சில சமயமும், மருமகனிடம் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசி என் உடல் நிலை முன்னேறி வருவது பற்றி அவ்வப்போது தெரிவித்துக் கொண்டிருந்தார். இந்தக் கவனிப்பும் சென்னை நண்பன் மூலமாகவே வந்தது.

 

ஏறத்தாழ ஒரு வாரம் மருத்துமனை வாசம். மறக்க முடியாத பல கொடூரமான நிகழ்வுகளும் நடந்தன. மறக்க நினைத்தும் முடியாதவைகள். பிறகு தனியே தொகுத்து எழுத வேண்டும்.

 

20.7.20 மருத்துவ மனையிலிருந்து அனுப்பப்பட்டேன். மருமகன் வீட்டிற்கு அழைத்துச் செல்ல வந்தார். காரின் கதவுகளைத் திறந்து வைத்துக் கொண்டு வீட்டிற்குத் திரும்ப வந்து கொண்டிருந்தேன். முகத்தில் வேகமாக வீசிய காற்று சுகமாக இருந்தது. திரும்பி வந்து கொண்டிருக்கிறோம் என்ற நினைவில் அத்தனை மகிழ்ச்சி. எங்கள் புறநகர்ப் பகுதியில் வந்ததும் மகிழ்ச்சி இரட்டிப்பானது. வீட்டிற்கு அருகில் நெருங்கிக் கொண்டிருந்தோம்.

 

முக்கிய வீதியில் வந்து கொண்டிருந்தோம். இதில் இரு வினாடிகள் … சாலை இடது பக்கம் திரும்பியதும் அடுத்த மூன்று வினாடிகள். அவ்வளவே வீட்டிற்கான தொலைவு. அந்தக் கடைசி 5 வினாடிகள். They started moving in slow motion. முதல் இரு வினாடிகளில் “என் வீட்டை”ப் பார்த்தேன். பச்சைப் பசேலென்ற மரங்கள் சூழ்ந்த ஒரு சின்ன வீடு. அதுவும் பெரிய சாலையிலிருந்து பார்க்கும் போது … தனியான ஓரழகுப் பச்சை வண்ணத்தில் கொன்றைப் பூவின் இலைகள் … அவைகளின் ஊடே அத்தனைச் சிவப்பாக கொன்றைப் பூக்கள். இலையும் மரங்களும் அத்தனை அழகூட்டின. கார் இடது பக்கம் திரும்புகிறது … அடுத்த மூன்று வினாடிகளில் பிள்ளைகளும், நண்பர்களும் எனக்காக.. என் நாளைய பொழுதிற்காக எடுத்திருக்கும் முடிவுகள் நினைவுக்கு வந்தன. இது தான் ”என்” வீடு… வாழ் நாளெல்லாம் இங்கு தான் என்று நினைத்து வைத்திருந்த எண்ணங்களை நான் நினைத்ததை விட எளிதாக அப்படியே மறந்து… புறந்தள்ளி விட்டு “அந்த” வீட்டிற்குள் நுழைந்தேன்.

 

வீட்டிற்கு வந்ததும் இன்னும் ஒரு பிரச்சனை -- மூச்சு வாங்குவது. சின்ன வேலை செய்தாலும், நான்கடிகள் நடந்தாலும் மூச்சு வாங்கும். நான்காவது நாள். நானும் பிள்ளைகளும், மனைவியும் உட்கார்ந்து ஒரு flash back ஓட்டினோம். கொரோனா ஆரம்பித்த காலத்தில் எப்படி எந்தப் பிரச்சனையும் இல்லாமல் பக்கத்து வீட்டுக்கார்களின் உதவி பற்றியெழுதியிருந்தேன். ஆனால் இந்தக் கடைசி சில நாட்களில் எனக்குக் கிடைத்த அன்பு என்னை நிச்சயமாக நிலை குலைய வைத்து விட்டது. அதுவும் நண்பர்களின் உதவி… அம்மம்மா … நேரடி உதவி செய்யாவிட்டாலும், தங்கள் குறுஞ் செய்திகள், தொலைபேசி அழைப்புகள்… அதில் இருந்த உண்மையான அன்பு. ஓரளவு என் மாணவர்களின் அன்பு எனக்குப் பழகியது தான். ஆனால் இந்த முறை.. ஆனால் இந்த உணர்வு எனக்கு மட்டுமல்ல… மனைவியும். பிள்ளைகளையும் இந்த உணர்வு உண்மையிலேயே உலுக்கி எடுத்து விட்டது. அப்பாவின் மீது இத்தனை பேருக்கு இத்தனை அன்பா .. என்று பிள்ளைகளே வியந்து நின்றனர். ’என்னோடு பேசும் போது எத்தனைக் கலங்கி பேசினார்கள்’ என்றார்கள்.

 

(என்ன பிரச்சனை என்றால் இதைப் பற்றி கண்ணீர் மல்க பேசி கொண்டிருந்தோமா… - இப்போதெல்லாம் நான் மிக எளிதாக உடைந்து விடுகிறேன் - எனக்கு மூச்சு வாங்க ஆரம்பித்து விட்டது. சில நிமிடங்களே இருக்கும் இந்தப் பிரச்சனை அன்று முடிய ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாகி விட்டது. மருத்துவர்கள் கொடுத்த கடுமையான அறிவுரை : TALK LESS.)

 

 














*