Friday, June 14, 2024

1277. FIFA QUALIFICATION  EURO, 2024ரொம்ப நாளாச்சே கால்பந்து விளையாட்டைப் பார்க்கணும்னு ஒரு நினைப்பு. சேத்ரியின் கடைசிக் கால்பந்தாட்டம் என்பதால் பார்க்கணும்னு ஒரு ஆசை. அதோடு குவைத்தை இந்தியா வென்றால் பிபா அடுத்த ரவுண்டுக்குப் போக வாய்ப்பிருக்கு என்றார்களே .. அதனால் பார்க்கலாம்னு நினைச்சேன்.

நினச்சதெல்லாம் தப்பில்லை; ஆட்டத்தைப் பார்த்ததுதான் தப்பா போச்சு. சரி ..ஒரு international game ஆச்சேன்னு பார்த்தால், ஏகப்பட்ட ஏமாற்றம். செயிண்ட் மேரிஸ் பள்ளியில அந்தக் காலத்தில நாங்க ஆடும் போது பண்ணியதை இன்றைய international ஆட்டக்காரங்க ஆடினாங்க.

அப்போவெல்லாம் நாங்கல்லாம் 11க்கு 11 அப்டின்னா விளையாடினோம்? வர்ரவனெல்லாம் வாடான்னு விளையாடுவோம். பந்து எங்க இருக்கோ அங்க கோலியைத் தவிர எல்லோரும் சுத்தி நின்னு ஆடுவோம். மற்ற இடத்தில ஒரு ஆட்டக்காரனும் இருக்க மாட்டான். இந்த இந்தியா-குவைத் ஆட்டத்திலேயும் ஏறத்தாழ அதே மாதிரி தான் விளையாடினாங்க. பந்து இருக்க இடத்தைச் சுத்தி ஆட்டக்காரங்க. Positional play அப்டின்னு சொல்லுவாங்களே .. அது சுத்தமா இல்லை. Stimac என்ன சொல்லிக் கொடுத்தாரோ தெரியலை.

கால்பந்துவின் விளையாட்டே Positional playதான் அழகா, விளையாட்டைத் தொடர்ந்து பார்க்கும் ஆர்வத்தைக் கொடுக்கும். பந்தை எடுத்து நம்ம பக்கம் வந்தா, கோல் முனையில என்னென்னமோ நடக்கும். ஆவலா பாத்துக்கிட்டு nervous ஆக இருப்போம். பந்து அவுட்ல போகுதுன்னு வச்சுக்குவோம். கோல் கீப்பர் பந்தை அங்கிருந்து எத்துவார். அப்படியே எதிர் முனைக்கு பந்து பறக்கும். அங்கே left wing, right wing-ன்னு நம்ம ஆளுக நிப்பாங்க. அவங்க பந்தை வாங்கிக்கிட்டு எதிரி கோல் பொட்டிக்குள்ள போனா .. நமக்குப் பொங்கிக்கிட்டு வராதா?

 அங்க கொஞ்சம் அமளி துமளி. போன நிமிடம் நம்ம கோல் தாங்குமான்னு தவிச்சிக்கிட்டு இருப்போம்; அடுத்த நிமிடம் அவங்களுக்கு கோல் போட்டிருவோமான்னு துடிச்சிக் கிட்டு இருப்போம். கால்பந்து விளையாட்டு துடிப்போடு ஒவ்வொரு நிமிடமும் இருக்க இதுதானே காரணம். அப்படியேதும் இந்தியா-குவைத் விளையாட்டில் ஏதும் காணோம். நாம் இன்னும் முன்னேற பல படிகள் ஏறணும். அன்று சேத்திரி கூட தனிப்பட்டுத் தெரியவில்லையே. ஆயினும் அவருக்கு என் நன்றிகள். ஓரளவாவது இந்தியாவின் பெயரை கால்பந்துலகில் முன்னெடுத்து வைத்தாரே... அதற்கு என் பாராட்டு. அவரைப் போல் நிறைய சேத்திரிகள் இன்னும் நம் டீமில் வரணும்.


இப்படி ஒரு மேட்ச் பார்த்து ஏமாந்து போய் நின்னேன்னா.. இந்த சமயத்தில் EURO,2024 இன்னைக்கி ஆரம்பமாகுது. 6.30க்கு ஓர் ஆட்டம்; 10.30க்கு இன்னொன்று. முதல் 6.30ஆட்டத்தையாவது அவ்வப்போது பார்க்கணும்னு ஒரு மூட் செட்டாயிருச்சி.

 ரொனால்டோவை விட M.B.A. ஆளு ஒருத்தரு இருக்காரே – Mbappe – உலகக் கால்பந்தாட்டத்தில் மெஸ்ஸி கண்ணுல விரல விட்டு ஆட்டினாரே ... அவரைப் பார்க்க அதிக ஆவல். அவர் பெயரை எப்படித் தமிழில் எழுதணும்னு தெரியல. ஆண்டவரிடம் கேட்டேன். அவரு எம்-பா-பே – எம்பாபே – அப்டின்னு சொல்லிக் கொடுத்தாரு. அவரைப் பார்க்கணும்.

வரட்டா ...Sunday, May 26, 2024

1276. லவ்வர் ... திரைப்பட விமர்சனம்


**

ஜெய்பீம், குட்னைட்  படங்களுக்குப் பிறகு லவ்வர் படம் பார்த்தேன். நினைத்தபடி கதையை முடித்த விதம் பிடித்திருந்தது.

காதல் உன்மத்தம் தலைக்கேறிய இளைஞனின் ஏறத்தாழ ஒரே மாதிரியான எதிர் வினைகளை வைத்தே ஒரு படம் எடுத்திருந்தாலும் திரைக்கதையை அலுக்காமல் கொண்டு சென்ற இயக்குநருக்குப் பாராட்டுகள்.

இப்போது வரும் படங்களில் “ex” என்ற பதம் அடிக்கடிப் பயன்படுவதைப் பார்க்கும் போது காதல் தோல்வியால் தாடி வளர்க்காமல் “break up” என்பதைத் தாண்டி இளைஞர்கள் எளிதாகச் செல்லும் “நல்ல” வழியைக் காண்பிக்கும் நல்லதொரு நாகரிக முன்னெடுப்பு என்றே நினைக்கின்றேன்.

விஜய் சேதுபதியிடமிருந்து விலகி மெல்ல மணிகண்டனை நோக்கி நடை போட ஆரம்பித்திருக்கிறேன்.
Thursday, May 23, 2024

1275. சில பல திரைப்படங்கள் ....*

நான்கைந்து நாட்கள். வேலை ஏதும் செய்யாமல் அக்கடாஎன்று படுத்துக் கிடந்தேன். ஆனாலும் அப்படியே சும்மாவா படுத்திருக்க முடியும். இருக்கவே இருக்கு ..OTTக்கள் வா ... வா என்று அழைத்துக் கொண்டே இருந்தன. இரண்டு, மூன்று படங்கள் முழுதாகவும்,… சில “சில்லறைப் படங்களைஅரை குறையாகவும் பார்த்து நொந்து கொண்டேன்.முழுதாகப் பார்த்த முதல் படம் ஒரு வெப்சீரீஸ். வசந்த பாலனின் “தலைமைச் செயலகம்”. முதல் இரண்டு மூன்று எபிசோடுகளைப் பார்த்ததும் உடனே எழுந்து போய் முக நூலில் நல்லதாக நாலு வார்த்தை எழுதிட்டு வரணும்னு ஓர் உந்துதல். முதல் சீனிலேயே ஒய்ட் ஆங்கிள் ரவிச்சந்திரன் படத்தோடு ஒட்ட வைத்து விட்டார். ஹீரோ ஆடுகளம் கிஷோர்; கதாநாயகி எனக்குப் பிடித்த இரு நடிகைகளில் ஒருவரான ஷ்ரேயா ரெட்டி (வெயில் படத்திலிருந்தே …) இருவரின் தோற்றமே நன்கிருந்தது. இருவரும் கண்களால் தங்கள் நடிப்பைக் கொண்டு வந்தது போலிருந்தது. நான்கைந்து எபிசோடுகள் அலுப்பில்லாமல், நன்றாக சென்றது. கடைசி மூன்று,நான்கு எபிசோடுகளை எப்படி முடிப்பது என்று தெரியாமலோ, திரைக்கதை எழுதுவதிலோ ஒரே குழப்படி  செய்து, நம்மை வைத்து செய்து விட்டார்கள்’.  நன்றாக ஆரம்பித்து இறுதியில் சொதப்பலாக,  சோக அவியலாக முடிந்த சோகம் அந்தப் படம். ஆனாலும்  பல மாதங்கள்/ ஆண்டுகளுக்கு முன்பு ஏறத்தாழ இதே மாதிரியான இன்னொரு படம் ஓடிடியில் பார்த்தேன். அது சிவகாசி என்று நினைக்கின்றேன். அதில் பரம்பரையாக இருந்த ஓர் அரசியல் குடும்பத்தை வைத்து இதே போன்ற கதையாக்கத்தோடு – அரசியல்வாதி அப்பாவை மகளோ மகனோ கொன்றுவிடும் கதையாக – பார்த்த நினைவு வந்தது. முதலில் பார்த்த அந்தப் படமே பரவாயில்லை என்று இப்போது தோன்றுகிறது. அழகாக ஆரம்பித்து தடுமாறி முடித்து விட்டார், ஜெமோ இதற்கு அதிகமாகப் பங்கு கொடுத்த்திருப்பார் போலும்.

 


இந்தப் படத்திலிருந்து தப்பி இன்னொரு படத்திற்குத் தாவினேன். தங்கர் பச்சானின் படம். :கருமேகங்கள் கலைகின்றன” தலைப்பெல்லாம் நன்கு கவித்துவமாகவே இருக்கிறது.  பாரதி ராஜா கதாநாயகன். யோகி பாபு துணைக் கதாநாயகன். எஸ்.சி (அதாவது தளபதி விஜய்யின் அப்பா),  கெளதம் வாசுதேவன், அதிதி பாலன் ... என்று ஒரு பெரிய பட்டாளம்.  பாரதி ராஜாவிற்கு ஒரு கதை; யோகிபாபுவிற்கு இன்னொரு கதை; வாசுதேவனுக்கு ஒரு கதை ... என்று பல துணைக்கதைகளை வைத்து மகாபாரதம் போல் ஒரு நீண்ட படம். இதில் ஏதாவது ஒரு கதை – பாரதி ராஜாவின் கதை மட்டும் – வைத்து ஒரு படமெடுத்திருந்தால் உட்கார்ந்து பார்த்திருக்கலாம்.

 

THE TRAIN என்று ஓர் ஆங்கிலப்படம். WW II காலத்துப் படம். பிரான்சிலுள்ள பெரும் ஓவியர்களின் படங்களையெல்லாம் அள்ளிக் கொண்டு செல்ல நினைக்கின்றார் ஒரு ஜெர்மானிய அதிகாரி. அதைத் தடுத்து நிறுத்தி தங்கள் நாட்டின் கர்வத்தையும். பெருமையையும் காப்பாற்றுகிறார் கதாநாயகன்Burt Lancaster, எப்படி ரயிலை டைரக்ஷன் மாத்துனாங்கறது மட்டும் புரியலை. ஆனா படம் நல்லா இருந்தது.

இதோடு நிறுத்தியிருக்கலாம். THE BOYS அப்டின்னு ஒரு தமிழ்ப்படம் ஓடிடியில். யாரோ செந்தில்குமார் அப்டின்னு ஒரு தயாரிப்பாளராம். காசு எப்படியோ வந்திருக்கும் போலும், அதைக் கண்டபடி செலவு பண்ணியாகஆணும்னு ஒரு வரம் வாங்கிட்டு வந்திருக்கார் போலும். அதுக்காக இப்படி ஒரு படம் எடுத்து ... கடவுளே ... தாங்கலடா சாமி.

இன்னும் இது மாதிரி ஓடிடியில் சில தமிழ்ப்படம் முயற்சித்து,தப்பித்து ஓடி வந்துட்டேன். பலரும் தமிழில் ஓடிடியில் காசை தர்ப்பணம் செய்யவே படம் எடுக்கும் பரிதாபத்தையும் பார்த்தேன்.

 


Wednesday, May 15, 2024

1274. ஆவேசம்னு ஒரு படம் ...


ஏதோ ஒரு மலையாளப் படத்தில் பகத் பாசில் (அப்போது அவரைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது) ஒரு narcist-ஆக, தன் அழகைத் தானே ஆராதிக்கும் ஒரு பார்பராக வருவார். அதில் முதல் கட்டத்தில் அவர் தன்னையே ஒரு கண்ணாடியில் பார்த்துக் கொண்டு,  கண்ணாடியிலிருந்து விலகி ஓரிரு அடி எடுத்து வைத்து, பின் மீண்டும் கண்ணாடிக்குச் சென்று தன் மீசையை ஒதுக்கிக் கொள்வார். சில வினாடிகள் வந்த அந்த சீன் எனக்கு மிகவும் பிடித்தது. சரியான நடிப்பு அரக்கன்என்று அன்று நினைத்தேன்.

இது ஒரு பழைய கதை.

புதிய கதை என்னன்னா ... இன்று ஆவேசம்என்று ஒரு தர்த்தி படம் பார்த்தேன். சும்மானாச்சுக்கும்எடுத்த ஒரு படமாகவே எனக்குத் தோன்றியது. ஆனால் மதிப்பிற்குரிய இரு நண்பர்கள் இந்தப் படத்தை ஆஹா ... ஓஹோ என்று புகழ்ந்திருந்தனர். அதிலும் பெரிய எழுதாளராக ஆக வேண்டிய ஒருவர் -இன்று வரை வெறும் பதிவராக மட்டுமே இருக்கிறார் – பகத்தை ஒரு நடிப்பு ராட்சசன் என்றும் அழைத்துப் புகழ்ந்திருந்தார். அடி வயித்திலிருந்து ஏறத்தாழ ஒரு பத்து தடவை காட்டுத் தனமாக உச்சஸ்தாயில் கத்தினார் பகத். அதையெல்லாம் நடிப்பின் உச்சமான்னு எனக்குத் தெரியலை .. புரியலை ...

அதோடு எனக்கு ஒரு பெரிய சந்தேகம். இது ஒரு டான் படமா? அல்லது காமெடி படமா?   இன்னும் சந்தேகம் தீரவில்லை.

இன்னொரு சந்தேகமும் வந்தது, இந்த இரு பூமர் அங்கிள்களுக்கு மிகவும் பிடிக்கிற இந்தப் படம் pre-boomer தாத்தாவான எனக்குப் புரிபடவில்லையோன்னு ஒரு சந்தேகம்.

படமா இது? சோதித்து விட்டார்கள்.

மன்னித்துக் கொள்ளுங்கள். பூமர் அங்கிள்களே ..!

Tuesday, May 14, 2024

1273. தனிநபர் நாடகம்: "க"வின் "ஜ"

அமெரிக்கன் கல்லூரி பழைய மாணவர் குழு ஒரு விசித்திரமான தலைப்பு கொண்ட ஒரு நாடகத்தைத் தொடர்ந்து நடத்தி வந்தார்கள் என்பது தெரியும். அது  மதுரையில் நடந்து கொண்டிருந்தது என்பதும் தெரியும். ஆனால் திடீரென சென்னையில் நடக்கிறது என்றும், அதுவும் என் இருப்பிடத்திற்கு  அருகிலேயே நடக்கிறது என்று தெரிந்ததும்,  “பல சீரியசான திட்டங்கள்” தீட்ட ஆரம்பித்தேன். வயதைக் காரணம் காட்டி  குடும்பம் ஏறக்குறைய வீட்டுச் சிறையில்’  வைத்து விட்டார்கள். இரண்டு மணி நேரம் அதிலிருந்து தப்பிப்பதற்காக, காலையிலிருந்தே  வீட்டில் நல்ல பிள்ளையாகநடக்க ஆரம்பித்து, மாலையில் அப்போதுதான் அந்த விளம்பரத்தைப் பார்த்தது போல் நடித்து ... ஒரு வழியாக அமெரிக்கன் கல்லூரியின் மீது பாரத்தைப் போட்டு, அவர்கள் நடத்தும் ஒரு சிறு கூட்டம் என்று சொல்லி, (நாடகமெல்லாம் இந்த வயதில் போய் பார்க்கணுமா? என்று கேள்விக்கணைகளுக்கு அஞ்சி...) புறப்பட்டுப் போனேன். சரியான நேரத்தில் இடத்தைக் கண்டுபிடித்து முதல் ஆளாகப் போனேன். நல்ல வேளை மற்றவர்களும் விரைவில் வந்து சேர நாடகம் ஆரம்பமானது.கவின் ஜ ”என்பது நாடகத்தின் தலைப்பு. தலைப்பே வித்தியாசமானது தான். அதுவும் முழு நீள நகைச்சுவை தனிநபர் நாடகம் என்று விளம்பரம் கூறியது. ஒரு விஷயத்தை உடைத்து விடுகிறேனே ... தலைப்பை முழுவதுமாக விளக்கி விடுகிறேன். “கந்தவேலின் ஜட்டி”  என்பதே முழுத் தலைப்பு. நாமெல்லோரும் நம் உள்ளாடைகளை அதன் பெயரை வெளிப்படையாகச் சொல்வதே வெகு unparliamentary . என்றல்லவா நாம் நாகரிகமாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆகவே முதலில் சில நிமிடங்களில் ரொம்பவுமே கஷ்டப்பட்டு கந்தவேல் ஜட்டி” என்ற சொல்லை மிகவும் வெட்கப்பட்டுக் கொண்டே சொல்கிறார். 


இந்த நாடகத்தை நான் முழுவதுமாகச் சொல்லி அதன் நயத்தைக் கெடுக்க விரும்பவில்லை. ஆனால் விளையாட்டுத் தனமாக ஆரம்பித்து... மெல்ல மிகவும் முக்கியமான, ஆழமான காம வக்கிரங்களை நோக்கி கதை நகர்கிறது. இறுதியில் கந்தவேல் ஒரு கடிதம் வாசிக்கிறார். ஒரு பெண்ணின் தந்தையான அவர் தன் பெண்ணை நினைத்து அஞ்சி, ஆண்களின் வக்கிரப் புத்திக்கான காரணங்களை நம் முன் வைக்கின்றார்.  கேள்வியும் பதிலுமாக நாடகம் ஒரு serious tone-ல் முடிகிறது.
ஆனந்த குமார் தனி நபராக நிறைவாக நடித்துள்ளார். இறுதியில் கலங்கும் கந்தவேல் நம்மையும் கலங்க வைத்து விடுகிறார்.
இளம் பிள்ளைகள் இந்த நாடகத்தைப் பார்ப்பது பல் நல்வினைகளை விளைவிக்கும் என்றே நம்புகிறேன்.நண்பர்கள் பாஸ்கர், சுதன் எடுத்த படங்களுக்கு நன்றி.

பி.கு. அதென்னவோ, அமெரிக்கன் கல்லூரி மாணவர்களுக்கு அந்தக் கல்லூரிமேல் எப்போதுமே  அத்தனை காதல்!  நாடகம் நடந்த அறையில் பெரும் நடிகர்கள் சிலரின் புகைப்படங்கள் அலங்காரமாக மாட்டப்பட்டிருந்தன. அத்னோடு எங்கள் கல்லூரியின் கலைரசனையோடு கட்டப்பட்டுள்ள மணிக்கூண்டின் படமும் அவைகளோடு தொங்கியதில் அந்தக் காதல் வெளிப்பட்டது. மகிழ்ந்தேன். அதனை வீடியோவாக எடுத்தேன். பதிந்திருக்கிறேன்.


Sunday, February 25, 2024

1272. Samson and Delilah (1949) Samson kills a hundred men with the jawbone of...

Tuesday, January 16, 2024

1272. SAMSON AND DELILAH vs LEO

எந்த ஆண்டு அந்தப் படம் வந்தது என்று ஆண்டவரிடம் கேட்டேன். 1949 என்று போட்டிருந்தது. அதாவது எனக்கு நாலைந்து வயது. ஆனாலும் பாருங்க ... அந்தப் படத்தை ரொம்ம்ம்ம்ப சின்ன வயசில பார்த்திருக்கிறேன். எப்போ படம் இந்தியாவிற்கு வந்ததோ... நான் எங்கு, யாருடன் அந்தப் படத்தைப் பார்த்தேனோ என்பதெல்லாம் நினைவில் இல்லை. சின்ன வயதில் பார்த்த ஒரு படம். ஒருவேளை பைபிள் படம் என்பதால் பள்ளியில் காண்பித்திருக்கலாம்.(ம்ம்... அதற்கு வாய்ப்பில்லை.) எப்படியோ அந்தப் படத்தை அன்னாளில் பார்த்தேன்.


https://youtu.be/yMo3DL_KkHE?si=dl0b261hgoUwe0O7

அந்த சாம்சன், நம்ம கர்ணன் மாதிரி தன் சக்திகள் அனைத்தையும் தன் தலைமுடியில் வைத்திருந்தாராம். அதை வெட்டிட்டா அவரை எதிரிகள் அடித்து வீழ்த்த முடியும், டிலைலா  “முடிவெட்டும்” சீன் இன்னும் நினைவில் இருக்கிறது. இருந்தாலும் அவர் ஹீரோ அல்லவா... அதுனால் முடி போனாலும் முடிவில் ஹீரோ தான் ஜெயுக்கணும்.  கடைசியில் அவர் எதிரிகளோடு சண்டையிடுவார். அதில் நினைவில் இருப்பதெல்லாம், அவர் கையில் கழுதை அல்லது கோவேறிக் கழுதையின் கீழ்த்தாடை எலும்பு இருக்கும். அது மட்டுமே அவரது ஆயுதம். மயிரும் ஏற்கெனவே போய் விட்டது, இருந்தாலும் அந்த எலும்பை வைத்து எதிரிகளை அடித்துத் துவம்சம் செய்து விடுவார். அடின்னா அப்படி ஒரு அடி அடித்துக் கொல்லுவார்.

https://www.youtube.com/watch?v=yMo3DL_KkHE

அசந்து பார்த்தது அந்தக் காலம் அப்டின்னு நினச்சுக்கிட்டு இருந்தப்போ பொங்கலுக்கு லியோ படம் போட்டாங்க. அது ஒரு மூணு நாலு மணியளவில் ஓடுமா... நல்ல வேளை .. படம் பார்க்கிறப்போ பொங்கல் வாழ்த்து சொல்லி, கதையடிக்க மூணு நண்பர்களின் தொலைபேசி அழைப்பு வந்தது.  அப்பப்போ mute போட்டு பேசினேன். அப்போவெல்லாம் சில வெவ்வேறு மாநில ஊர்களின் பெயர்களின் ஸ்லைடுகளும் வந்திச்சு. அதையெல்லாம் வச்சி நானோ ஒரு கதை உண்டாக்கிக் கிட்டேன். 

அதிலும் பிக்பாஸ் ஜனனி, மாயா இவங்கல்லாம் ஒத்த ஒத்த சீனுக்கு வந்தாங்க... எதுக்கு வந்தாங்கன்னு தெரியலை. அப்புறமா காணாம போய்டுறாங்க. திரிஷா எங்கேயோ போய் டிடக்டிவ் வேலை செய்றாங்க. இப்படியெல்லாம் போச்சா ... கடைசி சீன் வந்திருச்சா .... அதுல, சாம்சன் கையில் கழுதையின் தாடை எலும்புன்னா இங்க பார்த்திபன் அலையாஸ் லியோ - அதாவது விஜய் அண்ணா - கையில் ஒண்ணறை இஞ்சி சைசில் சின்னப் பேனா கத்தி மட்டும் இருந்தது. ஆனால் mortality rate இன்னைய படத்தில் அதிகம். ஏறத்தாழ ஐநூறு பேரை அந்த ஒண்ணரையணா... இல்லைங்க .. ஒண்ணறை இஞ்ச் கத்தியே வச்சி அத்தனை பேரையும் வெட்டிச் சாய்ச்சிட்டார் விஜய் அண்ணா.

சாம்சன்னை விட நம் விஜய் அண்ணாதான் பெட்டர்.


Friday, January 12, 2024

1271. kathal, the core #dharumispage

1270 . சென்னைப் புத்தக விழாவில் இரண்டாவது புத்தகம் - சூத்திரர்

இந்த நூலுக்கு “சூத்திரன்” என்றே பெயர் வைக்க விரும்பினேன். அந்தச் சொல்லே சூத்திரர்களைக் குத்தும் என்று நினைத்தேன்; அதையே விரும்பினேன். ஏனெனில், இந்த நூலை வாசிக்கும் போதே என்னை நானே நொந்து கொண்டேன்.... இத்தனை ஆயிரம் ஆண்டுகளாக நான் ஏன் சுத்தமாக சுய மரியாதை இல்லாமல் இருந்து தொலைத்தேன். (இங்கே நானென்பது என் மூதாதையரையும் சேர்த்து அனைத்து சூத்திரன்களையும் ஒன்று சேர்த்தே சொல்கிறேன்.) சில ஆண்டுகள், சில நூற்றாண்டுகள் என்றாலும் பரவாயில்லை. ஆனால் அன்றிலிருந்து இந்த வினாடி வரை கூனிக் குறுகி, சுயமரியாதை என்றால் என்னவென்று தெரியாமல், அறியாமல், புரியாமல் இருந்திருக்கிறேனே என்று நினைத்துக் கொண்டே இந்த நூலை வாசித்தேன். நூலில் கொடுத்துள்ள உண்மைகள் அத்தனை வன்மையானவை; உண்மையானவை; உணர்ந்து படிக்க வேண்டியவை.

சூத்திரன் என்று நம்மை ஒதுக்கி வைத்த மக்களும் இதைக் கட்டாயம் வாசித்தாக வேண்டும். ஒரு வேளை இத்தனைக் கொடுமையானவர்களா நாம் என்ற கேள்வியும், மனிதத்தன்மையிலிருந்து எவ்வளவு விலகிப் போய்விட்டோம் என்பதை அவர்களும் இந்நூலை வாசிக்கும்போது (ஒருவேளை) உணரலாம்.

கட்டாயம் வாசிப்போம் .... திருந்துவோமா என்பது அதற்கடுத்த நிலை !!!


Wednesday, January 03, 2024

1269. வெங்காயத்தை உறிச்சிப் பாத்தாச்சு ...

வெங்காயத்தை உறிச்சிப் பாத்தாச்சு ... 

 

கடந்த சில மாதங்களாகவே இந்த மூட் நன்றாக வந்து என்னை இறுக்கிப் பிடித்துக் கொண்டு விட்டது. பற்றாததற்கு ஏற்றாற்போல் பேரா. முரளியின் காணொளி ஒன்றையும்  பார்த்தாகி விட்டது.


 அந்தக் காலத்தில் ஆங்கில தினசரிக்குத் தான் அதிக முக்கியத்துவம் கொடுப்பதுண்டு.இப்போதெல்லாம் தமிழ் நாளிதழுக்குக் கொடுக்கும் நேரத்தில் கால்வாசி கூட ஆங்கில நாளிதழ்களுக்குக் கொடுப்பதில்லை. ஆங்கில நாளிதழை நிறுத்தி விடலாமாவெனவும் தோன்றுகிறது.

செய்திகளைப் படிப்பதில் எந்த வித அக்கறையும் எடுக்க முடிவதில்லை. உக்ரைன்.. பாலஸ்தீன் ... எல்லாம் சுடச்சுட படித்து சோர்ந்து போயாச்சு. அயல்நாட்டு விவகாரம்தான் இப்படி இருக்கிறதென்றால் உள்நாட்டு விவகாரமும் அலுத்துப் போச்சு. அடுத்தது மோடிதான் என்ற பின் எந்த மனுசனுக்குத் தான் அலுப்பு வராமல் போகும்?

மாநிலத்திற்குள், அடுத்து மகனை அரியணையில் அமர வைப்பதற்காகவே இந்த முறை அதிக ஊழல் இல்லாத அரசு அமையும் என்று நம்பிக்கொண்டிருந்தேன். அதுவும் போச்சு. வேற கட்சி ஏதுமிருக்கான்னு தேடின்ன போது பல காமெடியன்கள் வரிசை கட்டி நிற்கிறார்கள். அட எடப்பாடி முதலமைச்சராக ஆகணும்னு ஆசைப்படுறாரா ...சரி .. அவரு பக்கமும் ஆளுக நிக்கிறாங்களேன்னு நினச்சி உட்டுவிடலாம். அது போதாதுன்னு சசிகலா சித்தி, டி.வி. தினகரன், ஓ.பி.எஸ். என்றொரு வரிசைன்னா ... புதுவரிசை இன்னொண்ணு ஆரம்பிச்சிருக்கு. அதிலேயும் எனக்கு சரத்குமார் சாரை ரொம்ம்ம்ம்ப பிடிச்சு போச்சு. ஏன்னா அவருக்கு அந்தப் பதவி மேல ஒண்ணும் ஆசையில்லையாம். ஆனா அவரு wife  ரொம்ப ஆசைப்படுறாங்களாம். அதோடில்லாமல் அவங்க மாமியாரும், ‘மாப்பிள்ள .. நீங்க இன்னும் முதலமைச்சராக ஆகலையான்னு கேட்டு அல்லாடிக்கிட்டு இருக்காங்களாம். இது பத்தாதுன்னு புதுசா இன்னொரு ஹீரோயின் வந்திருக்காங்க. புருசன் செத்த நாளை இந்த நல்ல நாளில் ...அப்டின்னு பேசுறாங்க. எல்லோரும் வாங்க ... நம்ம வீடு புழங்கிரும் ...

தனிப்பட்ட வாழ்க்கையிலும் சிக்கல் ஏதும் இல்லாவிட்டாலும் வயது ஒரு அச்சத்தைக் கொடுக்குது. என்ன ... வயசானவங்க எல்லோரும் சிக்கல் இல்லாம போய்ச் சேரணுமேன்னு ஒரு கவலையோடு இருப்பாங்க. அத லிஸ்ட்லயும் சேர்ந்தாச்சு.

வாழ்க்கையைப் பிரிச்சிப் பார்த்தா அர்த்தமே இல்லையோன்னு தோணுது. வெங்காயம் .. பிரிச்சிப் பார்த்தா ஒண்ணுமேயில்லை. (இதோ ..  இன்று .. டிசம்பர் 31. இரவு 12 மணி. மக்கள் வேட்டெல்லாம் போடுறாங்க. சத்தம் காதில் விழுது. கமல்ஹாசன் பாட்டு ஒண்ணும் காதில் இதுவ்ரை விழவில்லை.) யோசிச்சி பாருங்க. நேத்து டிசம்பர் 31. இன்று ஜனவரி 1. இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? என்ன மாற்றம்? ஒரு மண்ணுமில்லை. ஆனா ஏன் ஆடுறோம்... பாடுறோம். எதுக்கு? (போன வருஷம் வேட்டுப் போட்டு, பாட்டு பாடினோம்ல ... அதைத் திருப்பிச் செய்யணும்ல!)

மேலே போட்ட காணொளியைப் பாருங்க. பெரிய தத்துவஞானியாம். இதைத்தான் சொல்லியிருக்கிறார். ஆனா அத கேக்குறதுக்கு முந்தியே இதையே அடிக்கடி நினச்சிருக்கேன். ஏதோ எப்படியோ (??) வந்து பிள்ளையா பிறந்தோம் ... வளர்ந்தோம் .. யாரும் வளர்க்காமலேயே – அப்பா, அம்மா சோறு போட்டு வளர்க்கிறதைச் சொல்லலை – நமக்குன்னு ஒரு பண்பியல் – character - நம்மோடு வளர்ந்தது. நாம் நல்லவானா கெட்டவனா வளர்ந்ததற்கு வேறு யாரும் பொறுப்பில்லை... நாம மட்டும் தான் பொறுப்பு. நல்லவனாகவே இருந்து நல்லாவே செத்துப் போனாலும் ... போனபிறகு .. என்னதான் நமக்கு நடக்குது? அட கொஞ்சம் பேரு புகழ் அப்டின்னு ஏதோ ஒண்ணை சேர்த்தாலும்... செத்த பிறகெல்லாம் அதனால் யாருக்குத் தான் லாபம்? ஒண்ணும் புரியலைங்க ... அர்த்தங்கெட்ட வாழ்க்கைன்னு சொல்லுவாங்களே ... அதுவா இது?

உரிக்க உரிக்க வெங்காயம் ... ஒண்ணுமேயில்லாம தான போகும்! இல்ல ...? பற்றின்றி போகணுமோ? அப்படி சிலர் சொல்றாங்க.கட்டுப்பட்ட ஒரு சமூகத்தில் அப்படியும் இருக்க முடியாது.

WHAT DO I MISS? OR, DO WE ALL MISS SOMETHING?