Sunday, March 22, 2015

827. அட .. போங்கப்பா .. நீங்களும் உங்க சூப்பர் சிங்கரும் ....


*


சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை ஆச்சரியத்தோடு பார்த்தது உண்டு. இம்புட்டு திறமையான்னு ... ஆனால் வல்லவனுக்கு வல்லவன் இருப்பாங்க போலும். muziklounge அப்டின்னு ஒரு பாட்டுப் பள்ளிக்கூடம் ஒண்ணு இருக்கிறது போலும். அதன் மாணவர்கள் பாடிய இரண்டே இரண்டு பாட்டு கேட்டேன். என்னமா பாடுறாங்க... இவங்க திறமையோடு பார்க்கிறப்போ சூப்பர் சிங்கர்ல ஜெயிச்சவங்க திறமை அதிகமில்லை.

சூப்பர்ல ஜெயிச்சவங்கள்ள அதிகமாக அதன் பிறகு வெளிச்சத்திற்கு வந்தது மாதிரி தெரியவில்லை. முதல் தடவை வந்த மாத்யு என்ன ஆச்சு? அஜேஷ் ஒரு அரை பாட்டு மட்டும் பாடியது மாதிரி இருந்தது. பின் ஆளைக் காணோம். கடைசியா வந்த திவாகர் என்ன ஆச்சுன்னு தெரியலை. ஊதாக்கலரு ரிப்பன் பாட்டு பாடுன பையன் முதல் ஆளாக போட்டியில வரலை. ரொம்ப நல்லா பாடின அல்காவைப் பற்றி அதற்கு மேல் தெரியவில்லை. பரிசு வாங்கினாலும் பின்னணி பாடகர் ஆவதற்கு ’அதற்கு மேலும்’ போவது எப்படி?

எது எப்படியோ... muziklounge போட்டிருக்கிற youtubeல் வர்ர நான்கு பாடகர்கள் பக்கத்தில் - except அல்கா - சூப்பர் சிங்கர் பாடகர்கள் பக்கத்தில கூட வர முடியாது. என்னமா பாடுறாங்க....

சச்சினும், அந்த சின்னப் பொண்ணும் - அஸ்வதி ராஜ் -  நல்லா பாடுறாங்க ... அதிலும் அந்த சின்னப் பொண்ணு பாடும் போது அட... யார் யாருக்கெல்லாம் 60 லட்சம்..70 லட்சம்னு வீடு கொடுக்கிறாங்களேன்னு தோணுச்சி ... * *

*

இப்படி ஒரு வித்தகரா? எந்த குருவும் இல்லாமல் பல வகை கம்பி வாத்தியங்களை வச்சி விளாசுகிறாரே.... வித்தகர் தான் .........*

Saturday, March 14, 2015

826. RELIGULOUS - ஒரு ஆவணப்படம்.

*
எப்படியும் இருபது முப்பது குறுந்தகடுகள் ... இறக்கி வைத்த சாப்ட் காப்பிகள் ... என்று நாற்பது ஐம்பது  திரைப்படங்கள் கைவசம் இருக்கின்றன. பார்ப்பதற்காக வாங்கியது ... இறக்கியது.

படம் பார்க்க நேரமே கிடைக்க மாட்டேங்குது! ஒய்வுக் காலத்திலும் அத்தனை பிசி!!

ஒரு படம் ... இறக்கி வைத்தது. எப்போது, எதற்காக இறக்கி வைத்தேன் என்பதே மறந்தே போச்சு. ஆனாலும் நம்ம தொகுப்புல அர்த்தம் தெரியாத ஒரு தலைப்பு இருந்தது இந்த ஒரு படம் தான். சரி ... மொதல்ல அர்த்தம் பார்ப்போமேன்னு அகராதி எடுத்துப் பார்த்தேன். அப்படி ஒரு வார்த்தையும் இல்லை. சரின்னு படம் பார்க்க ஆரம்பித்தேன். அது திரைப்படம் இல்லை. ஒரு ஆவணப் படம். கொஞ்ச நேரம் கழித்து தான் தலைப்பு புரிந்தது.

RELIGION + RIDICULOUS = RELIGULOUS!!!

 அழகான தொகுப்பு ... அர்த்தமுள்ள தொகுப்பு ... பார்க்க ஆரம்பித்ததும் நிறுத்த முடியவில்லை, அத்துணை interesting .... 

படம் பார்த்து முடிந்த பிறகுதான் படத்தைப் பற்றிய விவரங்களை கூகுளாண்டவரிடம் கேட்டேன். தலைப்பு பற்றியும் போட்டிருந்தது.  LARRY CHARLES என்பவர் இயக்கியுள்ளார்; BILL MAHER என்ற நகைச்சுவை நடிகர் பலரை நேர்காணல் செய்கிறார். படம் திரையிடப்பட்டு மிக வெற்றிகரமாக, நல்ல லாபத்தோடு ஓடியிருக்கிறது.

மூன்று ஆபிரஹாமிய மதங்களைச் சார்ந்த பலரைக் கேள்விகள் கேட்டு, அவையெல்லாம் அழகாகத் தொகுக்கப்பட்டு,  அர்த்தமுள்ள முடிவுகளோடு இருந்தது. எப்படி நம்புக்கையாளர்கள் தங்கள் நம்பிக்கை என்ற ஒரு கோட்டின் ஒரு பக்கமே நின்று விடுகிறார்கள் என்று மிகத் தெளிவாகக் காண்பித்துள்ளார். தங்கள் மதங்களின் “ஓட்டைகளைக்” கண் திறந்து பார்க்காமல்  நம்பிக்கையாளர்கள் எப்படி மிக அழகாகக் கடந்து சென்று விடுகிறார்கள். வரலாற்று  உண்மைகளைக் கூட நம்பிக்கையாளர்கள் கண்டுகொள்வதில்லை. விஞ்ஞான உண்மைகளா..... என்று எப்படி ஒதுங்கிப் போய் விடுகிறார்கள்!! 

தொய்வில்லாமல் இந்த மூன்று மதக்காரர்களைச் சந்தித்து, நகைச்சுவையோடு விவாதித்து செல்வது ஒரே மூச்சில் ஆவணத்தைத் தொடர்ந்து பார்க்க வைத்து விடுகிறது.

ஒரு பெரும் மகிழ்ச்சி ....  மதங்களைப் பற்றி நான் எழுதிய பல கருத்துகள் இந்த ஆவணப்படத்திலும் இடம் பெற்றன. சில விவாதங்கள் வார்த்தைக்கு வார்த்தை அப்படியே இருந்ததாகத் தோன்றியது. 

சில முத்தான முடிவுரைகள்:

In U.S. 12% are non- believers. 

So many gods (!!) were born on 25th December !!!
 
So many gods (!!) were born from virgins!!The plain fact is 
Religion must die
For mankind to live.

Faith means making a virtue out of not thinking.

Religion is dangerous because it allows human feelings who don't have the answers to think that they do.

Those who preach faith and enable and elevate it are our intellectual slaveholders keeping mankind in a bondage to fantasy and nonsense that has spawned and justified so much lunacy and destruction.

RATIONAL PEOPLE. ANTI-RELIGIONISTS, MUST END THEIR TIMIDITY AND COME OUT OF THE CLOSET AND ASSERT THEMSELVES.

                                            YES, I AM OUT OF THE CLOSET AND ASSERTIVE!!! *

Tuesday, March 10, 2015

825. INDIA'S DAUGHTER

*INDIA'S DAUGHTER - Leslee Udwin எடுத்த, B.B.C.யில் வெளியான செய்திப் படத்தைப் பார்த்தேன். நல்ல தொகுப்பு. ’ஜோதி’ என்ற அந்தப் பாவப்பட்ட, கற்பழிக்கப்பட்ட  பெண்ணின் தந்தையும், தாயும் தரும் செய்திகளும், ஏனைய செய்தித் தொகுப்புகளும் கரிசனையோடு படமெடுக்கப்பட்டுள்ளன. நல்ல முனைப்போடும், திறந்த மனத்தோடும் எடுக்கப்பட்ட ஆவணத் தொகுப்பு. இதை ஏன் தடை செய்ய வேண்டும் என்பதற்கான காரணம் என்ன என்றே தெரியவில்லை.


படிக்காத தற்குறித்தனமான முகேஷ் என்ற ஒரு குற்றவாளியின் வாக்குமூலம் ஒன்று உள்ளது. அதற்காகத்தான் இந்த தடை என்று செய்திகளில் படித்ததாக நினைவு. அவனைப் பொறுத்த வரை அவனும் அவன் சமூகமும் பெண்களுக்குத் தரும் கேவலமான ஒரு நிலையை அவன் தன் வாக்குமூலத்தில் நிலை நிறுத்துகிறான். பெண்ணுக்கென்று சுதந்திரம் ஏதும் இல்லை. ஆண் படு என்று சொன்னால் பெண் உடனே படுக்க வேண்டும் என்ற கருத்தியலில் வாழ்ந்தவன். அதுதான் அவனது வாக்குமூலத்தில் வருகிறது. அவனைக் குறை சொல்லி என்ன பயன். அவன் வாழ்ந்து வரும் வாழ்க்கை அப்படி.


ஆனால் படித்து, பட்டம் பெற்று குற்றம் செய்தவர்களுக்கு ஆதரவாக இந்த வழக்குகளை நடத்திய இரு கபோதியான வழக்கறிஞர்களை என்னவென்று சொல்வது? real f***** lawyers. அவர்கள் தத்துவங்களையும், விவாதங்களையும் கேட்ட போது, குற்றவாளிகளுக்கு முன் இவர்களுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்று தோன்றியது. முட்டாள்தனமான படித்த கேடு கெட்டவர்கள்.
one of the two FILTHY lawyers


http://time.com/3735004/indias-daughter-rape-documentary-lawyers-bar-council-action/

இந்த மாதிரி படித்த, கற்றறிந்த ஆண் அயோக்கியர்கள் இருக்கும் வரை கற்பாவது ....   மண்ணாவது ....! 

 *

TOLERANCES FOR A BRUTALITY IS MORE THAN THE BRUTALITY  .... MERYL STREEPhttps://www.youtube.com/watch?v=dWwM3j6sx28
https://www.youtube.com/watch?v=cShXikihcEw&spfreload=10
https://www.youtube.com/watch?v=EtLm0OuLDLo&spfreload=10
NIRBHAYA . A PLAY ---  https://www.youtube.com/watch?v=H84EzHvVlOo&spfreload=10

*


Wednesday, March 04, 2015

824. தருமி பக்கம் ( அதீதம் 25) - உறைந்த நினைவுகள்*

அதீதம் இணைய இதழில் வந்த கட்டுரையின் மறு பதிவு

*


இதுவரை வெளியில் சொல்லாத ஒரு ரகசியம். அன்று நடந்த போது இறுக்கமான மனச்சூழலைத் தந்தது. மனதிற்குள் வைத்தே புழுங்கிக் கொண்டேன்.  அது ஒரு பெரிய விஷயமாகத் தோன்றியது. அதனால் தானோ என்னவோ 60 ஆண்டுகள் ஆகியும் அந்த நிகழ்வு நடந்த ஒவ்வொரு வினாடியும் மனதில் நிலைத்து நின்று விட்டது. இத்தனை நாள் கழித்து, இன்று என்னவோ அதை வெளியில் சொல்லிவிட மனது ஆசைப்படுகிறது.

அதைப் புரிந்து கொள்ள நீங்கள் கட்டாயம் முந்திய பதிவு ஒன்றைப் படித்தாக வேண்டும்.

அம்மா இறந்து, அப்பாவிற்கு கல்யாணம் முடிந்ததும் என் கிராம வாழ்க்கை முடிந்தது. மதுரைவாசியானேன். அப்பா, அம்மா, நான் மூவரும் ஒரு ஒட்டுக் குடித்தனத்தில் வசிக்க ஆரம்பித்தோம். இப்போது நினைத்தாலும் எப்படி அந்த வீட்டில் இருபத்தி இரண்டு ஆண்டுகள் குடித்தனம் நடத்தினோம் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. இந்த ஆண்டுகளில் குடும்ப எண்ணிக்கையும் பெருத்துப் போனது. ஒரு வீட்டின் பின் பகுதியில் குடித்தனம். அறை என்று பார்த்தால் ஒரே ஒரு அறை தான். அதோடு  ஓடு மேய்ந்த ஒரு தாழ்வாரம்; தட்டியால் மறைக்கப்பட்ட ஒரு அடுப்படி; இரண்டு மூன்று குடும்பங்களுக்குப் பொதுவான ஒரு “கக்கூஸ்’; ஒரு மொட்டை மாடி.  அதில்அப்பா டியூஷன் எடுப்பதற்காக தென்னங்கீத்தில் ஒரு ஷெட். தனியாகப் படுக்க தைரியம் வந்த பிறகு, அதாவது ஏழெட்டு எட்டாம் வகுப்பு வரும் வரை,  நம் இரவுப் படிப்பு, தூக்கம் எல்லாம் அந்த ஷெட்டில் தான்.

நான்காம் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது அப்பாவும் அம்மாவும் காலங்கார்த்தாலேயே கோவிலுக்குப் போவார்கள். போகும் போது என்னை எழுப்பி விட்டு விடுவார்கள். அவர்கள் வந்த பின் நான் கோவிலுக்குப் போய், அப்படியே கோவில் காம்பவுண்டிற்குள் இருந்த சாமியார்களின் பால் பண்ணையில் பால் வாங்கிக் கொண்டு வீட்டிற்குத் திரும்புவேன்.

இளம் காலையில் தனியாக ஒரு பால் பாத்திரத்தோடு நடந்து கோவிலுக்குச் செல்ல வேண்டும். வீட்டிலிருந்து இருநூறு மீட்டர் நடந்தால் தெரு - தெற்கு மாரட்டு வீதி - இடது புறம் திரும்பும். அங்கிருந்து பார்த்தால் இருநூறு மீட்டர் தொலைவில் புனித மரியன்னை கோவிலின் உயர்ந்த இரு கோபுரமும் தெரியும். அதென்னவோ அப்போதெல்லாம் அந்த முதல் இருநூறு மீட்டர் தூரம் நடக்கும் போது பல முறை மனதில் நெகட்டிவான நினைவுகள் இருக்கும். அம்மா நினைப்பும் வருவது அதிகம். ஆனால்கோபுரம் கண்ணுக்குத் தெரிந்ததும் ஏதோ வெளிச்சத்தைப் பார்த்தது போலிருக்கும். ஆனால் அது வரை பல நாட்களில் அம்மாவின் நினைவும் அதை ஒட்டிய வருத்தமும் நினைவுகளின் மேல் மட்டத்தில் அலையும்.

அப்போது என் மனதில் ஓடிய எண்ணங்களை இப்போது நினைத்தாலும் ஆச்சரியமாக இருக்கிறது. ”இப்போது நடப்பது எல்லாமே கனவு தான்; இதில் இருந்து சீக்கிரம் விழித்து விடுவேன்; அப்படி விழிக்கும் போது அம்மா உயிரோடு என்னிடம் வருவார்கள்”.  இது என் மனதில் அவ்வப்போது வந்து சென்ற எண்ணங்கள். பின்னாளில் Lao Tzu என்ற சீன ஜென் அறிஞரின் , அனுபவம், அதை ஒட்டி அவர் எழுப்பிய கேள்விகள் எனக்குள் ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன.

 Lao Tzu ஒரு கனவு காண்கிறார். அதில் அவர் ஒரு வண்ணத்துப் பூச்சியாக பறந்து திரிகிறார். இந்த நிகழ்வை அவர் ‘நான் கனவில் வண்ணத்துப் பூச்சியாக மாறினேனா ... இல்லை .. வண்ணத்துப் பூச்சியான நான் மனிதனாக என்னை நினைத்துக் கொண்டிருக்கிறேனா ...?’ என்பது அவரது கேள்வி. எது கனவு? எது நிஜம்?

I dreamed I was a butterfly, flitting around in the sky; then I awoke. Now I wonder: Am I a man who dreamt of being a butterfly, or am I a butterfly dreaming that I am a man?எனக்கும் இதே எண்ணம் அந்தச் சிறு வயதில் வந்திருக்கிறது. எது நிஜம்? எது கனவு? என்ற கேள்விகளோடு சிறு வயது அனுபவங்கள் இருந்திருக்கின்றன.

(பெத்த) அம்மாவின் உருவம் எனக்கு நினைவில்லை. அவரின் நினைவுகளைச் சொல்ல இரண்டே இரு புகைப்படங்களை மட்டுமே நான் பார்த்திருக்கிறேன். ஒரு படம் பிறந்த கோலத்தில் இருந்த  என் கையைப் பிடித்துக் கொண்டு  நின்று கொண்டிருக்கும்  படம்.
1945
இன்னொன்று அம்மா நாற்காலியில் அமர்ந்திருக்க அப்பா அதன் கைப்பிடியில் உட்கார்ந்திருப்பார். அது ஒரு அந்தக் காலத்து ஸ்டைலில் உள்ள புகைப்படம். அம்மா இறந்த பிறகு இந்த இரண்டாவது படத்திலுள்ள அம்மாவின் முகத்தை மட்டும் வைத்து இரங்கல் அட்டைகள் அச்சடித்திருப்பார்கள் போலும். ஒரு படத்தைச் சட்டமிட்டு வீட்டில் கொஞ்ச நாள் மாட்டியிருந்தார்கள். இவைகளில் மட்டுமே அம்மாவின் உருவத்தை நான் பார்த்திருக்கிறேன்.

ஒரு நாள் காலை. அனேகமாக பத்துப் பதினோரு வயதிருந்திருக்கும். கோவிலுக்குப் போகச் சொல்லி என்னை எழுப்பி விட்டு விட்டு அப்பா அம்மா கோவிலுக்குப் போய் விட்டார்கள். அப்பா கோவிலிலிருந்து அப்படியே ’வீட்டு ட்யூஷனுக்குப்’ போய் விட்டார்கள். அம்மா வரும் போது நான் வழக்கம் போல் தூங்கி விட்டேன். மறுபடி என்னை எழுப்பி விட்டு விட்டு கோவிலுக்குப் புறப்படச் சொன்னார்கள். அரையிருட்டில்  மெத்தைப் படியில் அமர்ந்து பல் விளக்கிக் கொண்டிருந்தேன். காலடியில் கசங்கிய பேப்பர் போல் ஏதோ ஒன்று கிடந்தது. மங்கிய வெளிச்சத்தில் அதனைப் பிரித்துப் பார்த்தேன். நான் இதுவரை பார்த்திராத அம்மாவின் புகைப்படம். கார்டு சைஸில் பாதியிருக்குமே 2B சைஸ் என்று சொல்வார்களே அந்த சைஸ். அரையிருட்டு; புதியதாய் பார்க்கும் படம்; கசங்கியிருந்ததால் முழுமையாகக் கூடப் பார்க்க முடியவில்லை. அதற்குள் அம்மா பல் விளக்கிட்டியா என்று கேட்டார்கள். ஏனோ தெரியவில்லை; அவர்களுக்குத் தெரியாமல் அந்தப் படத்தை மீண்டும் பார்க்க வேண்டும் போல் தோன்றியது. ஆனால் அவர்கள் பக்கத்தில் இருந்ததால் அந்தக் கசங்கிய போட்டோவை தலைக்கு மேலிருந்த ஓட்டுச் சரப்பின் மீது எறிந்து வைத்தேன். மீண்டும் எடுக்க வசதியில்லை. கோவிலுக்குப் போய் விட்டு வேகமாக வந்து நான் எறிந்த அந்த ஓட்டுப் பரப்பில் தேடிப் பார்த்தேன். அங்கே ஏதும் இல்லை.

கிடைத்த ஒரு அரிய படம். சரியாகக் கூட பார்க்காத அம்மாவின் படம். கையில் கிடைத்ததைக் காக்க முடியாமல் போயிற்றே என்ற கவலை. அப்பா படுக்கும் கட்டிலில் இருந்து சிறிது தூரத்தில் அது ஏன் அங்கு கசங்கிக் கிடந்தது? எப்படி காணாமல் போயிற்று?

பதில் தெரியாத கேள்விகள்......