Tuesday, May 01, 2018

982. BIBLE STUDY - பழைய ஏற்பாடு ...9 (4. எண்ணிக்கை )

*


  4. எண்ணிக்கை இந்நூலின் முன்னுரையில் .. “இஸ்ரயேலரின் வரலாற்றில், அவர்கள் சீனாய் மலையை விட்டுப் புறப்பட்டு, வாக்களிக்கப்பட்ட நாட்டின் கிழக்கு எல்லையை அடைந்தவரை நாற்பது ஆண்டுகளாக நிகழ்ந்தவற்றின் தொகுப்பு” என்று கூறப்பட்டுள்ளது.

 முந்திய நூலிலும். இந்த நூலிலும் லேவியர் என்பவர்கள் கடவுளால் சிறப்பு செய்யப்படுகிறார்கள். ஏனென்று தெரியவில்லை. அவர்களே குருக்களாகக் கருதப்படுகிறார்கள்; காணிக்கை அவர்களுக்காகவே கொடுக்கப்படுவது போலுள்ளது. (நம்ம ஊர் ப்ராமண சாமியார்களுக்குக் கொடுப்பது போல்)


இந்த நூலிலும் முந்தைய நூல் போலவே, பலி, எரிபலி, காணிக்கை கொடுப்பது, தீட்டு.. என்றெல்லாம் அதிகமாகவே பேசப்படுகிறது. கடவுள் கூட காணிக்கை பற்றி மட்டுமே ஏன் இத்தனை அளவு பேச வேண்டும் என்பதும் ஒரு முக்கியமான கேள்வி! எல்லாம் இதை எழுகிய அன்றைய காலத்தவரின் தேவைக்காகவே எழுதப்பட்டது போல் தான் தெரிகிறது. 

 இஸ்ரயேலர்கள் எகிப்திலிருந்து கிளம்பியதும் கடவுளே மோசேவிடம் ஒவ்வொரு இனத்தாரின் தலைக்கட்டு எண்ணிக்கையை எண்ணும்படி கட்டளையிடுகிறார்.

 1:47 - இதிலும் லேவியருக்கு தனிச்சலுகை. இவர்கள் “தங்கள் மூதாதியர் குலப்படி எண்ணப்படவில்லை”.

 ஏன்? 

1: 51 -- லேவியருக்கான கூடாரம் தனித்து அமைக்கப்படும் என்றும், “அதன் அருகில் வந்தால் அவன் கொல்லப்படுவான்” என்றும் சொல்லப்படுகிறது.

 மீண்டும் அதே கேள்வி: ஏன் அவர்கள் மட்டும் அத்தனை உசத்தி? 

 :11 – “நான் இஸ்ரயேல் மக்களிலிருந்த் லேவியரைப் பிரித்தெடுத்துள்ளேன். … லேவியர் எனக்கே உரியவர்”.

உலக மக்களிடமிருந்து இஸ்ரயேலர்களைத் தனியாகப் பிரித்து அவர்களைத் தன் மக்களாக இக்கடவுள் பேணுகிறார். பின் அதிலும் இன்னொரு இனத்தவரை தனக்கே உரியவராகக் கொள்கிறார். ஆனால் கிறித்துவர்கள் இக்கடவுள் இவ்வுலகத்தின் அனைத்து மக்களுக்கான கடவுளாக நம்புகிறார்கள்.

 5:8 “குற்ற ஈட்டுத் தொகையைப் பெற்றுக் கொள்ள முறை உறவினன் இல்லையெனில் அந்தக் குற்ற ஈட்டுத் தொகை ஆண்டவருக்கு, அதாவது குருவிடம் சேரும். 

” குற்ற ஈட்டுத் தொகை = இது குரானிலும் சொல்லப்பட்ட ஒன்று. அதுவும் “குரு”விற்கு தான் போகிறது!!! 

5:11-31 மனைவியரை ஐயுறும் கணவர்களின் வழக்குகள் பற்றி உச்ச கட்ட விசாரணை எல்லாம் நடக்கிறது.

ஆனால் ஆண்கள் தவறு செய்தால் என்னவென்று சொல்ல கடவுளுக்கு நேரமில்லாமல் போய் விட்டது போலும்! 

அடுத்து :தலைவர்களின் படையல்கள்” என்ற தலைப்பில் காணிக்கைகள் பற்றிய விலாவாரியான விளக்கங்கள் கொடுக்கப்படுகின்றன.

11-ம் அத்தியாயத்தில் மக்கள் பட்டினியால் வாடுகிறார்கள். பின் கடவுள் கடலிலிருந்து காடைகளைத் தருகிறார். காடைகளைச் சேகரித்து, சமைத்து ”அவர்கள் விழுங்கும் முன் பற்களிடையில் இறைச்சி இருக்கையிலேயே ஆண்டவரின் சினம் மக்களுக்கு எதிராக மூண்டது; ஆண்டவர் மாபெரும் வாதையால் மக்களைச் சாகடித்தார்.

” அடப் பாவமே! நல்ல வேளை … இந்தக் கடவுள் இப்போதெல்லாம் இம்மாதிரியான அடாவடிச் செயல்களைச் செய்வதில்லை. இல்லாவிட்டால் என்னாகும் நம் பிழைப்பு! 

14:21 – ”ஆயினும் உண்மையாகவே என் உயிர் மேல் ஆணை! பூவுலகனைத்தும் நிறைந்துள்ள ஆண்டவரின் மாட்சியில் மேல் ஆணை! 


இதென்ன ..குரானிலும் இது போல் கடவுள் படர்க்கையில் தன்னைப் பற்றியே பேசுகிறார். கடவுளே கடவுள் மீது ஆணையிட்டுக் கூறுகிறார். இதற்குப் பொருள் என்னவோ? கடவுளுக்கேதெரிந்த ரகசியம் தான்! 

 15-ம் அத்தியாயம் – மீண்டும் ”பலி பற்றிய சட்டங்கள்”

15:32-35: ஓய்வு நாளை மீறிய ஒரு மனிதனுக்கு நமது “இரக்கம் மிகுந்த கடவுள்” எப்படிப்பட்ட தண்டனை தருகிறார் என்பதைப் பார்க்கலாம்:

“இந்த மனிதன் கொல்லப்பட வேண்டும்…. அனைவரும் பாளையத்துக்கு வெளியே அவனைக் கல்லால் எறிய வேண்டும்”.

எப்படிப்பட்ட “இரக்கம் மிகுந்த கடவுள்” ! நல்ல வேளையாக இப்போது இக்கடவுள் இந்த Sunday punishment-யை விட்டு விட்டார் போலும்! நாமும் பிழைத்தோம்! 

28 – ”படையல்களின் ஒழுங்கு முறை” என்ற தலைப்பில் மீண்டும் பலி பற்றி விவரணைகள் தொடர்கின்றன. அதிலும், 28:7-ல் “ஆண்டவருக்கு நீர்மப் படையலாக திரு உறைவிடத்தில் மது பானத்தை ஊற்ற வேண்டும்” என்று சொல்ல்ப்படுகிறது.

 ஹா … நல்ல கடவுள். மது நைவேத்தியம் …!!! 

 31- அத்தியாயம் – மிதியானுக்கு எதிரான புனிதப் போர். புனிதப் போர் மட்டும் போதாதென்று கடவுள் கொள்ளை நோயையும் இரக்கமுள்ள கடவுள் அனுப்புகிறார். அதன் முடிவில் பல ”இரக்கமுள்ள முடிவுகளைக்” கடவுள் கொடுக்கிறார்:

 31:17 & 18 - “ஆண் குழந்தைகள் அனைவரையும் இப்போது கொன்று விடுங்கள்; ஆணுறவு கொண்ட பெண்கள் அனைவரையும் கொன்று விடுங்கள்; ஆனால் ஆணுறவு கொள்ளாத இளம் பெண்கள் அனைவரையும் உங்களுக்காக உயிருடன் வைத்துக் கொள்ளுங்கள்”.

 அடப் பாவமே ! 
 என்ன மாதிரியான தண்டனையைக் கடவுள் தருகிறார். ஏறத்தாழ இதே கட்டளைகளைத் தான் முகமது நபி தன் கீழுள்ள போர் வீரர்களிடம் கூறியதாகக் குரானில் காண்கிறோம்.

 33 அத்தியாயத்தில் “யோர்தானைக் கடக்குமுன் தரப்பட்ட அறிவுரைகள்” என்ற தலைப்பில் … 33:52 – “உங்கள் முன்னிலிருந்த நாட்டின் குடிகள் அனைவரையும் துரத்தி விடுங்கள்; அவர்களின் செதுக்கிய சிலைகள அனைத்தையும் அழித்து விடுங்கள்; அவர்களின் வார்ப்புப் படிமங்கள் அனைத்தையும் உடைத்து விடுங்கள்”.

 நல்ல அறிவுரைகள். இன்று இதை அப்படியே I.S.I.S. அப்படியே வரிக்கு வரி கடைப்பிடிக்கிறார்கள். இன்னும் இதை நன்கு கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயத்தில் கிறித்துவ ஆலயங்களையும், அங்குள்ள சிலுவைகள், சிற்பங்கள் என்று அனைத்தையும் இன்று உடைத்து நொறுக்கிக்கொண்டு 
கடவுளின் அறிவுரையை’ நன்கு வழி நடத்துகிறார்கள்.
 *