Tuesday, December 26, 2006

194. LET'S HIT THE NAIL....***

*


*


Let's hit the nail....
right on its head !


No..no..

Let us hit the nailS
right on their headS



*

'I believe that there will ultimately be a clash between the oppressed and those that do the oppressing. I believe that there will be a clash between those who want freedom, justice and equality for everyone and those who want to continue the systems of exploitation'
-Malcolm X-


*

பார்ப்பனீயமே இன்றுள்ள சாதீயக் கொடுமைகளுக்கு அடிமைத்தளம் அமைத்துக் கொடுத்த சனாதன தர்மத்தை அன்றிலிருந்து இன்றுவரையும் கட்டிக் காத்து, நிலைத்து நிற்க வைத்துள்ளது என்பது ஒரு வரலாற்று உண்மை. கல்வியில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக முதலிடத்தைத் தங்களுக்கென்றே வைத்துக் கொண்டு அக்கல்வியால் சமூகத்தில் ஓர் உயர்ந்த இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார்கள் என்பதும் ஒரு மறுக்க முடியா உண்மை.

சுதந்திரத்திற்குப் பின் ஏற்பட்ட சமூக மாற்றங்களினாலும், ஓரளவு சமூகத்தில் ஏற்பட்ட விழிப்புணர்வுகளாலும் தங்கள் வெளிப்படையான (overt) அடக்கு முறைகளை விடுத்து, புதிய வியூகம் வகுத்து தங்கள் சமூக உயர் நிலையைத் தக்க வைத்துக் கொள்ள அவர்கள் எடுத்த புது முயற்சிகள் அவர்களைப் பொறுத்தவரையில் சரியானதே. அரசாங்க வேலைகள் என்பதிலிருந்து ஆசிரியர், வழக்கறிஞர்கள் என்று பெருவாரியாக இருந்த இந்த சமூகத்தினரின் அடுத்த குறி மருத்துவர்கள் என்று ஆகி, பின் ஆடிட்டிங், வங்கி வேலைகள் என்று மாறி, பெரும் வியாபரங்களில் தொடர்ந்து, ஆடல் பாடல் என்றிருந்து, இன்று மென் பொருளாளர்களாகவும் நிரந்து நிறைந்து இருப்பது அவர்களது flexibility - கால மாற்றங்களுக்கேற்ப தங்கள் வாழ்க்கை முறையை மாற்றி எப்போதும் தங்கள் முன்னிலையை தக்க வைத்துக் கொள்ளும் திறமைக்குச் சான்றுகளாகும். அவர்களைப் பொறுத்தவரை இதைத் தவறென்று கூற இயலாதுதான். ஏற்கெனவே கிடைத்த கல்வியறிவால் இந்த தகவமைப்பை (adaptability) பெற்று தங்கள் சமூகத் தரத்தைக் காப்பாற்றிக் கொண்டுள்ளதைப் பாராட்டித்தான் ஆகவேண்டும்.

ஆனால், அன்று அப்படி இருந்தவர்கள் இன்றும் AIMS- களில் IIT- களில் மற்றவர் வந்து விடக்கூடாதென்பதில் மிகத்தீவிர மனப்பான்மையோடும், UPSC தேர்வுகளில் தங்கள் சாதிக்கு வழக்கமாகக் கிடைத்து வரும் விழுக்காடு விழுந்துவிடக் கூடாது என்பதில் அவர்கள் காட்டும் அதி அக்கறையும் எல்லோருக்கும் தெரிந்ததுதான். மீடியாக்களின் ஆளுமையை முழுவதுமாகக் கைக்குள் வைத்துக் கொண்டு சமூக அளவு கோல்களையும், மொத்த சமூகத்திற்கான கருத்துப் படிமானங்களையும் வகுக்கும் அவர்களது திறமை எல்லோருக்கும் தெரிந்ததுதான்.

NAIL: 1

இந்தப் பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டியதே இப்போதைய கால கட்டத்தில் மிக மிக அவசியமாகிறது. ஆனால் இது தெருவில் நடக்கும் சண்டையல்ல. இதனை எதிர்கொள்ள வேண்டிய இடமும், முறையும் முழுமையாக வேறு. பாராளுமன்றங்களிலும், நீதிமன்றங்களிலும், இன்னும் வேகமாக வெகுசன ஊடகங்களிலும் செய்ய வேண்டியவை நம்முன் மலையென நிற்கின்றன.

ஆனால் இதை விட்டு விட்டு இன்று நடக்கும் சாதீய பூசல்கள் எல்லாவற்றிற்கும் காரணம் என்று அச்சாதியினரைக் கை காண்பிப்பதும், அதற்காக அவர்களைச் சாடுவதும் எந்த அளவு சரியாக இருக்கும்? தலித்துகளுக்குக் கிடைக்க வேண்டியவைகள் இன்னும் அவர்களைப் போய் சேருவதில்லை. அரசு தரும் உதவிகளைப் பற்றிய அறிவும், புரிதலும் இல்லாத தலித் மக்களையே நாம் காண்கிறோம். அதோடு அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளோ சொல்லி மாளாதவை.

சமீபத்தில் மகாராட்டியத்தில் கலியாஞ்சியில் நடந்த கொலைவெறியாட்டங்கள், பீகாரில் செத்த பசுவின் தோலையுரித்ததற்காகக் கொல்லப்பட்ட நான்கு தலித் இளைஞர்கள், நம்ம ஊரில் நடந்த திண்ணியம், வெண்மணி வெறியாட்டங்கள், அவ்வளவு ஏன் 10 ஆண்டுகளாக தலித்கள் என்பதாலேயே பஞ்சாயத்துத் தலைவர்களாக அவர்களை வரவிடாதிருக்க வைத்த அரசியல் விளையாட்டுக்கள் - இவை
எல்லாவற்றிற்குமா பார்ப்பனீயத்தையும், அந்த சாதிக்காரர்களையும் காரணம் காட்டிக் கொண்டிருக்கப்
போகிறோம். That will be absolutely like whipping the wrong horse.
அவர்கள் ஆதி காரண கர்த்தாக்கள் என்றே வைத்துக் கொண்டாலும் இன்னும் எத்தனைக் காலத்திற்கு அந்த வரலாற்றுக் காரணத்தை மட்டும் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும்? இதனால் ஏற்படுவது இன்னொரு மிகப்பெரிய தவறான பின் விளைவு: பார்ப்பனீயத்தைத் திட்டிக் கொண்டே, இன்று அதைவிடவும் கீழ்த்தரமாகவும், கொடூரமாகவும் தலித்துகளை சிறுமைப்படுத்துவதும், கொடுமைப் படுத்துவதும் மற்ற 'நடு' சாதியினர் என்பதே மறைந்து விடுகிறது; மறைக்கப்பட்டு விடுகிறது. முன்பே ஒரு பதிவில் இதனைக் குறிப்பிட்டுள்ளேன்.

கல்லெறியும், கண்டனமும் வேறு சாதியினர் மேல்தான் விழும் என்பதாலோ என்னவோ, இந்த நடு சாதியினர் தலித்துகளை இன்றும் மிகக் கடுமையாக நடத்தி வருவதே கண்கூடு. செய்வதைச் செய்து விட்டு, கூட்டத்தோடு கூட்டமாக உயர்த்திக் கொண்டவர்களைத் தாக்கி அவர்களும் எல்லோருடன் சேர்ந்து கோஷங்கள் போடுவதாகத்தான் தெரிகிறது! அதோடு நான் எனது அந்த முந்தியப் பதிவில் சொன்னது போல, எப்போதுமே ஓட்டப்பந்தயத்தில் போட்டியின் கடுமை அடுத்தடுத்து ஓடுபவர்களுக்கு நடுவில்தான். தன்னைவிட தாழ்ந்தேயிருந்த 'இவர்கள்' தங்களைத் தாண்டிவிடுவார்களோ, தாண்டுகிறார்களோ, தாண்டிவிட்டார்களோ என்ற அச்சம் காரணமாகவே இந்தப் போராட்டம். Hierarchy-ல் அடுத்தடுத்த நிலையில் உள்ளோருக்குள் ஏற்படும் பொறாமையின் விளைவே இது. இந்த மனப்பான்மைதான் இந்த 'நடு' சாதியினரை தலித்துகளைப் போட்டி மனப்பான்மையோடும், அதனால் விளைந்த பொறாமைக் கண்ணோட்டத்தோடும் பார்க்க வைக்கிறது. இதன் விளைவுகளாகவே தலித்துகளின் மேல் நடக்கும் வன்முறைகளை நான் காண்கிறேன்.

உயர்த்திக் கொண்டவர்கள் 'தங்கள் வேலையைப்' பார்த்துக் கொண்டு போய்க் கொண்டிருக்க,
மற்ற சாதிக்காரர்கள் தங்களுக்குள் பொறாமை கொண்டு, பொருது கொண்டு ஒவ்வொருவரும் தங்கள்
தங்கள் சமூக நிலைக்குக் கீழேயுள்ளவர்களை நோக்கி தங்கள் வன்மத்தைக் காண்பித்துக் கொண்டிருப்பதும்தான் இன்றைய நிலை.

இந்த நிலையில் இந்தக் கீழ்த்தரச் செயல்களுக்கு மூவாயிர, நான்காயிர ஆண்டு வரலாற்றைச் சொல்லி அந்த உயர்த்திக் கொண்டவர்களையே சாடிக்கொண்டிருப்பதை விடவும், இன்றைய தேவை யார் ஒரு கொடுமையைத் தலித்துகளுக்கு எதிராகச் செய்கிறார்களோ அவர்களைப் "பெயரிட்டு", அவர்களைத் தோலுரித்துக் காட்ட வேண்டும். நமது மீடியாக்களிலும் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் நடக்கும்போது வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டவர்களைப் பற்றிய விவரங்கள் வெளியே தெரியாதபடி 'பாதுகாத்து' விடுகிறார்கள். நம் சமூகத்தின் உண்மை முகங்கள் நமக்கே தெரியாமல் போய்விடுகின்றன. மீடியாக்களில் தலித்துகளின் மீது "caste hindus" / "ஜாதி இந்துக்களின்" வெறியாட்டம் என்றுதான் வரும். (அப்படியானால், தலித்துகள் என்ன சாதியில்லா இந்துக்களா? அல்லது அவர்கள் இந்துக்களே இல்லையா? இரண்டாவதுதான் சரியென்பது என் எண்ணம்.) யார் இந்த "caste hindus" / "ஜாதி இந்துக்கள்" என்று யாருக்கும் தெரியாமலே போய்விடுகிறது. இது போன்ற தவறு செய்தவர்களே இன்னொரு
இடத்தில் மனித உரிமை, தலித்துகளின் தளையறுப்பு, சாதி வெறிக்கு எதிர்ப்பு - என்று பல வெத்துக் கோஷங்களைப் போட்டுக்கொண்டு உத்தமர்களாக வேடமிட அனுமதிக்கக் கூடாது. குற்றம் செய்தவர்களின் சாதிய முகத்திரைகள் கிழிக்கப்பட்டு அவர்களின் நிஜ முகங்களை எல்லோருக்கும் காட்ட வேண்டும்.

NAIL: 2

'குற்றமே செய்யாதவன் முதல் கல்லை எறியட்டும்' என்ற கதை போலல்லாமல் இனியாவது குற்றம் செய்தவர்களை வெளியே சமூகத்திற்குத் தெரியும்படி கொண்டுவர வேண்டுவது அவசியம். குற்றம் செய்தவர்களைச் சமூகத்தின் முன் காண்பிப்பதன் மூலம் கொஞ்சம் கொஞ்சமாகவேனும் குற்றம் புரியும் சாதிக்காரர்கள் தங்களைத் திருத்திக் கொள்ள முன்வர மாட்டார்களா? அந்தச் சாதி அமைப்பிலே உள்ள சிலரேனும் மனசாட்சியின் உறுத்தலால் தங்கள் மற்ற சாதிக்காரர்கள் வரம்பு மீறுவதை கண்டித்து அவர்களை மாற்ற முயலமாட்டார்களா? பல ஆண்டுகளாக பாப்பாபட்டி இன்னும் மற்ற இடங்களில் பஞ்சாயத்துத் தேர்தலே நடக்க விடாமல் செய்து வந்தும் அந்த கிராமங்களில் 'பெரும்பான்மை சாதி'யினரின் எதிர்ப்பு என்றே எழுதி வந்தனர். இப்போதுதான் ஓரிரு ஆண்டுகளாக கள்ளர் இன மக்களே இதற்குக் காரணம் என்பது வெளிப்படையாகப் பேசவும், எழுதப்படவும் செய்யப்பட்டது.இப்போது நடந்த மாற்றத்திற்கு இதுவும் ஒரு காரணியாக இருந்திருக்க வாய்ப்புண்டு என்றே தோன்றுகிறது.

இப்படி சாதியைக் குறிப்பிட்டுப் பேசுவதால் ஒரு சில விருப்பமில்லா பின் விளைவுகளும் ஏற்படலாம். ஆயினும் இதைச் செய்தே ஆக வேண்டும்; அதுவே குற்றமிழைப்பவர்களை ஓரளவேனும் கட்டுக்குள் கொண்டு வரும்.

சாதிகளை நம் சமூகத்திலிருந்து ஒழிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கில்லை. நம் சமுதாயத்தின் நீண்டு, நிலைபெற்ற களங்கமாக இன்னும் எத்தனை எத்தனை காலம் இருக்கப் போகிறதோ..? ஆகவே, சாதீய வேறு பாடுகளைக் களைய நினைப்பவர்கள் செய்ய வேண்டியவைகளில் முன்னால் நிற்பது இரு வேறு பட்ட நிலைக் களன்கள். ஒன்றில், ஒடுக்கப்பட்டவர்களுக்குக் கிடைக்க வேண்டியவைகளை யாரும் நிறுத்தவோ, தடுக்கவோ விடாதபடி கண்காணிக்க வேண்டும்; இன்னொன்று, அவர்களைக் கீழ்படுத்திச் சிறுமைபடுத்தும், கொடுமை படுத்தும் மற்ற சாதியினரிடமிருந்தும் காக்க வேண்டும். இருமுனைப் போராட்டம் இது. இதில் இரண்டு பட்ட பார்வை தேவை. ஒன்றின் மீது மட்டும் "கண் வைத்து" மற்றொன்றை கண்டு கொள்ளாமல் செல்வதும் தவறாகப் போய்விடும். முதலாவதற்கு வார்த்தைகளும் வம்புகளும் தேவையில்லை; 'சத்தமில்லாமல்' நடந்தேறும் காரியங்களைக் கவனித்து எதிர்வினைகளை முறையாக ஆற்ற வேண்டிய தேவை அதிகம். இரண்டாமாவதில்தான் எழுத்துக்களுக்குப் பயன் இருக்கும்.

NAIL: 3

இதையெல்லாம் விடவும் தலித்துகள் தங்களுக்குள் உயர்வு தாழ்வு சொல்லி ஒற்றுமையின்றி இருக்கும் வரை அவர்களின் முயற்சிகள் எந்தப் பயனுமில்லாமல்தான் இருக்கும். அவர்கள் முதலில் தங்கள் 'வீட்டைச்' சீர்செய்து கொண்டு ஒரே முனைப்போடு தங்கள் உயர்வுக்காகப் போராடினாலே அதில் அர்த்தமும் இருக்கும்; பலனும் இருக்கும். அவர்களுக்காக மற்றவர்கள் போராடுவது என்ற நிலை மாறி, தாங்கள் எழ வேண்டும் என்ற தீவிரம் அவர்கள் மனத்தில் எழவேண்டும். அவர்களை ஒன்றுபட்டு எழ வைப்பதற்கு அவர்கள் மனத்தில் அந்த அக்கினிக் குஞ்சு எப்போது விழுமோ ...?


*
டிசம்பர் 26, 2006-ல் பதிவு செய்து. இன்று (08.01.2007 நேரம்: இரவு 9.40) 86 பின்னூட்டங்களுக்குப் பிறகு இப்பதிவைப் பொருத்தவரை என் ஏமாற்றத்தை ஒரு பின் குறிப்பாக சேர்க்கிறேன்.

இப்பதிவில் என் நோக்கம் நாமெல்லோருமே ஏதோ ஒரு வகையில் சாதிப்பிரச்சனைகளுக்குக் காரணமாயுள்ளோம். அதில் தீர்வு காண முதலில் நாம் செய்த, செய்யும் தவறுகளைக் கண்டு பிடித்து அவைகளை நிறுத்தும்வரை, திருத்தும் வரை விடிவில்லை என்பதால் சாதிய மூன்று படிநிலையைச் சார்ந்தவர்கள் முன்னால் உள்ளவைகளாக நான் நினைத்தவைகளை இங்கு பதிந்தேன். அதிலும் இரண்டாம் நிலை பற்றிய செய்திக்கு முக்கியத்துவம் தரப்பட
வேண்டும் என் நினைத்தேன்.

ஆனால், முதல் பிரிவினரைப் பற்றிய என் இரு பகுதிகளில் வரலாற்று உண்மைகள் என நான் நினைக்கும் முதல் பகுதி மட்டுமே விவாதப் பொருளாகப் பார்க்கப்பட்டு அதனையொட்டிய பின்னூட்டங்களே நிறைய வந்துள்ளன. ஆச்சரியமாயிருக்கிறது.

ஏறத்தாழ இரண்டாம் மூன்றாம் ஆணிப் பகுதிகள் பற்றி பேச ஆளே காணோம். இதுவும் ஆச்சரியமும், வருத்தமுமாயிருக்கிறது.

விடியலுக்கு இன்னும் நெடுங்காலம் காத்திருக்க வேண்டும் என்றுதான் தெரிகிறது.


*

***இப்பதிவு 01.01.2007 பூங்கா இதழில் இடம் பெற்றுள்ளது. (7)

*


*

Thursday, December 21, 2006

193. உதவிக்கு ஒரு முகவரி

*

*

ஏழைப்பெண் மகாலட்சுமி கல்விக்கு உதவுங்களேன் - செந்தழல் ரவி

தொடர்பான மற்றைய பதிவுகள்:

வெட்டிப் பயல்

பொன்ஸ்




நமது பதிவர் உலகம் நம் சமூகத்தின் மூளையாகவும், இதயமாகவும் இருக்க வேண்டுமென்ற என் ஆசையைப் பல இடங்களில் பதிந்து வருகிறேன். நாம் மூளையாக இருக்கப் போகிறோமோ இல்லையோ, இதயமாக எப்போதும் இருந்து வருகிறோம் என்பதற்குரிய நிரூபணங்கள் நித்தம் நித்தம் நம் பதிவுலகத்தில் நடந்து வருவது கண்டு மிக்க சந்தோஷம்.

செந்தழல் ரவி ஏற்றி வைத்த தழல் - ஏழைப்பெண் மகாலட்சுமி கல்விக்கு உதவுங்களேன் - கனன்று எரிவது கண்டும், அதற்கு வெட்டிப் பயலும், பொன்ஸும், செல்லாவும், ஞான வெட்டியானும் துணையாய் வந்திருப்பதும் மிக அழகு.

ரவியின் பதிவில் on-line transaction-க்குரிய தகவல்கள் I.C.I.C.I. வங்கி எண் தரப்பட்டுள்ளது. ஞானவெட்டியானின் வங்கி எண்ணும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் காசோலை / DD அனுப்புவர்களுக்கு அவரது வீட்டு முகவரி கொடுக்கப்படவில்லையே என்று ஞானவெட்டியானையும், ரவியையும் தொடர்பு கொண்டேன். இருவருமே நாளை காலைதான் இந்த தகவலைத் தங்கள் பதிவுகளில் தரக்கூடிய நிலையில் இருந்தமையால் நான் இப்போதே அந்த தகவலைத் தருவதற்காக இப்பதிவை இப்போது இடுகிறேன். ஒரு அணிலின் வேலை பார்த்ததில் ஒரு சின்ன தனிப்பட்ட மகிழ்ச்சி.



ஞானவெட்டியானின் வீட்டு முகவரி:


N. JEYACHANDRAN,
4 / 118-1, N.S. NAGAR,
kARUR ROAD,
DINDUGAL
624 001



*


*

Monday, December 18, 2006

192. FOR THE EYES OF SENIOR CITIZENS ONLY***

*

*
ஒரு சீரியஸான கேள்வியைப் பற்றித்தான் இந்தப் பதிவு.

தெக்கிக்காட்டான் 'புதைக்கணுமா? எரிக்கணுமா?' அப்டின்னு கேட்டு ஒரு பதிவு போட்டார். எரிக்கணும் அப்டிங்கிறதுக்கு ஓட்டுப் போட்டாச்சு. அது எல்லாம் முடிஞ்ச பிறகு நடக்கிறதுக்கு உள்ள விஷயம். இப்போ அதுக்கு முந்தி நடக்கிற விஷயம் பத்தினது.

கொஞ்ச நாளைக்கு முன்பு என் வயதொத்த ஒருவர், இன்னும் இரு இளைஞர்களோடு எனக்கு ஒரு விவாதம். அதப் பத்தி உங்க கிட்டயும் சொல்லி, உங்க கருத்தையும் தெரிந்து கொள்ளலாமேன்னு ஒரு நினப்புல இந்தப் பதிவு.

வயதான பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் சேர்க்கலாமா கூடாதா என்பதுதான் விவாதப் பொருள். ஒரு இளைஞர் மட்டும் என்னோடு கொஞ்சம் உடன்பட்டார். ஆக 50:50 கூட இல்லை; ஒரு 75:25 -ன்னு வச்சுக்குவோம்.


*


* உங்களைப் பெத்து, சீராட்டி, வளர்த்து, ஆளாக்கின பெற்றோரை கடைசிக் காலத்தில் கூடவே வைத்திருந்து காப்பாத்துறத விடவும் பிள்ளைகளுக்கு வேறு என்ன பெரிய கடமை இருக்கு?

* பெத்தவங்களை இல்லங்களுக்கு அனுப்புவது செய்நன்றி கொல்றது இல்லியா?

* அப்படி அனுப்பிச்சா அந்த வயசான காலத்தில அவங்க மனசு என்ன பாடு படும்?

* இதே மாதிரி நீங்க பொறந்ததும் உங்கள அனாதை விடுதியில் சேர்த்திருந்தா நீங்க என்ன ஆயிருப்பீங்க?

* பெத்த குழந்தைகளை நல்லா வளர்க்கிறது பெத்தவங்களோட கடமைன்னா, பெத்தவங்களை கடைசிக் காலத்தில் மனங்கோணாம நல்லா வச்சுக்கவேண்டியது பிள்ளைகள் கடமையில்லையா?

-- இப்படியெல்லாம் ஒரு கட்சி.


*


இன்னொரு கட்சியில் --

* பெத்தவங்க பிள்ளைகளை உருவாக்கணும் அப்டிங்கிறதையும், கடைசிக் காலத்தில் பெத்தவங்களை பிள்ளைகள் தங்களோடு வைத்துப் பராமரிக்கணும் அப்டிங்கிறதும் ஒன்றல்ல. வெறு செண்டிமென்ட் வச்சுக்கிட்டு இதைப் பேசக்கூடாது.

* பிள்ளைகளை வளர்க்கிறது, அதுவும் அவங்க சின்ன வயசுல அவங்கள சுமக்கிறதில் பெற்றோருக்கு வலியிருப்பதில்லை; சந்தோஷம்தான். படுத்துக் கொண்டு பிள்ளையை தன் நெஞ்சின்மேல் வைத்துக் கொண்டிருக்கும்போது பிள்ளை அசிங்கம் செய்தாலும் எந்தப் பெற்றோரும் முகம் சுளிப்பதுண்டா என்ன? அதை நினைவில் வைத்து பிள்ளை வளர்ந்த பிறகு அதை சந்தோஷமாய் பிள்ளையிடம் பகிர்ந்து கொள்ளாத பெற்றோர் யார்? ஆனால் வயதான தாயோ தகப்பனோ படுக்கையே எல்லாமுமாய் ஆகும்போது அதை சாதாரணமாய் - சந்தோஷமாக இல்லாவிட்டாலும் - எடுத்துக் கொள்ள முடியுமா? எடுத்துக் கொண்டாலும் எத்தனை நாளைக்கு அந்தப் பணியை முகம் சுளிக்காமல் செய்ய முடியும்?

* பிள்ளைகளைக் கூட விடுங்கள்; பேரப் பிள்ளைகளை நல்லாயிருக்கும்போது கொஞ்சி விளையாடிய தாத்தா, பாட்டி நோய்வாய்ப் பட்டு படுத்த படுக்கையானால் எந்த பேரப்பிள்ளை இப்போதும் தாத்தா பாட்டியைக் கொஞ்சும்?

* அதைவிடவும் அவர்கள் காலத்துக்குப் பிறகு தாத்தா பாட்டி நினைவு வந்தாலே அந்தக் கஷ்டமான காலங்கள் அதற்கு முந்திய நல்ல இனிய நினைவுகளைக் கூட அழித்து விடுமே. தாத்தா பாட்டி என்றாலே பின்னாளில் அந்தக் கஷ்டப் படுத்திய நாட்கள்தானே பேரப்பிள்ளைகளின் நினைவில் வரும்.அது தேவையா? அதைவிடவும் இனிய நினைவுகளை மட்டுமே பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் மனதில் தங்க வைக்கவேண்டியது பெரியவர்களின் கடமையல்லவா?

* வயதான காலத்தில் எதற்காக மற்றவர்களுக்குப் பாரமாக இருக்க வேண்டும்? காசு கொஞ்சம் கொடுத்து இல்லங்களில் இருந்தால் நாம் பிள்ளைகளுக்குப் பாரமாக இல்லை என்ற நினைவே சந்தோஷம் கொடுக்காதா?

* பிள்ளைகள் சிறுசுகளாக இருக்கும்போது அவர்களுக்காகப் பெற்றோர்கள் பல 'தியாகங்கள்' செய்திருக்கலாம். அதற்காக இன்று பிள்ளைகளும் அதேபோல் தியாகங்கள் செய்ய வேண்டும் என்று எதிர்பார்த்தால் வாழ்க்கையும், பாசமும் வெறும் வியாபாரமாகி விடாதா? நேற்று உனக்குக் கொடுத்தேன்; இன்று நீ எனக்குக் கொடு என்பதா வாழ்க்கை. நேற்று உன்னைத் தாங்கினேன்; இன்றும் நான் உனக்குப் பாரமாக இருக்க மாட்டேன் என்பது தானே நல்ல உறவாக, பாசமாக இருக்க முடியும்?

* இல்லத்தில் இருந்து கொண்டு பிள்ளைகளோடு பாசமாக இருக்க முடியாதா, என்ன? படிக்கிற காலத்தில் பிள்ளைகளின் நலன் கருதி பள்ளி, கல்லூரி விடுதிகளில் பிள்ளைகளை விடுவதைப் போலத்தானே இதுவும்.

* ஒரு காலத்தில் நம் சமூகத்தில் கூட்டுக் குடும்ப வாழ்க்கை இருந்தது. அப்போது வயதான பெற்றோரை வீட்டோடு வைத்திருப்பது எளிதாயுமிருந்திருக்கும். அப்போது அதுதான் சரியானதாயிருந்திருக்கும். ஆனால் இன்று nuclear family என்றான பிறகு, வாழக்கை ஒரு விரைந்த ஒன்றான ஆன பிறகு என்னையும் உன் தோளில் தூக்கி கொண்டே போ என்று பிள்ளைகளைப் பார்த்து பெற்றோர் சொல்வது எந்த அளவு சரி? மாறி வரும் காலத்திற்கு ஏற்றாற்போல் மக்கள் மனநிலையும் மாற வேண்டாமா?

* உண்மையிலேயே பிள்ளைகள் மேல் பாசம் உள்ள பெற்றோர் முதியோர் இல்லங்களில் தங்குவதற்கு தாங்களாகவே பிள்ளைகளக் கட்டாயப்படுத்தியாவது தயாராக வேண்டாமா?


*

இதில் நான் இரண்டாவது கட்சி..
இப்போ சொல்லுங்கள்.. நீங்கள் எந்த கட்சி?


*
***இப்பதிவு 25 Dec. 06 பூங்காவில் இடம் பெற்றுள்ளது. (6)
*

Wednesday, December 06, 2006

191. திரு. மாசிலாமணிக்கு சமர்ப்பணம்***

*


*


இந்தப் பதிவை எழுத ஆரம்பித்த போது, இதைப் பதிவேற்றியதும் அதனை திரு.மாசிலாமணி அவர்களின் பார்வைக்குக் கொண்டு வரவேண்டுமென நினைத்திருந்தேன். நிச்சயமாக ஏதாவது அதற்குப் பயனிருக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால் பதிவேற்றும் முன்பே அவரது மரணச் செய்தி வந்து விட்டது. ஆராதனா,தெக்கிக்காட்டான் இவர்களது பதிவுகளின் மூலம் இன்னும் கொஞ்சம் தெரிந்து கொண்டது அவர்மேல் நான் வைத்த மரியாதையைக் கூட்டுவதாக இருந்தது. அவரது ஆங்கிலப் பதிவில் ஒரிரு முறை பின்னூட்டம் மூலம் சந்தித்தது மட்டுமே அவரோடு என் தொடர்பு. இருப்பினும்,"லஞ்சம் தவிர்; நெஞ்சு நிமிர்" என்ற அவரது தமிழ்ப் பதிப்பின் தலைப்பே அவர்பால் எனக்கு ஒரு மரியாதையை ஏற்படுத்தியிருந்தது.

அவரது அகால மரணத்தால் கவலையுற்றிருக்கும் அவரது குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

இந்தப் பதிவை அன்னாரின் நினைவுக்குச் சமர்ப்பிப்பதன் மூலம் என் மரியாதையைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
* * * * * * *


*

*

சமீபத்தில் காஞ்சி அருகே ஆட்டோ ஒன்று ரயிலில் மோதி 15 பேர் அந்த இடத்திலேயே உயிரழந்தார்கள். அந்த சமயத்தில் எழுத நினைத்து விட்டுப் போனது இது. மிகவும் சோகமான ஒரு விஷயம். குடும்பமாகப் பலர் இறந்தது மிக்க வேதனையாக இருந்தது. எப்படி நாமெல்லோருமே ஒட்டு மொத்தமாக சட்ட திட்டங்களை மீறுவதையே ஒரு வழக்கமாகக் கொண்டுள்ளோம் என்பதே அப்போது என் நினைவுக்கு வந்தது. ரயில் வரும்போதும் தாண்டிப் போனது அந்த ஆட்டோ ட்ரைவரின் தவறு என்று மேலோட்டமாகச் சொல்லுவதை விடவும் இந்தப் புத்தி நம் எல்லோரிலும் நீக்கமற நிறைந்திருப்பதையே நினைவுபடுத்துகிறது. respecting the law of the land என்ற ஒரு மனப்போங்கு நம்மில் வெகு சிலருக்கே உள்ளது. போக்குவரத்து அடையாள விளக்குகளுக்குக் காத்திருக்கும்போது இதை நன்றாகவே பார்க்க முடியும். பச்சை விளக்கு வரும் வரை நீங்கள் நின்றால் அங்கு நிற்கும் போலீஸ்காரர் முதல் அனைவருமே உங்களை ஏதோ ஒரு அபூர்வ பிராணியைப் பார்ப்பது போல் பார்ப்பார்கள். ஆக, அந்த ஆட்டோ ட்ரைவர் விதியை மீறி தன் விதியையும், தன்னோடு இருந்த மிகப் பலரின் விதியையும் முடித்துவிட்டார். இறந்தவர்கள் பாவம்தான்; அவர்களின் உறவினர்களும் பாவமே.

ஆனால் மாநில அரசு ஐம்பதாயிரமும், ரயில்வே பத்தாயிரமும் இறந்தவர்களின் உறவினர்களுக்குக் கொடுப்பது எதற்காக? ரயில்வே கொடுத்ததைக் கூட குறை சொல்லவில்லை; மாநில அரசு எதற்காக இந்த வள்ளல் தன்மையைக் காண்பித்துள்ளது?

அப்படிப் பார்த்தால் ஒவ்வொரு விபத்திற்கும் - என்ன காரணத்தால் ஏற்பட்ட விபத்தானாலும் அரசு இதுபோல் நஷ்ட ஈடு தருமா? தரணுமா? மழை பெய்யும்போது காருக்குள்ளேயிருந்து இறந்து போன அந்த நான்கு மென்பொருள் துறை ஆட்களுக்கும் கொடுக்கலாமே.

இதுபோன்ற விபத்துக்கள் நடக்கும்போது அரசு பணம் கொடுப்பதற்குப் பதில் அந்த நேரத்திலாவது நாம் எல்லோரும் எப்படி சிறு சிறு விதிகளை, அதுவும் போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடிப்பது எவ்வளவு முக்கியம் என்பது போன்ற செய்திகளை மக்களினூடே பரப்புவது நல்ல சில விளைவுகளை ஏற்படுத்தலாம். அதை விட்டு விட்டு இந்த தாராள மனப்பான்மையைக் காண்பிப்பது தேவையில்லா விஷயமாயிருக்கிறது. நிச்சயமாக அத்தகைய உதவிகள் கிடைக்க வேண்டியவர்களுக்குச் சரியாகக் கூட கிடைக்காமல் போகலாம் - நெல்லுக்குப் போவதற்கு முன் எத்தனை புற்களோ..?!

பொதுவாக இந்த respecting the law of the land என்பது நம்மிடையே இல்லாது இருப்பது குறித்து சமுதாயத்தில் எந்த நிலையினருக்கும் ஒரு பொருட்டாகத் தெரியவில்லையென்பது என் மனக் குறை. என் சின்ன வயதிலும் நாங்கள் no entry பாதைகளில் சைக்கிளை வேக வேகமாக உருட்டிச் செல்வதுண்டு. அப்போது இரு வகை எண்ணங்கள் மனத்திலிருக்கும்: ஒன்று, தப்பு செய்கிறோமே என்ற குற்ற மனப்பான்மை; இரண்டு, மாட்டிக்கொள்ளக் கூடாதே யென்ற பயம். இப்போது நம் யாவருக்கும் முதல் எண்ணம் நிச்சயமாக இல்லை; இரண்டாவதற்கு ஏதாவது ஒரு வழி வச்சிருப்போம்... மாட்டிக்கிட்டா பாத்துக்குவோம் என்ற எண்ணம்.. எப்படி, யாரை பாத்துக்குவோம் என்று ஆளுக்கொரு வழி.

எனக்கு ஒரு நினைப்பு: இந்த விதிகளை மதிக்கும் புத்தியை வர வைக்க ஏற்ற இடம் ரோடுகள்தான் என்று நினைக்கிறேன். stop என்று ஒரு கோடு ரோடுகளில் போட்டிருக்குமே அங்கு யாராவது சரியாக நிற்கிறோமா? அப்படி நிற்பது ஏதோ பயந்த சுபாவம் என்பது போலவும், நான் ஒரு தைரியமான ஆள் என்றோ அல்லது ஒரு புரட்சிக்காரன் போல் காட்டிக்கொள்வது போலவுமோ எல்லோரும் அந்த கோட்டிற்கு ஓரடி அளவாவது தாண்டி நிற்பதுதான் வழமை. அதுக்கு அடுத்து, பச்சை விளக்கு விழ 5-7 வினாடிகள் இருக்கும்போதே புறப்பட்டு விடவேண்டும் என்பதும் ஒரு இன்னொரு விதி. இதில் எந்த வித்தியாசமும் இருக்காது; எல்லா வயசுக்காரர்களும், படித்தவர்கள் படிக்காதவர்கள் என்பது போன்ற எந்த வேற்றுமையோ இன்றி பாய்ந்து விடுகிறோம். இதில் அங்கு நிற்கும் போலீஸ்காரர்களின் பங்களிப்பு வேறு. நாம் நின்று கொண்டிருந்தாலும் அவர்களே கிளம்புங்க என்று ஒட்டு மொத்தமாகச் சொல்கிறார்கள். இந்த இரண்டு விஷயமுமே நம் மனத்தில் ஒரு தவறான தத்துவத்தை நம்மையும் அறியாமலேயே ஊட்டி விடுமின்றது. விதிகளை மீறுவது ஒன்றும் பெரிய விஷயமில்லை; விதிகள் மீறுவதற்கே உள்ளன என்பன போன்ற கருத்துக்கள் மனதில் நிலை பெறத்தான் இந்த வழக்கம் வழி வகைக்கும். அதே போல காத்திருக்கும் இடங்களில் வரிசையில் நிற்பது என்பது ஒரு கேவலமான விஷயமாகவே பார்க்கப் படுகிறது. இது போன்று சின்னச் சின்ன விஷயங்களாக நினைப்பவைகள் மக்கள் மனத்தில் ஒரு தவறான மனப்போங்கை ஏற்படுத்தாதா? சிறு வயதிலேயே stop என்றால் stop என்பதும், பச்சை விளக்கு வந்த பிறகே புறப்படவேண்டுமென்பதும் ஒருவரின் மனத்தில் பதிந்து விட்டால் அதே நினைப்பு பெரிய விதிகளைப் பொறுத்தவரையும் வந்துவிடாதா?

எனவேதான் இந்த "படிப்பு" ரோட்டில் ஆரம்பிக்க வேண்டுமென்றேன். இதைப் பள்ளிகளில் சின்ன வயதிலேயே சொல்லிக் கொடுக்க வேண்டும் என்பதென்னவோ சரிதான். ஆனால் அந்த சிறு பிள்ளை ரோட்டிற்கு வந்து நம்மைப் பார்த்த பிறகு 'உண்மையை'ப் புரிந்து கொள்ளாதா? அதை விடவும் சரியான பள்ளி ரோடுகள்தான். அதை எப்படி செய்வது என்றெண்ணிப் பார்த்தேன். தண்டனை என்பது போல் நல்ல ஆசான் யார்? ஸ்டாப் கோட்டைத் தாண்டுகிறாயா?; பச்சை விளக்கைத் தாண்டுகிறாயா?; வண்டி ஓட்டும்போதே செல் பேசுகிறாயா? - spot fine என்று ஒன்று இருந்தால், அதையும் ஒழுங்காகச் செய்தால் நமக்கு ஒரு பயம் இருக்காதா? ஆனால் நம்மூரில் இதில் ஒரு பெரிய பிரச்ச்னை. பச்சை விளக்கைத் தாண்டினால் 100 ரூபாய் அபராதம் என்று வைத்துக் கொள்ளுவோம். மாட்டிக் கொண்டால் நாமெல்லாம் எப்படி ஆட்கள் .. அங்கேயே பேரம் பேச ஆரம்பித்து விட மாட்டோமா? நூறுக்குப் பதில் 25 வச்சுக்கங்கன்னு நாம் ஆசை காட்டினா, பாவம் காவல்துறை ஆட்கள் என்ன ஆவார்கள் .. ஆனானப்பட்ட விசுவாமித்திரருக்கே ஒரு வீக பாய்ண்ட் உண்டே.. ஆக பிள்ளையார் பிடிக்க குரங்காகி விடுமே என்று தோன்றியது. ஆனாலும், உண்மையில் செய்ய வேண்டுமென நினைத்தால் இதைச் சாதிக்க முடியும். 3 - 5 பேர் அடங்கிய குழுக்கள் நகரின் அங்கங்கே - எங்கே எப்போது என்று யாருக்கும் தெரியக்கூடாது; எங்கு வேண்டுமானாலும் இருப்பார்கள் என்ற நிலை வருமாறு இருக்க வேண்டும் - இந்த தண்ட வசூலிப்பைச் செய்ய வேண்டும். லஞ்சம் வராமலிருக்க ஒவ்வொரு குழுவிலும் ஓரிரு காவல்துறை ஆட்களும், ஒரு home guard போன்ற அமைப்புகளிலிருந்து ஒருவரும், கல்லூரிகளிலிருந்து N.S.S., N.C.C. போன்றவைகளிலிருந்து ஒரு மாணவனையும் வைத்து இக்குழுக்கள் அமைக்கப் பட்டால் ஊழல் என்று பேச்சு வராமல் நடத்த முடியும்.

விதி மீறல் தவறு என்று ரோட்டில் 'சொல்லிக் கொடுக்கப் பட்டால்' நாளாவட்டத்தில் நமக்கு இன்னும் கொஞ்சம் நல்ல புத்தி வந்துவிடாதா என்ற ஆதங்கம்தான். அப்படி ஒவ்வொன்றாக கற்றுக் கொடுக்கப்பட்டு நாம் எல்லோரும் நல்ல civic sense-உள்ளவர்களாக மாறிவிட மாட்டோமா? இது கனவோ என்னவோ... ஆனால் நடந்து விட்டால்..நடந்து விட்டால் என்பதையும் விட நடந்தே ஆகணும்..

இதோடு தொடர்புடைய பழைய பதிவொன்று இங்கே...

நடத்திக் காண்பிக்ககூடிய இடத்தில் இருப்போர் யார் கண்களுக்கேனும் இது போய் சேர்ந்துவிடாதா என்ற நம்பிக்கையில்...


.
*** இப்பதிவு இப்பதிவு 11.12.2006 தேதியிட்ட பூங்காவில் இடம் பெற்றது. (5)