Sunday, September 18, 2022

1186. என் மேல ஒரு கேசைப் போடு பார்ப்போம் - திரைவிமர்சனம்
*

என் மேல ஒரு கேசைப் போடு ... பார்ப்போம்

குமாரசாமி மாதிரி ஆளுக நிறைய இருக்காங்க ...  குன்கா மாதிரிதான் நமக்கு யாருமில்லை ...
பல நாள் கழித்து 19 (1) (a) என்ற மலையாளப் படம் பார்த்து அசந்தேன். அதைப் பார்த்த ஒரு நண்பர் இன்னும் இரு படங்கள் பெயரைச் சொல்லி அவைகளையும் பார்க்கச் சொன்னார். ஒரு 19 (1) (a) பார்த்து விட்டு, இதுபோல் தமிழில் படமெடுக்க இன்னும் பத்தாண்டுகள் ஆகும் என்றேன். ஆனால் நண்பர் சொன்ன இரு படங்களில் ஒன்றான .. என் மேல கேசைப் போடு / Enn, thaan case kodu / sue me … என்ற தலைப்பில் உள்ள படத்தைப் பார்த்தேன். பார்த்ததும், ஒரு காலத்திலும் இப்படி ஒரு படம் தமிழில் வரவே வராது என்றே முடிவு செய்தேன்.

இரண்டு நடிகர்களை முதன் முதல் பார்க்கிறேன். அவர்களைப் பற்றி நிறைய சொல்ல வேண்டும்.

கதாநாயகனின் பெயர்:  குஞ்சாக்கோ போபன்.

நீதிபதியாக (மேஜிஸ்ட்ரேட்)  - குன்ஹி கிருஷ்ணன்.

கதை, வசனம், இயக்கம்  - android kunjappan  படம் எடுத்த ரத்தீஷ் பாலகிருஷ்ணன் போடுவால்.

ஆகஸ்டில் வெளிவந்த இப்படத்திற்கு இதுவரை வசூல் 50 கோடி. இதை ஏன் சொல்கிறேனென்றால் மலையாள ரசிகர்கள் இப்படத்தை மிக நன்றாக வரவேற்றுள்ளார்கள்.

இது ஓர் அரசியல் அங்கதம். பாவப்பட்ட மனுஷன் ஒருவன்சாலையில் உள்ள பள்ளத்தினால் சுவர் ஏறிக் குதிக்கிறான். அமைச்சர் வீடு அது. நாய்கள் குண்டியைக் (என்ன .. கேட்க நாராசகமாக இருக்கிறதா? படத்தில் அப்படித்தான் பேசுகிறார்கள்!) கடித்துக் குதறி விடுகின்றன. அவன் மேல் திருட்டுக் குற்றத்தைச் சாட்டுகிறார்கள். அவனோ சாலை சரியாகப் போடவில்லை என்று அமைச்சர் மேல் கேஸ் போடுகிறான். மந்திரிக்குக் கடைசியில் தண்டனையும் தண்டமும் கிடைக்கிறது.

முதல் அரை மணி நேரம் பார்த்து விட்டுப் படுக்கப் போய்விட்டேன். வடிவேலு சொல்வது போல் நான் பார்த்த முதல் பகுதி சின்னப்பிள்ளைத் தனமாகத் தோன்றியது. ஒரே ஒரு விசயம் தவிர. கதாநாயகன் ஒரு பூமர் அங்கிள். அவர் பயந்து ஓடி ஒரு கூட்டத்தில் நிற்கிறார்.  எல்லோரும் ஆடுகிறார்கள். நம் அங்கிளும் ஆடுகிறார். அது எனக்கு நிறைய பிடித்தது. (அந்த நடனத்தைப் ப்ரோமாகப்  போட்டு பயங்கரமாக ஹிட் ஆகியிருந்திருக்கிறது. மம்முட்டியின் பழைய படத்தை வைத்து ஆடிய நடனமாம் அது..)

அடுத்த நாள் படத்தைத் தொடர்ந்தேன். நிறுத்த முடியவில்லை. கதை பெட்ரோல் 65 ரூபாய் விற்பதிலிருந்து ஆரம்பித்து, நூத்தி சொச்சம் வரை செல்வது வரை கதையும் தொடர்கிறது என்று காண்பிக்கிறார்கள். நீதிமன்றத்துக் காட்சிகள். மாஜிஸ்ட்ரேட்டாக ஒருவர் வருகிறார்.  அப்படிப் பிடித்தது அவரை எனக்கு. பெயரும் அவரைப் பற்றிய விவரங்களையும் தேடினேன். Got confused!  இறுதியில் கண்டு பிடித்து விட்டேன். அவர் பெயர் குன்ஹி கிருஷ்ணன். . அசத்தலான நடிப்பு. 

                               

வழக்கு விசாரணையைக் கேட்டுக் கொண்டே  பாதாம் பருப்பு சாப்பிடுவது, ரத்த அழுத்த மாத்திரை சாப்பிடுவதும் ... கோர்ட் அறைக்குள் சுற்றியலையும் புறாக்களை சைட் அடிப்பதும் ... மனுஷன் செம அலப்பறை. மந்திரியை போட்டுப் பார்க்கிறார். பார்க்கும் நமக்கும்  இவரைப் போன்ற குன்கா  நீதிபதிகள் இருந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றுகிறது. ஆனால் நமக்குக் கிடைப்பதெல்லாம் வெறும் வெத்து குமாரசாமிகள்  மட்டும் தான்.

சாதாரண கதை.  நிறைய ஜோக்குகள். இவைகள் எல்லாம் கற்பனைதான் என்றாலும் உண்மையாக இருக்கக் கூடாதா என்ற எண்ணங்களை மனதில் விதைக்கின்றன. இது போன்ற படங்களை அள்ளி அணைக்கும் மலையாள ரசிகர்களுக்கு என் அளப்பரிய மரியாதை.

நாங்களும் வளரணும் .........*


Friday, September 16, 2022

1185. 19 (1) (a) - திரைவிமர்சனம்


 

ப்பாடா .. ஒரு வழியாக மொழியாக்கம் செய்து கொண்டிருந்த வேலை முடிந்தது. 532 கையெழுத்துப் பக்கங்கள். இனி அதைச் சரிசெய்து…. இன்னும் எவ்வளவோ இருக்கு ... ஆனாலும் ஒரு பெரிய வேலையைச் செய்து முடித்த மகிழ்ச்சி. கொண்டாட வேண்டாமா...?


                                              

சினிமா அதுவும் மலையாளச் சினிமா பார்த்து விட வேண்டும் என்று நெட்பிளிக்ஸில் தேடலை ஆரம்பித்தேன். விஜயசேதுபதி மலையாளத்துப் படத்திலா? அதுவும் நித்தியா மேனன் படமா என்று ஓர் ஆச்சரியம். படத்தின் பெயர் 19(1)(a). அது என்ன சட்டம் என்று பார்த்தேன்: Article 19(1)(a) of the Indian Constitution upholds freedom of speech and expression.

 

படம் ஆரம்பித்தது. விடியாத இளங்காலை நேரம். விசே வருகிறார். ஒரு டீ குடிப்பதற்குள் யாரோ வந்து அவரைச் சுட்டு விட்டுப் போய் விடுகிறார்கள். அதற்குப் பிறகு கொஞ்சம் நேரம் வரை அவரைக் காணவே காணோம்.


                                               

 

படம் பார்த்ததும் அப்படி ஒரு பெரும் ஆச்சரியம். இது போன்று ஒரு படம் தமிழில் வருவதற்கு அநேகமாக இன்னும் பத்து ஆண்டுகளாவது ஆகும் என நினைக்கின்றேன்.ஏனெனில் நம் ரசிகப் பெருமக்களின் தரம் அப்படி. இப்படத்தில் விசே வரும் சீன்களை விரல் விட்டு எண்ணி விடலாம். மீதியெல்லாம் நித்தியா மட்டுமே வருகிறார். அவரைச் சுற்றி மூவர்: ஒரு (இஸ்லாமியத்) தோழி; ஒரு கம்யூனிச தோழர்; வாழ்க்கையையே ஒதுக்கி வாழும் தகப்பன். இவர்களும் வரும் இடங்கள் எல்லாமே ஒரு கை எண்ணுக்குள்ளேயே தானிருக்கும். படங்கள் எதையும் விளக்குவதில்லை. புரிந்து கொள்பவர்கள் புரிந்து கொள்ளட்டும் என்ற பாணி. டமில் ரசிகர்கள் இதில் தோற்றுவிடுவார்கள் என்று இயக்குநர்கள் பயப்படுவார்கள்.


 2017 ஆண்டில் பெங்களுரில் கொல்லப்பட்ட கெளரி லங்கேஷ் என்ற இதழாளரின் மரணம் இக்கதையின் ஆரம்ப வித்து. இதே போல் இப்படத்தில் வரும் சமுகப் போராளியான விசே கெளரி சங்கர் கொல்லப்படுகிறார். அவரால் எழுதப்பட்ட  அவரது கடைசி எழுத்துகள் நகல் எடுப்பதற்காக நித்தியாவிடம் வருகிறது.

 

பெண் இயக்குநர் இந்துவிற்கு இது முதல் படம். அவரது துணிச்சலுக்குப் பாராட்டுகள். தயாரிப்பாளருக்குப் பெரும் பாராட்டுகள். படம் ஒரு காவியம் போல் மெல்லவே விரிகிறது. படம் முழுவதும் நித்தியாவிற்கே சொந்தம். இறந்து போன போராளி மீது நித்தியாவிற்கு ஏற்படுவது மரியாதை ஏற்படுகிறது.  இல்லை .. அதையும் தாண்டி அவர் மீதான அபிமானம், அன்பு, பெருமிதம் எல்லாம் கூடுகிறது.அவரது நூலைத் தன் பையில் வைத்துக் கொண்டு நெஞ்சோடு அழுத்திப் பிடித்தபடியே இருக்கிறார்.  சுவற்றில் வரைந்த விசேயின் படத்தைப் பார்க்கும் போது பின்னாலிலிருந்து ஒரு கேள்வி: எதைப் பார்க்கிறாய்? படத்தையா, வாசகங்களையா? என்றொரு கேள்வி. நித்தியாவின் பதில் இரண்டையும் தான். இதுவும் ஒரு காதல் அல்லது பக்தி தான்.

 

விசேயின் அக்கா வீட்டிற்கு ஒரு பத்திரிகையாளரோடு செல்கிறாள் நித்தியா. அங்கே ஒரு virtual விசே வருகிறார். (இங்கேயும் டமில் ரசிகர்கள் பெயிலாகலாம்!) அமைதியான, அழகான சீன். அந்த வீட்டிலிலிருந்து கிளம்பி நடக்கும் போது நித்தியா நின்று திரும்பி வேகமாகத் திரும்பி வந்து விசெயின் அக்காவைக் கட்டிப் பிடித்துவிட்டு, பின் திரும்பாமல் விரைகின்றார். எனக்குப் பிடித்த சீன்.

  

விசே எப்படி என்றே தெரியவில்லை. தன்னுடைய இருப்பின் தாக்கத்தை முழுவதுமாகத் தந்துள்ளார். அந்தக் காலத்தில் சிவாஜி கணேசன் சிகரெட் பிடிக்கும் அழகிற்கு யாரும் பக்கத்தில் நெருங்க முடியாது என்று நினைப்பதுண்டு (புதிய பறவை, ‘யார் இந்த நிலவுப் பாடல் ... போன்றவைகள் நினைவுக்கு வருகின்றன).  அந்தப் பாடல்களில் சிகரெட்டும் இன்னொரு character ஆகவே இருக்கும். அதன்பிறகு பல நடிகர்கள் முயன்று தோற்றதை விசே மிக அழகாகச் செய்துள்ளார். சிவாஜியின் நடிப்பில் aesthetics நன்கிருக்கும். ஆனால் விசே செய்தது அப்படியே ஒரு smoker செய்யும் விதத்தை அழகாகக் காண்பித்திருப்பார். இவரும் சிகரெட்டை  ஒரு பாத்திரமாக ஆக்கியிருப்பார். மிக மிக சின்ன ரோல் தான் அவருக்கு. ஆனால் நிறைவாகச் செய்துள்ளார். இலைகள் நிறைந்த ஓர் ஒற்றையடிப்பாதையில் நடப்பதைக் காண்பித்திருப்பார்கள். நிறைந்த காட்சி. பின்னால் கதாநாயகி வந்து விடுவாரோ என்ற எண்ணம் மனதில் தோன்றுகிறது.

 

இப்படத்திப் பார்க்கும் போது, தீவிரமாக எழுதப்பட்ட ஓர் ஆணின் கவிதையை ஓர் அழகான பெண்ணின் குரலில் கேட்பது போன்றிருந்தது.

 

போராளிகள் கொல்லப்படலாம்; ஆனால் போராட்டம் சாகாது என்பதை மிக அழகாகப் படமாக்கியுள்ளனர்.

                                           Wednesday, September 07, 2022

1184. பல்வலியும் ராசாவும்*


பல் மருத்துவரைப் பார்க்கப் போனேன். நீளமாக, காலை நீட்டி உட்காருவது போலிருக்கும் படுக்கை நாற்காலியில் படுக்கப் போட்டார்கள். மருத்துவர் வந்தார். என்னைப் பரிசோதிப்பதற்கு முன் மாஸ்க் எல்லாம் போட்டுக்கொண்டு தயாராகிக் கொண்டிருந்த மருத்துவர் என்னைப் பார்த்து, “ சார்.. என்ன பிரச்சனை “என்றார். பிரச்சனையே இல்லை என்றேன். செய்து கொண்டிருந்த வேலையை நிறுத்தி விட்டு என்னை (முறைத்துப்) பார்த்தார்! கண்ணில் ஒரு கேள்விக் குறி. “பல்லே இல்லை; அதுதான் பிரச்சனை” என்றேன். இப்படி ஆரம்பித்தது பல்சேவை!

வீட்டில் நால்வர். நானும் பிள்ளைகளும் காலை, இரவு என்று ஒழுங்காகப் பல் துலக்கினோம். பாஸ் காலையோடு சரி. ஆனால் பாருங்கள் .. எங்கள் மூவருக்கும் பல்வலி..பல் பிடுங்கல்கள், root canal மருத்துவம் என்று தொடர்ந்து வந்தன. எனக்கு இருபதுகளில் ஆரம்பித்த தொல்லை தொடர்ந்து வந்ததில் இறுதியில் பல் ஏதுமில்லா நிலைக்கு ஏறத்தாழ வந்து விட்டேன். முன்னால் பற்கள் இருந்ததால் வெளியே சிரித்துச் சமாளித்தேன். ஆனால் சாப்பிட அரைக்கும் பற்கள் வேண்டுமாமே... அதற்கு நான் எங்கு போய் கடன் வாங்குவது என்ற நிலை வந்ததும் மருத்துவரிடம் சென்றேன்.

பல்லுக்கெல்லாம் லட்சக் கணக்கில் செலவாகும் என்றெல்லாம் தெரியாது. பழையன கழிதலும் புதியன புகுதலும் பல்லுக்கு சின்ன வயசில் மட்டும் தான் நடக்குமாம். இப்போதெல்லாம் பல்லு போச்சுன்னா bridge போடணுமாம்; அல்லது implant செய்யணுமாம். பல்செட் காலமெல்லாம் மலையேறிப் போச்சாம்.

நாலைந்து நாளாகத் தொடர்ந்து சென்று மருத்துவம் செய்து வருகிறேன். பல் டாக்டர் என்றாலே வலி தான் நினைவுக்கு வரும். அந்தப் பயம் நிறைய இருந்தது. ஆனால் சும்மா சொல்லக் கூடாது. ஒரு பல் பிடுங்கப்பட்டது. எழு பல்கள் root canal செய்யப்பட்டன. அது ஒரு டாக்டரம்மா (Dr. Mohana, 7806959533).. இதுவொரு டாக்டரய்யா (Dr. Praveen Kumar, 9940548982). இதுவரை வலியேதும் இல்லை. அந்த நீள நாற்காலியில் நீண்ட நேரம் படுத்திருந்ததால் கொஞ்சம் முதுகில் வலி. A good magic combo. இரு மருத்துவர்கள் .. இதுவரை தொல்லையில்லாத, வலியில்லாத மருத்துவம். root canal செய்தும் வலிக்கவில்லை என்று சொன்னால் மகள்கள் நம்ப மறுக்கிறார்கள்.

இன்னும் ஒரு மகிழ்ச்சியான விஷயம். எனக்கும் மருத்துவர்களுக்கும் அப்படியொரு good rapport. very pleasant people and that made me write this.

நேற்று ஞாயிற்றுக் கிழமையும் சென்றேன். டாக்டர் மூன்று பற்களுக்கு மட்டும் root canal செய்தார். இந்த க்ளினிக்கில் பிடித்த இன்னொரு விஷயம் ஒரு பெரிய டிவியில் இயற்கைக் காட்சிகள் மட்டும் ஓடிக் கொண்டிருக்கும். மிக மிக அழகான ரம்மியமான காட்சிகள். ஆனால் அதோடு வரும் இசை ... அடேயப்பா... வெறும் ஒற்றை பியானோ என்று நினைக்கின்றேன். அத்தனை சுகம் அதைக் கேட்பது. (எப்படியாவது நகலெடுக்க நினைத்திருக்கிறேன்). ஆனால் ஞாயிற்றுக் கிழமை என்பதால் வழக்கமான நோயாளிகள் இல்லை. நானும் இன்னொருவர் மட்டும். அதனால் டாக்டர் வேலையை ஆரம்பித்தவருக்கு இசையில்லாமல் இருந்தது பிடிக்கவில்லை. துணைக்கு இருக்கும் மகேஷிடம் பாட்டுப் போடச் சொன்னார். மகேஷ் சின்னப் பையன். என்ன பாட்டு இருக்கும் அவனிடம். இரண்டு மூன்று குத்துப் பாட்டு ஓடியது. வாய்க் கொப்பளிக்க எழுந்தவன் “ஏம்பா .. எங்க ராசா இல்லையா?” என்றேன். டாக்டரும் உடனே பாட்டுகளை மாற்றச் சொன்னார். ஆஹா ... ராசா வந்தால் தனி ரகம் தானே. அது மட்டுமா ... டாக்டரும் தன் வேலையில் கருத்தாக இருந்தாலும் பாட்டுகளையும் மெல்ல முணுமுணுத்துக் கொண்டே பாடிக்கொண்டு வேலையைத் தொடர்ந்தார். எனக்கு ஒரு சின்ன கஷ்டம் ... பாட்டு கேட்கும்போது தன்னிச்சையாக வரும் தலையசைத்தலோ, கால்களால் மெல்ல தாளமிடுவதையோ தவிர்க்க வேண்டியதிருந்தது. ஆனால் ராசாவோடு பயணம் செய்ததால் root canal-ம் எளிதாகப் போனது.  


                                                       


இந்த மருத்துவமனையில் இன்னொரு நல்ல காரியம். மருத்துவம் பார்த்த அடுத்த நாள் அங்கு வேலை பார்க்கும் முதுகலையில் பரிசும் பட்டமும் பெற்ற பெண்மணி, பாமினி நம்மைத் தொலை பேசியில் அழைத்து, சுகம் விசாரிக்கின்றார். ( ஒரு சின்ன சந்தேகம் நமக்கு மட்டும்தான் இது போன்ற அழைப்பா என்று நினைத்தேன். அனைத்து “பல்லர் & பல்லி”களுக்கும் அவ்வாறு அழைத்து சுக நலம் விசாரிப்பது பழக்கமாம்.)


இன்னும் பல் மருத்துவம் தொடர்ந்து செல்லும். ஆனால் பயந்த அளவு தொல்லையில்லை என்பதில் மகிழ்ச்சி.


Monday, August 29, 2022

1183. எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் ...*

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் ...

 அடடா .. ஒண்ணு கேட்க மறந்து போச்சே. அடுத்த தேர்தலில் சிறுபான்மையருக்கு ஓட்டுரிமை கிடையாதுன்னு பெரியவுக சொன்னாக... சரி, அப்படியே இருக்கட்டும், ஆனால் சாமி இல்லைன்னு சொல்ற சிறுபான்மையரும், இந்து மதத்திலிருந்து சாமி இல்லைன்னு சொல்றவுகளுக்கும் ஓட்டுரிமை இருக்கா இல்லையா ...?

*


Saturday, August 27, 2022

1182. என் வாசிப்பு ....

*


என் வாசிப்பு

 
Forensic Science என்றொரு விருப்பப்பாடம் - elective subject. பல ஆண்டுகள் தொடர்ந்து விருப்பத்துடன் எடுத்த பாடம். விருப்பப் பாடம் என்றால் அதில் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. பல்வேறு துறை மாணவர்கள் வருவார்கள். வகுப்பு நன்றாக இல்லாமலிருந்தால் ஆசிரியர் கல்லூரி முழுவதும் மாணவர்கள் மதிப்பில் மிகக் குறைந்த “மதிப்பெண்களே” பெற முடியும். பல்வேறு துறை மாணவர்கள் என்பதால் ஆசிர்யர்கள் பெயர் எடுப்பதும், கெடுப்பதும் எளிது. ஆகவே மாணவர்களை வகுப்பில் “கட்டிப் போட்டாக” வேண்டிய கட்டாயம் ஆசிரியர்களுக்கு உண்டு.

இந்த வகுப்புகளை எம்.ஜி.ஆர். – எம். ஆர்.ராதா வழக்கோடு ஆரம்பிப்பதுண்டு. அந்த வழக்கு நடந்த காலத்தில் தினசரிகளில் வரி விடாமல் வாசித்து வந்திருக்கிறேன். அது நல்ல வசதியாகப் போய் விட்டது. பாடத்தில் முதன் முதலில்  இந்த வழக்கு பற்றிய விவரங்கள் அதிகமாக உதவின. ராதாவின் வழக்கறிஞர் –வானமாமலை அவ்ர் பெயர் – வாதங்களை வாசித்து ரசித்தது (ஆரம்பத்திலேயே முதல் விவாதத்திலேயே matinee idol என்றொரு சொல்லைப் பயன்படுத்தினார்.) கடைசி விவாதத்தில் குண்டுகள் எந்தத் துப்பாக்கியிலிருந்து வெளிவந்தது என்று தெரியவில்லை என்று எதிர்த்தரப்பு கொடுத்த விவாதத்தையும் அடித்து நொறுக்கினார் ... நிச்சயமாக மாணவர்களின் விருப்பத்தை நம் பக்கம் எளிதில் திருப்பி விடலாம்.

அடுத்த வழக்கு ஷோபா (பாலுமகேந்திரா) தற்கொலை வழக்கு. என்னைப் பொறுத்த வரை அது தற்கொலையாக இருக்காது என்ற எண்ணம் இருந்தது. அடுத்து அதைப் பற்றிய விவாதங்கள் தொடரும். அடுத்து ஷெர்லாக் ஹோம்ஸ் கதையைப் பின்பற்றி தமிழ்வாணன் எழுதிய சங்கர்லால்  கதைகள் வரும். அதிலிருந்து Anyone leaves evidences என்ற தாரக மந்திரமே இந்தத் துறையின் அடிப்படை என்று சொல்லி... பாடங்கள் தொடரும்.

இதில் பல ஆண்டுகள் ஒரு ஆங்கில நாவலைப் பற்றிய கதைகளும் வகுப்பினுள் தலை காட்டும். Frederick Forsyth  எழுதிய THE DAY OF JACKAL கதை வந்து விடும். சில ஆண்டுகளில் வகுப்பில் இந்தக் கதை சொன்னதோடு, அந்தப் படத்தையும் போட்டுக் காண்பித்தேன். என்னைப் பொறுத்தவரையில் திரில்லர் ..திரில்லர் என்றெல்லாம் சொல்கிறோமே ... இந்தக் கதை வாசிக்கும் போது – படம் பார்ப்பதை விட கதை வாசிப்பது... அடேயப்பா .. அது ஓர் அனுபவம். டி கால் என்ற பிரஞ்சு அதிபரைக் கொல்ல ஒரு கூலிப்படை ஆளைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அவன் ஒவ்வொரு செயலும் கணக்கிட்டுச் செய்கிறான். அவனைத் தேடி வருபவரும் just one step மட்டும் பின்னால் இருப்பார். ஏறத்தாழ டி காலை நோக்கி சுட்டு விடுவார். மகாபாரத்தத்தில் வந்தது போல் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போய்விடும்’.  இந்தக் கதையைச் சொல்லி பலரை கதை வாசிக்க வைத்ததும் அல்லது அந்தப் படத்தைப் பார்க்க வைத்ததுமுண்டு.

கடைசியில் ஒரு assignment. தடயங்கள் இல்லாமல் என்னை மாணவர்கள் கொல்வதற்கு ஒரு திட்டம் தீட்டி வகுப்பில் வந்து சொல்ல வேண்டும். மற்ற மாணவர்கள் வழக்கறிஞர்களாகவோ, காவல் துறையினராகவோ இருந்து கேள்வி கேட்டு அந்தத் திட்டத்தைத் தகர்க்க வேண்டும்.

இது ஒரு பக்கம் இருக்கட்டும்.

இந்தக் கதை வாசித்து பிரம்மித்த பிறகு அவரின் மற்ற நாவல்களையும் வாசிக்க ஆரம்பித்தேன். அதில் ஒன்று NEGOTIATOR. இந்தக் கதையில் ஒருவனைக் கைது செய்து பின் கட்டாயத்தின் பேரில் விடுதலை செய்ய வேண்டும்.  அவனை விடுவிப்பதற்கு முன்பு அவனது இடைவாரில் ஒரு குண்டு ஒளித்து வைக்கப்பட்டு, அவன் தன் ஆட்களோடு சேரும்போது அதை வெடித்து அவனைக் கொன்று விடுவார்கள். அதாவது ராஜிவ் காந்தியைக் கொலை செய்வது போல் நடக்கும். அப்போது ஒன்று வாசித்த ஞாபகம். இந்த human bomb என்பது இந்த ஆசிரியரால்தான் முதன் முதலில் கற்பனையாக எழுதப்பட்டது என்று கூறப்பட்டிருந்தது. அதன்பின் இது வெவ்வேறாக வளர்ந்த கதையைத் தான் இப்போது தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறோமே.


                                         

புதினத்தின் ஆசிரியர் 84 வயதில் இங்கிலாந்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.


*


Monday, August 22, 2022

1181. பொட்டி தொட்ட கதை
*
                                                

1970களின் கடைசியில் S.L.R. பொட்டி ஒண்ணு வாங்கியாச்சு. அதிலயே பாதி ஜென்மம் சாபல்யம் அடைஞ்ச மாதிரி ஆகிப் போச்சு. ஏதோ அப்பப்ப்போ ஒரு லென்ஸ் வாங்கிறது மாதிரி நினப்பு வேற. மதுரையில் அப்போது 120 TLR காமிராவிற்குத் தான் மதிப்பு. 35 mm அப்போது தான் தலைகாட்ட ஆரம்பித்து, S.L.R. பொட்டியின் மதிப்பு உயர்ந்து கொண்டிருந்த நேரம்.

S.L.R. பொட்டியை அமெரிக்கா சென்று வந்திருந்த பேராசிரியரிடமிருந்து வாங்கினேன். அவர் ஒரு நைக்கான் பொட்டியும் சில எக்ஸ்ட்ரா லென்சுகளும் வைத்திருந்தார். ஒரு நாள் அவருடைய zoom lensயை வாங்கி வைத்திருந்தேன். உலக்கை மாதிரி பெருசா இருக்கும். 200 mm ஆக இருக்கலாம், படம் எடுக்கும் வெறி. இரண்டு மூணு நாளில் அவரிடம் லென்சைக் கொடுக்கணுமே... வேக வேகமாக என்னென்னவோ படம் எடுத்தேன். முக்கியமாக பூக்களைப் படமெடுத்தேன். அதற்காகவே ஒரு பூங்காவிற்குப் போயிருந்தேன்.

அப்போதே portrait என்பார்களே அவைகளை எடுக்க ஆசை. அன்னைக்கிப் பார்த்து நாலைந்து நாள் தாடியோடும், வெற்றிலைக் கரையோடும் ஒருவர் அங்கே உட்கார்ந்திருந்ததைப் பார்த்து அவர் மேல் லவ் வந்தது. அவ்ரிடம் போய் மரியாதையாக உங்களைப் படம் எடுக்கலாமான்னு கேட்டேன். நம்ம மக்களுக்கு அப்போதெல்லாம் போட்டோ எடுத்தால் ஆயுசு குறையும்னு ஒரு பெரும் தத்துவம் பரவலாக இருந்தது. நல்ல வேளை அவர் சரியென்றார். இரண்டே இரண்டு படம் அவரை எடுத்தேன். (அப்போதெல்லாம் படங்களை எண்ணியெண்ணி தான் எடுப்போம்.)

அப்போது எங்கள் கல்லூரியில் இரண்டே இரண்டு டார்க் ரூம் physics dept.ல் இருந்தது. அதில் இளங்கலைத் துறைத் தலைவர் என்னோடு நட்போடு இருந்தவர். அவர் ஒரு டார்க் ரூமைப் பயன்படுத்த அனுமதி அளித்தார். D.& P. அதாவது developing and printing செய்து பழகியிருந்தேன். ஒரு நாள் படங்களைப் பிரின்ட் செய்து விட்டு அவரிடம் அறைச் சாவியைக் கொடுக்கச் சென்றேன். எங்கே பிரின்ட் போட்ட படங்களைக் கொடு என்றார். கொடுத்தேன். அதில் நாம் ஒரு மாடல் வச்சி எடுத்த படம் இருந்துச்சா ...  அதை எனக்குக் கொடு என்றார். சரின்னு கொடுத்துட்டு வந்துட்டேன்.

அடுத்த நாள் மாலையில் physics மாணவர்கள் சிலர் என்னைத் தேடி வந்தார்கள். ஆகா ... அற்புதம் .. என்றார்கள். என்னப்பா என்று கேட்டேன். நான் எடுத்த படத்தை ஒரு தாளில் ஒட்டி, சுற்றி பார்டர் லைன் எல்லாம் போட்டு, என்னைப் பற்றியும் நான் எடுத்துள்ள படத்தின் சிறப்பையும் சொல்லி அதை மாணவர்களுக்கான நோட்டீஸ் போர்டில் போட்டிருந்திருக்கிறார் அவர்களின் துறைத் தலைவர், பேரா. சீனிவாசன்.

அது தான் ஆரம்பம். சில ஆண்டுகளாக ... இல்லை .. பல ஆண்டுகளாக என்றும் சொல்லலாம். கல்லூரியில் ஆசிரியர் என்பதை விட படம் எடுக்குற ஆளுன்னு பெயராகிப் போச்சு. நானும் எனது ஜோல்னா பையில் எப்போதுமே pregnantஆக இருக்கிற பொட்டியுடன் இருப்பேன். ஆட்களை விட மற்றவைகளை எடுக்கவும் அத்தனை ஆசை. எங்கள் மெயின் ஹால் படிகள் நீளமாக இருக்கும். டாப் சன் லைட்டில்  லைட் & ஷேட் வர்ர மாதிரி ஒரு படமும் கல்லூரிக்கே பரிச்சயமாச்சு. சிகப்பு எறும்புகளை ஒரு க்ளோஸ் அப் ஷாட். தமிழ்த் துறைப் பையன் தேடி வந்து, எறும்பு கண் தெரியுறது மாதிரி ஒரு படம் எடுத்திருக்கீங்களாமே.. அதைப் பார்க்கணும் என்றான். மீனாட்சி அம்மன் கோவிலின் தெற்குக் கோபுரம் எடுத்து blow up பண்ணிய படம் கல்லூரி முதல்வரின் அறைச் சுவரை அலங்கரித்தது சில காலம் .அப்டி இப்டின்னு ... காலம் போச்சு. எப்போதும் பொட்டி தூக்குற மாணவர்களோடு சகவாசம்.  நம்மைவிட அவர்களின் கலாரசனை என்னையும் உயர்த்திக் கொடுத்தது. விலங்கியல், தாவரவியல் என்று கல்லூரியில் ஒரு சமயம் ஐந்து dark rooms வந்தன என்றால் அதில் என் பங்கும் உண்டு. தொடர்பில் இருந்து, பின்  film institute போன மாணவ நண்பர்களும் உண்டு.

ஆனால் எல்லாவற்றிற்கும் அந்த மாடலின் படம் தான் ஒரு பெரிய பிள்ளையார் சுழியாக இருந்தது. அந்தப் படத்தைப் பார்த்து நல்ல படம் என்று சொல்லி, அதைப் பிரபலப் படுத்தி, எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள் என்று ஒரு dark room சாவியை என்னிடமே கொடுத்து, தட்டிக் கொடுத்த பேராசிரியர் சீனிவாசனுக்கு அன்றிலிருந்து இன்று வரை மிகவும் நன்றியோடும் அதைவிட நட்போடும் இருந்து வருகிறேன்.


                                                        


விளக்கின் திரியைத் தீண்டி விட்டவருக்கு என்றும் நன்றி.

 


 
*


Monday, August 15, 2022

1180. இந்துத்துவாவின் நகங்கள் .. மருதனின் "இந்தியா எனும் பெருங்கனவு"
*மருதனால் எழுதப்பட்ட அழகான நடுப்பக்க கட்டுரை இன்று தமிழ் திசையில் வந்துள்ளது. கட்டுரையில் அழகு மட்டும் தெரியவில்லை. ஆபத்தும் தெரிகிறது. இந்துத்துவாவின் நகங்களின் கூர்மை பற்றிப் பேசுகிறது. இன்று ஆண்டுகொண்டிருக்கும் ஒன்றிய அரசினை ஆதரிப்போர் இதை வாசித்தால் நலம்
சில முக்கிய வரிகள்...
வெவ்வேறு காலங்கள், வெவ்வேறு நம்பிக்கைகள், வெவ்வேறு கடவுள்கள், வெவ்வேறு கண்ணோட்டங்கள் ஒரே தூணில் அருகருகில் ஒன்றாக வாழ முடியும் என்பதற்கு அலகாபாத் தூண் ஓர் அழியாச் சின்னமாக உயர்ந்து நிற்கிறது. முழு இந்தியாவும் இதே போல் ஒற்றுமையோடும் வலுவோடும் காலத்தை வென்று நிமிர்ந்து நிற்க முடியும் என்று நம்பினார் ஜவாஹர்லால் நேரு.
....பன்மைத்துவத்துக்கு இடமில்லை என்பதால் அசோகருக்கும் நேருவுக்கும் இடமில்லை.
இந்த இருவரும் விரும்பியதுபோல் எல்லாருக்குமான தேசமாக அல்ல ஓர் ‘இந்து ராஷ்டிர’மாக இந்தியா திகழ வேண்டும் என்பதே இந்துத்துவத்தின் கனவு. வேறுபாடின்றி அனைவரையும் அரவணைத்துச் செல்லத் துடித்த அசோகரும் நேருவும் இன்றைய உலகில் பலவீனமானவர்கள் அல்லது தோல்வியாளர்கள்.
இந்துத்துவமோ பழையதை அழித்துவிட்டு, அந்த இடத்தில் புதிதாக இன்னொன்றை எழுதத் துடிக்கிறது. ஒரு வரலாற்றை அழித்துவிட்டு இன்னொன்றை, ஒரு மரபை அழித்துவிட்டு மற்றொன்றை, ஒரு மொழியை அகற்றிவிட்டு இன்னொன்றை அது வலியுறுத்த விரும்புகிறது. அலகாபாத் இன்று பிரயாக்ராஜாகத் திருத்தப்பட்டிருக்கிறது.
தூண் நின்றுகொண்டிருக்கும் இடத்தின் பெயரை மட்டுமே அழிக்க முடிந்திருக்கிறது. பல நூற்றாண்டுகளாக அது தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்து வைத்துப் பாதுகாத்துவரும் பெருங்கனவை அழிக்க முடியவில்லை
*


Monday, August 08, 2022

1179. CLICKBAIT*


CLICKBAIT

இந்தத் தலைப்பில் T.O.I. நாளிதழின் தலைமை ஆசிரியர் இன்று ஒரு கட்டுரை எழுதியுள்ளார். ஏதாவது ஒரு “குண்டக்க மண்டக்கதலைப்பு ஒன்றைக் கொடுத்து தங்கள் பதிவுகளை, வீடியோக்களைப் பார்க்க வைக்கும் “தந்திரம்” பற்றியெழுதியுள்ளார்.

இணையத்தில் இந்த வியாதி தீயாய் எறிகிறது. திடீரென யாராவது செத்துப் போய் விட்டார்கள் என்று ஒரு தலைப்பு. உண்மையே இல்லாமல் இப்படி ஒரு தலைப்பு கொடுத்து அவர்களது  வீடியோவைப் பார்க்க வைக்கும் “ராஜதந்திரமாம்”! அல்லது ஏதாவது  ஒரு பொய்யைத் தலைப்பாக வைத்து ஆள் சேர்க்கிறார்கள். அங்கே போய் பார்த்தால் உப்புக்கு சப்பில்லாத ஒரு சொதப்பல் இருக்கும். பார்த்ததும் ஒரே ஒரு கேள்வி மட்டும் தான் மனதிற்குள் எழும்: “இந்த முட்டாப் பசங்க ஏன் இந்த மாதிரி செய்றாங்க?”

இன்னொரு தனி மனிதன் பெரும் படையாக நம்முன் உலாவி வருகிறார். தமிழர்களுக்குச் சேவை செய்யவே வந்த செம்மல். பருமனான ஆள் என்பதால் அச்சமில்லை.. அச்சமில்லை.. என்று தலைப்பாக்காரனின் பாட்டுக்கு ஆதர்சமாகத் திகழ்கிறார். எந்த நடிகை / நடிகர் எந்த angleல் படுத்திருக்கிறார் என்பது வரை துல்லியமாகப் பார்த்து நம்மிடம் அந்த நல்ல செய்தியைக் கொண்டு வருகிறார். இவர் இப்போதைக்கு சினிமா உலகத்தை மட்டுமே புரட்டிக் கொண்டிருக்கிறார். இவர் சிறிது திசை திரும்பி காவல் துறை ஆட்கள், அரசியல்வாதிகள் என்றும் விரைவில் ஆரம்பிக்க வேண்டும் என்பது என் ஆவல். (ஏனெனில் அப்போது தான் காவல் துறைக்கோ மற்றோருக்கோ இந்த ஆளின் கழுத்தில் கைவைத்து உள்ளே அனுப்புவார்கள் என்று நினைக்கின்றேன். ) அதுவரை இது இந்த ராசாவின் காலம் தான்.

இன்னொரு பருமனான ஆளு ரம்மி விளையாட நம்மைக் கூப்பிட்டால் கூட பரவாயில்லை. ஆனால் அவரு – சரத்து குமார் அய்யா தான் – நீங்க போய் விளையாடிட்டு செத்துப் போங்கன்னு சொல்றார். அவரையும் யாரும் கேள்வி கேட்பதில்லை.

அட போங்கப்பா ....

*


Wednesday, August 03, 2022

1177. #12th MAN #FILMCRITICISM #திரைவிமர்சனம் #DHARUMIsPAGE

1178. என் வாசிப்பு ...IRVING WALLACE
*

Harold Robbins கதைகளை வாசித்த பின்புதான் ஆங்கிலத்தில் ஒரே ஆசிரியரின் கதைகளைத் தொடர்ந்து வாசிக்க ஆரம்பித்தேன் என்று நினைக்கின்றேன்.  அப்படி தொடர்ந்த இரண்டாவது ஆசிரியர் Irving Wallace. அவர் எழுதிய THE MAN என்ற நூலை முதலில் வாசித்ததும் இவரையும் தொடர்ந்து வாசிக்க வைத்தது இந்த புதினம். மனதைத் தொடும் கதை.


                                  

அமெரிக்கன் ஜனாதிபதியும் துணை ஜனாதிபதியும் விபத்தில் இறக்க, அடுத்து பதவியேற்க வேண்டிய ஸ்பீக்கரும் அறுவை சிகிச்சையின் போது இறக்க, அவருக்கு அடுத்து இருந்தவர் அவசர கால ஜனாதிபதியாகிறார். இவர் ஒரு ஆப்ரோ-அமெரிக்கன்; அதாவது ஒரு கருப்பர். கதை எழுதிய ஆண்டு 1964.  அப்போதெல்லாம் ஒரு கருப்பர் அமெரிக்க அதிபதி என்பதே நடக்க முடியாத, நினைத்தும் பார்க்க முடியாத ஒன்றாக இருந்தது. அச்சூழலில்  இவரது கதையில் ஒரு கருப்பர் அதிபதியாகிறார். நாடெங்கும் அவருக்கு எதிர்ப்பு கிளம்புகிறது. பல கற்கள் அவர் மீது வீசப்படுகின்றன. அவரது மகள் முழு கருப்பாக இல்லாமல் இருக்கிறாள். அது ஒரு கேலிப் பொருளாகிறது. தங்கள் தலைமுறைகளுக்குக் கடந்த காலத்தில் நடந்த பலவற்றைச் சொல்லி அதற்கான உண்மையை உரைக்கும் போதும் பலருக்கு அது போய்ச் சேரவில்லை. அவரது மகனைப்பற்றியும் குற்றச் சாட்டுகள். அவைகளோடு நில்லாது அவரின் பதவியைப் பறிப்பதற்காக impeachment கொண்டு வரப்படுகிறது. எதிர்நீச்சல் போட்டு நல்ல அதிபதி என்று பெயரெடுத்தும், தொடர்ந்து இரண்டாம முறையாக அதிபதியாவதற்கு ஆதரவு இருந்தும் தொடராமல் பதவிக் காலத்தை முடித்து விட்டு வெளியேறுகிறார்.


                                        

கதையின் நாயகன் நமக்கு அத்தனை பிடித்தவராகிறார். அவரது சோதனைகள் நம்மையும் துன்புறுத்துகின்றன. 1961ல் .. அதாவது இக்கதை எழுத ஆரம்பித்த காலத்தில் பிறந்த ஒபாமா 2008ம் ஆண்டு 44வது அமெரிக்க அதிபதியாகிறார். ஒரு கதை நிஜமானது.

அடுத்து வாசித்த நூல் அப்படியே நம்மை (என்னைக்) கட்டிப் போட்டது. புதிதாக ஒரு பைபிள் தொல்பொருளாக வெளிவருகிறது. இது ஏசுவின் தம்பியான ஜேம்ஸ் எழுதியதாகவும், பல புது விஷயங்கள்  அதில் இருக்கின்றன எனவும், வெளி வந்ததும் கிறித்துவ திருச்சபையே ஆட்டம் கண்டு விடுமென்றும் கருதப்படுகிறது. கிறித்துவ மதத் தலைவர்கள் இந்நூல் வெளியிடப்படக் கூடாதென்று பெரும் முயற்சியெடுப்பார்கள்.  நமக்கும் எப்போது  அந்த நூல் வெளிவருமென்று காத்திருப்போம். இறுதியில் நூல்  வெளிவருவதற்கு முன் அது ஒரு forgery என்பது தெரியும். ஆனால் மூச்சைப் பிடித்துக் கொண்டு இறுதிப் பகுதி வரை வாசிக்கும் அளவிற்கு கதைப் பின்னல் மிக அழகாக எழுதப்பட்டிருக்கும்.

அடுத்த்து ஒரு புதினம்: Seven minutes. ஒரு பெண் புணர்ச்சியின் போது அந்த ஏழு நிமிடங்களில் என்ன நினைத்தாள் என்பது பற்றி ஒரு நூல் எழுத, அந்த நூல் pornography  என்று ஒரு தரப்பு சொல்ல, மற்றொன்று அதை பெரும் நவீனமாகக் கருத... வழக்கு தொடரப்படுகிறது. இதில் வரும் விவாதங்கள் நன்றாக இருந்தாலும், வழக்கு விசாரணை நன்றாக இருந்தாலும் அவரது பழைய கதைகளின் உயரத்திற்கு இது செல்லவில்லை.

                                       


இப்படியெல்லாம் நல்ல கதைகள் எழுதிய பின் 1974ல் The fan club என்று ஒரு நாவல். முழுவதுமாக ஒரு  porno. போதுமடா சாமின்னு இவரைத் தவிர்த்து விட்டு ஓட வைத்த புத்தகம்.

*Tuesday, July 26, 2022

1176.
https://www.youtube.com/watch?v=SwT0gCwr8eY*


Friday, July 22, 2022

1175. என் வாசிப்பு ... தமிழும் ஆங்கிலமும்.
*

முந்திய என் வாசிப்பில்ஒரு தோழி பாலகுமாரனின் கதைகளும் ஆர்தர் கெய்லி போல் பல்வேறு விசயங்களை எழுதுவார் என்று சொல்லியிருந்தார். எனக்கு அப்படித் தோன்றவில்லை. மெர்க்குரிப் பூக்களிலும் இரும்புக் குதிரையிலும் யூனியன் விஷயங்களைத் தொட்டிருப்பார். உடையாரை விட்டு விடுவோம் – அரசியல் புனைவு. மற்ற கதைகளில் மனுஷன் மனதைத் தொடுவார்; மூளையை அல்ல. 

எங்கள் கல்லூரியில் கதை வாசிப்பாளர்கள் நிறைய பேர் இருந்தோம். ஆனால் ஒன்றை வாசிப்பவர் மற்றொன்றை வாசிப்பதில்லை ... அதாவது ஆங்கில நூல் வாசிப்பவர்கள் தமிழ்ப் பக்கம் ஒதுங்குவதில்லை ..vice versa . இரண்டையும் கலந்து கட்டி அடிப்பவர்கள் மிக மிகச் சிலரே. அந்தச் சிலரில் நானும் அடக்கம். வாசிக்கிற அந்த காலத்தில்  இந்த இருமொழிக் கதைகளில் உள்ள ஒரு முக்கிய  வேற்றுமையாக நானொன்றை நினைத்தேன். இந்தப் பக்கத்தில் எழுதுவதெல்லாம் என்னப் பொறுத்தவை மட்டுமே. அவைகள் என் வாசிப்பின் பிரதிபலிப்புகள். உங்கள் கருத்து உங்களுக்கு ... என் கருத்து எனக்கு. சரியா?

ஆங்கிலப் புதினங்கள் series of events அடுத்தடுத்து நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும். டக்கென்று The day of jackal என்ற கதை நினைவுக்கு வருகிறது. நிமிடத்திற்கொரு நிகழ்வு ... பக்கத்துக்குப் பக்கம் தொடர்ந்து பல அவசர நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டே இருக்கும். (இந்த நூலைப்பற்றியும் எழுத நினைத்திருக்கிறேன்.)  இது அனைத்து ஆங்கில கதைகளுக்கும் (நான் வாசித்தவைகளில்) பொதுவானதே.  classic novels, Daphne Du Maurier போன்ற ஆசிரியர்கள் இதற்குப் பொருந்தாதவர்கள் என்று மனதிற்குள் ஒரு நினைவு வந்தாலும் பல ஆங்கில நாவல்கள் –  முன்பே சொன்ன “airport”  கதைகள் - எல்லாமே அப்படிப்பட்டவை தான்.

மிகப் பல ஆங்கில நாவல்கள் புறத்தை நாடுகின்றன. ஆனால் தமிழ்ப் புதினங்கள் அகத்தையே அதிகம் நாடுகின்றன. டக்கென ஜெயகாந்தனும், தி.ஜா.ராவும் மனதிற்குள் வந்து நிற்கிறார்கள். அக்கினிப் பிரவேசத்தைத் தொடர்ந்து கங்கை எங்கே போகிறாள் கதை ஆரம்பிக்கும் போதே ஒரு பேருந்தில் அமர்ந்து ஆங்கிலத்திலேயே தன் நினைவுகளை யோசித்துக் கொண்டிருப்பாள். ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் ..ஆடும் நாற்காலிகள் ஆடுகின்றன .. எல்லாம் உள்ளுணர்வை வெளிக்கொண்டு வரும் வரிகள். திஜாரா என்றதும் நினைவுக்கு வரும் மோக முள், அம்மா வந்தாள், மரப்பசு, … எல்லாமே மனசு .. மனசு .. மனசு ...  இல்லையா? அட .. முதல்வர் புதுமைப் பித்தனை எடுத்துக் கொள்ளுங்களேன்.  ஒரு கதையின் தலைப்பையே பாருங்களேன். ஞானக் குகை .. ஞானம் வந்து விட்டதே.

இதனால் தான் நான் ஆங்கில நாவல்கள் புறத்தை நாடுகின்றன. தமிழ்ப் புதினங்கள் அகத்தையே அதிகம் நாடுகின்றன என்கிறேன்.

இதனால் தானோ என்னவோ இந்திய நாட்டின் spirituality பற்றி வெளிநாட்டினர் அதிகம் பேசுகிறார்களோ?

 

 

*


Thursday, July 21, 2022

1174. என் வாசிப்பு ...HAROLD ROBBINS*


அந்தக் காலத்தில நிறைய புத்தகங்கள் வாசித்த காலத்தில் ஒன்று மிகவும் ஆச்சரியமாக மனதில் பட்டது. அது அவ்வாறு அமைந்ததா அல்லது உண்மையிலேயே அப்படித்தானிருந்ததா என்று தெரியவில்லை. நான் விரும்பி வாசித்த நாவலாசிரியர்கள் ஏறத்தாழ எல்லோருமே யூதர்களாக இருந்ததைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன்.  கதையெழுத வேறு ஆட்களே இல்லையென்பது போலிருந்தது. ஒரு சின்னப் பட்டியல்: Leon Uris, Harold Robins, Irving Wallace, Ken Follet, Asimov, Ayn Rand, Saul Bellow … பட்டியல் இன்னும் நீளும். காரணம் புரியவில்லை.( ஒரு வேளை ஆர்ய வம்சமோ ...??)

இதில் Harold Robinsக்கு ஒரு விஷயத்தில் முதலிடம் கொடுக்க வேண்டும். ஏனெனில் அவரது நூல்களில் STONE FOR DANNY FISHER, என்பதை முதலில் வாசித்ததும் அவ்வளவு பிடித்துப் போனது. அதனால் அவரது எல்லா நூல்களையும் வாசித்து விட வேண்டுமென நினைத்தேன். இவ்வாறு ஓர் ஆசிரியர் பிடித்துப் போனால் தொடர்ந்து அவர் புத்தகங்கள் அனைத்தையும் வாசித்து முடிக்க வேண்டும் என்று நான் முதலில் முடிவெடுத்தது இவரது நாவல் வாசித்த பின்பு தான் ஆரம்பித்தது.அதன் பின் 79 PARK AVENUE, CARPET BAGGERS, DREAM MERCHANTS  … போன்ற அவரது நூல்களைத் தொடர்ந்து வாசித்தேன். இவையெல்லாம் அவர் ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் எழுதிய புதினங்கள். 1976ல் எழுதிய புதினம் .. அதைப் புதினம் என்று சொல்வதா porno என்று சொல்வதா என்று தெரியவில்லை. அதுவரை கதைகளை அழகாக எழுதியவரின் நூல்கள் எல்லாம் சாண்டில்யன் ஸ்டைல் நாவல்களாக ஆகிப் போய் விட்டன. கடைசியாக THE LONELY LADY வாசித்ததும் Harold Robinsயை மூட்டை கட்டி வைத்து விட்டேன். porno  ஆசிரியர் என்று பெயர் வாங்கி விட்டு அப்படி எழுதினால் ஏமாற்றமில்லை. ஆனால் நன்றாக புதினங்கள் எழுதும் ஆசிரியர்கள் ஏனிப்படி தாவுகிறார்கள் என்று தெரியவில்லை. அடுத்து ஒரு கதாசிரியரையும் இவ்வாறு ஒதுக்க வேண்டியதிருந்தது. அவரைப் பற்றி அடுத்துக் கூறுகிறேன்.

 

Porno என்று சொன்னதும் வாசித்த ஒரு porno புத்தகம் நினைவிற்கு வந்தது. நூலின் தலைப்போ, ஆசிரியரின் பெயரோ நினைவில் இல்லை. ஆனால் pornoவை இவ்வளவு நகைச் சுவையாக எழுத முடியுமா என்று தெரியவில்லை. ஆரம்பமே அமர்க்களம்...  அது இன்றும் நினைவில் இருக்கிறது. ஹீரோ பெயர் Father Mucker. அவரை அறிமுகப் படுத்தும் போது ஒரு spoonerism தவறு நடந்து விடும். நீங்களே இப்போது அந்தப் பெயரைத்த் தெரிந்து கொள்ளுங்களேன்!!! (தெரிந்தால் வைத்துக் கொள்ளுங்கள்; இல்லையேல் தெரிந்தவர்களிடம் கேளுங்கள் !!! – தீப்பொறி ஆறுமுகம் என்ற தமிழ் அரசியல் பேச்சாளர் அடிக்கடி சொல்லும் வசனம்!!!)  Brain transplant ஒருவருக்குச் செய்தபின் வரும் கலாட்டாக்கள். அவர் “ஒன்றுக்கு” போகும் போது அவர் படும் பாடு ....

 

நூலின் தலைப்பு ஆசிரியரின்பெயர் எல்லாம் மறந்த பிறகும் சில நூல்கள் நினைவில் தங்கி விடும். அப்படி ஒரு நூல்.

Extra terrestrial intelligence பற்றிய கதை. நிறைய physics இருக்கும். (வாசித்ததும் ஒரு physics பேராசிரியரைத் திட்டி திட்டி அதை வாசிக்க வைத்தேன்.) SETI – search for intellectual intelligence  இங்கிருந்து radio waves அனுப்பித் தேடிக் கொண்டிருப்பார்கள். அங்கிருந்தும் பதில் வந்து விடும். ஒரு உருவத்தின் படத்தை அனுப்பியிருப்பார்கள். அதற்கு மதத் தொடர்பு கிடைத்தால் மக்கள் அதை வரவேற்பார்கள் என்று கிறித்துவ தலைவர்களை அண்டுவார்கள். ஆஹா ... அப்படியே நம்மை அக்கதை இறுக்கிக் கட்டிப் போடும். 45-50 ஆண்டுகளுக்கு முன் வாசித்தது. பல முறை அதை கூகுள் ஆண்டவரிட்ம் கேட்டுப் பார்த்து விட்டேன். இன்னும் அந்த நூல் எதுவென்று கண்டு பிடிக்க முடியவில்லை.

 
*Friday, July 15, 2022

1173. என் படப்பிடிப்பு ... ஆதி காலத்தில் ... டாலருக்கு எட்டு ரூபாய் காலத்தில் எடுத்தது*


ஒரு டாலருக்கு 80 ரூபாய் ஆகப் போகிறதாம்.

இது ஒரு பழைய நினைவை கிளப்பி விட்டிருச்சிர்ரா
, பேராண்டி!

கூகுள் ஆண்டவரைத் தேடிப்போய் எப்போது ஒரு டாலருக்கு 8 ரூபாய் இருந்தது என்று பார்த்தேன். 1974. சட சடவென்று பழைய நினைவுகள். என்னோடு வேலை பார்த்த  ஒரு பெரிய சீனியர் அமெரிக்கா போய் பல வருடங்கள் இருந்து விட்டு கல்லூரி திரும்பியிருந்தார். புகைப்படக் கலையில் திறமை வளர்த்துக் கொண்ட தமிழ்ப் பேராசிரியர். அவர் தன்னுடைய் நிக்கான் காமிரா, அதனோடு பல லென்ஸ் எல்லாம் வைத்திருந்தார். இவைகளோடு மமியா – MAMIYA  Sekor SLR காமிரா ஒன்று வாங்கி வந்திருந்தார். அதுவ்ரை நான் ஒரு TLR பொட்டியோடு போராடிக் கொண்டிருந்தேன்.

அவர் அமெரிக்காவில் அந்தக் காமிராவை 880 டாலருக்கு வாங்கி வந்திருந்தார். ஒரே ஒரு தடவை கீழே போட்டு ஒரு சின்னப் பள்ளம் ஒன்றும் இருந்தது. அதை விலைக்குத் தர இசைந்தார். எனக்காக 800 டாலர் விலை போட்டுக் கொடுத்தார். டாலருக்கு 8 ரூபாயும் சில்லறையும் இருந்தது. அதையும் 8 ரூபாய் என்று கணக்குப் போட்டு ....800 x 8 =

அப்போதெல்லாம் 50 அடி பில்ம் வாங்கி நாங்களே பழைய டப்பாவிற்குள் ஐந்தடி ஐந்தடியாக வெட்டி லோட் பண்ணி வைத்து படமெடுத்துக் கொண்டிருந்த காலமது. என்னிடம் அப்போது ஐந்தடிக்குக் குறைவாக ஒரு “துண்டு” பில்ம் இருந்தது. அதைப் புதுப்பெட்டியில் போட்டு என் மூத்த மகளை .. அப்போது அவளுக்கு அநேகமாக 3 வயதிருந்திருக்கும் ... படம் எடுத்தேன். மொத்தமே ஏழெட்டு படம் எடுத்திருப்பேன்.அடுத்த நாள் கல்லூரியில் போய் பில்மை டெவலப் செய்தேன். 

ஹா ... பின்னிட்டேன் போங்கோ. எல்லா படமும் அத்தனை அழகாக இருந்தன. மகள் ஒரு அயல்நாட்டுச் சட்டை போட்டிருந்தாள். கொஞ்சம் கனமான, உல்லன் மாதிரியான துணி. படத்தில் அந்தத் துணியின்  texture அத்தனை அழகாக வந்திருந்தது. க்ளோசப் படம் எடுக்கும் போது கண்களை வைத்து போகஸ் செய்ய வேண்டுமாமே ... அதனால் கண்களும் அதே லெவலில் அவளது உடையும் அப்படியே மிக அழகாக போகஸ் ஆகியிருந்தது.

அசந்து விட்டேன் போங்கள் ... ஆனால் அதன் பிறகு அத்தனை நல்ல படம் எடுத்தேனா என்பது இன்று வரை ஒரு பெரிய கேள்விக்குறி .......

அந்தப் படத்தை இங்கே போடலாமென்று அதைத் தேட ஆரம்பித்தேன். காக்கா தூக்கிட்டு போயிருச்சு போலும் ... காணோம். அதனால் அந்த சமயத்தில் எடுத்த மூன்று படத்தைப் போட்டிருக்கிறேன்.  ஒன்று (அந்த வயதில் மட்டும்)ஒழுங்காக போஸ் கொடுத்த பெரிய மகள்; இரண்டாவது காமிரா கொடுத்த நண்பரிடம் ஒரு டெலிலென்ஸ் ஓசி வாங்கி, ரோட்டில் போய்க்கொண்டிருந்த ஒருவரை அவரிடம் அனுமதி வாங்கி எடுத்த படம் ஒன்றையும் இங்கே போட்டிருக்கிறேன்.


பழைய நினைப்புடா ... பேராண்டி !

*


Thursday, July 14, 2022

1172. என் வாசிப்பு ... ARTHUR HAILEY
*
 

கதைகள் எல்லாம் வாசித்து அரை நூற்றாண்டுகள் ஆகி விட்டன. கதைகள் எல்லாமே ஏறத்தாழ மறந்து போனது தான். ஆனால் ஒரு கதாசிரியர் எழுதிய கதையெல்லாம் மறந்து போனாலும், அவர் நாவலில் பொதிந்து வைத்திருந்த செய்திகள் அப்போதும் சரி இப்போதும் சரி பெரும் பிரமிப்பாகவே இருக்கும்.

ARTHUR HAILEY  இவரது கதைகள் வாசிக்கும் போது நல்ல கதையும் கிடைக்கும்; தொடர்பான பல செய்திகளும் வந்து சேரும். எல்லோருக்கும் தெரிந்த ஒரு கதையை வைத்து சொல்கிறேனே... AIRPORT என்றொரு நாவல். ஆங்கிலத்தில் படமாக வந்தது. தமிழிலும் வந்தது என்று நினைக்கின்றேன். சத்யராஜ் நடித்த படமோ... தெரியவில்லை. நான் தமிழ்ப்படம் பார்க்கவில்லை. ஆனால் இக்கதையை வைத்து எடுத்த படம் என்று வாசித்த நினைவு. AIRPORT-ல் ஒவ்வொரு நாள் நடக்கும் அத்தனையையும் நாம் புரிந்து கொள்ள முடியும். அங்குள்ள குளிப்பறைகளைச் சுத்தம் செய்யும் janitor என்பதில் ஆரம்பித்து, அந்த முழு விமான நிலையத்தின் உயர் அதிகாரி வரை செய்ய வேண்டிய வேலைகள், கடமைகள் பற்றியெல்லாம் நாமும் அத்தனையும் தெரிந்து கொள்ளலாம். ஒரு janitor வேலை செய்யாமலிருக்க என்னென்ன செய்வார் என்பதிலிருந்து ஒவ்வொரு விமானமும் இறங்கி ஏறிச்செல்லும் வரை உயரதிகாரிக்கு எத்தனை தலைவலி என்பதும் தெரியும். ஏதோ ஒரு புதிய வகை விமானம் மிக அதிகமாக சத்தத்தோடு ஏறும், இறங்கும். இதனால் விமானநிலையத்தின் அருகில் உள்ள வீடுகளில் உள்ள சன்னல் கண்ணாடிகள் நொறுங்கி விடும். அந்தப் பகுதி மக்கள் அதற்காக விமானநிலையத்திற்குள் வந்து கூட்டம் போட்டு எதிர்ப்பு காண்பிப்பார்கள்.நமக்கும் டெசிபல்,நம் காதுகளின் தன்மை, அதிக டெசிபல் சத்தம் கேட்பதால் நடக்கும் கேடுகள் பற்றியெல்லாம் விஞ்ஞானத்தோடு எழுதுவார். விமான நிலையத்திற்குள் நடக்கும் ஒவ்வொரு செயலைப் பற்றியும் தெரிந்து கொள்ளும்படி எழுதியிருப்பார். ஆனால் கதையின் வீரியம் சிறிதும் குறையாது.

AIRPORT, WHEELS, OVERLOAD, STRONG MEDICINE …. என்று ஒரு நீளப் பட்டியல். WHEELS கதை கார்கள் செய்யும் கம்பெனியில் நடப்பது. வெள்ளிக்கிழமையும்,, திங்கட் கிழமையும் வெளிவரும் கார்களை வாங்கக்கூடாது என்று சொல்லியிருப்பார். வெள்ளியன்று வார இறுதி நாள்.. வேளை செய்பவர்கள் ஊர் சுற்றுவதில் குறிக்கோளாக இருப்பார்கள். அன்று நன்கு வேலை செய்ய மாட்டார்கள். திங்கட்கிழமை ஹேங் ஓவர். அன்றும் ஒழுங்காக வேலை செய்ய மாட்டார்கள் என்று எழுதியிருப்பார். OVERLOAD மின்சாரக் குழுமம் ஒன்றின் கதை. ஓரிடத்தில் சில மணி நேரம் மின்சாரம் கொடுக்க முடியாத நிலையில் முன்னேற்பாடுகளாக அவர்கள் செய்யும் நேர்த்தியான வேலைகள். மின்சாரத்தின் உதவியோடு உயிரோடு இருக்கும் ஒருவருக்காக அவர்கள் செய்யும் முயற்சிகள் .. அட டா!  மனுசன் ஒரு தடவை உடல் நலமின்றி மருத்துவ மனையில் சில நாட்கள் இருந்திருக்கிறார். அதை வைத்தும் ஒரு கதை. STRONG MEDICINE … மருந்துக் கம்பெனிகள் மருந்து தயாரித்து அதை எப்படியெல்லாம் (!!!) விற்பனைக்குக் கொண்டு வருகிறார்கள் என்று ஆதியோடு அந்தமாக ஒரு கதை.

அவரது கதைகள் பலவும் வாசித்தும் நினைவுக்கு வந்த சிலவற்றைச் சொல்லியிருக்கிறேன். ஒவ்வொரு கதை எழுதுவதற்கு முன்பு அத்தனை விவரங்களைத் தெரிந்து கொள்ள எடுக்கும் முயற்சி ஆச்சரியாக இருக்கும். ஒவ்வொரு கதை எழுத தனியாக ஒரு ஆராய்ச்சி செய்வார் போலும். ஒவ்வொரு கதையும் ஒரு Ph.D thesis !!

கதாசிரியர்களின் கதைகளை அந்தக் காலத்தில் வாசித்திருக்கிறேன். இன்று கூகுள் ஆண்டவர் தயவில் அவர்கள் முகத்தையும் இப்போது பார்க்க முடிகிறது.

 
*