Monday, November 27, 2017

956. BIBLE STUDY - பழைய ஏற்பாடு ... ... 4*


ஆபிரஹாம்/இப்ராஹீம்: 

யூதம், கிறித்துவம், இஸ்லாம் என்ற மூன்று 'ஒரே கடவுள்' மதங்களுக்கும் இவரே ஆரம்பம். பிதா மகன்.

அப்படிப்பட்டவர் எப்படி மனிதர்களுக்கு ஒரு முன்னோடியாக இருக்க வேண்டும். ஆனால் அவர் எப்படிப்பட்டவர் தெரியுமா?

பஞ்சம் பிழைக்க தன் மனைவி சாராவுடன் எகிப்துக்குச் செல்கிறார். அங்கே உள்ளவர்களின் கண்கள் தன் மனைவி மேல் பட்டுவிடுமே என்றெண்ணி அவளைத் தன் சகோதரி என்று சொல்லிக் கூட்டிப் போகிறார். அங்கே ராஜாவின் கண்ணில் பட, அவர் சாராவைத் தன் அந்தப்புரத்தில் சேர்த்துக் கொள்கிறார். ஆபிரஹாமும் எக்கச்சக்கமான பணக்காரராக ஆகிவிடுகிறார்.

இதைப் பார்த்த கடவுளுக்குக் கோபம் வந்துவிடுகிறது -ஆனால் மன்னன் மேல் மட்டும்தான்; ஆபிரஹாமின் மேல் அல்ல! அந்தக் கோபத்தில் மன்னனின் குடும்பத்தின் மீது ப்ளேக் நோயைப் பரப்பி விடுகிறார் கடவுள். 
மன்னனுக்கும் சாரா யார் என்பது தெரிந்து விடுகிறது. ஆபிரஹாமையும் சாராவையும் எகிப்தை விட்டே விரட்டி விடுகிறார். (தொடக்க நூல் 12: 18-19) 


ஆப்ரஹாம் இதோடு விடுவாரா என்ன? அடுத்த நாட்டுக்கு செல்கிறார். அங்கும் கெரார் மன்னனாகிய அபிமேலக்கு என்பவரிடம் ஆபிரஹாம் தன் பழைய கதையை மீண்டும் எடுத்து   விடுகிறார். மன்னன் அவளைச் சேர்த்துக் கொள்கிறான்.

கடவுள் மறுபடியும் வருகிறார். ஆபிரஹாமை ஒன்றும் சொல்லாமல் நேரே மன்னனிடம் வருகிறார்.  அவள் ஆபிரஹாமிற்கு வாக்குப் பட்டவள் என்கிறார். அவளை இதுவரை தொடாதிருந்த மன்னன் அவளை அனுப்பி வைக்கின்றான். கடவுள் அவனின் கனவில் வந்து, “உடனே அந்தப் பெண்ணை அவளின் கணவனிடம் அனுப்பி விடு; ஏனெனில் அவனொரு இறை வாக்கினன். (தூதுவர்). அவன் உனக்காக மன்றாடினால் நீ பிழைப்பாய். அவனை நீ அனுப்பாவிடில் நீயும் உன்னைச் சேர்ந்த யாவரும் செத்து மடிவீர்கள் என்பது உறுதி என்றார்.  (தொடக்க நூல்: 20: 2-5)  மேலும், “ஆபிரகாமின் மனைவி சாராவை முன்னிட்டு ஆண்டவர் அபிமெலக்கு வீட்டிலிருந்த பெண்களை மலடியாக்கியிருந்தார். (தொடக்க நூல் 20:18)

இங்கும் தவறு செய்த இறைவாக்கினன் மீது கடவுளுக்குக் கோபம் வரவில்லை. ஆனால் அறியாமையில் இருந்த மன்னன் மீதும் அவ்வீட்டுப் பெண்கள் மீதும் தான் கடவுளுக்குக் கோபம்!

(கடவுள் யாரை இப்போது தண்டிக்க வேண்டும்? தனது இறைவாக்கினனான / தூதுவரான ஆபிரஹாமை அவர் அறிவுறுத்த வேண்டும். தண்டிக்கவும் வேண்டும்.  ஆனால் அவர் “விஷயம் தெரியாத”  மன்னன் மீதும், அவன் குடும்பத்தின் மீதும் கோபம் கொள்கிறார்.  அதுவும் தவறு செய்த இறைவாக்கினன் வேண்டினால் தான்  நீ பிழைப்பாய் என்கிறார். :( 

என்ன நீதி இது? இந்தக் கடவுள் தான் நம்  இறப்பிற்குப்பின் நமது பாவ புண்ணியங்களைப் பார்த்து நமக்கான நீதி கொடுப்பார் என்று மதம் சொல்கிறது. இப்படிப்பட்ட கடவுளிடமிருந்து நமக்கு என்ன நீதியோ??!!)

(இந்தக் கதையை எல்லாம் படித்துவிட்டு எப்படித்தான் தங்கள் பிள்ளைகளுக்கு மக்கள் ஆபிரஹாம்/இப்றாஹீம், சாரா போன்ற பெயர்களை வைக்கிறார்களோ?!)

 * *

Friday, November 17, 2017

955 நான்காவது குழந்தை பிறந்தது ...........

*


நான்காம் குழந்தை. 

நான்கில் இரண்டு தத்து எடுத்தது - மொழியாக்கம் செய்த நூல்கள் - அமினா (கிழக்குப் பதிப்பகம்) & அசோகர் (எதிர் வெளியீடு) 

அடுத்த இரண்டு நானே பெற்றது - மதங்களும் சில விவாதங்களும். (எதிர் வெளியீடு) 

 அதன் தொடர்ச்சியாக வந்த அடுத்த நூல் - கடவுள் எனும் மாயை. (எதிர் வெளியீடு) 


எதிர் வெளியீடு அனுஷிற்கு பெரும் நன்றி.


*Saturday, November 11, 2017

954. அப்பாடா ........ பூங்கா எங்களுக்கே ........ :)நிச்சயமான தீர்ப்பு ... நியாயமான தீர்ப்பு ... அதை விடவும் இத்தீர்ப்பு இனி வரும் வழக்குகளுக்கும் ஒரு கலங்கரை விளக்கு போல் இருந்து வழி காட்டும் என்பதில் எங்களுக்குப் பல மடங்கு மகிழ்ச்சி.
ஆனால் ஒரு சின்ன வருத்தம் ...

தீர்ப்பு சொன்ன பின்பும் தீர்ப்பின் நகலுக்காக 98 நாள் காத்திருக்க வேண்டியதாகிப் போய்விட்டது. தேவையில்லாத மன உளைச்சல். வாய்க்கு வந்ததை நிறுத்திய கவலை. இன்னும் ஏதேனும் எதிர்மறையாக நடந்து விடுமோ என்ற அச்சம். There was light in the tunnel ... but it was far off keeping us in limbo. கைக்கெட்டியது வாய்க்குக் கிடைக்கவில்லையே என்ற மருகல்.இப்போது நான் மொழியாக்கம் செய்து முடித்திருக்கும் நூலின் கடைசிப் பகுதியில் இது போல் பொது நல வழக்குகள் கையாளப்படும் விதம் பற்றி ஆசிரியை அழகாக வருத்தத்துடன் எழுதியுள்ளதை நாங்கள் தீர்ப்பின் நகலுக்குக்காகக் காத்திருக்கும் நேரத்தில் வாசித்து, மொழியாக்கம் செய்து கொண்டிருந்தேன்.  நல்ல ஒற்றுமை. ஆசிரியை பட்ட சோகத்தை என்னால் நன்றாக உணர முடிந்தது. great coincidence .........

நேற்று பூங்கா வேலை மீண்டும் ஆரம்பித்தது.  

1997ம் ஆண்டின் இறுதியில் நானிருக்கும் வீட்டிற்குக் குடி வந்த பிறகு 1998ம் ஆண்டில் ஏறத்தாழ 50 மரங்கள் நட்டோம். வேப்ப மரங்கள் அத்தனையும் தளைத்தன. அடுத்து நன்கு வளர்ந்தவை தூங்கு மூஞ்சி மரங்கள். இப்போதுள்ள பூங்காவின் நடுவில் ஒரு பெரிய மரம் வளர்ந்து பெரும் கிளை பரப்பி நின்றது. அதைப் பார்க்கும் போதெல்லாம் கிருஷ்ணர் கோவர்த்தன கிரியை ஒரு விரலில் தூக்கி நிறுத்தி மாடுகளுக்கு அடைக்கலம் கொடுத்திருப்பாரே ... அந்தப் படம் நினைவுக்கு வரும்.


 சென்ற முறை பூங்கா வேலை ஆரம்பித்த போது இம்மரத்தின் பெரிய கிளைகளை அரக்கி விட்டனர். மழையில் மீண்டும் நன்கு தளைத்து விட்டது.
நேற்று அந்த மரத்தை அறுத்து எடுக்க வேண்டுமென்ற முடிவு எடுக்கப்பட்டது.  ஒரு பூங்கா வருவதற்காக  ஒரு மரத்தைத் தியாகம் செய்வோம் என்றார்கள். என்னிடமும் அதற்கான அனுமதியைக் கேட்டு அதன் மூலம் என்னைப் பெருமை படுத்திய நண்பர்களுக்கு என் நன்றி.கடைசியாக அந்த மரம் எங்களுக்கு 
பூசை போட இடமளித்தது.  
நன்றி மரமே!

சென்று வா.


*

இந்த பதிவுக்குத் தலைப்பாக ODE  TO  A  FALLEN  TREE என்று வைத்திருக்கலாமோ?!

*

Wednesday, November 08, 2017

953. BIBLE STUDY - பழைய ஏற்பாடு .... 3

இந்து மதக் கடவுள்கள் கையில் பயங்கர ஆயுதங்களை வைத்திருப்பது பற்றி மற்ற மதக்காரர்கள் கேலி செய்வதோ, கேள்வி கேட்பதோ வழக்கமான ஒரு விஷயம் தான். இந்துக் கடவுள்கள் கைகளில் வித விதமான ஆயுதங்கள் வைத்துப் பயமுறுத்துகிறார்களே என்றால், ஆபிரஹாமியக் கடவுள் அவர்களின் வேதப் புத்தகங்களில் மிகவும் பயங்கரமான வார்த்தைகளோடும், கட்டுப்பாடுகளுடனும் அச்சத்தைக் கரைத்து நெஞ்சில் ஊற்றும் பயங்கரத்தைச் செய்கிறது.


”நான் உன் கடவுள் … என்னை வணங்கு”  --  என்று சொன்னால் பரவாயில்லை. ஆனால் ஆபிரஹாமிய கடவுள் (இனி, ஆபி.கடவுள் என்றழைக்கிறேன்.) மனித குலம் அத்தனையையும் “முழுக் குத்தகை” எடுத்தது போல், வேறு தெய்வங்களை நீ நினைத்தாலே உன்னை உருக்கொலைத்து விடுவேன் என்கிறது. அதற்காக ஆபி.கடவுள் கொடுக்கும் தண்டனைகள் அந்தக் கடவுளை ஈவு இரக்கமில்லாத ஒன்றாகத்தான் காட்டுகிறது. முழுவதுமாக மனித குலத்தைத் தன்னிடம் அடக்கிக் கொண்டு வேறு கடவுளைக் கும்பிட்டால் ஒழித்து விடுவேன் என்கிறது.


இணைச்சட்டம் 8:19   உங்கள் கடவுளாகிய ஆண்டவரை மறந்து, வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றி, அவைகளைப் பணிந்து வணங்கினால், நீங்கள் அழிந்து போவீர்கள் என்று இன்றே உங்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன்.

இணைச்சட்டம் 5:7-9    என்னைத் தவிர வேறு கடவுள் உனக்கு இருத்தல் ஆகாது. … எந்த உருவத்திலேனும் உனக்கென நீ சிலையைச் செய்யாதே. நானே உன் கடவுளாகிய ஆண்டவர்; வேற்றுத் தெய்வ வழிபாட்டைச் சகிக்காத இறைவன்;

இணைச்சட்டம் 4 : 24   உங்கள் கடவுளாகிய ஆண்டவர் அழிக்கும் நெருப்புப் போன்றவர்; அவர் வேற்றுத் தெய்வ வழிபாட்டைச் சகிக்காத இறைவன்.


அதையும் தாண்டி தன்னை நம்புபவர்களுக்கு இன்னும் வேறு பொறுப்புகளையும் ஆபி. கடவுள் நம்பிக்கையாளர்கள் மேல் ஏற்றி விடுகிறது.  என்னை நம்பினால் மட்டும் பற்றாது; அதைவிட வேறு தெய்வங்களைக் கும்பிடுபவர்களை இரக்கமின்றி கொன்று விடு; அந்தக் கடவுளின் சிலைகளை கூட விட்டு வைக்காது அழித்து ஒழித்து விடு என்று முரட்டுத்தனமான சட்டம் போடுகிறது.


லேவியர் 24: 16 ஆண்டவரின் திருப்பெயரை இகழ்பவர் கொலை செய்யப்படுவார்; சபையார் கல்லாலெறிவர். அன்னியரோ, நாட்டினரோ, யார் எனினும் திருப்பெயரை இகழ்கிறவர் கொல்லப்படுவார்.

விடுதலைப் பயணம் 24 : 23  நீ அவர்களுடைய தேவர்களைப்பணிந்துகொள்ளாமலும், சேவியாமலும், அவர்கள் செய்கைகளின்படி செய்யாமலும், அவர்களை நிர்மூலம் பண்ணி, அவர்களுடைய சிலைகளை உடைத்துப்போடுவாயாக.

எண்ணிக்கை 33:52  அத்தேசத்துக் குடிகளையெல்லாம் உங்களுக்கு முன்பாகத் துரத்திவிட்டு, அவர்களுடைய எல்லாச் சிலைகளையும் வார்ப்பிக்கப்பட்ட அவர்களுடைய ல்லா விக்கிரகங்களையும் அழித்து, அவர்கள் மேடைகளையெல்லாம் நிர்மூலமாக்கி, 53   தேசத்திலுள்ளவர்களைத் துரத்திவிட்டு, அதிலே குடியிருக்கக்கடவீர்கள்;
இணைச்சட்டம் 7:5   …அவர்களின் பலிபீடங்களை இடித்து, அவர்களின் சிலைத் தூண்களை உடைத்து, அவர்களின் அசேராக் கம்பங்களை வெட்டி, அவர்களின் கைவினையான சிலைகளைத் தீயில் எரித்துவிடு.

என்னைப் படைத்தாய்… என்னை வணங்குவது தான் சரி … இப்படி ஒரு கடவுள் சொல்வதாக வைத்துக் கொள்வோம். ஆனால் அந்தக் கடவுளைத் தெரியாதவர்களோ, அறியாதவர்களோ அவர்களைப் படைத்ததாக எண்ணும் வேறு ஒரு சாமியைக் கும்பிட்டு வரலாம். அதை அப்படியே எடுத்துக் கொள்ள இந்த ஆபிரஹாமிய கடவுளுக்குப் பொறுக்கவில்லையே…. அப்படி கும்பிடுபவர்களை அழித்து விடு … அவர்கள் கும்பிடும் கடவுள் சிலைகளை அடித்து நொறுக்கு உடைத்துப் போடு என்றால் … என்ன கடவுளோ இது! சுத்த பயங்கரம் என்பதும், அயோக்கியத்தனமான கட்டளையாகவும் தான் இது தெரிகிறது.

இப்படிப்பட்ட ஓர் ஈவு இரக்கமற்ற கடவுளைக் கும்பிடும் மனிதனிடம் அன்பையோ,  ஒற்றுமையையோ, அயலானோடு அணுக்கமாக அன்பாக இணைந்து செல்வதையோ எப்படி எதிர்பார்க்க முடியும்? இதனால் தான் நான் மத நல்லிணக்கம் என்பது முடியாத ஒன்று என்று சொல்லிக் கொண்டு வருகிறேன்.

ஆரம்பகாலத்தில் கிறித்துவர்கள் இருந்தது போல் இப்போது இல்லை என்பது மகிழ்ச்சியே. ஆனாலும் ஆரம்ப காலத்தில் அவர்கள் நடத்திய சிலுவை யுத்தம், Spanish inquisition போன்ற பயங்கரங்கள் வரலாற்றுப் பக்கங்களில் ஆழமாகவே எழுதப்பட்டுள்ளன. வரலாறு அவைகளை அழித்து விடாது. உலகம் உருண்டை என்று சொன்னாலே தண்டனை.  அன்றிருந்தது போல்  கிறித்துவ மதமே ஒரே உண்மையான மதம் என்ற மமதை இன்னும் அம்மக்களிடம் இருந்தாலும் அதில் முன்பிருந்த வன்மம் குறைந்து விட்டது. 


எனது இளம் வயதில் நாங்கள் செய்த ஜெபங்களில் கிறித்துவர்களை மெய் ஞானிகள் என்றும், மாற்று மதத்தினரை அஞ்ஞானிகள் என்று அழைத்த வழக்கம் இப்போது என் வாழ்நாளிலேயே மறைந்து மாறி விட்டது. கடும் சட்டங்கள் பல நீர்த்துப் போய் விட்டன. எல்லோருக்கும் தெரிந்த ஒன்றை ஒரு சான்றாகத் தருகிறேன். என் சிறு வயதில் ‘குடும்பக் கட்டுப்பாடு’ என்ற சொல்லே ஒரு கெட்ட வார்த்தையாக கிறித்துவர்களால்  நினைக்கப்பட்டது. இப்போது மதம் அதை அத்தனைக் கெட்டியாகப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கவில்லை. 

கத்தோலிக்கர் மத்தியில் ‘பாவமன்னிப்பு’ என்ற ஒரு சடங்கிற்கு என் சிறுவயதில் இருந்த முக்கியத்துவம் இப்போதில்லை. இந்த மாற்றங்கள் என் வாழ்நாளிலேயே நடந்தவைகள் தான். இப்படி சில ‘தீவிர விஷயங்கள் நீர்த்துப்  போவதைப் பார்க்கும் போது எல்லோருக்குமே  மகிழ்ச்சி. ஆனாலும் இது போன்ற சில விஷயங்கள் மாறினாலும் “எங்கள் மதமே ஒரே சரியான மதம்” என்ற உன்மத்தமான நினைப்பு கிறித்துவர்களின் மனதில் இன்னும் பொங்கி வழிந்து கொண்டேயிருப்பதில் எனக்கு வருத்தமே! அது மாறவே மாறாது ... ஏனெனில் அதைத்தானே அவர்கள் “புத்தகம்” சொல்கிறது!
ஆனால் கிறித்துவத்தில் நடந்த இந்த மாற்றங்கள் அதன் பங்காளி மதமான இஸ்லாமில் இன்னும் ஆரம்பிக்கக் கூட இல்லை என்பது ஒரு வேதனையான விஷயம். பழைய ஏற்பாட்டை பற்றி ஒவ்வொரு கிறித்துவரும் ஒவ்வொரு விதக் கருத்து சொல்வார்கள். அதனை முழுவதாக ஏற்றுக் கொள்ள பலர் தயங்குவார்கள். அதில் உள்ள வன்மமும், சில மட்டமான ரசனை உள்ள புராணக் கதைகளும் தான் இப்படிக் கை கழுவுவதற்கான காரணம். ஆனால் அதை தங்கள் வேத நூலாகவே இன்னும் வைத்திருக்க வேண்டிய கட்டாயமும் அவர்களுக்கு இருக்கிறது. I think it is an unavoidable nuisance for the Christians. 
பழைய ஏற்பாட்டின் வரலாறோ, அதனை எழுதியவர் யார், எப்போது அது எழுதப்பட்டது என்பது போன்ற கேள்விகளுக்கு இதுவரை பதிலேதும் கிடைக்கவில்லை. இப்போது கிறித்துவினால் கொடுக்கப்பட்ட புதிய ஏற்பாடு மட்டுமே நமக்கு அருளப்பட்ட முக்கியமான நூல் என்பார்கள்; ஆனால் பழைய ஏற்பாட்டையும் முழுவதுமாகப் புறக்கணிக்க முடியாத சிரமமும் உண்டு. பாவம் கிறித்துவ மக்கள்.

ஆனால் இஸ்லாமியருக்கு பழைய ஏற்பாட்டின் பல நிகழ்வுகள் அவர்களது குரானில் இடம் பெற்றிருக்கின்றன. அவர்களுக்கு புதிய, பழைய ஏற்பாடுகள் என்ற வித்தியாசம் ஏதுமில்லை. எல்லாமே குரானில் உள்ளவை. ஆகவே அனைத்தும் அவர்களுக்கு நம்பியாக வேண்டிய விஷயங்கள். அனைத்தையும் நம்பி, அதன் வழியே நடக்கிறோம் என்று சொல்லும் ISIS குழுவினரை அதனால் தான் மிதவாத இஸ்லாமியர்கள் கூட கண்டிக்க முடிவதில்லை. ISIS தரும் ஒரே பதில் – நாங்கள் குரானில் சொல்லப்பட்டதை “அப்படியே” நடத்திக் காண்பிக்கின்றோம் என்பது மட்டுமே. 

பின் ஏன் புத்தரின் உருவங்களை அவர்கள் உடைக்காமல் விடுவார்கள். ஆபி. கடவுளின் கட்டளைகள் அல்லவா அவை??!!

***

ஒத்த கருத்துடையோர் “ஆமென்” போட்டு விடலாமே!


***

Sunday, November 05, 2017

952. BIBLE STUDY - பழைய ஏற்பாடு ..... 2

*


மாத் 5-9

“அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர்.”

 ஆஹா … ஏசு அமைதி பற்றிப் பேசுகிறார். மகிழ்ச்சி.

 யோவான் 14 : 27 

“சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சாமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்”.

 தனது சமாதானத்தை நம்மிடம் கொடுக்கிறார். சமாதானத்தின் தூதுவனாக நம்மிடம் இறங்குகிறார். பெரும் மகிழ்ச்சி. 

ஆனால் .. இதென்ன புதிதாக ….?

மத்தேயு 10:34-36  

34. பூமியில் சமாதானத்தை உண்டாக்க வந்தேன் என்று நினைக்காதீர்கள்; சமாதானத்தை அல்ல, பிரிவினையையே உண்டாக்க வந்தேன். 
35.  அப்பாவுக்கு விரோதமாக மகனையும், அம்மாவுக்கு விரோதமாக மகளையும், மாமியாருக்கு விரோதமாக மருமகளையும் பிரிக்க வந்தேன். 
 36.  சொல்லப்போனால், ஒருவருக்கு அவருடைய குடும்பத்தாரே எதிரிகளாக இருப்பார்கள். 

இவையெல்லாம்  தேவனுடைய வார்த்தை என்பீர்கள். ஏன் அக்கடவுள் நம்மைப் பிரிப்பதில், குடும்பத்தை உடைப்பதில் இவ்வளவு மும்முரமாக இருக்கிறார்? அதில் அவருக்கென்ன ஆதாயம்?

மேலே சொன்ன மேற்கோளுக்குப் பொருள் தேட முயன்றேன். பல விளக்கங்கள் … ஆனால் எதுவும் சரியான விடையாகத் தெரியவில்லை.

ஏசு தனது சீடர்களை மதத்தைப் பரப்புவதற்காக அனுப்பும் போது இந்த வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். ”உருவகம்” என்றெல்லாம் பேசப்படுகிறது. ஆனாலும் சரியான பதில் கிடைக்கவில்லை.

பதில் தெரிந்தோர் பொருள் கொடுத்தால் தன்னியமாவேன்.

உதவுங்கள். 

*

https://www.facebook.com/sam.george.946/posts/10212566033819076

 *

Saturday, November 04, 2017

951. BIBLE STUDY - பழைய ஏற்பாடு ... 1
*


மத்தேயு 10 : 37

“என்னை விடவும் தன் தந்தையையும் தாயையும் அதிகம் நேசிக்கிறவன் என்னைப் பின்பற்றத்தக்கவனல்ல”.


அனேகமாக இஸ்லாமியர்களுக்கு மிகச் சின்ன வயதிலேயே மதராஸாவில் சொல்லிக் கொடுக்கும் பாடம் இதுதானென்று நினைக்கின்றேன். எல்லா இஸ்லாமியர்களும் இதை ஒரே மாதிரியாகச் சொல்வதை விவாதங்களில் பார்த்திருக்கின்றேன். 

"எங்களைப் பெற்ற தாய் தந்தையரை விட நாங்கள் நபியையே நேசிக்கிறோம்” என்று சொல்வார்கள்.

என்னடா இது … என்று பார்த்தால் இது அப்படியே விவிலியத்தில் அச்சுக் குண்டாக உள்ளது. இங்கே ஏசுவைப் பற்றிச் சொன்னது அங்கே நபிக்காக மாறி விட்டது!  ந்ல்லவேளையாக எங்களுக்கும் சிறு வயதிலேயே இதை மனப்பாடம் செய்து, நேரம் கிடைக்கும் போதெல்லாம் இதைச் சொல் என்று நிர்ப்பந்திக்கவில்லை.


இஸ்லாமிய மதம் அதற்கு முன்பிருந்த கிறித்துவ, யூத, ஜோராஸ்ட்ரியன் மதக் கோட்பாடுகளை உள் வாங்கி ஆரம்பித்து வளர்ந்த மதம் என்பார்கள் வரலாற்றாளர்கள். அதற்கு இது ஒரு சாம்பிள்!

அவிசுவாசிகளுக்கு - அதாவது,  நான் சொல்ல வந்த கருத்து உங்களுக்குப் பிடித்தால் கீழே “ஆமென்”  (அதன் பொருள் -  "அப்படியே ஆகட்டும்”)  என்று பின்னூட்டமிடவும்.


*