Showing posts with label திரை மணம். Show all posts
Showing posts with label திரை மணம். Show all posts

Thursday, September 26, 2019

1066. ஒத்த செருப்பு



*
பார்த்திபனின் ...
ஒத்த செருப்பு 
சைஸ் 7

இப்போதெல்லாம் படம் ஒரு வாரத்திற்குள் ஓடி விடுகிறதே என்றெண்ணி மூன்றாவது நாளே மழையோடு ஓடிப் போய் பார்த்தேன் - கட்டாயம் பார்த்து விட வேண்டும் என்ற ஆசையுடன். பார்த்திபன் கொடுத்த முன்னுரையும் அப்படி  ஈர்த்தது; படத்திற்குப் பின் வந்த அவரது பின்னுரையும் பாவமாக என்னை தியேட்டர் பக்கம் இழுத்தது.



படத்தின் நேரம் 2 மணி நேரம் என்று போட்டிருந்தது. அப்படி தெரியவில்லை. முதல் பாதியே வெகு விரைவில் வந்ததாகத் தோன்றியது. அடுத்த பாதியும் அதே வீச்சில் படம் நடந்து முடிந்தது. படம் முடிந்து எழுத்துக்கள் வர ஆரம்பிக்கும் போதும் சில வசனங்கள் வந்து விழுந்தன. படமும் தொடர்ந்து இரண்டே மணி நேரத்தில் எடுத்தது போல் - one-act scene போல் தோன்றியது. நிச்சயம் அதற்கான காரணங்கள் இரண்டு; ஒன்று: திரைக்கதை - தொய்வில்லாமால் தொடர்ந்து, நாடகத்தில் ஒரே சீனில் கதை நடக்குமே அது போல் மிக நேர்த்தியாகக் குழப்பமில்லாமல் தொடர்ந்து நடந்தது. இரண்டாவது: எடிட்டிங். (சுதர்சன்) தொய்வில்லாமல் இருந்ததற்கு அதுவும் ஒரு நல்ல காரணியாக இருக்க வேண்டும்.




படம் பற்றிச் சொல்ல வேண்டுமானால், இது ஒரு action-thriller. நாலைந்து கொலைகள் அல்லது மரணங்கள். கொடுமையான கொலைகள். ரத்தமும், இன்னும் வேறு உடல் திரவங்களும் நம்மீது அவ்வப்போது தெறித்து விழுகின்றன. கொலைகார சத்தம் காதைக் கொடூரமாக அறுக்கின்றது. ஒவ்வொரு கொலைக்களமும் கண்முன் விரிகிறது. அச்சத்துடம் ”பார்க்க” வேண்டியதிருக்கிறது - அது ஒரு நிகழ்வாக நம் முன் தெரியாவிட்டாலும். கதாநாயகன் - Is he normal or subnormal? என்ற கேள்வி நம்மைத் துரத்திக் கொண்டே வருகிறது. Joke அடிக்க முடியாத இடத்திலும் Joke அடிக்கிறார் - அதுவும் வேகமாக வந்து நம் மீது மோதி சட்டென மறைந்து போகிறது.

காவல் நிலையத்தில் ஒரே ஒரு அறை.ஒரு பக்கம் ஒரு சுவர் - காந்தி படத்துடன். நடுவில் கதை நாயகன். முன்னால் ஒரு மேசையும் நாற்காலியும். மேசை மேல் ஒரு பட்டம் - வாலில்லாதது; மாஞ்சா நூல் இல்லாதது. பக்கத்தில் ஒரு சன்னல். அது வழியே தெரியும் ஒரு மரக்கிளை.

படத்தில் பிடித்த இன்னொரு விஷயம். பின்னணிக் குரல்கள். அதிகமெல்லாம் இல்லை. ஐந்தாறு குரல்கள் மட்டும் பின்னணியில் ஒலித்தன. அதில் வரும் பெரிய போலீஸ் அதிகாரியின் மிரட்டல் இல்லாத குரல் .. அதைவிட மனோதத்துவ மருத்துரான பெண்மணியின் குரல். (ஒரு வேளை அந்தப் பின்குரல் நடிகை ரோகிணியின் குரலாக இருக்குமோ? தெரியவில்லை.) மிக அழகான குரல். சாந்தமும், அன்பும், அமைதியுமான குரல். கதாநாயகனுக்கு அந்த டாக்டரைப் பிடித்தது. எனக்கு அந்த டாக்டரின் குரல் மிகவும் பிடித்தது. படத்தின் சூழலுக்கும் மிகப் பொருத்தமாகவும் அமைந்திருந்தது.



கதாநாயகன் Is he normal or subnormal? என்று கேட்டிருந்தேன். அவன் நிச்சயமாக super-normal என்று தான் சொல்ல வேண்டும். மூன்று கொலை செய்து விட்டு காவல் நிலையத்திலிருந்து விடுபட்டு தன் நோய்வாய்ப்பட்ட மகனோடும் அவனது பட்டத்தோடும் பத்திரமாக வெளியே செல்ல வேண்டுமானால் அவன் நிச்சயமாக பெரிய புத்திசாலி தானே!

ஒரே நடிகன். அவ்வப்போது காமிராவிற்குப் பின்னாலிருந்து வரும் சில பல குரல்கள். ஒரே இடம். மாறாத காட்சி. முன்புலம், பின்புலம் எல்லாம் ஒன்றேதான்.  பாட்டு கிடையாது. ஒரு தமிழ்ப்படம் - அதில் காதல், பாட்டு, சண்டை இல்லாவிட்டாலும் இது ஒரு தமிழ்ப்படம். ஆச்சரியமாக இல்லை? இப்படி ஒரு படம். ஒரே போர் என்று சொல்வதற்கான அத்தனைக் காரணிகளும் இருந்தும் தொய்வில்லாமல் நேர்கோட்டில் செல்லும் படம். இப்படி படம் எடுக்க ஒரு தைரியம் வேண்டும். பார்த்திபனுக்கு அது அதிகமாகவே இருக்கிறது. ‘குடைக்குள் மழை’ என்றொரு படம் எடுத்தார். பார்க்கவில்லை. ஆனால் படம் வந்து ‘சுருண்ட’ பிறகு “இப்படத்தை நான் எடுக்காமல் வேறு ”பெரிய” - பக்க பலம் உள்ள - நடிகர்கள் எடுத்திருந்தால் இதை ஆஹா .. ஓஹோ .. என்று சொல்லியிருப்பார்கள். நான் அப்படிப்பட்ட பின்புலம் இல்லாத ஆள்” என்று சோகமாக பார்த்திபன் சொல்லியிருந்தார். இப்படத்திற்கும் அவர் அதைச் சொல்லும்படியான சூழல் இல்லாமல் போனால் - பார்த்திபனுக்கும் நல்லது; தமிழ்த் திரையுலகிற்கும் நல்லது.  

இப்போதெல்லாம் பின்னணி இசை / சத்தம் என்னை மிகவும் துன்புறுத்துவதாகவே தெரிகிறது. படத்தின் வசனங்கள் பல என் காதுகளுக்கு வருவதற்கு முன்பே பின்னணி சத்தம் வந்து குழப்பி விடுகிறது. இந்தக் ”குற்றப் பின்னணிக்குப்” பின்னால் இருப்பது என் செவித் திறனா அல்லது தியேட்டர் ஆப்ரேட்டர்களின் சதியா என்பது எனக்கு இதுவரை புரியவில்லை. இந்தப் படத்தில் அந்தக் குழப்பம் நிச்சயமாக இல்லை. வசனம் அட்சர சுத்தமாகக் காதில் விழுந்தது. பெருமை யாருக்கு? - சத்யா / சந்தோஷ் சுப்ரமணியம் / ரெசூல் பூக்குட்டி?


பி.கு.: இதை ப்ளாக்கில் போடுவதற்கு முன் ஒரு படத்தோடு போடலாமென நினைத்து கூகுள் ஆண்டவரின் images பகுதியைத் திறந்தால் அத்தனை எண்ணத்தில் படங்கள் நிறைந்து கிடக்கின்றன. அப்படியானால் மக்கள் மத்தியில் படம் நன்கு ‘நின்று” விட்டது என்றே நினைக்கின்றேன். 

பார்த்திபனுக்கு என் வாழ்த்துகளும், பாராட்டுகளும்


பி;கு. தாண்டிய இன்னொரு பி.கு.:  மகாமுனி படத்தின் துணை இயக்குநரும் நண்பராகி விட்ட கிருஷ்ண குமார் என் பதிவில் நான் செய்த தவற்றைத் திருத்த நக்கீரன் மாதிரி ”எங்கெங்கே குற்றம் இருக்கிறதோ அங்கெல்லாம் அவதாரமெடுத்து தவற்றை எடுத்துரைப்பேன்” என்பது மாதிரி இங்கேயும் இறங்கி வந்து விட்டார்.



பின்னணிக் குரல்கள் பற்றிச் சொல்லும் போது மனோதத்துவ மருத்துரான பெண்மணியின் குரல் எனக்குப் பிடித்தது என்றும், அது யார் குரலாக இருக்கலாமென நான் நினைத்தது பற்றி எழுதியிருந்தேன். அது ஒரு தகவல் பிழை என்று கூறி பின் குரல் கொடுத்த இரு பெண்கள் பற்றி கூறினார். அதையும் சேர்த்து விடுகிறேன்: மனோதத்துவ மருத்துரான பெண்மணியின் குரல் தீபா வெங்கட். நல்ல மிருதுவான குரல். பிடித்தது. மாசிலாமணியின் - அதாங்க இப்படத்தில் பார்த்திபனின் பெயர் -  மனைவிக்காகக் குரல் கொடுத்தது நடிகை காயத்திரி


மிக்க நன்றி கிருஷ்ண குமார்.


Tuesday, April 02, 2019

1037. SUPER DELUXE ... புரியலை.




*


ஆரண்ய காண்டம் பார்த்து அசந்து நின்னது இன்னும் நினைவில் இருக்கிறது. ஆனா வருஷம் ஏழெட்டு ஓடிப் போச்சு. விஜய் சேதுபதி இல்லாவிட்டாலும் தியாகராஜன் குமாரராஜா படத்தைப் பார்க்க ஆவலோடுதான் இருந்தேன். வி.சே. சேர்ந்ததால் எதிர்பார்ப்பு இன்னும் கூடிப்போச்சு.

படம் பற்றி என்ன சொல்ல என்றுதான் இப்போது புரியவில்லை.

மொத்தம் நான்கு கதைகள். தொடர்பில்லாத கதைகள். ஏனிங்கே பின்னிப் பிணைந்திருக்கின்றன என்று யோசித்துப் பார்த்தேன். புரியவில்லை.

முதல் படத்தில் நிறைய தமிழ்க் கெட்ட வார்த்தைகள் இருந்தன. இந்தப் படத்தில் அது ஒரே ஒரு வார்த்தை தான். அதையும் தமிழில் தலைகீழாகப் போட்டு ஒரு புரட்சி. புரியவில்லை.

நல்ல வேளை .. சமந்தாவைப் பொறுமையாகத்தான் பார்ப்பேன். இந்தப் படத்தில் அப்படியில்லை.அழகில்லாமல் தெரியும் அவரது உதடுகளுக்கு மேக்கப் மேன் ஏதோ மாற்றம் செய்து அவரை அழகாகக் காண்பித்திருக்கிறார். அவர் அழும் போதும், குரலை அடக்கிப் பேசும் போதும் அவர் பேசியது எனக்கு மட்டும் கேட்கவில்லையா? புரியவில்லையா? எல்லோருக்கும் அது தானா? புரியவில்லை.

அதென்ன அப்படி தலை போற ஒரு விஷயத்தை - ஒரு கொலையை(?) / மரணத்தை - அவரும் அவரது கணவரும் இவ்வளவு எளிதாக எடுத்துக் கொள்ள முடியும்? அந்தக் காரணத்தைக் கணவன் ஏற்றுக் கொள்வதும் புரியவில்லை.

பிரேதம் இருந்த வண்டியை  ரயில் பாதையில் நிறுத்தி விட்டு, அடுத்த ரயில் எப்போது வரும் என்று பக்கத்தில் கேட்கிறார் பாசில். அட... கூகுள் சாமிட்டயாவது கேட்டிருக்கலாம். அதை விட்டு யாரிடமோ கேட்டு இன்னொரு சாட்சியைத் தயார் செய்கிறார். எதற்காக இப்படி ஒரு மடத்தனம்? புரியவில்லை.

வில்லத்தனமான போலீஸ்காரருக்கு அந்தக் கொலை எப்படி தெரிந்தது என்று எனக்குத் தெரியவில்லை.அந்த விஷயம் எனக்குப் புரியவில்லை.

போலீசுக்காரர் தலையில் டிவி விழுந்து எப்படி அவர் சாகிறார்? பசங்க வீட்டுக் கூரையில் போட்டது (ஏன் டிவி அந்தப் பசங்க மாத்தினாங்க? அதில் ஏதேதோ வசனம் எல்லாம் வந்தது. என்னவென்றுதான் தெரியவில்லை. ) எப்படி இங்கே வந்து விழுந்தது. புரியவில்லை.
கடைசியில் செத்த ஆளையும் போலீஸ்காரரையும் ஒரு வண்டியில் வைத்து நாயகன், நாயகி ஊடலோடு ஊடலாடிக்கொண்டு சாதாரணமாகப் போகிறார்களே. எப்படி? புரியவில்லை.

*

வி.சே வரும் சீன்களில் லாஜிக் ரொம்ப உதைக்குது. எனக்கொரு சந்தேகம். transgenders குழந்தை பெற்றுக் கொள்ள முடியுமா? (கூகிள் சாமிட்ட கேட்டேன். Quoraவில் பதில் வந்தது. முடியுமாம்!) வி.சே. யின் பையனுக்கு இம்புட்டு புத்தியா?   இந்த ரோலுக்கு வி.சே. தேவையில்லை என்று நினைக்கின்றேன். இது புலிக்குப் புல் போட்ட மாதிரி இருக்கு நட்பிற்காகவும், வெறும் விளம்பரத்திற்காகவும் நடித்திருப்பாரோ? புரியவில்லை.

ஒரு புத்திசாலிப் பிள்ளையைக் காணவில்லை என்றால் உடனே வீட்டிற்கு வந்துவிட்டானா என்றுதானே தேட வேண்டும்.  அதைவிட்டு விட்டு பம்பாய்க்கு டிக்கெட் எதற்கு? புரியவில்லை.

*

ரம்யா கிருஷ்ணன் தரும் விளக்கங்கள் வினையா .. விளையாட்டா? காதில் பூ சுற்றுகிறாரா? மகன் தற்கொலைக்கு வேறு - கற்பு சம்பந்தப்பட்ட - சிறு விஷயம் ஒன்றைக் கூட வைத்திருக்கலாமே. ரம்யாவிற்கு ஏனிந்த கதை. புரியவில்லை.

மிஷ்கின் - அந்தக் கதை எனக்கு மிகவும் பிடித்திருக்குமென்பதில் ஆச்சரியமேது. மிஷ்கின்னும் சரி.. அதற்கு அவ்வளவு அற்புதமாக கிறித்துவ பாதிரிகளும், பிரசங்கிகளும் பயன்படுத்தும் வார்த்தைகள். சாட்சி சொல்ல சில ஆட்கள். மிஷ்கின்னும் உதவியாளரும் பின்னிட்டார்கள்  போங்க! மிஷ்கின் உதவி கேட்கிறார் அவர் கடவுளிடம். ஒன்றும் வரவில்லை. சிலையை  உடைக்கிறார். வைரம் கொட்டுகிறது. அதன் பின் அவர் கேட்கும் கேள்வி... அழகு! சுனாமியில் சாமி சிலை இல்லாமல் வேறுஏதாவதைப் பிடித்துப் பிழைத்திருந்தால் என்ன செய்திருப்பாய்? என்ற கேள்வியும் நல்ல கேள்வி!  எல்லாம் புரிந்தது.
*
அந்த 3 பசங்க ...காமெடியா? சீரியசா? Science fiction கதையா? சொல்ற கடைசித் தத்துவம் என்ன? எல்லாவற்றிற்கும் பாலியல் தான் பதிலா?

*
ரம்யா கிருஷ்ணன் பையனின் நண்பனும், வி.சே.யின் மகனும் கடைசி சீனில் குச்சி ஐஸ் சாப்பிடுகிறார்களே ... அதில் ஏதாவது ஒரு தத்துவம் ஒளிந்திருக்கிறதா? புரியவில்லை.

*    *    *    *
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.

பல விஷயங்கள் இதில் மிகவும் புதிதாகவும் நன்றாகவும் இருந்தன. ஒரு வேளை film makersக்கு அவை பாடமாகக் கூட இருக்கலாம்.

Colour ambience இதற்கான டெக்னிகல் சொல் என்னவென்று எனக்குத் தெரியாது. அது மிகவும் நன்கிருந்தது. எல்லாம் மெல்லிய சிகப்பு. அதற்கு அடுத்தது காமிரா கோணங்கள். பசங்க ஓடும் போது சந்தின் ஒரு முனையில் அவர்கள்; அடுத்த முனையில் காமிரா. வி.சே. தன் மகனைத் தேடும் போது குறுகிய பாதைகள்; சந்து பொந்துகள்.  போலீஸ் ஸ்டேஷனின்  வண்ணமும், அதன் உட் தோற்றமும் சிறப்பு. படத்தில் இரு இடங்களில் காமிரா மேலே நோக்கும் போது விமானங்கள் குறுக்கே பறக்கின்றன. காண்பிக்கப்படும் இடங்கள் எல்லாமே நன்றாக இருந்தன என்பதை விட இயற்கையாக இருந்தன. Lovely locales!

முன்பு ஒரே ஒரு படத்தில் (இந்தி) ஒரு நல்ல விஷயம் பார்த்தேன். இந்தப் படம் முழுவதும் அதைச் சிறப்பாகக் கையாண்டிருந்தார்கள். காட்சி நடக்கும் போது சூழலில் உள்ள ஒலிகள் எல்லாமே சேர்ந்தே ஒலிக்கும். அது ராஜாவின் பாடலாக இருக்கலாம், இல்லையெனில் ஏதோ ஒரு பட்டறையில் அடிக்கும் சுத்தியல் ஒலியாக இருக்கலாம், அந்தந்த அறையில் இருக்கும் டிவியின் சத்தமாக இருக்கலாம். தெருவென்றால் பல கலவையான ஒலியாக இருக்கும். (இதற்கு பாராட்டு sound effects என்று போடுவார்களே அவருக்கானதா?) இந்த ஒலிக்கலவை நன்றாக இருந்தன. ஆனால் வசனத்தை மிகவும் கவனமாகக் கேட்க வேண்டிய கட்டாயம் இருந்தது.

பாஸில், சமந்தா, வி.சே.யின் மனைவி, வி.சே., குட்டிப் பையன் ... எல்லோரும் நன்கு நடித்திருக்கிறார்கள். ஆனால் அது எதுவும் எடுபடவில்லை. கூட்டத்தில் கோவிந்தா என்றாகி விட்டன. ஏனெனில் நான்கு கதைகள் (ஆனால் திரைக்கதையில் குழப்பமே இல்லாமல் தெளிவாக இருந்தன.) அந்தக் குழப்பத்தில் இவர்களின் நடிப்பு கரையேறவில்லை. பக்ஸ் நடிப்பையும் இவர்களோடு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

எப்படியோ? படம் பார்த்ததும் கொஞ்சம் தலை சுத்தியது. ஏன் இப்படி நான்கு கதைகளை வைத்து ஒரு படம் என்ற கேள்வி முன் நின்றது, ஒரு வேளை ஒரு வித்தியாசமான படம் எடுக்கும் முயற்சியா? சமந்தா பாகம் மட்டும் எடுத்திருந்தால் ஆரண்ய காண்டம் மாதிரி ஒரு படம் இயக்குனர் கொடுத்திருக்கலாமென்று தான் தோன்றியது.

அடுத்து, முன்பு ஒரு படத்தில் வி.சே. பற்றி ஒரு வரி எழுதியிருந்தேன். சினிமாவில் உடம்பைப் பற்றிக் கவலை படாத இரண்டே இரு நடிகர்கள் - சிவாஜி, வி.சே.  என்று எழுதியிருந்தேன். ஆனால் இப்போது அந்தப் பட்டியலில் இருந்து வி.சே.யை எடுத்து விடலாம். மகிழ்ச்சி.

அதே போல், இப்போது இன்னொரு வார்த்தை வி.சே. அவர்களுக்கு. நட்பை மிகுதியாகப் பாராட்டுகிறீர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்,. ஆனால் அதற்காக உங்கள் படங்களில் வெறுமனே விளம்பரத்திற்காக நடிக்க வேண்டாமே..

இந்தப் படமும், சீதக்காதி படமும் நிறைய எதிர்பார்ப்புகளை ஏற வைத்து விடுகின்றன, ஆனால் அவை substance இல்லாமல் போய் விடுகின்றன. பார்வையாளர்களுக்கு ஏமாற்றம். சீதக்காதியில் வி.சே. இறந்த பின் வரும் காட்சிகள் என்னைப் பொறுத்தவரை வெறும் காமெடி தான். இப்படத்தில் அவருக்கு கொடுத்த வேடம், நான் சொன்னது போல், புலிக்குப் போட்ட புல்.


வி.சே. தன் நடிப்பை வெளிக்கொணரும் படங்களுக்குச் சிறப்பிடம் கொடுத்தால் என் போன்றவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். 




*





Sunday, September 30, 2018

1004. மேற்குத் தொடர்ச்சி மலை





*



 மேற்குத் தொடர்ச்சி மலை படம் பார்த்ததும் அதைப் பத்தி நாலு வரியாவது எழுதணும்னு ஆசைப்பட்ட போது முகநூலில் புதிய பதிவுகள் ஏதும் போட முடியாத சூழ்நிலை. இப்போது நாட்கள் கடந்திருச்சு. ஆறின கஞ்சி பழங்கஞ்சியாகிப் போய்விட்டது. இருந்தாலும் சொல்லணும்னு நினச்ச ஒரு விஷயத்தை யாருமே இது வரை சொல்லததால் அதை மட்டுமாவது சொல்லி விட வேண்டுமென்று ஆசை வந்திருச்சு.


 அழகர்சாமியின் குதிரை என்ற படத்தைப் பார்த்து அதைப் பற்றி நல்லதா நாலு வார்த்தை சொல்லியிருந்தேன். படத்தைப் பார்த்து எழுதியவன் அதன் ஒளிப்பதிவாளர் பற்றியும் குறிப்பிட்டிருந்தேன். இப்படம் பார்ப்பதற்கு முன்பே தேனி ஈஸ்வர் அவர்களின் புகைப்படங்களை நிறைய பார்த்து வியந்திருக்கிறேன். முதன் முதல் பார்த்தது ஒரு நாட்டியக் குழுவின் படம் என்று நினைக்கின்றேன். அதன் பின் அவரது வளர்ச்சியைத் தொடர்ந்து பார்த்து வந்து கொண்டிருந்தேன். அவர் சினிமா படம் எடுக்கிறார் என்பது தெரிந்ததும் மிக்க மகிழ்ச்சி. (என்னைப்போல் காமிராவைக் காலம் காலமாய் தூக்கிக் கொண்டு அலைந்து கொண்டிருந்து கடைசி வரை ஒன்றும் தேறாமல் போகாமல், பலர் அதில் உயர் இடத்திற்கு வரும் போது ஒரு சின்ன மகிழ்ச்சி வருவதுண்டு.) அந்த மகிழ்ச்சியோடு அந்தப் படம் பார்த்தேன். ஏனோ எனக்கு அதில் அவர் ஏறிய உயரம் போதாது என்று தோன்றியது. முதல் படம் இன்னும் முயன்றிருக்க வேண்டும் என்று நினைத்தேன். இருப்பினும் அப்படத்தில் எனக்குப் பிடித்த ஒளிப்பதிவு பற்றியும் பேசியிருந்தேன். ஆனாலும், //இரவுக் காட்சிகளாக நாலைந்து காட்சிகள். உண்மையான இருளில் படப்பிடிப்பு நடத்தியிருந்தார்கள். நன்றாக அந்தக் காட்சிகள் இருந்தன. ஈஸ்வரின் stills எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் இப்படத்தில் படப்பிடிப்பு இன்னும் அவர் நன்றாக செய்திருக்க வேண்டும் என்று தோன்றியது.// என்று எழுதியிருந்தேன். ஏன் அப்படி எழுதினேன் என்பதற்கான காரணங்கள் மறந்து போய்விட்டன. அடுத்த படம் தரமணி பார்த்தேன். ஓஹோ என்று சொல்ல மனம் வரவில்லை. 



அவை எல்லாவற்றிற்கும் ஈஸ்வரிடம் மன்னிப்பு கேட்டு விட வேண்டும் என்று மே.தொ.ம. படம் பார்க்கும் போதே தோன்றியது. மிரட்டும் அழகு என்பார்களே... அதை இப்படத்தில் அங்குலம் அங்குலமாக உணர்ந்தேன். பல டைரடக்கர்கள் நினைவுக்கு வந்தார்கள். முதலில் வந்தவர் “ப்ரம்ம்மாண்ட ஷங்கர்”! அவரது பிரமாண்டத்தையெல்லாம் இப்படத்தின் சில காட்சிகளோடு மனம் ஒப்பிட்டது. காசை வாரி இறைப்பது தான் பிரமாண்டம் என்ற ஒரு தியரியை உருவாக்கி வைத்திருக்கும் ஷங்கர் இப்படத்தின் பிரமாண்டத்தோடு போட்டி போட முடியாது என்று தோன்றியது. முழுக்காரணமும் தேனி ஈஷ்வர் தான்.


படம் முடிவதற்கு சில நிமிடங்களுக்கு முன் ஒரு காட்சி. மேகம் மூடிய ஒரு மலை உச்சி. காமிரா அந்த பனிக்குள்ளிருந்து reverseஆக வெளியே நகரும். உறைந்து போனேன். panoramic காட்சிகள் பிரம்மாண்ட உலகத்தில் நாம் எத்தனை சிறிது என்று கணத்திற்குக் கணம் காண்பித்துக் கொண்டிருந்தன. இப்படத்தின் வெற்றிக்கும், புகழுக்கும் பல காரணங்கள் இருந்தாலும் வெற்றியின் பெரும்பங்கிற்கு ஈஸ்வர் ஒரு பெரும் காரணம்.


மணிரத்தினம் படத்தில் சின்னச் சின்ன வசனங்கள் என்பார்கள். இந்தப் படத்திலோ வசனங்கள் பல நீண்டு இருக்கும். அந்த வித்தியாசம் பளிச்செனத் தெரிந்தது. ஆனால் தன் வீராப்பை வழி நெடுக வழவழவென்று பேசிக்கொண்டு சென்று, இருமி கீழே விழும் அந்த மனிதனின் நீண்ட பேச்சை மேலிருந்து கீழே நடந்து செல்வதைப் பார்த்த போதும், அம்மாவுடன் பத்திரம் எழுதச் செல்லும் கதாநாயகன் ரங்கசாமி ‘சீக்கிரம் நடந்து வா’ என்று அம்மாவிடம் சாதாரணமாகச் சொல்ல, பதிலாக அந்த அம்மா முழக்கணக்கில் திட்டிக் கொண்டே பதில் சொல்வதும் நிஜம் மட்டுமல்ல இயற்கை. நிஜ அம்மா. நிஜ கிராமத்து அம்மா. லெனின் சொல்லும் சமூகத்தின் இலக்கணமே அது தானே. 


இது ஒரு பிரம்மாண்டமான படம். பிரம்மாண்டமாக ஆக்கியது ஈஸ்வரின் பொட்டி தான்! எனக்கு ஒரு வருத்தம். நான் பார்த்த பல youtube படங்களிலோ. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலோ ஈஸ்வரின் படப்பிடிப்பு பற்றி யாரும் பேசியது என் கண்களிலோ காதுகளிலோ விழவேயில்லை. பெரும் வருத்தம். அதற்காகவே இப்பதிவு.


மணிரத்தினத்தின் முதல் படமான ப்ரியா ஓ ப்ரியா என்ற படம் பார்த்துக் கொண்டிருந்தேன் மதுரை மினிப்பிரியா தியேட்டரில். அப்போது மணிரத்தினம் பற்றி தெரியாது. படத்தில் என்னை மிகவும் மிரட்டியது காமிரா. சில ”நல்ல” தமிழ் வார்த்தைகளை மனதிற்குள் போட்டுக் கொண்டு ‘எவண்டா இந்த ஒளிப்பதிவாளர்” என்று நினைத்துக் கொண்டே படத்தின் முதல் பாதியை பார்த்து விட்டு, இடைவேளையில் வேகமாக வெளியே வந்து அங்கிருந்த போஸ்டர்களைத் தேடி ஓடினேன். பாலு மகேந்திரா. அதற்கு முன்பும் எனக்கு அவரைத் தெரிந்திருந்தாலும் அன்று அவர் அடிமையானேன்.


 இந்த நிகழ்வும் எனக்கு மே.தொ.ம. படம் பார்க்கும் போது நினைவுக்கு வந்தது.





*

Wednesday, July 27, 2016

900. கபாலி









*

 இன்னும் கபாலி படம் இன்னும் பார்க்கவில்லை.

ஆனால் நாக்கு தள்ளும் அளவிற்கு ஊடகங்களில் அதைப் பற்றிய விமர்சனங்களை மூச்சு முட்ட வாசித்தாயிற்று.

சீக்கிரம் பார்க்கணும்

ரஞ்சித் அளித்த ஒரு காணொளி பார்த்தேன். மிக நீளமான காணொளி  என்றாலும் பார்த்ததும் ரஞ்சித் பிடிச்சிப் போச்சு. மனுஷன் கட் அண்ட் ரைட்டா பேசியிருக்கார். பேச்சில் தன்மையும் ஆழமும் நிறைய இருக்கு. பேசிய விஷயங்கள் சரியாகப் பிடிச்சிது. இந்த காணொளி பார்த்த போது ரஞ்சித் மேல் மரியாதை வந்தது. நல்ல படம் எடுத்தும் மனுஷன் தளும்பவேயில்லை ….”இது தான் நான்” என்று அந்த காணொளியை முடித்தது அருமை …

 மகிழ்ச்சி

அந்தக் காலத்தில் நடிக்க வர்ர நடிக நடிகையர்களிடம் ஊடகக்கார்ர்கள் - இப்போது மாதிரி தான் ... நல்ல கேள்வி கேட்கவே மாட்டார்கள் -  ஒரு வழக்கமான கேள்வி கேட்பார்கள்.

 “நீங்க ஏன்நடிக்க வந்தீங்க?”

 அதற்கான வழக்கமான பதில்: “கலைத்தாய்க்கு சேவை செய்ய வந்தேன்.” 

இப்படித்தான் ரொம்ப நாளா வண்டி ஓடிக்கொண்டு இருந்தது. நடுவில் ஒரு மனுஷன் – ரொம்ப வித்தியாசமான மனுஷன் – வந்தார். எம்.ஆர். ராதா. அவர் பணத்துக்காக நடிக்க வந்தேன் அப்டின்னார். ஏங்க கலைத்தாய்க்கு சேவை செய்ய வரலையான்னு கேட்டாங்க. அப்போ ஒண்ணு சொன்னார். அப்படி சொல்றவங்க எல்லாத்தையும் காசு வாங்காம நடிக்கச் சொல்லு பாப்போம். அதெல்லாம் ஒண்ணும் கிடையாதுன்னு சொன்னார். அன்னையிலிருந்து ஒருத்தரும் வாயைத் திறந்து கலைத்தாய் பத்தி பேசுறது இல்லை. அப்படி பேசுற பழக்கம் அவரால நின்னுது.

அது மாதிரி இப்போவும் ஒரு ஆளு வரணும். நானும் பாத்துட்டேன். ரஜினி கூட நடிக்கிறதே பெருசு மாதிரி சும்மா அளந்து விடுவாங்க. கூட கொஞ்சம் விளம்பரம் வேணும்னாலும் கிடைக்கலாம். அதோட சரி… அதுவும் அவர வச்சி டைரக்ட் பண்ணணும்னு நிலை வந்திச்சின்னு வச்சுக்குங்க… ஒரு கூடைப் பூவோட தான் அலைவாங்க. போன ஜன்மத்துப் புண்ணியம் அது இதுன்னு ஒரே டயலாக். கேட்டு காதே புளிச்சிப் போச்சு. சரி…அவர வச்சி டைரக்ட் பண்ற/ கூட நடிக்கிற…. பெரிய புண்ணியம்னு சொல்றல்ல .. காசு வாங்கம ..போன ஜன்மத்துப் புண்ணியத்தின் படி செஞ்சிட்டு போன்னு சொல்ல ஒரு ஆளு வரணும்.

ஆனால் ரஞ்சித் அந்த மாதிரி எதுவும் பேசாம புண்ணியம் கட்டிக்கிட்டாரு. ஆஹா.. ரஜனி படத்தில நடிக்கிறதே பெருசுன்னு எல்லோரும் ஒரே மாதிரி சொல்லிக்கிட்டு இருக்கிற ஊர்ல ரஞ்சித் அப்படியெல்லாம் பேசாததே பெரிய விஷயம். தனக்கே ஒரு மரியாதையைக் கொடுத்திருக்கிறார். அதனால் அவர் மேல் மதிப்பு உயர்கிறது.

 அட …அதையெல்லாம் விட சிவாஜி அவ்வளவு பிடிச்சிருந்தாலும், இன்னும் புத்தியில்லாம இப்படி நடிச்சிக்கிட்டு இருக்கிறாரேன்னு அவருக்கு வயசானப்போ தோணுச்சு. அவர் காலத்தில பாலிவுட்ல அசோக்குமார் அப்டின்னு ஒரு நடிகர் இருந்தார். சிவாஜியை ஒட்டிய வயசு. வயசுக்கேத்த மாதிரி படங்கள் நடிச்சார். இது மாதிரி நம்ப ஆளும் growing majestically oldன்னு சொல்ற மாதிரி நடிக்க மாட்டேங்குறாரேன்னு கவலையா பேசிக்குவோம். அட அத உடுங்க ..அது பழைய காலத்துக் கதை. ஷோலே தவிர எந்த படத்திலும் பிடிக்காத அமிதாப் இப்போ நடிக்கிற படம் எல்லாம் பிடிக்குது. இன்னும் கமலும் ரஜினியும் டூயட் பாடிக்கிட்டே இருக்காங்களேன்னு நினச்சா எரிச்சல் தான் வரும்.

ஆனால் இந்தப் படத்தில் வயதுக்கேற்ற வேடம் என்பதாலேயே பிடித்தது அப்டின்னு ரஜினி சொன்னார் என்று சொன்னதைக் கேட்டதும், அப்படி ஒரு படத்தில் நடிச்சதும் ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு.

இந்த இடத்தில் சுகுணா திவாகர் எழுதிய ஒரு கருத்தை இங்கே மேற்கோளிடுகிறேன்:
 இன்றைக்கு ரஜினிக்குச் சவால் கமல் அல்ல. மாறியுள்ள தமிழ் சினிமா சூழலும் உலகின் எந்த நடிகர்களுக்கும் குறைவில்லாத அளவு நடிப்புத்திறமையை வழங்கும் தனுஷும் விஜய்சேதுபதியும்தான். ஆனால் 'கபாலி'யில் வழங்கியதைப் போன்ற நடிப்பை ரஜினி தொடர்ந்து வழங்கினால் தனுஷுக்கும் விஜய்சேதுபதிக்கும் முதல் சவாலே ரஜினிதான். 

இனிமேயாவது ரஜினி நல்ல படங்களில் நடிப்பார் என்று தோன்றியது. ஆனால் ஷங்கர் என்ற மோசமான, எல்லாத்துலயும் பெயிண்ட் அடிக்கிற ஒரு “பிரமாண்ட” டைரடக்கரின் பற்றிய நினைப்பும் வந்து வயிற்றைக் கலக்கியது.








 *

Friday, August 22, 2014

784. படம் பார்க்கப் போன வரலாற்று நிகழ்வு









*




 சவாலே சமாளி. சிவாஜி; ஜெயலலிதா.முதல் நாள். மதுரை தேவி தியேட்டர். (இராதாகிருஷ்னன் பார்த்திபனாக இல்லாமல் வெறும் பார்த்திபனாக இருந்த போது ’ஹவுஸ் புல்’ அப்டின்னு ஒரு படம் எடுத்தாரே, அந்த தியேட்டர் தான்.) முதல் நாள் மாலை படம் போகலாம்னு நண்பன் ஆல்பர்ட் சொன்னான். அதெல்லாம் வேண்டாண்டா... யாரு அடி வாங்குறது. பிறகு பார்த்துக்கலாம் அப்டின்னேன். நான் டிக்கெட் வாங்கிர்ரேன்... வா’ன்னு இழுத்துட்டுப் போனான். 


கிழக்கு மேற்காகப் போகும் ரோட்டில் அந்த தியேட்டர் இருந்தது. தியேட்டரும் கீழ் மேலாக இருந்தது. ரோட்டிலிருந்து 100 மீட்டர் நீளம் தாண்டி தான் தியேட்டர். அந்த 100 மீட்டரும் ஒரு ரோட் மாதிரி நீளமாக தியேட்டருக்குள் போகும்.இந்தச் சாலையின் இரு பக்க ஓரத்தில் சுவர் ஓரமாக ஒரு ஆள் போகும் அகலத்தில் கம்பி வைத்து வரிசையாக டிக்கட் வாங்க கட்டி இருப்பார்கள். தலைக்கு மேல் தகரம் போட்டிருக்கும். மெயின் கேட்டை மூடி இரு காவலர்கள் நிற்பார்கள். அந்த மெயின் வாசல் வரை டிக்கெட் வாங்க அதில் வரிசையாக ஆட்களை நிறுத்தி இருந்தார்கள். மெயின் கதவுக்கு வெளியே ரோட்டில் ஜே..ஜே ..ன்னு கூட்டம்.

மெல்ல கேட் வரை நானும் ஆல்பர்ட்டும் போனோம். எனக்கு அவ்வளவு தான் தைரியமிருந்தது. போதும்டா... வா போய்டுவோம் அப்டின்னேன். கொஞ்சம் பொறு; C.T.O. (commercial tax office அப்டின்னு சொல்லிப் பார்க்கிறேன் என்று சொல்லி திடீரென்று கூட்டத்திலிருந்து எல்லாவற்றையும் தள்ளிக்கொண்டு போவது போல் வாயில் காப்பான் பக்கதில் போய் விட்டான். என்னமோ பேசினான். கதவைத் திறந்து உள்ளே விட்டு விட்டார்கள். எல்லோரும் வரிசையில் நிற்கும் போது இவன் மட்டும் நேரே தியேட்டர் வாசலுக்குப் போய் விட்டான். அங்கே ஒரு பெரிய கதவு இருக்கும். அங்கே போனான் ... அடுத்து உள்ளே போய்விட்டான்.

கொஞ்ச நேரம் ஆளைக் காணோம். எனக்கு என்ன பயம்னா ... ஆல்பர்ட் பயலுக்கு இத்தனூண்டு உடம்பு. ஆளும் குட்டை; சின்ன உருவம். இவன் உடம்புக்கு C.T.O. அப்டின்னு சொன்னாலும் யார் நம்புவார்கள்... உள்ளே விட்டு ’மாட்டிறக் கூடாதேன்னு’ எனக்குப் பயம். கொஞ்ச நேரம் ஆளைக் காணோம். டிக்கெட் குடுக்க ஆரம்பித்தார்கள். பாதி வழி வந்து, அங்கிருந்து என்னைப் பார்த்துக் கையைக் காண்பித்தான். நானும் அப்படியே உள்ளே போய் விட்டேன். இப்படி முதல் நாள் ஒரு படம் பார்த்தோம்.

அடுத்த முறையும் இதே போல் சினிமா முதல் நாள் போவோம் என்றான்.  நான் வரமாட்டேன் என்று சொல்லி விட்டேன். ஏனென்றால் ஏதோ அந்த தியேட்டர் ஆளுக அவன நம்பிட்டாங்க ... எப்படித்தான் நம்பினார்களோ! அடுத்த தியேட்டர்லயும் இதே போல் சொன்னா என்ன ஆகுமோன்னு பயமா இருக்குடான்னு சொல்லி அவனையும் தடுத்து நிறுத்தி விட்டேன். அப்போவெல்லாம் தியேட்டர்னா கூட்டமோ .. கூட்டம். அதில் இப்படிப் படம் பார்த்ததெல்லாம் ஒரு பெரிய adventure தான்!

இது பழைய்ய்ய்ய கதை. ஆனால் புதிய கதை என்ன தெரியுமா?

சில படங்களை மட்டும் தியேட்டரில் பார்க்க ஆசை. பொதுவாக அவை எல்லாம் இயக்குனர்களை வைத்து கொடுக்கும் முன்னுரிமை. சமீபத்தில் வந்தவற்றில் ஜிகர்தண்டா, சதுரங்க சூதாட்டம் இரண்டையும் பார்த்தேன் - வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த இரு தியேட்டர்கள். எளிதாகப் போயிற்று. இன்னொரு படமும் இயக்குனர் வைத்து பார்க்க நினைத்தேன். தொலைவில் தியேட்டர்கள் இருந்ததால் இன்று .. நாளை .. என்று தள்ளிப் போனது. சென்ற வியாழக்கிழமை படம் பார்த்து விட முடிவு செய்தேன். அடுத்த நாள் படங்கள் எல்லாம் மாறி விடுமேன்னு நினைத்தேன். ஆனால் மதியம் தூக்கம் கண்ணைக் கட்டியது. சரி ஒரு மணி நேரம் மண்டையைப் போடுவோம்னு நினச்சி நாலு மணிக்குப் படுத்தேன். ஆனால் எழுந்த போது மணி 5.30.

இனி எங்கே போவது என்று நினைத்து, தங்ஸிடம் சினிமா போகலாம்னு நினச்சேன்; தூங்கிட்டேன் என்றேன். தங்ஸிற்கு நான் பார்க்க நினைத்த படம் தெரியும். ’ஏம்’பா இனிமே போக முடியாதா’ன்னு கேட்டாங்க. அது எனக்கு ஒரு கிரியா ஊக்கியாகிப் போனது. போய்ட்டு வந்திருவோம்னு நினச்சி புறப்பட்டேன். மணி 5.45

நான் இருந்தது மதுரைக் கிராமத்தின் மேற்குக் கடைசி. நான் படம் பார்க்க நினைத்தது கிழக்குக் கடைசி. முன்பு ஒரு நல்ல படம் - ஆரண்ய காண்டம் - படம் பார்க்கப் போனேன். படமும் நன்றாக இருந்தது; தியேட்டரும் நன்றாக இருந்தது; இடைவேளையில் சாப்பிட்ட குல்ஃபி ஐஸ் க்ரீமும் நன்றாக இருந்தது. இதனாலேயே அந்தத் தியேட்டருக்குப் போக வேண்டும் என்று நினைத்திருந்தேன்.

நடுவில் பெட்ரோல் வேறு போட வேண்டியதிருந்தது. அடிச்சிப் பிடிச்சி தியேட்டருக்குப் போனேன். எப்படியும் பத்துப் பதினைந்து நிமிடம் போயிருக்கும் என்று நினைத்து தியேட்டருக்குப் போனேன். வாசலில் இருந்த இளம் வயதுக் காப்போன் படம் இன்னும் ஆரம்பிக்கவில்லை; இன்னும் டிக்கெட்டும் கொடுக்கவில்லை என்றார். ஏன் என்றேன். பத்து இருபது பேராவது வந்தால் தான் படம் என்றார்.எத்தனை பேர் வந்திருக்கிறார்கள் என்றேன். இரண்டு தியேட்டர் அங்கே. ஒரு ஆங்கிலப்படத்திற்கு ஒரு பையனும், இன்னும் இரண்டு மூன்று இளைஞர்கள் இருந்தார்கள். அவர்கள் எந்தப் படத்திற்கு வந்திருந்தார்களோ.. தெரியவில்லை. எப்படி ரொம்ப தூரத்திலிருந்து வேகமாக வந்தேன் என்று சொன்னேன். என்ன நினைத்தாரோ மெல்ல போய் டிக்கெட் கொடுப்பவரிடம் ஏதோ கேட்டார். பின்பு என்னிடம் வந்து சார்.. ’அந்தப் படம் அபிராமி தியேட்டரில் ஓடுகிறதாம். அங்கேயே போய் விடுங்களேன்’ என்றார்.

வீட்டுக்குப் போகலாமா தியேட்டருக்குப் போகலாமான்னு நினைத்தேன். நடந்தது நடந்து போச்சி. அந்த தியேட்டருக்கே போய் விடலாம்னு நினச்சி புறப்பட்டேன். இதிலும் ஒரு சந்தேகம் ... இந்த அபிராமி தியேட்டர் எங்கே இருக்குன்னு...அம்பிகா / அமராவதி என்ற இரு தியேட்டர்கள் உண்டு. ஆனால் எது எங்கே என்பது பற்றிய சந்தேகம் அது. சரியென்று ஒரு காம்ப்ளக்ஸ் போனேன். அங்கு அம்பிகா இருந்தது; அபிராமி இல்லை. அது எங்கே என்று கேட்டு அட... போகிற வழிதான்னு அபிராமிக்குப் போனேன். அங்கே இருபது இருபத்தியைந்து வண்டிகள் நின்றன. சரி படம் ஓடுகிறது என்று நினைத்து அங்கிருந்தவரிடம் கேட்டேன். அநியாயம் போங்க... இங்கேயும் இரு தியேட்டர்கள். ஆனால் அன்று தியேட்டர்காரர்களது choice என்னன்னா... வேறு ஒரு படத்திற்கு. ஒரு தியேட்டரில் மட்டும் வேறு ஒரு படம் ஓடியது. நான் நினைத்த படம் அவர்கள் choiceல் இல்லை. ஓடிய படம் பார்க்க விருப்பமில்லை. பேசாமல் அப்படியே வண்டியை வீட்டை நோக்கித் திரும்பினேன்.

சோகத்தை மறைக்க வழியில் இருந்த பர்மா இடியாப்பக் கடையில் இடியாப்பம் வாங்கி வீட்டுக்குத் திரும்பினேன். வழியிலேயே ஒரு முடிவு எடுத்திருந்தேன். என்ன ஆச்சு என்றார்கள் தங்ஸ். நடந்ததைச் சொன்னேன். அவர்கள் சரியாக நான் எடுத்திருந்த முடிவை அச்சு அசல் மாறாமல் கீதை மந்திரம் போல் சொன்னார்கள்:

”இனி இப்படி தியேட்டர் பக்கம் போகாதீங்க... பேசாம  வீட்டுலேயே உக்காந்து திருட்டு டிவிடியில் படம் பாத்துக்கங்க” என்றார்கள்.

தங்ஸ் பேச்சைக் கேட்காமல் இருக்கலாமா... !




 *

Friday, May 09, 2014

750. இதை வாசிக்காதீர்கள் ... நிறைய திட்டுவீர்கள் !








*


இப்பதிவு முழுவதுமாக என் எண்ணங்கள் .. என் கணிப்பு .. என் ரசனை .. இதைப் பொதுவில் வைக்கக் கூடாதென்று பல்லைக் கடித்து என்னை நானே தடுத்துக் கொண்டேயிருந்தேன், முடியவில்லை. அதுவும் நம்ம சூப்பர் இஸ்டார் தொலைக்காட்சித் திரையில் தோன்றி ரத, கஜ, துரக, பதாதிகள் ... ..என்று சொல்லும் போது அவரது வசனம் அடிவயிற்றில் கத்தியைச் சொருகுவது போலிருந்தது. தாங்க முடியவில்லை.

சாம்ராட் அசோகன் நாடகம். சிவாஜி கணேசனின் உச்சரிப்பில் கலைஞரின் வசனம். அதில் சிம்மக்குரலில் வரும் ரத, கஜ, துரக, பதாதிகள் ... என்ற அழுத்தமான, அழகான வசனத்தை அந்தக் காலத்தில் அப்படி ரசித்திருக்கிறோம். இன்று அந்த அமிழ்தை தனது ‘நடிப்பின் தீரத்தினால்’ சூ.இ. கொச்சைப் படுத்துவது போல் படுகிறது.

எனக்கு ஒரு விஷயம் மட்டும் புரியவேயில்லை. அது என்ன ... charisma என்றொரு சொல் உண்டே... அது மாதிரி சிலர் மீது மக்களுக்குக் கண்மூடித் தனமான அன்பு .. அது .. இதுன்னு நிறைய இருக்கு. அதுவும் நம் தமிழ்ப்பட உலகில் இதற்கென்றே தனியிடமே உண்டு. இது ஏனென்று புரிபடவேயில்லை. முதலில் புரட்சி நடிகர் (நடிக்கத் தெரியாமலே நடிகராக இருந்ததால் இந்தப் பெயரோ?) பிறகு சூப்பர் இஸ்டார் (காசு அள்ளிக் கட்டுவதால் இந்தப் பெயரோ?) அடுத்து நம்ம இளைய தளபதி - இந்த வரிசையில் இந்த charisma தொடர்ந்து வருகிறது.

இவர்கள் வந்தால் வரட்டும் என்றும் இருக்க முடியவில்லை. நல்ல படங்கள் வருவதை இந்தப் பிரம்மாக்கள் தொடர்ந்து தடுத்து வந்துள்ளனர். ஒரே பார்முலா ... அதே கெக்கே பிக்கே நடிப்பு ... வேறு நல்ல படங்கள் வந்தாலும் இவர்களது பெரும் படங்களுக்கு முன்னால் நிச்சயம் தோல்வி தான். தமிழ்ப்பட உலகம் இவர்களால் பல மைல் தொலைவு பின் தங்கி விட்டது என்பது என் எண்ணம். இந்த மூன்று நடிகர்களின் படங்கள் போல் மற்றவர்கள் நடித்திருந்தால் அவைகளெல்லாம் நிச்ச்யமாக ஓரிரு நாளில் மண் கவ்வும். ஆனால் இந்த charismatic actors நடித்தால் கூரையைப் பொத்துக்கிட்டு கூட்டம் வரும்.

இந்த மூன்று பேரில் முதல் ஆள் .. முடிந்து போன விவகாரம். மூன்றாவது ஆளின் படங்கள் இரண்டாவது ஆளின் படங்கள் போல் அத்தனை மோசமில்லை. இரண்டாவது ஆள் இருக்காரே ... அவர் ஒரு நல்ல நடிகர்; ஆனால் விசிறிகளால் இப்படி நடிக்கிறார் என்றெல்லாம் ஒரு கதை சொல்வதுண்டு. (என்னைப் பொருத்தவரை முதல் ஆளுக்கு - பெற்றால் தான் பிள்ளையா; அடுத்த ஆளுக்கு - புவனா ஒரு கேள்விக்குறி; மூன்றாவது ஆளுக்கு - துள்ளாத மனமும் துள்ளும்) ஆனால் அந்த வசனங்களை நான் ஒத்துக் கொள்வதில்லை; ஒரு வேளை வில்லன் நடிகராக மட்டும் இருந்திருந்தால் கொஞ்சமாவது பரவாயில்லாமல் இருந்திருக்கும். அவரது கால கட்டத்தில் தமிழ் சினிமாவிற்கு நடந்த நஷ்டங்கள் குறைவாக இருந்திருக்கும்.

சிவாஜின்னு ஒரு படம். வேண்டுமென்றே ‘சிவாஜி’யின் பெயரைக் கெடுக்கவே அப்பெயர் வைத்தார்கள் என்று அந்த சமயத்தில் ஒரு பதிவர் எழுதியிருந்தார். கூகுள் ஆண்டவரிடம் சிவாஜின்னு போட்டா இந்த சிவாஜி பெயர் வர வைப்பதற்காக என்றும் எழுதியிருந்தார்; உண்மையாக இருக்கலாம். அந்தப் படத்துக் க்தையை வேறு எந்த நடிகரை வைத்து எடுத்திருந்தாலும் நாலே நாள் டப்பாவுக்குள் போயிருக்கும். இந்த ஆளுடைய charisma படத்தை ஓட வைத்தது. ஆனால் அமெரிக்காவிற்குப் பொழைக்கப்போன ஆளு இப்படி கோடி கோடியா டாலர் சம்பாதிச்சிட்டு ’கல்யாண வயசிலேயே’ இங்கே வந்து என்னென்னமோ பண்றாராம். அட போங்கப்பா ...

அதே மாதிரி பொண்ணுகளை டேமேஜ் பண்றதுக்கும் குறைச்சலில்லை; ஒரு படம். இவர் சாதாரண் வேலைக்காரர். அவரது முதலாளி விஜய சாந்தி. இந்தியாவிலேயே டாப் பிஸினஸ் உமன். ஆனால் கடைசிக் காட்சியில் தலைவருக்கு சாப்பாடு கட்டிக் கொடுத்துட்டு அவங்க வீட்ல இருப்பாங்க; தலைவர் இன்னும் அதே மாதிரி வேலைக்காரனாக வேலைக்குப் போவார். இப்படி பல கழிசடைக் கதைகள். ஆனாலும் படம் ஓடும். கேட்டால் charisma என்பீர்கள். எங்கிருந்து தான் இதெல்லாம் வருமோ!

எஜமான் அப்டின்னு ஒரு படம். இதுவும் இந்த மூஞ்சி இல்லைன்னா ... வேற எந்த நடிகரை வைத்தாலும் இந்தக் கதையை எடுத்திருக்க மாட்டாங்க. என்னன்னா... இவரு மனைவி புள்ளைத்தாச்சியாக ஆயிருச்சாம். நாளை நாளைக் கழித்து பிரசவம் ஆகணுமாம். ஆனால் உண்மையில் அது கருத்தரிக்கக் கூட இல்லையாம். அதாவது பொண்டாட்டி பத்து மாசமாக வயித்தைத் தள்ளிக்கிட்டு இருக்குதாம். ஆனால் அத்தனையும் நடிப்பாம், இவருக்கும் தெரியாதாம்.

வடிவேலு பாவம் .. இதுவரை சந்திரமுகி போன்ற மொக்கை படம் அவருக்கு வாய்க்கவில்லை. சூ.இ. இந்தப் படத்தில் அடித்த ஜோக்குகளும் மூன்றாம் தரம். சில நல்ல படங்கள் என்று விசிறிகள் சில படங்களைச் சொல்லலாம். நூறு படம் நடிச்சா நான் கூட  நாலஞ்சு படம் நல்லா பண்ணிடுவேன்!

இந்த மூவரில் சூ.இ. படங்களில் தான் லாஜிக் எல்லாம் தூர எறியப்படும். அட ... ஒரு கூட்டமே அடிக்க வந்து நிற்கும். தலைவர் தன் வேல் கம்பை எடுத்து முன்னால் நடுவார். அந்தக் குச்சி அப்படியே எல்லாத்தையும் ஒரு சுத்து வந்து திரும்பி தலைவர் முன்னால் வந்து நிற்கும். இது கவுண்ட மணி, வடிவேலு செய்தால் நல்ல காமெடியாக இருக்கும், ஆனால் கதாநாயகனுக்கே இப்படி,. இப்படி ஒரு அர்த்தம் கெட்ட சீனை டைரடக்கர் வைப்பார்; நம்ம ஆளுகளும் நல்லா விசிலடிப்பாங்க. படமும் வெற்றிப் படமாகும். கெட்ட காலம். என்னமோ சீறி வரும் துப்பாக்கிக் குண்டை பல்லால் கடித்து நிற்க வைப்பார் என்று எதிர்பார்த்தோம்; அது மட்டும் இன்னும் நடக்கவில்லை.


மூஞ்சு கொஞ்சம்  பார்க்கிறது மாதிரி இருக்கணும். அதுவும் இல்லை.
அல்லது பார்க்க முன்ன பின்ன இருந்தாலும் மருமகன் தனுஷ் மாதிரி நல்லா நடிக்கணும். அதுவும் இல்லை.

என்னமோ இஸ்டைல் பண்றார் அப்டிம்பாங்க; கடவுளேன்னு தலையில் அடிச்சிக்கணும் - அவரு சிவாஜி படத்தில மொட்டைத் தலையில அடிச்சிக்கிறது மாதிரி. சிகரெட்டைத் தூக்கிப் போட்டு அப்படியே வாயில பிடிச்சிருவாராம். இதைத்தான் மக்கள் பெரிய இஸ்டைல்னு சொன்னாங்க. எனக்கு நாயிடம் பந்தைத் தூக்கிப் போட்டா பிடிக்குமே அதே மாதிரிதான் இதுவும் தோன்றியது. அங்க நாய்; இங்க இவர்!  கை தட்டுங்கப்பா...

இல்ல ... அந்தக் காலத்தில் எம்.ஜி.ஆர். கொடுத்துக் களைத்தவர் என்பார்கள். உண்மையோ பொய்யோ...? ஆனால் இவர் அப்படி சமூகத்திற்கு ஏதேனும் பண்ணிட்டாரா என்றால் அப்படி ஏதும் இல்லை. (மனோரமா பேசிய பேச்சுக்கு மறைந்தவர் என்றால் போட்டுப் பார்த்திருப்பார். இவர் அணைத்துக் கொண்டது ஒரு நல்ல விஷயம். பாபா படத்திற்கு நஷ்ட ஈடு கொடுத்ததாகச் சொல்வார்கள். .. இப்படி அங்கென்றும் .. இங்கொன்றும் ...)
அட .. இவ்வளவு எதுக்கு? மக கல்யாணத்திற்கு விசிறிகளுக்கு பிரியாணி போடுறேன்னு சொல்லி அல்வா கொடுத்துட்டாருல்லா ...

அரசியலுக்கு வந்திருவேன் என்று ரொம்ப நாள் பூச்சாண்டி காட்டிக் கொண்டிருந்தார்; நல்ல வேளை .. அது நடக்கவேயில்லை.

ஏன் இப்படி இரண்டாந்தர ஆட்களை மக்கள் தலையில் வைத்துத் தூக்கிக் கொண்டாடுகிறார்கள் என்பதே புரியவில்லை. இதில் ஒரு சின்ன சந்தோஷம். இப்போதெல்லாம் தமிழ் சினிமா ... நடிப்பு .. என்றெல்லாம் வரும்போது யாரும் எம்.ஜி.ஆரை quote செய்வதில்லை. கால வெள்ளத்தில் மறக்கடிக்கப் பட்டு, காணாமல் போய் விடுகிறார்கள் போலும்.

இருந்தாலும் பாவம் தான் அந்த முதல் தர மக்கள்!




*





*

Monday, October 21, 2013

690. தருமி பக்கம் (8) - மறுமலர்ச்சியில் தமிழ்த் திரையுலகம்







*
*


அதீதம் இணைய இதழில் வந்த என் கட்டுரையின் மறுபதிப்பு:


திருட்டுத் தனமா ஆங்கிலத் திரைப்படங்கள் பார்க்க ஆரம்பித்த அந்தக் காலத்தில் இருந்து (முதன் முதல் திருட்டுத்தனமாக வீட்டுக்குத் தெரியாமல் பார்த்த முதல் சினிமா நினைவுக்கு வருகிறது...!)ஒரு பெரிய கவலை! ஆங்கிலப்படங்கள் என்றால் genre வாரியாக படங்கள் வருகிறதே .. அங்கே மாதிரி தனியான காமெடி படம், சண்டைப் படம், காதல் படம், வீரதீரச் செயல்கள் படம் என்று வித விதமாக வராமல் எல்லா தமிழ்ப் படமும் ஒரே மாதிரியாக வருகிறதே என்று தோன்றும்.

ஒரு வேளை நம் நாட்டில் இதிகாசங்கள் நிறைய உண்டு. அமெரிக்க நாட்டின் வரலாறு மிகச் சிறிதே. இவர்களுக்கு நம்மைப் போன்ற பழம் காவியங்கள் இல்லை. அவர்கள் கைவசம் இருப்பது ஒரு உள்நாட்டுப் போர், முதல் இரண்டாம் உலகப் போர்கள், ரஷ்யாவுடன் இருந்த cold war ... இதனால் பல படங்களில் இவைகளில் ஏதாவது ஒன்றினை வைத்துப் படம் எடுத்திருப்பார்கள் போலும். இப்படி ஏதும் அதிகம் இல்லாத நாடுகளில்  இது போன்ற வரலாறுகளும் இல்லாததால் அதிகமாக தனி மனிதனை வைத்தே படம் எடுத்திருப்பார்களோ என்று எனக்குத் தோன்றும். நமக்கிருந்த புராணக்கதைகளே நமக்குப் போதும் போதும் என்ற அளவில் இருந்ததால் அதை மட்டுமே கதைக் களமாக்கி முதலில் படம் எடுத்தார்கள். பின் அதை விட்டு விட்டு காதலை மட்டும் பிடித்துக் கொண்டார்கள் போலும்.

புது தியரி ஒன்றும் பல மக்களால் சொல்லப்படுவதுண்டு. இரண்டரை மணி நேரம் காசு கொடுத்து போவது நம்மை மறந்து ‘ஜாலியாக’ இருந்து விட்டு வர மட்டுமே என்பார்கள். அனேகமாக இந்தத் தத்துவம் பேசுபவர்கள் எல்லோரும் ஒரு வாராந்தரியைக் கையில் எடுத்தால் அதில் உள்ள ஜோக்ஸ் மட்டும் படித்து பத்திரிகையைத் தூக்கி எறிபவர்களாக இருக்கும். அதில் உள்ள பல நல்ல கட்டுரைகளை அவர்கள் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. வாசிப்பவர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான ரசனை இருப்பதில்லை. வெறும் காமிக்ஸ் வாசகர்கள் உண்டு. சிறு வயதிலிருந்தே இதில் எனக்கு ரசனை இல்லை. ஆனால் மற்ற கதைகளைத் தொடர்ந்து வாசிப்பதுண்டு. வாசித்த பல genre வாரியான புத்தகங்களை மீண்டும் நினைத்துப் பார்த்தால் எந்தக் கதைகள் வாசித்து என் கண்ணில் கண்ணீர் கசிந்ததோ அவைகளே நினைவில் நிற்கின்றன. முதன் முதல் கண்ணீர் வரவழைத்த நாவல் அகிலனின் ‘பாவை விளக்கு’. ஆங்கில நாவல்களில் முன்னிடம் வகிப்பது Leon Uris எழுதிய Exodus. மூன்று முறை வாசித்த போதும் கண்ணீருக்குப் பஞ்சமில்லாமல் வாசித்தேன். Alex Haley எழுதிய The Roots. இலக்கியங்களை வாசிக்கும் போது நம் நெஞ்சை உலுக்கும் படைப்புகள் மனத்தின் ஆழத்திற்கே சென்று தங்கி விடுகின்றன. இந்த தியரியோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது திரைப்படங்கள் just for past time என்று சொல்வது சரியாகத் தெரியவில்லை.

நம் மக்கள் கூறும் இந்த ’இலக்கணத்தோடு’ வரும் படங்களில் இன்னொரு வேடிக்கை ஒரே படத்தில் அனைத்து சுவைகளும் இருக்க வேண்டும் என்கிறார்கள் படைப்பாளிகளும், படம் பார்ப்பவர்களில் பலரும். படம வருவதற்கு முன்பே நம் இயக்குனர்கள் தங்கள் படத்தை வானளாவப் புகழ்வதும் கடைசியாக் அப்படத்தில் அது .. இது .. என்று எல்லாமும் இருப்பதாகக் கூறுவார்கள். அதில் கட்டாயம் காதல் நிச்சயமாக இருக்கும். இவர்கள் இப்படி ம்ருகி மருகி காதலைப் பறை சாற்றுவதால் தான் நமது மக்களும் ‘காதல் .. காதல் .. காதல் இல்லையேல் சாதல்’ என்று முடிவு பண்ணுகிறார்களோ என்னவோ! தற்கொலைகள் அதிகமாவது இந்த அடிப்படையில் தானோ என்னவோ! எதற்கும் சாகாத இளசுகள் காதலுக்காக உயிரை விடுவது சினிமாக்கள் தரும் உத்வேகம் தானோ என்னவோ!

இப்படியே தான் நமது படங்கள் வரும்; வேறு வழியில்லை என்று நினைத்துக் கொண்டிருந்த வேளையில் தமிழ்ப்பட உலகில் திடீரென்று சில நல்ல மாற்றங்கள் தோன்ற ஆரம்பித்து விட்டன. மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. வரும் மாற்றங்கள் இதைப் போலவே தொடர்ந்தால் மிக மிக நல்லது. இதற்கு அரசு கூட ஒத்துழைக்க முடியும். படத்தின் நீளம் இன்னொரு தடைக்கல். எப்படியும் இரண்டரை மணி நேரம் என்பது யார் விதித்த விதியோ. படத்தின் நீளத்திற்காகவே இன்னும் இரு பாட்டு; நான்கு சண்டை என்று போட்டி போட்டுக்கொண்டு படத்தின் நீளத்தை அதிகரிக்கிறார்கள். எததெற்கோ காரணம் சொல்லி வரியை அரசு குறைக்கிறது. ஒன்றரை மணி நேரத்திற்குள் எடுக்கும் படத்திற்கு வரிக் குறைப்பு என்று ஒன்று கொண்டு வந்தால் இன்னும் சிறப்பு. நீளத்திற்காகவே நம் பல கதைகள் வெறும் ‘அவியல்களாக’ மாறி விடுகின்றன. அவை இதில் கொஞ்சம் தவிர்க்கப்படலாம்.

படத்தின் நீளத்திற்காகவே சேர்க்கப்பட வேண்டும் என்று விதிக்குள் வருவது திரைப்பாடல்கள். இவைகள் தேவையில்லை என்று பெரும் பிரம்மாக்கள் பேட்டிகளில் சொல்லி விடுவார்கள். அதோடு அவர்கள் சரி .. அதற்குரிய முயற்சிகளில் அவர்கள் இறங்குவதில்லை. நல்ல வேளையாக படங்களில் பாடல் எதற்கு என்று கடந்த ஒரு வாரத்தில் இரு இசை இயக்குனர்கள் - முதலில், விஜய் அண்டோனி, அடுத்து, அதை ஒத்துக் கொண்டுள்ள ஜிப்ரான் - கூறியிருப்பது இன்னும் மகிழ்ச்சியைத் தருகிறது.

எப்படியோ ... எனக்குத் தோன்றுவது தமிழ்ப்படங்களில் ஒரு புது மறுமலர்ச்சி ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இது மேலும் வளர வேண்டும்.

நல்ல காலம் பிறக்க வேண்டும் ... நடக்கும் புதிய நல்ல விஷயங்கள் தொடர வேண்டும்.


*

படங்கள்: இணையத்திலிருந்து..

Monday, October 07, 2013

688. காதல் தேவையில்லை என தள்ளி வையுங்கள்.











*
என்  பழைய பதிவுகள் சிலவற்றில் என் ‘கண்ணீர்க் குரல்”.  கேட்டுப் பாருங்கள்:


இந்தப் படத்தில நீங்க எதிர்பார்க்கிற எல்லாமும் இருக்கும் - பாட்டு, டான்ஸ், குத்துப் பாட்டு, சென்டிமென்ட், காமெடி - இப்படி எல்லாம் வச்சிருக்கோம். தயவுசெஞ்சி எல்லோரும் தியேட்டருக்கு வந்து படம் பாருங்க அப்டிம்பாங்க. ஐயா, சாம்பார் செய்யும்போது சாம்பார் பொடி மட்டும்தானே போடணும்; ஸ்டாக்கில இருக்கிற பொடி எல்லாத்தையும் ஒண்ணா போடுவேன்னா, அது என்ன குழம்புன்னு சொல்றது. அதைச் சாப்பிட்டு தொலைக்க வேண்டியதிருக்கே ... (உன்ன யாரு படம் பார்க்கச் சொன்னா அப்டின்னு கேட்டுராதீக !)
 -------------------------------------------
  ‘என்னடா இது? நம்ம தமிழ் திரைப்பட இயக்குனர்கள் - ’திலகத்’திலிருந்து ’இமயம்’ - வரைக்கும் யாருக்கும் காதல் என்பதைத் தவிர மையப்புள்ளியாக வேறு ஏதாவது வாழ்க்கைப் பிரச்சனையை வைத்து படம் இயக்கவே தெரியாதா?” என்பது எனது பல காலத்து பிலாக்கணம். அப்பாடா ... கொஞ்சம் நல்ல முடிவுகள், வளர்ச்சிகள் தெரியுது. 
யுத்தம் செய்
நந்தலாலா
பயணம்
ஆடுகளம்
அழகர்சாமியின் குதிரை
----------------------------------------------
இப்படி ‘மசாலா’ படங்களாக இன்னும் எத்தனை கால்த்திற்குத்தான் பார்த்துக்கொண்டே இருக்கப் போகிறோம். ஆங்கிலத்தில் சொல்வார்களே -genre - என்று அதுபோல வகைப்படுத்தப் பட்ட படங்களைப் பார்க்கும் காலம் வரவே வராதா? நம் இந்தியப் படங்களில்தான் இப்படி ‘எல்லாமும்’ சேர்ந்த சினிமாக்கள் வருகின்றன. action, thriller, musical, mystery, suspense, western, war stories என்று எத்தனை வகைகள் மற்ற எல்லா மொழிப்படங்களிலும் இருக்கிறதே ...

 ----------------------------------------------------
 -- இவையெல்லாம் என் முன் அழுகைப் பதிவுகளில் எழுதியவை. சோகம் தான். பின் இருக்காதா? எந்தப் படம் எடுத்தாலும் காதல் மட்டுமே மையப்புள்ளியாகக் கதைகள். அதுவும் ஒரே மசாலா. காரமே இல்லாத மசாலா. எப்படியாவது உலக சினிமாக்களில் வருவது போன்ற genre movies வரவே வராதா என்ற ஏக்கம் எனக்கு. ஆனால் தமிழ்ப்படங்களில் அப்படி ஒரு நிலை வரவே வராது என்பதே இணையப் பதிவுலகத்திற்குள் நுழைந்த போது நான் கொண்டிருந்த எண்ணம். காதல் இல்லாத படம் என்றால் அந்தக் காலத்தில் வந்த ‘அந்த நாள்’ படமும், ஜெயகாந்தனின் ஓரிரு படங்களும் நினைவுக்கு வந்து செல்லும். அவ்வளவே.

இப்படிப் போய்க்கொண்டிருக்கும் போது புது விடியல் போல் இப்போது வரும் படங்களில் பல காதலைப் புறந்தள்ளி விட்டு புதிய வகைப் படங்களாக வர ஆரம்பித்துள்ளன.  சமீபத்தில் வந்த விஜய சேதுபதியின் மூன்று படங்களும், மிஷ்கினின் கதாநாயகி என்று யாருமில்லாமல் வந்த ஓநாயும் ஆட்டுக்குட்டியும், நேற்று நான் பார்த்த மூடர் கூடம் படமும் புதிய அலை ஒன்று கோலிவுட்டில் நொப்பும் நுரையுமாக பொங்கி வருவது போல் தோன்றுவது நல்லதொரு மகிழ்ச்சியான விஷயம்.

மூடர் கூடம் ஒரு black humour படம். வழக்கமான காமெடி மாதிரி இல்லாமல், கதாபாத்திரங்கள் சீரியஸாக ஏதாவது பேச நமக்கு அது வேடிக்கையாக இருக்கிறது. காமெடி படம் என்றாலே அங்கு லாஜிக் பேசப்படக்கூடாது. இங்கும் அப்படித்தான். ஒரு வீட்டுக்குத் திருடப் போனால், அஙக வர்ரவன் போரவனையெல்லாம் அங்கேயே அடச்சி வச்சிக்கிட்டு இருக்க் முடியுமான்னு சீரியசான கேள்வியெல்லாம் கேட்கக் கூடாது. வடிவேல், சந்தானம் டைப் காமெடி கிடையாது.  மூடர்களின் கூடம் ஒன்றில் நாமும் ஒரு ஓரத்தில் நின்று அங்கு நடக்கும் கூத்துகளைப் பார்த்திருக்க வேண்டும்.

டைரக்டர் நவின் படத்திற்கு நடிக்க வருபவர்கள் அனைவருக்குமே தலை கீழாக நிற்க முடிந்தால் மட்டும் நடிக்க வாருங்கள் என்று சொன்னாரோ என்னவோ... முக்கிய பாத்திரங்கள் நால்வரைத் தவிர படத்தில் வரும் முக்கால்வாசி பாத்திரங்கள் தலை கீழாக நிற்கிறார்கள். கதாநாயகி .. காதல் .. டூயட்... டிஷ்யும் டிஷ்யும் எதுவும் கிடையாது. கண்ட பாத்திரங்களுக்கெல்லாம் - நாய்க்கும் கூட - flash back இருக்கிறது. கடைசியில் வரும் moral மிக நன்றாக இருக்கிறது.

இயக்குனர்கள் இப்போது genre பிரித்துப் படமெடுக்க ஆரம்பித்து விட்டார்கள். இசை இயக்குனர் விசய் ஆண்டனி சமீபத்தில் சொன்னது போல் படத்தில் எதற்குப் பாட்டுகள் என்ற நிலைக்கு உயர ஆரம்பித்து விட்டார்கள். வழக்கமான தமிழ் மசாலாவை விட்டு விலகி புதிதாக, புதிய முறையில் படம் எடுக்க ஆரம்பித்து விட்டார்கள். வளர்க தமிழ்ப்பட இயக்குனர்களே.

இயக்குனர்களே! காதல் மட்டும் படத்திற்கு வேண்டும் என்ற ஓட்டைத் தத்துவத்தைத் தள்ளி வையுங்கள். வளருங்கள்.

தமிழ் ரசிகர்களும் நல்ல தரமான ரசிகர்களாக ஆகிக்கொண்டிருக்கிறார்கள் போலும். மூடர் கூடம் பார்க்க நினைத்தால் முதலில் மதுரையில் எந்த தியேட்டரிலும் ஓடவில்லை என்றார்கள். நேற்று தேடிப்பார்த்த போது ஒரே ஒரு தியேட்டரில் ஓடிக்கொண்டிருப்பது தெரிந்ததும், நானும் ஓடிப் போய் படம் பார்க்கப் போனேன். பொதுவாக முதலிரு நாட்களிலேயே இருபது பேர், முப்பது பேர் மட்டும் தியேட்டரில் பயந்து கொண்டே உட்கார்ந்து படம் பார்ப்பது மாதிரி இல்லாமல், நல்லதொரு எண்ணிக்கையில் படம் பார்க்க வந்திருந்தார்கள். இயக்குனர்களே நீங்கள் வளர்ந்தால் நாங்களும் வளர்ந்திருவோமுல்ல  ....

அடுத்து ஒரு தைரியமான இயக்குனர் 90 நிமிடங்களுக்கு மட்டும் படம் எடுக்க ஆரம்பிக்க வேண்டும். இன்னும் படம் பாடல், டிஷ்யூம் இல்லாமல் ‘சிக்’கென அழகான வடிவோடு நல்ல படங்கள் விரைவில் வெளி வரும் என்று நம்புகிறேன். இரண்டு ஆண்டுகளில் நல்ல வளர்ச்சி .. இன்னும் தொடர வேண்டுமென்று ஆவல்;
-------------------------------------------


பி.கு.

இயக்குனர் நவீன் அதிர்ஷ்டம் இல்லாதவர். மூடர் கூடத்தில் ஒரு இஸ்லாமியப் பெண் இந்துச் சாமி கும்பிடுகிறாள்; திருநீறு இட்டுக் கொள்கிறாள்; பொட்டு வைத்துக் கொள்கிறாள்; தமிழ் மணப்பெண் போல் அலங்கரித்து இந்துப் பையனைத் திருமணம் செய்யப் போகிறாள்.

ஒரு வேளை நம் சகோக்கள் இதற்காக மம்மி உதவியுடன் ஒரு போராட்டம் நடத்தியிருந்தால விஸ்வரூபம் மாதிரி இந்தப் படம் மிகவும் வெற்றிகரமான படமாக ஓடியிருந்திருக்கும். நவீனுக்கு .... வடை போச்சே!



*


Wednesday, October 02, 2013

685. ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ....... மிஸ்கின் ஒரு நல்ல மேய்ப்பன் !






*

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படம் பார்ப்பதற்கு முன்பு எந்த திரை விமர்சனம் வாசிக்கக் கூடாது என்று முடிவு கட்டியிருந்தது போலவே  இருந்து நேற்று படம் பார்த்தேன். நானும் படக்கதை பற்றி ஏதும் எழுதப் போவதில்லை.

‘கண்ணிருப்போர் காணட்டும்’!

முதல் சீன். ஒரு மரம். முழு இரவில்  தனியாக ஒரு மரம். strikingly beautiful !
இடை வேளை முடிந்து மறுபடி  படம். இரவில் சில மரங்கள். வலது பக்கம் பச்சை வண்ணத்தில் சில செடிகள். இடது பக்கம் பல வண்ணத்தில் ஒரு மரம்.
 strikingly beautiful !

இருளில் நகரும் படம். சில இடங்களில் space logic  .. சில இடங்களில் time logic - உதைக்கிறது. யுத்தம் செய் படத்திலும் இந்தப் படத்திலும் உள்ள ஒரு ‘வெறுமை’ பிடிக்கவில்லை. இரு படத்திலும் கதைக்குரிய பாத்திரங்கள் மட்டுமே அங்கிருப்பார்கள். நடப்பது ஒரு பெரிய பொது இடத்தில். ஆயினும் வெறுமை மட்டும் இருக்கும்; அதனோடு நமது கதை மாந்தர்கள் மட்டும் இருப்பார்கள். இப்படத்தில் வரும் train sequence நன்றாக எடுக்கப்பட்டிருக்கும். ஆனால் ரயிலில் இரண்டே பேர் -  guide & driver. மருந்துக்கும் பயணிகள் இல்லை. இது மட்டுமே ஒரு சின்னக் குறையாக எனக்குத் தோன்றியது.

படம் ஆரம்பத்திலிருந்து இறுதி வரை ஒரே வேகம். படம் முடிந்து டைட்டில் கார்டுகள் வருகின்றன. படம் முடிய ஆரம்பிக்கும் போது மக்கள் எழுந்து கலைய ஆரம்பிப்பார்களே .. அப்படி ஏதும் நடக்கவில்லை. படம் முடிந்த பிறகும் விலகாத கூட்டம்.

நிரம்ப நாளாக பாடல் இல்லாத படம் என்ற ஆசை; இங்கே பாடல் இல்லை; கதாநாயகி இல்லை; (என்ன ஆச்சரியம்!); தனி காமெடி ட்ராக் இல்லை. இதெல்லாம் இல்லாமல் ஒரு தமிழ்ப் படம்! Hats off, Myskin! genre வாரியாகப் படம் வரவேண்டும் என்றும் ஒரு ஆசை. அதுவும் நிறைவேறியது. நிச்சயமாக இது ஒரு தமிழ்ப்படம் அல்ல; அதையும் தாண்டிய நல்ல படம்.

படம் ஆரம்பிக்கும்போது இருவர் பெயர் மட்டும் பார்த்தேன் என்று நினைக்கிறேன்.ஒன்று இயக்குனர்; அடுத்தது - முன்னணி இசை - இளைய ராஜா என்று போட்டிருந்தது.  நிச்சயமாக முன்னணி இசை தான். படத்திற்கு ராஜா ஒரு foreign touch கொடுத்திருக்கிறார் என்று தோன்றியது.

ஆனாலும் மிஸ்கின், இளையராஜா பற்றி இன்னும் சொல்ல வேண்டுமானால் இப்படத்தை இன்னொமொரு முறையாவது பார்த்தால் தான் முடியும்..

ஒரு genre-ல் தமிழ்ப்படம் என்றால் எனக்கு ’அந்த நாள்’ படம் நினைவிற்கு வரும்.இப்படமும் ஒரு புள்ளியில் ஆரம்பித்து, நேர்கோடாய் ஒரு படம். பிசிறில்லை. இது போன்ற படங்கள் மட்டும் வர ஆரம்பித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். சின்னச் சின்ன குறைகள் ...

ஆனால் மிகவும் சிரத்தை எடுத்து, நானும் புத்திசாலி ... படம் பார்க்க வருபவர்களும் புத்திசாலிகள் என்ற நினைப்பில் படம் எடுத்த இயக்குனருக்கு என் பாராட்டுகள்.




*