Monday, December 23, 2019
Saturday, December 21, 2019
1077. இந்துக்களே! நீங்கள் R.S.S. வழியில் தான் செல்ல ஆசைப்படுகிறீர்களா?
*
”அண்ணன்களின் வழியில் .... வந்ததே புதிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதா” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளேன். அதை வாசித்தால் அதைத் தொடர்ந்து இங்கு நான் எழுதியது புரியும்.
கிறித்துவர்கள் ஒரே அமைப்பாக இருந்து பின்பு ஒரு பிரிவினர் பிரிந்து சென்றனர் தனிச்சபையாக. அவர்களுக்குப் பெயர் “பிரிவினைக்காரர்கள்”. கத்தோலிக்க மதாச்சாரியார்கள் செய்த பிழைகள் இப்பிரிவுக்குக் காரணம் என்பர் பிரிவினைக்காரர்கள். எப்படியோ இன்னும் அந்தப் பிரிவு உள்ளது. ஆனாலும் மக்கள் கணக்கெடுப்பில் இருவரும் கிறித்துவர்கள் என்ற ஒரே போர்வைக்குள் வந்து விடுவார்கள்.
முகமதிய மதத்திலும் சன்னி, ஷியா என்று இரு பிரிவுகள்; அஹமதியா என்றும் ஒரு குழு. இன்னும் சில குழுக்கள் இருப்பதாகவும் சொல்லப் படுகிறது. இவர்களும் கிறித்துவர்கள் போலவே இஸ்லாமியர் என்னும் போது ஒரே குழுவினராக வந்து விடுகிறார்கள்.
இது போன்ற பிரிவு இந்து மதத்திலும் ஏற்பட்டால் அது நல்லதோ என்று எனக்குத் தோன்றுகிறது. நான் பிறப்பால் ஒரு கிறித்துவன் என்றாலும் ஒரு மத, இறை மறுப்பாளன் என்ற நிலையில் நின்றுதான் இதைப் பேசுகிறேன். எங்கள் மதத்தில் உன் தலையீடு எதற்கு என்று இந்துக்கள் கேட்கலாம். இது என் ஆசை. கிறித்துவம், இஸ்லாம் குழுக்களாகப் பிரிந்தாலும் அது அவர்கள் மதத்தையோ அதன் எண்ணிக்கை பலத்தையோ மாற்றவில்லை. ஆகவே மதத்தின் “பலம்” சேதமடையாமல் “வலுவாகவே” உள்ளனர். அது போல் இந்து மதத்திலும் ஒரு பிரிவினை நடக்க வேண்டுமென்பது என் ஆசை. காரணங்கள் ...இதோ சொல்கிறேன்.
என் கட்டுரையில் சாவர்கரும், கோல்வால்கரும் சொன்ன பெரும் “உண்மைகளை” எத்தனை இந்து மக்கள் அதை அப்படியே ஒத்துக் கொள்வீர்கள்? நிச்சயமாக 3% விழுக்காடு மக்கள் உடனே ஒத்துக் கொள்வார்கள். ஏனெனில் இதைச் சொல்வதும் ஆரியர்கள் என்று அழைக்கப்படும் பிராமணர்கள் என்று நம்புகிறேன். ஆகவே 3% விழுக்காட்டு பிராமணர்கள் இதை உடனே ஒத்துக் கொள்வார்கள். மற்ற பிறரின் நிலை என்ன?
வரலாற்று வழியில் பார்க்கும் போது இன்றைய இந்து மக்களாகவும் அன்று மதம் என்ற ஓர் அடைப்புக்குள் வராத நம் முன்னோர்களுக்கு குலம் காக்க வந்த பல ஆண்களும் பெண்களும் தெய்வமானார்கள். சுடலைமாடனும், கருப்பு சாமியும், அய்யனாரும் கடவுளாக கிராம எல்லைகளில் வீற்றிருந்தார்கள். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் ancestral worship என்ற வழிமுறைதான் இருந்து வந்துள்ளது. அதன் பின் மக்கள் கணக்கெடுப்பின் போது மதம் என்று ஒன்றைச் சொல்லியாக வேண்டும் எனும் கட்டாயம் ஏற்பட்ட போது எப்போதும் அதிகார பீடத்தில் இருக்கும் பிராமணர்கள் / ஆரியர்கள் இந்த மக்களையும் இந்து என்று அடைப்புக்குள் ஒரு ‘கணக்கிற்காக’ இழுத்து வந்து விட்டனர். எல்லோரும் இந்துக்களாக ஆகி விட்டோம் அல்லது ஆக்கப்பட்டு விட்டோம்.
இன்று இருக்கும் இந்து மதம் சுத்தமாக ஒரு பிராமணிய மதம். அதன் கடவுள்களை - அதைப் பெரிய கடவுள் என்பார்கள்; முன்னோர் தெய்வங்கள் சிறிய கடவுளாகி mutate ஆகி விட்டார்கள் - பழைய மக்களுக்கு, அதாவது கணக்கெடுப்பு எடுக்க ஆரம்பிப்பதற்கு முன் உள்ள நம் முன்னோர்களுக்கு, இப்போது பிரபலமாக உள்ள இந்துக் கடவுள்களைத் தெரியாது. ஒன்று சொல்ல வேண்டும் .. பிடிக்கிறதோ இல்லையோ .. உண்மையைச் சொல்ல வேண்டுமல்லவா?! பிராமணர்கள் காலங் காலமாய் பெரும் புத்திசாலிகள், அறிவாளிகள்.
தங்கள் ஆர்யக் கடவுள்களைப் பொதுக் கடவுளாக்கி விட்டார்கள் - வரலாறு சொல்லும் உண்மை இது. இந்து மதத்தின் கோட்பாடுகளுக்கும், சாதி வித்தியாசங்களுக்கும் எதிராக எழுந்த இரு பெரும் மதங்களையும் பூண்டோடு அழித்த பெரும் பெருமை அவர்களுக்கே. யாரும் மறுக்க முடியாதபடி அத்தனை புத்திசாலிகள். இன்றும் அதை ஒவ்வொரு கட்டத்திலும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இத்தனை இருப்பினும் தங்கள் மதத்தை மக்கள் மீது அழகாகவும் வன்மையாகவும் இருத்தி வைத்து விட்டார்கள், வன்மை என்று ஏன் சொல்கிறேனென்றால் தங்களை மட்டும் உயர்சாதியாக்கி, அனைவரையும் தங்கள் முன் மண்டியிட வைத்து விட்டார்கள். ‘சாமி’ என்று என் சிறுவயதில் கேட்டதை ஒரு பழைய விஷயமாகி ஒரேயடியாக நின்று விட்டதாகவும் சொல்ல முடியாது. இன்றும் அனைத்து I.I.T. களிலும் அவர்கள் தானே “சாமி”! இல்லையா?
தங்கள் உயர்த்திக் கொண்டு மற்றவர்களைப் படிநிலைகளில் வைத்ததால் சண்டை வந்தாலும் அது backward vs most backward, அல்லது most backward vs dalits என்று தான் வருமேயொழிய forward vs non-forward என்று எப்போதும் வரவே வராது. என்னே அவர்களின் ராஜ தந்திரம். இதனால் தான் நான் அவர்களை “அண்ணாந்து” பார்க்கிறேன். சாதியை மறுக்க முடியாத ஓர் ஆயுதமாக நீட்டிக்க வைத்து விட்டார்கள். அதில் என்னையும், உன்னையும் கீழ் நிறுத்தி, தாங்கள் ஏணியில் உச்சத்தில் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். எத்தனை மகாத்மா பூலேக்களும், இரட்டை மலைகளும், பெரியார்களும், நாராயண குருக்களும் வந்தாலும் மாற்ற முடியாத சாதி அடையாளத்தை ஒவ்வொருவன் பிறக்கும் போது நெற்றியில் அச்சு குத்தி அனுப்பி விடும் வன்மம் இன்னும் பல காலம் தொடரும். என்றாவது அது முடியுமாவென்றும் தெரியவில்லை.
அது ஒரு பக்கம் இருக்கட்டும். சாவர்க்கர், கோவால்கர் சொன்ன “உபதேசங்கள்” எத்தனை பெயருக்குச் சரியென்று படும் என்று கேட்டிருந்தேன். 3% விழுக்காட்டிற்குக் கணக்கு காட்டியாகி விட்டது. அதைத் தவிர இன்னும் எத்தனை விழுக்காட்டிற்கு அந்த இருவர் சொன்னது சரியென்று படும். உங்கள் மனசாட்சிக்கு நீங்களே உண்மையாக இருந்து, அந்த இருவரின் கருத்து சரி என்று உங்களுக்குத் தோன்றினால் இப்பதிவின் கீழ் “ஓம்” என்று பதிவிடுங்கள் - இது பிராமணரல்லாதவர்களுக்கு மட்டும்.
ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி (சமஸ்கிருதம்), ஒரே கலாச்சாரம் என்பதை வலியுறுத்தும் இந்து மதம் என்னைப் பொறுத்த வரை இன்றைய இந்துக்களில் மிக மிகப் பலருக்குப் புறம்பானதாகவே இருக்கும் .. இருக்க வேண்டும். முன்னோர் வழிபாடு செய்த மக்களின் மேல் திணிக்கப்பட்ட பெரும் வேதக் கடவுள்களும் புறம்பானவர்களே. இது ஒரு சாதியினரின் அறிவுத் திறனில் விழைந்த விழைவு.
ஒரு வேளை இது நமக்கு (இந்துக்களுக்கு) நன்மை செய்திருந்தால் நலமே. அப்படி என்ன நலம் என்பதை இந்து மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். ஐயப்பனுக்கும், வெங்கடாஜலபதிக்கும் அளிக்கும் நன்கொடைகளை நம் முருகனுக்குக் கொடுத்தாலும் ‘அந்தத் தமிழ்க் கடவுளும் நாம் கேட்பதைக் கொடுப்பார்’ என்ற நம்பிக்கை அவ்ர்களுக்குத் தானே வர வேண்டும். ஆனால் இதையெல்லாம் விட, இந்து மதம் நம்மை சாதியென்னும் சாக்கடைக்குள் அடைத்து வைத்திருப்பதிலிருந்து வெளிவந்தால் சாதிகளையும், சாதிகளில் உள்ள படிநிலைகளையும் அது உடைத்து விடாதா என்றொரு நப்பாசை.
ஆனாலும் இந்துக்களின் அடிப்படை உணர்வுகள் தவறு - சாவர்க்கர், கோவால்கர் சொல்வது போல் நம் நாட்டு இந்து மக்கள் அனைவரையும் கட்டுப் படுத்தும் அந்த உணர்வுகள் மிகத் தவறு. இதைத் தெரிந்தும், தெரியாமலும் பலரும் இந்து மதத்தினராக உள்ளார்கள். (இது அனைத்து மதத்திலும் உள்ள நிலைப்பாடுகள் தான். எத்தனை கிறித்துவர்களுக்கு கிறித்துவ மதத்தின் ஆரம்ப கால வரலாறு தெரியும்? கிறிஸ்து கடவுள் என்று எப்படி ஒரு கூட்டம் நிலைப்படுத்தியது என்பது அவர்களுக்குத் தெரியமா? குரானின் “சுத்தம்” பற்றி எழுப்பும் கேள்விகளுக்கான பதிலும், சானா குரான் பற்றிய கேள்விகளும் எத்தனை அடிப்படை இஸ்லாமியவாதிகளுக்குத் தெரியும்?) ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி (சமஸ்கிருதம்), ஒரே கலாச்சாரம் என்பதை வலியுறுத்தும் இந்து மதம் சரியென்று தோன்றுகிறதா? அப்படித் தோன்றினால் ...
கிறித்துவ மதத்திலும், இஸ்லாமிய மதத்திலும் தோன்றிய இது போன்ற பிரிவு இந்து மதத்திலும் ஏற்பட்டால் அது நல்லதோ என்று எனக்குத் தோன்றுகிறது.
I REPEAT:
அந்த இருவரின் கருத்து சரி என்று உங்களுக்குத் தோன்றினால் இப்பதிவின் கீழ் “ஓம்” என்று பதிவிடுங்கள் - இது பிராமணரல்லாதவர்களுக்கு மட்டும்.
*
Thursday, December 19, 2019
1076. அண்ணன்களின் வழியில் .... வந்ததே புதிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதா.
ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்து கொண்டிருந்த எனக்கு தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு எழுதும் வாய்ப்பு வந்தது. ‘பிரிட்டிஷ் கால இந்திய வரலாறு’. ஆசிரியர்: பேரா. சு. வெங்கடேசன். (வர்த்தமானன்). இதன் மூலம் பல புதிய வரலாற்று நிகழ்வுகளை அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் நூலின் கடைசிப் பகுதிக்கு வந்த போது நம் நாட்டின் சாதிய நிலைகள் பற்றிய பகுதி வந்தது.
சாதிகள் எப்படி எப்போது எந்த வழியில் நம்முள் நுழைந்தது என்பது பற்றிய விவரங்கள் வந்த போது தான் அதிர்ச்சிகள் தொடர்ந்து வர ஆரம்பித்தன. சாவர்க்கர், கோவால்கர், R.S.S. பற்றிய விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதை மொழிபெயர்க்கும் காலத்தில் தான் CAB திட்டம் அமுலுக்கு வந்தது. மோடி முதுகைத் தட்டிக் கொடுக்க வேண்டும் என்றே தோன்றியது. சாவர்க்கர், கோவால்கர் அன்று சொன்னதை இன்று முழுமையாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். அவர் கடமை உணர்வு இப்படி சிறப்பாக இத்திட்டத்தைக் கொண்டு வந்ததில் இருந்து தெரிய வருகிறது.
1923ல் விநாயக் தாமோதர் சாவர்க்கர் “இந்துத்வா: இந்து என்பவர் யார்?” என்ற நூலை வெளியிடுகிறார். சர்க்கார் சொன்னதில் எனக்குப் “பிடித்த” பாய்ண்ட்!!! : இதோ ...
அண்ணன் சாவர்க்கர் சொல்கிறார்: ஆரியர்கள் வரலாற்றின் துவக்க காலத்தில் இந்தியாவுக்கு வந்து குடியேறிய போதே தேசத்தை ஏற்படுத்தி விட்டனர். ... இவர்கள் தனி இனசாதியைச் சேர்ந்தவர்கள், இந்துக்களின் இரத்தத்தில் கலந்திருப்பது “வேதத்தந்தையர்”களின் குருதி தான்.
அண்ணன் சாவர்க்கர் சொன்னது .... |
அடுத்த அண்ணன் கோவால்கர்: கேசவ் பாலிராம் ஹெட்கேவார் 1925ல் R.S.S. அமைப்பை ஆரம்பிக்கிறார். அதன் பின் வந்த கோல்வால்கர் 1939ம் ஆண்டில் புது வடிவத்தையும் விளக்கத்தையும் கொடுக்கிறார். அண்ணன் சொன்னதில் எனக்குப் பிடித்தது !!!”
இந்துக்கள் எங்கிருந்தோ வந்தவர்கள் அல்லர், இந்திய மண்ணுக்குச் சொந்தக்காரர்கள். அவர்களே ஆரியர்கள். வேதகால கலாச்சாரமே ஆரிய கலாச்சாரம். ஆரிய கலாச்சாரமே இந்து கலாச்சாரம். இந்து கலாச்சாரமே இந்திய கலாச்சாரம். ... ஒரு இனம், ஒரு மதம், ஒரு மொழி, ஒரு கலாச்சாரம் கொண்ட ஒற்றை அடிப்படை தேசமே விரும்பத் தக்கது.
அண்ணன் கோவல்கர் சொன்னது ... |
அன்று அண்ணன்கள் கிழித்த கோட்டை அப்படியே நிறைவேற்ற தொடர்ந்து போராடி வருகிறார்கள் நமது தலைவர் மோடி - ஷா.
Friday, December 13, 2019
1075. ஒரு கிழவனின் புலம்பல் ... 2
*
முந்திய பதிவு:
ஒரு கிழவனின் புலம்பல் ...1
///மனம் சோர்ந்து விட்டது. நாமும் கீழானவர்கள்;
நம்மை ஆள்பவர்கள் நம்மை விடக் கீழானவர்கள். மக்களாகிய நமக்குச் சட்ட திட்டங்கள் என்று
ஏதுமில்லை; அவைகளை நாம் மதிப்பதோ அதன் வழி நடப்பதோ என்றும் இல்லை. மருந்துகளிலும்,
உணவுப் பொருளிலும், மாங்காய்களைப் பழுக்க வைப்பதிலும் கூட கலப்படம் செய்யும் அளவிற்கு
மனசாட்சையைத் துச்சமாகத் துடைத்தெடுத்த மாக்கள் நாம். எல்லா ஏரிகளிலும் கட்டிடங்கள்
... அதிலும் அரசே கட்டும் கட்டிடங்கள். மணல்
வாருவதில் நம்மை அடித்துக் கொள்ள ஆட்களே கிடையாது. எப்படி நம் எல்லோருக்கும் சுத்தமாக
மனசாட்சியே இல்லை என்று (என்னையும் சேர்த்து தான்!) கேட்டுக் கொள்கிறேன். “என் வேலை
- நல்லதோ கெட்டதோ - அது வெற்றிகரமாக முடிய வேண்டும்; அதனால் யாருக்கு என்ன ஆனால் எனக்கென்ன!”
என்ற பெரும் வாழ்க்கைத் தத்துவம் நமக்கு. நரி வலம் போனால் என்ன .. இடம் போனால் என்ன..
என் மேல் பாயக்கூடாது” என்றதொரு பெரும் தத்துவம் நமக்கு.//
கிழவர்களின் புலம்பல்கள் நிற்காது.
அது ஒரு நீள் தொடர் கதை தான். நான் மட்டும் விதிவிலக்கா என்ன ...?
தேர்தல் முடிந்து முடிவுகளை எதிர்பார்க்கும்
போது என் அச்சங்களைப் பட்டியலிட்டிருந்தேன். அச்சங்கள் நிஜமாக பூதாகரமாக படையெடுத்து வருகின்றது. அதில் முக்கியமாக ஒன்று
சொல்லி அச்சப்பட்டிருந்தேன். //அதுவும் அவருக்கு தமிழ்நாட்டின்
மீது ஏன் அத்துணைக் கோபம் .. வஞ்சம் என்றும் தெரியவில்லை. “குறி வைத்து அடிப்பது” என்பார்களே
அதை அவர் தொடர்ந்து செய்து வந்திருப்பதாக எனக்குத் தோன்றியது. // ... என்று எழுதியிருந்தேன். சுற்றியுள்ள நாடுகளிலிருந்து
வரும் இஸ்லாமியரல்லாதார் மேல் கரிசனத்தைக் கொட்டிக் கவிழ்த்த மோடி - அமித் ஷா கம்பெனிக்கு
ஏன் இலங்கை மறந்து போய் விட்டது, அதிலிருந்து வந்த தமிழர்கள் காலங்காலமாக எவ்வித உரிமைகளும்
இல்லாமல் இருப்பது ஏன் அவர்களுக்கு மறந்து போனது? பெங்களூரிலிருந்து மைசூர் செல்லும்
வழியில் திபெத்திய “அகதிகளுக்காக” ஒதுக்கிக் கொடுக்கப்பட்ட இடத்தைப் பார்க்கும் வாய்ப்பு
கிடைத்தது. அது ஒரு பெரிய tourist center ஆக உள்ளது. பெரிய புத்தர் கோவிலகள் .. குரு
மடங்கள் .. எல்லாவற்றையும் விட விவசாயம் செய்ய பெரும் நிலம் கொடுக்கப்பட்டுள்ளது. அகதிகள்
முதலாளிகளாக ஆகி நம்மூர் ஆட்களை வேலைக்கமர்த்தி விவசாயம் செய்கிறார்கள். பல கேள்விகள்
எழுந்தன. இப்பதிவில் அவைகளைப் பார்க்கலாம்.
ஹைதராபாத்தில் நடந்த கற்பழிப்புக்
கொலைக்கு நால்வர் சுட்டுக் கொல்லப்பட்டதும் எங்கிருந்து தான் வந்தார்களோ .. இந்த “செயல்பாட்டாளர்கள்”
தங்கள் தூக்கத்திலிருந்து விழித்து எழுந்து வந்து விட்டார்கள். பொள்ளாச்சியில் நால்வர்
பெண்கள் விஷயத்திற்காக கைதானது, அவர்கள் மேல் வழக்கு விரைந்து நடக்காமல் தூங்கிப் போனது
பற்றியெல்லாம் தெரியாமல் இவர்கள் தூங்கிக் கொண்டிருந்தார்கள். அந்த விஷயத்தில் அவர்கள்
இன்னும் விழிக்கவில்லை. இப்போது விழித்து பல கேள்விகள் எழுப்பி தங்கள் அறிவுத் திறனைக்
கொட்டிக் கவிழ்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இன்னொரு நல்ல கேள்வி -- சுட்டுக் கொல்லப்பட்ட
நால்வரும் ஏழை பாழைகள். சுட்டு விட்டார்கள். பொள்ளாச்சி போல் பணமும் அரசியல் பலமும்
இருந்திருந்தால் இப்படி காவல் படை ஒரு என் கவுண்டர் நடத்தியிருக்குமா? நிச்சயமாக நடந்திருக்காது. கேள்வி கேட்பார் இல்லாதவர்கள்
என்பதால் சட்டென்று சுட்டு விட்டார்கள். இதில் ஒரு விசேஷம் என்னவென்றால் இந்த கற்பழிப்புக்
குற்றங்களில் நமது காவல் படைக்கு எப்போதுமே அளவுக்கதிகமான பொறுமை உண்டு. நிச்சயமாக
பல கற்பழிப்புகளில் பாதிக்கப்பட்ட பெண்கள் பலரும் ஏழைகள் தான். அவர்கள் வழக்குப் பதிவு
செய்யப் போனால் காவல் துறை பொதுவாக அவர்களைக் கீழ்த்தரமாக நடத்துவும், வழக்கப் பதியாமல்
இழுத்தடிப்பதும் வழக்கமாகத் தொடர்ந்து செய்கின்றார்கள். உனானே கற்பழிக்கப்பட்ட பெண்ணின்
கதையும் அவளின் தந்தை கதியும் எல்லோருக்கும் தெரியும். ஏழைகளாக இருந்தால் பாவம் அவர்கள்.
அதுவும் ஏழையான தலித் பெண்கள் இன்னும் அதிகமான இளக்காரம் இருப்பது எல்லோரும் அறிந்ததே.
கற்பழிப்பு வழக்குகளில் முதல் குற்றவாளிகளாக இருக்க வேண்டியவர்கள் வழக்கைப் பதிய காலங்கடத்தும்,
அல்லது பதியாமலே இருக்கும் காவல் துறை தான்.
முதல் தவறு காவல் துறை என்றால்
கடைசித் தவறைச் செய்பவர்கள் நம் “மதிப்பிற்கு அருகதையில்லாத” நீதிபதிகள். எப்படித்தான்
இவர்களால் வழக்குகளை இந்த அளவு இழுத்தடிக்க முடிகிறதோ தெரியவில்லை. அதில் நம் நீதிபதிகளும்
வழக்கறிஞர்களும் மிகுந்த திறமைசாலிகள் தான். வழக்கு நடக்கும் .. நடக்கும் .. நடந்து
கொண்டே இருக்கும். அதன்பின் சாட்சியங்கள் பற்றவில்லை / காவல் துறை சரியான் முறையில்
வழக்குப் பதியவில்லை / தவறு செய்தவன் பாவம் .. ரொம்ப சின்னப் பையன்.. அவனை விட்டுருவோம்
.. என்றெல்லாம் சொல்லும் நீதியரசர்கள்.
காசுக்காரன் மேல் குற்றம் பதிவிட்டிருந்தால்
இந்த அளவிற்குக் கூட வராது. அடுத்து இன்னொரு “திருவிளையாடல்” இருக்கும். தண்டனை கொடுத்த
பின்னும் பல ஆண்டுகள் அதைக் கிடப்பில் போட்டு விடுவார்கள். அடுத்து கருணை மனு வரும்.
முடியாதென்பார்கள். அதன் பின்னும் அது தொடரும் பல காலத்திற்கு. கட்சிக்காரர்கள் என்றால்
அவர்களை யாராவது செத்துப் போன ஒரு பெரிய மனுசன் பேரைச் சொல்லி கொலையாளிகளை வெளியே அவிழ்த்து
விட்டு விடுவார்கள். இந்த “செயல்பாட்டாளர்கள்” தருமபுரிக் கொலைகாரர்களை விடுதலை செய்ததற்கு
என்ன ...தைச் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை.
ஹைதராபாத் என்கவுண்டரில் குற்றம்
செய்தவர்கள் காசு பணம் இருப்பவர்களாக இருந்திருந்தால் என் கவுண்டர் நடந்திருக்காது
தான். ஆனாலும் நம்மூர் சினிமா போலீஸ்காரர்கள் வில்லனை நேரடியாகத் தண்டிப்பார்கள். ஏனெனில்
வழக்கு என்று கோர்ட் படியேறினால் என்னாகும் என்பது யாரும் அறிந்த உண்மை. இந்த காவல்
அதிகாரி சஜனார் அது போல் தான். ஆதுவும் இதை அவர் இரண்டாவது முறையாகச் செய்துள்ளார்,
குற்றப் பதிவு செய்யவே தயங்கும் காவல் துறையில் இப்படி ஒரு அதிகாரி. என் சல்யூட் அவருக்கு.
“செயல்பாட்டாளர்கள்” காவல் துறை தண்டிக்கும் அதிகாரத்தைக் கையிலெடுப்பது தவறு என்று
சொல்வதில் தவறில்லைதான், ஆனால் இந்த சஜனார் என் மதிப்புக்குரியவர். பொள்ளாச்சியில்
அவர் பதவியில் இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று கனவு கண்டு கொண்டுதானிருக்கிறேன்.
செயலற்ற காவலர்கள், செயல் முறையற்ற நீதிமன்றங்கள் இருக்கும் போது இப்படி ஓரிரு சஜனார்கள்
இருப்பது மகிழ்ச்சியே.
- இதைக் குற்றம் சொல்லும் “செயல்பாட்டாளர்கள்” பொள்ளாச்சி வழக்கைத் தங்கள் கண்ணாடிகளை கழற்றித் துடைத்து நியாயம் விரைவில் கிடைக்க விரைந்தால் மகிழ்ச்சி.
- அதே “செயல்பாட்டாளர்கள்” தரும்புரி வழக்கில் விடுதலையானவர்களைக் கண்டு கொள்ளட்டும்.
- இன்னும் கல்வித் துறை “செயல்பாட்டாளர்கள்” .. மூன்றாம், எட்டாம் வகுப்பில் பொதுத் தேர்தல்கள் நடத்துவதைத் தவிர்க்க முயற்சி எடுக்க வேண்டும்.
- பல மாநில அரசுகள் மத்திய அரசின் பணிகளில் தங்கள் மாநிலத்திற்கென்று இத்தனை விழுக்காடு என்று வரையறை வைத்திருப்பது போல் நம் தமிழ்நாட்டிலும் ஒரு சட்டம் கொண்டு வர வேண்டும்.
அதென்னவோ தெரியவில்லை. இந்த மூன்றாம்,
எட்டாம் வகுப்புத் தேர்வுகள், இந்தி ஆதிக்கம், எங்கும் எதிலும் இந்திப் பெயர்கள் (தேஜஸ்
ரயில் .. அப்டின்னா? இனி கம்பர் விரைவு ரயில்..
பாண்டியன் / [பல்லவன் ரயில் போன்ற பெயர்களைப் பார்க்கவே இனி முடியாதோ??(, நீட் தேர்வுகள்,
அதில் நடக்கும் பித்தலாட்டங்கள்.. காது கம்மலை கழற்றி வைத்து தேர்வு எழுதப் போ என்கிறார்கள்..
ஆனால் நம் ’தெரமசாலிகள்’ ஆளையே மாற்றி விடுகிறார்கள்!), குடியுரிமைச் சட்டத்தில் காணாமல்
போன secularism .. இப்படியே பட்டியலிட்டால் நீளமாகப் போய் விடும்.
இவைகளைப் பற்றி ஓரளவாவது
தமிழ் நாட்டில் பேசுகிறோம். ஏன் ஏனைய மாநிலங்கள் மெளனமாக இறுகி நிற்கின்றன. இந்தித்
திணிப்பைப் பற்றி தென் மாநிலங்கள் ஏதும் மூச்சு விடுவது கூட கிடையாதே .. இது ஏன்? எப்படி?
இப்படியே தான் எல்லாம் இருக்குமோ .. இதெல்லாம் ஒரு கிழவனின் புலம்பலில் மட்டும் தான்
இருக்குமா? தமிழ்நாட்டு இளைஞர் கூட்டம் ஏதும் செய்யாது சுரணையற்று தான் இருக்குமோ? எப்படியோ என்ன காரணமோ .. ஜல்லிக்கட்டுவிற்கு ஒரு
கூட்டம் எப்படியோ சேர்ந்தது. அவ்வளவு தான். இனி எல்லாம் தனிப் பகல் கனவுதானா?????
*
Sunday, December 01, 2019
1074. சில திரைப்படங்கள்.
*
ஐந்து நாள் சென்னைப் பயணம். முதலிரு நாள் பேரப் பிள்ளைகள். அதன் பின் எல்லாரும் படிக்கப்போய்ட்டாங்க. மொழி பெயர்ப்புக்காக புத்தகத்தையும் பேப்பர்களையும் கையோடு எடுத்துச் சென்றிருந்தேன். முதல் நாள் நாலு பக்கம் எழுதினதோடு சரி. ஊர் சுத்தலை. ஆளை முழுசா முழுங்கிடுமே .. அந்த சோபாவிற்கு உள்ளே கை காலு எல்லாத்தையும் தூக்கி அதன் உள்ளே போட்டுக்கிட்டு ஒரே ஒரு பாரமான விஷயத்தை மட்டும் கையில் எடுத்துக்கிட்டேன் - ரிமோட். பிள்ளை வீட்ல டிவி சீரியல் கிடையாது ஆனால் netflicks, prime video ரெண்டுமே இருந்துச்சா .. வரிசையா பல படங்கள்... ரெண்டு நாள் ...
1.
ஜல்லிக்கட்டு
நடிகர்கள்
யாரும் இல்லை. சொல்லப்போனால் ஒரே ஒரு மாடு மட்டும் தான் படத்தில் வரும் முக்கிய பாத்திரம்.
ஆனாலும் அந்த மாடு மாதிரி படமும் வேகமாகப் போனது. ஒரே ஒரு செருப்பில் ஒரே நடிகர்; இங்கே
பலர் வருவாங்க .. போவாங்க .. ஆனா மாடு மட்டும்
தான் நமக்குத் தெரிந்த ஒரே charecter. அது தான் ஹீரோ; கிராமத்துக்காரங்க அனைவரும் ஹீரோவைத்
துரத்தும் வில்லன்கள்.
2. TO LET
நிறைய
பரிசுகள் வாங்கிய படங்கள். படப்பிடிப்பு. நடிப்பு, இயல்புத் தன்மை படத்தில் பிடித்த
விஷயங்கள். வாடகை வீடு தேடுவதில் ஒரு பாவப்பட்ட உதவி சினிமா இயக்குநரின் பொருளாதார
இயலாமையைப் பார்க்க பாவமாக இருந்தது. Just a very plain movie. காசில்லா மக்களுக்கு
வரக்கூடிய ஒரு சாதாரண விஷயம் என்பதால் படம் என்னைத் தொடவில்லை.
3.
அசுரன்
படத்தில்
தனுஷின் நடிப்பு, அவரது இரு பிள்ளைகளின் நடிப்பு
என்று நிறைய பேர் எழுதி விட்டார்கள். ஆனால் படத்தின் மையப் புள்ளியை எல்லோரும்
தவற விட்டு விட்டார்களோ என்று தோன்றுகிறது. காலம் காலமாய் இருந்து வரும் பஞ்சமி நிலத்தைப்
பற்றிய புரிதல் விட்டுப் போனது போல் பல திரைப்ப்ட திறனாய்வுகளைப் பார்க்கும் போது எனக்குத்
தோன்றியது.
இந்தக்
கம்பு சுத்ற வேலையைத் தமிழ்ப்படங்கள் கைவிடுவதாகவே இல்லை. சுற்றி நிற்கும் அனைவரையும்
கதாநாயகன் தனுஷ் ஒற்றை ஆளாய் - சின்ன மகன் அப்போது நன்றாகவே வேடிக்கை பார்க்கிறான்!
- அடித்துக் கொல்லும் போதும், கை ஈட்டி நெஞ்சில் குத்தி முதுகு வழியே எட்டிப் பார்த்த
பிறகும் ஹீரோ நெத்தியில ஒரு சின்ன ப்ளாஸ்டருடன் வரும் போது .. வெற்றிமாறனோ வேறு எந்த
இயக்குநரோ படம் யார் எடுத்தாலும் இந்தக் காட்சிகள் தான் தமிழ்ப்படங்களில் தொடருமா என்ற
கேள்வி மனதில் எழுந்தது. என்னமோ போங்க ...
இந்தப்
படம் நன்றாக இருக்கிறது.. நடிப்பு ரொம்ப சூப்பர்னு சொன்னாங்கன்னு தான் பார்த்தேன்.
பார்த்ததும் பரவாயில்லை என்று நினைத்தேன் அடுத்த படம் பார்க்கும் வரை ...
4.
ARTICLE 15
இந்திப்
படம். தலித்துகளின் நிலையைச் சொல்லும் படம். மூன்று பெண்கள் .. அதில் இருவர் மரத்தில்
தொங்குகிறார்கள்; gang raped. இன்னொரு பெண் காணாமல் போய் விடுகிறாள். தகப்பன்கள் விரட்டப்
படுகிறார்கள். காவல் துறை எல்லாம் தெரிந்தும்
கண்களை மூடிக்கொள்கிறது. புதிதாக ஒரு ஐ பி எஸ் ஆபிசர் வருகிறார். ஒரு பிராமணர்.
தன் தந்தையின் ஆசைக்காக தேர்வு எழுதி இப்பதவிக்கு வருகிறார். அவருக்கும் அவரது காதலிக்கும்
நடுவில் வாட்சப்பில் மூலம் நடக்கும் விழிப்பூட்டல்களும் விவாதங்களும் மிக அழகு.
வெகு
இயற்கையான படம். செயற்கைத்தனம் ஏதுமில்லா படம். படம் என்றால் இப்படி இருக்க வேண்டும்
என்று நினைக்க வைத்த படம். தமிழ் உலகம் எப்போது அந்த நிலைக்கு உயருமோ தெரியவில்லை.
விரைந்து நடக்கும் என்றே நினைக்கின்றேன்; எதிர்பார்க்கின்றேன். அதில் போராட்டக்காரராக
வரும் தலித்திய தலைவர் ஓர் இளைஞர். தலை சாய்க்க நேரமில்லாமல் போராட்டக் களத்தில் இருப்பவர்.
சுட்டுக் கொல்லப்படுகிறார். அவரது கடைசி வசனம் மனதைத் தைத்தது.
you're a sweeper என்று எடுத்தெறிந்து பேசுபவரை எதிர்த்து How long I have to be a sweeper என்று சொல்லும் பதில் படத்தின் அடிப்படையைப் பேசுகிறது
you're a sweeper என்று எடுத்தெறிந்து பேசுபவரை எதிர்த்து How long I have to be a sweeper என்று சொல்லும் பதில் படத்தின் அடிப்படையைப் பேசுகிறது
சகதிக்குள்
இறங்கி பெண்ணைத் தேடிய ஆபிசர் அதன் பின் காய்ந்த ஜீன்ஸ் போட்டிருந்த ஒரு தவறு மட்டும்
தான் கண்ணில் பட்டது. படம் முழுவதும் நம்மைக் கட்டிப் போட்டு வைக்கிறது. படம் பார்த்ததும்,
பரியேறும் பெருமாள் படம் நினைவுக்கு வந்தது. நாம் ஒன்று ஒரேயடியாக ஒண்ணுமில்லாமல் போகவில்லை.
ஆனால் பரி.பெரு. மாதிரி படங்கள் நிறைய வரணும் - both in content and quality.
5.கும்பளாங்கி இரவுகள் - KUMBALANGI NIGHTS
தீவுக்குள்
இருப்பது போல் கேரளாவில் சுற்றி தண்ணீர் இருக்கும் வீடு ஒன்றில் நான்கு சகோதரர்கள்.
ஆனால் அவர்களின் அப்பா, அம்மாவிற்குள் சில கலாட்டாக்கள் .. குளறுபடி. ஒரேஅப்பாவுக்கு
இரண்டு மனைவிகளிடமிருந்து இரு பிள்ளைகள் என்பது
மாதிரி கலாட்டாக்கள். வெட்டிச் சண்டை போடும் அவர்களுக்குள் ஒரு சகோதரனின் காதல்-கல்யாணத்திற்காக
ஒற்றுமை வருகிறது. ஒரு பெரிய ஹீரோ .. சின்ன ரோலில் வருகிறார். அவர் பெயர் ... சூப்பர்
டீலக்ஸ் படத்தில் ஹீரோவாக வருவாரே .. அவர் தான். பெயர் நினைவுக்கு வந்த பிறகு அதைச்
சேர்த்து விடுகிறேன்.
மிக
அழகான இடங்கள்.. வெகு அழகான படப்பிடிப்பு. ஓடிப்போய் அந்த இடத்திற்குப் போவோமா என்று
நினைக்க வைக்கும் இடங்களை அத்தனை அழகாகப் படம் பிடித்திருந்தார்கள். Smooth and lovely
movie.
6. VERTIGO
அந்தக்
காலத்தில் பார்க்கத் தவறிய ஹிட்ச்காக் படம். இரண்டாவது சீனிலேயே ஹிட்ச்காக் இடமிருந்து
வலமாக ஸ்க்ரீனில் நடந்து செல்வார். முதல் சஸ்பென்ஸ் அப்படி மிக எளிதாக நிறைவேறியது.
அதன் பின் படம் சாதாரணமாகச் சென்றது. பணக்கார மனைவியைக் கொன்று முழுச் சொத்தையும் அபகரிக்க
எண்ணும் கணவன் கதாநாயகனை உளவறிய அனுப்புகிறான். இறுதியில் அந்தப் பெண் தற்கொலை செய்து
கொண்டது போல் தெரிகிறது. ஆனாலும் கதாநாயகனுக்கு சில ஐயங்கள். துப்பறிவைத் தொடர்கிறார்.
இறந்தாகக் கருதப்பட்ட பெண்ணைக் கண்டுபிடிகிறார் - இது நம்ப முடியாத ஒரு ’சினிமா நிகழ்வாக’த்
தோன்றியது. அவளைத் தொடர்கிறார். புதிய பறவையில் சரோஜா தேவி செய்தது போல் இங்கே கதாநாயகன்
செய்கிறார். அந்தப் பெண் நடிக்க வந்தவர். கதாநாயகன் இதைப் புரிந்ததும், இந்தப் பெண்ணும்
தற்கொலை செய்து கொள்கிறார் - அது ஏனென்று தெரியவில்ல; அது தேவையுமில்லை. கடைசி ட்விஸ்ட்
இது தான். ஹிட்ச்காக் படம் என்று அது நிருபிக்கிறது. அந்தக் காலத்தில் கேள்விப்பட்டது
போல் அத்தனை நன்றாக இல்லை. சாதாரண படம்.
7.REVELATION
மிக
அழகான ஒரு தமிழ்ப்படம். பாட்டில்லை .. நடனமில்லை .. யோகி பாபு காமெடி இல்லை. இதனாலேயே
இப்படம் ஒரு நல்ல படம் என்பதை நிரூபிக்க முடியும் போலும். சேத்தன் ஹீரோ...விஜய் ஜெயபால்
இயக்குநர். ஒரு கேள்விக்குள்ளான குறும்பட நாயகியாக நடித்த லஷ்மிபிரியா கதாநாயகி. என்னைக்
கட்டிப் போட்ட படம். இப்படி ஒரு தமிழ்ப்படமா என்று ஆச்சரியப்பட வைத்த அழகான, ஆழமான
படம். நாயகன் - நாயகி மத்தியில் நாமும் மாட்டிக் கொள்கிறோம். கல்கத்தா நகரை நேரில்
பார்த்த அனுபவம்.மென்மையான மனித உணர்வுகள், தனிப்பட்ட குணவியல்புகள், ஒவ்வொரு கதாபாத்திரங்களோடு
ஒன்றி விடுகிறோம். மக்களின் வாழ்வில் இருந்த சின்னச் சின்ன சிக்கல்கள், அதனால் ஏற்படும்
இணைப்புகளும் பிரிவுகளும் நம்மையும் உள்ளே இழுத்துக் கொள்கின்றன.
இயக்குனர் ஜெயபால் |
லஷ்மிபிரியா
நல்ல நடிகை என்பதால் அவர்களைப் போன்றவர்களைத் தமிழ்ப் பட உலகம் புறந்தள்ளி வைத்து விட்டதோ?
இந்தப் படத்தைப் பார்த்து முடித்ததும் இன்னும் சில நாளில் விஜய் ஜெயபால் போன்ற இயக்குநர்கள்
எண்ணிக்கையில் கூடி விடுவார்கள் என்ற ஒரு நம்பிக்கையும், அட்லீ போன்ற இயக்குநர்கள்
தர்த்தியான விஜய் போன்ற நடிகர்களை வைத்து எடுக்கும் படங்கள் குறைந்து விடும் என்ற ஒரு
சின்ன நம்பிக்கையும் நெஞ்சில் மெல்ல எழுந்தது.
பரிசிற்குச் செல்லும் இப்படங்கள் ஏன் மக்களுக்குச் சென்றடைவதில்லை?
பரிசிற்குச் செல்லும் இப்படங்கள் ஏன் மக்களுக்குச் சென்றடைவதில்லை?
8.
ஆரஞ்சு மிட்டாய்
விஜய்
சேதுபதி எழுத்திலும் நடிப்பிலும் தயாரிப்பிலும் உருவான மிக மிக வித்தியாசமான படம்.
படத்தில் கதை இல்லை. வித்தியாசமான, விட்டேத்தியான ஒரு கிழவர். பெருங்குடும்பத்தில்
பிறந்த நிறைய திமிர் பிடித்த அந்தக் கிழவரின் அட்டகாசமும் ஆர்ப்பாட்டமும் நம்மைஅவரின்
மீது ஈர்ப்பு கொள்ள வைக்கிறது. பார்வையாளர்கள்
போலவே மருத்து உதவியாளராக வரும் ரமேஷ் திலக்கையும் அந்தக் கிழவர் ஈர்த்து விடுகிறார்.
இந்த நடிகரை அந்தக் காலத்தில் கனா காணும் காலங்கள்
என்ற சீரியலில் வந்த முதன் முதல் சீனிலேயே எனக்குப் பிடித்தது. விஜய் சேதுபதியின் மகனிடம்
தன் தந்தை பற்றிப் பேசும் இடமும், கடைசி சீனில் பாறையில் அமர்ந்து கொண்டு விஜய் சேதுபதியிடம்
பேசும் இடம் என்று ஒவ்வொன்றும் மிக அழகாக அமைக்கப் பட்டிருந்தன.
“Life ... is a tale
“Life ... is a tale
Told by an idiot, full of sound and fury,
Signifying nothing.” என்ற ஷேக்ஸ்பியரின் மேற்கோள்களைத் தெறிக்க விட்டிருந்தார்கள்
ஏனிந்த
படம் என்னை ஈர்த்தது என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஒவ்வொரு சீனையும் ரசித்துப்
பார்த்தேன். விஜய் சேதுபதி என்ற நடிகரையும், மனிதரையும் பிடித்துப் போனதால் ஏற்பட்ட
விளைவா என்றும் தெரியவில்லை. எப்படியோ என் இதயம் அப்படிப் பேசுகிறது. இந்தப் படத்தை எடுத்த சேதுபதியின் தைரியத்திற்கும் என்
பாராட்டுகள். இரு பாடல்கள் - ஜஸ்டின் பிரபாகரின் (எங்கள் கல்லூரி மாணவர்) இசையமைப்பு
பிடித்தது; பின்னணியில் அவரது இசை பொருத்தமாக இருந்தது.
9. EQUALIZER 2
Denzel Washington பிடிக்கும் என்பதால் இப்படத்தை தேர்ந்தேன். ரிட்டையர்ட் சூப்பர் ஏஜெண்டாக வருகிறார். அடிதடி சண்டை .. அது இதுன்னு தீவிரமாகப் போச்சு. கடைசி சீன்ல மழையும் புயலுமாய் கடற்கரையில் அடிக்கும் சண்ட மாருதத்தில் துப்பாக்கி சண்டை. சண்டைன்னு வந்துட்டாலே நம்ம ஹீரோக்கள் அடிக்கிற அடிகளை என்னால் தாங்க முடியாது.
Friday, November 29, 2019
1073. ஐ ஐ டி vs பாத்திமா .. இன்னும் வரப் போகும் பல தற்கொலைகள் ...
*
அவன் கட்டை விரலை மட்டும் கொடுத்தான்.
இவர்கள் ஏன் உயிரையே கொடுக்கிறார்கள்?
குருகுலம் ..?
பாத்திமா என்ற பெண் ஐ ஐ டியில் தற்கொலை செய்து கொண்டதை எதிர்த்து என் முகநூலில் இதைப் பதிவிட்டேன். வந்த ஒரு பின்னூட்டம் இப்பதிவை பத்திரமாக வைத்திருக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டியது.
வந்த சில பின்னூட்டங்கள் கீழே .........
Avudaiyappan Arunachalam அவர்கள் துரோணர்களாக இருக்கும் வரை ஏகலைவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.
Srini Vas அது அப்போ.. இப்ப விலைவாசி அதிகமாயிட்டுது
Vijayakumar Periyakaruppan இவர்களுக்கு கொடுத்தது போதும். அவர்களிடமிருந்து நமக்கானதைப் பிடுங்குவோம்!
Prakash Karath ஏகலைவனுக்கு நல்ல சிந்தனை தெளிவும் தன்மானமும் இருந்தது.
Nattarasan Nattarasan காலம்மாறவில்லை!
G Sam George //Srini Vas அது அப்போ.. இப்ப விலைவாசி அதிகமாயிட்டுது//
ஒரு மனசாட்சியற்ற கொடூரமான பதில் நீங்கள் சொல்லியிருப்பது. ...
Srini Vas G Sam George ஐயா, அந்த காலத்தில் கட்டை விரல் கேட்டதும் பெற்றதும் மஹா தவறு. எனக்கு ஒப்புதல் இல்லை. இருந்தாலும் அது அரசியல் ரீதியான முடிவு எனக் கட்டமைத்தார்கள்.. அதை விடுங்க..
இந்தப் பெண்ணிடம் எந்த ஆசிரியரும் உயிரைக் கேட்கவில்லை. அவராகவே எடுத்த அந்த முடிவு விபரீதம். ஆழ்ந்த அனுதாபங்கள்.
ஐஐடிக்குள் வந்து மூன்று மாதங்களில் அங்குள்ள போட்டிகளைப் புரிந்து கொண்டிருக்க வேண்டும். அங்கு சராசரி மாணவனே அதிபுத்திசாலி. ஆசிரியர்களும் அதற்குக் குறைவான மாணவர்களைக் கண்டிருக்க வாய்ப்பில்லை. நான் சொல்ல வருவது ஒரு ஆசிரியராக உங்களுக்குப் புரியுமென நம்புகிறேன்.
வெளியுலகம் அந்தப் பெண்ணுக்கு மனோதைரியத்தை வளர்க்கவில்லை. முதன் முதலாக ஒரு இஸ்லாமியக் குடும்பத்திலிருந்து மேற்படிப்பு படிக்க வரும் மாணவிக்கு அதிகப்படி ஆதரவு தந்து ஊக்குவிக்க வேண்டுமென்று அந்த ஆசிரியருக்குத் தெரிந்திருக்க வில்லை. அது அவர் தவறில்லை. ஐஐடிக்குள் வரும் இஸ்லாமியர்கள் மிகக் குறைவு. அதிலும் பெண்கள் அரிதினும் அரியவர்.
இந்த தற்கொலை சம்பவம் நட ந்திருக்கக் கூடாது. விதி. மற்றபடி ஆசிரியர்களையோ ஐஐடியையோ கழுவேற்றாதீர்கள். உங்கள் பதிவு தவறு. என் பதில் தவறுக்கான தவறு.
மூன்று பெண்களின் தகப்பனாக எனக்கு அந்த பெற்றோரின் வலி புரிகிறது. அவர்கள் இந்த இழப்பின் வலியிலிருந்து மீண்டு வர என் பிரார்த்தனைகள்.
இதயம் முழுக்க பிராமண வெறுப்பு கொண்டிருந்த என் ஆசிரியர்கள் சிலர் கூட என் மீது அன்பு பாராட்டினார்கள். அது போல் பிராமண ஆசிரியர்களும் மற்ற மாணவர்களை அன்புடனே நடத்தினர். அம்பேத்கர் முதல் அப்துல் கலாம் உட்பட எல்லோரும் அதை அனுபவித்து வளர்ந்திருக்கிறார்கள்..
ஆசிரியரைப் போற்றுவோம்.
G Sam George ஒவ்வொரு வார்த்தைக்கும் பதில் சொல்ல முடியும். கொஞ்சம் நீண்டு விடும். அதற்கு முன் ... நீங்கள் தங்களையே உச்சாணிக் கொம்பில் உட்காரவைத்துக் கொண்ட குழுவில் ஒருவர். ஆகவே உங்கள் பதில் இப்படித்தான் இருக்க முடியும். So subjective ! ஆச்சரியமில்லை. அது தானே மனித இயல்பு. நம் முதுகு நமக்குத் தெரியாதல்லவா? இங்கே நான் .. கொஞ்சம் வித்தியாசம் .. பழிப்பவனும் நானல்ல... பழிக்கப்படுபவனும் நானல்ல ... logically i could be more objective than you, sir.
// அது அரசியல்
ரீதியான முடிவு// உங்களால் எப்படியெல்லாம் அந்தத் தப்புக்குக் கூட காரணம் கண்டுபிடிக்க
முடிகிறது. ஆச்சரியம். .. இயல்பு தானே!
// உயிரைக் கேட்கவில்லை.//
எவ்வளவு எளிதாகக் கடந்து விடுகிறீர்கள்! ஒன்று நிச்சயம். உங்களுக்குத் தெரியுமோ என்னவோ
.. துரோணர்களின் அந்தக் காலம் முடிந்து விட்டது.
தெரியாதா? (மன்னிக்கணும் .. அவசரப்பட்டு சொல்லி விட்டேன். அந்தக் காலம் இன்னும் அதிகக் கொடூரமாகத் தொடர்ந்து கொண்டு தானிருக்கிறது. இன்னும் எத்தனை காலமோ உங்கள் ஆட்சி?)
// அங்கு சராசரி
மாணவனே அதிபுத்திசாலி// அப்பாடா ... ஒருவேளை அங்கு வரும் உங்க குழுவை மட்டும் சொல்லாமல்
பொதுவாகச் சொல்லியுள்ளீர்கள். நல்ல மனதிற்கு மகிழ்ச்சி. அங்கு வரும் மாணவர்கள் பெரு
முயற்சியெடுத்து. தங்கள் அறிவுப் புலமை மூலம் வருகிறார்கள். (வழக்கமான
“merit" பற்றிய விவாதம் இங்கே வேண்டாம்.)
நிச்சயம் குட்டை நெட்டை இருக்கலாம். குட்டையெல்லாம் போய் குதிங்கடா என்று எந்த வாத்தியானு(ரு)ம்
சொல்லக்கூடாது. இல்லையா?
//மாணவிக்கு அதிகப்படி
ஆதரவு தந்து ஊக்குவிக்க வேண்டுமென்று அந்த ஆசிரியருக்குத் தெரிந்திருக்க வில்லை. அது
அவர் தவறில்லை// மிகப் பெரிய தவறு நீங்கள் சொல்வது.
ஏட்டுப் படிப்பை மட்டும் தரும் ஓர் ஆசிரியன் அந்த வேலைக்குத் தகுதியில்லாதவன். குட்டையாக இருப்பவனை நிமிர்த்துவது அந்த ஆசிரியனின் பணி. I I T வாத்தியார் என்றாலும் ஓர் ஆசிரியன் எப்படியிருக்க வேண்டும் என்றி இதைச் சொல்கிறேன். I just quote: //. நான் சொல்ல வருவது ஒரு ஆசிரியராக உங்களுக்குப் புரியுமென நம்புகிறேன்.//
ஏட்டுப் படிப்பை மட்டும் தரும் ஓர் ஆசிரியன் அந்த வேலைக்குத் தகுதியில்லாதவன். குட்டையாக இருப்பவனை நிமிர்த்துவது அந்த ஆசிரியனின் பணி. I I T வாத்தியார் என்றாலும் ஓர் ஆசிரியன் எப்படியிருக்க வேண்டும் என்றி இதைச் சொல்கிறேன். I just quote: //. நான் சொல்ல வருவது ஒரு ஆசிரியராக உங்களுக்குப் புரியுமென நம்புகிறேன்.//
// விதி. // எது
உங்களைப் போல் பிறக்காததா?
////மற்றபடி ஆசிரியர்களையோ
ஐஐடியையோ கழுவேற்றாதீர்கள்.// ஏங்க? அது உங்க
ராஜ்யம் என்பதால் வரும் கோபமா? இந்தக் கோபம் உங்களுக்கு வருவதும் இயல்பு தானே!
// மூன்று பெண்களின்
தகப்பனாக எனக்கு அந்த பெற்றோரின் வலி புரிகிறது// இரண்டு பெண்ணின் தகப்பனாக எனக்கு
வலி மட்டுமல்ல .. கோபமும் வருகிறதய்யா?
இந்தச் சமுகம்
என் இன்னும் இப்படி சாதி வெறி பிடித்து, கழுசடையாக இருக்கிறதே என்ற கோபம்.
ஆசிரியர்கள் என்ற
நிலைக்கு மாறாக அன்றைய துரோணர்கள் இன்னும் வேறு வடிவில் உங்கள் ஐ.ஐ.டியில் மட்டும்
முளைத்து வளர்கிறார்களே என்ற கோபம்.
// அது போல் பிராமண
ஆசிரியர்களும் மற்ற மாணவர்களை அன்புடனே நடத்தினர்.// ஏன் ஐ ஐ டி ஆசிரியர்களுக்கு மட்டும்
அப்படி கொம்பு முளைத்து விடுகிறது என்ற கோபம்.
ஒவ்வொரு ஐ ஐ டியிலும் ஏன் தலித் மாணவர்களின் தற்கொலை
தொடர்ந்து நீடிக்கின்றது என்ற கோபம்.
ஏன் உங்கள் குழுக்காரன்
எவனும் அங்கே தற்கொலை செய்து கொள்ளாமல் எங்கள் பிள்ளைகள் மட்டும் கழுவேற்றப்படுகிறார்கள் என்ற கோபம்.
இது போல் வரிசையாக
பல கேள்விகளும் .. கோபங்களும் தொடர்கின்றன.
உங்களுக்கு நீங்கள் இருக்கும் கொம்பில் இருந்து பார்த்தால் இதெல்லாம் புரியாது. புரிந்தாலும் ஒப்புக்
கொள்ள மாட்டீர்கள்?
ஓர் ஆசிரியனாக சாதி பார்க்கும் ஈனப் புத்தி என்றும் என்னுள் எட்டிப்
பார்த்ததில்லை. Inferiority உணர்வுகளோடு தனித்து நிற்பவனை அழைத்து அணைத்தது மட்டுமே
உண்டு. அவர்கள் மீண்டு நின்றதைக் கண்டு ஆனந்தப் பட்ட நாட்களும் உண்டு.
ஆனால் நீங்கள்
சொல்வது போல் // ஆசிரியரைப் போற்றுவோம்.// என்பது எல்லா ஆசிரியர்களுக்குமானது
அல்ல. சாதிக் குழு ஆசிரியர்களைத் தூற்றுவோம்.
வசந்த தேவி அங்கே ஆசிரியர். அவர் கதை ஐ ஐ டி
நிறுவனங்களுக்கு ஒரு ”நல்ல” சாட்சி. இல்லையென்பீர்களா?
என்னுடன் வேலை பார்த்த தலித் நண்பனின்
மகள் முதுகலை முடித்து மிக நல்ல மதிப்பெண்களோடு ஆய்வு மாணவியாகச் சேர்ந்தாள். தொல்லைகள்.
அதை விட்டு விட்டு ஒரு பேராசிரியராகி, தன் ஆய்வை முடித்து பட்டம் பெற்றாள். எல்லாம்
உங்கள் குழுவின் சதிராட்டமும், கொடூரமும் தான் காரணங்கள். அவள் ஐ ஐ டி விட்டு வந்த
போது மிகவும் கோபப்பட்டேன் முதலில் - நல்ல வாய்ப்பைத் தவற விடுகிறாளே என்று. நல்ல வேளை அவள் எடுத்த முடிவு நல்லபடியாக முடிந்தது.
எனக்கு ஒரு சின்ன வருத்தம். இதை வெளியில் சொல்லக்கூடாது
தான். என் மன அழுத்தம் .. சொல்லி விடுகிறேன். என்னை ஒரு ஆசிரியர் தாழ்மைப்படுத்தி என்னை
தூக்குக் கயிற்றை நோக்கி நடக்க வைத்தால் .. போறதோ போறோம் .. அதுக்கு முன் முடித்து விட்டுப்
போவோம்னு நினைத்து ... தொங்குவேன் அப்புறம்!
*
Thursday, November 21, 2019
1072. தோரணம்
*
பேருந்தில் மூன்று
பெண்களுக்குத் தூக்குத் தண்டனை என்றார்கள். பின்னாளில் அவிழ்த்து விட்டு விட்டார்கள்.
அந்த நீதிபதிகளுக்கு உள்ள மனசாட்சி அது தான் போலும்.
*****
மேலவளவு 13 கொலைகாரர்களை
அரசு வெளியே சுதந்திரமாகச் சுற்ற அவிழ்த்து விட்டு விட்டார்கள். அத்தனை மெல்லிய மனசு
நம் அமைச்சர்களுக்கு.
*****
சமூகத்தின் ஒரு
சாரார் தங்கள் பிணக்குழிக்குக் கூட ஓர் ஒழுங்கான வழியில் செல்ல முடியாத அளவு இருக்கும்
அவலம் அரசின் கண்களில் விழுவதே இல்லையே ஏன்?
*****
உயர் கல்வி நிலையங்களில்
பட்டா போட்டுக் கொடுத்தவர்கள் மட்டும் தான் பயில வேண்டும் என்பது கீழ்நிலை மக்களுக்குப்
புரியாமல் ஏன் அங்கே போய் தலை கொடுக்கிறார்கள்?
*****
சாதி வித்தியாசம்
பார்க்கும் ஆசிரியர்களை நினைத்தாலே அருவருப்பாக உள்ளதே. ம்ம்..ம்.. சாதி .. அது எங்கும்
வியாபித்திருக்கும் பெரும்பொருளாகப் போய் விட்டதே ...
*****
வகை:
தோரணம்
1071. 6 பேரை மட்டுமே கொலை செய்த 13 நல்லவர்கள் விடுதலை
*
மேலவளவு 13 கொலைகாரர்களை அரசு விடுதலை செய்து விட்டது.
அவர்கள் அத்தனை
நல்லவர்களாம்!
பழைய செய்தி ஒன்றுண்டு.
அன்றே தருமி சொன்னான் ..
இதெல்லாம் வெறும் கண் துடைப்பு என்று.
அதற்கு என் பழைய பதிவு சான்று சொல்லும்.
கட்டாயம் அதையும் வாசியுங்கள்’
அது சொல்லும்
நாம் எல்லோரும் மனசாட்சியில்லாத ஜென்மங்கள் என்று.
கட்டாயம் அதையும் வாசியுங்கள்’
அது சொல்லும்
நாம் எல்லோரும் மனசாட்சியில்லாத ஜென்மங்கள் என்று.
*
வகை:
சமூகம்
Monday, November 18, 2019
1070. ஒரு மகிழ்ச்சியான காலை வேளை ....
*
இன்று
காலை எனக்கு மிகவும் மகிழ்வான ஒரு நாளாகப் பிறந்தது. கால்நூற்றாண்டிற்குப் பிறகு என்னிடம்
படித்த மாணவனுடன் தொலைபேசியில் தொலைதூரத்திலிருந்து பேசும் வாய்ப்பு அமைந்தது. கொஞ்சம்
வித்தியாசமான ஒரு மாணவனாக இருந்தான். ஆனால் இப்போது மிகவும் வித்தியாசமானவனாக, அதுவும்
நான் ஆச்சரியப்படுமளவிற்கு மாறியவனாகவும் உயர்ந்த எண்ணங்களோடும் இருப்பதைப் பார்த்து
அத்தனை மகிழ்ச்சியும் வியப்பும் எனக்கு.
சொந்த
வாழ்க்கையில் உயர்ந்த ஒரு செயலைச் செய்துள்ளான். அது அவன் இளம் வயது வாழ்க்கை, குடும்பச்
சூழல் எல்லாவற்றையும் வைத்துப் பார்க்கும் போது எனக்கெல்லாம் அதை நினைத்துப் பார்க்கவே ஆச்சரியமாக
அவனை அண்ணாந்து பார்த்தேன். அதையும் தாண்டி அவன் பேசியவையும் அப்படி ஒரு மகிழ்ச்சியை
அளித்தன. வாழ்க்கையில் “நகர்ந்து கொண்டே” இருக்கிறான் என்பது தெளிவாகப் புரிந்தது.
அவன் வார்த்தையில் சொல்ல வேண்டுமானால், he is not enfolded into any "mold"
.. he keeps growing or rather enlarging from that mold. இந்த "mold" என்ற
சொல்லை அவன் ஆரம்பித்து வைக்க, இருவரும் அதைப் பற்றியே அதிகம் பேசினோம். வாழ்க்கை ஒரு
"mold" என்பதைத் தாண்டி, அது "mold"-லிருந்து தொடரும் ஒரு ”நீட்சியாக”
இருக்க வேண்டும் என்று பேசினோம்.
எல்லாம்
பேசினோம்.
ஆனால்
அந்த நீட்சிக்கு கேள்விகள் கேட்கும் மனம் வேண்டும் .. அந்த மனத்தை எனக்கு நீங்கள் தந்தீர்கள்
என்றான்.
‘குண்டு
சட்டிக்குள் குதிரை ஓட்டக் கூடாது’ என்றும், கேள்விகள் கேட்டுக் கொண்டே இரு என்று நான்
சொன்னதையும் எனக்குத் திருப்பிச் சொல்லி, அவைகள் என்னை மாற்ற பெரும் காரணம் என்பதையும் சொன்ன போது ஆசிரியனின் மனதில் ஒரு விகசிப்பு
வருவதைத் தவிர்க்க முடியாததே. அவனும் இப்போது ஆசிரியனாகி தன் மாணவர்களிடமும் அந்தக்
“கேள்வி ஞானத்தைப்” பரப்புகிறேன் என்று சொன்ன போது ஒரு ஆசிரியனுக்குப் பெருமிதம் வருவதும்
தவிர்க்க முடியாததே.
மனம்
நிறைந்த ஒரு காலை நேரம் ....
பி.கு. அவன் வாழ்க்கை. அதை எல்லோர் முன்னிலும் வி(வ)ரிக்க வேண்டாமென்று விவரங்கள் இல்லாமல் எழுதியுள்ளேன்.
வகை:
சொந்தக் கதை
Sunday, November 17, 2019
1069. யூதர்களின் இயேசுவும், பவுலின் கிறிஸ்துவும் -- 2
***
ஏனைய பதிவுகள்
….
யூதர்களின் இயேசுவும்,
பவுலின் கிறிஸ்துவும்
எஸ். செண்பகப்பெருமாள்
எஸ். செண்பகப்பெருமாள்
எனக்கு கிறித்துவத்தில் பல கேள்விகள் உண்டு. அவைகளை கிறித்துவ நம்பிக்கையாளர்களிடம் கேட்டு, பதில் பெறாமல் போனதுண்டு; பல சமயங்களில் தெளிவாக விவிலியத்தில் உள்ளதைக் கேள்விக்கு உட்படுத்தினால் அவர்களிடமிருந்து பதில் வருவதை விட கோபம் அதிகமாக வரும் என்பது என் அனுபவம். வேறு சில கேள்விகளுக்கான பதிலைத் தேடினேன். கிடைக்கவில்லை. ஆனால் இந்த நூல் பல கேள்விகளுக்கான பதில்களைத் தந்துள்ளன.
இந்த ஆசிரியர் - சண்முகப் பெருமாள் - ஓர் இந்து. ஓய்வு பெற்ற ஆசிரியர். கிறித்துவ பாதிரிமார்களிடம் இணைந்து, இறையியல் கல்லூரியில் பைபிள் குறித்த வகுப்புகளை எடுத்துள்ளார். அவரது நூல் கிழக்குப் பதிப்பகத்தால் 2018ம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நூலுக்கு வாழ்த்துரை வழங்கியவர் Rev. Dr. ஜோயல் செல்லத்துரை - ஒரு பாதிரியார். (நான் என் ‘மதங்களும் சில விவாதங்களும்’ நூலுக்கு அதே போல் கிறித்துவ பாதிரியார்கள் சிலரை முயற்சித்தேன் ... தயங்கினார்கள் .. விட்டு விட்டேன்.)
சில கேள்விகள்:
- எப்போதிருந்து பரிசுத்த ஆவி கிறித்துவ மதத்தில் பரவ ஆரம்பித்தது என்று தேடினேன்.
- விருத்த சேதனம் கட்டாயமாக்கப் பட்டுள்ளதாக பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் கிறித்துவர்களிடம் அப்பழக்கம் இல்லை; ஏன்?
- ஏசு திரும்பத் திரும்ப தான் இஸ்ரேயலர்களுக்காக மட்டும் வந்ததாக புதிய ஏற்பாட்டில் சொல்லி வந்தாலும் அவர் அனைவருக்குமான கடவுளாக எப்படி “ஆக்கப்பட்டார்” என்றும் அறிய ஆவல்.
- பவுல் என்ற அடிகளார் கிறித்துவ மதத்தின் ‘தலைமைக் குரு’வாக ஆகியுள்ளார். அவர் கிறித்துவத்தின் அடித்தளத்தை ‘அவரது விருப்பத்திற்கேற்ப’ மாற்றியதாக வாசித்திருக்கிறேன். அதனைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள ஆசை.
இப்படி ஒரு பெரிய பட்டியல் என்னிடம் இருந்தது. அதற்குப் பதில் தர வந்தது போல் இந்த நூல் கிடைத்தது. வாசித்து உங்களிடம் பகிர்வதற்கு முயல்கிறேன், அதற்கு முன் இந்த நூலின் பின்பக்கத்தில் உள்ள குறிப்புகள் புத்தகத்தின் கருத்தடக்கத்தைத் தருவது போலிருப்பதால் அதை முழுமையாக இங்கே முதலில் தருகிறேன்:
பைபிளின் பழைய ஏற்பாட்டு நூல்கள், யூதர்களின் மதத்தையும் கடவுளையும் நமக்கு விரிவாக அறிமுகம் செய்கின்றன. யூதர்களின் கடவுள் அவர்களுக்கு மட்டுமேயான கடவுள் என்று பைபிளில் திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிறது. கி.மு. 586-ல் பாப்லோனிய அரசன் நெபுகத்நெசர் யூதர்களின் எருசலேம் ஆலயத்தைக் தாக்கி அழித்து, யூதர்களை அடிமைப்படுத்துகிறான். அன்று தொடங்கி யூதர்கள் மாறி மாறி, கிரேக்கர்கள், ஹாஸ்மோனியர்கள், ரோமானியர்கள் என்று யாரோ ஒருவரிடம் அடிமைகளாக இருந்து வந்தனர். மீண்டும் தங்களுக்கான தனி நாட்டைச் சுதந்திரமாக ஆள விரும்பிய அவர்கள், அரசியல் விடுதலையைத் தங்களுக்கு தரக்கூடிய ஒரு மெசியாவை எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.
இந்நிலையில் யூதக் குடும்பம் ஒன்றில் கி.மு.4-ல் இயேசு பிறக்கிறார். அவருடைய போதனைகள் யூதர்களை நோக்கி மட்டுமே இருக்கிறது. தன் சீடர்கள் அனைவரும் யூதர்கள் மத்தியில் மட்டுமே பிரச்சாரம் செய்ய வேண்டும். புறஜாதியரிடம் ஒரு போதும் செல்லக்கூடாது என்று இயேசு மிகத் தெளிவாகக் குறிப்பிடுகிறார். இயேசுதான் மெசியா என்று அவருடைய சீடர்கள் யூதர்களிடம் முன்னிறுத்துகின்றனர். ஆனால் ஒரு மெசியா என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று பழைய ஏற்பாட்டில் சொல்லியுள்ளதோ அவற்றைச் செய்வதற்கு முன்னதாகவே இயேசு கொல்லப்படுகிறார்.
இயேசுவின் நேரடிச் சீடராக இருந்திராத பவுல் என்ற யூதர், இயேசுவைப் பின்பற்றுவோரைக் கடுமையாகத் துன்புறுத்துகிறார். பின்னர் மனம் மாறுகிறார். பவுல்தான் இயேசு என்ற ஒரு மெசியாவை, கிறிஸ்து எனப்படும் அனைவருக்கும் பொதுவான கடவுள் என்ற நிலைக்கு உயர்த்துகிறார். இயேசு கூறியதற்கு மாற்றாக, புற ஜாதியரிடம் இயேசு கிறிஸ்து என்ற கருத்தாக்கத்தைக் கொண்டு செல்கிறார். பவுலுக்கும் இயேசுவின் சீடர்களுக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. இன்று பவுலின் கிறிஸ்துவமே உலகம் முழுவதும் பரவியுள்ளது
செண்பகப் பெருமாளின் இந்நூல் பைபிளின் பழைய, புதிய ஏற்பாட்டு வசனங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, யூத வரலாற்றையும் இயேசுவின் வாழ்க்கையையும் ஆராய்கிறது. அதன் மூலம் இன்றைய கிறிஸ்துவத்தின் பல கொள்கைகளையும் கேள்விக்கு உட்படுத்துகிறது.
*
Thursday, October 17, 2019
1068. 5, 8 ஆம் வகுப்புகளில் பொதுத் தேர்வா?
A GUEST ARTICLE ...
*
பேராசிரியர் வின்சென்ட்* அவர்களின் கட்டுரை
*
5, 8 ஆம் வகுப்புகளில் பொதுத் தேர்வா?
இந்த
இரண்டு வகுப்புகளில் பொதுத் தேர்வு தேவையா என்பதை விவாதிப்பதற்கு முன்னர் தேர்வுகளே
அவசியம்தானா என்று பார்க்க வேண்டும்.
இன்று
தேர்வுகள் எதற்காக நடத்தப்படுகின்றன? ஒரு மாணவர் ஒரு குறிப்பிட்ட பாடத்தில் தேர்ச்சிபெற்றிருக்கிறாரா
என்று கண்டுபிடிப்பதற்காகவே தேர்வுகள் (examinations) நடத்தப்படுகின்றன. பத்தாம் வகுப்பில்
அவர் பெறுகின்ற மதிப்பெண்களைக் கொண்டு அவரைப் பதினொன்றாம் வகுப்பில் சேர்க்க ஒர் அளவு
கோலாகத் தேர்வு பயன்படுகிறது. அதுபோல பன்னிரெண்டாம் வகுப்பிற்குப் பின்னர் மேல்படிப்பிற்குச்
செல்ல தேர்வுகளில் பெறும் மதிப்பெண்கள் (சில வேளைகளில்) கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன.
மேற்படிப்புகளில் சேர ஒரு குறிப்பிட்ட குறைந்த அளவு மதிப்பெண் தேவைப்படுகிறது. சில
அரசுப்பணிகளில் சேரவும் பத்தாம், பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி குறைந்த அளவு தகுதியாக
எடுத்துக்கொள்ளப் படுகிறது. அப்படியானால் காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகள், அல்லது
பருவத் தேர்வுகள் எனபனவெல்லாம் என்ன? அவற்றைக் குறிக்க சோதனைகள் (tests) என்ற சொல்லைப்
பயன்படுத்துவோம். இப்போது எட்டாம் வகுப்பு வரையில் ஆண்டு இறுதியில் நடத்தப்படும் ‘தேர்வுகள்’
அடுத்த வகுப்பிற்கு அனுப்புவதற்காக நடத்தப்படுவதில்லை.
சோதனைகளும்
தேர்வுகளும் பின் எதற்காக நடத்தப் படுகின்றன? நடத்தப்படவேண்டும்?
ஒரு
சோதனையை நடத்துவதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றில் முதன்மையானவற்றை இங்கே குறிப்பிடுகிறேன்:
1. ஒரு இயல் அல்லது ஒரு அலகு நடத்தி முடிக்கப்பட்ட
பிறகு அதற்கான ஆசிரியர் / கலைத்திட்டம் எழுதியவர் வரையறுத்த நோக்கங்கள் நிறைவேறினவா
என்று கண்டறிய.
2. ஒவ்வொரு மாணவரும் (கவனியுங்கள் ‘ஒவ்வொரு
மாணவரும்) குறிப்பிடப்பட்ட நோக்கங்களில் தேர்ச்சிபெற்றுவிட்டாரா என்று கணக்கிட. இதற்கு
performance assessment என்று பெயர். அதாவது மாணவரின் செயல் திறன் வெளிப்பாட்டை அளவிட.
3. இந்த அளவிடல் மூலம் ஒரு மாணவரின் செயல்திறன்
எதிர்பார்க்கப்பட்ட நோக்கங்களை வெளிப்படுகின்றதா என்று காண முடியும்.
4. ஆசிரியர் பயன்படுத்திய பயிற்றுவிக்கும் முறை
(instructional procedure) சரியானதா என்பதை ஆசிரியருக்கு எடுத்துக் காட்டும். அப்போது
ஆசிரியர் தான் பயிற்றுவிக்கும் முறையை தேவையானால் மாற்றிக்கொள்வார்.
5. ஆசிரியர் பயன்படுத்திய சோதனைக் கருவி
(testing tools) தவறானதாக இருக்கலாம். எடுத்துக் காட்டாக ‘ மாணவர் தமிழில் பிழையின்றி
எழுதுகிறார்’ என்பது ஆசிரியர் நோக்கமாக இருக்கும்போது வினா மாணவர் யாரோ வேறு ஒருவர்
எழுதியதை எழுதுவதற்கு வாய்ப்பளித்தால் நோக்கத்திற்கும் நடத்தைக்கும் தொடர்பில்லை. அல்லது
“மாணவர் ஆங்கில உரையாடலில் பங்கு கொள்கிறார்’ என்பது சிறப்பு நோக்கமாக இருக்கும்போது
மாணவரை உரையாடல் ஒன்றை எழுதச் சொல்லும் போது சோதனை தவறானதாக ஆகிவிடும்.
6. ஆசிரியரது / கலைத்திட்டம் எழுதியவரது ஒரு
பாட அலகின் சிறப்பு நோக்கங்களை நிறைவேற்றும் அளவிற்கு மாணவருக்குத் தகுதியும் நாட்டமும்
இருக்கின்றனவா என்பதையும் சோதனை காட்டும். அதாவது மாணவரின் நுழைவு நடத்தை
(entering behaviour) எப்படிப்பட்டது என்பதைப் பொறுத்தே மேலே சொன்ன அனைத்தும் சாத்தியப்படும்.
மாணவரது நுழைவு நடத்தை தேவையான அளவு இல்லாவிட்டால், மாணவரை அந்த அளவிற்கு ஆயத்தப்படுத்துவது
ஆசிரியர் கடமை. எடுத்துக்காட்டாக, கூட்டல் கழித்தல் தெரியாத மாணவருக்கு பெருக்கல் வகுத்தல்
சொல்லித் தரமுடியுமா?
7. மாணவர் தனது தேர்ச்சியைத் தெரிந்துகொண்டு
தனது படிப்பு யுத்திகள், நடைகள் (strategies of learning and learning styles) ஆகியவற்றை
மாற்றிக்கொள்ள முடியும்.
8. வகுப்பறையில் மாணவரைக் குழுக்களாகப் பிரிக்க
உதவும்.
9. இப்போது அடுத்த வகுப்பிற்கு ஒரு மாணவர் தகுதியானவரா
என்று கண்டுபிடிக்கப் பயன்படுகிறது.
பெரும்பாலும்
இச் சோதனைகள் ஒரு அலகு அல்லது
இயல் முடிவில் முறைசார்ந்த அல்லது முறை சாராச் சோதனை முறையில் (formal or informal testing) நடைபெறும்.
இதனால் தேர்வு பற்றிய அச்சமோ பதற்றமோ மாணவருக்கு இருக்காது; ஆசிரியருக்கும் இருக்காது.
இந்த முறையில் காலாண்டு அரையாண்டு, ஆண்டு இறுதித் தேர்வுகளுக்கான அவசியமே இல்லாது போகும்.
சோதனைத் தாள்கள் மாணவர் கற்றலுக்கும் புரிந்துகொள்வதற்குமுரிய கருவிகளாகவே இருக்கும்.
(aids to comprehension). Work sheets என்று
சில பள்ளிகளில் பயன்படுத்தப் படும் வினாத் தாள்கள் இந்நோக்கத்திற்காக, வகுப்பறையில்
பயன்படுத்துவதற்காக ஏற்பட்டவை.
தேர்வுகளின்
முறைகளும் மாறவேண்டும். வெறும் எழுத்துத் தேர்வு மட்டும் இல்லாமல் திட்டச்செயல் முதலானவற்றின்
மூலம் சோதிக்கமுடியும். நான்காம் வகுப்புக்குழந்தைக்கு ‘உங்கள் பகுதியிலிருந்து வந்த
புகழ்மிக்க தட கள ஓட்டக்காரர் பற்றி கட்டுரை எழுதுக,’ என்ற தலைப்புக் கொடுக்கிறார்கள்.
இங்கல்ல, அமெரிக்காவில். நமது ஊர் குழந்தையும் எழுதுகிறது. மாணவர் ஒரு மாதத்தில் வாசித்து
முடிக்கும் நூல்களின் அடிப்படையிலும் மதிப்பெண் உண்டு. குழந்தையின் வயதிற்கும், படிப்புக்கும்
ஏற்ப புத்தகங்கள் வகுப்பறையிலும் பொது நூலகங்களிலும் கிடைக்கும் என்பது வேறு விஷயம்.
இங்கே ஸ்மார்ட் வகுப்பறைகளுக்குப் பணத்தை வீணாக்குவதற்குப் பதிலாக வகுப்பறை நூலகங்களும்
சோதனைச் சாலைகளும் அமைக்கலாமே? குழந்தைகளுக்கான நூல்களும் தமிழில் இப்போது வரத்தொடங்கி
விட்டன.
இவையெல்லாம்
நமது பள்ளிகளில் நடப்பதில்லையே என்று ஆசிரியர்களும் கல்வியாளர்களும் கவலைப்படவேண்டாம்.
இவற்றை நடைமுறைப்படுத்துவது ஒன்றும் கடினமில்லை. நமது ஆசிரியர்களுக்குத் தகுந்த பயிற்சியளித்தால்
மிகச் சிறப்பாகவே இவற்றை நிறைவேற்றுவார்கள்.
மிக
நுணுக்கமாகக் கவனிக்க வேண்டியது: ஒவ்வோர் அலகுக்கும் சிறப்பு நோக்கங்கள் (specific
objectives/ learning outcome) எவை என்பது தெளிவாக நடைமுறைப்படுத்தக் கூடிய முறையில்
வரையறுக்கப்படவேண்டும்.
அப்படியானால்
பொதுத் தேர்வுகள்?
இப்போது
நடத்தப்படும் பத்தாம், பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளின் மதிப்பெண்களுக்கு
எவ்வளவு மதிப்பு இருக்கிறது என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். பல பள்ளிகளிலும் கல்லூரிகளிலும்
அரசாங்கப் பொதுத்தேர்வு மதிப்பெண்களை மதிக்காமல் நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
ஒரு கல்லூரியில் பட்டப் படிப்பு படித்த மாணவருக்குக்கூட பட்ட மேல் வகுப்பில் சேர்க்க
நுழைவுத் தேர்வு வைக்கிறார்கள். இவ்வளவு ஏன்? அரசாங்கமே தான் வழங்கிய மதிப்பெண்ணை நம்பாமல்
பணியில் சேர்க்கத் தேர்வுகள் நடத்தும் வேடிக்கையையும்தான் பார்க்கிறோம். பி.ஈ. பட்டம்
பெற்றவர் பணியில் சேர நுழைவுத் தேர்வு எழுதியாக வெண்டும். நீட் தீர்வுகள் அரசாங்கப்
பொதுத் தேர்வுகளைக் கேலிக் கூத்தாக்கிவிட்டன.
அப்படியானால்
தேர்வுகள் தேவையில்லையா? தேர்வுகள் வேண்டாம். அவ்வப்போது வகுப்புச் சோதனைகள் வேண்டும்.
அவற்றின் மூலம் மாணவரின் தேர்ச்சியை மட்டுமின்றி இன்னும் முதலில் குறிப்பிட்ட பலவற்றை
ஆசிரியரும் மாணவரும் கலைத் திட்டம் வகுப்போரும், பயிற்சியாளரும் தெரிந்து கொள்ள முடியும்.
தேர்வு பற்றிய அச்சம், பதற்றம் இருக்காது. இச் சோதனைகள் நமது பள்ளிகள் சிலவற்றில் இப்போது
நடத்தப் படும் சுழல் தேர்வு (cycle test) இல்லை. ஒவ்வொரு பாடத்திலும் ஓர் அலகு அல்லது
இயல் முடிந்தவுடன் நடத்தப்படும் சோதனை. சோதனைகளே இனிமையாக இருக்கும். அகமதிப்பீட்டுத்
தேர்வுகள் வைத்து ஆண்டு முழுவதுமே கல்லூரிகளில் தேர்வு நடத்தும் கூத்தும் இருக்காது.
வகுப்புச்
சோதனைகளை வரவேற்போம். வேண்டாம் தேர்வுகள்.
-
ச.வின்சென்ட்
* ஆங்கிலத்துறை பேரா. வின்சென்ட் இதுவரை எழுதிய, மொழியாக்கம் செய்த நூல்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 50 நூல்களை மிக எளிதாகத் தாண்டி விடும். இப்போது நமது புதிய கல்வித்திட்டம் பற்றி ஆழ்ந்து புரிந்து கொண்டு, அதைப் பற்றி கட்டுரைகள் எழுதியும், தன் தொடர்ந்த பேச்சுகள் மூலமாகவும் அதனைப் பற்றிய தன் கருத்தைப் பரப்பிக்கொண்டு வருகிறார்.
*
Subscribe to:
Posts (Atom)