Saturday, September 10, 2011

529. பகுத்தறிவு பெருக்கெடுக்கும் அரசியல் ...

*

’புதிய தலைமுறை’ வந்த பிறகு செய்திகள் கேட்பது கொஞ்சம் அதிகமாகி விட்டது. நேற்று - 9.செப்ட். ஒரு செய்தி கேட்டேன். இன்று தினசரியில் வருமா என்று எதிர்பார்த்தேன். அந்த செய்தி வரவில்லை. (செய்திகளை முந்தி தருகிறது புதிய தலைமுறை ..!!)

நேற்றைய செய்தியில் ப்ரணாப் முகர்ஜி சொன்ன செய்தி ஒன்று வந்தது. ஜன லோக்பாலில் சொல்லியாகி விட்டது - அடிப்படை அரசு ஊழியர்களுக்கும் இந்த சட்டத்தில் இடமுண்டு என்று. அதனால் மத்திய அரசு புதியதாக மார் தட்டிக்கொண்டு ஒரு சட்டம் கொண்டு வரப் போகிறதாம். அடிப்படை நிலை ஊழியர்கள் தங்கள் பதவிக் காலத்தில் ஊழல் செய்யலாம்; எந்த அளவு ஊழல் செய்கிறார்களோ அதன்படி அவர்களது பதவி இறுதிக்காலத்தில் வரும் மொத்தப் பணத்தில் சில ‘டிஸ்கவுன்ட்’ செய்யப்படும் என்று ஒரு சட்டம். செய்தியில் பார்த்த வரிகள்: சிறிய அளவில் ஊழல் செய்தால் இறுதிப் பணத்தில் 10%, அதிக அளவில் ஊழல் செய்தால் 20% எடுக்கப்படும்!

அடப்பாவிகளா!  -- இப்படித்தான் சொல்லத் தோன்றுகிறது. யார் பெரிய மடையர்கள் என்று புரியவில்லை. எனக்கு வரும் வேலை முற்றுப் பணம் 10 லட்சம் என்று வைத்துக் கொள்வோம். நான் முதலில் இருந்தே “ஒழுங்காக” கணக்கு வைத்து ஊழல் செய்ய வேண்டும் போலும். 10 question paper விற்றால் 10% = 1 லட்சம் எடுத்துக் கொள்வார்கள்; அப்போ நான் விற்கும் ஒரு question paperக்கு பத்தாயிரத்திற்கு மேல் விலை வைக்க வேண்டுமோ? பெரிய ஊழல் செய்ய வேண்டுமென்றால் ஒரு கல்லூரி வாத்தியார்  என்ன செய்ய முடியும்னு தெரியலையே! சரி ... அப்படி ஒரு பெரிய ஊழல் செய்யணும்னா .. அது இரண்டு லட்சத்திற்கு மேல் வருமானம் வர்ர மாதிரி செய்யணும். எல்லாம் நல்லா யோசித்து ப்ளான் பண்ணணும் ! அப்போதான் ‘வரவுக்கும் செலவுக்கும்’ சரியா இருக்கும்.

சரி ... கடைநிலை ஊழியருக்கு இப்படி ஒரு தண்டனை. ஒரு அமைச்சன் கோடி கோடியாக ஊழல் செய்தால் அவனை என்ன செய்வார்கள். (மிஞ்சிப் போனால் நாலைந்து மாதம் ஏதாவது ஒரு சிறையில் வைத்து விட்டு அதன் பின் விடுதலை ... ஊழலில் திரட்டிய சொத்து ... அதை என்ன செய்வார்கள்? ஒன்றுமே செய்யவே மாட்டார்கள்.  அனைத்து சொத்தும் அவனுக்கும் அவன் பிள்ளைகளுக்கும், பேரப் பிள்ளைகளுக்கும் ....

என்ன மடத்தனமான திட்டம். ஊழல் செஞ்சா தண்டனை உண்டு; சாதாரணமாக வரவேண்டிய பணம் எதுவும் வராது; ... இப்படி ஏதும் சொன்னால் ஒரு பயம் இருக்கலாம். மக்கள் கொஞ்சம் ஒழுங்காக இருக்க முயலலாம். ஆனால் இந்த அரசு பட்டியல் போடுவது மாதிரி போட்டால் என்ன லாபமோ தெரியவில்லை; இந்த சட்டத்தைக் கொண்டுவந்த அந்த ‘அதீத புத்திசாலியை’ என்ன சொல்லி வாழ்த்துவது; இதை ஏற்றுக் கொண்ட அரசையும், அமைச்சரையும், அதிகாரிகளையும் என்ன சொல்லி வாழ்த்துவது என்றும் புரியவேயில்லை.

வெட்கக்கேடாக இருக்கிறது.

======================

சில செய்திகள் வருகின்றன -- 2G  ஊழலுக்கு பாடை கட்டியாகி விட்டது என்பது அந்தச் செய்தி.

2G ஊழலில் ராசாவும் கனிமொழியும் மன்மோகன், சிதம்பரம் பெயர்களை இழுத்ததும் மெல்ல மத்திய அரசு இதைப் பூசி மெழுகப் பார்க்கிறதாமே. C.B.I. ஒரு தகவல் தருகிறது; இந்த அமைப்பு இது வரை யாரையேனும் உருப்படியாக கழுவேற்றியுள்ளதா என்பதே ஒரு பெரிய கேள்வி. இதோடு C.A.G.சில தகவல்கள் தந்தன. ஆனால் இப்போது T.R.A.I. புதிய தகவல்களோடு வருகின்றன. 2G ஊழலில் அரசுக்கு ஏதும் நட்டமேயில்லை என்று ஒரு பெரும் போடு போடுகிறது.

ஆக, சீக்கிரம் ராசாவும், கனிமொழியும் எந்த ஊழலும் செய்யாதவர்கள் என்ற பட்டியலில் வெளிவருவார்கள்.

வெட்கக் கேடாக இருக்கிறது .......

=======================

மதுரையில் போன வாரத்தில் செய்தித் தாளில் வந்த செய்தி: வண்டிகளில் number plates  சரியான முறையில் எழுதப்பட்டிருக்க வேண்டும். இல்லையேல் தண்டனை என்று செய்தி.

சட்டம் என்று சொல்லி விட்டார்களே என்று யாராவது சரியாக எழுதாத தங்கள் வண்டி எண்களை மாற்றுகிறார்களா என்று பார்த்தால் அப்படி யாரும் இல்லை; அரசு ஒரு சட்டம் என்று ஒன்றைக் கொண்டு வந்தால் மக்கள் அதை நடைமுறைப்படுத்தினால் நல்லது. ’அட .. போங்கய்யா .. நாலைந்து நாளைக்கு போலீஸ் தேடும். கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக் கொண்டால் பிறகு என்ன’  என்ற மனப்பான்மை நம்மில் அநேகருக்கு.

ஏன் நாம் மட்டும் இப்படி சட்டங்களை மதிக்காத மாக்களாக இருந்து தொலைக்கிறோம் ...?

நம்ம ஊர்  மக்களை நான் நல்லாவே பார்த்து விட்டேன். சட்டம் என்றால் மதிக்கும் மனப்பான்மையே கிடையாது. ஆனால் அரசு கொஞ்சம் ‘கையை ஓங்கினால்’ அனைத்தும் சரண்டர்! இரண்டு சான்றுகள்: இந்திராவின் அவசரகாலச் சட்டத்தில் நம் தமிழ் மக்கள் அடைந்திருந்த முட்டாள்தனமான அடிமைத் தனத்தைக் கண்கூடாகக் கண்டிருக்கிறேன். உதாரணமாக, மூன்று முறை வேலைக்குத் தாமதமாக வந்தால் தண்டனை என்று ஒரு பேச்சு - வெறும் பேச்சுதான் - அடிபட்டது. அடேயப்பா ... மக்கள் பதறிப் போய் சரியான காலத்திற்கு அலுவலகம் வந்தது எனக்கு ஒரு அவலமாகப் பட்டது. இது போல் நம் தமிழ் நாட்டில் நடந்தவைகளைப் பார்த்த போது எனக்கு ஏற்பட்ட எண்ணம்: இந்த மக்களுக்கு முதுகெலும்பு என்பதே கிடையாது; வெறும் பூச்சிகள் .. புழுக்கள். வெட்டு வீராப்புகள்.

மதுரையிலேயே இன்றும் நடக்கும் ஒரு வழக்கம். சாலையில் ஒரு சண்டை என்று வைத்துக் கொள்ளுங்கள்.  யாராவது ஒருவன் ‘ஏய் .. ஆள் தெரியாம விளையாடாதே!’ என்று அடுத்தவனைப் பார்த்து முதலில் எவன் சொல்கிறானோ அவனே வின்னர்!

இரண்டாவது சான்று: ஜெயலலிதா மழைநீர் வடிகால் திட்டம் நல்ல ஒரு ‘பய முறுத்தலில்’ அழகாக நடந்தேறியது.

நமக்கு எது சரி அதன்படி நடக்க வேண்டும்; கம்பெடுத்தால் மட்டும் ஆடக்கூடாது; சட்டம் என்று ஒன்றிருந்தால் அதைக் கடைப்பிடிக்க வேண்டும் ... இப்படியெல்லாம் நமக்கு எப்போது தோன்றும்????????




*


Friday, September 09, 2011

528. பகுத்தறிவு பெருக்கெடுக்கும் சீரியல் - “தங்கம்”

*

யார் சொன்னது தொலைக்காட்சியில் நீள்தொடர்கள் பார்ப்பது தப்பு என்று. எவ்வளவு அறிவு பூர்வமான காட்சி ஒன்றை இப்போதுதான் பார்த்தேன். ‘தங்கம்’ அப்டின்னு ஒரு சீரியல். விஜயகுமார் தன்  மகள் கூட போட்ட சண்டையிலிருந்து கையில் ஒரு கட்டு கட்டிக்கொண்டு நடிப்பாரே அந்த சீரியல்தான். அதில் வரும் வில்லன் தன்னை சிவாஜியின் தத்துப்புத்திரன் மாதிரி நடிப்பாரே அதே சீரியல்தான். கதாநாயகனும் கதாநாயகியும் I.A.S., TNPSC I GROUP-ல் தேர்வாகி, சொந்த ஊரிலேயே கலெக்டரும், உதவி கலெக்டராகவும் இருப்பாங்களே .. அதே சீரியல்தான்.

8.30-க்கு U.S. OPEN நடக்குமே பார்த்து விடலாமேன்னு உட்கார்ந்தா அங்கே தடிமாடுகள் சண்டை போடுமே அந்த WWW நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. மாற்றி மாற்றி channel மேயும் போது தங்கம் வந்தது. அறிவுப்பசிக்கு நல்ல தீனி போட்டது. அதாவது எல்லை அம்மன் .. எல்லை அம்மன் என்று ஒரு தெய்வம். திராவிட தெய்வம். ஏன்னா நல்லா கருப்பா மூக்கும் முழியுமா இருந்தது. அதுக்கு முன்னால் ஒரு சீன். ஒரு பெண் எல்லை அம்மன் மேல் மிளகாயை அரைத்து அம்மனுக்குப் பூசுகிறாள். அடுத்து நம்ம கலெக்டர் அய்யா பூசுறார். உதவி கலெக்டரம்மாவும், அவுக அப்பா கையில் கட்டோடு நம்ம வி.குமாரய்யாவும் விட்னெஸ் பண்றாங்க. தத்துவம் என்னன்னு தங்க்ஸ் கிட்ட கேட்டேன். யாரு பொய் சொன்னாலும் இந்த எல்லை அம்மன் காட்டிக் கொடுத்துரும். யார் பொய் சொல்லிக்கிட்டே மிளகாய் பூசுறாங்களோ அவங்களைக் காட்டிக் கொடுத்துரும் அப்டின்னாங்க. சரி என்ன ஆகுதுன்னு பர்த்ருவோம்னு உக்காந்தேன். ஒருவேளை அம்மன் தலையில இருந்து ஒரு பூ கீழே விழுந்து கலெக்கடரய்யாவைக் காப்பாதிருமோன்னு பார்த்தான்; பூ விழவில்லை.  அடுத்து, அந்த வில்லியம்மா மிளகாய் பூசும்போது தட்டு கீழே விழுந்து காட்டிக் கொடுத்துருமோன்னு பார்த்தேன்; நடக்கவில்லை. பயங்கர சஸ்பென்ஸ். இதில எனக்கு இன்னும் ஒரு பயம்.... எங்கே தங்க்ஸ் நம்மளையும் எல்லை அம்மனிடம் கூட்டிட்டு போய்டுவாங்களோன்னு நினச்சி பயந்துகிட்டு இருந்தேன்.  நல்ல வேளைன்னு தோணுச்சி ... ஏன்னா எல்லை அம்மன் ஒண்ணுமே கண்டுக்கலை. சரி .. சீரியல் டைரடக்கர் ஒரு நல்ல பகுத்தறிவுவாதக் கொள்கையைக் கொண்டு வந்துட்டார்  கடவுள் இப்படியெல்லாம் டபக்குன்னு வந்து ரிசல்ட் சொல்லாது அப்டின்னு புரட்சிகரமா சொல்லப் போறார்னு நினச்சேன். ஆனா டைரடக்கர் கதையில் ஒரு ட்விஸ்ட் கொடுத்துர்ரார்.   நம்ம நாட்டைமை வி.குமார் ஒரு எக்ஸ்ட்ரா ரூல் கொண்டு வந்திர்ரார். பாவம் போல மீசை வச்சிக்கிட்டு நின்னுக்கிட்டிருந்த பூசாரியைப் பார்த்து ஒரு கட்டளை கொடுக்கிறார். ( ஒரு பூசாரிக்குப் பதில் அங்கே ஒரு ஆரிய சாமியார் நின்னுக்கிட்டு இருந்தா அப்படியெல்லாம் நாட்டாமை ஒரு கட்டளை கொடுத்திருக்க முடியாதுன்னு நினைக்கிறேன். அப்படி ஒரு சாமி  இருந்தால் அவர் சொல்றதை மக்கள் எல்லோரும் கேட்டுக்குவாங்க .. இல்ல?  இங்கே நாட்டாமை சொல்றதை பூசாரி உடனே கேட்டுக்கிறார்.) கேட்டுக்கிட்ட பூசாரி ஒரு சோலோ பெர்மான்ஸ் கொடுக்கிறார். சாமியை ஆடி .. ஆடி .. அழைக்கிறார். அதென்னவோ தினகரன் கூப்பிட்டா ஜீசஸ் வந்திர்ரார். (நான் பொய்யெல்லாம் சொல்லலை ... வேணும்னா இந்தப் பதிவைப் பார்த்து புரிந்து கொள்ளுங்கள்.  ) அதே மாதிரி இங்கேயும் பூசாரி கூப்பிட்டதும் எல்லையம்மன் அவரிடம் இறங்கி வந்திருது. எல்லையம்மனுக்கு யார் பொய் சொல்றாங்க .. யாரு உண்மை சொல்றாங்கன்னு உடனே டிசைட் பண்ண முடியவில்லை; பாவம்!  டிசைட் பண்றதுக்கு கொஞ்சம் டைம் வேண்டியதிருந்திருக்கு. அதைப் பூசாரிட்ட சொல்லிட்டு ‘ஆறு மாசம்’ டைம் கேட்டுட்டு, படக்குன்னு சாமி மேலே போய்ருது; பூசாரி சடார்னு தரையில உழுந்திர்ரார். (இதுக்குத்தான் தினகரன் நல்ல சோபாவில் உக்காந்திருக்கார் போலும்! கீழே விழுந்தாலும் அடி படாதே.)

ஆக தெய்வம் நின்னு கொல்லும் என்கிற தத்துவத்தைக் காண்பிக்கத்தான் இந்த டைரடக்கர் இந்த சீனை எடுத்திருப்பார் போலும்.

ரிசல்ட் என்னாகுமோன்னு தெரிஞ்சிக்க ஆறு மாசம் கழிச்சி இந்த சீரியலைப் பார்க்கணும். அப்ப சாமி உண்மையைச் சொல்லிடும்னு நினைக்கிறேன் .... பாத்துட்டு உங்ககிட்ட வந்து சொல்றேன்.


*
எனக்குப் பிடிக்காத Andy Murray முதல் செட்ல 3 : 4 அப்டின்னு டவுன்ல நிக்கிறார்.

*








Tuesday, September 06, 2011

527. பிறந்த மண்ணின் வாசனை ... பல ஆண்டுகளுக்குப் பின் - 2

*
அப்பா ஊரிலிருந்து கிளம்பி அடுத்து அம்மாவின் ஊருக்கு - குறும்பலாப்பேரிக்கு - சென்றோம்.  நெல்லை -தென்காசி சாலையில், ஆலங்குளத்திலிருந்து ஏறத்தாழ 10-12 கி.மீட்டர் தாண்டி பாவூர்சத்திரம். அதிலிருந்து  ஓரிரு கி.மீட்டர் சென்றால் குறும்பலாப்பேரி. ஊரின் மேற்குக் கடைசியில் தாத்தா - பாட்டி வீடு. இப்போது மாமாவின் பிள்ளைகளின் குடும்பங்கள் இருக்கின்றன. கிராமத்தில் இருந்ததாலோ என்னவோ மாமாவின் பிள்ளைகள் பள்ளியோடு தங்கள் படிப்பை முடித்துக் கொண்டனர். ஆனால் தங்கள் பிள்ளைகளை நன்குப் படிக்க வைத்து சென்னையிலும், அமெரிக்காவிலும் ‘ஆணி பிடுங்க’ வைத்து விட்டார்கள் என்பதறிந்து மிக்க மகிழ்ச்சி.

தாத்தாவின் பழைய வீட்டில் எனக்குப் பிடித்த இடமே கீழே காணும் வாசல்தான். புதிய சாலைகள் வீட்டுப் படிகளின் உயரத்தைக் கபளீகரம் செய்து விட்டன. மூன்று நான்கு படிகள் சாலைகளில் முங்கி விட்டன போலும். அதன் பின் பூச்சு ஏதுமின்றி இருந்த நுழை வாயில் இப்போது பெரிதும் மாறி வண்ணக்
பழைய வீட்டின் நுழைவாயில்
கலவையோடு நிற்கின்றன. அதனால் முன்பு ‘தர்பார்’ போன்று காட்சியளித்தது இப்போது இல்லாமல் போய்விட்டது. ஆனால்  உள்ளே பழைய வீடுகள் வரலாற்றுச் சின்னங்களாக ஆகிவிட்டன.அழகிய புதிய வீடுகளைக் கட்டிக் கொண்டதால் பழைய வீடு இன்னும் பழமையோடு நிற்கின்றன.  சின்ன வயதில் எனக்குப் பிடித்த மாடியில் உள்ள வளைவுகளும், தூண்களும் இப்போது சிறிது செம்மைப் படுத்தப் படுகின்றன.

மாடி
வீட்டிற்கு வெளியே பூட்டன்-பூட்டியின் சமாதிகளைச் சுற்றி மனோரஞ்சிதச் செடிகளும், ஏனைய செடிகளும் முன்பு நிறைந்திருந்தன. பக்கத்தில் இருந்த கிணறு இப்போது பயன்படுத்தப் படாததால் இப்போது அந்த தோட்டம் காய்ந்து

பூட்டையா & பூட்டி சமாதி
பிள்ளையார் கோவில்
போய் நிற்கின்றது. நல்ல நிலையில் இருந்த போதே அந்தக் கிணற்றை எட்டிப் பார்க்க எனக்குப் பயம். இம்முறை மிகவும் ‘பாதுகாப்பாக’ நின்று கொண்டு கிணற்றை எட்டிப் பார்த்தேன். குப்பையும் கூளமும் அடிவாரத்தில் சிறிதே நீரோடு இருந்தது. 




பூட்டனாருக்கு மிக்க தெய்வ பக்தி இருந்திருக்குமென நினைக்கிறேன். பழைய வீட்டிற்குள்ளேயே  பெரிய திண்ணையோடு ஒரு  கோவில்; வீட்டிற்கு வடக்குப் பக்கம் ஒரு உயரமான பிள்ளையார் கோவில். மற்றொன்று ஊருக்கு நடுவில் பத்திரகாளியம்மன் கோவில். இந்தக் கோவில் பூட்டையாவின் பெயரிலேயே இன்றும் இருப்பதாகச் சொன்னார்கள்.

படத்தில் பார்க்கும் பிள்ளையார் கோவிலில் மண்டபப் பகுதி மட்டுமே இன்றும் முழுமையாக இருக்கிறது. கோவிலுக்கு முன்னால்  ஓடு போட்ட ஒரு நீண்ட திண்ணை இருந்தது. சிறு வயதில் இங்கு வரும்போது நிழலில் அசந்து தூங்கும் மக்கள், ஆடு-புலி ஆட்டம் ஆடும் மக்கள், ஊர்க்கதை பேசும் மக்கள் என எப்போதும் அந்த திண்ணை நிறைந்திருந்தது. காலம் திண்ணையைக் காப்பாற்றவில்லை போலும். இப்போது வெறும் கல்தூண்களோடு மட்டும் நிற்கின்றன.


மண்டபத்தின் இரு வெளித் தூண்களிலும் பூட்டையா - பூட்டியின் சிலைகள் இருக்கின்றன. பூட்டையாவின் மீசை .. ம்ம் .! சிவப்பழமாக இருந்திருப்பார் போலும். உடலெங்கும் உத்திராட்சக் கொட்டை மாலைகள். பூட்டியின் மூக்குதான் சிறிது சிதைபட்டு இருக்கிறது.




பூட்டன்





பூட்டி
ஊருக்கு நடுவேயுள்ள பத்திரகாளியம்மன் கோவில் பெரிதாக உள்ளது. இங்கு புரட்டாசி மாதம் விழா எடுப்பார்களாம். அன்று கோவிலின் முதல் மரியாதை இன்றும் மாமா குடும்பத்தினருக்கு நடக்குமாம்.
பத்திர காளியம்மன் கோவில்



தாத்தா வீட்டிற்கு மேற்குப் பக்கம் வெறும் புளியம் விளை ஒன்றிருந்தது. வறண்ட பூமியாகத்தான் அதைப் பார்த்திருக்கிறேன். ஆனால் இன்று அது பச்சைப் பசேலென்று அழகான தோட்டமாக மாறியிருந்தது. தோட்டத்தில் ஒரு கிணறு, ஆனால் இந்தக் கிணறு பட்டினங்களில் sump  கட்டுகிறார்களே அதே போல் பயன்பட்டு வருகிறது. சற்று தள்ளி எப்போதும் ஊற்றெடுக்கும் மற்றொரு கிணற்றில் இருந்து தண்ணீர் இறைத்து இந்தக் கிணற்றுக்கு குழாய்

பழைய புளியந்தோப்பு
மாமா மகன்


வழியே வந்து விழுகிறது. தேவைப்படும் போது இக்கிணற்றிலிருந்து தோட்டத்திற்குத் தண்ணீர்  பாய்கிறது. வெங்காயமும், மிளகாயும் நன்கு காய்த்திருந்தன.
இன்றைய தோப்பு
ஊரும், உறவினரும், தோட்டமும் துறவும் நன்கிருந்ததைப் பார்க்க மனதுக்கு மகிழ்ச்சி.  விடுமுறைக்கு வீட்டுக்கு வரும் பிள்ளைகள் தோட்டத்தில் உடன் வந்து துணை செய்வதைப் பெருமையுடன் பகிர்ந்து கொள்ளும் பெற்றோரைப் பார்த்ததும் மகிழ்ச்சியே.

பட்டினங்களில் வீடு கட்டும்போது முதல் வேலையாக ஒரு architect பார்த்து வீட்டுப் படம் தயாரிக்கிறார்கள். ஆனால் அம்மா ஊரில் நிறைய புதிய கட்டிடங்கள். well designed houses. யாருப்பா உங்க architect? என்றேன். அப்படியெல்லாம் யாரும் கிடையாது; எல்லாம் எங்கள் ப்ளான் தான் என்றார்கள். உறவினர்கள் வீடுகள் மட்டுமல்லாது ஊரில் பார்த்த பல வீடுகளும் மிக அழகாகக் கட்டப்பட்டிருந்தன. வீட்டின் சுற்றுச் சுவர்களில் கூட அந்த அழகு தெரிந்தது. வீடுகள் எல்லாமும் பல வண்ணக் கலவைகளோடு, பட்டினத்து வீடுகளுக்குப் போட்டியாக நின்றன.பழைய கட்டுமானக் கலை இன்னும் அங்கே செழிப்பாக நிற்கின்றது.


*

குறும்பலாப்பேரி பற்றிய வேறு சில பதிவுகள்:

DAYS AT KURUMBALAPERI

KURUMBALAPERI DAYS - CONTINUED


*

Monday, September 05, 2011

526. பிறந்த மண்ணின் வாசனை ... பல ஆண்டுகளுக்குப் பின்

*
பள்ளிப் பருவத்தில் சொந்த ஊர் செல்வதற்கு முந்திய இரவு சரியாகத் தூக்கம் வராதது போல் தெரியும். இன்று, ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கு மேல் சொந்த ஊர் பக்கம் போகாத எனக்கு அதேபோல் ஊருக்குப் புறப்படுவதற்கு முந்திய இரவு எப்போதும் போல் தூக்கம் உடனே வராதது ஆச்சரியமாக இருந்தது. பழைய நினைவுகளை மீண்டும் நினைத்துப் பார்த்துக் கொண்டேன்.

சின்ன கிராமம். பெயர்: காசியாபுரம். பக்கத்தில் கொஞ்சம் பெரிய  ஊர்கள் இரண்டு : -- 1.  நல்லூர் - நெல்லை மாவட்டத்தில் பெயர் பெற்ற, 100 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வரும் ஒரு உயர் நிலைப் பள்ளிக்கூடம்;  இப்போது அங்கு ஒரு கல்லூரியும் கூட;  2.  ஆலடிப்பட்டி - ஸ்ரீ வைத்தியலிங்கசாமி கோவில் இருக்கும் ஊர். இந்த இரு ஊர்களுக்கும் கிழக்குப் பக்கம் இருப்பதே எங்கள் ஊர். .

சிறு வயதில் வருடத்திற்கு இரு முறை அங்கு செல்வதுண்டு - கிறிஸ்துமஸ் விடுமுறைக்கும், கோடை விடுமுறைக்கும். பின் அது கோடை விடுமுறை மட்டும் என்றானது. வளர்ந்ததும் எப்போதோ ஒரு முறை என்றானது.  ஊரிலிருந்த அப்பம்மா இறந்ததும் ஏறக்குறைய முழுவதுமாக நின்று போனது. இப்போது போகும்போது நிறைய மாற்றங்கள் ... ஆச்சரியங்கள் ... முன்னேற்றங்கள்.

ஒளவையார் தன் நாட்டைப் பார்த்து வாழ்த்த வேண்டுமென்று மன்னன் விரும்பினானாம். ஆனால் நாட்டைப் பார்த்த தமிழ்க்கிழவி ‘வரப்புயர’ என்று மட்டும் வாழ்த்தினாளாம். ஏமாந்த மன்னனிடம் பின் அவள், வரப்புயர நீர் உயரும். நீர் உயர்ந்தால் நெல்லுயரும்; நெல்லுயர்ந்தால் குடி உயரும்; குடி உயர்ந்தால் நாடு உயரும்; நாடு உயர்ந்தால் முடி உயரும் என்றாளாம். எனக்கு இன்று என் ஊரைப் பார்க்கும்போது ‘ரோடு உயர’ என்று யாரோ வாழ்த்தியிருப்பார்களோ என்று தோன்றியது. எங்கும் எதிலும் சாலைகள் ... வெறும் மணல் தரைகள் சாலைகளாக மாறி விட்டன. அதனால் ஊரின் முகமே மாறி விட்டது. பெரிய பாட்டையாவின் வீட்டிற்கு அந்தக் காலத்தில் மிகவும் மவுசு அதிகம். பெரிய உயரமான, அகலமான வீடு. படத்தில் நீலக்கலரில் தெரிவது பாதி வீடு. இன்னும் பாதி கைமாறி விட்டது.
பெரிய பாட்டையா வீடு
உயரத்தில் என் சின்ன வயதிலிருந்து பார்த்த மஞ்சள் நிறத்து இரு வாழைக்குலைகள் இன்னமும் அதே வண்ணத்தில் தொங்கிக் கொண்டிருந்தன.அந்தக் காலத்தில் அந்த வீட்டை 'வாழைப்பழக் குலை வீடு' என்பார்கள் . அந்த வீட்டின் தென்பக்கத்து திண்ணை வீதியிலிருந்து நான்கடிக்கு மேல் உயரமாக இருக்கும்.
வாழைப் பழக்குலை வீடு
இப்போது பார்த்தால் ரோட்டிலிருந்து ஓரடி உயரத்தில் திண்ணையிருந்தது. ‘ரோடு உயர’ என்பதாக, ரோடு உயர்ந்து வீடுகள் ‘இறங்கி’ விட்டன போலும்.

இதற்கு அடுத்த தெருவில் எங்கள் பாட்டையா வீடு. அந்தக் காலத்தில் எங்கள் வீட்டுப் படிகளும் தெருவிலிருந்து உயரமாக இருந்தன. இப்போது அந்தப் படிகள் எல்லாம் காணாமல் போய்விட்டன. பெரிய பாட்டையா வீட்டை விட சிறிய அந்த வீடு இப்போது அடையாளமும், கம்பீரமும் இழந்து சாதாரணமாக இருந்தது. ஏன் எல்லா வீடுகளும் இப்படி நீலக்கலரில் இருக்கின்றன என்று
எங்கள் தெரு
தெரியவில்லை; பொருளாதாரம் ஒரு காரணமாக இருக்கலாம் - அப்படியே கொஞ்சம் நீலப் பவுடர் போட்டு அடித்ததோ என்னவோ!
சந்தி

இந்த சந்தியில் தெரியும் அந்த ஒற்றைத் தூண் ‘அந்தக் காலத்தில்’ மின் விளக்குகள் வருவதற்கு முன் ஒரு விளக்குத் தூணாக இருந்தது. இருட்டிய பின் இது போன்ற விளக்குத் தூண்களின் தலையில் இருக்கும் மண்ணெண்ணெய் விளக்குகளை ஏற்றவும், காலையில் அவைகளை அணைக்கவும் ஒருவர் கையில் ஒரு தீவட்டியோடு மாலையிலும், ஒரு நீளக் கழியோடு காலையும் வருவதைச் சின்ன வயதில் பார்த்திருக்கிறேன். அந்த விளக்கின் வெளிச்சம் தரை அளவு கூட நீளாது. ஒரு ஒளிப்பந்து. அவ்வளவே ...

அந்தக் கல்லுக்குப் பக்கத்தில்  இப்போது இருக்கும் வீடு அப்போது கூரை வீடாக இருந்தது. அங்கு இன்னொரு கல் தூண் இருக்கும். ஊரில் நடக்கும் திருட்டு போன்றவைகளில் குற்றம் செய்தோரை அந்தக் கல் தூணில் கட்டி வைப்பார்கள். அப்படி ஒரு நிகழ்வைப் பார்த்தது இன்னும் என் நினைவில் இருக்கிறது. புதுமைப்பித்தனின் சிறுகதை ஒன்று படித்த பிறகு இந்தத் தூணைப் பார்க்கும்போதெல்லாம் புதுமைப்பித்தன் நிச்சயமாக நினைவுக்கு வந்து விடுவார்.

அவ்வப்போது இந்த சந்தியில் காடா விளக்கு வெளிச்சத்தில் ஏலம் நடக்கும். ‘டவுண்காரப் பையனான’ எனக்கு இந்தச் சந்தியின் முக்கில்தான் முதன் முதல் சடுகுடு விளையாட்டு அறிமுகப்படுத்தப் பட்டது. நிலவு ஒளியில் நடந்த ஓர் இரவு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த என்னை விளையாட நண்பர்கள் அழைத்து ‘மேடையேறினேன்’. அப்போதெல்லாம் கபடி என்ற பெயர் இந்த விளையாட்டிற்கு இருந்ததாக நினைவில்லை. அது அப்போது சடுகுடு விளையாட்டு தான். முதன் முறை ஏறி பாடினேன். ஒருவனைத் தொட்டும் விட்டேன். உடனே அங்கேயே நின்று, சடுகுடு என்று பாடுவதை நிறுத்தி விட்டு, அவனைத் தொட்டுட்டேன் என்று பிரகடனப்படுத்தினேன்! அட .. போடா .. நீ அவுட்டுன்னு அவுட்டு கொடுத்துட்டாங்க. அதுக்குப் பிறகுதான் ‘ரூல்ஸ்’ எல்லாம் தெரிந்தது.

இந்தச் சந்தியிலிருந்து தெற்குப் பக்கம் ஒரு தெரு.சிறிது தூரம் சென்றதும் தெரு நின்று, ஒரு முரட்டு சாலை தொடரும். பாறை மயமாக இருக்கும். அங்கிருந்து சிறிது தூரம் சென்றதும் ‘கல்லறைத் தோட்டம்’. ஆனால் இப்போது அங்கெல்லாம் நல்ல சாலை. கல்லறைத் தோட்டம் முன்பு காடாக இருந்தது; ஆனால் இப்போது திருத்தப்பட்டு, வேலி கட்டி, பூட்டிய கதவுகளோடு இருந்தது. அம்மாவின் கல்லறை அங்கிருந்தது. பார்க்கப் போனேன். சிறு வயதில் இங்கே நடந்த ஒரு நிகழ்வும் மறுபடி ரீவைண்ட் ஆனது.

1907ல் இறந்த பூட்டையாவின் கல்லறை
 பூட்டையா, பூட்டி, பாட்டையா, அப்பம்மா கல்லறைகளோடு என் அம்மாவின் கல்லறையும் அங்கே உண்டு. அம்மாவின் கல்லறையை சிறிது நேர்ப் படுத்த ஊரிலிருந்த தம்பி மூலம் ஏற்பாடு செய்து, சில படங்கள் எடுத்து திரும்பினேன்.
பூட்டையா - பாட்டையா கல்லறைகளுக்கு நடுவில் அம்மா கல்லறை

அம்மா கல்லறை - 13.10.’47

ஊரை ஒரு முறைச் சுற்றிப் பார்ப்போமே என்று சுற்றினேன். பாட்டையா காலத்தில் St.Joseph's R.C. Elementary School என்று ஒரு பள்ளி ஆரம்பித்தார். அம்மா இறந்த பிறகு, இரண்டரை வயதிலிருந்து ஐந்து வயது வரை  வாழ்க்கை இப்பள்ளியோடு தொடர்ந்திருந்தது. அதுபற்றி இங்கே கொஞ்சம் சொல்லியிருக்கிறேன். அந்தப் பள்ளி அப்போது கிறித்துவக் கோயிலாகவும் தேவையானபோது உருவெடுக்கும். அந்தப் பள்ளியின் கதை முடிந்து பல ஆண்டுகளாக ஆகிப் போனது; இப்போது வெறும் ஒரு கட்டைச் சுவராக நின்றது. அதைப் படமெடுக்க மனம் வரவில்லை ...

கோவில்



பள்ளியே கோவிலாக இருந்த போதே புதிய கிறித்துவக் கோவிலுக்கான அடிப்படை வேலைகள் முடிந்து, ஜன்னல்கள் அளவில் கட்டைச் சுவராக அந்தக் கட்டிடம் பல ஆண்டுகள் வெறுமனே கிடந்தது. பத்தாண்டுகளுக்கும் மேல் அதுபோல் கிடந்த அந்த இடம் எங்கள் பாட்டையாக்களின் கடைசிக் காலத்தில் மறு உருவெடுக்க ஆரம்பித்தது. மெல்ல வளர்ந்து ஒரு கோவிலாக மாறியது. இப்போது அங்கு தினமும் வழிபாடு நடப்பதாகத் தகவல்.




ஆலடிப்பட்டிக்கு உரிய இந்துக் கோவில் ஸ்ரீ வைத்தியலிங்க சாமி கோவில். இந்தக் கோவிலின் திருவிழா முழு ஆண்டு விடுமுறை நேரத்தில் வரும். ஆகவே முன்பெல்லாம் அந்த விழா நாளில் அடிக்கடி ஊரில் இருப்போம். அடடே .. அந்த வயசில் இரவு நெடு நேரம் விழித்திருந்து கரகாட்டம், வில்லுப் பாட்டு ... அது இதுன்னு நண்பர்களோடு சுற்றியதுண்டு. கரகாட்டம் தான் சிறப்பு நிகழ்ச்சி. ஏனென்றால் நாம் பார்க்க வேண்டிய நண்பிகளுக்கு நேர் எதிராக நாம் பார்வையாளர் வட்டத்தில் நிற்க முடியும். திரும்பிப் பார்க்கும் தொல்லையில்லாமல், நேருக்கு நேர் நிற்கலாமில்லையா...!
ஆலடி ஸ்ரீ வைத்தியலிங்க சாமி கோவில்

அந்தக் கோவிலிலும் பல மாற்றங்கள் தெரிந்தன. கோவிலுக்குப் பக்கத்தில் ஒரு ’ஆட்டோ ஸ்டாண்ட்”. ஆச்சரியமாக இருந்தது. மாட்டு வண்டிகளே இருந்த இடங்களில் இப்போது பெரும் மாற்றங்கள். கோவிலுக்கு எதிரில் ஒரு சிறு மேடை உண்டு; அதனுள்ளே ஒரு சின்ன லிங்கம் உண்டு; இந்த மேடை கோவிலுக்கு எதிர்த்த தெருவின் முகப்பை அடைத்து நிற்கும். மிஞ்சிப் போனால் ஒரு சைக்கிள் மட்டும் போகக்கூடிய இடமே மீதியாக முன்பு உண்டு.ஆனால் இப்போது அந்த இடம் எப்படி மாற்றினார்களோ தெரியவில்லை ... அகலமாக அந்த இடம் மாறியிருந்தது. மேடைக்கு ஒரு பக்கம் நல்ல இடைவெளி. லாரிகள் கூட இப்போது கடந்து போகலாம். லிங்கமே வழி விட்டு விட்டது ...! ஆனாலும் அந்த மேடைக்கருகில் நம் அரசியல் கட்சிகளின் கொடிகள் - தி.மு.க., அ.தி.மு.க., தே.தி.மு.க. - கம்பங்களில் பறந்து கொண்டிருந்தன! சாமிக்கும் அரசியலுக்கும் நம் ஊரில் இடமா கிடைக்காது!


 



இன்னும் பார்க்க சில இடங்கள் இருந்தன. படம் எடுக்கவும் சில இடங்களை நினைத்திருந்தேன். முடியாது போயிற்று. சிறு வயதில் ஒரு கிணற்றைப் பார்த்துப் பயப்படுவதுண்டு. மிகப் பெரியது. வெறும் பாறைதான். தண்ணீரே பார்த்ததில்லை. வைத்தியலிங்க சாமி கோவிலில் இருந்து வடக்குப் பக்கம் செல்லும் சாலையில் இருக்கும். ஊர்க்கிணறு என்று ஒன்று உண்டு; அது என் பூட்டையா வெட்டியதாகச் சொல்லிக் கேட்டிருக்கிறேன். அதையும் படமெடுக்க நினைத்தும் எடுக்க வில்லை. பொன்னியின் செல்வன் இணைத்த நண்பன் - அப்பாதுரை - ஒருவன் ஊரில் உண்டு. அவனையும் பார்க்க முடியாது போயிற்று.

அடுத்த முறை போகும்போது விட்டவைகளைத் தொடணும் ...


*
காசியாபுரம் பற்றி வேறு சில பதிவுகள்:

54. மரணம் தொட்ட கணங்கள்...முதல் கணம்

57. எனது "ஜாவா மஹாத்மியம்"...

81. அப்பாவின் கல்யாண வைபோகமே…

  MY APPA'S WEDDING THAT I ATTENDED.
MY VERY EARLY DAYS AT KASIAPURAM
PIETY AT KASIAPURAM
A GREAT ACTOR WAS BORN!


*