Showing posts with label சொந்தக் கதை. Show all posts
Showing posts with label சொந்தக் கதை. Show all posts

Thursday, March 05, 2026

1369. நல்ல வேளை .. அதன்பின் ஏதும் நடக்கவில்லை.


நல்ல வேளை ...

அதன் பின் எதுவும் நடக்கவில்லை.



 

 

 

 *

 *

*
 

**

நல்ல வேளை ...

அதன் பின் எதுவும் நடக்கவில்லை.

 

இந்தக் கிழடுகளுக்கு ஒரு சான்ஸ் கொடுத்தால் தங்கள் பழைய காலத்துக் கதைகளை எடுத்து விடுவார்களாமே ... ஆகவே நானும் சில பல கதைகளைச் சொல்லட்டுமாரெண்டு பழசு ஒண்ணு புதுசுன்னு வச்சுகுவோம்.

முதல் கதை:
பற்பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது
மதுரையிலிருந்து எங்கள் கல்லூரியின் சார்பாக சென்னைப் பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு பன்னாட்டுக் கருதரங்கிற்கு வந்திருந்தேன். எங்கள் கல்லூரியில் என்னுடன் பணிசெய்து கொண்டிருந்த பேரா. சோமசுந்தரம் அந்த மூன்று நாளும் என்னோடு இருந்து கம்பெனி கொடுத்தார்.

முதல் நாளின் முதல் அமர்வில் கருத்தரங்கை நடத்தியப் பேராசிரியர் வரவேற்புரை அளித்துஅனைவரையும் அந்த HUMAN ETHICS கருத்தரங்கிற்கு வந்தமைக்கு வரவேற்றுஅதன்பின் வரும் நாட்களில் Hindu ethicsChristian Ethics and Islamic ethics  என்ற தலைப்புகளில் யார் யார் பேசுவார்கள் என்ற அறிமுகம் கொடுத்தார். அதன் பின் கேள்வி நேரம் என்பது போல் சிறிது நேரமளித்தார்கள்.

பேசாமல் இருந்திருக்கலாம்.

நானெழுந்து ethics என்பது அனைத்து மனிதருக்க்கும் பொதுவானதுஅதை மதங்களை வைத்துத் தனித்தனியாகப் பிரிப்பது சரியாஎன்றேன்.

அப்போதிருந்து வந்திருந்த அனைவருக்கும் எதிரியாகி விட்டேன் என்றே தோன்றியது.

அடுத்து காபி டைம். நானும் சோமுவும் ஒரு டீ குடித்துக் கொண்டு நின்றோம். இஸ்ராலிலிருந்து வந்திருந்த ஒரு தத்துவப் பேராசிரியர் எங்களோடு சேர்ந்து கொண்டார். அவர் ஏதேதோ பேசினார். நமக்கும் தத்துவத்திற்கும் என்ன தொடர்பு. தலையாட்டிக் கொண்டிருந்தேன். நம்மூர் மாயா பற்றிப் பேசினார். டீ குடித்துக் கொண்டேஎதிரில் தெரியும் கட்டிடத்தைக் கையால் காண்பித்து அது என்ன? என்றார்.

நமக்குத்தான் விடை தெரியுமே. It is just a buildingஎன்றேன்.

‘No.. the building is not there. It is here.. என்று சொல்லிதன் சுட்டு விரலால் தன் முன் நெற்றியைச் சுட்டிக் கொண்டு, the building is here in your brain.. not thereஎன்றார்.

சட்டென்று ஒரு பதில் சொன்னேன்: go and hit it with your head; you will find whether it is there or inside your brain.

உறைந்தார். அடுத்த வினாடி காலி டீ கப்பை வைப்பது போல் அங்கிருந்து சென்று விட்டார்.

சோமு என்னை முறைத்தார்.

நல்ல வேளை .. அதன்பின் ஏதும் நடக்கவில்லை.

இரண்டாம் கதை:
1991. Desert Storm என்ற பெயரில் மத்தியகிழக்குப் பகுதியில் நடந்த போரை ஒட்டிய ஒரு நிகழ்வு அது. அதில் அமெரிக்கா patriot என்ற SAM (Surface air missile) என்ற ஏவுகணைகளையும்அந்நாடு எதிர்த்து நின்ற ஈராக் நாடு Scud என்ற ஏவுகணைகளையும் அப்போரில் பயன்படுத்தின. இதில் ஸ்கட் ஏவுகணையின் திறம் மிகவும் மட்டமாக இருந்தது. அதனால் அந்த ஏவுகணைகள் சவுதியையும்இஸ்ரேலையும் நோக்கி வீசப்பட்டாலும் அவைகளால் இந்த இரு நாட்டிலும் அதிக சேதமில்லை. இஸ்ரேலில்  நோய்வாய்பட்டிருந்த என்னைப் போன்ற ஒரு கிழவன் குண்டு வெடித்த சத்தத்தில் பயந்து உயிரை விட்டதாகச் சொன்னார்கள். வேறு சேதமில்லை. பிப்ரவரி மாதத்தில் நடந்த போர் அது.

அந்த ஆண்டில்அநேகமாக அது ஈஸ்டர் திருநாளாக இருந்திருக்க வேண்டும். அன்று இரவுப் பூசை விசேஷமாக இருக்குமில்லையாஅன்று கோவிலில் இல்லாமல் மதுரை பிரிட்டோ பள்ளி வளாகத்தில் இரவுப்பூசை நடந்தது. நான் பின்னால் உட்கார்ந்திருந்தேன். அப்போது நண்பர் அருளானந்தர் கல்லூரிப் பேராசிரியர் ஒருவரும் என்னோடு உட்கார்ந்திருந்தார். அப்போது பூசையில் பிரசங்கம் கொடுத்த சாமியார் எப்படி ஏசுநாதர் தம் இனத்தவரான யூதர்களைக் காப்பாற்றினார் என்று கூறிக்கொண்டிருந்தார். நன்கு dramatize  செய்து அனைவரையும் காப்பாற்றினார் என்பதை விலாவாரியாகக் கூறிஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தார். கடவுளுக்கு தம் இனத்தவரின் மீது அத்தனை அன்பு. இது ஒரு பெரிய அற்புதமில்லையா ... என்று கூறிக்கொண்டிருந்தார்.

நண்பர் என் பக்கம் திரும்பிஆச்சரியமாக இருக்குல்ல ..?

ஆமாம்.

அத்தனைப் பத்திரமாக இஸ்ரவேலர்களைக் காப்பாற்றியிருக்கிறாரே! என்று வியந்து சொன்னார்.

விழித்திருந்து காத்திருக்கிறார் அல்லேலூயாஎன்றேன். அதோடு நிறுத்தியிருக்கலாம்.

ஆனால் இரண்டாம் உலகப் போரின்போது 60 லட்சம் யூதர்களை ஹிட்லர் கொல்லும் போது மட்டும் எப்படியோ கடவுள் அப்படியே தூங்கிவிட்டார் போலும்! என்றேன்.

நண்பர் என்னைப் பார்த்து முறைத்தார்.

நல்ல வேளை .. அதன்பின் ஏதும் நடக்கவில்லை.

மூன்றாம் கதை:

அண்மையில் நடந்தது. 2025. ஜூன் 12. அகமதாபாத்தில் நடந்த விமான விபத்து. புறப்பட்ட சில விநாடிகளில் வெடித்துச் சிதறிஅதிலிருந்த அனைத்துப் பயணிகளும்விமானம் விழுந்த இடத்திலிருந்த17 பேரும்மொத்தத்தில் 260 பேரும் செத்து மடிந்தனர். ஒரே ஒருவர் - விஷ்வாசகுமார் ரமேஷ் - என்பவர் 11 மட்டும் தப்பிப் பிழைத்தார்.

அமெரிக்காவில் இருந்து கிழக்கு மாநிலங்களில் கள ஆய்விற்காக வந்த ஒரு பேராசிரியர் ஒரு காணொளி வெளியிட்டிருந்தார். அந்த விமானத்தில் அவர் ஏறுவதற்குக் கடும் முயற்சியெடுத்தும்அவரால் சரியான நேரத்தில் விமானத்திற்கு வந்து சேர முடியாமல் அவர் விமானத்தைத் தவற விட்டு விட்டார். சில நிமிடங்களால் அவர் உயிர்பிழைத்தார். ஏசு தன்னைச் சரியான நேரத்தில் வர முடியாதபடி செய்து தன்னைக் காப்பாற்றியுள்ளார். இதிலும் அவர் உண்மையில் ஓர் இறைமறுப்பாளர். இருந்தும் கடவுளின் கருணையால் அவர் பிழைத்து விட்டார். இதை அந்தக் காணொளியில் அவர் இதைக் கூறி, தன்னைக் காப்பாற்றிய ஏசுவின் கருணை பற்றிக் கூறியிருந்தார்.

உடன் பணியாற்றிய ஒரு பேராசிரியர் பெங்களூரிலிருந்து எனக்கு இதை அனுப்பியிருந்தார். எல்லாம் என்னைத் திருத்திநேர்வழிப் படுத்தும்’ முயற்சிதான். அவரும் கடவுளின் கருணையைப் புகழ்ந்து எழுதினார்.

குரல் அஞ்சலில் பதில் சொன்னேன். ஆமால்ல ...கடவுளின் கருணையே கருணை. அதனால் தான் அந்த மனிதர் உயிரோடு இருக்கிறார். ஆனால் இதில் ஒரு சின்ன சந்தேகம். இந்த மனிதர் டிக்கெட் எடுத்தும் விமானத்தில் அவர் ஏறாத அளவு டிலே செய்து அவரை அதில் ஏறவிடாமல் தடுத்துஅவரை லார்ட் ஜீசஸ் காப்பாற்றி விட்டார். ஆனால் இன்னொருவர் டிக்கெட் எடுத்துவிமானத்தில் ஏறிஅதில் உள்ள அனைவரும் இறந்த பிறகும் 11 சீட்காரரை மட்டும் கடவுள் அவரை மிக மிக ஆச்சரியாகக் காப்பாற்றி விட்டாரே! அதிசயம் தான். ஆனால் அவர் கும்பிட்ட சாமி லார்ட் சிவா!

இப்போ எனக்கு ஒரு சந்தேகம். அந்த இரண்டு லார்ட்களில் லார்ட் சிவா செய்ததுதான் அதிக ஆச்சரியம்விமானத்தில் ஏறி அமர்ந்தும் அந்த மனிதரை லார்ட் சிவா காப்பாற்றி விட்டார். இதனால் அந்த இரு லார்ட்களில் சிவா is much better than Lord Jesusஇல்லியா? என்றேன்.

இவன் தேறமாட்டான் என்பது நண்பருக்குப் புரிந்திருக்கும். டூ போட்டு விட்டார்.

நல்ல வேளை .. அதன்பின் ஏதும் நடக்கவில்லை.


 

 

 *

 

 

 


 

 



Thursday, December 07, 2023

1264. பழைய நினைப்புடா, பேராண்டி




கார்த்திக் அன்பாக நம்மளப் பத்தி நாலு நல்ல வரி எழுதிட்டானா ... அது ஒரு பழைய ஞாபகத்தைக் கொண்டு வந்திருச்சி, பேராண்டி.

ஜீன்ஸ் பாண்ட், மூக்குக் கண்னாடி பற்றிச் சொன்னானா ... அதில இருந்து ஒரு கொசுவத்தி சுருளா பழைய நினைவுகள். அந்தக் காலத்தில 
ஜீன்ஸ் பாண்ட் நம்மூர்ல கிடையாது. யாராவது "பாரன்"ல இருந்து வந்தா போட்டுட்டு வருவாங்க. அதுக்கு எத்தினி டிமாண்ட் தெரியுமா?
அப்படி போட்டவங்க அத இங்க யாருக்காவதுடொனேட் பண்ணினாதான் உண்டு. ஆனா எனக்கு எப்படி கிடச்சிது, யாரும் கொண்டு
வந்தாங்களா அப்டின்றதெல்லாம் மறந்து போச்சு. வழக்கமா இந்த ஜீன்ஸ் பாண்ட்டில் ஒரு பிரச்சனை, அளவு சரியாக இல்லாட்டா 
அதை நமக்கு ஏத்த மாதிரி ஆல்ட்டர் எல்லாம் பண்ண முடியாது. 

எப்படியோ ஒரு பாண்ட் கிடச்சிது. கல்லூரியில் ஜீன்ஸ் அதிகம் 
தென்படாது.  போட்டுட்டுப் போனாலும் glaringஆக பளிச்சின்னு தெரியும். யோசிச்சேன். போட்டுட்டும் போய்ட்டேன். இதுக்காகவே 
காண்டீன் போவோம்ல .. போய்ட்டேன். மாப்ள அப்டின்னு கூப்பிடுற நண்பன் கன்னா பின்னான்னு என்னையத் திட்டினான். இதையெல்லாம்
எபடிடா கல்லூரிக்குப் போட்டுட்டு வர்ர ...very indecent அப்டின்னான். இதைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்போது கல்லூரியின் 
துணை முதல்வரும் காண்டீன் வந்தார். அவர் டீ குடிக்கும் போது நான் அங்கிருந்து கிளம்பினேன். எதிர்த்தாற்போல் இருந்த என்னைப் பார்த்து
"jeans ... ha .. first faculty to wear it in our college, Sam" என்றார். பாராட்டுறாரா... திட்டுறாரான்னு தெரியலை. 

கொஞ்சம் காத்திருந்து அவர் புறப்படும்போது அவரிடம் போய் மெல்ல, "Sir, do you mind me wearing this in college"அப்டின்னு மெல்ல கேட்டேன். அவ்வளவு தான். அவர் சொன்னதை நான் தவறாக நினைத்து விட்டேன் என்று பதறிப் போய்..  No Sam... i am just appreciative of this" அந்த அர்த்தத்தில் தான் சொன்னேன் என்றார். 
                           

அப்படி ஒரு கல்லூரி ... அப்படி ஒரு பேராசிரியர். எனக்கென்னவோ எங்கள் கல்லூரி தவிர எனைய கல்லூரிகளில் இந்த FREEDOM இருக்காது என்றே நினைக்கின்றேன். தெய்வீகக்கல்லூரி தான். கொடுத்து வைத்தவர்கள் நாங்கள். அப்படியிருந்த "அந்தக் கல்லூரியில்" வேலை பார்க்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்!

of course,என்னைத் திட்டிய நண்பன் பின்னாளில் ஜீன்ஸ் போட்டு கல்லூரிக்கு எல்லோரும் போல் வர ஆர்மபித்த போது நினைவு படுத்தினேன். அட போடாஎன்றான்.

எங்கள் கல்லூரியை இப்படி சொல்வதினால் ஏதோ உயர்த்திச் சொல்கிறேன் என்று நீங்கள் நினைக்கலாம். இன்னொரு சான்று தரவா? ஒரு பட்டறைக்காக வேறு ஒரு கல்லூரிக்குச் சென்றிருந்தேன். அன்றைய பாஷன் பெல் பாட்டம்ஸ். என்னைப் பார்த்த அக்கல்லூரியில் உள்ள இளைய ஆசிரியர் ஒருவர் என்னைப் பார்த்து "சார், இதை  உங்கள் கல்லூரிக்குப் போட்டுட்டு போவிங்களா?" என்று அப்பாவித் தனமாகக் கேட்டார். ஆமாம், ஏன் என்றேன். "எங்கள் கல்லூரியில் இதெல்லாம் போட்டா வீட்டுக்கு விரட்டிருவாங்க "என்றார்.



ஜீன்ஸ் இப்படி வந்ததா? அதே மாதிரி "மூக்குக் கண்ணாடி". வெள்ளெழுத்துக் கண்ணாடி போடும் காலம் வந்தது. சரியாக 40 வயது முடியும் போது கண்ணாடி போடும் நிலை வந்தது. என்ன கண்ணாடி போடலாம் என்று யோசித்த போது, சைனா கண்ணாடி என்று ஒன்று வந்தது. சின்னூண்டாக இருக்கும். மூக்கின் நுனியில் போட்டால் மேல் வழியாக சாதாரண பார்வை; கண்ணாடி வழியாகப் பார்த்தால் படிக்க எளிது. இந்தக் கண்ணாடியை எப்போதும் போடாமல், வாசிக்கும்போது மட்டும் போடும் பழக்கம் இந்தக் கண்ணாடியைப் பயன்படுத்தும் ஆட்களிடம் இருக்கும். நான் ஒரு ஸ்டெப் அதிகமாகச் சென்றேன்! .ஒரு கயிறு கட்டி கண்ணாடி நெஞ்சில் தொங்கும்; வாசிக்கும்போது மூக்கில் மேல் போய் உட்கார்ந்து கொள்ளும். ஆனால் இப்படி அந்தக் காலத்தில் போடுவது அதிகமாக யாருமில்லை.  நான் அவ்வாறு போட்டு வரும்போது சிலர் மிட்டாய்கடையைப் பார்ப்பது போல் பார்த்தார்கள். சில comments வந்தன. கண்டு கொள்ளவில்லை. வைஜெயந்தி மாலாவும், பின்னணிப் பாடகி சுசிலா அம்மையாரும் தங்கச் செயின் போட்டு இது மாதிரி கண்ணாடியைப் போடுவதைப் பார்க்கும் வரை என் கண்ணாடி பலருக்கும் விநோதமாகவே இருந்தது. இதற்கெல்லாமா நாமல்லாம் அஞ்சுவோமா?. என் கண்ணாடி .. என் மூக்கு .. என் மூக்குக் கண்ணாடி என்று இருந்துட்டோம்ல ...

அது ஒரு காலம் ...

Tuesday, February 21, 2023

1215. இருமலோடு ஒரு தொடர் போராட்டம் (கொரானா - 5)

அதென்னமோ, வயசாகிப் போச்சா .. இப்போவெல்லம் தடுமன் பிடித்தால் அது என்னை விட்டு விட்டுப் போக அதற்கு மனதே வருவதேயில்லை. என்னுடனே தொடர்ந்து இருந்தே ஆக வேண்டுமென் அடம்பிடித்துக் கொண்டு மாதக்கணக்காக என்னோடு ‘living together’ ஆக இருந்து விடுகிறது. எத்தனை விரட்டினாலும் விடுவதாயில்லை. நானும் வகைவகையாக விரட்டிப் பார்த்து விட்டேன். பாட்டி வைத்தியத்தில் ஆரம்பித்துஹோமியோபதி பக்கம் போய், அங்கிருந்து அப்படியே குறுக்குச் சால் ஓட்டி, அல்லோபதி போய் மறுபடி பாட்டி வைத்தியத்திற்குத் திரும்பி வந்து ... சாமி,,, போதுமப்பா போதும் என்று சொல்லும் அளவிற்கு இருமித் தீர்த்தாகி விட்டது.

எங்க காலத்தில் மருந்து சாப்பிட்டாஒரே வாரத்தில் ஜல்த் சரியாகி விடும்; இல்லையென்றால் ஏழு நாள் ஆகிவிடும் என்று சொல்லும் அளவிற்குத் தான் தடுமனும், இருமலும் இருந்து வந்தன. மனித ஆயுள் நீட்சி போலவே இப்போது வியாதிகளும் தொடர்ந்து நம்மோடு ஒட்டி உறவாட ஆரம்பித்து விட்டன போலும். அதுவும் கடந்த  இரண்டு மூன்று வருஷமாக உள்ள  கொரோனா காலத்தில்தடுமன், இருமல், காய்ச்சல், மேல்வலி என்றாலே கொரோனா தானோன்னு அப்படியே மனசுக்குள்ள டைட்டில் ஓடுது. ஏற்கெனவே மருத்துவமனையில் இருந்து அனுபவித்த காட்சிகள் எல்லாம் டைட்டில் கார்ட் மாதிரி ஒவ்வொண்ணா ஓடியாருது. அதனால நாடித் துடிப்பு, ரத்தத் துடிப்புன்னு எல்லாவற்றையும் ஏறுமுகத்திற்குக் கொண்டு போகுது.

இப்படித்தான் மூணு நாலு வாரத்த்ற்கு முன் ஆரம்பித்தது எனது இருமல் போராட்டம். இந்த தடவை இருமல் போவதற்கு இன்னும் அதற்கு முழுசாக மனம் வரவில்லை. ஆனாலும் இந்தக் கால கட்டத்தில் பல புது விஷயங்கள் அனுபவங்களாக விரிந்தன. இருமல் வரும்; இருமுவேன் ... சரி .. அதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். புதிதாக சில வித்தியாசமான அனுபவங்கள். ஏறத்தாழ இருமல் ஆரம்பித்து இரண்டாம் வாரத்தில் தூக்கத்தைக் கெடுக்கும் அளவிற்குத் தொடர்ந்த  இருமல்.  இருமல் வந்ததும் எழுந்து உட்கார்ந்து இருமல்... படுத்ததும் மீண்டும் இருமல். சரியென்று படுக்காமல் உட்கார்ந்திருந்தால் இருமலைக் காணோம். இது ஒரு புதுவகைத் தொந்தரவாக இருந்தது. அடுத்து அதனோடு இணைந்து இன்னொரு புது அனுபவம். இருமலோடு சேர்ந்து தூங்கினாலும், அதனோடு தொடர் கனவுகள் வந்து கொண்டிருந்தன. எல்லாமே கலர் கனவுகள் .. அதையும் விட எல்லாமே 3D கனவுகள். கனவுகள் நடந்து கொண்டிருக்கும். இருமலில் முழித்தால் தொடர்ந்து இருமி முடித்துப் படுத்ததும், மிகவும் சரியாக விட்ட இடத்திலிருந்து கனவுகள் தொடரும். கனவுகள் மாதிரியே இல்லாமல் எல்லாமே உண்மைகள் என்பது போன்ற அனுபவம்.

இதிலும் சில experiments செய்து பார்த்தேன். கனவுக் காட்சிகள் அத்தனை நிஜமாக இருந்தன. தொடர்ச்சியும் மிகச் சரியாக இருந்தது.  நான் ஒன்றைச் சோதித்துப் பார்த்தேன். கனவு வந்ததும் கண் விழித்துப் பார்த்தேன். கனவு மறைந்தது. உடனே கண் மூடிப் படுத்தேன். கனவில் கண்டது நினைவில் தெரிந்து, கனவும் தொடர்ந்தது. அதுவும் என் கண் ரெக்கைகளுக்குப் பக்கத்திலேயே அந்த கனவுருவங்கள் இருந்தன. கைநீட்டித் தொட்டுவிடலாம் போல் இருந்தது. அத்தனை அருகே ! அத்தனை நிஜம்! செடிகள், கட்டிடங்கள் என்று எல்லாமே அத்தனை தத்ரூபம்.

இது ஒரு பக்கம். இன்னொரு பக்கம், இப்போதெல்லாம் அடுத்த நாள் ஏதாவது செய்யவேண்டுமென்று திட்டமிட்டால் தொடர் கனவுகளில் திட்டங்களே வந்து கொண்டிருக்கும். அதிலும் ஏதாவது எழுத வேண்டும் என்று நினைத்தால், என்ன எழுதுவது என்றும், எந்த வார்த்தைகள் பயன்படுத்தினால் நன்றாக இருக்கும் என்றும் அந்த “நினைவுகள்” வரும். இம்முறையிலும்  இருமலைப் பற்றியெழுத வேண்டும் என்று நினைத்துப் படுத்த நாட்களில் வந்த கனவுகள் இருமலைப் பற்றியும் அதன் தொடர்பான பலவும் கனவின் நினைவில் வந்தன.

இருமல் தொடர்ந்து அல்லல்படும் போதெல்லாம் தன்னையறியாமல் வாயிலிலிருந்து அம்மா, அப்பாஎன்ற வார்த்தைகள் முனகல்களாக வரும். எல்லோருக்கும் இது வழக்கம் தான். ஆயினும் எதற்காக இந்த வார்த்தைகள் மட்டும் எனக்கு வரவேண்டும் என்று நினைத்தேன். ஒரு வேளை மலையாளக்காரனாக இருந்தால், ‘அம்மே... அச்சா” என்று முனகியிருந்திருப்பேனோ? தெரியவில்லை. சரியென்று மற்ற மொழிக்காரர்கள் எப்படி முனகுவார்கள் என்று தூக்கத்திலேயே நினைத்துப் பார்த்தேன். எப்படி என்று தெரியவில்லை. உதாரணமாக, ஆங்கிலேயர்கள் ‘Oh my mum, Oh my dad”  என்றா முனகியிருப்பார்கள்? சான்சே இல்லை. ஒரு வேளை Oh my god என்று சொல்லலாம். கடவுளும் வேணாம்னு நினச்சா எப்படி ஆங்கிலத்தில் முனகுவது? அதே போல் எனக்கும் அம்மா, அப்பா என்று அனத்துவது பிடிக்காமல் போயிற்று. பெத்த அம்மா சின்ன வயசிலேயே  எப்படியோ இருடேஅப்டின்னு சொல்லிட்டு டாடா காண்பிச்சிட்டு, செத்துப் போச்சு ... வளர்த்த அம்மா கடைசியில செமயா வச்சி செஞ்சிட்டுப் போச்சு ... அப்பா .. வழக்கம் போல , எல்லா ரெண்டு கல்யாணம் பண்ற ஆம்பிளைங்க வழக்கமா செய்றதை - தசரத மகாராசா மாதிரி - அப்படியே முழுசா  செஞ்சி வச்சிட்டுப் போய்ட்டாரு. பிறகு எதுக்கு அப்பா.. அம்மா...ன்னு அனத்தணும்னு தூக்கத்திலேயே தோன்றியது. வீட்டுக்கார அம்மா தன் அப்பா அம்மாவைக் கூப்பிடுவதை விட கர்த்தரைக் கூப்பிடுவார்கள். நமக்கு அதுவும் சரிப்பட்டு வராது. ஆக சோகத்தில் எப்படி அனத்துவது என்பது பற்றியும் நினைவிலும் கனவிலும் யோசிச்சாச்சு... முடிவு தான் தெரியலை.

எப்படியோ மூன்று வாரம் தாண்டியதும் பறிபோன தூக்கம் திரும்பி வந்திருச்சி. இதெல்லாமே ஏறத்தாழ கனவில் வந்து போன நினைவுகள். அப்போதே எழுத நினைத்தும் எழுத முடியாமல் போனவை. ஓரளவு நினைத்ததை rewind செய்து tinker வேலை பார்த்து எழுதியிருக்கிறேன். ஆனாலும் ...

இருமல் இன்னும் கொஞ்சம் பாக்கியிருக்கிறது.

 ****

Saturday, October 08, 2022

1187. பல்லு போய் .. பல்லு வந்துச்சு ... டும்.. டும் ..





*
https://www.facebook.com/sam.george.946/posts/pfbid02W4FPRd1PpbUpDD7RWrutV3Jey6g9D5zqq4UydfKrR6eSCgzY38m551XKBXkLT2rul

*

ஏறத்தாழ ஒரு மாத காலமாக  பல் மருத்துவரிடம் சென்று வந்து கொண்டிருக்கிறேன். ஆகவே பலமுறை நினைவுகள் வாய், பல் என்று அப்பகுதிகளைப் பற்றியே சுற்றி வந்து கொண்டிருந்தன. இன்று எனக்குப் “புதிய” பல்லும் “வளர்ந்து” விட்டது.  விதியைப் பாருங்களேன் .. நான் தான் முதலில் பிறந்தேன். பிறந்ததிலிருந்து ஒரே நிறம் தான் எனக்கு. ஆனால் பாருங்கள் இந்தப் பற்களை! எனக்குப் பின்னால் தான் அவை பிறந்தன. வெள்ளையாக இருந்த பல் காலங்கடந்ததும் மஞ்சள் கலருக்கு வந்தது. நான் கலர் மாறாமல் இருக்கிறேன். அது கலர் மாறியது .. பிறகு ஏறக்குறைய அனைத்தும் பயனில்லாமல் விழுந்து தொலைத்தன. போனால் போகுது என்றும் இருக்க முடியாமல் வைத்தியரிடம் போனேன். அவர் புதிதாக பற்களை “முளைக்க” வைத்து விட்டார். ஆகவே என் பற்கள் மட்டும் – கிறித்துவ மொழியில் அல்லது christian  parlance-ல் சொல்வதென்றால் BORN AGAIN.  இந்துத்துவத்தில் சொல்வதென்றால் த்விஜாஸ் (dvijas)  - இரண்டிற்கும் அர்த்தம் ஒன்றேதான்!

அடேய் சாம்... பரவாயில்லைடா நீ! பல்லில் கூட மதத்தைக் கொண்டு வந்து சேர்த்திட்டியே!!  - இது என் மைண்ட் வாய்ஸ் சொன்னது!

சரி .. எங்கே ஆரம்பித்தேன். நினைவுகள் வாயையும் பல்லையும் சுற்றியே வந்து கொண்டிருந்ததல்லவா? பல் வேலை முடிந்ததும் பிள்ளைகளுக்கும், நண்பர்களுக்கும் புதிய பல்பற்றிய செய்திகளை அனுப்பி வைத்தேன்.  நண்பன் வைத்தி  உடனே தொலைபேசினான்.  பல்லைப் பற்றிக் கேட்டான். அப்போது நான் ஆச்சரியப்பட்ட ஒரு விசயத்தை அவனிடம் சொன்னேன்: 32 பல்களுக்கிடையே ஒரு நாக்கு. எப்படித்தான் பல்லின் கடியிலிருந்து எப்போதும் ஜாக்கிரதையாகத் தன்னைக் காத்துக் கொள்கிறது என்ற என் ஆச்சரியத்தை அவனிடம் சொன்னேன். அதோடு ... சுற்றி அத்தனை எதிரி நாடுகள் சூழ்ந்திருந்தாலும் நடுவே உள்ள சின்ன நாடு – இஸ்ரேல் – எப்படித் தன்னைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்கிறதல்லவா .. அது போல் என்றேன். உடனே ஒரு பதில் வந்தது அவனிடமிருந்து:

இஸ்ரேல் பலம் மிக்க நாடு. அதனால் தான் தன்னைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்கிறது. நாக்கும் தன்னைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்கிறது;, அது flexible-ஆக இருப்பதால் தன்னைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்கிறது.

இரண்டும் சரிதான். இல்ல ?

பின்னிட்டான்ல .... !!!


Wednesday, September 07, 2022

1184. பல்வலியும் ராசாவும்



*






பல் மருத்துவரைப் பார்க்கப் போனேன். நீளமாக, காலை நீட்டி உட்காருவது போலிருக்கும் படுக்கை நாற்காலியில் படுக்கப் போட்டார்கள். மருத்துவர் வந்தார். என்னைப் பரிசோதிப்பதற்கு முன் மாஸ்க் எல்லாம் போட்டுக்கொண்டு தயாராகிக் கொண்டிருந்த மருத்துவர் என்னைப் பார்த்து, “ சார்.. என்ன பிரச்சனை “என்றார். பிரச்சனையே இல்லை என்றேன். செய்து கொண்டிருந்த வேலையை நிறுத்தி விட்டு என்னை (முறைத்துப்) பார்த்தார்! கண்ணில் ஒரு கேள்விக் குறி. “பல்லே இல்லை; அதுதான் பிரச்சனை” என்றேன். இப்படி ஆரம்பித்தது பல்சேவை!

வீட்டில் நால்வர். நானும் பிள்ளைகளும் காலை, இரவு என்று ஒழுங்காகப் பல் துலக்கினோம். பாஸ் காலையோடு சரி. ஆனால் பாருங்கள் .. எங்கள் மூவருக்கும் பல்வலி..பல் பிடுங்கல்கள், root canal மருத்துவம் என்று தொடர்ந்து வந்தன. எனக்கு இருபதுகளில் ஆரம்பித்த தொல்லை தொடர்ந்து வந்ததில் இறுதியில் பல் ஏதுமில்லா நிலைக்கு ஏறத்தாழ வந்து விட்டேன். முன்னால் பற்கள் இருந்ததால் வெளியே சிரித்துச் சமாளித்தேன். ஆனால் சாப்பிட அரைக்கும் பற்கள் வேண்டுமாமே... அதற்கு நான் எங்கு போய் கடன் வாங்குவது என்ற நிலை வந்ததும் மருத்துவரிடம் சென்றேன்.

பல்லுக்கெல்லாம் லட்சக் கணக்கில் செலவாகும் என்றெல்லாம் தெரியாது. பழையன கழிதலும் புதியன புகுதலும் பல்லுக்கு சின்ன வயசில் மட்டும் தான் நடக்குமாம். இப்போதெல்லாம் பல்லு போச்சுன்னா bridge போடணுமாம்; அல்லது implant செய்யணுமாம். பல்செட் காலமெல்லாம் மலையேறிப் போச்சாம்.

நாலைந்து நாளாகத் தொடர்ந்து சென்று மருத்துவம் செய்து வருகிறேன். பல் டாக்டர் என்றாலே வலி தான் நினைவுக்கு வரும். அந்தப் பயம் நிறைய இருந்தது. ஆனால் சும்மா சொல்லக் கூடாது. ஒரு பல் பிடுங்கப்பட்டது. எழு பல்கள் root canal செய்யப்பட்டன. அது ஒரு டாக்டரம்மா (Dr. Mohana, 7806959533).. இதுவொரு டாக்டரய்யா (Dr. Praveen Kumar, 9940548982). இதுவரை வலியேதும் இல்லை. அந்த நீள நாற்காலியில் நீண்ட நேரம் படுத்திருந்ததால் கொஞ்சம் முதுகில் வலி. A good magic combo. இரு மருத்துவர்கள் .. இதுவரை தொல்லையில்லாத, வலியில்லாத மருத்துவம். root canal செய்தும் வலிக்கவில்லை என்று சொன்னால் மகள்கள் நம்ப மறுக்கிறார்கள்.

இன்னும் ஒரு மகிழ்ச்சியான விஷயம். எனக்கும் மருத்துவர்களுக்கும் அப்படியொரு good rapport. very pleasant people and that made me write this.

நேற்று ஞாயிற்றுக் கிழமையும் சென்றேன். டாக்டர் மூன்று பற்களுக்கு மட்டும் root canal செய்தார். இந்த க்ளினிக்கில் பிடித்த இன்னொரு விஷயம் ஒரு பெரிய டிவியில் இயற்கைக் காட்சிகள் மட்டும் ஓடிக் கொண்டிருக்கும். மிக மிக அழகான ரம்மியமான காட்சிகள். ஆனால் அதோடு வரும் இசை ... அடேயப்பா... வெறும் ஒற்றை பியானோ என்று நினைக்கின்றேன். அத்தனை சுகம் அதைக் கேட்பது. (எப்படியாவது நகலெடுக்க நினைத்திருக்கிறேன்). ஆனால் ஞாயிற்றுக் கிழமை என்பதால் வழக்கமான நோயாளிகள் இல்லை. நானும் இன்னொருவர் மட்டும். அதனால் டாக்டர் வேலையை ஆரம்பித்தவருக்கு இசையில்லாமல் இருந்தது பிடிக்கவில்லை. துணைக்கு இருக்கும் மகேஷிடம் பாட்டுப் போடச் சொன்னார். மகேஷ் சின்னப் பையன். என்ன பாட்டு இருக்கும் அவனிடம். இரண்டு மூன்று குத்துப் பாட்டு ஓடியது. வாய்க் கொப்பளிக்க எழுந்தவன் “ஏம்பா .. எங்க ராசா இல்லையா?” என்றேன். டாக்டரும் உடனே பாட்டுகளை மாற்றச் சொன்னார். ஆஹா ... ராசா வந்தால் தனி ரகம் தானே. அது மட்டுமா ... டாக்டரும் தன் வேலையில் கருத்தாக இருந்தாலும் பாட்டுகளையும் மெல்ல முணுமுணுத்துக் கொண்டே பாடிக்கொண்டு வேலையைத் தொடர்ந்தார். எனக்கு ஒரு சின்ன கஷ்டம் ... பாட்டு கேட்கும்போது தன்னிச்சையாக வரும் தலையசைத்தலோ, கால்களால் மெல்ல தாளமிடுவதையோ தவிர்க்க வேண்டியதிருந்தது. ஆனால் ராசாவோடு பயணம் செய்ததால் root canal-ம் எளிதாகப் போனது.  


                                                       


இந்த மருத்துவமனையில் இன்னொரு நல்ல காரியம். மருத்துவம் பார்த்த அடுத்த நாள் அங்கு வேலை பார்க்கும் முதுகலையில் பரிசும் பட்டமும் பெற்ற பெண்மணி, பாமினி நம்மைத் தொலை பேசியில் அழைத்து, சுகம் விசாரிக்கின்றார். ( ஒரு சின்ன சந்தேகம் நமக்கு மட்டும்தான் இது போன்ற அழைப்பா என்று நினைத்தேன். அனைத்து “பல்லர் & பல்லி”களுக்கும் அவ்வாறு அழைத்து சுக நலம் விசாரிப்பது பழக்கமாம்.)


இன்னும் பல் மருத்துவம் தொடர்ந்து செல்லும். ஆனால் பயந்த அளவு தொல்லையில்லை என்பதில் மகிழ்ச்சி.






Friday, July 15, 2022

1173. என் படப்பிடிப்பு ... ஆதி காலத்தில் ... டாலருக்கு எட்டு ரூபாய் காலத்தில் எடுத்தது



*


ஒரு டாலருக்கு 80 ரூபாய் ஆகப் போகிறதாம்.

இது ஒரு பழைய நினைவை கிளப்பி விட்டிருச்சிர்ரா
, பேராண்டி!

கூகுள் ஆண்டவரைத் தேடிப்போய் எப்போது ஒரு டாலருக்கு 8 ரூபாய் இருந்தது என்று பார்த்தேன். 1974. சட சடவென்று பழைய நினைவுகள். என்னோடு வேலை பார்த்த  ஒரு பெரிய சீனியர் அமெரிக்கா போய் பல வருடங்கள் இருந்து விட்டு கல்லூரி திரும்பியிருந்தார். புகைப்படக் கலையில் திறமை வளர்த்துக் கொண்ட தமிழ்ப் பேராசிரியர். அவர் தன்னுடைய் நிக்கான் காமிரா, அதனோடு பல லென்ஸ் எல்லாம் வைத்திருந்தார். இவைகளோடு மமியா – MAMIYA  Sekor SLR காமிரா ஒன்று வாங்கி வந்திருந்தார். அதுவ்ரை நான் ஒரு TLR பொட்டியோடு போராடிக் கொண்டிருந்தேன்.

அவர் அமெரிக்காவில் அந்தக் காமிராவை 880 டாலருக்கு வாங்கி வந்திருந்தார். ஒரே ஒரு தடவை கீழே போட்டு ஒரு சின்னப் பள்ளம் ஒன்றும் இருந்தது. அதை விலைக்குத் தர இசைந்தார். எனக்காக 800 டாலர் விலை போட்டுக் கொடுத்தார். டாலருக்கு 8 ரூபாயும் சில்லறையும் இருந்தது. அதையும் 8 ரூபாய் என்று கணக்குப் போட்டு ....800 x 8 =

அப்போதெல்லாம் 50 அடி பில்ம் வாங்கி நாங்களே பழைய டப்பாவிற்குள் ஐந்தடி ஐந்தடியாக வெட்டி லோட் பண்ணி வைத்து படமெடுத்துக் கொண்டிருந்த காலமது. என்னிடம் அப்போது ஐந்தடிக்குக் குறைவாக ஒரு “துண்டு” பில்ம் இருந்தது. அதைப் புதுப்பெட்டியில் போட்டு என் மூத்த மகளை .. அப்போது அவளுக்கு அநேகமாக 3 வயதிருந்திருக்கும் ... படம் எடுத்தேன். மொத்தமே ஏழெட்டு படம் எடுத்திருப்பேன்.



அடுத்த நாள் கல்லூரியில் போய் பில்மை டெவலப் செய்தேன். 

ஹா ... பின்னிட்டேன் போங்கோ. எல்லா படமும் அத்தனை அழகாக இருந்தன. மகள் ஒரு அயல்நாட்டுச் சட்டை போட்டிருந்தாள். கொஞ்சம் கனமான, உல்லன் மாதிரியான துணி. படத்தில் அந்தத் துணியின்  texture அத்தனை அழகாக வந்திருந்தது. க்ளோசப் படம் எடுக்கும் போது கண்களை வைத்து போகஸ் செய்ய வேண்டுமாமே ... அதனால் கண்களும் அதே லெவலில் அவளது உடையும் அப்படியே மிக அழகாக போகஸ் ஆகியிருந்தது.

அசந்து விட்டேன் போங்கள் ... ஆனால் அதன் பிறகு அத்தனை நல்ல படம் எடுத்தேனா என்பது இன்று வரை ஒரு பெரிய கேள்விக்குறி .......

அந்தப் படத்தை இங்கே போடலாமென்று அதைத் தேட ஆரம்பித்தேன். காக்கா தூக்கிட்டு போயிருச்சு போலும் ... காணோம். அதனால் அந்த சமயத்தில் எடுத்த மூன்று படத்தைப் போட்டிருக்கிறேன்.  ஒன்று (அந்த வயதில் மட்டும்)ஒழுங்காக போஸ் கொடுத்த பெரிய மகள்; இரண்டாவது காமிரா கொடுத்த நண்பரிடம் ஒரு டெலிலென்ஸ் ஓசி வாங்கி, ரோட்டில் போய்க்கொண்டிருந்த ஒருவரை அவரிடம் அனுமதி வாங்கி எடுத்த படம் ஒன்றையும் இங்கே போட்டிருக்கிறேன்.


பழைய நினைப்புடா ... பேராண்டி !





*


Thursday, May 05, 2022

1261. ON A HOT SUNNY DAY ...



*

அசராது வெயிலடித்தாலும் அயராது கடைகண்ணிக்கு இன்று போயே ஆவது என்று நினைத்தேன். பாதுகாவலராக பெரிய பெண் உடன் சேர்ந்தாள். கடைகண்ணி முடித்ததும் தாகம் தீர்க்க கடையொன்றில் உட்கார்ந்தோம். மகள் என்னைப் படம் பிடித்தாள். அனுப்பி வை என்றேன். வீட்டுக்கு வந்ததும் பார்த்தேன். என் படத்தோடு இன்னொரு படத்தையும் சேர்த்து வைத்து அனுப்பியிருந்தாள்.
என் முன் ஒரு கேள்வி.
எதற்காக அந்த இன்னொரு படம். இரண்டு பதில் வந்தது:
1. காக்கைக்குத் தன் குஞ்சும் பொன் குஞ்சு என்பார்களே ... அதே போல் அவளுக்கு அவள் அப்பா படம் பிடித்தது. அனுப்பியிருக்கிறாள்.
2. புலியைப் பார்த்து பூனையும் சூடு போட்டுக் கொண்டதோ என்றும் எனக்குப் பட்டது.
இரண்டில் எது சரியாக இருக்கும்?







Monday, November 15, 2021

1234. Me ya!!! By JANIS $$

Saturday, October 30, 2021

1231. #DHARUMIsPAGE

Thursday, September 30, 2021

1204. #DHARUMI_' S_PAGE #தருமிபக்கம்

Thursday, September 23, 2021

1201. #dharumi-'s-page @தருமிபக்கம் #பணியனுபவங்கள்






என் ஆசிரியப் பணியில் என் நினைவில் நின்ற சில நிகழ்ச்சித் துளிகளை உங்களோடு பகிர்கிறேன்.




Thursday, July 22, 2021

1185. i & DOLLU

Wednesday, July 14, 2021

1184. #DHARUMI_S_PAGE #சொந்தக் கதை -5

Thursday, July 01, 2021

1181. சொந்தக் கதை - 3