*
முதல் பட இயக்குனருக்கு இருக்கும் திறமை அதை விட அவரது துணிவு மிகவும் ஆச்சரியப்படுத்துகிறது. அதே போல் ஆண் நடிகர்கள் தங்கள் உடம்பை கதைக்கேற்ப மாற்றுவது போல் கதைக்காக உடம்பை மாற்றிய கதாநாயகியின் ஈடுபாடும் பாராட்டுதலுக்கு உரியது.
கதாநாயகனின்றி
ஒரு தமிழ்ப்படம் – நான் மிகவும் ஆச்சரியப்பட்ட ஒன்று. இந்த தைரியத்திற்காகவே இயக்குனருக்கு
என் பாராட்டுகள். இன்னும், ரசிகர்கள் பாட்டு, டான்ஸ் வேண்டுமென்று ”ஒத்தைக் காலில்”
நிற்கிறார்கள் என்று வழக்கமாகச் சொல்லும் பெரிய டைரடக்கர்கள் இந்தப்படம் பார்த்தாவது
தங்கள் முட்டாள்தனத்தை மாற்றிக் கொள்ளட்டும்.
அருவியின் வாழ்க்கை
மூன்று பாகங்களாகப் பிரிக்கப்பட்டு காட்டப்பட்டுள்ளது. பொங்கிப் பிரவாகமெடுக்கும் முதல்
இளம் பகுதி அழகுப் பகுதி. பெற்றோரின் அன்பணைப்பில் வளரும் சிறு பெண் – பேதை. இப்பகுதியில் காமிரா தனித்து நிற்கிறது. பிள்ளையும் அழகு; அதன் அப்பாவும் அழகு. அடுத்து பட்டணத்து
வாழ்க்கைக்கு மாறி உயரத்திலிருந்து கொட்டும் நீராக அடுத்த பகுதி – மடந்தை. கடைசியில்
வரும் துன்பயியலில் வாடும் பேரிளம் பெண்.
பலவகையில் எதிர்பார்க்காத
பல நிகழ்வுகளைப் படத்தில் பார்க்க முடிகிறது. முதல் பாதி ஏதும் பெரிதாகத் தெரியவில்லையே
என்ற நினைப்போடு இரண்டாம் பாகம் உட்கார்ந்ததும் வித்தியாசமான நகைச்சுவைப் படம் போல்
விரிந்து, இறுதியில் சோகச் சித்திரமாக மனதை உருக்கியது. நகைச்சுவை வலிந்து திணிக்கப்படாமல்
காட்சிகளோடு ஐக்கியமாகி மிக இயற்கையாக இருந்தன. நல்ல நகைச்சுவை உணர்வு விரவி இருந்தது.
இதற்கு முன்
மோகன்லால் படம். பெயர் ஞாபகத்தில் இல்லை.( சரித்திரம் என்ற படமோ?) முக்கால் வாசிப்
படம் நகைச்சுவையோடு செல்லும்.
கடைசிப் பகுதி நெஞ்சைப் பிசைந்து விடும். இப்படமும் அது
போல் நகைச்சுவை … சிரித்துக் கொண்டே இருந்து விட்டு… அவலப் பதிவிற்குள் இழுத்துச் செல்லப்படுகிறோம்.
அதனாலேயே பரிதாபத்திற்குரிய அருவியோடு இணைந்து விடுகிறோம்.
அலட்டிக் கொள்ளாமல்
நேர்காணலில் இருக்கும் இயக்குனர் அருண் மீது நன்கு மரியாதை கூடுகிறது. வரும் படங்களில்
இதே தரத்தை அவர் தர வேண்டும். கதாநாயகிக்கும் பாராட்டுகள்.
*****
தமிழ்ப்படங்களில்
நடுவே வரும் பாட்டுகளின் வரிகளோ, பொருளோ பொதுவாக என் புத்திக்கு எட்டுவதில்லை. வீடியோ
இல்லாமல் கேட்கும் போது மட்டும் தான் பாட்டு என் மண்டைக்குள் சிறிதாவது ஏறுகிறது. பொருளும்கொஞ்சமாவது புரிகிறது இது எனக்கு மட்டும் தானா…?
இதனால் சினிமாவில் நடுவில் வரும் பாட்டுகள் –
நல்ல பாட்டுகளாக இருந்தாலும் – எனக்கு எரிச்சலை மட்டுமே தருகின்றன. அதிலும் இப்படத்தில்
அதிலும் ஒரு சிறிது வித்தியாசம் இருந்தது. குக்காட்டி குனாட்டின்னு ஒரு பாடல் …அது
மட்டும் வித்தியாசமாக ஒலித்தது.
*