*
வயதாகி விட்டதில் ஒரு லாபம்.
உலகத்தில் பல கஷ்டங்கள்; அடுத்த யுத்தமே தண்ணீருக்காக என்கிறார்கள்; நாட்டில் பல பிரச்சனைகள்; ஒரு ஆறு, கண்மாய் என்றும் ஒன்றையும் காணோம்; அவை எல்லாவற்றையும் காக்கா தூக்கிக் கொண்டு போய் விட்டதாமே; தாய்மொழிக்குக் கடும் சோதனை; எங்கும் இந்தி தான் தலையெடுத்து நிற்கிறது; நீட் தேர்வுகள் வேறு தலை நீட்டுகிறது; ……. நீண்ட பட்டியல்.
இத்தனைக்கும் கவலைப்படணுமோன்னு நினைக்கிறப்போ… அட போப்பா .. உனக்குத்தான் வயசாயிருச்சில்ல … எத்தனை நாளைக்கு? பேசாம இருப்பியான்னு ஒரு வயசான வாய்ஸில் ஒரு சத்தம் உள்ளேயிருந்து வருது.
முந்தியெல்லாம் ஆங்கில இந்துப் பத்திரிகை எடுத்தால் ஒண்ணு ஒன்றரை மணி நேரம் ஆகும். இப்போவெல்லாம் ஒரே ஸ்கேன் தான். என்னத்தப் படிச்சி என்ன பண்ண? வட கொரியா பாத்து, ட்ரம்ப் பார்த்து பயந்தாலும் எல்லாமே ’டேக்கிட் ஈசி’ பாலிசி தான். பொழுது போகுது.
ஆனாலும் வயசான ஆளுகன்னா எப்போதும் ஏதாவது ஒண்ணைப் பத்தி பிரலாபம் பண்ணிக்கிட்டே இருப்பாங்களாமே … எனக்கும் பிரலாபம் பண்ண ஒரு பெரிய பட்டியல் இருக்கு. அத ஆரம்பிக்கலாம்னு நினைக்கிறேன் ……
ஆனாலும் ஒரு சின்ன ஆறுதல்.
ஒரு காலத்தில் ப்ளாக் ஒழுங்காக எழுதும் காலத்தில் நம்ம ஊர் தமிழ் சினிமா பற்றி நிறைய கவலைப்பட்டதுண்டு. காதலைத் தவிர வேறு எதுவும் ஏன் நம் சினிமாவில் வருவதே இல்லை. வேறு வேறு genres-ல் ஏன் படம் வருவதில்லை. ஏன் படம் இரண்டே கால் மணி நேரம் ஓடணும். கட்டாயம் பாட்டுகள் வேணுமா? ……. இப்படியெல்லாம் கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் சமீபமாக வரும் படங்கள் நிறைய வித்தியாச வித்தியாசமாக வருகின்றன. ’செட்’ போட்டு எடுத்த படங்களை வித்தியாசமாக இயற்கைச் சூழலோடு ’16 வயதினிலே’ படம் எடுத்து ஒரு மாற்றத்தைப் பாரதிராஜா கொண்டு வந்தது போல் இப்போது நான் இந்தக் காலத்திற்கு “பீட்சாவிற்குப் பிறகு” என்ற ஒரு எல்லைக்கோட்டைக் கொண்டு வந்துள்ளேன். அப்படத்தை ஒட்டியும், பின்னும் வந்த பல நல்ல படங்கள் தமிழ் சினிமா மீது ஒரு நல்ல நம்பிக்கையைக் கொண்டு வந்தன.
இதே போல் தமிழ்ச் சமூகத்திலும் நல்ல மாறுதல்கள் நான்கு வந்து விடாதா என்ற ஒரு நம்பிக்கையும் மனதின் ஓரத்தில் சின்ன ஒரு மொட்டாக இருக்கிறது.
மலருமா ….?
கடவுளுக்கே வெளிச்சம் !
பிரலாபம் 1 … இனி வரும்
*