Sunday, July 31, 2005

38. Down Down Hindi.../இந்தி எதிர்ப்புப் போராட்டம்'65

1965 'தமிழ் வளர்த்த' மதுரை தியாகராசர் கல்லூரி. முதுகலை படித்துவந்த காலம். அப்போதெல்லாம் நம் மாநிலத்திலேயே மொத்தம் ஐந்தே கல்லூரிகளில் என் பாடம் இருந்தது; கல்லூரிக்கு 15 மாணவர்கள் - சென்னையில் 3; மதுரையில் 2. [அப்போதே அவ்வளவு சிறப்பு வாய்ந்த எங்கள் மதுரையை இப்போதும் ஒரு 'கிராமம்' என்றழைப்பவர்களை இத்தருணத்தில் வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆனாலும், இந்த மதுரைக்காரர்களைப் பாருங்களேன். தமிழ்மணத்தில் யாராவது மதுரைக்காரர்கள் இருக்கிறீர்களா என்று கேட்டுப்பார்த்து விட்டேன். ஆட்கள் யாரையும் இதுவரை காணவில்லை. சங்கம் வளர்த்த மதுரையின் நிலைமை இப்படியா? ஏதோ நான் ஒருத்தனா இந்த 'மண்டபத்தில்' நின்று கொண்டு பெனாத்தி/புலம்பிக்கொண்டு மதுரையின் மானத்தைக் காப்பாற்ற வேண்டியதாயிருக்கிறது!] சரி..நம் கதைக்கு வருவோம்.

எனது வகுப்பிலிருந்த 8 மாணவர்களில் நான் ஒருவனே வீட்டிலிருந்து வந்து படித்தவன்; மற்ற எல்லோருமே விடுதி மாணவர்கள். அந்தக் காரணத்தை வீட்டில் சொல்லி நானும் பெரும் பொழுதை விடுதியில் கழிப்பதுண்டு. பிள்ளை விடுதியில் இருந்து நல்லா படிக்கும்னு வீட்டில நினைச்சுக்குவாங்க. நான் விடுதியிலே அதிகம் இருந்ததால் பலர் என்னையும் விடுதி மாணவனாக நினைத்தது உண்டு; விடுதித் தேர்தலுக்கு என்னிடம் ஓட்டுகூட கேட்பார்கள். அப்போதெல்லாம் எங்கள் கல்லூரிக்குத் தமிழை வைத்து ரொம்ப நல்ல பெயர். அடிக்கடி பெரிய தமிழ் அறிஞர்கள் அழைக்கப்பட்டுச் சிறப்புக் கூட்டங்கள் நிறைய நடக்கும். முத்தமிழ் விழா மிக நன்றாக இருக்கும். கல்லூரி நிர்வாகத்தினரே 'தமிழ்நாடு' என்றொரு நாளிதழ் நடத்திவந்தார்கள். தமிழ்ப் பேராசிரியராக அப்போது இருந்த இலக்குவனாரின் தமிழார்வ தாக்கத்தால் கல்லூரி நிர்வாகமும், அதன் தமிழ் ஈடுபாட்டால் மாணவர்களிடமும் தமிழ்ப் பற்று நிறைந்திருந்தது. அதே சமயத்தில் தமிழ்நாட்டு அரசியலில் தி.மு.க.வின் கை ஓங்கிக் கொண்டிருந்தது. அதற்கு ஏற்றாற்போல் அவர்கள் இந்தி எதிர்ப்பைக் கையில் எடுத்துக்கொண்டார்கள். காங்கிரஸ் மேல் மக்களுக்குப் பரவலாக இருந்த அதிருப்தியை வெறுப்பாக மாற்றும் நிலையை ஆளுங்கட்சியாக இருந்த அவர்கள் இந்தி எதிர்ப்பை எதிர் கொண்ட வகையில் ஏற்படுத்திவிட்டார்கள்.

தி.மு.க.வினரின் இந்தி எதிர்ப்பு மாணவர்கள் மத்தியிலும் பரவியது. இந்தியை எதிர்த்து மாநில அளவில் ஜனவரி 25-ம் நாள் ஒரு பெரிய போராட்டம் நடத்த மாணவர்கள் தயாரானார்கள். எல்லா ஊர்களிலும் ஊர்வலங்கள் நடத்தத் திட்டம். ஆனால் எங்கள் கல்லூரி மாணவர்களில் சிலருக்கு போராட்டத்தை அதன் அடுத்த நிலைக்குக் கொண்டு செல்லும் யோசனை கொடுக்கப்பட்டது. எங்கள் தமிழ்ப் பேராசிரியரின் முழு ஆதரவு அதற்கு இருந்தது. திட்டம் தீட்ட உயர் குழுக் கூட்டம் என் வகுப்பு நண்பனின் விடுதி அறையில் நடந்தது. அவன், விடுதிக்கே சார்மினார் சிகரெட் தானம் பண்ணும் புண்ணியவான் என்பதைத் தவிர வேறு ஏதேனும் காரணம் இருந்ததாகத் தெரியவில்லை. அன்று நானும் விடுதியில் தங்கியிருந்தேன்.

நண்பன் ஏற்கெனவே சொல்லியிருந்தான் அந்தக் கூட்டத்தப்பற்றி. இரவு 11 மணிக்கு ஓரளவு விடுதி அடங்கியபின் ஒவ்வொருவராக வர ஆரம்பிக்க நான் ஒரு பார்வையாளனாக அறையின் ஓரத்தில் நண்பனோடு அமர்ந்திருந்தேன். கூட்டம் சேர ஆரம்பித்தது. முக்கிய முன்னணி மாணவர்கள் - காமராசன், காளிமுத்து. முன்னவர் எனக்கு ஓராண்டு ஜுனியர்; பின்னவர் இரண்டாண்டு. அப்போதெல்லாம் கல்லூரியே காமராசனுக்கு விசிறிதான். பேச்சில் இயற்றமிழும், கவிதை நடையும் கொஞ்சும். அவர் பேசும்போது அவர் வாய் ஒருவிதமாகக் கோணும்; அதுவும் அழகுதான் , போங்கள். பெருந்தலைவர் காமராஜர் எங்கள் கல்லூரிக்கு ஒருமுறை வந்தபோது, 'தலைவர் காமராஜருக்கு மாணவன் காமராசன் தரும் வரவேற்பு' என்று பேசிய வரவேற்புரை, ரோடை ஒட்டி இருந்த அந்த அவசர மேடை எல்லாமே இன்னும் நினைவில் இருக்கிறது. காமராஜரே அசந்து நின்றார்; தன் உரையில் அதைக் குறிப்பிடவும் செய்தார். அதுபோன்ற உரைதரும் நிகழ்ச்சிகளுக்கு கல்லூரிக்கே அவர் ஒரு show-piece'. அவரைப்பேச வைத்து மாணவர்களைக் கேட்க வைப்பதற்காகவேகூட சிறப்புக்கூட்டங்கள் நடத்துவதுபோலத் தோன்றும். அவரில்லாவிட்டால் 'substitute'ஆக வருவது காளிமுத்து. இவருடைய தமிழ், ஆற்றொழுக்கு. ஆனால், காமராசனது வீச்சோ கல்லும் காடும் தாண்டி வரும் காட்டாறாகவும் வரும்; மற்றொரு நேரத்தில் சோலைகள் ஊடேவரும் தென்றலாகவும் வரும். பின்னால் கவிஞன் காமராசன் என்று கொஞ்சகாலம் எல்லோருக்கும் தெரிபவராக இருந்தார். 'கருப்புப் பூக்கள்' என்று நினைக்கிறேன் - அவரது பேசப்பட்ட கவிதைத் தொகுப்பு. சில சினிமா பாடல்கள்கூட எழுதினார். அடுத்தவர்தான் இப்போதைய சட்டசபையின் அவைத்தலைவர்.

கூட்டம் ஆரம்பமானது. முதலில் போராட்டத்திற்கு நாள் குறிக்கப்பட்டது. எனக்கோ ஆச்சரியமான ஆச்சரியம்.அந்த முன்னணி மாணவர்களின் 'தீரத்தை'விட என்னை அதிகம் பாதித்தது அவர்களது'சுதந்திரம்'. நானோ வீட்டுப்பறவையாக, முளைத்த சிறகுகள் வெட்டி விடப்பட்டனவா, இல்லை அவைகள் அன்று வரை மட்டுமல்லாது அதற்குப் பிறகும் பல ஆண்டுகளுக்கு வளராமலே இருந்துவிட்டதா தெரியவில்லை; பாவப்பட்ட ஜென்மம்போல வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கத்தான் முடியும். ஆனால் இவர்கள் மட்டும் எப்படி 'வீட்டுப்பறவைகளாக' இல்லாமல் 'விடுபட்ட' பறவைகளாக இருக்கிறார்கள் என்ற ஆச்சரியம்.அந்த 'விடுபட்ட' பறவைகள், குறிக்கப்பட்ட நாளுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே 'அண்டர்கிரவுண்ட்'ஆகிவிடவேண்டுமென்றும்,போராட்ட நாளில் கல்லூரி மாணவர்கள் அனைவரையும் கல்லூரி வாசலில் திரட்டி வைத்திருக்க வேண்டுமென்றும், அப்போது நமது முன்னணி மாணவர்கள் 'டிராமெட்டிக்'காகத் தலைப்பாகை சகிதம் சாதாரணத் தோற்றத்தில் வந்து மாணவ கூட்டத்தில் கலந்துவிடவேண்டுமென்றும், அன்று அந்த அறையில் இருந்த மாணவர்களுக்கு மட்டுமே அது தெரியுமாதலால் அவர்கள் அந்த முன்னணி மாணவர்களைச் சூழ்ந்து போலீஸிடமிருந்து தனிமைப்படுத்திவிட வேண்டுமென்றும், சட்ட எரிப்பைப் போலீஸ் தடுப்பதற்குமுன்பே முடித்துவிடவேண்டுமென்றும், அவர்கள் கைது செய்யப்பட்ட பின் மாணவர்களை மதுரையின் நான்கு மாசி வீதிகளைச் சுற்றி ஊர்வலம் செல்ல திரட்டிச்செல்லவேண்டுமெனவும் திட்டம் தீட்டப்பட்டது. அப்போது ஒரு அப்பாவிக்குரல் கேட்டது, சட்ட எரிப்புக்கு சட்டப்புத்தக்திற்கு எங்கே போவது என்று. பட்டென வந்தது ஒரு பதில். ஏதாவது நம்ம நோட்ஸ் ஒண்ணை எரிச்சால்போதும் என்று ஒரு பதிலும், அதை அடுத்து, எரிச்சிட்டா அதுக்குப்பிறகு சட்டமும், நம்ம நோட்சும் எல்லாம் ஒண்ணுதான் என்ற தத்துவமும் வந்தது. அப்படியாக, கடைசிச் சட்டப்பிரச்சனையும் தீர்த்துவைக்கப்பட்டது.

குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில், கல்லூரி வாசலின் முன் உள்ள மண்டபத்தின் அருகில், தலையில் முண்டாசுடன் 'எரிப்பாளர்கள்' வந்து சேர்ந்தது; மாணவர்கள் மத்தியில் புகுந்தது; மாணவர் கூட்டம் அரண் அமைத்தது; நடுவில் நின்று'சட்டம்' எரித்தது - எல்லாமே 'மிலிட்டரி ப்ரஸிஷனோடு' நடந்தேறியது. சட்டம் எரித்தவர்கள் கைதானார்கள்; புதிய வேகம் பிறந்தது. மாணவர் ஊர்வலம் நகருக்குள் மாசி வீதிகளில் வலம் வந்தது. கீழவாசலுக்கு வரும்போதே மற்ற கல்லூரி, பள்ளி மாணவர்களால் ஒரு பெரும் பேரணி உருவானது. தெற்கு மாசி வீதி வரை அமைதி காத்தேன் -ஏனெனில் அதுவரை நம்ம ஏரியா! யாராவது பாத்துட்டுப் போய் வீட்டுல வத்தி வச்சா என்ன பண்றது? மேற்கு மாசி வீதி அடைந்தபோது கூட்டம் பெருகியது; மாணவர்களின் உற்சாகம் கரைபுரண்டது. மாணவர்களின் வரிசையிலிருந்து விலகி, கோஷம் போடும் பணி தரப்பட்டது.

"டவுண்...டவுண்.."என்று லீட் கொடுக்க, மற்ற மாணவர்கள் "இந்தி" என்று பதில் தர வேண்டும். என்ன, ரொம்ப சாதாரணமாகத் தெரிகிறதா? அதுதான் இல்லை.திடீர் திடீர் என்று பல சுருதிகளில், ஏற்ற இறக்கங்களோடும், நீ...ட்...டி முழக்கியோ, டக்கென்றோ நான் கூற பதில் அதற்குச் சரியாக அதே காலக்கட்டுப்பாட்டோடு, அதே சுருதியோடு, அதே ஸ்தாயியில் கொடுக்கப்பட வேண்டும்; எவ்வளவு கவனத்துடன் சொல்லவேண்டும் தெரியுமா? வெறும் 'மெக்கானிக்கலாக' சத்தம் போட்டதாக நீங்கள் நினைத்துவிடக்கூடாது. இதோடு, 'பிஸிக்கல் இன்வால்வ்மெண்ட்'டும் தேவை; கையை ஆட்டி, குதித்து... தொண்டை தாங்குமளவிற்கு லீட் கொடுத்தேன். மேலமாசி வீதியிலிருந்து வடக்கு மாசி வீதியில் பாதிவரை தொண்டை ஒத்துழைத்தது. அவ்வப்போது வீட்டு ஞாபகம் வந்து பயமுறுத்தினாலும் பணி தொடர்ந்தது. ஆனாலும் அப்பாவுக்கு வேண்டியவர் ஒருவர் ஊர்வலத்தில் என்னைப்பார்த்துவிட்டு, அப்பாவிடம் 'வத்தி' வைக்க (சும்மா சொல்லக்கூடாது; உங்க பையன் நல்லாவே கோஷம் போட்டு லீட் பண்ரான்.) அது பிறகு வீட்டில் 'வெடித்ததும்' - ஞாபகம் வருதே..ஞாபகம் வருதே..

இப்போது 'மாணவ அலை' வடக்கு மாசி வீதிக்குள் பாதி நீளத்தைத் தாண்டியது. அங்குதான் காங்கிரசின் மாவட்ட காரியாலயமிருந்தது. அந்தக் காலத்தில் அந்த வீதியே மதுரை அரசியலில் ஒரு 'சென்சிட்டிவான'பகுதியாக இருந்து வந்தது.அந்தப் பகுதியில் தெருவே கொஞ்சம் சுருங்கி இருக்கும். ஊர்வலத்தின் எங்கள் பகுதி அங்கே போய்ச்சேருவதற்குள் அங்கே ஏதேதோ நடந்துவிட்டிருந்தது. காரியாலயத்தின் முன் நிறுத்திவைக்கப் பட்டிருந்த காங்கிரஸ் கட்சியின் ஜீப் எரிந்து கொண்டிருந்தது. எங்களுக்கு முன்பே சென்றிருந்த மாணவக் கண்மணிகளின் வேலைதான் அது. அதில் ஒரு முக்கிய விஷயம் என்னவென்றால் அதில் அதிகம்பேர் பள்ளி மாணவர்கள்! தீயணைப்பு வீரர்கள் வந்து சேர்ந்திருந்தார்கள். நாங்கள் அந்தப் பகுதிக்குப் போய்ச் சேரும்போது ஒரு கயிறிழுப்புப் போட்டியே நடந்துகொண்டிருந்தது. தீயணைப்பு வீரர்கள் தங்கள் நீர்க்குழாய்களோடு ஜீப்பை நோக்கி வருவார்கள்; ஜீப்பின் முன்னால் வந்து சரியாக அவர்கள் தண்ணீரைத் திறந்துவிட்டவுடன் ஒரு பெரிய மாணவர்கூட்டம் அப்படியே அவர்களை மறித்து பின்னேறச்செய்யும். தீயணைப்புப்படையின் மேலதிகாரிகள் மாணவர்களைச் சமாதானப்படுத்த முயற்சிப்பார்கள். மீண்டும் நீர்க்குழாய்கள் ஜீப்பை நோக்கி வரும்; மீண்டும் அவர்கள் திசை திருப்பப்படுவார்கள். இந்த 'விளையாட்டு' தொடர்ந்தது. மாணவர்களுக்கு ஜீப் முழுமையாக எறிந்துவிட வேண்டுமென்ற உயர்ந்த குறிக்கோள்; தீயணைப்புப் படையினருக்கோ எரியும் ஜீப் வெடித்து உயிர்ச்சேதம் ஏதும் நடந்துவிடக்கூடாதே என்ற பதைபதைப்பு.

இதற்குள் போலீசும் வந்தது. கூட்டத்தை அடக்கமுடியாதலால் கண்ணீர்ப்புகை குண்டு போட முடிவெடுத்தார்கள். முதல் குண்டு நான் இருந்த பகுதியிலேயே, நான் நின்ற இடத்திற்குச் சிறிதே முன்னால் வந்து விழுந்தது. ஒரே புகை மூட்டம். கூட்டம் சிதறியது. முகமெல்லாம் எரிச்சல். கண்களின் எரிச்சல் தாங்க முடியவில்லை. பக்கத்தில் ஒதுங்க இடம் தேடினேன். எல்லா வீட்டுக்கதவுகளும் மூடியிருந்தன். ஏதோ ஒரு வீட்டின் உயர்ந்த திண்ணை இடம் கொடுத்தது. ஆனால் நான் போவதற்குள் அது 'ஹவுஸ்புல்'. எப்படியோ ஓரத்தில் தொற்றிக்கொண்டேன். திடீரென்று என் காலைக் கட்டிப்பிடித்துக் கொண்டு என் இடுப்பு உயரமே ஒரு பள்ளிச்சிறுவன் - சிறிது நேரம் முன்பு வரை அவனும் நானும் ஒரேமாதிரி 'போராளிகள்'- அழுதுகொண்டு தொற்றிக்கொண்டான். எல்லோரும் ஒருவர் மீது ஒருவராக பெருகிவந்த கண்ணீரோடு போராடிக்கொண்டிருந்தோம். எங்களுக்குப் புகலிடம் கொடுத்த வீட்டுக்குள்ளிருந்து பெரியவர் ஒருவர் கை நிறைய சின்ன வெங்காயங்களோடு வந்தார். 'இதைக்கசக்கி கண்களில் தேய்த்துக்கொள்ளுங்கள்' என்றார். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது என்பார்களே, அப்படித்தான் தோன்றியது. என்ன சதித்திட்டமோ என்றுதான் நினைத்தோம். அவரோ 'எனது சுதந்திரப்போராட்ட அனுபவத்தில் சொல்கிறேன்; சும்மா பயப்படாமல் தேய்த்துக்கொள்ளுங்கள்' என்றார். நான்தான் முன்னால் நின்று கொண்டிருந்ததால் நான்தான் முதல் பலிகிடா மாதிரி அவர் கசக்கிக்கொடுத்த வெங்காயத்தை முகத்திலும், கண்களிலும் தேய்த்தேன். பயங்கர ஆச்சரியம். அடுத்த வினாடியே எரிச்சல் போய், முகம் கண் எல்லாம் குளு குளுவென்றாச்சு. எரிச்சல் எல்லாம் 'போயே..போச்சு'. அந்தச் சின்னப் பையனுக்கும் தேய்த்துவிட்டேன். திண்ணையைவிட்டு இறங்கினோம். 'போராளிகள்' எல்லாம் எங்கே? சிதறிய நெல்லிக்காய்கள்தான்!

ஜீப் மட்டும் தனியாய், முழுவதுமாய் எரிந்து எலும்புக்கூடாய் நின்றது.

37. சுஜாதா சொன்ன Spoonerism

இன்றைக்கு காலையில் 'கற்றதும் பெற்றதும்' படிக்கும்போது அவர் எழுதியிருந்த வசந்த் ஜோக்குகளைக் கொஞ்சம் சத்தமாகச் சொல்லிப்பார்க்கலாமென நினைத்தது தப்பாகப் போய்விட்டது; மிகவும் சத்தம் போட்டு கண்ணீர் வருமளவு சிரிக்கும்படியாகி விட்டது.

என்னோடு வேலை செய்த - just இப்பதான் 35 ஆண்டுகளுக்கு முன்பு - விரிவுரையாளருக்கு ஒரே ஒரு வார்த்தை மட்டும் தகராறு; அவரால் 'நீர்க்குமிழி' என்று சொல்லவே முடியாது. 'நீர்க்குழுமி' என்றுதான் சொல்லமுடியும். எங்களுக்கெல்லாம் ரொம்ப சீனியர். என்றாலும் அவ்வப்போது இந்த வார்த்தையை வைத்து அவரைச் சீண்டுவதுண்டு. அவரும் ரொம்பவே sportiveஆக, அதைச் சொல்லச்சொன்னால் சொல்லி நாங்கள் சிரிக்கும்போது எங்களோடு தானும் சிரித்துக்கொள்வார். அவரோடு காலேஜ் காண்டீனில் அதுமாதிரி சிரித்து கலாட்டா செய்து கொண்டிருந்தபோது, சர்வர் பையன் வந்து என்ன வேண்டுமெனக் கேட்க, அதே மூடில், இன்னொரு ஆசிரியர் 'வஜ்ஜி,படை' இருக்கா என்றார். நீர்க்குழுமிக்கு அதிலிருந்து வஜ்ஜி படை target ஆனார்.

இது நடந்தது அறுபதுகளின் கடைசியென்றால், தொண்ணூறுகளின் கடைசிகளில் என் மாணவர்கள் - 4K வால்பெண்கள் - நால்வர் பெயரும் K-ல் தொடங்கும் - சுற்றுவட்டாரத்து மக்கள் பெயரையெல்லாம் spoonerism-ஆல் மாற்றி தங்களுக்குள் பேசிக்கொள்வதை என்னிடம் சொல்லிக்கொண்டிருந்தார்கள். நல்ல வேளை என் பெயர் அந்த விளையாட்டிற்கு அவ்வளவு பொருத்தமாயில்லை என்பதால் போனால் போகட்டுமென்று விட்டுவிட்டார்கள். அவர்களுக்குப் பிடித்ததாக அமைந்த இன்னெரு ஆசிரியரின் பெயர்: குமார சாமி என்பது இப்படி மாறியது: 'சுமாரா காமி'!

60-ல் ஒன்று; 90-ல் இன்னொன்று. நடுவில் வந்த இன்னொரு spoonerism பற்றி சொல்லமாட்டேன். தலை போயிடும்.

Friday, July 29, 2005

36. யார் இவர்கள்...?

பாம்புகள்
தங்கள் தோல்களையே
சட்டைகளாக
உறித்துப் போடுகின்றன.

இவர்கள் ஏன்
தங்கள் சட்டைகளைக் கூட
தோல்களாகத்
தரித்துக் கொள்கிறார்கள் ?


அந்த 'இவர்கள்' யார்? இவர்களின் 'சட்டைகள்' என்ன?

வசந்தனின்
பதிவும், கணேசனின் பதிவும்,
ஆரோக்கியத்தின்
பதிவும்
,
நல்லடியாரின்
பதிவும்
இன்னும் பலரின் சமய தொடர்பான பதிவுகளும் -
இவர்களின் கோப தாபங்கள், ஆதங்கங்கள், இதற்கான காரணங்கள் - இவைகள் எல்லாமுமாகச் சேர்ந்து என்னை எழுதவைத்த கட்டுரையை ஆங்கிலத்தில் இங்கே தந்துள்ளேன்.

உங்கள் கருத்துக்களை இங்கேயோ, அங்கேயோ தமிழிலோ, ஆங்கிலத்திலோ தாருங்களேன்.

Wednesday, July 27, 2005

35. ஓர் ஆராய்ச்சிக் கட்டுரை.

எனக்கும் வயசு என்னவோ ரொம்பவே ஆகிப் போச்சு. ஆனால் நானும் 'எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து' எப்படியும் பதில் கண்டு பிடிக்கவேண்டுமென்று தலையைப் பிய்த்துக்கொண்டதுதான் மிச்சம்; பதிலேதும் கிடைக்கவேயில்லை. நாளாக நாளாக ஒன்று மட்டும் புரிந்தது. நான் மட்டுமல்ல, யாருமே 'அந்தக் கேள்விகளுக்குப்' பதில் சொல்லமுடியாது என்று. இல்லையென்றால் தலைமுறை தலைமுறையாக இதற்கு ஏன் யாருக்கும் பதில் தெரியவில்லை? ஒருவேளை இதை வாசிப்பவர்களில் யாருக்காவது பதில் தெரிந்துவிட்டால் அவர்கள் எனக்கு மட்டுமல்ல இந்த உலகிற்கே பதில் தர முன்வரமாட்டார்களா என்ற எதிர்பார்ப்பில்தான் இந்த 'ஆராய்ச்சிக் கட்டுரை'.

அப்படிப்பட்ட கேள்விகள் என்னவாக இருக்கும் என்று நீங்கள் தலையைப் பிய்த்துக்கொள்ள ஆரம்பித்திருந்தால் it is your problem! இந்தப் பிரபஞ்சத்தின் ஆரம்பம், theory of chaos, black hole - இப்படி ஏதாவதாக இருக்கும் என்று நீங்கள் நினைத்துக்கொண்டாலோ, த்வைதம்-அத்வைதம் இரண்டில் எது சரி, பசு, பதி, பாசம் என்ற இந்து தத்துவத்தையோ, mystery of trinity என்ற கிறித்துவ தத்துவத்தையோ புரிந்துகொள்வது எப்படி என்பது போன்ற தத்துவ விசாரணைகளையோ நீங்கள் நினைத்துக்கொண்டால் நான் அதற்கு எப்படிப் பொறுப்பு? ஆனாலும் என் கேள்விகள் இதைவிடக் கடினமானவைதான். ஏன் என்கிறீர்களா? பிரபஞ்சத்தைப் பற்றிய இன்றைய கேள்விகளுக்குப் பதில் இல்லாமலிருக்கலாம். ஆனால் எதிர்காலம் நிச்சயம் பதிலைத் தரும். ஆனால், என் கேள்விகளுக்கு...? நிச்சயம் என்றும் அவைகளுக்குப் பதில் தெரியப்போவதில்லை என்று நிச்சயமாக நம்புகிறேன்.

அப்படி என்ன கடினமான கேள்விகள் என்று கேட்கிறீர்களா? சொல்கிறேன் கேளுங்கள். நம்மில் மயில் இறகுகளைப் புத்தகத்திற்குள் புதைத்துவைத்து, அது குட்டி போடும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்காதவர் யார்தான் சொல்லுங்கள்? மயிலிறகு கிடைப்பதே குதிரைக்கொம்பு; அப்படிக் கஷ்டப்பட்டுக் கிடைத்ததை ஒற்றை ஒற்றையாகப் பிரித்து ஒவ்வொரு புத்தகத்திலும் வைத்துவிட்டு, தினமும் காலையில் படிக்கப் புத்தகத்தை எடுக்கிறோமோ இல்லையோ, குட்டி போடுவிட்டதா என்று நித்தம் நித்தம் திறந்து பார்த்து...

உங்களுக்கும் அந்த நாட்கள் நினைவுக்கு வருமே. இதில் எனக்குள்ள சந்தேகம் என்னவென்று கேட்கிறீர்களா? என் குழந்தை இப்படிச் செய்தபோது அந்தக் குழந்தைத்தனத்தை ரசித்துச் சிரித்தேன். அப்படிச் சிரித்தபோது நான் மயிலிறகின் குட்டியை எதிர்பார்த்து இருந்ததைப்பார்த்து என் அப்பா சிரித்தது நினைவுக்கு வந்தது. நிச்சயமாக என் தாத்தா அப்பாவைப்பார்த்து அதேமாதிரி சிரித்திருப்பார். எப்படி இது தொடர்கதையாகத் தெடர்ந்து வருகிறது?

மயிலிறகு விஷயம் மட்டுமல்ல; முதல் பல் விழுந்த நாள் நினைவுக்கு வருகிறது. ஏற்கெனவே பல் ஆடிக்கொண்டிருக்கும்போதே விளையாட்டு நண்பன் - கொஞ்சம் சீனியர் - எச்சரித்திருந்தான் விழுந்த பல்லை வானம் பார்த்துவிட்டால் மறுபடி பல் முளைக்காது என்று. நாக்கால் ஆட்டிக் கொண்டேயிருக்கும்போது, ஏதோ ஒரு தருணத்தில் பல்லைத்தேட நாக்கு துளாவும்போது அங்கே பல்லுக்குப் பதில் ஒரு பெரிய வெற்றிடம்; பல் வாய்க்குள்ளேயே விழுந்திருந்தது - ரத்தமின்றி, சத்தமின்றி! சீனியர் சொல்லியிருந்தது நினைவுக்குவர, விழுந்த பல்லை வானம் பார்த்துவிடாதபடி, நன்கு குனிந்து உள்ளங்கையில் லாவகமாகத்துப்பி, இறுக்கமாகக் கைக்குள் மூடிவைத்து, மாட்டுச்சாணம் தேடி அலைந்து... கஷ்டப்பட்டுக் கிடைத்த சாணத்திற்குள் பல்லைப் பத்திரமாகப் பதிய வைத்து, வீட்டுக்கூரை மீது வீசிவிட்டு, அதற்குப் பின்பே நிம்மதிப் பெருமூச்சு விட்டு...

இப்படித்தான் எத்தனை எத்தனை...?

எழுதுவதற்கு என்பதைவிடவும் சீவித்தள்ளும் இன்பத்திற்காகவே பென்சிலைப் பயன்படுத்தும் வயது. சீவிய பென்சில்களின் துகள்களைப் பத்திரமாகச் சேர்த்து வைத்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? அதைப் பாலில் ஊற வைத்தால் அச்சுக்குண்டான நல்ல 'அழிரப்பர்' கிடைக்குமே! அங்கங்கே புத்தகங்களுக்கிடையே பென்சில் தூள்கள்...

அந்த வயதில் ஒரு சின்னக் காந்தத்துண்டு கிடைத்துவிட்டால் அதுதான் நம் அந்தஸ்தை எவ்வளவு உயர்த்திவிடும். நண்பர்களுக்கு அதைக் காண்பிப்பதில்தான் எவ்வளவு பெருமை. ஆனால் hands-on experience நமக்கு மட்டுமே. பிரத்தியேகமாக வைத்துக்கொண்டு, மணலில் இருந்து 'இரும்புத்தூள்' சேர்த்து... இது மாதிரி நிறைய சேர்த்தால்,உருக்கி இரும்பு செய்யலாமென்று கொஞ்சம் கொஞ்சமாய் சேர்த்துச் சேர்த்து...


மேற்சொன்ன எல்லா விஷயத்திலும் எனக்கு இன்றுள்ள சந்தேகம் ஒன்றுதான். எப்படி சரியாக அந்த வயதில் எல்லோருக்கும் ஒரே மாதிரியான நம்பிக்கை? 'இம்மீடியட் சீனியர்கள்' சொல்லி வருவதுதான்; ஆனால், அதே நேரத்தில்'சூப்பர் சீனியர்கள்' இதெல்லாம் மூடநம்பிக்கை என்று எவ்வளவு சொன்னாலும் நம் மண்டையில் ஏறுவதேயில்லை. என் அப்பா சொல்லும்போது நான் கேட்கவில்லை; நான் சொல்லும்போது என் பிள்ளை கேட்கவில்லை. இது ஒரு முடியா நெடுங்கதை. இது காலங் காலமாய் தொடர்ந்துவரும் நம்பிக்கைகள். இது எப்படி?

ஒருவேளை, நம் எல்லோருக்குமே (பிறந்ததிலிருந்து பெற்றோரும், பின் பிறரும் சொல்லிச் சொல்லியே- brain-washed?) மதங்கள் மீதும், கடவுளர்கள் மீதும் நமக்கு காலங்காலமாய் இருந்துவரும் நம்பிக்கைகள் மாதிரிதானோ இவைகளும் ??

Monday, July 25, 2005

34. ரிட்டையர் ஆன மாமாக்கள்...

பத்ரி தனது பதிவில் "கோஷ்டிகானம் பாட "Letters to the Editor" ரிடையர் ஆன மாமாக்கள், தி ஹிந்து எடிட்டோரியல் எழுதும் கூட்டத்தவர்" - என்று பெரும் போடாகப் போட்டிருக்கிறார். ஒருவேளை 'armchair critics" என்பதன் தமிழாக்கமாக அது இருக்குமோ? நானும்கூடதான் எனது retirement-க்கு முன்பே The Hindu-"Letters to the Editor"-க்கு எழுதிப்பார்த்தேன். ஆனால் நான் retire ஆனது அவர்களுக்கு எப்படி தெரிந்ததோ இப்போது பதிப்பாகும் விழுக்காடு அதிகமாக ஆகிவிட்டது. நான் என்ன செய்ய?

சமீபத்தில் இங்கிலாந்தில் கௌரவப்பட்டம் பெற்ற நம் மன்மோகன் சிங் பேச்சுக்குப் பலத்த எதிர்ப்புகள் இருந்தது; இன்னும் இருந்துவருகிறது. ஆனால், எனக்கு என்னவோ அவர் நம் மதிப்பைவிட்டுக் கொடுக்காமல் பேசியதாகத்தான் தெரிகிறது - பத்ரிக்குப் போலவே -("விருப்பு வெறுப்புகளன்றி, பிரிட்டிஷ் ஆட்சியின் நல்லவை, கெட்டவை என்று சீர்தூக்கிப் பார்த்து சரியாகவே சொல்லியிருக்கிறார் என்றுதான் நான் நினைக்கிறேன்"- பத்ரி) .

ஆகவேதான் இப்படி ஒரு ஆங்கிலப் பதிவைச் செய்தேன்.

அதோடு மட்டுமின்றி அவர் அமெரிக்கா செல்லும் முன்பே கொடுத்த பேட்டியில் சொன்ன சேதிகளுக்காக நான் பாராட்டி எழுதிய கடிதம் The Hindu - Letters to the Editor"-ல் 12.07.2005 அன்று கீழ்க்கண்டவாறு வெளியாயிற்று.

Dr. Singh's assertion that India is neither a client state nor a supplicant (July 10) is commendable. When he declined international aid in the wake of the tsunami, heated argument on whether his action was right or wrong followed. Some argued that he was overplaying the self-reliance card. But India is being held up as an example for the way it handled the post-tsunami work. The Prime Minister has done our country proud.

G. Sam George,
Chennai

ஆங்கிலேயர்கள் மீதான என் தனிப்பட்ட வெறுப்பை இங்கேபதிவு செய்துள்ளேன். ஆனால், அதில் நான் சொல்லியுள்ள என் ஐயத்திற்கு எனக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை.

Sunday, July 24, 2005

33. அவர் நானில்லை..

Wednesday, July 20, 2005

32. ஒரு புதிய சீரியல் ஆ'ரம்பம்'....

(பின்னூட்டமிடும்) நாலு பேருக்கு நல்லா இருந்தா எல்லா(பதிவு)மே நல்லதுதான் - நேத்து கிடைச்ச ஞானோதயம்; அதுல வந்ததுதான் இந்த சீரியல் ஐடியா.
வயசைச் சொல்லாததால் இதுவரை சில சேதிகளைப் பதிவு செய்ய முடியாத நிலை. அதைக் கடந்தாகி விட்டது. ஆகவே, காலம், இடம் என்னும் வர்த்தமானங்களைக் (ஆமா, இப்படி எல்லாரும் எழுதறாங்க..வர்த்தமானம்..வர்த்தமானம் அப்டின்னா என்னங்க? நிஜமா தெரியாது.)கடந்து எழுதிர்ரதாக முடிவு.
உதாரணமாக, 1965-ன் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தப்பற்றி ஒரு நேரடி ரிப்போர்ட் வேணும்னா, பாவம் இந்த வலைப்பதிவாளர்கள் எங்கே போய் யாரிடம் கேட்க முடியும், சொல்லுங்க. ஆகவேதான் இந்த முடிவு. ஒரு scooter வாங்க என்னவெல்லாம் செய்யணும், எவ்வளவு காலம் ஆகும். ஏழு மலை, ஏழு கடல் மாதிரி எத்தனை தடைக்கற்கள் கடக்கணும்னு உங்களுக்கு யார்தான் சொல்றது. அதுக்குத்தான் இப்படி ஒரு ஏற்பாடு.

எல்லாத்தையும் ஒரே சீரியலில் சொல்றதைவிட வேறமாதிரி சொல்லத்தான் நினைக்கிறேன்; பார்க்கலாம். நாளைக்கு நீங்கள் இந்தப்பக்கம் எட்டிப்பார்க்கலாமா வேண்டாமா என்று ஒரு முடிவு செய்துகொள்ள ஒரு உதவி செய்து விடுகிறேன் - முதல் சீரியலின் தலைப்பு (சகுனமே சரியாயில்லையேயென நினைப்பீர்களோ? பரவாயில்லை.) :
மரணம் தொட்ட சில கணங்கள்

Saturday, July 16, 2005

31. முகத்திரை களைகிறேன்..

எனக்காக என் அப்பா செய்தவைகளில் பிடித்த ஒன்று எனக்கு அவர் வைத்த பெயர். ஆனால், அதனால் இன்று வரை சில பிரச்சனைகள்தான். இதுவரை என் சரியான பெயருக்கு குடும்ப அட்டையோ, தேர்தல் அட்டையோ வந்ததில்லை. உண்மையைச்சொல்ல வேண்டுமென்றால், இந்த நிமிடம் வரை எனக்கு மேற்கூறிய இரண்டுமே இல்லை. மூன்றாவது முறையாக குடும்ப அட்டையில் பெயர் சரி செய்யக் கொடுத்துள்ளேன். இந்த முறை பொறுமை போயே போய் விட்டது. அவர்கள் தப்பும் தவறுமாக பெயரை எழுதிவிடுவார்களாம்; நான் அதற்குப் பிறகு V.A.O.-க்குக் காசு கொடுத்து நான் நானேதான் என்று ஒரு சான்றிதழ் வாங்கவேண்டுமாம். அட போங்கப்பா என்று வந்து விட்டேன். இது இப்பொழுது நடந்தது. என் பெயரை வைத்து வந்த சிக்கல்களில் இது கடைசி.

என் பெயரை வைத்து முதன் முதல் வந்த சிக்கலும், எனக்குக் கிடைத்த தண்டனையும் இன்னும் நன்கு ஞாபகம் இருக்கிறது. அந்த சிக்கலில் இருந்து இன்னும் விடுபடவில்லை; அது ஒரு முக்கியமான காரணம் நான் தருமி என்று ஒரு புனைப்பெயரில் வலைப்பூ ஆரம்பித்ததற்கு. அந்த முதல் சிக்கலைப்பற்றி சொல்லவேண்டுமென்றால் என் பெயரை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டுமே. சின்னவயதில் வீட்டில் ஜார்ஜ் என்று கூப்பிடுவார்கள். பிரச்சனை ஒன்றும் பெரிதாக இல்லை. மிஞ்சிபோனால், என் வயசுப் பசங்க ஜார்ஜ்...கோர்ஜ் என்று கூப்பிடுவார்கள். கொஞ்சம் விரட்டிட்டு போய் கொஞ்சமாய் சண்டை போட்டிருப்பேன். அவ்வளவே.

ஐந்தாம் வகுப்புக்கு வந்த பிறகுதான் பிரச்சனை. நானெல்லாம் தமிழ் மீடியத்தில் படித்த கேசு.
ஐந்தாம் வகுப்பின் கடைசி term-ல் தான் எங்களுக்கு ஆங்கில வாடையே கிடைக்கும்; அதுவும் நான் V std. 'A' section என்பதால்தான் அதுவும். மற்ற section-காரங்களுக்கு 6-ம் வகுப்பிலிருந்துதான். V A -அப்டின்னா, நம்மள மாதிரி, students எல்லாரும் பயங்கரமான 'இது'ன்னு அர்த்தம். அதிலும் V A-க்கு இருந்த எங்க லூக்காஸ் சாருக்கு ஸ்கூல்லியே ரொம்ப நல்ல பேரு. அவருக்கு நான் ரொம்ப pet-ன்னா பாத்துக்கங்களேன். விஷயத்துக்கு வருவோம்; எங்களுக்கு ஆங்கில போதனை ஆரம்பிச்சது. What is your name? What is your father? -இதுதான் எங்களுக்கு முதலில் சொல்லிக்கொடுக்கப்பட்ட ஆங்கிலம். நாங்க இதை அடுத்த section பசங்ககிட்ட கேட்டு, அவங்க முழிக்கிறதைப்பார்த்து..அட, போங்க அது எல்லாம் அனுபவிச்சிருக்கணும்.

அது என்னமோ தெரியலை; என்ன மாயமோ புரியலை. சரியாக இந்த சமயத்தில் வீட்டுக்கு வருபவர்களும் இதே கேள்வியை சொல்லிவைத்தது மாதிரி கேட்பார்கள். அப்படி ஒருவர் வந்து கேட்டதும் பயங்கர 'பந்தாவாக' (அப்போவெல்லாம் 'பந்தா' என்ற சொல்லே அகராதியில் இருந்திருக்காது!) மை நேம் இஸ் ஜி. சாம் ஜார்ஜ் என்று சொன்னது என் அப்பாவின் காதில் கர்ண கடூரமாக விழுந்திருக்க வேண்டும். வந்தவர் போன உடனே அப்படி சொல்லக்கூடாது; மை நேம் இஸ் Sam ஜார்ஜ் அல்லது மை நேம் இஸ் Sam என்று சொல் என்று சொல்லிக்கொடுத்தார்கள். எதற்கும் நீங்களும் தமிழில் 'சாம்' என்பதையும், ஆங்கிலத்தில் 'Sam' என்பதையும் மனதுக்குள் சொல்லிப்பார்த்துக் கொள்ளுங்கள்; அப்போதுதான் என் பிரச்சனை என்ன என்பது அதன் முழுப் பரிமாணத்துடன் உங்களுக்குப் புரியும்.

அடுத்த நாள். நமது காட்சி இப்போது V Std. A-ல் ஆரம்பிக்கிறது. இன்று லூக்காஸ் சார் தமிழ் டிக்டேஷன் கொடுக்கிறார். அப்போ எல்லாமே ஸ்லேட்-குச்சி தானே. ஸ்லேட்டில் ஒன்றரைப் பக்கம் வரும் அளவிற்கு டிக்டேஷன் கொடுக்கிறார். எப்போதுமே அய்யா தமிழ் டிக்டேஷனில் ரொம்ப தப்பு போடுவதில்லை. இந்த பதிவிலிருந்தே உங்களுக்குத் தெரிந்திருக்குமே; அதிகமானோர் 'ன'வுக்கும், 'ண'வுக்கும் தகராறு பண்ணிக்கொள்கிறார்களே அது போலவோ; வல்லின 'ற'கர மெய்யெழுத்துக்கு அடுத்தாற்போல இன்னொரு மெய்யெழுத்து போடுவார்களே (அடுத்தாற்ப்போல-என்பது போல) அது மாதிரி நான் தப்பு பண்றேனா? இல்லையே! சும்மா சொல்லக்கூடாது; லூக்காஸ் சார் போட்ட அடித்தளத்தில் V & VI Form-ல் (அது என்ன Form என்கிறீர்களா? அந்தக்காலத்தில் முதல் 5 வருடம் = சின்னப்பள்ளிக்கூடம் -Elementary School. அதற்குப் பிறகு 6 வருடம் - பெரிய பள்ளிக்கூடம்; அதாவது High School. அந்த 6 வருடம் என்பது I Form to VI Form; VI Form = S.S.L.C. அதாவது பள்ளி இறுதித் தேர்வு; பிறகு கல்லூரி - Pre-university Class - 3 year degree) மறுபடியும் சொல்கிறேன்: லூக்காஸ் சார் போட்ட அடித்தளத்தில், V & VI Form-ல் எங்கள் தமிழாசிரியர் கந்தசாமிப் புலவர் மாளிகையே கட்டினார்; அவர் சொல்லித்தரும் அழகே தனி; அதுவும் செய்யுட்பகுதி எடுத்தால்... அதனால் தமிழ் மீது காதலே வந்தது. ரொம்பவே digression, இல்ல? விட்ட இடத்துக்கு வருவோம். தமிழ் டிக்டேஷன். அன்றும் (!) வழக்கம்போல் அய்யா தவறின்றி எழுதியிருந்தேன் (நிஜமா, நம்புங்க!) லூக்காஸ் சார் பழக்கம் என்னென்னா, 3 தப்புவரை மன்னிப்பு உண்டு; மற்றவர்களுக்குத் தவறுக்குத் தகுந்தாற்போல் தண்டனை. வழக்கமாக வகுப்பின் ஓரத்தில் இருக்கும் பிரம்பை எடுத்துவருவதும் பெருமைக்குரிய பணி எனக்குத்தான் கொடுக்கப்படும். ஆனால் அன்று சார் வேறு ஒரு பையனைவிட்டுப் பிரம்பை எடுக்கச் சொன்னார். அப்பவே எனக்கு என்ன இது என்று தோன்றியது. பிரம்படி பூசை முடிந்தது. கடைசியில் சார் என்னைக் கூப்பிட்டார். அடி பயம் ஏதுமின்றி சார் முன்னால் போய் நின்றேன். அதிகமாகத் தப்பாக எழுதிய மாணவனுக்குக் கொடுத்த தண்டனையை எனக்கு ஒன்றும் சொல்லாமலே கொடுத்தார். கொடுத்து முடிந்தபின், தப்பு இல்லாமல் டிக்டேஷனை எழுதியவன் தன் பெயரையே தப்பாக எழுதியுள்ளான்; ஆகவேதான் இந்த தண்டனை என்றார்.


விஷயம் உங்களுக்குப் புரிகிறதா? எல்லாம் தமிழ் சாமுக்கும், ஆங்கில Sam-க்கும் வந்த தகராறுதான். அப்பா, சாம் என்று சொல்லவேண்டாம்; Sam என்று சொல் என்றார்களா; தமிழில் Sam எப்படி எழுதுவது என்று தலையைப்போட்டு பிச்சுக்கிட்டு ஒரு வழியாக 'சம் ஜார்ஜ்' என்று முடிவு செய்து எழுதினேன். அது என்ன ஆச்சுன்னு பார்த்தீங்களா?

அதுவும் என் பெயருடன் வேற்றுமை உருபுகளைச் சேர்த்துப் பாருங்களேன்:

குழலியைக் கண்டேன் - நல்லா இருக்கு; சாமைக் கண்டேன் - இது எப்படி நல்லாவா இருக்கு?

வீ.எம்மால் முடியும்; ,, சாமால்...ம்..ம்.. ''

முகமூடிக்கு நல்ல மனசு ''சாமுக்கு...எனக்கே பிடிக்கலை


ஷ்ரேயாவிடம் சொல்லுங்கள் '' சாமிடம்..ஏதோ 'சாமி மடம்' மாதிரி இருக்கு.

துளசியின் செல்லங்கள் ,, சாமின்... Ho Chi Minh மாதிரி இல்ல?

ஸ்ரீரங்கனோடு பேசணும். '' சாமோடு....நிச்சயமா நல்லாவேயில்லை

பாலாவுடன் தொடர்பு கொள்ளணும் '' சாமுடன்...அவசரத்தில் தமிழ்சசியை தமிழச்சி
என்று வாசிப்பதுபோல சா மூடன் என்று வாசிக்கக்கூடும்

அதிலிருந்து, நான் எனது பெயரைத் தமிழ்த் தேர்வுகளைத் தவிர எப்போதும் தமிழில் எழுதுவதேயில்லை. மெல்ல மெல்ல குடும்பத்தினரைத்தவிர மற்ற எல்லோரிடமும் எனக்குப் பிடித்த Sam என்ற முதல் பெயரைப் புழங்க வைத்தேன். பள்ளிப்படிப்பு (1949-54; 54-60 - புனித மரியன்னை, மதுரை) முடித்து, கல்லூரி (1960-61-புனித சவேரியார், பாளையங்கோட்டை; 1961-64, 64-66 -தியாகராஜர் கல்லூரி, மதுரை)வரும்போது முழுமையாக எல்லோருக்கும் Sam-ஆகி விட்டேன்.

1966-70 புஷ்பம் கல்லூரி, தஞ்சையில் சேர்ந்தபோது வழக்கமான முறையில் initials-களை வைத்து, ஏற்கெனவே அங்கே ஒருவர் G.S.என்ற சுருக்கப் பெயரோடு இருந்ததால் S.G. என்று அழைக்கப்பட்டேன். எப்படியோ ஓசியாக 'ஜி' பட்டம் கிடைத்தது. பிறகு 70-ல் சொந்தஊர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் (2003ல் ஓய்வு)சேர்ந்த பிறகு கொஞ்சநாள் Sam-ஆக இருந்து, பிறகு வேறு சில Sam-கள் வந்ததால் வித்தியாசம் காண்பிக்கவென்று Sam G ஆனேன். வயது ஏறியபோது புதிதாகக் கல்லூரியில் சேர்ந்து நன்கு பழகிய நண்பர் முனைவர் சைலஸால் Samji என்று நாமகரணம் சூட்டப்பட்டேன்; மாணவர்களுக்கும் அப்படியே ஆனேன். (Dr.Silas, உம்ம பேரை எப்படியாவது ப்ளாகில் ஏற்றுவதாகச் சொன்னதைச் செய்துவிட்டேன்; ஆளை விடு'யா!) இதுதான் எமது பெயர்ப்புராணம்.


இப்படித் தமிழில் எழுத நானே தயங்கும் பெயரை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று பள்ளிப் பருவத்திலிருந்தே முழித்து வந்திருக்கிறேன். ஆகவேதான் வலைஞனாகச் சேரலாமென முடிவெடுத்ததும் என்முன் எழுந்த பெரிய கேள்வி; பெயரை எப்படி எழுதுவது? இந்த பிரச்சனைக்கு முடிவுதான் புனைப்பெயரில் எழுதுவது என்ற முடிவு.

சரி, பெயர் வேண்டாம் என்ற முடிவெடுத்தபின் ஒரு trial and error மாதிரி ஆங்கிலத்தில் ஒரு blog ஆரம்பிக்க முடிவு செய்து suthal.blogspot.com என்று ஒன்று ஆரம்பித்தேன். (அதை அப்படியே தூங்க விட்டாச்சு; முழிக்க வைக்கவேணும். எப்படிதான் சந்திரவதனா மாதிரி ஆட்கள் 21 ப்ளாக் வைத்து மேய்க்கிறார்களோ! சிலருக்கு 'செல்லங்கள்'; சிலருக்கு ப்ளாக்குகள்!)
பிறந்த நாள், வருஷம் எல்லாம் கேட்டிருந்தது; கொடுத்தேன். பிறகு profile பார்த்தால் எதோ ஜாதகம் போடுவது மாதிரி என்னமோ நட்சத்திரம், ராசி எல்லாம் போட்டிருந்ததைப் பார்த்ததும் எரிச்சல். வாஸ்து, எண்கணிதம், கல் ராசி இப்படிப் போற கூட்டத்தைப்பார்த்து - அதுவும் இளைஞர்களை, என் மாணவர்களைத் திட்டுவது உண்டு; இங்கே என்னடான்னா இப்படி. முதலில் பெயர் தயக்கம்; இப்போது பிறந்த நாள் சொல்ல ஒரு தயக்கம்.

அதோடு, மெரினா பீச்சில், காந்தி சிலைக்குப்பின்னல் ஒரு ப்ளாக்கர்கள் கூட்டம் என்றார்களா கொஞ்சம் adjust பண்ணி சென்னையிலுள்ள மூத்த மகள் வீட்டிற்குப்போய் அந்த கூட்டத்தில் கலந்துகொள்ள முடிவு செய்து, அதன்படியே கலந்துகொள்ளவும் செய்தேன். அதுவும் ஒரு தப்பாகப் போய்விட்டது. ஒன்று: எல்லோரும் பேசியது ஒன்றும் எனக்குப் புரியவில்லை; Everything was Greek and Latin to me; things were going above my head. நான் என்றைக்கு unicode-யைக் கண்டேன்; என்னமோ template என்றார்கள்; காசி நிர்வகிக்கும் server அப்படி இப்படி என்று பேசப் பேச, ஆஹா, தப்பான முடிவு எடுத்துட்டோமோ என்ற பயம் வந்தது. அது போதாதென்று, வந்த 23-ல் (என்னைச் சேர்க்காமல்) 3 பேரைத்தவிர (இராமகி, டோண்டு,மாலன் - அனேகமாக இதே வயது வரிசையில்) மற்ற எல்லோரும் 25-35 வயதுக்குள் இருந்தார்கள்; அந்த முதிர்ந்த மூவரும் கூட என்னைவிட மிகவும் இளைஞர்களே. இந்த 'வலைக்குள்' சிக்கினால் problem of generation gap வந்துவிடுமே என்ற பயமும் சேர்ந்து கொண்டது. ஆரம்பிப்போமா, வேண்டாமா என்று ஒரே குழப்பம். வயதானவன் என்று தெரிந்தால் மரியாதை என்று ஏதாவது காரணம் காட்டி sideline பண்ணிவிடுவார்கள் என்ற பயம். (இப்போகூட பாருங்களேன்; stars for voting in my blog is not working; help me என்று forum-ல் அறைகூவல் விடுத்து நாள் பல ஆயிருச்சு; நாப்பது ஐம்பது பேர் வந்து பாத்துட்டும் போயிட்டாங்க; ம்..ம்..ஒரு சத்தம் வரணுமே.)

இதில நிறைய பேரு அவங்க அவங்க போட்டோவெல்லாம் போட்டுகிடராங்க (அழகான மூஞ்சு; போட்டுக்கிறாங்க! பழமொழி -வயசுக்கு ஏத்தமாதிரி பழமொழில்லாம் சொல்லவேண்டாமா- பழமொழி ஒண்ணு சொல்லுவாங்களே முடி இருக்க மகராசி...அப்படிமாதிரி) ஆனா, நம்ம கொஞ்ச நாளைக்காவது பெயர், வயது, நிச்சயமா போட்டோ எதுவும் இல்லாமல் வண்டியை ஓட்டிப்பார்ப்போம்; என்னதான் நடக்கும்; நடக்கட்டுமே அப்டின்னு ஒரு மாதிரி ஆரம்பிச்சு வைக்க, நம்மளையும் போனா போதுன்னு இரக்கப்பட்ட ஏழெட்டு நல்ல மனுஷங்க (மனுஷிங்களும்தான்) ஏதோ அப்பப்ப வந்து பாத்துட்டு... போய்க்கிட்டு...

இப்ப இன்னொரு ஆசை. பிறந்தது என்னமோ திருநெல்வேலி பக்கம்னாலும் மதுரைக்காரனாக மாறிப்போயாச்சு; நம்ம மதுரை வலைஞர்கள் எல்லோரும், அந்த சென்னைக்காரங்க எல்லாம் கூடிப்பேசுனாங்களே அது மாதிரி வெள்ளமாய் பாய்ந்து வரும் நம்ம வைகை ஆற்றின் கரை மேட்டுல ஒரு கூட்டம் போடணுங்க. யார் யார் மதுரைக்காரங்க? ஆட்டைக்கு வர்ரீங்களா? அருண் வைத்தியநாதன் மாட்டுத்தாவணி (அதுதாங்க, எங்க ஊரு கோயம்பேடு)பற்றி எழுதியிருந்ததாக நினைவு;ஆனா இப்போ அமெரிக்கா ஆளு. அல்வாசிட்டி விஜய்க்கு மதுரை 'புகுந்த ஊரோ'? இப்போ சிங்கைகாரர். வேற யாருங்க மதுரையில் இருக்கீங்க. இந்த சென்னைக்காரங்க பீச்சில கூட்டம் போட்டது நம் வைகை நதிக் கரையோரம் ஒரு கூட்டம் போடுவோமே, அலைகடலென திரண்டு வாருங்களேன். வர்ரீங்களா? யாராவது...Hellooooooooo anybody there?

பி.கு. குழலி, முகமூடி, வீ.ஏம், ஷ்ரேயா, துளசி, ஸ்ரீரங்கன், பாலா, தமிழ்சசி - உங்கள் பெயரைப் பயன்படுத்தியுள்ளேன் நீங்கள் அதைத் தவறாக எடுத்துக்கொள்ள மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில். தவறெனின் தகவல் அனுப்புங்கள்.

Thursday, July 14, 2005

30. இரண்டு மனைவியர் வேண்டுமா...?

இரண்டு மனைவி வேண்டுமா என்ற தலைப்பைப் பார்த்து பயந்து விடாதீர்கள். அப்படி எல்லாம் போட்டால்தானே நீங்கள் இதைப் பார்ப்பீர்கள்.(அப்படியும் படிப்பது நிச்சயம் இல்லையே) ஆனாலும் தலைப்புக்கும் பதிவுக்கும் தொடர்பு உண்டு.

எல்லாம் நல்ல எண்ணதோடுதான் நமது அரசு குடும்ப அட்டை தர முனைப்போடு செயல்பட்டது. முதன் முறை வழக்கம்போல் பெயர் கன்னாபின்னாவென்று வந்தது; மாற்றித்தர அலைந்தேன்; ஒரு மாதம் கழித்து மாற்றித்தர நான் கொடுத்த அட்டையை அவர்கள் தொலைத்துவிட்டது தெரிந்தது. இப்போது ஏழெட்டு மாதங்களுக்கு முன்பு மறுபடியும் கேட்ட விவரங்களுக்கு நல்ல கையெழுத்தில் திருத்தமாக ஒரு விண்ணப்பம் எழுதிக் கொடுத்தேன். மூன்று மாதங்களுக்கு முன்பு அட்டை வந்தது. இப்போ நிலைமை முன்பைவிட ரொம்ப மோசமா ஆயிடுச்சு. எதுவுமே சரியாக இல்லை. முகவரியில் வீட்டு எண் கிடையாது. எங்கள் பகுதிக்கு நாங்கள் வைத்த புதிய பெயர் இடம்பெறவேயில்லை. முகவரிச்சான்றிதழாகப் பயன்படுத்தவே குடும்ப அட்டைக்கு இத்தனை முயற்சி. அதுவே இல்லை என்றதுமே 'சே' என்றாகிவிட்டது. சரி அதுதான் போச்சு மற்றதாவது சரியா என்று பார்த்தால் என் பெயர் எனக்கே அடையாளம் தெரியாதவாறு மாறியிருந்தது. அநேகமாக, ஏதோ பால்கன் மொழி தெரிந்த யாரோ டைப் செய்து இருக்கவேண்டும்.

ஆனால், அடுத்த விஷயம்தான் நம் தலைப்புக்குரியது. நிஜமாகவே நான் பாவம் போல் ஒரே ஒரு மனைவியோடுதான் 32 வருஷமாகக் குடித்தனம் பண்ணிக்கொண்டிருக்கிறேன். (எப்படி என்பதெல்லாம் பெரிய குடும்ப ரகசியம்!) ஆனால் இப்போது என் குடும்ப அட்டையைப் பார்த்தால் - ஒன்றுக்கு ஒன்று இனாம், ஆடிக்கழிவு என்றெல்லாம் கொடுப்பதுபோல - அரசாங்கமே எனக்கு இரண்டு மனைவிகள் கொடுத்திருந்தது. என்ன, இரண்டு பேருக்கும் ஒரே வயது; (ஒருவருக்காவது கொஞ்சம் சின்ன வயசா போட்டிருந்திருக்கலாம். காலம் போன காலத்தில் ஒரு ஆசைதான்!) இரண்டு பேருமே என்னோடுதான் இருக்கிறார்களாம்.

விஷயம் என்னென்னா, நீளமான என் மனைவியின் பெயரை இரண்டாக உடைத்து தனித்தனியாக இரண்டு ஆளாக மாற்றிவிட்டிருந்தார்கள். அரைஞாண் கயிற்றில் கஞ்சா வைத்திருந்ததாக நமது போலீஸ் கேஸ் எல்லாம் போடுமே அதே மாதிரி என் குடும்ப அட்டையைச் சான்றாக வைத்து என் மீது இரண்டுதாரத் தடைச்சட்டத்தை மீறியதாக ஏதாவது கேஸ் ஏதும் வந்துவிடுமோ என்று பயமாகத்தான் இருக்கிறது. அந்த பயத்தில் மறுபடியும் கொஞ்சம் அலைந்தேன். நான் நானேதான் என்று சான்றிதழ் ஒன்று V.A.O.விடம் வாங்கித்தரவேண்டுமாம். அட, போங்கப்பா நீங்களும் உங்கள் அட்டையும் என்று விட்டுவிட்டேன்.

ஆனாலும் அந்த bigamy case கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது. குடும்ப அட்டைதான் இப்படி என்றால் என் தேர்தல் அடையாள அட்டை இதைவிடக் கொடுமை.

அது சரி, நம் PAN card, credit card, driving licence இவையில் எல்லாம் தவறில்லாமல் விவரங்கள் தரப்படும்போது நமது குடும்ப அட்டைகள் ஏன் இந்த அளவு தரம் குறைந்து தயாரிக்கப்படுகின்றன? கொஞ்சம் விசாரித்தேன். அட்டைகள் டைப் செய்ய தற்காலிக வேலையாட்களை நியமிக்க அரசு தலைக்கு ரூ. 3500 கொடுப்பதாகவும், ஆனால் 1500ரூ-க்கு ஆட்களைப் போட்டு ஏனோதானோ என்று வேலை நடப்பதாகவும் கண்டுகொள்ள யாருமில்லையென்றும் கேள்வி.

ஏங்க அப்படித்தானோ.........?

Monday, July 11, 2005

29. சுய பட்டமளிப்பு...

நெப்போலியன் தன் மகுடத்தைத் தன் கையாலேயே சூட்டிக்கொள்ள முடிவெடுத்து அதை நடத்தியும் காட்டியதாக வரலாறு. மீண்டும் ஒரு நெப்போலியன் நம் வலைத்தளத்தில்... இன்று, இங்கு, இப்போது.


இதுவரை யாருமே 1945-க்கு முன்பே பிறந்ததாக சொல்லாததாலும்,
யாம் பார்த்தவரையில் நம் கண்ணுக்கெட்டிய தூரம் யாரும் அப்படி இல்லாததாலும்,
எம் உள்ளுணர்வு கூறுவதாலும்,
என் அண்ணன் 45க்கு முந்தியவர் என்றும்,
அப்பா-அம்மா 45க்கு முந்தியவர்களென்றும்,
பல்வேறு முனைகளிலிருந்தும் எமக்குப் போட்டிக்கு ஆட்கள் கொண்டுவருவதற்குப் பலரும் முனனப்போடு இருப்பதாலும்,
காலம் மிகவும் கடந்து செல்வதாலும் -


யாம் இந்த முடிவுக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.


இதனால் இவ்வலைத்தளத்தில் உள்ள அனைவரும் அறிய வேண்டியது:
'தருமி'யாகிய யாம் இவ்வலைத்தளத்தின் "மூத்த குடிமகன்" என்ற பட்டத்தினை எமக்கு நாமே சூட்டிக்கொள்கிறோம். ஏனெனில், யாம் பிறந்தது : 23.12.1944பி.கு. இதுவரை 45க்கு முந்தி பிறந்ததாகத் தம்மை இதுவரை அறிவித்துக்கொள்ளாதவர்கள் இனிமேலும் அப்படியே இருக்கக் கடவர்.


பிகுவிற்குப் பிகு: அடுத்ததாக முகத்திரையுடன் நுழைந்ததற்கான காரணத்தையும்கூறி, எமது முகத்திரையையும் களைவதாக - ஒரு நீண்ட கட்டுரை மூலமாக - திட்டம்.

Thursday, July 07, 2005

28. ஒரு அவசரச் சுற்றறிக்கை.

வலைஞர்களே,

உங்களில் யாரேனும் 1945-க்கு முன்பு பிறந்திருந்தால் உடனே எமக்குத் தெரிவிக்கவும். இல்லையேல், எம்மைப் பிறகு குறை சொல்லக்கூடாது!!

27. விடயம் பற்றிய விஷயம்

ஒரு விஷயம் நம் பதிவுலகத்தில் அதிகமாகக் காணப்படுகிறது. நிறையபேர் 'விஷயம்' என்று எழுதுவதில்லை; 'விடயம்' என்றே எழுதுகிறார்கள். இந்த விடயத்தின் தாத்பரியம் அதாவது பொருள் எனக்குப் புலப்படவில்லை. இது தமிழ் ஆர்வத்தினால் வந்த விடயமா, அல்லது விடயத்திற்குச் சரியான தமிழ் சொல் கிடைக்காத விடயமா? விடயம் எதுவாக இருந்தாலும் ஒன்று அந்த வடமொழி எழுத்தோடேயே அந்த விடயத்தை எழுதிவிடலாமே; இல்லை 'சேதி' என்றோ வேறு சொல் கொண்டோ அந்த விடயத்தை எழுதலாமே. Somehow 'விடயம்' sounds so odd to me -தமிழும் இல்லாமல், வடமொழியாகவும் இல்லாமல்.

சரி..சரி இந்த விடயத்தை இதோடு நான் விட்டுவிடுகிறேன்; அப்ப நீங்க....

26. வருத்தமும்...வரவேற்பும்

சிலர் திடீரென்று பதிவுகளிலிருந்து விலகுவது கஷ்டமாக இருக்கிறது. மொத்தமே நாம் 624 என்று தமிழ்மணம் கூறுகிறது. 624 பேர் இருக்கும் நம் உலகத்தில் 624 அல்லது அதுக்கும் மேலே கருத்துக்கள் இருக்கட்டுமே, என்ன கெட்டுப்போகப்போகிறது. அவரவர் கருத்து அவரவர்க்கு என்று இருந்துவிட்டுப் போகட்டுமே.

வேறு எதற்காக என்று இல்லாவிட்டாலும், இந்த 'தமிழ்மணத்'திற்காக தங்கள் திறமை, நேரம், பணம் (வெறும் பிட்சா வாங்கும் அளவான காசாகவே இருந்தாலும்) இவற்றை செலவழித்த நல்ல மனங்களுக்காகவாவது நாம் இந்த 'உலகத்தை'க் மேலும் மேலும் கட்டிக் காத்துவரவேண்டும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள். போனவர்கள்கூட -even to maintain a low profile, if they feel and want it so - திரும்பி 'தாய்க்கழக'த்திற்கு நம் கழகக்கண்மணிகளாய் வரவேண்டும். Please...

25. 'இவர்களும்'...'அவர்களும்'

எனது சில அனுமானங்களுடன் (premises) இதை எழுத ஆரம்பிக்கிறேன். தவறுகள் இருப்பின் தட்டிக்கேட்க முதுகைத் தயாராக வைத்துள்ளேன்.


அனுமானம் 1: தலித்துகள் பற்றியும் அவர்களுக்குச் சார்பாகவும் எழுதுபவர்கள் எல்லோரும் தலித்துகளாக இருக்க வேண்டியதில்லை; அவ்வாறு எழுதுபவர்களில் பலர் தலித்துகளின் வாழ்க்கை நிலையினைப்பார்த்து அவர்களுக்குக் கிடைக்கவேண்டிய நியாயமான விஷயங்களுக்காக, ஏற்படவேண்டிய சமூகமாற்றங்களுக்காகத் தன்னளவில் முயற்சிப்பவர்கள். ஆதிக்கசாதியாக இருந்து வந்த, இன்னும் இருந்துவந்து கொண்டிருக்கும் பிராமண ஜாதியின் மீது இதனால் ஏற்பட்ட காழ்ப்புணர்வுகள், துவேஷம் இன்னும் இருப்பதால் தலித்துகளைத் தன்னிலைப்படுத்தி எழுதுகிறார்கள். எனது இந்த கட்டுரையில் அடிக்கடிப் பயன்படப்போகும் - தலித்துகள் & தலித்துகளின் சப்போர்ட்டர்கள் என்பவர்களை 'இவர்கள்' என்ற சொல்லால் குறிப்பிடப்போகிறேன்.


அனுமானம் 2: தலித்துகளுக்காக மற்றவர்களும் வருவதுபோலன்றி, பிராமணர்களுக்கு வெளியிலிருந்து யாரும் வருவதில்லை. இந்த பிரிவினரை 'அவர்கள்' என்று சுட்டப்போகிறேன்.


விஷயத்துக்கு வருவோம்...


நான் வலைப்பதிவனாக வந்து வெகு நாட்கள் ஆகிவிடவில்லை. ஆனாலும் ஒரு விஷயம் சுருக்கென்று தைக்கிறது. அது நான் வெளி உலகத்தில் சந்திக்காத, அல்லது ஒருவேளை நான் மேம்போக்காக காணாமல் விட்டுவிட்ட ஒரு காரியம். 'இவர்களு'க்கும், 'அவர்களு'க்கும் இங்கு இந்த எலக்ட்ரானிக் உலகத்துக்குள் இருக்கும் இந்த அடிபிடி சண்டை. வெளியில் எங்கும் 'இவர்களு'க்கும், 'அவர்களு'க்கும் நேரடியாக எந்தப் போராட்டமும் இல்லை. பின் ஏன் இங்கு இந்த சண்டை?


வெளியில் 'இவர்களுக்கு' தென்தமிழகத்தில் தேவர்களுடனும், வடக்கே வன்னியர்களுடன் போராட்டம்; இதற்குக் காரணம் கண்டுபிடிப்பது அப்படி ஒன்றும் கஷ்டமில்லை. எப்போதுமே ஓட்டப்பந்தயத்தில் போட்டியின் கடுமை அடுத்தடுத்து ஓடுபவர்களுக்கு நடுவில்தான். தன்னைவிட தாழ்ந்தேயிருந்த 'இவர்கள்' தங்களைத் தாண்டிவிடுவார்களோ, தாண்டுகிறார்களோ, தாண்டிவிட்டார்களோ என்ற அச்சம் காரணமாகவே இந்தப் போராட்டம். Hierarchy-ல் அடுத்தடுத்த நிலையில் உள்ளோருக்குள் ஏற்படும் பொறாமையின் விளைவே இது. ஆரோக்கியமான போட்டியாக இல்லாமல், 'ஆளுமை' சார்ந்த விஷயமாக இது இருப்பதற்கு ஆண்டாண்டு காலமாய் இருந்துவந்துகொண்டிருக்கும் நமது சாதி அமைப்புகளே காரணம். சாதிகள் அழிவதற்கோ, சாதிகளின் ஆளுமைகள் குறைவதற்கோகூட எந்த அறிகுறிகளும் இல்லாத இந்த சூழலில் இந்த பகைமைகள், போராட்டங்கள் 'இவர்களின்' முன்னேற்றத்திற்கு முன் நிற்கும் பெருந்தடைகளே. ஆனாலும் தாண்டியேயாக வேண்டும். தாண்டிக்கொண்டும் இருக்கிறார்கள்.


மேல்சாதியாக இருந்துவருபவர்களைக் கண்டு மற்ற எல்லோருக்குமே ஒரு துவேஷம் உண்டாவது இயற்கையே. ஏனெனில், சிறுபான்மையராக இருந்தும் பார்க்குமிடமெல்லம் - அரசாங்க உயர் பதவிகள், நீதித்துறை, அரசியல், மீடியா (இதைப்பற்றியே தனியாக ஒரு புத்தகமே எழுதலாம்; ஹார்லிக்ஸிலிருந்து ஹார்ப்பிக் வரை, காம்பிளானிலிருந்து குங்குமம் வரை எதிலும் வரும் மாடல்கள், அறிவிப்பாளர்கள், என்று எங்கெங்கு நோக்கினும் 'அவர்களே')எங்கும் எதிலும் நீக்கமற நிறைந்து இருப்பதைப் பார்க்கும்போது எரிச்சல்தான். ஒரு 20 ஆண்டுகளுக்கு முன்புவரை இந்த உயர்வுக்குச் சொல்லப்பட்ட காரணம்: "brahminic supremacy". பிறந்த சாதியே இதற்கெல்லாம் காரணம் என்று 'அவர்கள்' சொல்லிக்கொண்டிருந்தது சமூகத்தில் விற்பனையானது. ஆனால், அந்த "myth" உடைக்கப்பட்டது; உடைந்தது. எந்தவிதத்திலும் அவர்களுக்கு மற்ற எல்லோருமே சளைத்தவர்கள் இல்லை என்பதை நிறுவியாகிவிட்டது. இன்று வலைப்பதிவாளர்களின் எண்ணிக்கையிலிருந்தே இது தெரியவரும். இந்த உண்மையை அவர்களே ஒப்புக்கொள்வார்கள். ஆனாலும் 'அவர்களில்' எல்லோருமே இதை முழுமனதோடு ஒப்புக்கொள்வார்களா மாட்டார்களா என்பதோ, ஒப்புக்கொள்பவர்கள் அதை சந்தோஷமாக ஒப்புக்கொள்கிறார்களா இல்லையா என்பதோ முக்கியமில்லை. நிதர்சனங்களே நமக்கு முக்கியம். அவர்களின் ஒப்புதல் தேவையுமில்லை. சொல்லப்போனால், 'இவர்கள்' பல துறைகளில், முக்கியமாக கலைத்துறைகளில் - எழுத்து,கவிதை,இசை,கலை,...என்று பலவற்றில் - 'அவர்களைத்' தாண்டியாகிவிட்டது. ஆடுவது 'அவர்கள்'; ஆட்டுவிப்பது 'இவர்கள்' என்பதுதான் நிலை. அவர்களது மன மாச்சரியங்களைப் பற்றி யாருக்குக் கவலை. மனத்துக்குள் வைத்து அவர்களில் சிலரோ பலரோ மருவிக்கொண்டிருக்கட்டுமே, நமக்கு என்ன? உள்ளே வந்து விழுந்து தொல்லைகொடுக்காமல் இருந்தால் சரி. அப்படியே தொல்லை தர வந்தாலும் அதைப் புறத்தே தள்ளி "போங்கடா ஜாட்டான்களா" ( ஒரு பதிவில் இதை வாசித்ததால் இங்கு அதைப் பயன்படுத்துகிறேன்) என்று முன்னேறவேண்டும்.'இவர்கள்' முன்னே இருக்கும்
சவால்கள் -

உயர வேண்டும் என்ற வெறி;
உயர்த்த வேண்டும் என்ற வேள்வி.