Wednesday, May 20, 2015

839. தமிழ் ஐயாவும் ஆங்கில சாரும் .... (தருமி பக்கம் 28)









*







கணக்கில் ஆரம்பிச்ச sliding மற்ற பாடத்தையும் தொத்திக் கொண்டதோ? ஏறக்குறைய அப்படித்தான். ஆனாலும் கணக்கு போன இடத்தில் கொஞ்சம் ஆங்கிலமும், நிறைய தமிழும் இடம் பிடித்தன என்று நினைக்கிறேன். அதனால் தான் அதைக் கற்பித்த ஆசிரியர்கள் இன்னும் மனதில் இடம் போட்டு உட்கார்ந்திருக்கிறார்கள். ஏனெனில், மறக்க முடியாத ஆசிரியர்கள் என்று ஆரம்பித்தால் தமிழ் ஐயா கந்தசாமிப் புலவர் அவர்களும், ஆங்கிலத்தில் நடித்துக் கொண்டே பாடம் நடத்தும் ராஜூ சாரும் மனதிற்குள் வந்து விடுவார்கள்.

அதிலும் கந்தசாமிப் புலவர் பாடம் நடத்துவது இப்போதும் அப்படியே நினைவில் இருக்கிறது. நான் முதல் பெஞ்சில் நடுவில் உட்கார்ந்திருப்பேன். ஐயா வந்தவுடன் மேடையிலிருக்கும் நாற்காலி எங்கள் பெஞ்சுக்கு முன்னால் வந்து விடும். ஐயா அந்தக் காலத்து ஸ்டைலான வேட்டி, கோட்டில் வருவார். தோளில் ஒரு துண்டு. சிறிது கனத்த உருவம். வட்டமான முகம். எப்போதும் கண்களும் வாயும் சிரித்துக் கொண்டேயிருக்கும். நாற்காலியில் உட்கார்ந்ததும் வலது காலை இடது முழங்காலில் மேல் போட்டுக் கொள்வார். பக்கத்தில் இருந்ததாலோ என்னவோ நன்றாக நினைவில் இருக்கிறது --- வலது காலின் கீழ்ப்புறத்தில் நமக்கு இருக்குமே அது போல் பாதம் வளைந்திருக்காது. ஏறத்தாழ பாதத்தின் நடுப்பாகம் வளையாமல் almost நேராக இருக்கும். இடது கையில் புத்தகம் இருக்கும். இடது முழங்கை நாற்காலியின் கைப்பிடியில் ஊன்றியிருக்கும். பாடம் நடத்தும் போது வலது கை விரல்கள் வலது பாதத்தின் அந்த மேடான இடைப் பகுதியை வருடிக் கொண்டிருக்கும். ஏதோ வீணை வாசிப்பது போல் அந்த விரல்கள் அந்த இடத்தை வருடி விட்டுக் கொண்டிருக்கும்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் வடக்கு ஆடி வீதியில் உள்ள திருவள்ளுவர் மன்றத்தின் தலைவராக இருந்தார் என்று நினைவு. பள்ளி முடித்த பல ஆண்டுகள் வரை கோவிலுக்குள் நுழைந்தால், வடக்கு வீதியும், திருவள்ளுவர் மன்றமும், ஐயாவும் கட்டாயம் நினைவுக்கு வருவார்கள்.

அவர் பாடம் நடத்துவதே ஒரு அழகு. அதுவும் செய்யுள்களை நடத்துவது மிக அழகாக இருக்கும். ஒரு பாடலை எடுத்துக் கொண்டால் முதலில் சாதாரணமாக வாசிப்பார். ஏதும் புரியாது. இரண்டாம் முறை சீரோடு வாசிப்பார். தடுமாறுவோம். மூன்றாவதாக சீர் தளை பிரித்து சொற்களைப் பிரித்து, அழகாக மெல்ல .. மெல்ல வாசிப்பார். கடினமான சொற்களைத் தவிர்த்து, செய்யுள் புரிந்து விடும். பின் கடினச் சொற்களுக்குவருவார். அதையும் சொல்லிவிட்டு மீண்டும் மெல்ல மெல்ல பிரித்து வாசிப்பார். தமிழ் வகுப்பின் மீது ஆசைப்பட வைத்த ஆசிரியர்.

ஐயா யாரையும் திட்டியதாக நினைவில்லை. அவர் வகுப்பில் யாரையும் அதட்டுவதுமில்லை; குரலை உயர்த்துவதுமில்லை. ஆனால் வகுப்பு சீராக நடக்கும். வழக்கமாக தமிழ் வகுப்பு என்றால் மாணவர்கள் ஆடுவது வழக்கம் தான். ஐயா வகுப்பில் அப்படியேதும் நடக்காது. ஆச்சரியம் தான். கல்லூரிக்குப் போன் பின்பும் வாய்ப்பு கிடைக்கும் போது அவரைப் போய் பார்ப்பது ஒரு வழக்கம்.

 ராஜு சார். ஆங்கில ஆசிரியர். அதனால் தானோ என்னவோ மிக அழகாக உடை உடுத்துவார். அதுவும் அந்தக் காலத்தில் வெள்ளை சட்டை; வெள்ளை பேண்ட்; கருப்பு ஷூ. ட்ரிம்மாக வருவார். இவரும் பொதுவாக உட்கார்ந்து தான் வகுப்பு நடத்துவார்.(நான் ஆசிரியனாக ஆன பிறகு நாற்காலியில் உட்கார்ந்து பாடம் எடுப்பதை வெறுத்தவன். நகரணும்; நடக்கணும்; மேடையிலிருந்து இறங்கி வகுப்புக்குள் நுழைந்து வரணும்; உட்கார்ந்தால் மேசை மேல் உட்காரணும் என்ற விதி எனக்கு நானே எழுதிக் கொண்டது.) ஆனாலும் ராஜூ சார் உட்கார்ந்தது அப்போது வித்தியாசமாகத் தெரியவில்லை. பாடம் நடத்தும் போது அவரும் ஒரு நடிகராகி விடுவார்.

Merchant of Venice கதை சொன்னது இன்னும் நினைவில் இருக்கிறது. எந்த சீன் என்று நினைவில்லை. ஒரு வேளை குமாரசாமி ...ஓ.. மன்னிக்கவும் ... நீதியரசர் அந்தக் கதையில் தீர்ப்பு சொல்வாரே ... அப்போது சார் தன் ஷூ காலை மேடையில் தேய்த்துக் கொண்டே ஒரு வசனம் சொன்னார். வகுப்பே நிமிர்ந்தது. ஸ்டைல் வாத்தியார். ஆள் பாதி; ஆடை பாதி என்பது போல் சார் தன் உடை, நடை, நடிப்பு எல்லாவற்றையும் சேர்த்து ஒரு கலவையாகப் பாடம் சொல்லித் தந்தார்.

இவர்களின் பாதிப்பு என்னிடம் நிச்சயம் இருந்தது.

 அடடா ... கணக்குப் பாடத்தில் புலியாக இருந்த நான் எப்படி புளியாகிப் போனேன் என்றல்லவா சொல்லிக் கொண்டிருந்தேன். மறந்தே போச்சே... digression ...என் ஆசிரியர் பணியிலும் இந்த digression எனக்கு நிறைய இருந்தது.

சரி...மீண்டும் கணக்கிற்கு வருவோமா ....?




*

படங்கள்;இணையம்

Sunday, May 17, 2015

838. ஒரு கதை தான் .. வெறும் கற்பனைக் கதை தான் !










*




முதல் முதல்ல எழுதின சில புதினங்கள் மூலமாகவோ, வேறு சில நூல்கள் மூலமாகவோ சில புது ஆசிரியர்கள் பரிசு, புகழ், பட்டம் எல்லாம் வாங்குகிறார்களே அது எப்படி என்று ஒரு ஆராய்ச்சி செய்தேன். எப்படி முதல் புத்தகத்தைப் பதிவிடுவது என்று கூட தெரியாமல் விழி பிதுங்கும் ஆளான நான், என்ன செய்தால் புத்தகத்தை ‘அடுத்த தளத்திற்கு’ எடுத்துப் போவது என்று தெரிந்து கொள்ளும் ஆவலுடன் ‘சுற்றும் முற்றும்’ பார்த்தேன். நல்ல ஒரு ஏஜெண்ட் கிடைத்தால் இதெல்லாம் சாத்தியம் என்றார்கள்.

அப்படி ஒரு ஏஜெண்டைத் தேடிப் பிடித்தேன். என்னிடம் ஒரு புதிய நாவலுக்கான ஒரு விஷயம் இருக்கிறது; எழுதினால் பதிப்பிட்டு அதை ‘உயரத்தில்’ வைக்க உதவுவீர்களா என்று கேட்டேன். அவர் உங்கள் கதையின் ’எலும்புக் கூட்டை’ அதாவது the skeleton of the storyயை எழுதிக் கொடுங்கள்; முடியுமா என்று பார்க்கிறேன் என்றார். நானும் இரவும் பகலுமாக உட்கார்ந்து அந்தக் கதையின் படிவத்தை எழுதிக் கொடுத்தேன். நீங்களும் படித்துப் பார்த்து ‘தேறுமா’ என்று சொல்லுங்கள். Skeleton என்பதால் ‘சதை’ இல்லாமல், வெறுமனே முக்கிய பாத்திரங்கள், அவர்களுக்குள் நடைபெறும் சில நிகழ்வுகள் மட்டும் எழுதியுள்ளேன். ஏஜெண்ட் சரின்னு சொல்லிட்டார்னா மீதியை சரி பண்ணிடலாம்னு நினைக்கிறேன்.


 ஒரே ஒரு ஊர்ல ஒரே ஒரு பள்ளிக்கூடம். அதில பன்னிரண்டாவது படிக்கிற ’ஆஜே’ என்கிறவனுக்குக் கீழே இன்னும் இரு பசங்க. அதில் ஒருத்தன் அப்போது பத்தாவது படித்துக் கொண்டிருக்கிறான். அவன் பெயர் ’சுமாரா காமி’. ஆஜேக்கு பக்கத்துத் தெருவில இவன் இருந்தான். அதுனால ஆஜேவுக்கு நல்லா தெரியும். படிக்கும் போது தன் பழைய புத்தகங்களை இவனுக்குக் கொடுக்கிறது வழக்கம். இன்னொரு ஜூனியர் ஆறாவது படிக்கிறான். அவன் பெயர் ‘கான்கு’. இன்னொருவன் பள்ளிக்கூடத்தில் படிக்காமல் ஒரு ஊர் சுற்றி. அவன் பெயர் ’கல்மான் ராஜா’.

படிக்கிற காலத்தில் இவர்களுக்குள் அவ்வளவு பழக்கமில்லை. வளர்ந்ததும் ‘விதி’ அவர்களை ஒருத்தருக்கு ஒருத்தர் என்று, பல கால கட்டங்களில் நெருங்குகிறார்கள். இவர்கள் பள்ளியில் படிப்பதாக முதல் அத்தியாயம். அதை முடித்ததும் அடுத்த அத்தியாயத்தில் அவங்க எல்லாம் பெருசா ஆய்ட்டாங்க. ஆஜே வண்டியில ஊர் சுத்திக்கிட்டு சாமான் அது இதுன்னு பலது சேல்ஸ் பண்றார். சுமாரா காமியும், கான்குவும் போலீஸா ஆயிடுராங்க. அதுவும் சீனியர் இல்லையா அதுனால சுமாரா காமி இன்ஸ்பெக்டர் ஆயிர்ரார்; கான்கு இன்னும் சப் இன்ஸ்பெக்டர் தான். கல்மான் ராஜா இன்னும் ஊர் சுத்துறதை விடலை. ஆனாலும் சும்மா சொல்லக் கூடாது. நல்லா வளர்ந்துட்டான். திரும்புற இடமெல்லாம் ஒரே கெத்து தான். பாலோயர்களும் நிறைய இருக்காங்க அவனுக்கு. அப்பப்ப சண்டை போட்டுக்கிட்டு இருப்பான். இருந்தும் பாலோயர்கள் அதையெல்லாம் கண்டுக்கிறதே இல்லை என்பது அவன் ராசி.

கல்மான் ராஜா ஒரு தடவை ரோட்ல போற ஒரு ஆட்டுக் குட்டியை தன் சைக்கிளில் அடிச்சித் தூக்கிட்டான். ஆளுக எல்லாம் ஓடி வந்துட்டாங்க. ‘சாமிக்குப் படைச்ச ஆடு; காசு கொடு’ன்னு விரட்ட ஆரம்பிச்சிட்டாங்க. என்னமோ ..அப்டி இப்டின்னான். அங்க இருந்து ஒரு போலீஸ் வந்தாரு. கல்மானுக்கு அவரை நம்ம சுமாரா காமி மூலமா கொஞ்சம் தெரியும். அவர வச்சிக்கிட்டு அந்தக் கூட்டத்திலிருந்து தப்பிச்சிட்டான். அவரை நல்லா கவனிச்சிக்கிட்டான். ஆனா அதுக்குப் பிறகு என்ன ஆச்சுன்னா …. இந்த தைரியத்தில அடுத்த வாரம் சும்மா டீக்கடையில் உக்காந்திட்டு இருந்த நாலஞ்சி பேரை பைக்கில போய் இடிச்சிட்டான். அதுல ஒருத்தரு அங்கேயே காலி. போலீஸ் கேசா ஆயிரிச்சி. காசுக்கு அவனுக்கு பஞ்சமா என்ன… காசு எல்லாம் கொடுத்து வெளிய வந்துட்டான்; அவன் பாலோயர்கள் எல்லோருக்கும் அப்படி ஒரு சந்தோஷம். வேட்டு போட்டு கொண்டாடுனாங்க.

இங்க இப்படி ஒரு செய்தின்னா …. ஆஜேக்கு இன்னும் ஒரு பெரிய பிரச்சனை. அது இதுன்னு வித்துக்கிட்டு இருக்கிற சேல்ஸ் மேன் இல்லியா? அதில முதல் ஏதும் இல்லாமலேயே ஒரு வியாபாரம் ஆரம்பிச்சி, அனியாயமா விலை போட்டு ஏதேதோ வித்து நிறைய காசு சேர்த்திருக்கான். வசதியா வந்துட்டான். ஆனாலும் அநியாய விலை போட்டு வியாபாரம் பண்ணிட்டான்னு அவன் மேல் கண்ணு வச்சாங்க. திடீர் வியாபாரம் …திடீர் பணம். ஒண்ணு கொடுத்தா ரெண்டு தர்ரேன்னு பிசினஸ் பண்ணுவாங்களே… அது மாதிரி. நல்ல சில்லறை.

ஆனால் கொஞ்ச நாள் கழிச்சி, சிலர் அவன் மேல் பிராதும் கொடுத்துட்டாங்க. கம்ப்ளெயிண்ட்டை எடுத்துட்டு போய் கான்கு விடம் கொடுத்துட்டாங்க. கான்கு நல்லா விசாரிச்சார். யார் யார் எவ்வளவு பணம் போட்டீங்க … என்ன ஆச்சு … ஏது ஆச்சுன்னு போட்டு நல்லா விசாரிச்சார். புதுசா வந்த சப் இன்ஸ்பெக்டர் வேறயா. நல்லபடியா இந்த கம்ப்ளெயிண்டை முடிக்கணும்னு நினச்சாரு. எல்லா கணக்கையும் போட்டுப் பார்த்தாரு. நல்லா அவருக்குத் தெரிஞ்சு போச்சு … இந்த ஆளு ஆஜே நல்லாவே ஆட்டை போட்டுருக்கான்னு. தப்பை சரி பண்ணனும்னு நினச்சார். ஆஜேயைக் கூப்பிட்டு ஒழுங்கு மரியாதையா எல்லாருக்கும் கொடுக்க வேண்டியதை கையிலிருக்கிற காசைக் கொடுத்து செட்டில் பண்ணுன்னு சொல்லிட்டு, அதோடு லாக் அப்லயும் உக்கார வச்சிட்டார்.

அப்போ வந்தார் நம்ம சுமாரா காமி. சப் இன்ஸ்பெக்டருக்கு மேலே இருக்காரா இல்லியா ..? அந்த ஜபர்தஸ்ஸை காண்பிக்க வேண்டாமா? அதோட, அவருக்கும் ஆஜேயுக்கும் நடுவில என்ன நடந்துச்சோன்னு தெரியலை. அந்தக் காலத்து தொடர்பை இப்போதும் continue பண்ணிட்டாங்க போலும். கேசு சுமாரா காமிட்ட போனதும் என்ன ஆச்சுன்னு தெரியலை. என்ன கச முசாவோ தெரியலை. ஆனா ஒண்ணு நடந்தது. கான்கு ராவும் பகலும் உட்கார்ந்து எல்லாத்தையும் படிச்சுப் பார்த்து பைசல் பண்ணினாரே அதே கேசை நம்ம ஆளு சுமாரா காமி சட்டு புட்டுன்னு முடிச்சிட்டார்.

என்னத்த பார்த்தாரோ எதைப் பார்த்தாரோ தெரியலை…. புதுசா ஒரு ரிசல்ட்டோடு வந்தார். ’எல்லாம் பார்த்தேன் …அப்படி ஒண்ணும் விசேஷமா இல்லை … எல்லாம் ஒரு ’ஏழரை’ விஷயம் தான். ஆஜே பண்ணுன பிசினஸ்ல ஒரு ஏழரை விகிதாச்சாரம் மட்டும் கொஞ்சம் விலகியிருக்கு. பிசினஸ்னா அப்படி முன்ன பின்ன தான் இருக்கும். இதுக்குப் போய் அவருக்கு எதுக்கு லாக் அப் எல்லாம்’ அப்டின்னு சொல்லி ஆஜேயை லாக் அப்பில் இருந்து வெளியே விட்டுட்டார். அதோடு வெறும் ஏழரைக்கு ஏன் இம்புட்டு இழுப்புன்னு நினச்சி, கேசும் இதோடு முடிஞ்சதாகச் சொல்லி, ஒரேயடியாக ‘மங்களம்’ பாடிட்டார்.


கேஸ் கொடுத்தவங்களுக்கு என்னென்னே புரியலை. அதுவும் பெரிய போலீஸ்காரர்…. அவரே எல்லாம் சரியா இருக்குன்னு சொல்லிட்டார் அப்டின்னு சோகமாய்ட்டாங்க. அந்த சோகத்தில சுமாராகாமி பற்றி கொஞ்சம் கோபமா கூட பேசினாங்க. அதுக்குக் கூட பார்ல உக்காந்துக்கிட்ட இருக்கிற ஒரு குரூப் ஆச்சு .. பூச்சுன்னாங்க. ஒருத்தர் கோவமா பதில் சொன்னாரு அதுக்கு. பார்ல இருக்கிறவங்க அங்க அவங்களுக்கு என்ன வேலையோ அதைப் பார்க்கணும். அதை விட்டுட்டு இங்கல்லாம் வால ஆட்டப்படாதுன்னு நியாயமா சொன்னார். அப்படி உங்களுக்கு இப்போ கோபம் வருதே அதே மாதிரி முன்பு கான்கு பத்திப் பேசும் போதும் பொத்துக்கிட்டு வந்திச்சான்னு இன்னொரு நியாயமான கேள்வியையும் எடுத்து உட்டார்.


இனிமே என்னன்னு தெரியலை. சுமாராகாமி இன்ஸ்பெக்டர்லா … அதுனால அவரை விட பெரிய போலிஸ்காரங்க யார்ட்டயாவது போகலாம்னு சிலர் நினைக்கிறாங்க.

இதுக்குள்ள ஆஜே பழைய பிசினஸ் எல்லாத்தையும் ஆரம்பிக்கப் போறதா சொல்றாங்க. என்ன நடக்கப் போகுதுன்னு தெரியலை. பொறுத்திருந்து பார்க்கணும்.


*****

இது தான் நம்ம கதை. ஏஜண்டிடம் கொடுக்கணும். ஏதாவது பரிசு கிடைக்குமான்னு பார்க்கணும்.


நீங்க சொல்லுங்க … இந்தக் கதை தேறுமா ….?





 *

Tuesday, May 12, 2015

837. என்னமோ ... ரெண்டு படம் போடணும்னு தோணிச்சி ...




ஏன் எதுக்குன்னு தெரியலை ... காலையில் செய்திகள்* எல்லாம் வாசிச்ச பிறகு கணினி திறந்த பிறகு பார்த்த இந்த இரு படங்களையும் எதுக்கோ இங்க பதியணும்னு பட்சி சொல்லிச்சி ....  அதான் பதிஞ்சிட்டேன்.





*  செய்திகள் எல்லாம் வாசிச்ச பிறகு ...அப்டின்னு எழுதிட்டேன். பல நாட்கள் கழித்து என்ன செய்தி ... எதுக்கு இதப் போட்டோம்னு .... ஒரு கேள்வி வரலாம். அதனால் இதை சொல்லிக்கிறேன்.

நேத்து மம்மி சொத்து வழக்கின் தீர்ப்பு வந்தது, வரலாறு ரொம்ப முக்கியம் மந்திரியாரே!

இரண்டாவது படத்துக்கு தலைப்பு அதிலேயே இருக்கு. முதல் படத்துக்கு தலைப்பு இல்லையே ... என்ன பெயர் வைக்கலாம் ...?   ம்ம் ...ம் .... ஆங்.... நம்ம நண்பர் ஒருத்தர் இருக்கார். அவர் பெயரை வச்சுக்கலாம் ... குமாரசாமி



Friday, May 08, 2015

836. UPGRADE MY CASTE




*



வழக்கமாக சாதிகளைப் பற்றிப் பேசும் போது உயர்ந்த ஜாதி, பிற்பட்ட ஜாதி, தாழ்ந்த ஜாதி என்றெல்லாம் சொல்லாமல் உயர்த்தப்பட்ட ஜாதி, பிற்படுத்தப்பட்ட ஜாதி, தாழ்த்தப்பட்ட ஜாதி என்று சொல்ல வேண்டுமென நாம் கருதுகிறோம். உண்மையில் நமக்குள் அப்படி உயர்வு தாழ்வு இல்லை ... உயர்த்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட என்பது தான் சரியென்று நினைக்கிறோம். ஆனால் இப்பதிவில் எது வேண்டாமென நினைக்கிறோமோ அதை வார்த்தைகளையே பயன்படுத்துவது என்று நினைக்கிறேன்.

எனக்கு உயர்ந்த ஜாதியினர் மேல் ஒரு பெரும் நல்ல எண்ணம் உண்டு. அந்த ஜாதியினரில் யாருமே எங்களை பிற்படுத்தப்பட்ட ஜாதியினராக மாற்று என்று கோஷம், கூட்டம், கூப்பாடு, போராட்டம் எதுவும் போடுவதில்லை. They are happy as they are. ஒரு உயர்ஜாதி ஆள் தன் ஜாதி பிற்படுத்தப்பட்ட ஜாதியாக மாறினால் பல சமூக பலன்கள் கிடைக்கும் என்றெல்லாம் எண்ணி அந்த மாற்றத்தை விரும்புவதில்லை. தங்கள் “கிரீடத்தை” தாங்களே சுமக்க வேண்டுமென்பதில் அவர்கள் தீவிரமாக இருக்கிறார்கள். பெரியார், அம்பேத்கார் மாதிரியான ஆட்கள் இவர்களை ‘வம்புக்கிழுக்கலாம்’. ஆனால் அவர்கள் வழுக்குவதே இல்லை. சமூகம் தந்த, அல்லது இவர்களால் சமூகம் தந்த உயர் நிலையை இறுகப் பிடித்து வைத்துள்ளார்கள். (ஆனாலும் உயர் ஜாதியினர் வேறு ஒரு வழியை அவ்வப்போது கையிலெடுப்பார்கள் - பொருளாதாரத்தின் வழியே இடப்பங்கீடு கொடுங்கள் என்றும் சொல்வதுண்டு. - அதை விட்டு விடுவோம்.)

ஆனால் ஏனைய ஜாதியினரைப் பாருங்கள். B.C.ஜாதிக்காரன் என்னை M.B.C. ஆக மாத்து என்று குரல் கொடுக்கிறான். M.B.C.காரன் என்னை S.C. ஆக மாத்து என்கிறான். S.T.க்கும் போட்டி. Christian B.C. என்னை S.C. ஆக மாத்து என்கிறான். ஆக பெரும் போட்டி என்னவென்றால் யார் வேகமாக கீழே போவது என்பது தான்.

வித்தியாசமாக இருக்கிறதல்லவா? வாழ்க்கையில் மேலே போக வேண்டும் என்று தான் நினைப்போம். ஆனால் இந்த விஷயத்தில் எல்லோரும் கீழே போக வேண்டும் என்றுதான் நினைக்கிறோம். ஏன் இது மாறக்கூடாது? எது நம்மை அது நோக்கிப் போகாமல் நம்மை நிறுத்தி வைத்துள்ளது? வெறும் இடப்பங்கீட்டிற்காக மட்டும் தான் நமது சாதி இன்னும் கீழ் நோக்கிப் பொக வேண்டும் என்று நினைக்கிறோமா? தெரியவில்லை.

ஆனால் இதையெல்லாம் மறந்து, விட்டு விட்டு, என் சாதி இன்னும் “உயர” வேண்டும் என்று நம்மில் யாராவது நினைக்க ஆரம்பித்தால் நன்றாக இருக்குமே என்று பலமுறை நினைத்தது உண்டு. என் சாதிக்காரர்கள் மத்தியில் அந்த எண்ண ம் எழுந்தால் என்ன என்று தோன்றியது. என் சாதிக்காரர்களை விடுங்கள் ... ஏன் நான் மட்டுமாவது அப்படி நினைக்கக்கூடாது என்று தோன்றியது. ஆஹா ... பொறி தட்டி விட்டது போல் இருந்தது.

ஏன் நம் சாதியில் முதல் குரலாக இதை ஒலிக்கக்கூடாது என்று தோன்றியது. அதன் பயன்  -- என் சாதியை சாதிய அட்டவணையில் உயரிடத்துக்கு மாற்றுங்கள். என் சாதியை O.C.அட்டவணைக்குள் உயர்த்துங்கள். 

ஆனால்  ஒரு வேளை  O.C . ஆட்களுக்கு இது பிடிக்காமல் போகலாமோ? இது எங்க ஏரியான்னு குரல் கொடுக்க மாட்டாங்கல்ல...?

முதல் குரல் ஒலித்தாகி விட்டது. உன் சாதி என்ன என்று யாரும் கேட்டால் ... இது என் பதில். நான் எந்த சாதிக்காரனாகவும் இருக்கட்டும். நீங்கள் உங்கள் சாதியை இதைப் போல் உயர்வாக்க ஏன் முதல் குரலை எழுப்பக் கூடாது? படிப்பும் அதனை ஒட்டிய உயர்வும் ஏற்பட இந்த எண்ணங்கள் நிச்சயம் உதவும். இது ஒரு பந்தயம் போல் ஒவ்வொரு ஜாதி மக்களுக்கும் ஏற்பட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

உயர்வோம் .. உயர்வோம் ... நம்மில் ஏற்றத்தாழ்வின்றி அனைவரும் உயர்வோம். உயர வேண்டும் என்று உழைப்போம்.



 ................... வெறும்  கனவாய் போய்விடுமோ  இது ...?



*








*

Monday, May 04, 2015

835. வாழு ... வாழவிடு ....!








*


என்னை பெரியார் வசீகரித்ததற்கான சில காரணங்களை இப்பதிவில் இட்டிருந்தேன். மிகவும் தாழ்த்தப்பட்ட மக்கள் இன்று ஓரளவாவது முன்னேறியிருப்பதும், கல்வியறிவில் முன்னேற்றம் கண்டிருப்பதும், பகுத்தறிவு என்ற ஒரு சொல்லை சரியாகவோ, தவறாகவோ மக்களிடம் எடுத்துச் சென்றவர் என்பதுவும் அவர் மேல் வைத்துள்ள மரியாதைக்குக் காரணங்களாக இருக்கின்றன.

நிச்சயமாக அடித்தட்டு மக்களுக்கு விழிப்புணர்வு வருவதற்குப் பெரிய காரண கர்த்தா என்பதில் எனக்கு ஐயமேதுமில்லை. சாதியக் கட்டுப்பாட்டில் உச்சாணிக்கொப்பில் இருந்து கொண்டு சமுதாய நடைமுறைகளைத் தங்கள் கைக்குள் பலகாலம் பிராமணர்கள் வைத்திருந்தார்கள் என்பதில் கேள்வி என்பதற்கே இடமில்லை. இதை முதன் முறையாக ஒரு கேள்வியாக, ஒரு போராட்டத்தின் முதல் புள்ளியாக அவர் இருந்தார் என்பதை மறுப்பதற்கில்லை.

பிராமணீயம் என்றொரு புதுச்சொல்லும் இப்போது நமது சமூகக் கோட்பாடுகளிடையே வந்துள்ளது. சாதிகளின் படியடுக்குகளை ஒட்டி இச்சொல் எழுந்துள்ளது. சாதியில் மேலிருந்தால் கீழே இருப்பவன் தலை மீது தன் காலை வைத்து அழுத்துவதும், கீழேயிருந்தால் மேலேயிருப்பவனின் காலைத் தன் தலையில் வைத்து சுமப்பதும் ஒரு கலையாகவே வளர்ந்து விட்டது. இந்தக் கலைக்கு பிராமணீயம் என்ற பெயர் பொருத்தமாக அமைந்து விட்டது. இதனை இப்போது தலை மீது வைத்து ஆடுவது புதிய சத்திரியர்கள் என்பது நடைமுறையில் நாம் நித்தமும் காணும் சோகச் செய்தி.

ஆயிரம் இருந்தாலும் நானும் ஒரு பிராமணனாகப் பிறந்திருந்தால் இன்னேரம் பெரியார் என்ற பெயரே எனக்குக் கசந்திருக்கும். பிராமணீயம் என்ற சொல் என் சாதியை வைத்து வந்த ஒரு கெட்ட சொல்லாக இருந்திருக்கும். ‘தனக்கு வந்தால் தான் தெரியும் தலைவலி’ என்பது பொது உண்மை தானே. ஆனாலும் அதற்காக இல்லாதததையும் பொல்லாதததையும் சொல்லியிருப்பேனா என்று தெரியவில்லை.



 *******



தமிழ் பிராமணர்களின் ஆழ்ந்த வேதனை: வாழு … வாழ விடு  என்ற தலைப்பில் டைம்ஸ் ஆப் இந்தியா என்ற தினசரியில் பதிவர் பத்ரியின் கட்டுரை ஒன்று வெளி வந்துள்ளது.  அதிலிருந்து சில வரிகள் …. (அவர்  வரிகள் சிகப்பில். பதிலாக என் வரிகள் நீலத்தில்.)

1. ஒரு காலத்தில் சாதிய அடுக்கு முறைகளில் பிராமணர்கள் ஒரு வேளை உயர்ந்த இடத்தில் இருந்திருக்கலாம்.  ஒரு வேளையில் அல்ல; நிச்சயமாகவே அப்படித்தான்! இதில் யாருக்கு என்ன சந்தேகம்?

2. ஆனால் உண்மையில் அவர்கள் எந்த அதிகாரமும் இல்லாமல் இருந்துள்ளனர். – அடப் பாவமே ...இது கொஞ்சம் ”அதிகமாக” தெரிகிறதே. உண்மைக்கு மிகவும் புறம்பான கருத்து.

3. சுதந்திரத்திற்கு முந்திய மெட்ராஸ் ராஜதானியில் தமிழ், தெலுகு பிராமணர்கள் அதிகமான  பொறுப்புகளில், தங்கள் எண்ணிக்கையையும் மீறி இருந்திருக்கிறார்கள். ஒத்துக் கொண்டமைக்கு வாழ்த்துகள். ஆனால் அன்று மட்டும் அல்ல.இன்றும் இடப்பங்கீட்டால் உயர்சாதி மக்களின் விழுக்காடுகள் விழுந்து விடவில்லை. நிலைத்தே நிற்கிறீர்கள்.

//அன்று பிராமணர்கள் நிறைய பேர் ஆசிரியர், பேராசிரியராக இருந்தார்கள். இன்று அந்த நிலை மாறி விட்டது.//  நிஜம் தான். ஏனெனில் என் போன்றவர்களும் படித்து அந்த வேலைகளுக்கு வரும் அளவிற்கு நிலைமை மாறிவிட்டது. What is good for the gander need not be good for the goose. இல்லையா? 

மேற்கூறியவற்றை டைம்ஸ் ஆப் இந்தியாவில் எழுதி விட்டு, இதன் தொடர்பாக  இரு பார்ப்பனர்களின் பூணூலை அறுத்தெறிந்த ஒரு சம்பவம் பற்றியும் பத்ரி தன் பதிவில் எழுதியுள்ளார். ”வெறுப்புக் குற்றம்: பூணூல் அறுத்தலைத் தொடர்ந்து” என்ற தலைப்பில் எழுதியுள்ளார். நிஜமான கோபத்துடன் எழுதியிருக்கிறார்.

சரி தான்.... நானும் ஒரு பார்ப்பனனாக இருந்திருந்தால் இதைவிடக் கடுமையாக எழுதியிருந்திருப்பேன்.

ஆனாலும் every coin has two sides என்று சொல்வார்களே அது தான் இங்கேயும்.  ”ஒரு குற்றத்தின் மீது இரு வேறு பார்வைகள்’ என்று நிற்கிறது. .

//தமிழகத்தில் பொதுவெறுப்பின் அடிப்படையில் மிகப்பெரிய பாதிப்பைச் சந்திப்பது தலித்துகள்தான். சாதி மத பேதமின்றி அனைவரும் ஒன்றுசேர்ந்து மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் தலித்துகளைத் தாக்குகின்றனர். தலித் மாணவர்களைக் கொண்டு பள்ளிக்கூடக் கழிப்பறையைச் சுத்தம் செய்ய வைத்ததற்காக கீழப்பத்தை பண்டிதன்குறிச்சி கிராமத்தின் ஒரு பள்ளியில் “தாளாளர் சாலமன் ஜெபா, அவரது மனைவியும் தலைமையாசிரியருமான ஜெயக்குமாரி, ஆசிரியர்கள் ஹெலன் அருள் எமிமாள், மேரி சுஜித்ரா, ஏஞ்சலின் ஸ்டெபி, ஜேக்கப், ஆக்னஸ், சரோஜா” ஆகியோர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.//

 அழகாக பத்ரி எழுதியுள்ளார். இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுமைக்கும் இப்படிதான் நடந்து வருகிறது. தலித்துகளின் மீது நடக்கும் தவறுகள் ஆயிரம் ..ஆயிரம். அதன் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டியவர்களோ பிராமணீயத்தின் மூலம் புதிதாக முளைத்துள்ள “புது சத்திரியர்கள்”. ஆனால் அவர்கள் கைகள் தலித்துக்கு ஆதரவாக எப்போதும் நீள்வதேயில்லை. இதை அழகாகப் படம் பிடித்துள்ளார் பத்ரி.

ஆனால் அதோடு ..//சென்னையில் இரு பார்ப்பனர்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதலும் அதே வகையின்கீழ் வரும். இவற்றை அனைத்து மக்களும் கடுமையாக எதிர்க்கவேண்டும். நமக்கென்ன என்று எதிர்க்கத் தவறினால், நாம் சமதர்ம சமுதாயம் ஒன்றை உருவாக்கத் தவறிவிடுவோம்.// என்றும் பொதுநலச் சிந்தனையோடு எழுதியுள்ளார்.

இது எனக்குக் கொஞ்சம் வேடிக்கையாக இருந்தது. தலித்துகளுக்கு எதிர்த்து நடக்கும் முறை கேடுகள் மிகவும் அதிகம்; மிகவும் கொடூரமானவைகள். இதனோடு பூணூலை இருவருக்கு அறுத்ததைச் சோடி சேர்ப்பது மலைக்கும் மடுவிற்கும் உள்ள ஒற்றுமை தான். தலித் பற்றி ‘பாவமாக’ ஏதும் சொல்லி , தன் அக்கறையைக் காண்பித்து விட்டு, தன்கட்சியை முன்னிறுத்தினால் நன்கு எடுபடும் என்பது அவரின் நோக்கமாக இருக்கலாம். அது மட்டுமைல்ல.

பூணூலை அறுத்ததற்கு பத்ரி தரும் காரணம் சரியா என்றும் தெரியவில்லை. ஏனெனில் பத்ரியின் பதிவில் பால சுந்தர வினாயகம், வெ. ஜெயகணபதி, Gujaal என்பவர்கள் தங்கள் பின்னூட்டத்தில் இந்த நிகழ்ச்சிக்கான காரணத்தை எழுதியுள்ளார்கள்.

தெருவிலிருந்த ஒரு பிள்ளையார் சிலைக்கு பிராமணன் அல்லாத,  பக்கத்தில் இருக்கும் குப்பத்தில் வாழும் ஒரு தொழிலாளி மாலையணிவித்து வணங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்த இரு பிராமணர்களுக்கு எதிராக அந்தத் தொழிலாளி இரு பிராமணர்களைத் தாக்கியுள்ளார். இதிலும் பெரிய விசேஷம் என்னவென்றால், அந்தத் தொழிலாளி சாமிக்கு அப்போது மாலை போட்டிருந்திருக்கிறார். ஆகவே முதலில் நடந்த தகராறில் அவர் பிராமணர்களின் எதிர்ப்பையும், அடிகளையும் வாங்கிக் கொண்டு அமைதியாகப் போய் விட்டாராம். விரதம் முடிந்து மாலையைக் கழற்றிய பின் அவர் அந்த பிராமணர்களை எதிர்த்திருக்கிறார். அவ்வளவு சாமி பக்தி அந்த தொழிலாளிக்கு. ஆனால் அவர் பிள்ளையாருக்கு மாலையணிவித்து பூசை செய்தால் அந்தப் பிராமணர்கள் அதைத் தடுக்கிறார்கள். தடுப்பது அவர்களா, அல்லது அவர்களது பூணூலா?  This is the other side of the coin. காதுள்ளவன் கேட்கக் கடவன்!


இப்பதிவின் பின்னூட்டங்களில் சுந்தர மூர்த்தி, ஷண்முகநாதன் சுவாமிநாதன் என்ற இருவரின் பின்னூட்டங்களும் நல்ல நகைச்சுவையோடு உள்ளன:

பிராமினந்தான் இன்றைக்கும் நேர்மையாகப் பணி செய்கிறான்”. -- சுந்தர மூர்த்தி  பிடித்த ஜோக்!  என்னமா அடிக்கிறாங்க ....  B.C.C.I.  தலைவர் ஞாபகம் டக்குன்னு வந்திச்சி ...!

இத்தனை வருடம் திராவிடக் கட்சிகள் மாறி மாறி ஆண்டபின்னரும் இன்னும் தாழ்த்தப்பட்டவன் தப்படிக்கப் போகிறான் என்றால் .......மலம் அள்ளச் செல்கிறான் என்றால் .......சாக்கடை, கழிவறையை சுத்தம் செய்யச் செல்கிறான் என்றால்.... இந்த திராவிட பகுத்தறிவுவாதிகள் என்ன செய்தார்கள்? -- சுந்தர மூர்த்தி - இந்த நியாயமான கேள்விக்கு நன்றி, சு.மூ.  ஆனால் இந்து ஜெயலலிதா  போன்ற திராவிட பகுத்தறிவுவாதிகள் நடத்திய, நடத்தும் ஆட்சியில் மட்டும் தானா இந்த நிலை?  இந்தியா முழுமைக்கும் இதே காட்சிதானே அரங்கேறி வருகிறது - யார் ஆட்சி செய்தாலும்!

சமூகத்திடம் இருந்து எந்த உதவியும் பெறாமல், சமூகத்துக்கு கான்ட்ரிப்யூட் செய்கிறவர்களுக்கு கிடைக்கிற மரியாதை இதுதான்”. - Shanmuganaathan Swaminathan.  அதானே… மற்றவங்கல்லாம் என்னத்த கான்ட்ரிப்யூட் பண்றாங்க … இல்லீங்களா...? நீங்க தானே இந்த நாட்டின் தூண்கள் ... இல்லீங்களா...!?








*

Saturday, May 02, 2015

834. புளியாய்க் கரைந்த கணக்குப் புலி - (தருமி பக்கம் 27)






*





*

நான் இப்போது கூட arithmetic-ல் புலிதான். விழுக்காடு போடுவது, சின்னப் பெருக்கல் / வகுத்தல் /கூட்டல் போடுவது இன்னும் பிடிக்கும். கடைகளில் சின்னக் கணக்குகளுக்கும் கால்குலேட்டர் பயன்படுத்துவது பார்த்து எரிச்சல் கொள்ளும் அளவு கணக்கில் புலி தான். மனக்கணக்காகப் போட்டுப் பார்ப்பதும் பிடிக்கும். அட ... எந்த அளவு நான் கணக்கில் புலி என்றால் சைனாக்கார நண்பர் ஒருவர் நம் கணக்குத் திறமையைப் பார்த்து, ‘இதனால் தான் உங்கள் ஊர் ஆளுகள் software-ல் அம்புட்டு திறமையாக இருக்கிறார்கள்’ என்று நற்சான்றிதழ் கொடுத்தார்.

அது எப்போதுன்னா ....

பத்துப் பதினாலு வருஷத்துக்கு முன்னால் நூறே நூறு நாள் மட்டும் அமெரிக்கா போனோமா ... அப்போ ஒரு சைனாக்கார பேராசிரியர் ஒருவரோடு house mate-ஆக இருந்தேன். இரண்டு பேருக்கும் ஒரே மாதிரி புத்தி. எந்தக் கடைக்குப் போனாலும் அங்கிருக்கும் சாமான்களின் விலையை நம்மூர் காசுக்கு கணக்குப் போட்டு பார்ப்போம். அப்போ நம்மூர் ரூபாய் 52க்கு ஒரு டாலர் என்று இருந்தது என்று நினைக்கிறேன். ஐம்பதால் பெருக்குவது தான் எளிதாயிற்றே... நான் உடனே இத்தனை டாலருக்கு நம்மூர் கணக்கில் எத்தனை ரூபாய் என்று கணக்குப் போட்டு விடுவேன். அவர் டாலருக்கு எட்டால் பெருக்க வேண்டியதிருக்கும். அவர் அதற்காக தன் orgnaizer எடுத்து calculator தேடி கணக்குப் போட வேண்டியதிருக்கும். ஆனால் நான் அவரோடு இருக்கும் போது என்னிடம் கேட்பார். எட்டாம் வாய்ப்பாடுதான் நமக்கு எளிதாயிற்றே ... கேட்டதும் சொல்லிவிடுவேன். எட்டெட்டு என்றால் டக்குன்னு 64 அப்டின்னு சொல்லிடுவோம். ஆனால் 18 x 8 என்றால்,  10 x 8 =80 + 8 x 8 = 64; இரண்டையும் சேர்த்தால்144 அப்டின்னு சொல்லிடுவோம்ல .. அது மாதிரி நான் அவருக்கு மனக்கணக்காக, அவர் calculator எடுப்பதற்குள் சொல்லி விடுவேன். எப்படின்னு கேட்டார். இந்த 18 x 8 கணக்கு சொன்னேன்; அவருக்குத் தலை சுற்றியது. என்னால முடியலைங்க என்றார். அப்போது தான் நமது கணக்கு வித்வத்தையை புகழ்ந்து சொல்லிட்டு, அப்படியே நம்ம software ஆளுகளின் புகழ் பாடினார்.

இப்படி arithmetic-ல் புலியாக இருந்த (இருக்கும்) எனக்கு mathamatics-தான் ஆகாமல் போச்சு.........

அந்தக் காலத்தில் உயர்பள்ளிகளில் 6 வருடங்கள். ஒவ்வொரு வகுப்பும் பார்ம் - Farm - என்று அழைக்கப்படும்.  V Farm வந்த உடன் வகுப்புகள் இருவகையாகப் பிரிக்கப்படும். அதுவும் கணக்கை மட்டும் வைத்தே பிரிக்கப்படும். கணக்குப் புலிகளுக்கு Composite Mathematics  என்றும், சாதா கேசுகளுக்கு  General Mathematics என்றும் இருக்கும். நாம் தான் IV Farm வரை கணக்குப் புலியா ... அதனால் அப்படியே Composite Mathematicsக்கு அனுப்பி விட்டார்கள். அப்போதெல்லாம் இந்த குரூப்புக்கு கிராக்கி தான். 'A' Section boys நாங்க.

V Farm-ல் கணக்குக்கு யாகப்பன் என்று ஒரு இளம் ஆசிரியர் வந்தார். வயதான ஆசிரியர்கள் பெரும்பாலும் வேட்டி, கோட் என்று வருவார்கள். இவர் பேண்ட், கோட் என்று வருவார். ஒல்லியாக, உயரமாக இருப்பார். நான் முதலில் அவருக்கு வைத்த ‘பட்டப்பெயர்’ ஆப்ரஹாம் லிங்கன். தாடி மட்டும் வைத்தால் லிங்கன் மாதிரியே இருப்பார். புதிதாக வந்திருந்தாலும் என் அப்பாவிற்கு நண்பராக ஆகியிருந்தார். ஆக அவருக்கு நான் ரொம்பவும் ”வேண்டப்பட்டவனாக” ஆகி விட்டேன். ரொம்ப ஸ்பெஷலாக என்னைக் கவனிக்க ஆரம்பித்து விட்டார்.

இப்போ கணக்கில் புதிதாக வந்த அல்ஜிப்ராவும், தேற்றங்களும் ராட்சசர்களாக மாறிப் போனார்கள். தேற்றங்கள் குட்டி  போட்டு அதற்கு 'ரைடர்' அப்டின்னு பேர் சொன்னாங்க. இந்த மூணு பிசாசுகளும் என்னை ரொம்பவே கொடுமைப் படித்திட்டாங்க. என்ன பிரச்சனை என்றால் எனக்கு மனப்பாட சக்தின்னு ஒண்ணு சொல்லுவாங்களே அது 0-க்கு ரொம்ப பக்கத்தில் தான் இருக்கும். அட
... உண்மையைச் சொல்லிர்ரேனே .... மனப்பாடசக்தி என்பதும் என்னிடம் அன்றும் இன்றும் கிஞ்சித்தும் இல்லை.

(a+b)2  இதை ஒப்பேத்திட்டேன்.  (a+b+c)2 இது கூட பரவாயில்லை .. தேத்திட்டேன். (a+b+c)3   இங்க உதைக்க ஆரம்பிச்சிது. அப்படியே மனப்பாடம் பண்ணணுமாமே .. உழுந்துட்டேன். எழுந்திருக்கவே முடியலை.

இதை விட்டா தியரம் / தேற்றம். இதுல ஒரு வார்த்தை கூட மாறக்கூடாதாம்; அப்படியே சொல்லணுமாம். நம்மளால முடியுமா அந்த வித்தையெல்லாம்நிறைய பார்முலாக்கள். அதெல்லாம் கொடுத்து மனப்பாடம் பண்ணணும்னாங்க. அதுக்கு நான் எங்க போறது. இந்த தியரங்களை வைத்து ‘ரைடர்’ போடணும்னாங்க. திணறிட்டேன்.

இதுல நம்ம யாகப்பன் வாத்தியார் நம்மட்ட ரொம்ப பிரியமாயிட்டார். என்ன ஆச்சுன்னா.... அப்பா சாரோட நண்பராயிட்டாரா ... அதுனால எனக்கு ஸ்பெஷல் கவனிப்பு கொடுக்க ஆரம்பிச்சிட்டார். முதல் பெஞ்சில் ஒரு ஓரத்தில உக்காந்திருப்பேன். பக்கத்தில வந்து நிப்பார்; நல்ல எலும்பா இருபாரா ... அவர் கையை மடக்கி, குட்டு வைக்கிறது மாதிரி தலைக்கு மேல வச்சிக்கிட்டு ஏதாவது ஒரு கேள்வி கேட்பார். மனப்பாடப் பகுதின்னா என்ன ஆயிருக்கும்.ஒண்ணும் தெரிஞ்சிருக்காது ... நச்சுன்னு மண்டையில் ஒண்ணு விழும். கொஞ்ச நஞ்ச ஞாபகம் இருக்கிறதும் ஒண்ணுமில்லாமல் போகும். ஆக கணக்கில நம்ம ‘புலித் தன்மை’ வேகமாக மறைஞ்சி போக ஆரம்பித்தது. என்னடா .. போன வருஷம் வரை நல்லா கணக்கு போட்ட பயல் இந்த வருஷம் இப்படி ஆயிட்டானே .. ஏன்னு எங்க அப்பாவோ, யாகப்பன் சாரோ கொஞ்சம் யோசிச்சிருந்தா நிலமை மாறியிருக்கலாம். அதெல்லாம் இல்லை... நமக்கும் கணக்குக்கும் இருந்த ஒற்றுமை ஒன்றும் இல்லாமல் போச்சு ... ஒரே sliding தான்.

அப்படியிருந்த நான் இப்படி ஆயிட்டேன். இது வாழ்க்கையின் திசையையே முற்றிலும் மாற்றி வச்சிருச்சு. எப்படின்னு கேட்கிறீங்களா ... சொல்றேன் ... சொல்றேன்.





 *