Thursday, December 31, 2015

881. டயரி

மதுக்கடைக்காக ஒரு மரணம்
மதுக்கடை எதிர்த்து மறியல்கள்

மழை ...
மழை ...

பெரு மழை ...
பயங்கரப் பெருமழை

வெள்ளம்
தவிப்பு

தன்னார்வலர்களுக்குப் பாராட்டுகள்
ஸ்டிக்கர்ளும் ஒட்டியாச்சே

பீப் பாட்டு
அவங்க அம்மா...சகோதரிகள் படும் பாடு

இ.ராஜாவிடம் முட்டாள் தனமான கேள்வி
மாறி மாறி சாடல்கள்

த்தூ ....
த்தூ ....

அதிமுக பொதுக்குழு
ஊரெல்லாம் போஸ்டர்

வாழ வைத்த் மாண்புமிகு அம்மா 
உறவில்லாமல் வைத்த ஒப்பாரி (வே.ந.க்கு நன்றி)


எல்லாம் (2015) ஆண்டு  முடிந்தது.
தேர்தல் ஆண்டும் பிறந்தது

****

புத்தாண்டிற்கு  அனைவருக்கும் வாழ்த்துகள் ........


       *

Tuesday, December 22, 2015

880. I.S.L. 2015 ... 7 அடுத்த I.S.L






*

இது ஒருபுது யுகம். கிரிக்கெட் மட்டுமே கோலோச்சிக்கொண்டிருந்த நம்மூரில் புதியதாகத் தோன்றியுள்ள லீக் ஆட்டங்கள் புதிய விளையாட்டுகளையும் அதன் வீரர்களையும் மக்களிடையே பிரபலமாக்கிக் கொண்டு வருகின்றன. கபடி விளையாட்டும் தொலைக் காட்சியில் வரும்போது புதியதாக பலரும் விளையாட்டு ஆர்வலர்களாக ஆவதைக் காண முடிகிறது.

நான் பார்த்த ஒரு பெரிய மாற்றம்.... பலரும் விளையாட்டின் மீது புது ஆர்வம் காண்பிக்கிறார்கள். வயசான பலரும் shuttle cock விளையாடுவதும், இளைஞர்கள் அதுவும் சின்னப் பசங்க கால்பந்து விளையாடுவதும் சாதாரணமாகக் காணக்கூடிய காட்சியாகி விட்டது.  பெரும் மகிழ்ச்சி. கால்பந்து விளையாட்டிற்குக் காரணம் I.S.L. போட்டிகள் என்றால் மிகையில்லை.

கால்பந்து போட்டிகள் இவ்வளவு தீவிரமாகப் பரவ காரணமாயிருந்தவர்களுக்கு பெருத்த நன்றியும் வணக்கமும்.
திருமதி நிடி அம்பானி
ஹீரோ கம்பெனி
மற்றும் பல ஆதரவாளர்கள்....

.... இவர்களோடு மிக மிக முக்கியமாக நமது கிரிக்கெட் வீரர்கள் - selling coal in New Castle என்பதற்கு எதிர்ப்பதமாக இவர்கள் வினையாற்றியிருக்கிறார்கள். அவர்கள் விளையாட்டு இந்த அளவு பிரபலமாக இருக்கும் போது அவர்களே அடுத்த ஒரு விளையாட்டை ‘வாங்கி’ அதனைப் பிரபலப்படுத்துகிறார்கள். நிச்சயம் அவர்களை மனதாரப் பாராட்டுகிறேன். I.S.L-ல் அவர்களின் பங்களிப்பும், ஈடுபாடும் பலரையும் இந்த விளையாட்டின் மீதும் ஆர்வம் கொள்ள வைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

கிரிக்கெட் வீரர்களோடு, நடிகர்களும் இதில் கலந்து கொண்டது பெரும் வீச்சை கால்பந்து விளையாட்டிற்குக் கொடுத்துள்ளது. Celebrity Cricket என்பது போல் celebrity foot ball என்றும் ஒன்று ஆரம்பித்தார்கள் என்று வைத்துக் கொள்வோம். அடடா ... கால்பந்து விளையாட்டு எங்கோ போய் விடும்! நடிகர்களை வைத்து ஒரு போட்டியை யாராவது ஆரம்பயுங்களேன் ... ப்ளீஸ்.

மேற்சொன்ன அனைவருக்கும் ஒரு கால்பந்து ரசிகனான எனது பணிவான நன்றியும், வணக்கங்களும், பாராட்டும்.


இன்னும் சில சிந்தனைகள்:

நிச்சயமாக I.S.L, 3 அடுத்த ஆண்டு நடக்கும். இப்போதுள்ள நியதிப் படி ஒவ்வொரு அணியிலும் 6 இந்திய விளையாட்டு வீரர்கள் இருக்க வேண்டும். அதைக் கொஞ்சம் மாற்றினால் இன்னும் ‘சூடு’ பிடிக்கும்.

6 இந்திய விளையாட்டு வீரர்கள் என்பதை 3 + 3 என்றாக்கலாம். அதாவது 6 இந்திய வீரர்கள் என்பதைவிட எந்த மாநிலத்தின் பெயரில் அணி இருக்கிறதோ அந்த மாநில வீரர்கள் மூவரும், மீதி மூவர் மற்ற மாநிலங்களிலும் இருக்கலாம். இன்னும் மூன்று பேர் வெளிநாட்டுக்காரர்களாக இருக்கலாம். ஆக விளையாடும் போது 3 மாநில வீரர்கள் + 3 வேற்று மாநில வீரர்கள் + 3 வெளிநாட்டு வீரர்கள் + 2 from any category 

சென்னைக்கு எதிரே நமது மாநில மோகன்ராஜ் கொல்கத்தா அணியில் அழகாக ஆடிய போது, ஆஹா... இந்த ஆள் நம் அணியில் ஆடியிருக்கக் கூடாதா என்று தான் தோன்றியது.

இப்படி நமது மாநிலம், அடுத்த மாநில வீர்ர்கள் என்பதைத் தேர்ந்தெடுக்க I.S.L. தவிர அடுத்த போட்டிகள் பலவும் நடக்க வேண்டும். கிரிக்கெட்டில் ராஞ்சி போட்டி நடப்பது போல் inter state tournaments கால்பந்து விளையாட்டிற்கும் நடக்க வேண்டும். இப்போட்டியின் முடிவின் படி எத்தனை அணிகள் வேண்டுமோ அத்தனை அணிகளை, இதில் விளையாடும் வீர்ர்களை ஏலத்தில் எடுத்து அமைக்கலாம்.

எல்லோரும் சொல்லும் grass root level அளவிலேயே கால்பந்திற்கு இந்த வழிமுறை மூலம் சிறப்பிடம் கிடைக்கும்.

I.S.L. போல் மற்ற விளையாட்டிற்கும் பெரும் அளவில் போட்டிகளும் ஆரம்பிக்க வேண்டும்.

ஒரு கிழவனின் கவலை ...
இது பல இளைஞர்கள் கண்களிலும், கருத்துகளிலும் போய்ச் சேர வேண்டுமென்ற ஆவலில் இதனை எழுதுகிறேன்.









*







 

879. I.S.L. 2015 ....6







*

கடைசி ஆட்டம் அப்படி ஒரு விறுவிறுப்பு.


85 நிமிடம் வரை it was a game of the two goal keepers. Fantastic job by both of them between the bars. Wow!


கோவாவின் கோலி கட்டிமணி (எந்த ஊருக்காரர்? கோவாக்காரராமே! மணின்னு பெயர் இருந்ததும் நம்மூர்க்காரரோன்னு நினச்சேன்.)முதலில் அடித்த பெனல்டியை அழகாகத் தடுத்தார். ஆனால் மீண்டும் அதை அடித்து கோலானது. ஆனல் மெண்டோசா அடித்த இரண்டாவது பெனல்டியை அழகாகத் தடுத்தார். எதிர் கோலில் எடல் இக்கட்டான சில பந்துகளைத் தடுத்தார். கடைசி நிமிடங்களில் கட்டிமணிக்கும் மெண்டோசாவிற்கும் நடுவில் அப்படி ஒரு போட்டி.


 முதல் பாதியில் கோல் எதுவுமில்லை.


 இரண்டாவது பாதி ஆரம்பித்த சில நிமிடங்களில் ஒரு பெனல்ட்டி சென்னைக்குக் கிடைத்தது. பெஸ்ஸாரி அடித்ததை எளிதாக கட்டிமணி தடுத்தார். ஆனால் சென்னையின் எடல் பந்தயத்தின் முதல் கோலை விட்டது மாதிரி இப்போது நடந்து விட்டது. மணி தடுத்து எதிர்த்து வந்த பந்தை பெஸ்ஸாரியோவோ மீண்டும் அடித்து கோலாக்கினார். 1: 0 ஆஹா…


சென்னை இனி ஜெயிச்சிரும் அப்டின்னு நினப்பு மனசுல விழுகுற நேரத்துக்குள்ள, அதாவது ரெண்டு மூணு நிமிஷத்தில கோவா ஒரு field goal போட்டிருச்சி. 1: 1


இதில இருந்து சில நிமிஷத்தில சென்னைக்கு இன்னொரு பெனல்டி கிடச்சுது – மெண்டோசாவிற்காக. அவரே பெனல்டியை அடித்தார். மணி தடுத்துட்டார். பெரிய ஏமாற்றம். இறுதிப் போட்டியில் கிடைத்த பெனல்ட்டி! இப்படிப்பட்ட நல்ல தருணம் போச்சேன்னு சோகமாச்சு.


 அடுத்த 20 நிமிஷம் விறுவிறுப்பாக கோல் ஏதும் விழாமல் போனது. இனி எக்ஸ்ட்ரா டைம் போகும்னு நினச்சிக்கிட்டு இருந்த போது கோவா ஒரு கோல் போட்டது. 2:1


ஆனால் இந்த கோல் விழுந்த அடுத்த இரண்டு மூன்று நிமிடத்தில் கோவா கோல் முன்னால் மணி, மெண்டோசா, கோவா வீரர் ஒருவர் என மூவருக்குள் நடந்த போட்டியில் மணி பந்தை தடுத்த பிறகும் அவர் கையிலிருந்து பந்து எழுந்து கோலுக்குள் விழுந்தது. 2 : 2


 ஆட்டத்தின் 89வது நிமிடம் இது. விறுவிறுப்பின் உச்சத்தில் அடுத்த 4 நிமிடத்தில் செண்டோசா ஒரு அழகான கோலைப் போட்டார். 3 : 2

 சென்னை வென்றது – மிகக் கடைசி நிமிடத்தில்!


*

Better they change the cup for the next tournament. looked so lousy!


 *



 

Wednesday, December 16, 2015

878. I.S.L. .... 5 A VERY LUCKY DAY FOR CHENNAI...





*

15.12.15 - கோவா - தில்லி - இரண்டாவது ஆட்டம் - 2 : 0 மொத்தம் 2 : 1

 16.12.15 - சென்னை - கொல்கத்தா - ,, .. - 1: 2 மொத்தம் 4 : 2

16.12.15 -இன்று ஆட்டம் நம்மை பெஞ்சின் விளிம்பில் உட்கார வைக்கும் அளவிற்கு நன்கிருந்தது. நேற்று சென்னை நன்கு விளையாடி மூன்றுக்கு முட்டை என்ற கணக்கில் வென்றது. ஆனால் இன்று மோசமாக விளையாடி தோற்றது. ஆனாலும் மொத்தத்தில் கூடுதல் கோல்கள் என்றதால் வென்று இறுதிப் போட்டிக்குப் போனது. A VERY LUCKY DAY FOR CHENNAI.

முதல் பத்து நிமிடங்களில் சென்னை வேகமாக விளையாடியது. ஆனால் முதல் கோல் ஒன்று விரைவில் சென்னைக்கு  விழுந்தது. சென்னை முதல் நாள் விளையாட்டில் விழுந்த முதல் கோல் almost a suicidal self goal. today also it was a pathetic goal. defense அவ்வளவு மட்டமாக விளையாடியது. மைனஸ் பாஸ் என்று சொல்லி பந்தைத் தட்டி கோலுக்கு வழியமைத்தார்கள்.

இரண்டாம் பாதியிலும் மிக மட்டமான டிபென்ஸ். பாவம் .. கொல்கத்தா. கொஞ்சம் LUCK இருந்திருந்தால் நாலைந்து கோல் சென்னைக்கு விழுந்திருக்கும். எப்படியோ சென்னை பொழச்சிது!

கொல்கத்தா அணியில் நம்மூர் பையன் மோகன்ராஜ் நன்றாக ஆடினார். சென்னை அணியின் மெண்டோசா நன்றாக விளையாடினார். ஆனால் எதிரணி அவரை விளையாட விடவில்லை.

இறுதிப் பணியில் சென்னை வெல்ல வேண்டும் என்று ஆவலுண்டு.

ஆனால் கோவா அணிதான் வெல்லும் என்றே எதிர்பார்க்கிறேன்.





 *



Sunday, December 13, 2015

877. I.S.L. ... 2015 .. 4




*


என்னென்னவோ நடந்துகிட்டுஇருக்கு ...

முதல் லீக்கில் கடைசியில் இருந்த சென்னையின் அணி அரையிறுதிக்கு வந்திருச்சு... டாப்ல இருந்த புனே அணி காணாமப் போயிருச்சு. கட்டாயம் வரும் என்று நினைத்திருந்த கேரளா அணி தோத்துப் போச்சு. 50 ஆயிரம் பேருக்கு மேல் கேரளாவில் விளையாட்டு பார்க்கக் கூட்டம் வந்துச்சு. ஆனால் தில்லியில் அரையிறுதிக்கே 6ஆயிரம் பேர்தான் - தில்லி அணி விளையாடியும் -  பார்க்க வந்திருக்கிறார்கள். இதுவே ஒரு பெரிய நகை முரண். இதிலும் எதிர்பார்ப்புக்கு மாறாக தில்லிதான் வெற்றி பெற்றுள்ளது 1:0. இதிலும் நான் எதிர்பார்த்த கோவா ஒரு கோல் வாங்கித் தோற்றது. பார்ப்போம் - இரண்டாவது ஆட்டத்தில் என்ன நடக்கிறதென்று.

சென்னையில் X கொல்கத்தா அணியின் முடிவும் வித்தியாசமாக இருந்தது. இரண்டு லீக் ஆட்டங்களிலும் கொல்கத்தா அணி சென்னையை வென்றது. இப்போட்டியில் மூன்றாவது முறையாக இந்த இரு அணிகளும் களம் இறங்கும்போது கொல்கத்தா அணி வெல்லும் என்று தான் நினைத்தேன். ஆனால் பந்து சென்னையிடமே அதிகம் இருந்தது. 3:0 என்று  முடிவு வந்ததும் ஒரு ஆச்சரியம் தான். இனி இரண்டாம் ஆட்டத்தில் 3 கோலை முறித்து கொல்கத்தா வெல்வது மிகவும் கஷ்டம் என நினைக்கிறேன்.

பார்க்கலாம் ..........






*




Friday, November 20, 2015

876. NUIT BLANCHE .... SLEEPLESS NIGHT ..... தூங்காவனம்








*




தூங்காவனம் படம் பார்க்க ஆசை. அதுவும் எந்தப் படத்திலிருந்து எடுக்கப்பட்டது என்பதையும் சொல்லியாயிற்று. அதனால் திருஷ்யம் பார்த்து விட்டு, பாபநாசம் பார்த்தது போல் இதிலும் ஒரிஜினலை முதலில் பார்த்தாலென்ன என்று சொல்லி அந்தப் படத்தை இறக்கியாயிற்று.

பார்க்க ஆரம்பித்ததும் RR ரொம்ப பிடித்துப் போனது. ஆனால் எனக்கெல்லாம் ஆங்கிலப் படங்களைப் பார்த்தால் ஒரு மண்ணும் புரியாது. அதுக்கு இங்கிலீசு தெரியணுமாமே! அதனால் sub-ttile போட்டுப் படம் பார்ப்பதே பழக்கம். இந்தப் படத்தில் சப் டைட்டில் வரத் தகராறு பண்ணியது. ஆங்கிலமே அப்படியென்றால் இது பிரஞ்சு படம். ‘merci, tres bien, s'il vous plait, comment allez vous, respondez s'il vous plait மட்டும் தான் தெரியும். ஆனாலும் விடாமல் பார்த்தேன்.  படம் நல்லா போச்சு. வேகமாக படம் நகர்ந்தது. முழுவதும் பார்த்துத் தொலைத்த பின் தான் கதை சுத்தமா புரியலை என்பது புரிந்தது. மறுபடி சப் டைட்டில் தேடிப்பிடித்து மறுபடி படம் பார்த்தேன். அப்பாடா ... ஒரு மாதிரி புரிஞ்சிரிச்சி...

கெட்ட போலிசுகளும் ... நல்ல போலீசுகளும் ...

படம் ஆரம்பித்ததும் மிஸ்கின் நினைவு வந்தது. அவர் படத்திலும் தெருவில் கதை நடக்கும். ஆனால் கதை நாயகர்களைத்தவிர வேறு யாரும் கண்ணில் பட மாட்டார்கள். இங்கேயும் முதல் சீனில் ஹீரோ அம்புட்டு வேகமாக காரை ஓட்டிட்டு, ஆளுகள சுட்டுட்டு போய்க்கிட்டே இருப்பாரு. ஊர்ல, நாட்ல, தெருவில ஆளுகளே இருக்காது. ஒரே ஒரு ஆளு அதப் பார்த்ததாக பின்னாலில் ஒரு சீன்.

அம்புட்டு பெரிய க்ளப்பில் வாசலில் மட்டும் இரண்டே இரண்டு அடியாட்கள். உள்ளே நடக்கும் எதிலும் ஏன் secyrutyகளே வரவில்லை - அத்தனை அடிதடிக்குப் பிறகும்?

கிளப் கிச்சனை அடித்து நொறுக்குவார்கள். ஆனால் சாப்பாடு சப்ளை தொடர்ந்து மட்டும் எப்படி நடக்குதுன்னு தெரியலை.


ஹீரோவை ஆளுக விரட்டிக்கிட்டு வருவாங்க. மெயின் ஸ்விட்சை ஆப் பண்ணிட்டு, இருட்டுக்குள்ள தன் மூஞ்சுக்கு மட்டும் செல் போன் லைட்ட அடிச்சிக்கிட்டே ஹீரோ போவாரு. நமக்கு தெரியணும்ல ... அதுக்காக இருக்கும்!

ஆளுகள சும்மா சும்மா ஷூட் பண்ணிட்டு தேவையில்லாம கொன்னுட்டுப் போவாங்களே ... அது மாதிரி இல்லாம கால்ல ஷூட் பண்ணிட்டு போனா என்னன்னு அடிக்கடி சினிமா பார்க்கும் போது நினைப்பேன். அப்பாடா ... அந்த சீன் இந்தப் படத்தில் வந்திருச்சி.

அங்கேயும் வீடு ஓட்டையா இருக்கே. அம்புட்டு பெரிய கிளப்ல மேல ஒருந்து தண்ணி சொட்டு சொட்டா ஒழுகுது. நம்மள மாதிரி கீழே ஒரு டப்பா வச்சி தண்ணி பிடிக்கிறாங்க. மழைக்காலத்துல பார்த்ததுனாலேயோ என்னவோ ... அது நல்லா இருந்தது. ஆனா எதுக்கு அந்த எபெக்ட் அப்டின்னு புரியலை!

இன்னொரு பெரிய சந்தேகம். இந்தப் படத்திலும் சரி... furious மாதிரி படங்களில் கார்கள் மொங்கு .. மொங்குன்னு மோதி விழும். ஆனாலும் ஒரு கார்லேயும் air-bags இருக்காதா? அத ஒரு படத்திலேயும் பார்த்த ஞாபகமே இல்லையே!

ஹீரோவுக்கு விலாவில சரியான கத்தி வெட்டு. அதோட சண்டை..கிண்டை எல்லாம் போடுவார். ஓடுவார். ஒரு சீன்ல அந்தப் புண்ணுக்கு மருந்து போட்டுக்குவார். அப்போ வலியில் கத்தாமல் வலியில் துடிப்பது போல் நன்றாகச் செய்திருப்பார். அந்த சீனை கமல் எப்படி செய்திருப்பார் என்று பார்க்க வேண்டும் என்று தோன்றியது.

சீக்கிரம் பார்க்கணும் ........






 *

Tuesday, November 17, 2015

875. BELIEVERS SHOULD LISTEN ...........Stephen Fry Annihilates God



Monday, November 16, 2015

874. THANK YOU GUYS....... I APOLOGIZE.......







*


 ........இப்படி ‘மசாலா’ படங்களாக என்னும் எத்தனை காலத்திற்குத்தான் பார்த்துக்கொண்டே இருக்கப் போகிறோம். ஆங்கிலத்தில் சொல்வார்களே -genre - என்று அது போல வகைப்படுத்தப் பட்ட படங்களைப் பார்க்கும் காலம் வரவே வராதா? நம் இந்தியப் படங்களில்தான் இப்படி ‘எல்லாமும்’ சேர்ந்த சினிமாக்கள் வருகின்றன. action, thriller, musical, mystery, suspense, western, war stories என்று எத்தனை வகைகள் மற்ற எல்லா மொழிப் படங்களிலும் இருக்க நம்மூர்ல மட்டும் ஏன் இப்படி ஒரே வகைப் படங்கள் வந்து தொலைகின்றன. 

.......... இப்படியெல்லாம் நான் பத்து ஆண்டுகளுக்கு முன்  பாடிய பிலாக்கணம் இங்கே இருக்கிறது. நடக்கவே நடக்காது என்ற தமிழ்ப்பட உலகத்தில் பெரும் மாற்றம் நடந்து வருகிறது. மகிழ்ச்சி.

காதல் கண்றாவி தவிர ஏதும் இல்லாமல் இருந்த தமிழ்ப்பட உலகில் சமீபத்தில் வந்த நல்ல படங்களை என் மதிப்பீட்டு வரிசையில் தந்துள்ளேன்.

குற்றம் கடிதல் பிரம்மா -  காக்காமுட்டை படத்திற்கு ஊடகங்களில் கிடைத்த அளவிற்கு இப்படம் கவனிக்கப் படவில்லையே. ஏன்?

காக்கா முட்டை மணிகண்டன் 

ஆரண்ய காண்டம் 2010 கூத்துப்பட்டறை சோமசுந்தரம் என்றொரு புது முகம் என்னமா நடித்தார்! அதன் பின் ஆளே காணோமே. மறுபடி இயக்குனர் குமாரராஜா படத்திலாவது வருகிறாரா என்று பார்ப்போம். அட... குமாரராஜாவையும் காணவேயில்லையே!

பீட்சா கார்த்திக் சுப்புராஜ் இவர் யாரென்று தெரிவதற்கு ஓராண்டிற்கு முன்பே அவர் எடுத்த the last train  என்ற குறும்படத்தை எனது ப்ளாக்கில் போட்டிருந்தேன். அர்த்தமுள்ள படம்.

சூது கவ்வும் நளன் குமாரசாமி .  இதில் வந்த ஒல்லிப்பிச்சான் ரமேஷ் திலக் கனா காணும் காலங்களில்  கேபிள் ஷங்கரோடு வந்த முதன் முதல் சீனிலேயே பிடித்துப் போயிற்று.

அழகர்சாமி குதிரை (கதை மூலம், பாஸ்கர் ஷக்தி)   சுசீந்திரன்

இன்று நேற்று நாளை திருப்பூர் ரவிக்குமார் 

ஜிகர்தண்டா கார்த்திக் சுப்புராஜ்

கோலி சோடா விஜய் மில்டன் 

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்- பாலாஜி தரணிதரன்


இந்த இயக்குனர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகள்.

தொடருங்கள்..............

Thursday, November 12, 2015

873. I.S.L. 2015. ......(2) & மூன்று விஜய் சீரியல்கள்







*



 என்ன எழுதுவதென்றே தெரியவில்லை.. தலையே சுத்துது. காரணம் - எல்லா அணியும் ரொம்ப நல்லா விளையாடுறாங்க. clear picture கிடைக்கலைன்னு சொல்வாங்களே அப்படித்தான் இருக்குது! ஒரு வேளை செமி பைனல் ரவுண்டுகள் வித்தியாசமா இருக்கலாம். ஆனாலும் அதுக்கு எந்தெந்த அணி வரும்னு தெரியலை. ஏன்னா எல்லா அணிகளும் நல்லா விளையாடுறதுனால ரிசல்ட்கள் எல்லாம் கோக்கு மாக்கா இருக்கு.

 பாருங்களேன் ... கோவா அணி பெரிய அணிகளில் நான் வச்சிருந்தேன்.  ஆனா நம்ம சென்னை டீம் கூட விளையாடி 0:4ன்னு தோத்து நின்னாங்க. முதல் லீக்கில் நடுவில் இருந்த சென்னை அணி கடைசியில் இருந்த வடகிழக்கு அணிட்ட ரெண்டு கோல் வாங்கி தோத்தாங்க. ஆனா புனே அணி டாப்ல இருந்தப்போ நம்ம சென்னை அணி 1:2 என்று வென்றது. இப்படி நடந்தா தலை சுத்தாதா?

முந்தா நாள். 10ம் தேதி. இரண்டாம் லீக்கில் கேரளா அணியும் கல்கத்தாவும் மோதின. நினைத்துப் பார்க்க முடியாத கூட்டம். கொச்சின் மைதானம். 60,276ன்னு நினைக்கிறேன். அம்புட்டு கூட்டம் ...அதுவும் புட்பால் விளையாட்டுக்கு! கட்டாயம் கேரளா ஜெயிச்சிடும்னு நினச்சேன். விளையாட்டும் மகா தீவிரம். ஆனால் கடைசி நிமிடங்களில் 2:3 கல்கத்தா அணி ஜெயிச்சிருச்சி.

அதென்னமோ நிறைய விளையாட்டுகளில் கடைசி பத்து நிமிடங்கள் கதையவே மாத்தியிருது. நேத்து. 11ம் தேதி. சென்னையில் விளையாட்டு. சரியான மழை நடுவில். சென்னையும்,வ.கி. அணியும். 62% பந்து நம்ம கையில் ... ஐ மீன் .. காலில். ஆனால் இதிலும் மிகக் கடைசி நிமிடத்தில் சென்னைக்கு இரண்டாவது கோல் விழுந்தது. 1:2

சென்னைக்கு இன்னும் மூணு ஆட்டம் இருக்கு. எல்லாம் ஜெயிச்சா வரும், செமிக்கு சென்னை வருமோ... வராதோ...?


 ***********




இன்னைக்கி மேட்ச் இல்லை. அப்போ அந்த ரெண்டு சீரியலையும் பார்த்திரலாம் - விஜய் டிவியில். ஆனால் இந்த இரண்டு சீரியலுக்கும் நடுவில் ஒரு சீரியல் வருது பாருங்க .... கடவுள் தந்த வீடு  - அதுக்கு நான் வச்சிருக்கிற பெயர் - சைத்தான் கி கர்.  நிறைய கன்னாபின்னான்னு நகை போட்டுக்கிட்டு மகா கொடூரமா மூணு பொம்பிளைங்க வருவாங்க. கண் கொள்ளாக் காட்சி. அதிலும் நான் இதுவரை பார்த்த - முழுசாகவோ, அரைகுறையாகவோ - சீரியல்களில் இது போன்ற ஒரு முட்டாள்தனமான சீரியல் எதுவும் இல்லை. அட ... மடிக்கணினியை சோப்பு போட்டு சுத்தமா கழுவி வைக்கிற கதாநாயகில்லாம் இதில் உண்டு. ஆனா இந்த சீரியலில் நடிச்ச நிறைய பேருக்கு விஜய் அவார்ட் எல்லாம் கொடுத்தாங்க. (பாவம்,, சரவணா சீரியலில் வர்ர வில்லன் பாண்டிக்கு கொடுக்காம ஒரு பொம்பளைக்குக் கொடுத்தாங்க.) இந்த லட்சணத்தில் இந்த சீரியல் இந்தி, மலையாளத்திலும் ஓடுதாம். நம்மளை விட மலையாளத்துக்காரங்க பெட்டர்னு நினச்சிருந்தேன். அப்படியெல்லாம் இல்லை போலும். அவங்களும் நம்மள மாதிரி தர்த்திகள் தான் போலும்.

ஆனாலும் இந்த ஒரு சீரியலைப் பற்றி மட்டும் சொல்லிட்டா போதுமா? ஆண்டாள் அழகர்னு ஒரு சீரியல். ஒண்ணு இரண்டு வாரத்துக்கு முன்னால் அந்த சீரியலை வீட்ல சென்சார் பண்ணிட்டாங்க. என்ன மாதிரி சின்ன பசங்க எல்லாம் அதைப் பார்க்கக் கூடாதுன்னுட்டாங்க. ஒரு ஜோடி “அது” & “இது”ன்னு ”அதப்பத்தி” அசிங்கமா தொடர்ந்து பேசிக்கிட்டே இருந்தாங்களாம்.

ஆரம்பத்தில சரவணன் மீனாட்சி ரொம்ப பிடிச்சிது. காரணம் என்னன்னா ....நிறைய நல்ல விஷயங்களைக் காண்பிச்சாங்க.  வரதட்சணை கிடையாது; நல்ல நாள் பார்க்கிறது கூடாது; ஜாதகம் பார்க்கக் கூடாது; பெண்ணின் பழைய காதல் - அது infatuationஆக இருக்கலாம் - அதையெல்லாம் தாண்டும் கதாநாயகன்; இப்படி நிறைய பாசிட்டிவ் பாய்ண்டுகள் இருந்திச்சி. இப்போ கழுதை தேஞ்ச கட்டெறும்பா போச்சு. வேற வேற டைரடக்கர்களாம்!

sorry directors ...... கொஞ்சம் தேறப் பாருங்க’ப்பா ..........

Tuesday, November 03, 2015

872. I.S.L. 2015








*






 I.S.L. 2014 அதிகமாகவும் பார்க்கவில்லை. அந்த அளவு அப்போது ஆர்வமில்லாமல் போனது. ஆனால் இந்த லீக் விளையாட்டுகளில் கண்ணில் தென்படுமளவிற்கு கால்பந்து விளையாட்டு அங்கங்கு கண்ணில் படுகிறது மகிழ்ச்சியளிக்கிறது. ஏதோ சினிமாக்காரர்கள், கிரிக்கெட் விளையாட்டுவீரர்கள் தயவில் கால்பந்து விளையாட்டும், கபடியும் தொலைக்காட்சிகளில் வருகின்றன. பெரிய அதிசயம் தான். கால்பந்து விளையாட்டுன்னு ஒண்ணு இருக்குன்னு சின்ன வயசு பிள்ளைகளுக்கும் தெரிய வந்திருக்கு. தொடரட்டும்.

கால்பந்து பார்ப்பதில் ஒரு குறை  எனக்கு. யார் பெயரும் தெரியவில்லை. வெளியூர் ஆட்டக்காரர்கள் மட்டுமல்ல... நம்ம ஆளுகளும் யாரும் தெரியவில்லை. பரிச்சயமில்லாத முகங்கள் ... யார் யார் எப்படி விளையாடுவார்கள் என்பதும் தெரியாமல் ஆட்டத்தைப் பார்ப்பதில் விறுவிறுப்பு மிகவும் குறைந்து விடுகிறது.  பெயர் தெரிந்த விளையாட்டுக்காரர்களும் இணைந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

சென்ற ஆண்டு எப்படி இருந்ததோ... இந்த ஆண்டில் ஒவ்வொரு அணியிலும் ஆடுபவர்களில் ஐந்து பேராவது நம்மூர் பசங்களா இருக்கணும்னு ரூல் இருக்கு. தெரிந்தவர்களோ தெரியாத முகங்களோ விளையாட்டு நன்றாக போகின்றன. ஆனால் எதிர்பார்ப்புகள் மாறி மாறி நடக்கின்றன.

விளையாட்டு ஆரம்பிப்பதற்கு முன் கல்கத்தா, கோவா, கேரளா அணிகள் நன்றாக விளையாடும் என்று நினைத்திருந்தேன். அதோடு நம்மூர் என்பதால் சென்னை அணியையும் எதிர்பார்த்திருந்தேன். அதில் முதல் குண்டு முதல் நாள் முதல் ஆட்டத்திலேயே நடந்தது. சென்னைக்கு விழுந்த முதல் கோல் very unlucky goal. கோல் கீப்பர் பந்தைப் பிடித்து விட்டார். ஆனால் அவர் மேலும் பந்தின் மேலும் ஒரு டிபன்ஸ் ஆட்டக்காரர் விழுந்து தொலைக்க, பந்து நழுவி கோலுக்குள் சென்றது. ஆனாலும் அடுத்து இரு கோல்கள் விழுந்தன. முதல் கோல் இல்லாமல் இருந்திருந்தால் முதல் ஆரம்பம் 2:2 என்று சரியாக ஆரம்பித்திருக்கும்.  சரி...சென்னையைக் கழுவி ஊத்தி விட்ற வேண்டியது தான்னு நினைச்சேன். ஆனாலும் துளிர் விட்டுடிச்சி.

நான் நினைத்த நாலு அணிகளையும் விட புனே அணி நன்றாக வென்று கொண்டு வந்தன. கேரளா அணி கீழே போய்க்கொண்டிருந்தது. அதிக ஏமாற்றம் North east அணி தான். எழுந்திருக்கப் போவதில்லை என்று தெரிகிறது.

தெரிந்த இரண்டே இரண்டு கோச் நம்ம ஆளு கார்லோஸ். மும்பை அணியை நடத்துகிறார். இன்னொருவர் சிக்கோ. இருவரும் ப்ரேஸில் காரர்கள்.

இனி வரும் மோதல்கள் இன்னும் நன்றாக இருக்குமென நம்புகிறேன். தொடர்ந்து பார்க்கணும் - டாக்டரும் சொல்லிட்டார்ல ....


 *

871. A STARING TIGER










*




Jessica, my granddaughter  had been to Madurai for just three days. When she reached home I asked her whether she brought any new pictures to me. She said, ‘No’. I acted furious and then left home for an hour or so. When I came back she was ready with this pix. A towel was hanging in a nearby chair and a tiger was staring at me from it.







No eraser. No pencil. Just a scribbling with a sketch pen.


 … MY PICASSO….. !






 *

Monday, October 19, 2015

870. I.C.C.U. வில் ஒரு நாள் .....







*





11.10.15. ஞாயிற்றுக் கிழமை. காலையிலே எழுந்து பதிவர் திருவிழாவிற்காகப் புதுக்கோட்டை பயணம். மதுரை சரவணனுடன் சென்றேன். இரண்டே கால் மணி நேரப் பயணம். பேருந்தை விட்டு நடக்க ஆரம்பித்தோம், 100 மீட்டர் தூரம் தான் இருக்கும். ஆனால் காலை ஏறு வெயில் சுளிரென அடித்தது. மண்டபத்திற்குள் நுழைந்தோம்


இயக்குனர்
கல்யாணவீட்டில் வரவேற்பார்களே அது போல் பெண்கள் கூட்டம் எதிர் கொண்டு அழைத்தார்கள்.  அட … என்ன இது.. என்பது போல் அனைவரும் லேசான டிசைன் போட்ட வெள்ளைச் சேலைஅரக்குக்கலரில் மேல்சட்டைபெண்கள் கல்லூரியில் 
major saree  கட்டுவார்களே அது போல் கட்டியிருக்கிறார்கள்; 
A PHOTOGENIC FACE


G.M.B. FAMILY

நல்ல முயற்சிதான் என்று எண்ணிக் கொண்டு மண்டபத்திற்குள் பார்த்தால் அங்கே புதுக்கோட்டை ஆண் பதிவர்கள் பளிச்செனக் கண்ணில் பட்டார்கள்வெள்ளை வேட்டிபெண்களின் மேல்சட்டைக் கலரில் இவர்கள் சட்டைஆஹா … என்ன பொருத்தம் இந்தப் பொருத்தம் என்று மெச்சிக் கொண்டேன்ஆடைகளில் ஆரம்பித்த பிரமிப்பு ஓவ்வொன்றிலும் தொடர்ந்தது.

புலவரய்யா

முனைவர் பழனி. கந்தசாமி

ஜோக்காளி- முனைவர் ஜம்புலிங்கம்- தமிழ் இளங்கோ

வழக்கமாக பதிவர் அறிமுகம் என்ற பெயரில் நீநீநீநீளமாக ஒரு நிகழ்வு இழுத்தடிக்குமேஅதை நறுக்குத் தெரித்தது போல் பத்து பத்தாகப் பிரித்து ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் நடுவில் சொருகி விட்டார்கள்நல்ல கூட்டம்பெரியவர்கள் புலவரய்யா, G.M.B.தன் குடும்பத்தினருடன்பழனிச்சாமி ஐயா போன்ற பெரியவர்களும் வந்திருந்து பெருமைப் படுத்தினார்கள்இவர்கள் வயதிற்கும் அவர்களின் ஆர்வத்திற்கும் இருக்கும் எதிர்மறைப் பொறுத்தம் பார்த்து அசந்து விட்டேன்அவர்களைப் பெருமைப் படுத்த பெரும் பதிவர்கள் இருவருக்கு கேடயம் வழங்கினார்கள்புலவரய்யாவிற்கும்சீனாவிற்கும் அந்த இரு கேடயங்களை வழங்கினார்கள். (ஆஹா… மதுரைக்கும் ஒரு கேடயம்!)


புதுக்கோட்டைக்காரர்

யார் யார் பேசினார்கள் என்று மற்றவர்கள் எழுதியிருப்பார்கள் என்பதால் அவைகளைத் தவிர்க்கிறேன்ஆனாலும் பலரின் பேச்சுக்கள் முனைப்போடும்ஊக்கமூட்டுதலோடும் இருந்தன.  நடுநடுவே சில அழகான தமிழ்ப்பாடல்கள் ஒரு சிறு பெண்ணின் அழகான குரலில் ஒலித்தது.

மாலையில் பேசிய எஸ்ரா – very sensitive and sensible கருத்துகளைக் கொடுத்தார்பதிவர்களின் நாளைய பணி என்ன என்பதை மிக அழகாகபொறுப்பாகஅழகான சான்றுகளோடு விளக்கினார்அது நமது கட்டாயக் கடமை என்றும் பேசினார்.








திருப்பதி மகேஷ்



விழாவினர் ஒரு தவறு செய்து விட்டார்கள்.



எவ்விதத் தொய்வும் இல்லாமல் முழு நாளும் நிகழ்ச்சிகளோடு நம்மைக் கட்டிப் போட்டு விட்டார்கள். தொய்வில்லாததால் விழாவின் ஒவ்வொரு நிகழ்வையும் முழுமையாகக் கவனிக்கவும், கேட்கவும் முடிந்தது. குறை சொல்ல ஒன்றுமில்லை! நிகழ்ச்சிகளும், புத்தகப்பரிசுகளும், பதிவர் அடையாளப் புத்தகமும்…. எல்லாமும் முனைந்த முன்னேற்பாட்டோடு அழகாகச் செய்யப்பட்டிருந்தன.  ஒவ்வொருவருக்கும் தனித்தனி கடமைகள் கொடுக்கப்பட்டிருந்தது போலும். அதனால்  குழப்பமின்றி இனிது நிகழ்ச்சிகள் நடந்தன. அவர்கள் செய்த தவறு என்னவென்றால் ….இனி அடுத்து வரும் விழாக்களில் இத்துணை கவனமும், கவனிப்பும் இருக்குமா என்று சந்தேகப்பட வைத்து விட்டனர் விழாக்குழுவினர்.  பாவம் … அடுத்த ஆண்டு விழா நடத்துவோர். முத்து நிலவன் ஐயா அவர்களின் முதன்மையும், வழி நடத்துதலும் மிகச் செவ்வனே இருந்தது. அவருக்கு என் பாராட்டுகள். ஆனாலும் … இதற்காக அத்தனை பெரிய மாலையைப் போட்டு அவரை “அமுக்கி” இருக்கக்கூடாது!

விழா முடியும் தறுவாயில் மதுரைக்குப் புறப்பட்டுச் சென்றோம். இப்போது எதிர் வெயில் சுட்டெரித்தது. தெருமுக்கிற்கு வரும்போதே வேர்த்துக் குளித்து விட்டேன். சரவணனே ஏனிப்படி வேர்த்து விட்டது என்றார். ஒரு லொட .. லொட பஸ்ஸில் ஏறினோம். பஸ் ஊர்ந்து போனதாகத்தெரிந்தது. ஆனாலும் இரண்டு மணி நேரத்தில் வந்து சேர்ந்து விட்டோம்.
அடுத்த சோதனை ஆரம்பித்தது. காலையில் அவசரத்தில் இரு சக்கர வண்டியை நிலையத்தில் விட்டு விட்டு வந்தேன். இவ்வளவு பெரிய ஸ்டாண்டு என்பது தெரியாது. மாலையில் இறங்கி வண்டியைத் தேடினால் எங்கும் கண்ணில் படவேயில்லை. நானும் சரவணனும் சலித்தும் கண்களில் படவில்லை. ஒரு மணி நேரத் தேடல். அலுத்தும் சலித்தும் விட்டேன். Dead tired! மழை வேறு கொட்ட ஆரம்பித்தது. நாளை பார்த்துக் கொள்ளலாமென்று முடிவெடுத்து வீட்டிற்குச் சென்றோம்.
காலையில் எழுந்ததும் ஒரு நல்ல சேதி. பதிவர் விழாவிற்கு வந்திருந்த தோழர் அரசெழிலன் தொலைபேசியில்  என் நூலைப் பற்றி நல்ல ஒரு கருத்துரை கொடுத்தார். அவர் தன்னைப் பற்றிச் சொன்னது எனக்கு மிக பிரமிப்பாக இருந்தது. பலருக்கும் பலனுள்ள வாழ்க்கை வாழ்ந்து வருவது அறிந்து மகிழ்ந்தேன்.
அவரோடு பேசி முடித்த்தும் எழூந்தேன். இடது கையில் ஒரு வலி. தலையில் சிறிது அசமந்தம். ஏதோ தவறு என்பது போல் நினைப்பு. ஒரு மணி நேரம் வேறு வேலைகளில் ஈடுபட்டேன். பயனில்லை. பக்கத்து வீட்டு நண்பரை அழைத்துக் கொண்டு குடும்ப டாக்டரிடம் சென்றோம். வழக்கமாக ரத்த அழுத்தம் சிறிதே மேலே இருக்கும். கவலைப்பட வேண்டாம்  என்பார். இந்த முறை அழுத்தம் பார்த்த்தும் … down to earth!! ரொம்ப கீழே போயிருந்தது. மருத்துவ மனைக்குச் செல்லுங்கள் என்றார். ஒரு மணி நேரத்தில் மருத்துவத்தில் சேர்ந்தேன்.
வழக்கமாக – 20 ஆண்டுகளாகபார்க்கும் மூத்த மருத்துவர் வந்தார். என்ன ஆச்சு என்றார். வழக்கமான ஆண்டுக்கொருதடவை அவரைப் பார்த்து இரண்டு மூன்று மாதங்களே ஆகியிருந்தனநடப்பைச் சொன்னேன். முழு விவரமும் கேட்டார். எல்லாம் சொன்னேன். ஒரு நாள் observation என்றார். ஆனால் 4 நாட்களாகி விட்டன. நேற்றுமாலை வீடு வந்து சேர்ந்தேன்.
புறப்படும் முன் மருத்துவர் கொஞ்சம் easyஆகச் செல்லுங்கள் என்றார். நான் எழுதுவது, அரை குறையான போட்டோ ஆர்வம், வீட்டம்மாவின் எதிர்ப்போடும் அவரது ஆதரவோடும் விளையாடும் shuttle cock எல்லாம் அவருக்குத் தெரியும்.

ஓரிரு வாரம் விளையாட்டு வேண்டாம்.
குறைவாக நடக்க ஆரம்பியுங்கள்.
ப்ளாக் குறையுங்கள்.
கம்ப்யூட்டரில் நேரத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள்.
வாசியுங்கள்.
போட்டோ ஷாப் படியுங்கள்.
நன்கு ரெஸ்ட் எடுங்கள் ….. என்று சொன்னார்.


அவர் சொல்வதைக் கேட்க வேண்டுமல்லவா….??!!

 *