Friday, April 24, 2015

833. JK பற்றி ஜெ.மோ.







*

இன்று வாசித்தவைகளில் இரு பதிவுகள் என்னை ஈர்த்தன. அவைகளிற்கு  என் பதிவுகளில் இடம் கொடுத்துப் பத்திரப்படுத்த வேண்டும் என்று நினைக்க வைத்தன. என்னை ஈர்த்த பதிவுகள் மேலும் பலர் கண்ணில் படுமே என்ற நினைப்பில் அவைகளை மீள் பதிவுகளாகவும் இட ஆசை.

ஒன்று -  JK  பற்றி  ஜெ.மோ.

என்ன ஈர்த்த ஜெயகாந்தனையும் அவர் படைப்புகள் சிலவற்றையும் பற்றி ஜெ.மோ. பேசிய உரையின் தொகுப்பில் இருந்து சில பகுதிகளை இங்கு தந்துள்ளேன். ஜெ.மோவின் புதிய சில விளக்கங்கள், sharp wits of JK - சில இங்கு இடம்பெறுகின்றன.

இரண்டாவது - ரகுவீரன் என்பவர் பிராமண சாதியை முன்னிறுத்தி 20 கேள்விகளை தனது பதிவில் கேட்க, அவைகளை அமெரிக்க வாழ் மதுரைத் தமிழன் த்னது பதிவில் இட்டிருந்தார். அதற்கான பதில்களை இக்பால் செல்வன் தந்துள்ளார். நல்ல பதில்கள். ஆகவே அவைகளையும் இங்குப் பதிவிட ஆவல். இக்பால் தன் பதிவில் முதல் 10 கேள்விகளுக்குப் பதிலாக முதல் பதிவை இட்டிருக்கிறார். அவர் அடுத்த பத்துக்கும் பதிலளித்த பின் இரண்டையும் இணைத்து இன்னொரு பதிவில் இடுகிறேன். இக்பால் பதிவின் இணைப்பைத் தந்துள்ளேன்:அமெரிக்காவாழ் மதுரைத் தமிழனின் கேள்விக்கு என்ன பதில் ?


இப்பதிவில் -                         



ஆலமர்ந்த ஆசிரியன்


 12- 4- 2015 அன்று கோவையில் நிகழ்ந்த ஜெயகாந்தன் அஞ்சலிக் கூட்டத்தில் ஆற்றிய உரை, எழுத்துவடிவம்


ஜெயகாந்தன் சிரித்தார் “தமிழ் இயல்பிலேயே ஆண்மையான மொழி. அழகான ஒரு ஆணுக்கு மகள் அவன் சாயலில் இருந்தால் பேரழகியாக இருப்பாள். அதுதான் மலையாளம்” என்றார்.

”மனமே முகமா சிரிக்கணும்னா மனம் சுத்தமா இருக்கணும். பாருங்க முகமும் உடம்பும் அழகில்லாத சிந்தனையாளர்கள் உண்டு. ஞானிகள் உண்டு. கண்ணும் சிரிப்பும் அழகா இல்லாத சிந்தனையாளர்களே கிடையாது. ஏன்னா சிரிப்புங்கிறது என்ன? சிந்துறது. சிந்துறதுக்குப்பதிலா ஒரு துளிகூட மிச்சமில்லாம மொத்தமா கவுத்து ஊத்தினா அதான் சிந்தனையாளனோட ஞானியோட சிரிப்பு”

”பருந்து வானிலேறுவதன் அழகு. அது சிறகையே அசைப்பதில்லை. அதை விண்ணில் ஒரு கண்ணுக்குத் தெரியாத சரடு கட்டிச் சுழற்றிக் கொண்டிருப்பது போலத் தெரியும். அது பறப்பதில்லை மிதக்கிறது. சுழற்சியின் ஒரு புள்ளியில் மிக இயல்பாக மேலேறுகிறது. மேலேறுவதற்காக அது எதையும் செய்வதில்லை. பறப்பதற்காகக்கூட அது எதையும் செய்வதில்லை. அதை மேலேற்றுவது விண்ணகமாக மாறி நின்றிருக்கும் காற்று ஒளி. சின்னஞ்சிறு பறவைகள் எவ்வளவு சிறகடிக்கின்றன. எவ்வளவு பரிதவிக்கின்றன. சிறகசைக்காத பறவையின் உயரத்தை அவை அறிவதேயில்லை”.

ஜெ.கே. எப்போதும் அவர் மானுடத்திரளுடன் பேசிக்கொண்டிருந்தார்….. தஸ்தயெவ்ஸ்கி தன்னுடன் பேசிக்கொண்டவன். கார்க்கி மக்களுடன் பேசியவன். ஷெல்லியை, வால்ட் விட்மனை, பாப்லோ நெரூதாவை அந்த ஓசையை ஏற்றுக்கொண்டுதான் நாம் மதிப்பிடுகிறோம்.

பாரீஸ் அதில் ஒரு குறியீடு. ஜெயகாந்தனை வெற்று இடதுசாரி என்பவர்கள் அந்த நாவலை சரியாகப்புரிந்துகொள்ளாதவர்கள். அந்த நாவலை இன்றுவரை தமிழில் யார்தான் சரியாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள்? ….. சாரங்கனின் இசை கொண்டாட்டம். சேஷையாவின் இசை விரதம்,. சாரங்கனின் இசை கோட்டைக்குமேல் காற்றில் துடிக்கும் கொடி. அவன் தந்தையின் இசை மூடியவாயிலில் முகம் உறைந்து தெரியும் சிலை. …. நம்முடைய பண்பாட்டின் மையமான ஒரு இடத்தை ஐரோப்பாவின் பண்பாட்டின் சாரமான ஒரு புள்ளியுடன் உரையாடவைக்கும் பாரீஸுக்குப்போ எந்தெந்த கோணத்தில் எல்லாம் பேசப்பட்டிருக்க வேண்டிய நாவல். உண்மையிலேயே தெரியாமல் கேட்கிறேன் நண்பர்களே, நாம் பெரிதும் கொண்டாடிக் கொண்டிருக்கும் தமிழ் சிற்றிதழ் இலக்கியச்சூழலில் இத்தனை ஆணித்தரமான ஒரு பண்பாட்டுப் பிரச்சினையைப் பேசிய இன்னொருநாவல் எது? … ஜெயகாந்தன் இசைகுறித்துச் சொல்லும் நுண்ணிய வரிகளை இந்த பண்பாட்டு மோதலின் அல்லது உரையாடலின் வெளிப்பாடுகளாக வாசிக்கமுடிந்தால் நாம் அடைவது முக்கியமான ஒர் இலக்கியப்பிரதியை.

------ ஜெயகாந்தனில் பாரதி நிகழ்வது ஓர் அற்புதம். எதிரர்பாராமல் சொடுக்கப்படும் சாட்டையின் ஒலி. பாரதியின் வரிகளை அவர் ஒவ்வொருமுறையும் புதியதாகக் கண்டடைகிறார் என்று கண்டிருக்கிறேன். … “பாரதி பாரதி என்கிறீர்களே, பாரதி எழுதியிருக்காவிட்டால் என்ன செய்திருப்பீர்கள்?” என்று யாரோ கேட்டபோது “நான் எழுதியிருப்பேன்” என அவர் சொன்னதாகச் சொல்வார்கள். … நானே அவரிடம் சொல்லியிருக்கிறேன். பாரதி பாடல்களை அவர் பாடும்போது அவரது சொந்தக்கவிதைகளை பாடுவது போலிருக்கிறது என்று, “ஆம், அவை என் சொந்தக்கவிதைகள். அவை நாமனைவருக்குமே சொந்தமானவை என்றாலும் எனக்கு ஒரு தனியுரிமை உண்டு. தந்தை ஊருக்குத்தானமாககொடுத்த நிலத்தில் நின்றபடி என் தந்தை கொடுத்த நிலம் இது என்று உணரும் மகனைப்போன்று நான் உணர்கிறேன்” என்றார் ஜெயகாந்தன்.

அறுபது எழுபதுகளில் உலகை தழுவி நிறைத்த அந்த எழுச்சிக்கு வேறெந்த தமிழிலக்கியப் பதிவாவது நமக்கு உண்டா? ”இங்கிருக்கவேண்டும் என்பதற்காக எழுதவந்தவன் அல்ல நான். நான் வாழவேண்டும் என நான் எழுதவில்லை. என் மக்கள் வாழவேண்டுமென நான் எழுதினேன். அவர்கள் வாழத்தொடங்கிய பின் இவ்வெழுத்துக்கள் பொருளிழந்து போகும் என்றால் அதுவே அவற்றின் சிறப்பு என்றே சொல்வேன்”

அக்கினிப்பிரவேசம் ஜெயகாந்தனின் புகழ்பெற்ற சிறுகதை. … அவள் விரும்பித்தான் அவனுடன் செல்கிறாள். விரும்பி என்றால் நேரடியாக விரும்பி அல்ல. அவள் மேல்மனம் விரும்பவில்லை. அது பயப்படுகிறது. தவிர்க்க நினைக்கிறது. அவள் ஆழ்மனம் விரும்புகிறது. ஆழ்மன இச்சையை மேல்மனதின் எச்சரிக்கையால் கட்டுப்படுத்தும் அளவுக்கு அவளுக்கு முதிர்ச்சி இல்லை, அவ்வளவுதான். …. அன்னை நீரூற்றி அவளைக் குளிப்பாட்டுகிறாள். ஆனால் அப்போது அவள் வாயில் அவன் கொடுத்த சூயிங் கம் ஒன்றை மென்றுகொண்டிருக்கிறாள். ‘சீ கருமம், அதை துப்பு’ என்கிறாள். நண்பர்களே, அவள் அசைபோடுவது எதை? எவ்வளவு பெரிய படிமம்! எந்த விமர்சகராவது அதைச் சுட்டியிருக்கிறாரா என்று நானும் பார்த்திருக்கிறேன். நான் பத்தாண்டுகளுக்கு முன் ஜெயகாந்தனைப்பற்றி எழுதிய கட்டுரையில்தான் அதை முதன்முதலாகச் சுட்டிக்காட்டினேன். வாசகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கிளர்ச்சி அடைந்தனர். அந்தக்கதை இப்போதுதான் புரிகிறது என்றனர். வெளிவந்து நாற்பதாண்டுக்காலம் கழித்து. இன்னமும் வாசிக்கப்படாத ஜெயகாந்தன் கதைகளே அதிகம் என்று சொன்னால் நம்புங்கள். … அக்னிப்பிரவேசத்திலேயே எத்தனை உட்குறிப்புகள். அவள் பெயர் கங்கை. பாவங்களை கரைப்பவள். ஆகவே பாவங்களுக்கு அப்பாற்பட்டவள் அவள். கங்கைக்குப் பங்கமில்லை என்ற சொல் இன்றைக்கும் நம்மிடம் உண்டு. அக்னிப்பிரவேசம் என்பது சீதை செய்தது. இங்கே அக்கினியாக நிற்பது நீர். நீரெல்லாம் கங்கை அல்லவா? … அந்தக்கதை அத்தனை பெருங்கொந்தளிப்பை ஏன் உருவாக்கியது? அதிலுள்ள முக்கியமான ஒரு பண்பாட்டுக் குறிப்பால்தான். அவளை தொடர்ந்து அம்மன் என்கிறார். செப்புத்திருமேனியில் வடித்த கன்னியாகுமரி, மீனாட்சி, உமை போன்ற அம்மன் சிலைகளைக் கண்டிருக்கிறீர்களா? சிறிய முலைகள். சிறிய தோள்கள். அப்படியே ஒரு கையால் எடுத்துவிடக்கூடியவள் போல, அம்மன் போல அவளிருந்தாள் என்கிறாள் ஜெகே. அம்மன் நீரில் நனைந்து சாலையில் காத்திருக்கிறது. … அவளைக் கவரவந்தவன் இந்திரன் . பிரபு. இந்திரனை பிரபு என்பது நமது மரபு. “தெரிந்துதான் பெயரைப்போட்டீர்களா?” என்று கேட்டேன். “ஆமாம், இந்திரன் தேவப்பிரபு அல்லவா?” என்றார். அம்மனை இந்திரன் கவரும் ஒரு புதிய புராணம். எவ்வளவு சீண்டக்கூடிய கதை. எத்தனை அராஜகமான கதை. அம்மன் என்றும் கன்னிமை என்றும் நம் மரபு சொல்லும் அனைத்தையுமே உடைத்து முன்னால் வைத்துவிடுகிறார் ஜெகே. அதுதான் அந்தக்கதை.

சித்தர்களையும் பாரதியையும் ஜெயகாந்தனைப்போல போட்டுக்கலக்கிக் குலுக்கி வைக்கும் பிறிதொருவரை நான் கண்டதில்லை.

நூறு நூறு ஓங்கூர் சாமிகளை தன் மடியில் அமர்த்திய அந்த ஆலமரத்துக்கு வணக்கம்.

அதன் நிழலெனும் ஞானபீடம் அமர்ந்த ஆசானுக்கு நினைவஞ்சலி.






*

832. என் வாழ்வின் 14% இங்கே தான் .......



 

*







*




24.4.2005-ல் முதல் பதிவு. அதுவும் ஆகிப் போச்சு 10 வருஷம்.

இதற்காக ஏதாவது ஸ்பெஷலா எழுதணும்னு ஆசை. அட .. பத்து வருஷம் ஆகிப் போச்சே ..கொண்டாடிலாம்னு நினச்சா .... என்ன எழுதிறதின்னே தெரியவில்லை. அதாவது பத்து வருஷத்துக்கு முன்னால் எப்படி திரு திருன்னு ...முழிச்சிக்கிட்டு நின்றேனோ ... அப்படியே அதே நிலையில் இன்னும் நின்று கொண்டிருக்கிறேன் என்று புரிந்தது. என்ன எழுதுவது, எப்படி எழுதுவது என்று ஏதும் தெரியாமல் பதிவு ஆரம்பிக்க வேண்டுமென்ற ஒரே காரணத்திற்காக ப்ளாக் ஆரம்பித்தேன். அதாவது பத்து வருஷத்தில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் நின்ன இடத்தில இருந்தே ஒடிக் கொண்டிருந்திருக்கிறேன். அடப்பாவின்னு என்னையே நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டேன்.

பத்து வருஷத்திற்கு முன் மெரீனா கடற்கரையில் பதிவர்கள் கூட்டம் என்று போட்டிருந்தது. அனேகமாக அது ஒரு மார்ச் மாதமாக இருந்திருக்க வேண்டும். சென்னை செல்லும் வாய்ப்பும் வந்தது. நானோ பதிவரல்ல. இருந்தும் ஆனானப்பட்ட முன்னிலை எடுத்த அந்த பதிவர்களின் அனுமதியின் பேரில் - டிக்கட் இல்லாமல் பயணம் செய்வது போல் - அவர்களோடு உட்கார்ந்து கொண்டேன். பத்துப் பன்னிரண்டு பேர் வந்திருந்தார்கள். வந்திருந்தவர்களில் சிலர் மட்டும் நினைவுக்கு வருகிறார்கள். மறைந்த டோண்டு, மாலன், பத்ரி, தமிழ் சசி, திருமதி ராமச்சந்திரன் உஷா.

அந்தப் பதிவர்கள் அன்று பேசியதில் பலவும் தலைக்குமேல் காற்றாகப் பறந்து போயின. அடிக்கடி ‘யுனிகோட்’ என்றெல்லாம்சொல்லிக் கொண்டிருந்தார்கள். அது வீசை எவ்வளவு என்று கேட்கும் நிலையில் நான் இருந்தேன். அவர்கள் பேசிய போது ஒன்று மட்டும் காதில் நன்றாக விழுந்தது. நானூத்தி சில்லறை ஆட்கள் பதிவர்களாக இருக்கிறார்கள் என்றும், இன்னும் அவர்கள் விரைவில் பலுகிப் பெருத்து விடுவார்கள் என்று சொன்னதும் நன்றாக நினைவில் இருக்கிறது.

அந்த நிமிடத்தில் ஒரு முடிவெடுத்தேன். முதல் 500 பதிவர்களுள் ஒருவனாக ஆகி விடுவது என்று தீர்மானித்தேன். ஆக, பதிவெழுத ஆரம்பிக்கும் போது அதை எழுத வேண்டும் ... இதை எழுத வேண்டும் என்றெல்லாம் நினைக்கவில்லை. உள்ளே நுழைய வேண்டும் என்று மட்டும் நினைத்தேன். எண்ணித் துணிக கருமம் என்றில்லாமல் முதலில் கருமம் ... பிறகு எண்ணம் ... என்று ரிவர்ஸ் ஆர்டரில் நினைத்துக் கொண்டு, காலைத்தூக்கி உள்ளே வைத்தேன்.



காலைத் தூக்கி வைத்தது நல்லதாயிற்று. ஓய்வு பெற்ற பிறகும் வாழ்க்கை ஒரு அர்த்தத்தோடு ஓடிக்கொண்டிருக்கிறது. ஓய்வு என்றாலும்,  சோர்வு என்ற எண்ணமின்றி இன்னும் “ஓடிக்” கொண்டிருக்கிறேன். பதிவரானான பின்பு முதலில் குறைந்திருந்த வாசிப்பு அதிகமானது - கருத்துச் சண்டைகள் போடும்போது - கருத்துத் திரட்டலுக்காக நிறைய வாசிக்க வேண்டியதாயிற்று. வாசித்ததை எழுத்தாக்கும் போது மகிழ்ச்சி. அதற்காகத் தொடரும் அடுத்த ’சண்டை’க்கும் அதே மகிழ்ச்சியுடன் தயாராகிறேன். ஆனாலும் இப்போது எதிர்க் கருத்துக்காரர்களின் தயவால்சண்டைகளும் இப்போது மிகவும் குறைந்து போய் விட்டன. இதுவரை  நல்ல ஓட்டம் தான். I enjoy it so much.

சில சமயங்களில் நேரம் கிடைக்கவில்லையே, அதைப் பற்றி .. இதைப் பற்றி எழுத வேண்டும். இன்னும் எழுதவில்லையே என்று ஒரு நினைப்பு வரும்போது என்னைப் பார்த்து நானே சிரித்துக் கொள்கிறேன் - ஓய்வு வாழ்க்கை அம்புட்டு பிஸியா போகுதாம் !!!

(பெருமாள் முருகன் பற்றி எழுத வேண்டுமென மாதக்கணக்கில் நினைத்துக் கொண்டே ..... இருக்கிறேன். எழுதணும்...)

பதிவுலகில் நிறைய வித்தியாசங்கள். வளர்ச்சி என்றாலே வித்தியாசம் தானே. ‘பழைய காலத்திற்கு’ rewind செய்ய  நினைத்தால் முன்பெழுதிய பதிவுகளுக்குப் போய் அங்குள்ள பின்னூட்டங்களை வாசிக்கும் ஒரு பழக்கம் வந்து விட்டது. ‘அந்தக் காலத்தில்’ பின்னூட்டங்கள் அதிகம் என்பதோடல்லாமல் they remain personal and close.

இப்போது பின்னூட்டங்கள் அதிகமாக வருவதில்லை; வரும் பின்னூட்டங்கள் பழைய காலத்துப் பின்னூட்டங்கள் மாதிரி இருப்பதில்லை. அப்போதெல்லாம் பின்னூட்டங்கள் எல்லாம் ஒவ்வொருவரின் கையெழுத்து மாதிரி ஒரு personal touch உடன் வரும். தோழமை அதிகமாக இருந்தது.

 ( இந்த பழைய கேசுகள் எப்போதுமே இப்படித்தான்; நேற்று நல்லா இருந்தது என்று தொடர்ந்து  ‘பினாத்துங்கள்’. Yesterdays were always sweeter for us. பாவம் நாங்க ... எங்கள உட்ருங்க ....)


 சரி ... அது அந்தக் காலம்!



 *

Thursday, April 23, 2015

831. எல்லைகளை விஸ்தரித்த எழுத்துக் கலைஞர்

*





*


*

இளைய ராஜாவிற்கு மிக்க நன்றி.







*

Monday, April 20, 2015

830. தருமி பக்கம் (26) - நான் ஒரு கணக்குப் புலியல்லவா ...?






*



 ஐந்தாம் வகுப்பில் லூக்காஸ் வாத்தியாரிடம் நல்ல பெயர் வாங்கினேன். ஆறாம் வகுப்பில் ஆங்கில ஆசிரியர் சந்தியாகு சாரிடம் நல்ல பெயர் வாங்கினேன். எட்டாவது வகுப்பில் ஆங்கில வாத்தியாரிடம் செமத்தியாக ‘அடி’ வாங்கினேன். (இந்தப் பழங்கதைகள் பற்றித் தெரிய வேண்டுமானால் இப்பதிவிற்குப் போக வேண்டும்.)  ஆனால் கணக்கு வாத்தியார் ‘சவுக்கடி’ சவரிமுத்து சாரிடம் ரொம்ப நல்ல பெயர் வாங்கினேன்.

சாருக்கு ஏன் சவுக்கடின்னு பெயர் வந்திச்சுன்னா, அவர் வேட்டி கட்டி, மேலே கோட் போட்டுதான் வகுப்பிற்கு வருவார். அவர் கோட்டுப் பைக்குள் ஒரு சவுக்கு மாதிரி ... ஏதோ ரப்பரில் செய்ததாம் ... அதை வைத்திருப்பாராம். எடுத்து அடிச்சார்னா ... அம்புட்டு தான். இப்படித்தான் சீனியர் பசங்க சொல்லியிருக்காங்க. ஆனாலும் அவரை ஒரு தடவை கூட சவுக்கோடு பார்த்ததில்லை. அதற்கும் ஒரு காரணம் சொல்லி விட்டார்கள். இப்போ கொஞ்சம் வயசாயிருச்சில்ல ... அதான் இப்போ அந்தப் பழக்கத்தை விட்டுட்டார் என்றார்கள்.


 என் கூட அந்த எட்டாம் வகுப்பில் சூரி அப்டின்னு ஒரு நண்பன் இருந்தான். முழுப்பெயர் சூரிய நாராயணன் அப்டின்னு நினைக்கிறேன். அவன் வீடு கூட இன்னும் நினைவில் இருக்கிறது. சிந்தாமணி டாக்கீஸ் இருக்கும்ல ... அதில இருந்து ரோட்ல வடக்குப் பக்கம் போனா நேவி பேனா - அந்தக் காலத்தில் ரொம்ப பேமஸ் பேனா அது; பேனா லீக்கே ஆகாது. இங்க் போட்டுட்டு கழுத்தை நிறைய சுத்திதான் மூடணும்.அதுனால லீக்கே ஆகாது - அந்தக் கம்பெனி இருக்கும். அதைத் தாண்டியதும் பிரியாணிக்கு இன்னைக்கு வரை ரொம்ப பேமஸ் ஆன ‘அம்சவல்லி பவன்’. அதை அடுத்ததும் முனிச்சாலை ரோடு வலது பக்கம் திரும்பும். அந்தத் திருப்பத்தில, முக்கில இருந்த முதல் வீடு. வீட்டு முன்னால அந்தக் காலத்து இரும்புக் கதவு - இழுத்து உட்டா மடங்கிக்குமே - அந்த இரும்புக் கதவு இருக்கும். (இப்போ சமீபத்தில் அந்த வீட்டைப் பார்த்தேன். அதே கம்பிக் கதவு இருந்தது. வீடு  பழசா, பயன்படுத்தப் படாமல் இருந்தது. பக்கத்து கடையில் கேட்கலாம்னு போனேன். சின்ன வயதுப் பையன் இருந்தார். வந்து விட்டேன்.இன்னும் புலன் விசாரணயைத் தொடரணும்னு ஆசை.)

நானும் சூரியும் நல்ல தோஸ்துகள். ஆனால் படிப்பில் நல்ல போட்டி. எனக்குத் தெரிந்து படிப்பில் நான் போட்டி போட்ட ஒரே ஒரு ஆள் சூரி மட்டும் தான்னு நினைக்கிறேன். நானும் அவனும் மாறி மாறி முதலிரண்டு இடங்களில் இருப்போம்.  ஆனால் எட்டு, ஒன்பதாம் வகுப்பிற்குப் பிறகு என் வாழ்வில் ஒரு பெரிய அஸ்தமனம் நடந்து, வாழ்கையின் திசையே முழுவதுமாகத்தான் மாறிப் போச்சே. அது ஒரு பெரிய சோகம். பெரிய வாய்க்காலில் திமிறலோடு வரும் தண்ணீரை ஒரு சிறிய வடிகாலில் திருப்பி விட்டு, அங்கு நீரோட்டம் வற்றிப் போய் ... அட .. அந்த சோகத்திற்குப் பிறகு வருகிறேன். ஆனாலும் இப்போது நினைத்தாலும் மனசு கஷ்டமாக இருக்கிறது. எப்படி இருந்த நான் அப்படி ஆகிப் போனேன்! :(

சவுக்கடி சாரிடம் ஒரு பழக்கம் இருந்தது. கணக்குப் புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு அத்தியாயத்திலும் முதல் மூன்று கணக்குகள் ... அதன் பின், கடைசி மூன்று கணக்குகள் என்று மாணவர்களை வீட்டுப் பாடமாகப் போட வைப்பார். அதற்கு முன் அத்தியாயத்தில் இருக்கும் ‘மாடல்’ கணக்குகளைப் போட்டுச் சொல்லிக் கொடுப்பார்.

எங்கள் கணக்குப் புத்தகத்தில் முதல் மூன்று கணக்குகளும் மிகவும் எளிதான கணக்குகளாக இருக்கும்; கடைசி மூன்றும் செம டஃப். முதல் மூன்றையும் போட்டு விட்டால் ‘பிரின்சிபிள்’ புரிஞ்சிருச்சுன்னு அர்த்தம். கடைசி மூணு கணக்குகளில் ஏதாவது ஒரு “பொடி” இருக்கும். அப்படித்தான் எங்க வாத்தியார் சொல்வார். இப்போதான் அது என்னன்னு புரியுது. அந்தக் கணக்குகள் எல்லாம் நம்ம analytical brain-யைத் தட்டி எழுப்புற கணக்குகளாக இருக்கும். அந்தக் கணக்குகள் போட்டுட்டா ‘பிரின்சிபிள்’களை முழுசா பிடிச்சிட்டோம்னு அர்த்தம்.

சார் முதல்ல மாடல் கணக்குகளை வகுப்பில் நடத்துவார். அதன் பின் முதல் மூன்று, கடைசி மூன்று கணக்குகள் வீட்டுப் பாடமாகக் கொடுக்கப்படும். அடுத்த நாள் வந்ததும் வீட்டுக்கணக்குகளை நாங்கள் போட்டு வந்திருக்கிறோமான்னு செக் செய்வார். அவரிடம் யாரும் பொய் சொல்ல துணிந்ததாக எனக்கு நினைவில்லை. அடுத்து, அந்த கணக்குகளில் ஏதாவது ஒன்றை வீட்டுக் கணக்கு நோட்டிலிருந்து காப்பி செய்து போர்டில் யாரையாவது எழுதச் சொல்வார். யாரென்று தெரியாது. அதனால் எல்லோரும் ஒழுங்காக வீட்டுக் கணக்கைப் போட்டு வந்து விடுவார்கள். இல்லாவிட்டால் சவுக்கடி விழுமே என்று ஒரு பயம். அவரும் அடிக்கப் போவது போல் கோட்டுப் பையினுள் கையை விடுவார். ஆனால் சவுக்கு வெளியே வந்து பார்த்ததில்லை.

எங்க சார் என்னையும், சூரியையும் ஏதும் வீட்டுக் கணக்கு பற்றிக் கேட்க மாட்டார். அதற்குப் பதில் எந்த அத்தியாயம் என்பார். நானும் சூரியும் வகுப்பில் அவர் நடத்தியிருக்கும் அத்தியாயத்தைத் தாண்டி இரண்டு அல்லது மூன்று அத்தியாயங்களில் வீட்டுக் கணக்குகளைப் போட்டிருப்போம்.


எனக்கும் சூரிக்கும் என்ன போட்டியென்றால் இருவரில் யார் அதிக அத்தியாயம் தாண்டியிருக்கிறோம் என்பது தான். தேர்வுகளிலும் நானும் அவனும் ஆங்கிலத்திலும், கணக்கிலும் நல்ல மார்க்குகள் வாங்குவோம். அதில் யார் முதல் மார்க் என்பது எங்களுக்குள் ஒரு போட்டி.

ம்ம் ... ம்.. அப்படி ஒரு காலம்... நான் நன்றாகப் படித்த காலம்.  பின்னாளில் அது ஒரு கனாக்காலமாகவே மாறிவிட்டது. அதுவும் சரியாகச் சொல்ல வேண்டுமானால் கணக்குப் புலியாக இருந்த நான் கணக்கைக் கண்டு பயந்து ஓடி ... அதனால் என் வாழ்க்கைப் பயணமே திசை மாறி விட்டது.

ஆசிரியர்களின் பங்களிப்பால் வாழ்க்கைப் பயணங்கள் மாறுவதுண்டு என்று சொல்வார்கள். ஒரு நல்ல ஆசிரியரின் கவனிப்பால் என் வாழ்க்கையிலும் ஒரு பெரும் திருப்பம் நடந்தது. ஆனால் அந்தத் திருப்பம் எனக்கு ஒரு நல்ல திருப்பமாக அமையாமல் போனது.  நல்ல ஆசிரியர் ... எனக்கு special attention கொடுத்தார். ஆனால் அது ஒரு very negative effect ஆகிப் போச்சு ...


என்ன ஆச்சுன்னா .......





*

Thursday, April 16, 2015

829. ஜெயகாந்தனின் பக்கத்தில் ......








*

1966-70களில் தஞ்சைக்கு அருகிலுள்ள புஷ்பம் கல்லூரியில் தான் என் ஆசிரியப் பணி ஆரம்பித்தது. தங்கியிருந்தது தஞ்சையில்.  அப்போதெல்லாம் கல்லூரிக்கு போய் வர புகைவண்டி மட்டும் தான் இருந்தது, தஞ்சையிலிருந்து ஏறத்தாழ 13 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த குடிகாடு என்ற ரயில் நிலையத்தில் இறங்கி அரை கிமீ நடந்து கல்லூரிக்குப் போவோம். கடைசி மூன்று வண்டிகளில் ஆசிரியர்கள் இருப்போம். மற்றதில் எல்லாம் மாணவர்கள். அது ஒரு விளையாட்டுக் காலம். ரயிலை நிறுத்துவதில் மாணவர்கள் கில்லாடிகள். ஏன் எதற்கு என்ற கேள்வியெல்லாம் கிடையாது. ரயில் நின்றதும் நல்ல ஆசிரியர்கள் எல்லோரும் ‘ஆஹா .. எனது வகுப்பு நடத்த முடியாமல் போச்சே’ என்றெல்லாம் வருத்தப்படுவார்கள்.

அது  என்னவோ போய்ச் சேர்ந்ததுமே பலரது மத்தியில் ஒரு black list-ல் உள்ள ஒரு  ஆளாக ஆகிவிட்டேன். மாணவர்கள் மத்தியில் மதுரைக்காரன் என்ற பெயரால் அப்படி ஆனதாகக் கேள்விப்பட்டேன். அதோடு படித்தது தியாகராஜர் கல்லூரி. அப்போது தான் -1965ல் - நடந்த இந்தித் திணிப்பு எதிர்ப்பில் முன்னால் நின்ற கல்லூரி என்ற முறையில் இன்னும் கொஞ்சம் ‘கெட்டப்’ கூடிப்போனது. போடுற சட்டைத் துணிமணி, வில்லன் போடும் ஷீ ஒரு சத்தம் போடுமே அதே மாதிரி நம்ம ஷுவும் சத்தம் போட்டால் நான் என்ன செய்ய முடியும். கல்லூரியே அப்போது ஒரு ‘ப’ வடிவத்தில் இருந்தது. வகுப்பு நடக்கும் போது நடந்து போகும் போது ஒரு சத்தம் போட்டால் நானென்ன செய்ய முடியும். 
மாணவர்கள், அதுவும் எண்ணிக்கையில் நிறைய உள்ள  பொருளாதார மாணவர்கள் என்னை ஒரு வில்லனாகப் பார்த்ததாக என் மாணவர்கள்  சொன்னதுண்டு.

மாணவர்கள் இப்படியென்றால் ஆசிரியர்கள் கதை வேறு மாதிரி. ரயிலில் நான், இயல்பியல் ஆசிரியர் ரங்கநாதன் என்ற பெயர் கொண்ட ரங்கமணி, தமிழ்த் துறை கண்ணையன் என்ற எங்கள் மூவர் குழுவிற்கு ரொம்பவே ‘நல்ல’ பெயர்.  கண்ணையன் பாவம் .. நல்ல பயல் தான். ஆனால் எங்களோடு சேர்ந்து அவனும் நாரோடு சேர்ந்த பூவாகி, அவனுக்கும் நார் வாசனையைப் பூசி விட்டார்கள். பெரிய சீனியர்கள் இருக்கும் ரயில் பெட்டிகளில் நாங்கள் பொதுவாக ஏறுவதில்லை; நாங்கள் ஏறினால் பலரும் அடுத்த பெட்டிக்குப் போய்விடுவார்கள். அப்படி ஒரு ‘நல்ல பெயர்’. அதற்காகவே பெட்டியில் கடைசியாக ஏறுவோம்.  வருவது போவதெல்லாம் ரயிலில் உட்கார்வது இல்லை.  பயணமெல்லாம் நடை பாதையில் தான்.

தமிழ்த் துறையில் கோவிந்த ராஜன் என்று ஒரு பேராசிரியர். எங்களை விட பத்தாண்டாவது மூத்தவராக இருப்பார். நல்ல பக்திமான். நெற்றி நிறைய நீரு. அதோடு ரயிலில் ஏறியதும் பக்கதில் இருப்போருக்கெல்லாம் பையில் இருக்கும் பொட்டலத்தில் இருந்து திருநீர்  தருவார். பாபா பக்தர். கம்பனின் பக்தன். எங்கள் பக்கம் பொதுவாகத் திரும்ப மாட்டார். எல்லோரும் அவரை குரு என்று தான் அழைப்பார்கள். அவரைப் பற்றி கண்ணையன் என்னிடம் சொல்லியிருந்தான். அவருக்கு கம்பன் மேலிருந்த எண்ணத்திற்கு நேரெதிராக ஜெயகாந்தன் மீது அவருக்கு வெறுப்பு. அவர் குடிக்கிறார்; கஞ்சா புகைக்கிறார் என்பது அவரது வெறுப்பிற்கான காரணம்.

நானோ அப்போது ஜெயகாந்தனின் தீவிர வாசகன்.அவர் மேல் அப்படி ஒரு மரியாதை. அந்த சமயத்தில் தினமணி கதிரில் வெளிவந்த ‘ரிஷிமூலம்’ முதலிரு பகுதிகளை வாசித்து புத்தகத்தைச் சேமித்து வைக்காமல் போட்டு விட்டேன். நான்கு வாரங்களாக வந்து முடிந்ததும் பழைய இரு இதழ்களுக்காக பழைய புத்தகக் கடைகளுக்குப் படையெடுத்தது இன்னும் நினைவில் இருக்கிறது. காலத்திற்கு முந்திய கதை என்று நினைத்தேன். ரிஷிமூலத்தை அப்போது எத்தனை முறை வாசித்திருப்பேன் என்று தெரியவில்லை. அதிலும் ஆரம்பத்தில் ராஜாராமன் திண்ணையில் படுத்திருக்கும் கோலத்தை விவரித்திருப்பார். ஒருக்களித்துப் படுத்துக் கொண்டு .... எல்லாம் இன்னும் நினைவில் இருக்கிறது.

ஒரு நாள் ரயிலில் வழக்கமான இடத்தில் இருந்து வந்து கொண்டிருந்தோம். எங்களுக்குப் பின்னால் குரு நின்று கொண்டிருந்தார். நான் ரங்கமணி, கண்ணையனிடம் ‘கம்பன் பெரும் குடிகாரர் தெரியுமாடா? என்றேன். அதோடு எழுதும் போது ஒரு பக்கம் மதுவும் இன்னொரு பக்கம் மங்கையும் இருக்க வேண்டுமாம் என்றேன். எதிர்பார்த்தது மாதிரியே குருவுக்குக் கோபம் வந்தது. வாதங்கள் ஆரம்பித்தன. கம்பனுக்குப் பக்கத்தில் என்ன இருந்தது இன்று நமக்குத் தெரியாது; கம்பனின் படைப்பு மட்டும் தான் நம் முன் நிற்கிறது. நாளைக்கும் இதே போல் தான் ஜெயகாந்தனின் படைப்பு மட்டும் நிற்கும்.படைப்பைப் பாருங்கள் என்றேன். வாசிக்காமலேயே ஏனிப்படி ஒரு கருத்து உங்களுக்கு; வாசித்துப் பாருங்கள் என்றேன். என்ன ஆச்சோ தெரியவில்லை. வாசிக்க ஆரம்பித்தார்; பிடித்தும் போயிற்று. குருவும் எனக்குத் திருநீர் தர, நானும் வாங்கி பூசிக்கொள்ளும் அளவிற்கு நல்ல நண்பராகி விட்டோம்.



*************

 அமெரிக்கன் கல்லூரியில் ஜெயகாந்தன்


*************

எழுபதுகளின் கடைசியில் கலைஞருக்கு டாக்டர் பட்டம் அண்ணாமலை பல்கலையில் கொடுக்கப்பட்டு அதனால் ஒரு போராட்டமும் நடந்து முடிந்திருந்த சமயம்.

ஜெயகாந்தன் எங்கள் கல்லூரிக்கு அழைக்கப்பட்டிருந்தார். வரவேற்பு வளைவு ஒன்றில் ‘சிறுகதை மன்னனே வருக’ என்று எழுதப்பட்டிருந்தது. அதைப் பற்றிப் பேசினார். இந்தப் பட்டங்கள் மேலெல்லாம் எனக்கு எந்த வித ஈர்ப்பும் இல்லை. அதுவும் நான் என்னை சிறுகதைச் சக்கரவர்த்தி என்று நினைத்துக் கொண்டிருக்கலாம்; நீங்களோ என்னை மன்னனாக்கி விட்டீர்கள் என்று சொல்லி விட்டு .. போதும் .. போதும் .. பட்டம் கொடுத்து நடக்கும் தகராறு தெரியாதா உங்களுக்கு! என்று சொல்லிச் சென்றார்.



*************

அனேகமாக 1980களில் ...

அரங்கு நிறைந்த ஒரு கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தார். பின்னாலிலிருந்து ஒரு பெரும் விசில் வந்தது. அப்பக்கம் கையை உயர்த்தி ‘சைத்தானே’ என்றார். ஒரே அமைதி. அதுவே அவருக்குப் பிடிக்கவில்லை போலும். ‘நீ விசில் அடிக்கவில்லை;  ஒரு சைத்தான் அடிக்க வைத்தது; விரட்டி அடி’ என்றார். மீதிக்கூட்டமும் அழகாக நடந்தது.

*************


கூட்டத்தில் பேசும் போது நான் பொய் பேசுவதில்லை என்றார். கூட்டத்திலிருந்து ஒரு குரல் ‘இதுவே ஒரு பொய்’ என்று ஒலித்தது. கூட்டம் அமைதியாகி அவரது பதிலுக்காகக் காத்திருந்தது. 'I accept; but I don’t agree' என்றார். ஆங்கிலப் புலமை கொண்ட எங்கள் கல்லூரி முதல்வர் தங்கராஜ் அவர்களுக்கு இந்தச் சொற்றொடர் மிகவும் பிடித்துப் போனது. கூட்டம் முடிந்ததும் அதனைச் சொல்லிச் சொல்லி மகிழ்ந்தார்.



*************

தொன்னூறுகளில் ஒரு முறை ஆசிரியர்கள் கூட்டத்தில் மட்டும் பேசினார். அப்போது அவர் எழுதுவதை ஏறத்தாழ நிறுத்தியிருந்தார். அதற்கு முன்பே அவர் சங்கர .. சங்கர .. எழுதும் போது அவரது புதுப்படைப்புகளை வாசிப்பதை நிறுத்தி விட்டிருந்தேன்.

கூட்டத்தின் ஆரம்பத்தில் எல்லோரும் நின்று கொண்டே தேநீர் குடித்துக் கொண்டிருந்தோம். அப்போது அவரது மீசையும் பெரியதாக இருந்தது. ஆனால் வெள்ளையாக இல்லை என்று நினைக்கிறேன். அது கருமையாக இருப்பதை விட வெள்ளையாக இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தேன்.

அவருக்கு அடுத்துப் பக்கத்தில் சென்றேன். மெல்ல - கொஞ்சம் பயந்து கொண்டே - ஒரு கேள்வி கேட்டேன்.

‘ஏனிப்போது எழுதுவதில்லை?’ என்றேன்.

பக்கத்தில் நின்ற என்னை திரும்பிப் பார்த்தார். பார்த்தார் என்று சொல்வதை விட முறைத்தார்.

சிங்கம் சீறியது: ”அது கொள்வாரைப் பொறுத்தது”, என்றார்.

அவருக்குப் பக்கத்தில் நின்றதாலோ என்னவோ ... எனக்கும் ‘தமிழ் உடனே   கை கொடுத்தது’!

‘கொள்வார் என்பதனால்தான் கொடுப்பாரைக் கேட்டேன்’ என்றேன். 

சீற்றம் குறையாமல் சிங்கம் ஓரிரு வினாடிகள் இருந்தது.

என் அதிர்ஷ்டம்.. ஒலி பெருக்கியில் கல்லூரித் தலைவர் கூட்டம் ஆரம்பிக்கப் போகிறது’ என்று கூறினார். பிழைத்துக் கொண்டேன்!


*************

ஆனால் இன்னொரு ஆச்சரியம். கூட்டம் ஆரம்பித்து முடிந்த பின் கேள்வி நேரம். நான் கேட்ட அதே கேள்வியை இன்னொரு பேராசிரியர் கூட்டத்தில் ஒருவராக எழுந்து நின்று கேட்டார்.

இந்த முறை சிங்கம் சீறாமல் பதில் சொன்னார்.



*************







Monday, April 06, 2015

828. காபிர்களை காணும் இடங்களில் வெட்ட வேண்டுமா? -- ஒரு பின்னூட்டம்








*


 வலையுகம் என்ற வலைத்தளத்தில் காபிர்களை காணும் இடங்களில் வெட்ட வேண்டுமா? என்ற ஒரு பதிவு வந்திருந்தது. வாசித்து ஒரு பின்னூட்டம் இட்டிருந்தேன். ஏற்கப்படவில்லை. அதனால் இரண்டாம் முறையும் அதே பின்னூட்ட்த்தை அனுப்பினேன். அதுவும் ஏற்கப்படாததால் அவரிடம் சொன்னபடி அதைத் தனிப் பதிவாக என் தளத்தில் இட்டு விடுகிறேன். தொடர்பு வேண்டியவர்கள் முதலில் அப்பதிவைப் படித்து விட்டு வந்தால் நலம்.

அவருக்கு நானனுப்பிய ஒரு குறிப்பு; ஒரு பின்னூட்டம் இட்டிருந்தேன். அதற்கு இங்கு இடமில்லையோ என்று நினைக்கிறேன். இருந்தும் இரண்டாம் முறையாக மீண்டும் அதே பின்னூட்டம் ..... இப்போதும் வரவில்லையெனில் மூன்றாவது முறையாக அதே பின்னூட்டத்தை உங்கள் பதிவோடு இணைத்து என் தளத்தில் இட்டுக் கொள்கிறேன். சம்மதம் தானே?


***


மூன்றாவது பத்தியை முழுமையாக ஒத்துக் கொள்கிறேன். மத நூல்களில் நல்லது சொல்லாமல் இருக்க முடியாது.. எல்லா மத நூல்களும் நல்லவற்றை மட்டும் தான் போதிக்கும்.... மத நூல்களில் நல்லது சொல்லப்படுவதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை.

ஆனால் வேத நூலில் சண்டை போடுவது பற்றி இத்தனை இருக்கிறதா என்று உங்கள் பதிவைப் படித்து அதிகமாகத் தெரிந்து கொண்டேன். நன்றி. மத நூல்களில் எததெதற்கு அட்டவணை போடுவது? எப்போதெல்லாம் அன்பைக்காட்ட என்று அட்டவணை இட்டால் சரி; ஆனால் எப்போதெப்போதெல்லாம் போரிடலாம் என்பது கொஞ்சம் வேடிக்கையாகவும், நிறைய அச்சமாகவும் இருக்கிறது. வித்தியாசமான வேத நூல்! வேறெந்த மத நூலிலும் இப்படி ஒரு அட்டவணையைப் பார்க்க முடியாதென நினைக்கிறேன். (கீதையை இங்கு உதாரணம் காட்ட மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.)

குரான்: 2:190. 9: 13; 2:191, 22:40; 2:192; 4:75, 22:39-40; 8:61; 2:256, 9:6, 109:6; 2:190, 9:12,13…. எல்லாம் நீங்கள் கொடுத்த பட்டியல் – கடவுளே பட்டியலிட்டு விட்டார் எப்போதெல்லாம் சண்டையிடலாமென்று!

//ஒரு சமுதாயத்துடன் இன்னொரு சமுதாயம் அநியாயமாகப் போருக்கு வந்தால் அவர்களை எதிர்த்துப் போராட வேண்டும் என்பதில் என்ன தவறு// .. இது ஒரு மதப் புத்தகமா… இல்லை … அரசியல் புத்தகமா....? மதப் புத்தகத்தில் இப்படியா? சண்டை போடு ... கொல்லு .... ஆச்சரியம் தான். வேறு எந்த மதத்திலும் இல்லாத போராட்டம்... யுத்தம் ... கொலை ... அடிமைத்தனம் ...நல்ல தொடர்ச்சி தான்.

மதத்தைப் பரப்புவதற்குத் தானே இத்தனை சண்டையும் சொல்லப்பட்டுள்ளன? “கடவுளுக்கே” இது பிடிக்காது என்று தான் நினைக்கிறேன்.

//( அவர்கள் உங்களுடன் போருக்கு வந்தால் அவர்களைக் கொல்லுங்கள்! (ஏக இறைவனை) மறுப்போருக்கு இதுவே தண்டனை. // 
... ஆஹா...!  உங்கள் கடவுளை மறுத்தால் ... கொலை தான்!

//போர் என வந்துவிட்டால் எல்லாவிதமான தர்மங்களையும் தூக்கி எறிவது உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. // 

பின்னிட்டீங்க ...! நல்ல மத நூல்! தர்மங்களைக் காக்கும் மத நூலில் …இப்படியா ! நம் நாட்டின் மரபுப்படி பெண்கள், குழந்தைகள், கால்நடைகள், முனிவர்கள்(?) -- இவர்களையெல்லாம் போரில் கொல்லக்கூடாது என்ற மரபை வைத்திருந்தார்களே! ஆனால் உங்கள் போரில் இறந்த எதிரியின் மனைவியை உங்கள் நபி அந்த இரவிலேயே பெண்டாண்டது உங்கள் மரபில் உள்ளதே ... அதற்கும் காரணம் கண்டுபிடிப்பீர்கள் .. இல்லையா?

//எந்த அரசாவது தன்னுடன் போருக்கு வரக் கூடியவர்களை எதிர்த்துப் போராடாதிருக்குமா? // ஆக, குரான் ஒரு அரசியல் நூலா அல்லது மத நூலா? மீண்டும் கூறுகிறேன்: மதப் புத்தகத்தில் இப்படியா? சண்டை போடு ... கொல்லு .... ஆச்சரியம் தான்.

மனிதனால் திரிக்கப்பட்டு விட்ட பைபிளில்  last but one நபி என்று நீங்கள் சொல்லும் ஏசு தன் சீடர்களிடம் எதிர்த்துப் போராட வேண்டாம்; கத்தியை எடுப்பவன் கத்தியால் சாவான் என்று அறிவுறுத்தியதாக உள்ளதே! எந்த உயிரையும் கொல்லாதே என்றாரே புத்தர். சமணர்களோ அதற்கும் மேலே .. பெருங்கருணையோடு  இருந்தார்களே...! ’வாடிய பயிரைக்கண்ட போதெல்லாம் வாடினேன்’ என்றாரே இராமலிங்க அடிகளார். ’காக்கை குருவி எங்கள் ஜாதி’ என்றானே மீசைக்காரன்.

ண்டை போட்டு எல்லோரையும் என் வழிக்குக் கொண்டு வாருங்கள் என்று குரானில் உள்ளது போல் யாரும் சொல்லவில்லையே! அடுத்த பத்தியில் வரும் உங்கள் மேற்கோள் சொல்வது அது தானே?

 //...  அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்யும் வரை அவர்களில் (எவரையும்) உற்ற நண்பர்களாக ஆக்காதீர்கள்! அவர்கள் புறக்கணித்தால் அவர்களைப் பிடியுங்கள்! அவர்களைக் கண்ட இடத்தில் கொல்லுங்கள்! ... // 

இப்படிச் சொன்னால் ,என் வழியில் வரச்சொல். ……இல்லையேல் தீர்த்து விடு என்பது தானே பொருள்?  ( உங்கள் தலைப்பிற்கு இதுதானே பதில்!)

நீ வேறு; அவன் வேறு என்று மத நம்பிக்கைகள் வழியே பிரித்துச் சொல்லுதல் சரியா?

  //தனி நபர்களோ, குழுக்களோ ஜிஹாத் என்ற பெயரில் வன்முறையில் இறங்கினால் அது தவறாகும்.//

 இப்போது நடப்பது என்ன? ஐ.எஸ். - சரியான இஸ்லாமிய வழியில் போகவில்லை என்பீர்கள்; தலிபான் - சரியான முஸ்லீம்கள் இல்லை என்பீர்கள்; அல் கொய்தா – சரியில்லை என்று சொன்னாலும் சொல்வீர்கள்; Boko Haram - குழுவினரை என்னவென சொல்வீர்கள் என்பதும் தெரியாது; ஜிகாதி என்ற பெயரில் நடந்து வரும் மதக் கொலைகளுக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என்பீர்களோ? வஹாபியிசத்தின் கெடுபிடிகள் உங்களுக்கு ஏற்றது தானே!

//அவர்களின் மீளுதல் அவர்களின் இறைவனிடமே உள்ளது. அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அவன் அவர்களுக்கு அறிவிப்பான்.//
ஓ! எத்தனை இறைவன்கள் இப்படி இருக்கிறார்கள்?

********


 கண் திறக்க வேண்டும் ... எல்லோராலும் முடியாது என்பது தான் சோகம்.




  *