Thursday, May 31, 2007

219. யாரைத்தான் நொந்து கொள்வதோ... ? 1

இப்பதிவோடு தொடர்புள்ளாதாய் முன்னொரு பதிவிட்டேன்(217). முதலில் அதைப் படித்துவிட்டு வந்தால் இப்பதிவு இன்னும் கொஞ்சம் பொருளுள்ளதாய் இருக்குமோ?

நீதிமன்றம் கொடுத்த ஒரு ஆணையின் படி மதுரையில் உள்ள பல தெருவோர ஆக்கிரமிப்புகள் இடிக்கப் பட்டன. அதென்னவோ எப்பவுமே இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுவதைப் பார்க்கும்போது - அது குடிசையாயிருந்தாலும், கோபுரமாயிருந்தாலும் - எனக்கு ஒரு மகிழ்ச்சி. பல கதைகள் அந்த சமயத்தில் வெளி வந்தன. ஒரு தெருவோரக் கோயிலை இடித்த போது அந்தக் கோயிலுக்குக் கீழே ஒரு ரகசிய இருப்பிடம் இருந்ததாகவும், அது அந்தக் கோயிலை, அதிலுள்ள சாமியைக் 'காப்பாற்றி' வந்த ஒரு தாதாவின் மறைவிடமாகப் பயன்பட்டு வந்ததாகவும், அதுனுள்ளே பல ஆயுதங்கள், ரகசிய torture chamber ஒன்று இருந்ததாகவும் சேதிகள் வந்தன.அந்தக் கோயிலை இடித்ததற்காக அந்தப் பகுதி மக்களும், சிறப்பாக வியாபாரிகளும் மிகவும் சந்தோஷப் பட்டார்களாம். இந்தக் கோயில்களைப் பற்றிக் கேள்விப் படும்போது பராசக்தி வசனம்தான் நினைவுக்கு வருகிறது.

இன்னொன்று - பிளாட்பாரம் முழுவதையும் ஆக்கிரமித்து, ரோட்டையும் கொஞ்சம் விழுங்கி ஒரு கோயில். நான் மிக அடிக்கடி அதனைத் தாண்டிப் போய்க் கொண்டிருந்தாலும்,அந்த எந்த சாமிக்குரிய கோயில் என்பது இதுவரை எனக்குத் தெரியாது. ஏனெனில் அந்தக் கோயிலை வெளியிலிருந்து பார்க்கும்போது பிரமாண்டமாகத் தெரிவது சாமி சிலையல்ல; சாமியாக ஆக்கப் பட்ட ஒரு சமூக, அரசியல்காரரின் சிலைதான். அதை இடிக்க நகராட்சி ஆட்கள் வந்தபோது நடந்ததாக நான் கேள்விப் பட்டது: அந்தக் கோயிலைச் சார்ந்தவர்கள் தங்களுக்குள் பேசி, 'நீங்கள் இடிப்பதை விட நாங்களே இந்தக் கோயிலை முழுவதுமாக இடித்து விடுகிறோம்' என்று கேட்டுக் கொண்டார்களாம். அதிகாரிகளும் ஒத்துக் கொண்டு அந்தச் சிலையின் கால்பகுதியில் உள்ள ஓரிரு ஓடுகளை மட்டும் உடைத்துவிட்டு - ஒரு formality-க்குத் தான் - சென்றார்களாம். கதை அங்கேயே முடிந்துவிட்டது. அந்த சாமி தெரியாத அந்தக் கோயிலும், அதனுள்ளே இருந்த மனிதச் சிலையும் இன்னும் முழுவதுமாக பத்திரமாக இருக்கின்றன.

மாநகராட்சி அலுவலர்களுக்கு இடிப்பதற்காகச் செல்லும்போது போதுமான பாதுகாப்பு தரப்படவில்லை. அவர்கள் சிறப்புப் படி கேட்டு அது கொடுக்கப் படவில்லை. இடிக்கும் வேலைக்காக அவர்கள் வெளியே வந்தாலும் அலுவலக வேலையையும் பார்க்க வேண்டியிருந்ததால் அவர்கள் இந்த ஆக்கிரமிப்பை அகற்றும் வேலையில் தொடர விரும்பவில்லை. - இப்படி பல காரணங்கள் சொல்லப் பட்டன. அது பற்றாது என்பது போல் பின்னால் நீதிமன்றமும் பல தடைகள் இட்டதாகவும் சேதி. இதனாலெல்லாம் வெகு வேகமாக நடந்த அந்த ஆக்கிரமிப்பு அகற்றும் நல்ல வேலை நடுவிலேயே நின்று போனது.

இந்த வேலை ஆரம்பித்தபோது இருந்த வேகத்தைப் பார்த்து 'ஆகா, நம் மதுரைக்குப் புதுமுகம் கிடைக்கப் போகிறது' என்று சந்தோஷமாக இருந்த எனக்கு 'அடப் போங்கப்பா, இவ்வளவுதானா?' அப்டின்னு ஆகிப் போச்சு.

இதில் இன்னொரு பெரிய வருத்தம். நான் பார்த்த ஒரு தெருக்கோயில் இடிபடாமல் போனதுதான் எனக்கு மிக வருத்தம். ஏனெனில், அந்தக் கோயிலை அந்த இடத்தில் அப்படிக்
கட்டியதை நினைக்கும் போது atrocious என்ற வார்த்தைதான் எனக்குத் தோன்றியது. எப்படி இப்படி மனசாட்சி இல்லாமல், எல்லோருக்குமே இடைஞ்சலான ஒரு செயலை அவ்வளவு தைரியத்துடன், அனாசியமாக,just like that, தான்தோன்றித்தனமாகச் செய்ய முடியும் என்பதை என்னால் நினைத்தும் பார்க்க முடியவில்லை. அதிகாரங்களும், சட்டங்களும் யாருக்காக; அவைகளைச் செயல்படுத்த வேண்டிய சமூக அமைப்புகளும் எதற்காக என்றுதான் அதைப் பார்க்கும்போதெல்லாம் தோன்றும். பேருந்துகள் செல்லும் முக்கியமான ஒரு ரோடு; அதனோடு நிறைய குடியிருப்புகள் இருக்கும் பகுதியிலிருந்து இந்த ரோட்டோடு வந்து சேரும் இன்னொரு பெரிய ரோடு. இந்த முக்கூட்டின் நடுவில், சாலையைப் பெருமளவு மறித்து, ரோட்டின் மேல் கட்டப் பட்டுள்ள இந்தக் கோயில்; இப்படி எல்லோருக்கும் இடைஞ்சலாக இருக்கும் இந்தக் கோயிலுக்கு மிக அருகிலேயே ஒரு police outspost! அது எதற்காக இருக்கும் என்பதை நாமே கற்பனை செய்துகொள்ள வேண்டியதுதான். நீங்கள் பார்க்க சில படங்கள் -
Image and video hosting by TinyPic
படம் 1. நீங்கள் நம்பித்தான் ஆகணும். சரியாக 3 ரோடு சேருமிடத்தில் கோவில்.


Image and video hosting by TinyPic

படம் 2. மேற்கிலிருந்து வரும் இந்த ரோடு கோயிலின் பின்புறச் சுவரில் 'கடவுளே!' என்று முட்டி நிற்கிறது.

Image and video hosting by TinyPic

படம் 3. முட்டி முடிந்து நிற்கும் சாலை

Image and video hosting by TinyPic


படம் 4.தெற்கிலிருந்து வரும் இப்பகுதிக்குரிய இம்முக்கிய சாலையின் முதுகில் முளைத்த கட்டியாய் தெருவை அடைத்து நிற்கும் கோவில்


Image and video hosting by TinyPic

படம் 5. அதே தெரு; வடக்கிலிருந்து தெற்காய். கோவிலுக்கு மிக அருகில் ஒரு சின்ன போலீஸ் அவுட் போஸ்ட். கடவுளைக் காக்கவா? கடவுளைக் காப்பவர்களைக் காக்கவா? (கடவுளுக்காய்?!) 'காத்திருந்து போகவும்' என்று ஒரு போர்ட் வேறு!

எத்தனை பேர் கடவுள் வழிபாட்டிற்காக இந்தக் கோயிலுக்கு வருகிறார்கள். எத்தனை மக்கள் நித்தம் நித்தம் இதனைக் கடந்து செல்கிறார்கள். அதில் எத்தனையோ பேர் சட்டம் ஒழுங்கோடு தொடர்புள்ள வேலையில் உயர் பதவிகளில், மாநகராட்சியின் உயர்பதவிகளில், நீதிமன்றங்களோடு தொடர்புள்ள உயர்நிலையில் இருப்பவர்களாக இருக்கும். ஏன் இந்த சமூக மீறலைக் கேள்வி கேட்க யாருக்கும் தோன்றவில்லை என்பதுதான் எனக்குப் புரியாத ஒரு விஷயம்.

அதோடு இக்கோவிலைப் படம் எடுக்கப் போகிறேன் என்று அந்தப் பகுதியில் உள்ள நண்பனிடம் சொன்னேன். அதற்கு அவன் 'உனக்கு ஏண்டா, இந்தப் பொல்லாப்பு. அப்படியே எடுப்பதானால் சுத்தி முத்தி பார்த்து எடு' என்று பயமுறுத்தினான். அதோடு 'வேணும்னா ராத்திரி வந்து எடேன்' என்றான் அப்பாவியாக! ஆக நான் படம் எடுக்கும்போது கொஞ்சம் சுற்றுச் சூழல் எல்லாம் கொஞ்சம் பார்த்துக்கொண்டு, ஏதோ ஒரு investigative journalism செய்யும் போது உண்டாகும் tension-ஓடுதான் படங்களை வேக வேகமாக எடுத்தேன்.




நாத்திகன் என்பதால் வரும் கோபமில்லை இது; ஒரு குடிமகனாக வரும் கோபம்.




பி.கு.

இப்பதிவுக்கு "நம் யாருக்கும் **** இல்லை." என்று தலைப்பிட நினைத்தேன். Fill up the blank என்பது போல் தலைப்பில் இடம் விட்டு அதை உங்கள் இஷடத்திற்கு நிறைவு செய்து கொள்ளச் சொல்ல நினைத்தேன். நாம் யாருக்கும் வெட்கம் / சுய ஒழுக்கம் / நியாய உணர்வு / தார்மீகக் கோபம் / தைரியம் / பொறுப்பு இல்லை - இப்படி ஏதாவது ஒன்றைப் போட்டு பூர்த்தி செய்து கொள்ளலாமே என்று நினைத்தேன்.

இன்னொரு பி.கு.

இந்தக் கோவில் முதலிலே இருந்து வேறு வழியில்லாமல் இந்த ரோடுகள் போடப் படவில்லை. ஏற்கென்வே இருந்துவந்த சாலைகளை மறித்து சமீபத்தில் எழுந்த கோவில் இது.


... ... ... ... ... தொடரும் ....
... ... ... ... யாரைத்தான் நொந்து கொள்வதோ ...2

Thursday, May 24, 2007

218. "டூர் திலகத்திற்கு"

மொதல்ல இந்தப் பதிவை படிச்சிட்டு வர்ரவங்களுக்கு மட்டுமே இந்தப் பதிவு ...

கண்மணி டீச்சர்,
Thanks for your report. வெள்ளை அறிக்கைன்னு மஞ்சள் பேப்பரில் மங்களகரமா எழுதி அனுப்பியதற்கு நன்றி.

My remarks on your tour: - but before that: அந்தப் பையன் அபி அப்பாவைப் பற்றிச் சொல்லும்போது //தருமி சார் ரிடையர் ஆனபிறகு ஹெ.எம் மா போடலாம்.அவ்ளோ அனுபவம் [சும்மாவா ஒவ்வொரு கிளஸ்லேயும் மும்மூனு வருஷமாச்சே// அப்டின்னு சொல்லியிருக்கீங்க. அதாவது நானும் அந்த மாதிரி படிச்சு வந்தவன் அப்டின்னு சொல்றீங்களோ? என்ன வச்சி காமெடி கீமெடி பண்ணலையே??!!


இப்போ My remarks on your tour:
அவங்கவங்க பண்ணுன தப்புக்கு ஏத்தமாதிரி கீழ்க்கண்ட தண்டனை கொடுக்கலாம்னு நினைக்கிறேன். டீச்சர்கள் உங்கள் கருத்தையும் சொல்லுங்கள்.

கோபி: (உருப்படக்கூடாதுன்னே கங்கணம் கட்டியிருக்கு.)கவலையே படாதீங்க. அதுதான் நம்ம ஸ்கூலுக்கு, நம்மட்ட படிக்க வந்தாச்சே .. உருப்பட உட்டுருவோமா என்ன ..?

மின்னுது மின்னல்: (இது திருந்த ஒரே வழி பியூர் பாய்ஸ் ஸ்கூல்தான்) அதுக்குப் பதிலா நம்ம ஸ்கூலில் பொண்ணுங்க மட்டும்ஒரு செக்க்ஷன்ல இருக்கே அங்க போட்டுடுங்க. ஒத்தையா கிடந்து அவதி(!)ப் படட்டும்.

தென்றல்: (நல்ல பையன்.ஆனா இந்தக் கூட்டத்தோடு சேர்ந்து கெட்டுப் போக அதிகமாகவே வாய்ப்பிருக்கு.)
அடுத்த வருஷத்துக்குள்ளாற 'திருந்திடு'வான்னு எதிர்பார்க்கிறேன். பிறகு நாமெல்லாம் எதுக்கு இருக்கோம்?!

குட்டிப் பிசாசு: (காக்கா புடிப்பதில் மன்னன்.) ஆமா, நேத்துக்கூட என் பதிவிற்கெல்லாம் இனிமே ஒழுங்கா வந்து பின்னூட்டமெல்லாம் நிறைய போட்டுடுறேன்னு சொல்லிட்டுப் போனான்.

அய்யனார்: (கொஞ்சம் 'குணா கமல்' டைப்.)ஆமாமா, பார்க்கிறதுக்கு கூட அப்படித்தான் இருக்கு. கிளாஸ்ரூம்லயும் ஒரு இடத்தில் உக்காராம சுத்தி சுத்தி வர்ரான்னு சொன்னாங்க. அடுத்த A.H.M.க்கு உதவிக்கு போட்டுடுவோம் அதான் ரெண்டு பேத்துக்கும் சரியா இருக்கும். (அடுத்த A.H.M. யாருன்னு கேக்கிறீங்களா..சொல்றேன்..பொறுங்க)

மை பிரண்ட்: உங்க ப்ரண்ட் அப்டிங்கிறதால நீங்க சொல்றதை அப்படி எடுத்துக்கிறதா இல்லை. எதுக்கும் அவங்ககிட்ட ஆப்பு வாங்குனவங்க கிட்டயும் கேட்டுட்டு முடிவு பண்றேன்.

மங்கை: (அமைதியான நல்ல பொண்ணு) நம்ம ஸ்கூலில் படிக்கிற பொண்ணு எப்படி அப்படி இருக்கலாம். நமக்கெல்லாம் அது பெருமையா? அடுத்த அகாடெமிக் வருஷத்துக்குள்ள 'திருந்தணும்னு' சொல்லி வையுங்க. இல்லாட்டி அட்மிஷன் பத்தி யோசிக்க வேண்டியதிருக்கும்.

முத்துலஷ்மி: ('பிராக்ஸி' குடுக்க ஆள் செட் பண்ணுவதில் கில்லாடி) இப்படி ஒரு ஆளைத்தான் தேடிக்கிட்டு இருந்தேன். இப்போ இருக்கிற ஸ்கூல் இன்ஸ்பெக்டர் திடீர் திடீர்னு வந்து இம்ச பண்றார். எப்பவும் நான் ஒழுங்கா ஸ்கூலுக்கு வந்துகிட்டு இருக்க முடியுமா? எனக்கு ப்ராக்ஸி கொடுக்கறமாதிரி ஒரு போஸ்டிங் போட்டுர்ரேன்.

இம்சை அரசி: (நான் 'டூ' விட்டுட்டேன்.)
பத்தாது. இப்போதான் அபி பாப்பா கிரிக்கெட் டீம் செலக்டரா ஆகி பண்ணுன திருவிளையாடலைப் பற்றிக் கேள்விப் பட்டேன். அதனால் அபியை ஒரு வாரம் இவங்க பாத்துகிடணும்னு (அதாங்க, baby sitting) ஒரு தண்டனை கொடுத்துருவோமா? என்ன நினைக்கிறீங்க?
(ஆனா எனக்கு ஒரு வருத்தமுங்க; அபி அப்பா தான் ஒருமாதிரி டைப். அத வச்சு நாம எல்லோரும் அபியும் அப்படி இருக்கும்னு நினக்கிறது தப்புன்னு தோணுது. என்னைக்கி எல்லாருமா அபி அம்மாட்ட மொத்தமா மொத்து வாங்கப் போறோமோ தெரியலை!)

துர்கா:(புத்திசாலிப் பொண்ணு) நம்புறது மாதிரி இல்லீங்களே! அப்படிபட்ட ஒரு பொண்ணு சும்மா கிடந்த சங்கை என்னமோ பண்ணுனது மாதிரி சும்மா இருந்த ஒருவரை கவுஜ எழுதுறவரா மாத்தி நம்ம எல்லாத்துக்கும் இப்படி ஒரு நெலமைய கொடுத்துட்டாங்களே!

தம்பி: (பாவனா கொடி நட்ட வீரன்.) ஹி..ஹி.. இதுக்காகவே இந்த வருஷ பெஸ்ட் ஸ்டூடண்ட் பரிசைக் கொடுத்துருவோமே...

ராம் & கோ: ('விழுந்து கிடந்த கூட்டம்') நீங்கதான் டூருக்கு போய்ட்டீங்க. நான் இங்கனதான இருந்தேன். என்னையும் 'ஆட்டைக்கு' சேத்து இருந்திருக்கலாம்ல ..சே.. என்ன பசங்க ..!

கடைசியா - last but not the least அப்டின்னு சொல்ற cliche மாதிரி:

அபி அப்பா: நாம நம்ம ஸ்கூலில் ஒரு 'புர்ச்சி' பண்ணிடலாம்னு பார்க்கிறேன். தொழிற்சாலைகளில் தொழிலாளிகளை போர்டு மீட்டிங்கில் சேர்ப்பது மாதிரி, நாமும் இந்த அபி அப்பாவை நம்ம ஸ்கூலின் A.H.M. ஆக போட்டுடலாம்னு பார்க்கிறேன். அந்த 'பையனும்'ஒவ்வொரு வகுப்பையும் ரொம்ப ஆழமாவும் அகலமாவும் படிச்சிக்கிட்டு வர்ரதாக சொல்லியிருக்கீங்க. அந்த மாதிரி பசங்களையே வாத்தியாரா ஆக்கிட்டா நம்ம ஸ்கூலின் எதிர்காலத்துக்கு நல்லதுதானே.

கடைசியா ...
உங்க டூரால நம்ம ஸ்கூல் ஒரு நல்ல பாசக்கார குடும்பமா மாறிட்டதால் உங்களுக்கு "டூர் திலகம்" என்ற பெயரை அளிப்பதற்கு நான் நம்ம ஸ்கூல் போர்டுக்கு ரெகமண்ட் பண்ணப் போறேன். அதனால் நீங்க மனசு விடாம அடுத்தடுத்து அப்பப்போ டூர் அரேஞ் செய்யக் கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு,
தருமி
H.M.

கண்மணி அவங்க பதிவில போட்ட டிஸ்கியை இப்பதிவுக்கும் பொருத்திக்கொள்ளுமாய் 'பாசக்கார டூர் குடும்பத்தைக்' கேட்டுக் கொள்கிறேன்.

மக்களே! இதை 'நகைச்சுவை' அப்டின்னு லேபில் பண்றேன். வேற வழியில்லை. இந்த கண்மணி, அபி அப்பா, வ.வா.ச. ஆளுங்க எல்லாம் கண்ணுமுன்னால வந்து, "இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்ல" அப்டின்னு கேக்குறது மாதிரி இருக்கு. கோவிச்சுக்காதீங்க, மக்களே!


இதையும் படிங்க, மக்களே!

Tuesday, May 22, 2007

217. குண்டு எல்லாம் எதற்கு...?***

camping at chennai ...

சென்னைக்கு வந்துவிட்டு தி.நகர் கடைவீதிகளில் ஒரு சுற்று சுற்றாவிட்டால் நாடும், நகரமும் நம்மை தூற்றாதா? அதனால் சென்ற வெள்ளிக் கிழமை ஒரு வழக்கமான "தி.நகர் சுற்றுலா"விற்கு மகளோடும், தங்கமணியோடும் சென்றேன். சென்று என்ன வாங்கினோம்; வாங்க மறந்தோம்; பேரம் செய்தோம் என்பதைச் சொல்ல அல்ல இந்தப் பதிவு. அங்கு பார்த்த ஒரு நிகழ்வைப் பற்றிய ஒன்றும், அதற்கு அடுத்த நாள் ஹைதராபாத்தில் நடந்த குண்டு வெடிப்புக்கும் உள்ள தொடர்பு பற்றியதாகும். ... இரண்டுக்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா? இந்த மாதிரி குண்டுவெடிப்புகள் நம் காஷ்மீரப் பிரச்சனைகளோடு தொடர்பு கொண்டவைகளாமே; வெளிநாட்டு பயங்கரவாதிகளின் சதித் திட்டமாமே .. அப்படித்தான் செய்தித்தாள்களில் செய்திகள் வருகின்றன. வெளிநாட்டு சதிகாரர்கள் இங்கு வந்து இந்த சதிகளையும், குண்டு வெடிப்புகளையும் செய்ய வேண்டுமா என்ன, 'நமக்கு நாமே' அதைச் செய்து கொள்ள முடியாதா என்ன? நம்மால் நிச்சயமாக முடியும் என்றுதான் அன்றைய தி.நகரில் பார்த்த ஒன்றால் எனக்குத் தோன்றியது.

தி.நகர் உஸ்மான் ரோட்டின் நெரிசல் யாருக்குத்தான் தெரியாது. அந்த நெரிசலான தெருவில் ஒரு பள்ளிவாசல். நாங்கள் போனதும் வெள்ளிக் கிழமை மதியம். தொழுகை நேரம் போலும். மசூதியின் தரைத் தளத்திலும், இரண்டுமாடிகளிலும் மக்கள் தொழுகை நடத்திக் கொண்டிருந்தார்கள். இடம் பற்றாத காரணத்தால் தெருவில், அகலத்தில் ரோட்டின் பாதிவரையிலும், நீளத்தில் பள்ளிவாசலின் நீளத்தையும் தாண்டி, தரையில் செய்தித் தாள்களை விரித்து தொழுகையில் இருந்தனர். ஒரேமாதிரி அவர்கள் குனிந்து எழுந்து தொழுகை செய்வதைப் பார்த்துக்கொண்டு மக்கள் தங்கள் வேலையைப் பார்த்துக் கொண்டு போய்க்கொண்டிருந்தார்கள். அவர்களின் சூழல் மறந்த தொழுகை ஆச்சரியத்தைக் கொடுத்த அதே நேரம், எனக்குள் எனக்குப் பிடித்த சொலவடை ஒன்று நினவுக்கு வந்ததைத் தடுக்க முடியவில்லை. அது: 'அடுத்தவனுக்கு உபகாரமாக இல்லாவிட்டாலும், உபத்திரமாக இராதே.'

உள்ளதே இடைஞ்சல் மிகுந்த இந்தப் பகுதியில் சாலையை ஆக்கிரமித்து -அது வெள்ளிக் கிழமைகளில் மட்டுமா, எல்லா நாளுமா என்பது தெரியாது - தொழுகை நடத்துவது பொதுமக்களுக்கு இடைஞ்சல் என்பது யாருக்கும் தெரியாதா? தொழுகை செய்து புண்ணியம் தேடும் அந்த நேரத்தில் அடுத்தவருக்கு இடைஞ்சல் தருவதால் தொழுகையின் பயன் குறையாதா என்று தோன்றியது.

ஆனால் இந்த மாதிரி எண்ணமே தவறு என்பதே பலருக்கும் தோன்றும். ஏனெனில், மதம் முதலாவதாகவும், சாதி இரண்டாவது காரணியமாகவும், ஏழ்மை மூன்றாவது காரணமாகவும் நம் மக்களால் சட்டங்களைப் புறந்தள்ள பயன்படுத்தப் படுகின்றன. இப்படி தெருவை அடைத்து தொழுவதோ, நாட்கணக்கில் ரோட்டை அடைத்து கோயில் விழா எடுப்பதையோ, மார்கழி மாதத்தில் யார் தூங்கினால் என்ன, யாருக்கு என்ன இடைஞ்சல் என்றால் என்ன என்ற கவலை ஏதுமின்றி, இந்துக் கோவில்களில் காலை 4 மணிக்கே இறையஞ்சலிப் பாட்டுக்கள் என்ற பெயரில் அலறும் ஒலிபெருக்கிகளையோ, 'பாவிகளைத்' தெருமுனைகளிலெல்லாம் இருந்தோ, இல்லை ஞாயிற்றுக் கிழமை அல்லது ஏதோ ஒரு வார நாளில் அலறும் ஒலிபெருக்கிகளையோ, மசூதிகளிலிருந்து நாளைக்கு ஐந்துமுறை வரும் அழைப்பொலியையோ நாம் நம் சமூகத்தில் குறை சொல்ல முடியுமா? அப்படிச் சொன்னாலே தப்பு, அவன் அநியாயக்காரன் என்ற எண்ணம்தான் எல்லோர் மனதிலும் எழும். adjust செய்து போகணும் அப்டின்றது நல்ல தத்துவம்தான். ஆனால் மற்றவர்களுக்கு இடைஞ்சல் கொடுக்கக் கூடாதே என்ற அடிப்படை எண்ணம் நம் எல்லோர் மனதிலும் ஏன் தப்பித் தவறியும் வருவதில்லை?

சரி .. சொல்ல வந்ததிலிருந்து கொஞ்சம் விலகி விட்டேன். அந்த இடையூறை யாரும் அதிகமாகக் கண்டு கொள்ளவில்லை; அதுவே எனக்கு சந்தோஷமாகத்தான் இருந்தது -பரவாயில்லை நம் மக்கள் adjust செய்து கொள்ளுகிறார்களே என்று. ஒரு தெரு ஓரக்கடைக்கு நாங்கள் செல்லும் சமயம் சரியாக தொழுகை முடிந்தது. எல்லோரும் கலையத் தொடங்கினார்கள். நாங்கள் நின்றிருந்த கடைக்குப் பக்கத்தில் ஒரு 'இசைக் கடை' இருந்தது. பாடல் குறுந்தகடுகள் விற்கும் கடை. அதிலிருந்து தொழுகை முடிந்ததும் பாட்டு சத்தம் கேட்டது. வடமொழியில் இறை வணக்கமோ, இல்லை 'மந்திரமோ' ஒரு பாடல் சத்தமாக ஒலிக்கத் தொடங்கியது. முதலில் எதற்கு இந்த தொழுகை முடிந்து மக்கள் புறப்படும்போது சரியாக இந்த மாற்று மதப் பாடல் என்றுதான் தோன்றியது. ஆனாலும், பரவாயில்லையே, தொழுகை முடியும் வரை பொறுத்திருந்து பிறகு இந்த மாதிரி பாடல்களைப் போடுகிறார்களே என்ற் கொஞ்சம் சந்தோஷப் பட்டேன்.

அதற்குள் நாங்கள் நின்றிருந்த கடைக்காரப் பையனும் தொழுகையிலிருந்து திரும்பி வந்தான். வரும்போதே அந்த இசைக்கடையைப் பார்த்து கொஞ்சம் முகம் கோணலாக வந்தது மாதிரி தோன்றியது. நானும் நம்மால் ஆன ஒரு மத நல்லிணக்க முயற்சியாக, அந்தப் பையனிடம், 'தொழுகை முடிவதற்கு வரை பொறுத்திருந்து அதன் பின் பாடல்களைப் போடுகிறார்களே பரவாயில்லை அல்லவா?' என்றேன். பையன், 'அட போங்க சார், தொழுகை நடக்கும்போதும் அவர்கள் எப்போதுமே பாட்டு, அதுவும் அவங்க சாமி பாட்டா போடுவாங்க சார். இதுவரை சொல்லியும் கேட்பதில்லை' என்றான். 'அடப் பாவமே' அப்டின்னுதான் சொல்ல முடிஞ்சுது.

இதில்,
- மதக் காரணங்களுக்காக சட்டம் எப்போதும் எங்கேயும் கண் மூடித் தூங்கப் போய்விடுவதென்பதற்காகக் கவலைப் படுவதா?
- மதத்தின் பெயரால் எந்த மதக்காரர்களும் செய்யும் சட்டமீறல்கள் எல்லாமே புனிதமாக்கப் பட வேண்டுமா?
- ஒருவருக்கொருவர் கொஞ்சம் adjust செய்து கொள்ளக் கூடாதா? அந்தப் பாட்டுக் கடைக்காரர்கள் ஒரு அரைமணி நேரம் பாட்டு போடாமல் இருந்தாலென்ன?

சாதிகளின் பெயரைச் சொல்லி விட்டால் இங்கே பல நியாயங்கள் தூங்கப் போய் விடுகின்றன. அடுத்து, எழ்மையின் பெயரிலும் பல நியாயங்கள் ஓரங்கட்டப் படுகின்றன. குடிசைகள், புறம்போக்கு வளைப்புகள் எல்லாமே ஏழ்மை என்னும் போர்வைக்குள் வைக்கப் பட்டால் நாம் எல்லோருமே 'அய்யோ பாவம்; அரசாங்கத்துக்கு இரக்கமே இல்லை' என்று கண்ணை மூடிக்கொண்டு தீர்ப்பளிக்கிறோம். பணக்காரர்கள் வளைத்துபோட்டு கல்லூரிகளும், கடைகளும் கட்டியதை இடித்துத் தள்ளும்போது சந்தோஷப் படும் பொதுமக்கள், குடிசைகளை சகட்டு மேனிக்குக் கட்டியபின் அவைகளை அகற்றும்போதுமட்டும் ஏன் எதிர்ப்பு காண்பித்து தங்கள் மனிதாபிமானத்தை அந்த நேரங்களில் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்? இரண்டாவது தரப்பினருக்காக வருத்தம் கொள்வது வேறு; அவைகளை நியாயப் படுத்துவது வேறு.

சாதிகளையும், எழ்மையையும் விட வலிமை நம் நாட்டில் மதங்களுக்குக் கொடுக்கப் பட்டு விட்டன. அவைகள் sacred cows! ஒன்றும் செய்து விட முடியாது. கடவுளையே காப்பாற்றுவதை எப்போது நம் மத நம்பிக்கையாளர்கள் கைவிடுவார்கள்? அது எப்போதும் நடக்கப் போவதில்லை. அவரவர் கடவுளர்களை அந்தந்த நம்பிக்கையாளர்கள்தான் காக்கும் பணியைச் செய்கிறார்கள். இதில் எந்த மதக்காரர்களும் 'தாழ்ந்தவர்கள்' அல்ல; ஒருவருக்கொருவரோடு போட்டி போட்டுக்கொண்டு தங்கள் தங்கள் கடவுளர்களைக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். "எங்களைக் கும்பிடுவதோடு நிறுத்திக் கொள்ளுங்கள்; எங்களை நாங்களே 'எப்படியாவது' காப்பாற்றிக் கொள்கிறோம்' என்று அந்தக் கடவுளர்களா இந்த நம்பிக்கையாளர்களிடம் வந்து சொல்லப் போகிறார்கள்? அப்படியே சொன்னாலும்கூட கேட்கும் கூட்டமா இது?

நடப்புகளைப் பார்க்கும்போது நம்மை அழித்துக் கொள்ள வெளிநாட்டு தீவிரவாதிகள் வேண்டுமா என்ன என்றுதான் தோன்றுகிறது.

Thank god! I am an atheist !



*** பூங்காவில் இடம் பெற்ற பதிவு மே,21, 07

Monday, May 14, 2007

216. கலைஞரின் தவறு

டிஸ்கி:35 வருஷத்துக்கு முந்தி நடந்த விஷயம்; எல்லாமே அப்போது கேள்விப்பட்ட விஷயங்கள். அதை இப்போது நினைவுக்குக் கொண்டு வருவதில் எவ்வளவு சரியாக இருக்குமோ? நினைவிலிருந்து ...

எம்.ஜி.ஆர். அறுபதுகளின் கடைசியில் ஒருமுறை காமராஜரை ஒரு மேடையில் பாராட்டிப் பேசும்போது, "அண்ணா என் தலைவர்; காமராஜர் என் வழிகாட்டி" என்று பேசி கட்சித்தொண்டர்கள், தலைவர்களின் வெறுப்பைச் சம்பாதிக்க தலைவர்களுக்குள் அறிக்கைகள் வலம் வர, சரியாக அந்த சமயத்தில் வெளியான 'முகராசி' என்ற எம்.ஜி.ஆரின் படம் காத்தாட துவங்கி விட்டது. அரசியல் தலைவர்கள் அறிக்கைகளிலும், மாற்றான் தோட்டத்து மல்லிகை பற்றிய ஆராய்ச்சிகளில் இருக்க, படம் எடுத்தவர்கள் செய்த compromiseகளில் எம்.ஜி.ஆர். தான் சொன்னதை வாபஸ் வாங்க, தி.மு.க. தலைவர்கள் அவரை ஏற்றுக் கொள்ள (அப்போது அண்ணா உயிரோடு இருந்த நேரம்) படம் மறுபடி சூடுபிடித்தது.

எம்.ஜி.ஆர். ஒரு அரசியல்வாதியாக இருந்தமையால் நடிகராக ஜொலிக்கவும், நடிகராக ஜொலித்ததால் அரசியலில் செல்வாக்கும் கொண்டிருந்தார் - at least அந்த ஆரம்ப காலங்களில் என்ற என் கணக்கு இதில் நிரூபணமானது.

அதிலும் கட்சியும் அரசியலும் அவரது படங்களுக்கு மிக முக்கியமானதாக இருந்தன. அதனால்தான் 72-ல் கலைஞரோடு தகராறு முற்றும்போதும் தானாக கட்சியை விட்டு வெளிவந்தால் அது சரியான முடிவாக இராது என்று உறுதியாக இருந்தார். ஏற்கெனவே சூடுபட்ட பூனையாக இருந்தார். பட்ட சூட்டை நன்கு நினைவில் வைத்திருந்தார். ஆனால் தன்னைக் கட்சியை விட்டு தூக்க தேவையானவைகளை எல்லாம் தொடர்ந்து செய்து கொண்டிருந்தார். முதலில் தனக்குப் பதவி தரவில்லை என்ற குற்றச்சாட்டு; அதன்பின் தான் பதவியை எதிர்பார்க்கவில்லை என்று ஒரு அறிக்கை; அதன்பின் கடைசியாக 'கணக்குக் கேட்டு' ஒரு அறிக்கை!

அப்போது கலைஞரோடு உடன் இருந்தவர்களில் 'எம்.ஜி.ஆரை கட்சியிலிருந்து வெளியேற்றுங்கள்' என்று கலைஞருக்கு அறிவுரை கூறியவர் எங்கள் மதுரைக்காரர்தான் என்று பேச்சு. அதே மாதிரி வெளியேற்றினார் கலைஞர். அவரை அந்த இமாலயத் தப்பைச் செய்ய வைத்தவர் சில நாட்களில் தானும் வெளியேறி அ.தி.மு.க.வுக்குச் சென்றதும் நடந்தது. கட்சியிலிருந்து எம்.ஜி.ஆர். தானாக வெளியேறியிருந்தால் அனேகமாக இந்த அளவுக்கு, கடைசி மூச்சு வரை உறுதியாக அரசுக் கட்டிலில் இருந்ததுபோல் இருந்திருக்க முடியாது என்றே நினைக்கிறேன். அதோடு மட்டுமின்றி, அதற்குப் பிறகும் தன் 'வாரிசை'(?) இன்றளவும் தமிழ்நாட்டு அரசியலில் ஒரு strong force ஆக வைத்திருக்க முடிந்திருக்காது என்றே நினைக்கிறேன். It is all hypothetical; but still that is what i believe strongly. ம்ம்..ம்.. நடந்தது நடந்திருச்சி... இனி அதைப் பற்றிப் பேசி என்ன செய்ய..?


பி.கு.
எம்.ஜி.ஆரை வெளியேற்றியதும் நடந்தது போல் வைகோவை வெளியேற்றியதும் நடக்கலாம் என்று வெகு சிலர் நினைத்தார்கள்; அப்படி ஏதும் நடக்கவில்லை. மாறன்Jr.-க்கும் பெரிய திசைதிருப்பல்கள் ஏதும் நடக்காதுதான். ஆனாலும் யார்மீது முக்கியமாக நடவடிக்கை எடுக்கப் படும்; எடுக்கப் படவேண்டும் என்று பலரும் நினைத்தவர் மீது பாயாமல், கலைஞரின் கோபம் திசை மாறிவிட்டது புத்திர பாசத்தினால் மட்டும்தானா ... இல்லை என்னை மாதிரி ஆட்களுக்கும் புரியாத அரசியல் விஷயங்கள் நாட்டுக்குள், அல்லது குடும்பத்துக்குள் இருக்கிறதோ என்னவோ?

Monday, May 07, 2007

215. தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியில் ...

எனக்குத் தெரியாத விஷயங்கள் நிறைய. அதிலும் உங்கள் எல்லோருக்கும் ரொம்பவே தெரிந்த கிரிக்கெட் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. ஊடகங்களால் வளர்த்து விடப்பட்ட இந்த விளையாட்டைத் தினசரி செய்திகளில் வாசிக்காமல் புறக்கணிப்பதும், தொலைக்காட்சி ஒளிபரப்புகளைப் பார்க்காது இருத்தலுமே என் நிலையில் என்னால் செய்யக் கூடியது. அதனால் நான் கேட்கப் போகும் கேள்வியில் மிகச் சரியாக பெயர்களையோ, புள்ளி விவரங்களையோ தரமுடியாது. ஆனால் அதெல்லாம்தான் உங்களில் பலருக்கும் தண்ணி பட்ட பாடாச்சே .. அதனால் கேள்விக்கு வருகிறேன்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை,1976-77-லிருந்து நெல்சன் மண்டேலா வரும்வரை, apartheid அது இதுன்னு தென்னாப்ரிக்காவை ஒதுக்கி வைத்திருந்தோம். மண்டேலா வந்தார்; நிலைமை மாறியது என்று சொல்லப் படுகிறது.

ஆனாலும் இந்த "உலக"(!)க் கிட்டிப் புள்ளு (கிரிக்கெட்)கிண்ணப் போட்டியிலும், அதற்கு முந்திய போட்டிகளிலுமே தென்னாப்பிரிக்காவின் குழுவில் பெரும்பான்மையான கருப்பர்களை விடவும் வெள்ளையர்களே இருப்பதாகத் தெரிகிறதே. எப்படி? இந்த முறையும் மாக்கியாவோ என்னவோ ஒரு பெயரை பக்கத்து வீட்டு பன்னிரண்டு வயது டெண்டுல்கர் சொன்னான். அந்த ஒருவர் மட்டுமே கருப்பராமே.

10 விழுக்காடு மட்டுமே வெள்ளையர்கள் மக்கள் தொகையில் இருக்க, அந்த நாட்டின் விளையாட்டு அணியில் மட்டும் 95 விழுக்காடு அவர்கள் எப்படி இருக்க முடிகிறது? இன்னும் இனவாத அரசியல் - apartheid - இருக்கிறதா? நெல்சன் மண்டேலாவினால் நடந்த மாற்றங்கள் எல்லாமே வெறும் மேம்போக்கான விஷயங்கள்தானா? நாட்டின் செல்வமும், பொருளாதார மேம்பாடும் இன்னும் வெள்ளையர் கையில்தான் இருப்பதாகச் சொல்லப் படுகிறது. பொருளாதாரம் மட்டுமல்ல 'எல்லாமே' இன்னும் வெள்ளையர்கள் கைகளில்தான் இருக்கிறதாகத்தானே இந்த விளையாட்டு அணியைப் பார்த்தால் தெரிகிறது.

அப்போ, அங்கே நிலைமை எப்படித் தான் இருக்கிறது? நம் நாட்டிலும் சில விஷயங்களில் இருக்கும் நிலைதான் அங்குமோ? ஒருவேளை, இங்கு சில இடங்களில் நடப்பது அங்கு பல இடங்களில் நடக்கின்றதோ? இதெல்லாம் எப்படி?

புரியாமல்தான் கேட்கிறேன்; தெரிந்தவர்கள் சொல்லுங்களேன் !


பி.கு. இந்தப் பதிவை எதில் வகைப் படுத்துவது என்று ஒரு குழப்பம். இருக்கட்டுமே என்று "இடப் பங்கீடு" என்றே வகைப்படுத்துகிறேன். அதுவே சரியென்று தோன்றுகிறது.