Monday, May 29, 2017

940. கொள்ளையடிப்பது எப்படி?*
The Hindu – 27.5.17 – THE SASIKALA WEB என்ற தலைப்பில் ஒரு பக்கக் கட்டுரை ஒன்று எழுதியுள்ளது. எனக்கு அத வாசிச்சா ஒண்ணும் புரியலை. காசு மட்டும் காட்டுத் தனமா மக்கள் அள்ளிக் கட்டியிருக்காங்கன்னு தெரியுது. அம்மாடி… சும்மா அசத்துறாங்க. ரெண்டு பொம்பிளைகளும் இம்புட்டு சம்பாரிச்சி என்ன பண்ணாங்கன்னு யோசிச்சா …. ரொம்ப பிலசாபிக்கலா மனசு என்னென்னமோ சொல்லுது.  ரெண்டும் கொள்ளையடிச்சிருக்காங்கன்னு பெரிய கோர்ட் சொல்லி ஊத்தி மூடி விட்டது. அதில ஒண்ணு எப்படியோ செத்துப் போச்சு; இன்னொண்ணு கம்பி எண்ணிக்கிட்டு இருக்கு. அதுக்கு இன்னமும் கனவுகள் முடியலைன்னு நினைக்கிறேன். அடுத்து வந்து இன்னும் அள்ளி முடிக்கணும்னு இருக்கும் போல் தான் தெரிகிறது. அம்மாடி ………. என்ன ஆசை காசு மேலே!

இந்து தினசரி சொல்றதக் கேட்டா ஆட்சி நடத்துனதே இந்த மாதிரி காசு அள்றதுக்குன்னு தான் தெரியுது. எத்தனை எத்தனை டெக்னிக். எப்படி எப்படியெல்லாம் ஏமாத்து. முகவரி கொடுத்திருக்காங்க … அங்க போனா ஆளும் கிடையாது… அட்ரஸும் கிடையாது. ஊர்ல இருக்கிற அரசின் துறைகளை எப்படியெல்லாம் ஏமாத்தலாமோ அப்படியெல்லாம் ஏமாத்தியிருக்காங்க. சூப்பர் லேடிஸ். மெடல் தட்டிக் கொடுக்கணும். ஆனா சசிகலாவுக்குத்தான் பெரிய மெடல் தட்டிப் போடணும். (இனிமேல் பெரிய சூப்பர்னா (பெ.சூ) அது சசிகாலா; சின்ன சூப்பருன்னு (சி.சூ)  சொன்னா செத்துப் போன குற்றவாளின்னு வச்சுக்குவோம். சுறுக்கமா சொல்லலாம்ல.)

ஒரே ஒரு கேஸ் நல்லா எனக்குப் புரிஞ்சது. ஜாஸ் தியேட்டர். பீனிக்ஸ் மாலில் உள்ள இந்த தியேட்டர்களை கங்கை அமரன் கையை முறுக்கி அவர் வீட்டைப் பிடுங்கியது போல் … Jass bought Luxe from Sathyam cinemas in 2015, AMID RUMOURS OF A FORCED SALE BY THE OWNER. அதாவது கையை முறுக்கி வாங்கியதை ஆங்கிலத்தில் அப்படி இந்துவில் சொல்லியுள்ளது. இதற்கு the ubiquitous (எங்கும் எப்போதும் இருக்கும் …. நல்ல வார்த்தை பயன்படுத்தி விட்டார்கள்!!) two sons-in-law are directors of Jazz, while Ilavarasi’s 20 year old son Vivek Jeyaraman is the managing director.

அடுத்து என்ன நடந்தது? 

டிசம்பர் 21.2011ல் போயஸ் கார்டனிலிருந்து சின்ன சூப்பரு (சி.சூ) பெரிய சூப்பரை(பெ.சூ) வெளிய அனுப்பிச்சிருது. (ச்ச்சும்மா ஒரு சோஷோ!!) அப்புறம் 100 நாள் கழிச்சி பெ.சூ. லெட்டர் கொடுத்துட்டு உள்ள வருது. பெ.சூ. வெளியே போயிருந்த போது ஜாஸ் தியேட்டர்களுக்கு பொன்குன்றன்,சோ இருவரும் டைரடக்கர்களாக இருக்கிறார்கள். பெ.சூ. உள்ள வந்ததும் பெ.சூவின் ஆட்கள் – சிவகுமார் & கார்த்திகேயன் கலிய பெருமாள் இருவரும் டைரடக்கர்களாக ஆகி விடுகிறார்கள். என்னே பெ.சூ.வின் மந்திர லாகவம்! இது நடப்பது 2012ல். 

ஆனால் 2015க்குள் என்ன நடந்து விடுகிறது தெரியுமா? 4100 ஷேர் ஜாஸ் தியேட்டருக்கு வைத்திருந்த பெ.சூ. 42 லட்சம் ஷேர் வாங்கிருது. தியேட்டரும் பெ.சூவின் கைக்கு வந்து விடுகிறது. 


இதுல தண்ணிக் கம்பெனி நடத்திக்கிட்டு அதுனாலேயே காவல்துறையை விட்டு நம்ம பொம்பிளைகளை ரோட்ல அடிச்சி துறத்துராங்க. கடை நடந்தா தானே விற்பனை… காசு … கொள்ளை எல்லாம் அடிக்கலாம். நாமளும் அவங்கள அடிச்சி அனுப்பாம வேடிக்கைப் பார்த்துக்கிட்டே இருக்கோம்.


எனக்குப் புரிந்த கொஞ்சூண்டு விஷயத்திலேயே இத்தனை குழப்படி பண்ணி தங்கள் சாம்ராஜ்யத்தை நிறுவியுள்ளார்கள். எனக்கு ஒரு சந்தேகம். எனக்கும் நல்ல வயசும் ஆகிடிச்சி. படிச்சதும் அந்தக் காலத்தில பள்ளிப் படிப்பு முடிச்சி அஞ்சாறு வருஷம் படிச்சிருக்கேன். பெரிய படிப்பு தானே! ஆனே எனக்கே இந்தக் காசுகளை வச்சி இவங்க பண்ற ஜூஜா வேலையில் பாதிதான் புரிது. ஆனால் பள்ளிக்கு மழைக்கு மட்டும் ஒதுங்கின பெ.சூ.வுக்கு எப்படி இம்புட்டு விஷயம் தெரியுது. என்னமெல்லாம் பண்ணுது. இது எப்படி? 

எல்லோரும் சொல்றாங்க. காசு மட்டும் வர்ரதுக்கு வழி பண்ணிட்டா இந்த ஆடிட்டர்கள் எல்லாரும் அதுக்கு மேல என்னென்ன பண்ணணும்னு சொல்லிக் கொடுத்திருவாங்க அப்டின்னு சொல்றாங்க. உண்மைங்களா அது?கோடிக்கணக்கில வர்ர பணத்தை எப்படி எப்படி முதலீடு ஆக்கணும்; எதை மறைக்கணும்; எதை காமிக்கணும்னு அந்த ஆடிட்டர்கள் சொல்லித் தந்திருவாங்களாமே. அப்படியா?

அப்படியே இருந்தாலும் ஒரு சந்தேகம். நாலு காசு கொடுத்திட்டா இந்த ஆடிட்டர்கள் கள்ள வழி எல்லாம் சொல்லித் தந்திருவாங்கன்னா … அவங்க படிக்கிறதே இந்த மாதிரி அட்டூழியத்தை அடுத்தவங்களுக்கு சொல்லித் தர்ரதுக்குத்தானா? என்ன படிப்பு அதுங்க?  ஆடிட்டர் படிப்பு மட்டுமல்ல … வேறு சில படிப்புகளும் இருக்கு. அதிலேயும் இப்படி குத்தம் பண்றவங்களைத் தப்பிக்க வைக்க காசு வாங்கிட்டு வேலை செய்றாங்க. அதுவும் ஒரு பெரிய படிப்பு. 

நல்லத தடுக்கிறதுக்கே படிப்பாங்க போலும். நல்லா இருங்க’ய்யா!

என்னமோ போங்க … நம்ம படிப்பும் நம்ம வாழ்க்கை முறைகளும்.

கடைசியா பெ.சூ. பத்தியும் சி.சூ. பத்தியும் ஒண்ணு ரெண்டு சொல்லணும். கடைசி பத்து வருஷமா சி.சூ. நான் கொள்ளை அடிச்சிக்கிறேன்; நீயும் அடிச்சிக்கோ; அதில ஒழுங்கா வர்ர ஷேரை கொடுத்திருன்னு சொல்லியே கால்ல விழுகிற ஆளுககிட்ட சொல்லிக் கொடுத்திருக்கும் போலும். எல்லாரும் அத அப்படியே பிடிச்சிக்கிட்டு எங்கேயோ எல்லோரும் மேல .. மேல … அதுக்கும் மேல போய்ட்டாங்க. நல்ல மனுசி. 

தமிழ்நாட்டு மக்களுக்கு அரசியல்வியாதிகள் அப்டின்னா யாருன்னு சொல்லிக் கொடுத்தாச்சு. நாமளும் ஊர்ப் பயல்கள் கொள்ளை கொள்ளையா அடிச்சாலும் “சரி .. விடுங்க … அரசியல்வியாதிகள்னா அப்படித்தான்” என்று நமக்கு நாமே பட்டை நாமம் போடப் பழகிக்கிட்டோம். நல்ல மக்கள்.

பெ.சூ. இம்புட்டு கொள்ளை அடிச்சாலும் கொஞ்சம் கூட கூச்சம் இல்லாம தலையை நிமித்திக்கிட்டு ஒரு பெரிய ஸ்டண்ட் எல்லாம் போட்டுச்சு; இன்னும் போட்டுக்கிட்டு இருக்கு. அந்த ஆள் தினகரனும் அப்படித்தான். அவங்க மனசில எப்படி கூச்சம் இல்லாம போய்டுதுன்னு தெரியலை. தொப்பியையும் வச்சிக்கிட்டு நம்மட்ட ஓட்டு கேக்க அதுகளுக்கெல்லாம் எப்படித்தான் மனசு வருதோன்னு தெரியலை. சூடு, சொரணை எல்லாம் நம்மள மாதிரி இ.வானாக்களுக்கு மட்டும் தானா?

அட… அவங்க தான் ஓட்டு கேட்க வந்தா நாமும் ஓட்டு போட்டுர்ரமே… நம்மள மாதிரி உணர்ச்சியில்லா முட்டாமக்களுக்கு ஏத்த மாதிரிதானே வர்ரவங்களும் வருவாங்க. என்னமோ போங்க! 

கடைசி 10 வருஷத்தில் தமிழ்நாட்டு மக்கள் பண்ணின தப்புக்கு இன்னும் எத்தனை வருஷத்துக்குக் கவலைப் படவோ தெரியவில்லை.
*
939. ஆர்.எஸ்.எஸ். மூலம் ‘உத்தம சந்ததி’ உருவாக்குவோம். ஜெய் பாரத்!*

ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு … புத்தகங்கள் வாசிப்பது மிக முக்கியமாக இருந்த போது வாசித்த ஒரு கதை. ஹிட்லருக்கு ஒரு டூப்ளிகேட் தயாரிக்க பல சிறு பையன்களைத் தேர்ந்தெடுத்து ஹிட்லருக்கு சிறு வ்யத்இல் இருந்த சூழலைக் கொடுத்து ……. ஹிட்லரின் ரத்தத்தை எடுத்து அதை ஜுராசிக் பார்க் கதை போல் அதை வைத்து இன்னொரு ஹிட்லரைக் கொண்டு வரலாமாவென யோசித்து …. இப்படி சில கதைகள் வாசித்த நினைவு.

அதெல்லாம் கதை தானே என்று நினைத்துக் கொண்டிருக்கும்போது நேற்று ஆங்கில வலைப்பூ ஒன்றில், Ram Puniyan என்ற சமூக ஆர்வலர் எழுதிய பதிவு ஒன்றை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்த போது அதிர்ந்து போனேன். 

அவர் எழுதிய கட்டுரையில் எனக்கு அதிர்ச்சியாக இருந்த பகுதிகளை மட்டும் தமிழில் மொழிபெயர்த்து அளித்துள்ளேன். மனதை தைரியமாக்கிக் கொண்டு வாசியுங்கள்.RSS Controlled Garbh Vigyan Sanskar in pursuit for “Master Race”
 ஆர்.எஸ்.எஸ். தத்துவங்கள் பல ஜெர்மனியின் பாசிச முறையினால் முன்னெடுக்கப்பட்டவை. … ஆர்ய உயர்வு அதில் மிக முக்கியமானது. .. நாசிகள் “Lebensborn” (“Spring of Life”) என்றொரு திட்டத்தை முயற்சித்தனர். நார்வேயில் 12,000 குழந்தைகளைத் தத்தெடுத்து, Himmler தலைமையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ”தூய ரத்தமுடைய பெண்களின் மூலம் ”சிவந்த, உயரமான குழந்தைகளை உருவாக்கும் திட்டம் அது. ஆய்வாளர்கள் எதிர்பார்த்தது  போன்று குழந்தைகள் உருவாகவில்லை. திட்டம் தோல்வியடைந்தது.


 “நாம் கருப்பு தோல் கொண்டவர்களோடு வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்” என்று தருண் விஜய் போன்றவர்களைச் சொல்ல வைத்த பெரும் தத்துவம் இது.


உயர்ந்த “இனம்” உண்டாக வேண்டும் என்ற கருத்தோடு ஆர்.எஸ்.எஸ். கொள்கையாளர் சொன்ன ‘அழகான’ கருத்து இது:  

நம் முன்னோர்கள் செய்த பல முயற்சிகளைக் காண்போம். நல்ல மனிதர்களை உருவாக்க நம்பூதிரி ப்ராமணர்கள் வடக்கிலிருந்து தெற்கில் கேரளாவில் குடியமர்த்தப்பட்டனர்.  ஒரு விதி செய்தார்கள் – ஒவ்வொரு பெண்ணின் முதல் குழந்தையும் நம்பூதிரி ஒருவர் மூலம் பிறக்க வேண்டும். அதன் பின் அவர்கள் தங்கள் கணவன்மார்களோடு குழ்ந்தைகள் பெற்றுக் கொள்ளலாம். (RSS journal Organiser, 2nd January 1962)

ஆர்.எஸ்.எஸ்ஸின் ஆரோக்கிய பாரத் (சுகாதார அமைப்பு)  என்ற அமைப்பின் கீழ் உள்ள கருப்பை அறிவியல் துறை (Garbh Vigyan Sanskar  - Uterus Science Culture) தங்கள் “ஆய்வுகள்” மூலம் ‘உத்தம சந்ததி’ (Uttam santati - Best Progeny) பெருவதற்கு நம் பண்டைய ஆயுர்வேத அறிவியல் மூலம் பல முயற்சிகள் எடுத்து வருகின்றனர். இத்திட்டத்தின்படி நடப்போர் நிச்சயமாக சிகப்பான, உயரமான (பெற்றோர்கள் எப்படியிருந்தாலும்!! sic!) குழந்தைகளைப் பெற முடியும் என்று தீர்மானமாகச் சொல்கின்றனர்.

இத்திட்டத்தை ஆரம்பித்தவர் இது முதலில் குஜராத்தில் ஆரம்பிக்கப்பட்டது என்றும், 450 குழந்தைகள் இது போல் பிறப்பிக்கப்பட்டன என்றும், 2020க்குள் இன்னும் பல மாநிலங்களுக்கு இத்திட்டத்தைப் பரப்பப் போவதாகவும் சொல்லியுள்ளார்.

GET READY … SET … GO ………….

*

Sunday, May 28, 2017

938. மாடுகளுக்கு ஒரு நீதி… மற்றவருக்கு வேறு நீதியா?*


எல்லாம் நாமக்கல்லில் தான் முதலில் ஆரம்பித்தது. அங்கே தானே கோழிப்பண்ணைகள் அதிகம் இருக்கிறது! அடச் சே….! நான் ஒன்றும் அங்கே இருக்கிற இன்னொரு பண்ணைகளான ‘மார்க்’ பள்ளிகளைப் பற்றி ஒன்றும் பேசவில்லை. நான் பேசுவது நிஜ கோழிகளை நிஜமாக வளர்க்கும் கோழிப்பண்ணைகள் பற்றித்தான். ஊருக்கே .. ஏன் உலகத்துக்கே … மார்க் வாங்கிக் கொடுக்கும் பள்ளிகள் இருக்குமிடத்தில் இந்த கோழிப்பண்ணைகள் இருப்பதாலோ என்னவோ, அந்தப் பண்ணையில் இருக்கும் கோழிகளிடம் அதிக ‘அறிவு’ இருக்குமோ என்னவோ. அவர்களிடமிருந்து தான் முதல் தகவலும், அதனால் முதல் எதிர்ப்பும் வந்து விட்டது.


காலையில் தினசரி எந்தக் கோழி பார்த்ததோ என்னவோ தெரியவில்லை. மாடு, அதிலும் பசு மாடு, பன்றி, ஒட்டகம் இவைகளையெல்லாம் வெட்டக்கூடாது … சாப்பிடக் கூடாதுன்னு நம்ம அரசியல்வியாதிகள் கட்டளைகள் போட்டிருந்தது அந்த தினசரிகளில் முக்கிய செய்திகளாக வெளிவந்திருந்தன. அதைப் பார்த்ததும் கோழிகளுக்கெல்லாம் பயங்கர கோபம். அது என்ன மாடு ஒட்டகம் என்றெல்லாம் தடை விதிக்கப்பட்டிருக்கிறது; ஆனால் ஏன் கோழியையும் கொல்லக்கூடாது; தின்னக்கூடாது என்றும் சட்டம் வரவில்லை என்ற கோபம் அவர்களுக்கு.


தங்களைத் தின்னக் கூடாது என்று சட்டம் வரவில்லையே என்று அவர்கள் கோபப்படவில்லை. அவர்கள் கோபப் பட்டதற்கான உண்மையான காரணத்தைத் தெரிந்து கொள்ளுங்கள். அவர்களுக்கு, அதாவது கோழிகளுக்கு, என்ன கோபமென்றால் தின்னப்படும் மிருகங்கள் பட்டியலில் கோழிகளுக்கு ஏன் இடம் கொடுக்கவில்லை என்ற ஒரு தன்மானக் கோபம் அது. சாப்பிடக்கூடிய மிருகங்களில் ஏன் எங்களைச் சேர்க்கவில்லை.நாங்களென்ன மாடு, ஒட்டகங்களை விட தரத்தில் தாழ்ந்து போய்விட்டோமா என்றொரு தன்மானக் கோபம் அது.


கோழிகள் எல்லாம் ஒரு கூட்டம் போட்டு இந்தப் பட்டியலில் எங்களுக்குக் கிடைக்க வேண்டிய இடத்தைக் கொடுங்கள் என்று ஒரு தீர்மானம் போட்டதாகத் தெரிகிறது. அது சரி … அவர்கள் கோரிக்கை நியாயமானதே. அவர்களையும் அந்தப் பட்டியலில் சேர்ப்பது தான் நியாயம் என்பது நமது அரசுக்குத் தெரியாதா என்ன? அவர்களுக்கு எத்தனை விழுக்காடு கொடுப்பது என்பது பற்றி அரசே தீர்மானித்துக் கொள்ளட்டும். ஆனால் பட்டியலில் எங்கள் பெயரும் வரவேண்டும் என்பது தான் கோழிகளின் முதல் கொள்கை முழக்கம். பறிக்கப்பட்ட கிள்ளுக் கீரை போல் நாம் சும்மா இருந்து விடக் கூடாது என்பது அவர்களது திண்மையான எண்ணம்.


கோழிகள் கூட்டத்தில் ஒரு வயதான கோழி மெல்ல தன் கரகரத்தக் குரலில் கேட்டதாம்: ‘நாம் பட்டியலில் இல்லை என்பதற்காகப் போராடலாம் என்கிறீர்கள். ஆனால் நம்மை விட அளவில் பெரிய ஆடுகள் அது போலெல்லாம் குரல் கொடுக்கவில்லையே. அப்படி இருக்கும் போது நாம் குரல் எழுப்புவது சரியா?’ என்று கேட்டிருக்கிறது. பெரும்பான்மைக் கோழிகளுக்கு கோபம் வந்து விட்டது. ‘ஆடுகளைப் பற்றி நமக்குத் தெரியாதா … எல்லாம் கூட்டம் கூட்டமாக ‘மே’ன்னு கத்திக்கிட்டு ஒண்ணுக்குப் பின்னால் ஒண்ணு என்று போகும் ஆட்டுக் கூட்டம் அது. அவர்கள் யாரும் யோசிக்கவில்லை என்றால் அதற்காக நாமும் யோசிக்காமல் இருக்கவேண்டுமா என்று உரத்துச் சொல்லி போர்க்குரல் எழுப்பியுள்ளன. வயதான அந்தக் கோழி ‘கப் சிப் காராவடை’ என்று அடங்கி விட்டதாம்.


இன்னொரு கோழிக்கும் ஒரு சின்ன சந்தேகம். நம்ம வியாதிகள், அதாவது அரசியல்வியாதிகள் உயிர்க்கொலை வேண்டாம் என்பதற்காக இந்தத் தடைகளைக் கொண்டு வந்திருக்கிறார்கள். சரி … இருக்கட்டும். ஆனால் அது காய்கறியோ, கீரையோ, பழங்களோ அதுகளைப் பறித்து, அவித்து தின்பது மட்டும் சரியா என்றொரு கேள்வி அதற்கு. அட பழங்கள், காய்கள் என்று பறித்துத் தின்றால் தாய்ச் செடி இன்னும் உயிரோடு இருந்து தன் ஆயுளைத் தொடரும். ஒரு கீரையை எடுத்துக் கொள்ளுங்கள். அடியோடு பெயர்த்து, அதாவது ஓரு உயிருள்ள செடியை அப்படியே ‘கொன்று’ தின்பது மட்டும் எப்படி சரியாகும் என்று ஒரு விவாதத்தைத் தொடங்கி வைத்துள்ளது.


உயிர்க்கொலை வேண்டாம் என்றால் எல்லா உயிரையும் ஒரே மாதிரி நினைத்து முடிவெடுக்க வேண்டும் அல்லவா? மாடு, ஒட்டகம் என்று ஓரங்கட்டி ஆடு, கோழி இவைகளை ஒதுக்கி வைத்தாகி விட்டது. இன்னொரு பக்கம் செடிகளைக் கொல்வது பாவமே இல்லை என்பது தர்க்க ரீதியில் சரியில்லையே என்று அந்தக் கோழி கேட்டது.


அந்தக் கோழியின் கேள்விக்குப் பதில் எனக்குத் தெரியவில்லை. 

உங்களுக்கு தெரியுமா?

Wednesday, May 17, 2017

937. புலம்பல் … 1 இனி சீரியல் மட்டுமே பார்ப்பது

*இனி சீரியல் மட்டும் பார்ப்பது என்று கடந்த சில நாட்களில் ஒரு முடிவுக்கு வந்துள்ளேன். அதுவும் நேற்று நடந்தது என்னை இந்த முடிவெடுக்கக் கட்டாயப் படுத்தியது.

சீரியல் பார்ப்பது நம்மை இயக்குனர்கள் கேலி செய்வது போல் தோன்றியது. உதாரணமாக ஒரு கதாநாயகி மடிக்கணினி ஒன்றை அழுக்காகி விட்டது என்று சோப்பு போட்டுக் கழுவி கொடியில் காயப் போடுவதைக் கண்டதும் எனக்கு அழுகையே வந்து விட்டது. படிக்காத பெண் என்பதை இயக்குனர் என்ன அழகாக சிம்பாலிக்காகக் காட்டி விட்டார் என்ற பெருமிதத்தில் வந்த கண்ணீர். அடுத்ததாக மூச்சுக்கு முன்னூறு தடவை இந்த சாமி பக்தி வேறு வந்து மனசை உலுக்கி விடுகிறது. அதிலும் அடுத்தவனைக் கொல்லப் போகிறவனு(ளு)ம் விஷப்பாட்டிலை சாமி படத்து முன்னால வச்சி சாமி கும்பிட்டு, ‘சாமி… இந்த விஷம் நல்லா வேலை செய்யணும்’ என்று வேண்டிக்கொண்டு நிற்பதைப் பார்த்ததும் அப்டியே உடம்பெல்லாம் வேர்த்தும் கடைசியில கண்ணும் வேர்த்திருச்சி.

இதெல்லாம் பார்த்ததும் இனி சீரியல் பார்க்க வேண்டாம் அப்டின்னு (முழுசா அப்படியே இல்லை … ரெண்டு சீரியல் மட்டும் பார்க்கலாம்னு ..) முடிவெடுத்து. ப்ரைம் டைம்ல வர்ர 8 -9 மணியில் செய்திச் சேனல்களில் வரும் அரசியல் விவாதங்களைப் பார்க்கலாம் என்று முடிவு செய்து அவைகளைப் பார்க்க ஆரம்பித்தேன். அதுவும் சீரியல் மாதிரி ஆகிப் போச்சு. நாலஞ்சு முகங்கள் .. அந்த அசட்டு முகங்களே எப்போதும் திரும்பத் திரும்ப வந்து கொண்டிருக்க ஆரம்பித்தார்கள். பேச்சாற்றலும் இல்லை .. பேசுவதில் பொருளுமில்லை. ஆனாலும் அந்த மஹானுபவர்களே திரும்பத் திரும்ப வந்து அழுகிறார்கள் … I mean …. பேசுகிறார்கள்.

எல்லா அரசியல்வியாதிகளும் மக்களுக்குச் சேவை செய்ய அரசியலில் இருப்பதாகச் சொல்வதைப் பார்க்கும் போது விஷத்தை சாமி முன்னால் வச்சி கும்புடுற ஆளை விட மிக மோசமாக அது தெரிந்தது. அட … நெறியாளர்களோ.. அல்லது இப்போது சாமான்யர் என்ற தலைப்பில் சிலரைக் கொண்டு வந்து உட்கார வைக்கிறார்களே அவர்களாவது இந்த அரசியல்வியாதிகளை நறுக்குன்னு நாலு கேக்குறாங்களா? மண்வெட்டியை மண்வெட்டின்னு சொல்லக்கூடாதா… அதாவது … calling a spade a spade அப்டின்னு சொல்லுவாங்களே அது மாதிரி சொல்லக் கூடாதா?

அந்தக் காலத்தில மாணவர்களிடம் சொல்வதுண்டு. பணம் சம்பாதிக்க அதுவும் சீசீசீக்கிரமாகச் சம்பாதிக்க ரெண்டு வழி இருக்கு. ஒண்ணு ஏதாவது ஒரு அரசியில்வியாதியாக வேண்டும். இல்லாவிட்டால் ஏதாவது ஒரு சாமி பெயரைச் சொல்லிச் சம்பாதிக்கணும். இரண்டாவதில் அடி தடி … சிறுதாவூர், கூவத்தூர் என்று எதுவும் இல்லை என்பதால் முதல் வழியை விட இரண்டாம் வழி சிறந்தது. நான் சொன்னது சரி என்பதை வரலாறு நிரூபித்து விட்டது. (ஆனால் அதெல்லாம் கேடு கெட்ட வழிகள் என்றும் கடைசியில் சொல்வதுண்டு.)

ஆக, விவாதங்களுக்கு வந்து  எங்கள் கட்சி சரி, மக்களுக்குச் சேவை செய்யவே இந்தப் பிறப்பெடுத்தோம் என்று சொல்ற ஆளுங்க மூஞ்சுக்கு முன்னால் … ‘அட ..போங்கடா… அரசியல் முதல் போடாத ஒரு வியாபாரம்; அதப் பண்ற ஆளுங்களுக்கு எதுக்கு இத்தனைப் பேச்சு’ என்று சொல்லணும்னு இருக்கிற ஆசை நடைபெறவே நடைபெறாதா?
நேற்று (16.5.17) சிதம்பரம் அவரு பிள்ளை எல்லார் மேலேயும் சி.பி.ஐ. விசாரணை. (இந்த ஆளு மேல ஒரு காலத்தில எனக்கு ரொம்ப நல்ல நினைப்பு இருந்தது. அட … போங்க சார் .. ஒரு கெட்ட பழமொழி நினைவுக்கு வருது … கழுதை விட்டையில் முன்னதா இருந்தா என்ன; பின்னதா இருந்தா என்ன??!! எல்லா இழவும் ஒண்ணு தான்.) உடனே காங்கிரஸ்காரங்க ‘ஆஹா… இது அரசியல் சதி’ அப்டின்னு குதிக்கிறாங்க. அவங்க திமுககாரங்க கையை முறுக்கியது அவங்களுக்கு மறந்து போச்சு. அப்போ அதிமுக மந்திரிகள் மேலும் சி.பி.ஐ. விசாரணை என்றதும், அம்மா கட்சி, புரட்சித் தலைவி அம்மா கட்சியைப் பார்த்து ஏன் ஓ.பி.எஸ். மேல விசாரணை போடலைன்னு ஒரு கேள்வி. உடனே பாஜககாரர் ’நாங்கல்லாம் கஞ்சாவை நாங்களே போட்டுட்டு அவங்க மேல் கேஸ் போடுற அதிமுககாரங்க மாதிரி இல்லை அப்டிங்கிறார். எந்த கேசையும் போட்டுக்கோ.. ஆனா எங்க பதவியை மட்டும் பிடுங்காதீங்கன்னு சொல்ற திமுக மாதிரி நாங்க இல்லைங்கிறாங்க இன்னொருத்தர்.


எல்லாமே காசு மட்டும் தான். அதுவும் ஜெயிலுக்குப் போகாம எமனிடம் சரணடைந்த அந்த பொம்பிளைக் கட்சியை இப்போது பார்க்கும் போது அது நல்லாவே ஆட்களை வளர்த்து விட்டுப் போய் சேர்ந்திருச்சின்னு தான் நினைப்பு வருது.

அம்மாடி …… எப்படி கோடி கோடியா திருடிட்டு, வெள்ளைச் சட்டை போட்டுக்கிட்டு, சட்டைப் பையில ஒரு படத்தை வச்சிக்கிட்டு எல்லோரும் அலையிறாங்க.

மனசுக்கு ரொம்பக் கஷ்டமாயிருக்கு …………

அதுனால இனிமே தொலைபேசியில் சீரியல் மட்டும் பார்ப்பது என்று முடிவு செய்து விட்டேன். 

நாலு நல்ல சீரியல் சொல்லுங்க.


 *

Monday, May 01, 2017

936. மதங்களும் ... சில விவாதங்களும் - முகநூலில் வந்த ஓர் ஆய்வு


*

RAMESH  KUMAR

*

தருமி அவர்கள் எழுதிய, “மதங்களும், சில விவாதங்களும் “ படித்தேன். மதம்/ இறைவன் என்ற கோட்பாட்டினை நோக்கி கேள்வியை முன்னிறுத்த கூடிய கட்டுரைகளின் தொகுப்பு. பிறப்பால் கிருத்துவராக இருந்தாலும், மத கோட்பாடுகளின் மீது ஏற்பட்ட சாதாரண கேள்விகளால், பல்வேறு படிநிலைகளை கடந்து… இன்று நாத்திகராக மாறி விட்டார்.

சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக, தன்னுடைய மனதில் கேள்விகளுக்கு விடை தேடிய பயணத்தின் வடிகாலாகவே, இந்நூலை வடித்திருக்கிறார். ” தான் எப்படி?? “ மதத்திலிருந்து வெளியே வந்தேன் எனபதை, முதல் பகுதியில் விளக்கம் அளித்துள்ளார். மற்றவர்களின் சில கட்டுரைகளை, இரண்டாவது பகுதியில் இணைந்துள்ளார் .மூன்றாவது பாகத்தில், இந்து, கிருத்துவம் மற்றும் மூஸ்ஸிம் மதங்கள் நோக்கிய கேள்வி கணைகளை முன்னெடுக்கிறார்.

இது முற்று பெற்ற நூலாக தெரியவில்லையென்றாலும், மதம் குறித்த மாற்று தேடலில்… நல்ல நூலாகவே காண்கிறேன்.


மறுவாசிப்பு செய்யப்பட வேண்டிய புத்தகம்!!


-----------------------------------------------------------------------------


எனக்கும்…. இந்து மதம் குறித்த நிறைய கேள்விகள், நித்தம் பாடாய் படுத்துகின்றன. தருமி அவர்களின் புரிதலும், என்னுடைய மனவோட்டத்திற்கு ஒத்திருப்பதாகவே எண்ணுகிறேன். என்னுடைய தேடுதலுக்கு இந்து, கிருத்துவம் மற்றும் மூஸ்ஸிம், பெளத்தம், சமண மதம் மற்றும் நாத்திகம் குறித்த புத்தகங்கள் ஏதேனும் இருப்பின் தெரியப்படுத்துங்கள்!!!

 *